கடவுளுக்கு கண்ணில்லை – ஒரிய மொழி- பிரதிப்தா குமார் மிஸ்ரா ஆங்கிலம் : லீலாவதி மொகாபத்ரா ,கே.கே. மொகாபத்ரா தமிழில்: தி.இரா.மீனா

 

தி. இரா. மீனா

 

கடவுளுக்குக் கண்ணில்லை. ஆமாம். இல்லைதான். பரம ஏழையான என் மீது அவன் காட்டும் வன்மத்தை வேறு எப்படிச் சொல்ல முடியும்? கடவுள் இப்படிச் சொல்லியிருப்பார்; “ சக்ரா ! என்னைக் குறை சொல்லாதே! ரயில் நிற்கும்போது எல்லா கம்பார்ட்மெண்டுகளுக்கும் நீ போக முடியாததற்கு நான் என்ன செய்வேன்?” என்று. ஆனால் என் பதில் இப்படியிருக்கும்: கடவுளே! நீ எப்படி இரண்டு முகம் கொண்டவனாக இருக்கிறாய்? பரத்தை எடுத்துக் கொள். அவனுக்கு ஒரு கண்ணில் பார்வை இருப்பதால் அவனால் முழு ரயிலுக்குள்ளும் போக முடிகிறது .காலியான இடங்களுக்குப் போய் நேரத்தை விரயம் செய்யவேண்டிய அவசியம் அவனுக்கில்லை. ஏன் என்னை முழுக் குருடனாகப் படைத்தாய்? பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஜனங்கள் இருப்பதாக நினைத்துக் காலியான சீட்டுகளுக்குப் போய் நிற்கும் நிலை எனக்கு. பரத் ஒருநாளைக்கு ஆறு ரூபாய் சம்பாதிக்கிறான். எனக்கு இரண்டு ரூபாய்தான் கிடைக்கிறது. ஆனாலும் நீ கடவுள் என்ற பெருமையை எடுத்துக் கொள்கிறாய். இதுபோக எந்தச் சண்டை வந்தாலும் அவனுக்கு நீ சாதகமாக இருக்கிறாய். போகட்டும். நான் பரத்தைப் போல கெட்டிக்காரனில்லை.ஒப்புக் கொள்கிறேன். அதனால்தான்  எனக்குக் குறைவாய்க் கிடைக்கிறது. நியாயம்தான். பத்து, பன்னிரண்டு வயதில் ஒரு சிறுவன் என் கையைப் பிடித்துக்கொண்டு எல்லாக் கம்பார்ட்மெண்டுகளுக்கும் என்னைக் கூட்டிக்கொண்டு போக நீ உதவ வேண்டும் என்று நான் உன்னிடம் பிரார்த்தனை செய்து கொண்டேனே! அந்தச் சிறுவன் செய்ய வேண்டியதெல்லாம் என்னை அழைத்துக்கொண்டு போகவேண்டியதுதான். நான் பேச்சில் கெட்டிக்காரன். “கனவான்களே! எஜமான்களே! இந்தக் குருடனுக்கு காசுகொடுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பார் என்று சொல்வேன்”, என்ற என் பிரார்த்தனை  உன் காதில் விழுந்ததா? ஏன் விழவில்லை?

ரயில் ஸ்டேஷனில் நிற்கும்போது எல்லாக் கம்பார்ட்மெண்டுகளுக்கும் என்னை அழைத்துச் செல்ல வழிகாட்டி யாருமில்லை.சரி. ஒப்புக் கொள்கிறேன். இந்த பிளாட்பாரத்தை எடுத்துக் கொள்வோம். இங்கு பத்துத் தூண்கள் உள்ளன.“ இதில் ஒரு தூணை எடுத்துக் கொண்டு நீ அங்கேயே இருக்க வேண்டும். வேறெங்கேயாவது உன்னைப் பார்த்தேன் என்றால் இங்கிருந்து ஒரேயடியாக உன்னைத் துரத்திவிடுவேன்” என்று ஒரு போலீஸ்காரன் சொன்னான். நான் போவதற்கு முன்னாலேயே நல்ல தூண்கள் இருக்குமிடத்தை மற்றவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். தங்களுடைய கம்புகள், சாக்குகள், பாத்திரங்கள் ஆகியவற்றை அந்த இடத்தில் வைத்துத் தங்கள்  உடைமையாக்கிக் கொண்டு விட்டனர். கடைசித் தூண் தான் எனக்குக் கிடைத்தது. அதுவும் பரத் சொல்லித்தான் தெரிந்தது. நான் வந்த நாளன்றே அங்கு போகும்படி அவன்தான் சொன்னான். வந்தது முதல் அங்குதானிருக்கிறேன். அங்கு ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான் கிடைக்கும். நேற்று பரத்துடன் பேசிக் கொண்டிருந்தேன்,

“பரத்! ஏன் எப்போதும் என் வருமானம் ஒரே மாதிரியாக இருக்கிறது?”

“உன் தூண் எதிரில் சரக்கு கம்பார்ட்மெண்ட்தான் நிற்கும். அதில் மனிதர்கள் இருக்கமாட்டார்கள். அதனால் உனக்குக் காசு போட யாருமில்லை.”

“இது நியாயமில்லை. எது நல்ல இடமென்று எனக்குத் தெரியாது. நான் குருடன். ஆனால் கடவுளுக்கு இரக்கமில்லை. நான் கேட்பது சிறிய உதவிதான் என்று அவருக்குத் தெரியாதா? என் தூண் முன்பாக மனிதர்கள் இருக்கும் கம்பார்ட்மெண்ட்டை நிற்கச் செய்வது அவர் வேலையல்லவா?” என்றேன்.

இரவு முழுவதும் சக்ரா தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான். நல்ல தூக்கமில்லை. கோபமாக கடவுளோடு மோதிக் கொண்டிருந்தான்.எனக்குக் கை,கால், மூக்கு, காதுகள் என்றுஎல்லாவற்றையும் கொடுத்திருக்கிறாய். ஏன் ஒரு ஜோடிக் கண்களை மட்டும் கொடுக்கவில்லை? ஏன் இந்த தண்டனை?

கடவுள் தன்னிடம் வரும்வரைக் காத்திருப்பது என்று சக்ரா முடிவு செய்தான். கடவுளை முகர்ந்து கண்டுபிடிப்பதில் கஷ்டமில்லை. அவன் தூணுக்கு அருகே ஒரு முறை நல்லவாசனை வந்தது. அங்கிருப்பவரிடம் பேசத் தைரியமில்லை. நல்லவேளை, பேசவில்லை. பொருட்களை விற்கும் ஒருவர்தான்  விலை மலிவான சென்ட்டைப் போட்டுக் கொண்டிருந்தார் என்று பரத் சொன்னான்.

கடவுள் தன்னைக் கடக்க மாட்டாரா? சிறுவன் ஒருவன் தன் கையைப் பிடித்துக்கொண்டு  ரயில் கம்பார்ட்மெண்டுகளுக்கு அழைத்துச் செல்லும் நாள் வரவே வராதா?  அந்தச் சிறுவனுடன்  டீல் வைத்துக் கொள்ளவும் தயாராக இருந்தான். ஒரு நாளைக்குப் பத்து பைசாவும், இரவு உணவாக ரொட்டியும் தரத் தயாராக இருந்தான். ஆனால் சிறுவன் கிடைக்க வேண்டுமே.

சக்ரா தன்னை மிக பலவீனமாக உணர்ந்தான். ஒவ்வொரு நாளும் மோசமாகக் கழிந்தது. இன்று மிகவும் மோசம். எதுவும் கிடைக்கவில்லை. அந்த நொண்டிப் பெண்மணி கூட வரவில்லை .தும்மிக் கொண்டும், முனகிக் கொண்டும், தவழ்வது போலவும் அவள் அங்கிருப்பாள் . நாற்றம் பொறுக்க முடியாவிட்டாலும் ஆறுதலாக இருக்கும். நேற்றிரவு தங்களுக்குள் நடந்த உரையாடலை  நினைத்துப் பார்த்தான்.
“கோரமண்டல ரயில் வந்துவிட்டுப் போய்விட்டதா?”அவன் கேட்டான்.

“உம். போய் விட்டது.”

“நீ இரவு என்ன சாப்பிட்டாய்?”

“மார்க்கெட் அருகேயுள்ள கடையில் வெந்த காய்களோடு இரண்டு ரொட்டிகள் சாப்பிட்டேன். எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்.” அந்தப் பெண்மணி இதற்கு முன்பு ஒரு மோசமான சந்தில் வசித்து வந்தாள். அவளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். சில சமயங்களில் ஓர் இரவுக்கு ஐந்நூறு ரூபாய் வரை கிடைத்தது. ஆனால அவளுக்கும் கஷ்டம் வந்தது. அவளைவிட அழகான, வயது குறைந்த பெண்கள் வந்ததால் அவள் தொழில் கெட்டது. எதுவும் கிடைக்கவில்லையென்றாலும் போலீசுக்குக் கமிஷன் கண்டிப்பாகத் தர வேண்டியிருந்தது.

சக்ரா தும்மினான். அப்போது அவனுக்குப் பழக்கமான அந்த நெடி வந்தது. சத்தமும் கேட்டது. அவள் வந்து தரையில் தன் சாக்கை விரித்திருக்க வேண்டும். எப்படி அவள் அந்த இடத்திற்கு நேரடியாக வரமுடியும்? அவள் ஏன் வேறிடம் பார்க்கக் கூடாது? ஒவ்வொரு இரவும் அவள் ஏன்  இங்கு வரவேண்டும்? இன்று அவள் முனகுவதும்,முக்குவதும் அதிகமாகக் கேட்டது.

“பெண்ணே!  உடல் நலமில்லையா?”

“ஒன்றுமில்லை. அந்தக் கூலிக்காரன் என்னைக் காலியான சரக்கு கம்பார்ட்மெண்டுக்கு இழுத்துக் கொண்டுபோனான். அவனிடமிருந்து தப்பி வரும்போது காலில் அடிபட்டுவிட்டது.”

“இப்படியான மனிதர்களிடமிருந்து நீ விலகியிருக்க வேண்டும்”

“விலகித்தானிருப்பேன். ஏனோ இன்று இப்படியாகிவிட்டது. அவன் என்னை இழுத்தபோது மறுத்தேன். வயிற்றில் எட்டி உதைத்தான். மயக்கமாகி விழுந்து விட்டேன்.”

“வேறு யாரிடம் அவன் பலத்தைக் காட்ட முடியும்? என்னால் அவனைப் பார்க்க முடியாமலிருக்கலாம். ஆனால் என் கையில் அவன் கிடைத்தால் எலும்பை முறித்து விடுவேன்”.

அவளுடைய மெல்லிய சிரிப்பு காற்றில் மறைந்தது. சக்ரா பின் வாங்கினான். இதில் என்ன வேடிக்கை? அவள் அவனைப் பார்த்துச் சிரிக்கிறாளா?

“இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே. எனக்குச் சரியாகி விட்டது . நீ போய்த் தூங்கு.”

அவள் அருகே வந்துவிட்டாளா? இப்போதெல்லாம் அவள் அவனுக்கு அருகில்தானிருக்கிறாள். இந்த பிளாட்பாரத்திற்கு வந்த புதிதில் ஒரு கடைவாசலில்தான் படுத்திருந்தாள். கடையில் ஏதோ திருட்டு நடந்தபோது போலீஸ் அவளைச் சந்தேகப்பட்டு அடித்தது. பிறகு தண்ணீர் டாங்க் அருகேயிருந்தாள். அங்கும் சிக்கல்.  பிறகு கடைசியாக இந்தத் தூணுக்கு வந்தாள். சக்ராவைப் பார்த்தாள். அங்கிருந்தால் எந்தத் தொந்தரவும் வராதென்று நினைத்தாள். அங்கேயே படுத்தாள். இவனுடைய மனைவியாகி விட்டாலென்ன என்று கூட யோசித்தாள். தப்பித் தவறிக்கூட அவன் அவளைத் தொட்டதில்லை. என்ன மனிதன் இவன்!  ரயில் வரும்போது அவன் கையைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு கம்பார்ட்மெண்ட்டாக அழைத்துச் செல்லலாம்.அவர்கள் வருமானம் ஜாஸ்தியாகும். ஒர் அறை கொண்ட குடிசையை ஸ்டேஷனுக்கு அருகில் கட்டமுடியும். அவள் அங்கு கீரை  பயிரிடுவாள். அவள் சக்ராவைத் திரும்பிப் பார்த்தாள். குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கியிருந்தான்.

மிகவும் பசியாக இருக்கும் போது சக்ரா நன்றாகத் தூங்கிவிடுவான். சில சமயங்களில் போலீஸ் அவனைக் கடக்கும்போது இரண்டு தட்டு தட்டுவார்கள். அவன் இங்குமங்கும் உருள்வான். கோடையில் இது பெரிய தொந்தரவில்லை. குளிர்காலத்தில்தான் தொல்லையாக இருக்கும்.

காலையில் எழுந்தவுடன் “பெண்ணே ! உனக்குச் சொந்தக்காரர்கள் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டான். அது ஈஸ்ட் கோஸ்ட் ரயில் வரும் நேரம்.

“பாட்டி இருந்தாள். அவளும் செத்துப் போய்விட்டாள்.”

“வேறு யாரும்?”

“வேறு யாரு?”

“கணவன்?”

“என்னைப் போன்ற பெண்களுக்கு எப்படிக் கணவன் இருக்க முடியும்?”

“நீ வேறுயாரையாவது ஏன் பார்க்கக் கூடாது?”

ரயில் வந்து நின்றது.  பான், பீடி, சிகரெட், வாழைப்பழம், டீ, முட்டை ,அவித்த  முட்டை…. குர்தா ரோடு ஸ்டேஷனா என் மீது ஏறிக்கொண்டுதான் உன் சீட்டுக்குப் போக வேண்டுமா.. பின்கள்.. கல்தட்டுக்கள்  கம்மி விலையில்..

குரல்கள்..

நான்காவது பிளாட்பாரத்தில் அன்றுகாலை ஒரு பெரியவர் இறந்து போய் விட்டார். அவர் உடலைக் கேட்டு யாராவது வந்தார்களா அல்லது அவர் அனாதையா என்று அவன் அறிய விரும்பினான். அவர் மனைவி வந்ததாகவும், கூலிக்காரர்கள் அவரை அடக்கம்செய்யப் பணம் தந்ததாகவும் சொந்த ஊருக்குப் போய் விட்டதாகவும் சொன்னார்கள்.

“கொடுத்து வைத்தவர். சொந்தமண்ணில் அடக்கம் செய்யப்படுவது என்பது எவ்வளவு புண்ணியம் தெரியுமா? எனக்கு என்ன நடக்குமென்று யாருக்குத் தெரியும்? பெண்ணே! நான் பிச்சுக்குளி என்ற கிராமத்திலிருந்து வந்தவன். பிறக்கும்போதே பார்வையில்லாமல்தான் பிறந்தேன். குருடன் சக்ரா என்றால் பிச்சுக்குளியில் எல்லோருக்கும் தெரியும். சொந்த மண்ணில் அடக்கம் செய்யப்படக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்,” என்று சொன்னான்.

சில நாட்களில் ஓரளவு வருமானம் கிடைத்து விட்டால் சக்ரா வீடுகளுக்கு முன்னால் போய் நின்று பக்திப்பாடல்கள் பாடுவான். அங்கு கிடைக்கும் காசை வைத்து ஒன்றிரண்டு இனிப்புகள் வாங்கிச் சாப்பிடுவான். சில சமயங்களில் பொடியும் வாங்குவான். அடிக்கடி சிறிய மீனின் விலையைக் கேட்பான். அவனுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அவனால் தனக்கென்று ஒன்று கூட வாங்கிச் சாப்பிட முடிந்ததில்லை. ரத்த சோகை காரணமாக அவன் நிறம் இப்போது மஞ்சளாகி விட்டது. அந்த நொண்டிப் பெண்மணி தன்னருகில் படுக்கத் தொடங்கிய பிறகு அவன் வேறு எங்கும் போவதில்லை. அந்தக் கூலியோ அல்லது தரை சுத்தம்செய்பவனோ அவளை இழுத்துக் கொண்டு போய் விட்டால் என்ன செய்வது . எவ்வளவு நேரமானாலும் கம்பைத் தரையில் தட்டியபடி அங்கு வந்துவிடுவான். கொஞ்சம் தள்ளிப்படு என்று சொல்லும்போது அவனுக்குள் ஒரு மகிழ்ச்சியும்..

“ஏன் இன்று இவ்வளவு நேரம்?”

“உனக்கென்ன அதனால்? நீ வேறிடம் பார்த்துக்கொள். ஜனங்கள் நம்மைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்.”

“கவலைப்படாதே, நான் வேறிடம் போய்விடுவேன். உனக்கு என்னால் எந்தத் தொந்தரவுமில்லை என்றுதான் இத்தனை நாளாய் நினைத்து இருந்தேன். ஆனால் நான் இப்போது வேறிடம் பார்க்க வேண்டும்.”

“விளையாட்டுக்குத்தான் சொன்னேன். இங்கேயே இரு.  எப்போதும் இரு”

“நான் போய்விடுவேன் என்று நினைத்தாயா? நானும் விளையாட்டுக்குத் தான் சொன்னேன்.” இந்த மாதிரி யார் இருக்க முடியும்,  அவன் ஆச்சர்யப்பட்டான். அவள் என்னை விரும்புகிறாளா?அதனால்தான் போக விரும்பவில்லையா? அவள் காலில் குறையிருந்தால் என்ன?  கையைப் பிடித்துக் கொண்டு என்னை எல்லா கம்பார்ட்மெண்டுக்களுக்கும் அவளால் அழைத்துச் செல்லமுடியும். இரண்டுபேரும் சேர்ந்து பிச்சை எடுத்தால் ஓரளவு வருமானம் கிடைக்கும். ஒரு டப்பாவில் அதைப் போட்டு வைக்கலாம். அவள் விருப்பத்தைக் கேட்டால் கேலி செய்து சிரிப்பாளோ? கேட்பதா, வேண்டாமா குழப்பமாக இருந்தது. அவனுக்கு இரண்டு கண்ணும் குருடில்லை. வலது கண்ணில் எப்போதும் எரிச்சல். எப்போதாதாவது இரத்தம் அந்தக் கண்ணிலிருந்து வரும்.

அந்தப் பெண்மணி நடுங்கிக்கொண்டே தூங்கிவிட்டாள். மெல்லிய போர்வை. காலை மூடிக்கொள்ள நினைத்தால் தலைப்பகுதி வெளியே தெரிந்தது. சக்ரா தன் மூட்டையிலிருந்து சால்வையை எடுத்துப் போர்த்தி விட்டான். குளிர் கொஞ்சம் குறையும்.”

அவள் எழுந்து விட்டாள். “விடிந்து விட்டதா? ”

“விடிந்து விடவேண்டுமென்று உனக்கு ஆசையாயிருக்கிறதா? உனக்குத் தெரியாது. காலையில்தான் நமக்கு பசி பத்து மடங்காக இருக்கும். மதியத்தில் குறைந்துவிடும்.”
“தினமும் இரவில் ரொட்டி சாப்பிட்டு அலுத்துவிட்டது. கொஞ்சம் அரிசி வாங்கி அந்த வேப்பமரத்தடியில் நாம் ஏன் சமைத்துச் சாப்பிடக் கூடாது?”

“வேண்டாம். இங்கு கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் எல்லோரும் இன்னும் அதிகமாக என்னைக் கேலி செய்வார்கள். ஆசையாயிருந்தால் நீ சமைத்துச் சாப்பிடு .எனக்கு ரொட்டியே போதும்.”

“எனக்கும் போதும். ஒருத்தருக்காக யார் சமைப்பது?”

“சரி. இப்போது தூங்கு. காலையில் தண்ணீர் வரிசையில் நிற்க வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்கும்”

திரும்பிப் படுத்த சக்ராவுக்கு கடவுள் இன்னும் ஏன் பிரசன்னமாகவில்லை என்று தோன்றியது. சரக்கு ரயில் கம்பார்ட்மென்ட் தன் தூணுக்கு முன்னால் நிறுத்தப்படுவதைத் தொடரப்போகிறாரா? எந்தச் சிறுவனும் உதவிக்கு வராமல் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்கிறாரோ? மறைவில் நின்று சக்ராவின் திசையைப் பார்க்கிறவர்களைத் தள்ளிக் கொண்டு போய்விடுகிறாரோ? யாருக்குத் தெரியும்? இப்படிச் சொல்லலாம்; இங்கே பார்!   அந்தத் திசைக்குப் போகாதே! ஒரு புலி பாய்வதற்குத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறது. சக்ராவுக்கு கடவுளைப் பார்க்க ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அவர் விரட்டி விடுவார். எவ்வளவு இரக்கமற்றவர் அவர்!

அந்தப் பெண்மணியைத் தன்னோடு வாழும்படி கேட்கலாமா?அவர்கள் ஒரு  குடிசையை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அவனுக்கு உடம்பு சரியில்லாத போது அவள் பார்த்துக் கொள்வாள். சுடுதண்ணீர் வைத்துத் தந்து.. தலை பிடித்து.. அவளுக்கு எது வந்தாலும் அவன் பார்த்துக் கொள்வான். அவனுக்குத் தலைவலியும் , அவளுக்கு முதுகுவலியும் பொறுக்க முடியாமலிருக்கிறது. இருவரும் அருகருகே இருந்து கொண்டு ஒருவருக்கொருவர்  உதவி செய்து கொள்ளா விட்டால் என்ன பயன்?

“கவுண்ட்டர் எண் ஐந்தில் யாருக்கோ அடிபட்டு ரத்தம் வந்ததாமே?” கேட்டான்.

“நம் கூட்டத்தில் ஒருவருக்காகத் தானிருக்க வேண்டும். சீக்கிரம் தூங்கு. உன் சால்வையை ஏன் எனக்குத் தந்தாய்? நாளையிலிருந்து நாமிருவரும் சேர்ந்து பிச்சை எடுப்போம். நான் உன் கையைப் பிடித்துக் கொள்கிறேன்.” அவள் அவன் தலைமுடியைக் கோதினாள். இன்னும் இரவு எவ்வளவு நேரமிருக்கிறது? அவன் யோசித்தான்.

மெட்ராஸ் மெயில் வந்து நின்றது. கூலிகள் இங்குமங்குமாக ஓடினர். ஒரு வயதான போலீஸ்காரன் பிச்சைக்காரர் கும்பலில் யாராவது புதிதாக வந்திருக்கிறார்களா, மிரட்டிக் காசு வாங்கலாம் என்று வந்து கொண்டிருந்தான். வழக்கமான குரல்கள்.. டீ.. சூடான டீ. முட்டை.. இந்த சீட்டை எடுத்துக் கொள்ளலாம்.. இல்லை. இது என்னுடையது. என் கர்ச்சீப்பை முன்பே போட்டு வைத்திருந்தேன். ரயில் சரியான நேரத்துக்கு வந்ததா.. தாமதமா? கவலைப்பட வேண்டாம் . சரி செய்துகொள்ளலாம்.. இப்படி…

இருட்டு கடுமையாகி அவர்கள் மீது பரவியது. சிறிது நேரத்தில் வெளிச்சம் வந்துவிடும். இறைச்சிக் கடையில் கறிவாங்கக் கூட்டம் கூடிவிடும். அவன் தூங்க முயற்சித்தான்.

அந்தப் பெண்மணி எழுந்த போது அவன் தூங்கிக் கொண்டிருந்தான். எழுந்து தலையை வாரிக் கொண்டாள். நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டாள். சக்ரா எழுந்து கொள்வதற்கு முன்னால் மார்க்கெட்டுக்குப் போகவேண்டும். ரயில் வரும்போது சக்ராவின் கையைப் பிடித்துக்கொண்டு எல்லா கம்பார்ட்மெண்டுகளுக்கும் போவதை இன்று ஆரம்பிக்க வேண்டும். நொண்டியும், குருடனும் சேர்ந்து பிச்சையெடுப்பதைப் பார்த்து ஜனங்கள் காசு தருவார்கள். கடவுளருளால் காசு அதிகமாகக் கிடைக்கும்.

சக்ரா எழுந்தபோது அந்தப் பெண்மணி அங்கில்லை. அவள் மூட்டை மட்டுமிருந்தது. அவள் எங்கே போயிருப்பாள்? அவள் எப்போதும் தாமதமாகத்தான் எழுந்திருப்பாள். அந்தக் கூலி இழுத்துக் கொண்டு போய்விட்டானோ? ஏதோ குழப்பம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஒரு தடவை அவளை அடித்த போலீஸ்காரனைப் பார்த்து பயந்து ஓடி விட்டாளோ? ஆனால் எதற்கு அவள் மூட்டையை  இங்கே வைக்க வேண்டும்? என்ன திட்டம் ?

“அவள் ஓடிப் போயிருக்க வேண்டும்” பரத் சொன்னான். ஒரு வேசியிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? ஒரு முறை தவறு செய்தவர்கள் தவறு செய்பவர்கள்தான்.

“இங்கே பார்! பரத். அவள் என் கூட  இருக்க வேண்டுமென்று எந்தச் சட்டமுமில்லை. அவள் இங்கிருந்து போக விரும்பினால் அது அவள் விருப்பம். நீ ஏன் அவள் மீது இவ்வளவு கோபப்படுகிறாய்?அவளுடன் நான் இருக்க விரும்பியதும் சேர்ந்து பிச்சை எடுக்க நினைத்ததும் உண்மைதான். சில கனவுகள் கனவுகளாகத்தானிருக்கும். போகட்டும். பரவாயில்லை. கொனார்க் எக்ஸ்பிரஸ் வரும் நேரமாகி விட்டதே? வா, போகலாம்.”

அன்றுகாலை சக்ரா எந்த ரயிலையும் தவறவிடவில்லை. அவன் பிச்சை எடுக்கப் போனாலும் அந்தப் பெண்மணியின் நினைவு வந்து கொண்டே இருந்தது. அவள் ஏன் அப்படிப் போனாள்? ஏன் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் போனாள்? அவனோடு தங்கும்படி சொன்னபோது எவ்வளவு சந்தோஷப் பட்டாள். இரவில் வந்து விடுவாளா? அவனருகே படுப்பாளா? அவளிடம் ஒரே ஒரு கேள்விதான் அவனுக்கு. போவதற்கு முன்னால் ஏன் அவனிடம் சொல்லிக் கொண்டு போகவில்லை? ஒரு வார்த்தை மட்டும் அவனுக்குப் போதுமே.

சாயங்காலம் பரத் தான் அந்த விஷயத்தைச் சொன்னான்.

“உனக்குத் தெரியுமா சக்ரா? அந்தப் பெண்மணி இன்று காலை தன் இரண்டு கால்களையும் இழந்து விட்டாளாம். மார்க்கெட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது சிக்னல் அருகே, அவள் மேல் ஒரு ரயில் ஏறிவிட்டதாம். கையில் ஒரு புதிய பாத்திரம் வைத்திருந்தாளாம். அது நொறுங்கிக் கிடந்ததாம். தன் புடவையில் முடிச்சாக வைத்திருந்த அரிசி அப்படியே இருந்ததாம். நெற்றியில் குங்குமம் அப்படியே இருந்ததாம். அவளைப் பார்த்தவர்கள் சொன்னார்கள்”.

“ரயில் ஏறிவிட்டதா?” சக்ரா அதிர்ந்தான். இரண்டு கால்களும் போய் விட்டதா? அவன் இப்போது எங்கே போவான்? எந்தத் திசையில்?அவன் நின்று கொண்டிருந்த தரையைக் குச்சியால் சுழட்டியடித்தான். அவன் குச்சி குட்டையாக இருப்பது போலத் தோன்றியது. ”பரத்! என்னை அந்த இடத்திற்கு கூட்டிக் கொண்டு போகிறாயா? நான் அவளைப் பார்க்க விரும்புகிறேன்”.

“அந்த விபத்தைப் பார்த்த சில புத்திசாலியான போலீஸ்காரர்கள் அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய்விட்டனர்.” சொல்லி விட்டு அவன் சக்ராவைத் திரும்பிப் பார்த்தான். “ஐயோ! உன் வலது கண்ணிலிருந்து ரத்தம் வருகிறது,” கத்தினான்.

“கவலைப்படாதே பரத்! என் கண்ணைப் பற்றிக் கவலைப்படாதே. நான் யுதிஷ்டிரனில்லை. என் கண்ணிலிருந்து விழும் ஒரு சொட்டு ரத்தம் பூமியை பன்னிரண்டாண்டுகளுக்கு தரிசாக்கிவிடாது. என்னைப் போன்ற ஓராயிரம் குருடர்களின் ரத்தம் ஆறாக ஓடினாலும் ஒன்றுமே நடக்காது. கொஞ்சம் என்னைத் தனியாக இருக்கவிடுகிறாயா? நீ உன் இடத்திற்குப் போ. சிறிது நேரம் நான்  நானாக இருக்க விரும்புகிறேன்.”

———————————————-

நன்றி : Contemporary Indian Short Stories Series II,  Sahitya Akademi

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.