ஒரு விடுமுறை தின விபரீதம்

சோ. சுப்புராஜ்

 

 

சுந்தரத்திற்கு திடுமெனெ விழிப்பு வந்தபோது, நேரம் காலை ஆறு மணிதான் ஆகியிருந்தது. கடிகாரத்தைப் பார்த்தவன் தன்னையே நொந்து கொண்டான். ஞாயிற்றுக் கிழமை கூட ஒழுங்காய் உறங்காமல், பழக்க தோஷத்தில் பாழும் இந்த உடம்புக்கு ஏன் விழிப்பு வந்து தொலைக்கிறது? மரிய புஷ்பத்தைப் பார்த்தான். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

கைகளை உதறி சோம்பல் முறித்து, மல்லாந்து படுத்து சுற்றுகிற பேனை வெறித்தபடி யோசித்தான். இரவே இந்த ஞாயிற்றுக்கிழமையை எப்படி உற்சாகமாகக் கழிப்பது என்று புருஷனும் மனைவியும் பேசி வைத்திருந்தார்கள்.

அதன்படி எட்டு அல்லது எட்டரை மணிக்கு மேல் நிதானமாய் எழும்பி, பால் மட்டும் காய்ச்சி காஃபி போட்டுக் குடித்து விட்டு, ஹோட்டலில் இருந்து டிபன் வரவழைத்து காலை ஆகாரத்தை முடித்துக் கொள்வது; மத்தியானத்திற்கு நான் – வெஜ் ஏதாவது வாங்கி சமைத்து சாப்பிட்டுவிட்டு, வெயில் தாழவும் வெளியில் கிளம்பிப் போவது. கோல்டன் பீச்சிற்குப் போய் சுற்றிப் பார்த்து விட்டு, வருகிற வழியிலேயே ஏதாவது உயர்தரமான ஹோட்டலில் இரவுச் சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு, வீட்டிற்கு வந்து தூங்கி விட வேண்டியது. இதுதான் அவர்களின் திட்டம்.

கல்யாணமாகி ஆறேழு மாதங்கள் முடிந்து விட்டது. இருவரும் சேர்ந்தாற் போல் வெளியில் எங்கும் கிளம்பிப் போக முடிந்ததில்லை. பக்கத்தில் உள்ள தியேட்டர்களில் ஒன்றிரண்டு சினிமா பார்த்ததோடு சரி. சுந்தரம் காலை ஏழு மணிக்கு வீட்டை விட்டுக்  கிளம்பினால், எப்படியும் வீட்டிற்குத் திரும்ப, இரவு எட்டரை ஒன்பது மணிக்கு மேலாகி விடும். சமயங்களில் பத்து மணியைத் தாண்டியும் வருவதுண்டு.

அந்த மாதிரி தினங்களில் கதவைத் திறப்பதற்கு மனைவியை எழுப்பினால் அவளின் தூக்கம் கெடும் என்று சுந்தரம் வராண்டாவிலேயே படுத்துத் தூங்கி விடுவதும் உண்டு. கொசுக்கடியும் குளிரும் பாடாய்ப் படுத்துவதில் பெரும்பாலும் தூங்காமல் புரண்டு கொண்டிருந்துவிட்டு அடுத்த நாளும் ஏழுமணிக்கு எழும்பி வேலைக்கு ஓடி இருக்கிறான்.

அதற்கப்புறம் தான் தலைவாசல் கதவின் உள் தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளக் கூடாது என்றும் பூட்டை மட்டும் சாவியால் பூட்டிக் கொள்வதென்றும் புருஷனும் பொண்டாட்டியும் முடிவு செய்து கொண்டார்கள். அந்தப் பூட்டை உள்ளிருந்தும் பூட்டித் திறக்கலாம். வெளியிலிருந்தும் முடியும்.

சுந்தரம் ஒரு சிவில் இன்ஜினியர். அவன் தனியார் கட்டுமானக் கம்பெனி ஒன்றில் உதவி பிராஜெக்ட் மேனேஜராக இருக்கிறான். அரசின் பொதுத்துறை நிறுவனம் ஒன்றின் தொழிற்சாலையை  புனரமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

மாலை 5 மணிக்கு டூயூட்டி முடிந்ததும், துண்டை உதறித் தோளில் போட்டு கிளம்பி விடுகிற மாதிரியான வேலை இல்லை அது.  வேலைகள்  தினசரி தொடத்தொட அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே இருக்கும். மரியபுஷ்பத்திற்கு வீட்டிற்கு பக்கத்தில் தான் – வீட்டிலிருந்து 15 நிமிட நடை தூரம் தான் – அவள் பணியாற்றும் பள்ளி இருக்கிறது.

திருமணம் முடித்து சுந்தரம் மரியபுஷ்பத்தை சென்னைக்கு அழைத்து வந்து குடித்தனம் தொடங்கி இரண்டு மூன்று மாதங்களுக்கு அவள் வேலைக்கெல்லாம் போகாமல் வீட்டில் தான் இருந்தாள். வேலை முடிந்து வீட்டிற்கு அகாலத்தில் திரும்புகிற சுந்தரத்திடம் தினசரி பொழுதே போகவில்லை என்று அழுது புலம்பவே, “நீ தான் பி எட் படிச்சிருக்கையில்ல; ஏதாவது ஸ்கூலுக்கு அப்ளை பண்ணி டீச்சர் வேலைக்குப் போ. நேரமும் போகும். செலவுக்குக் காசும் கிடைக்கும்….” என்று ஆலோசணை சொன்னான்.

அவளும் அடுத்த சில நாட்களில் பக்கத்தில் இருக்கிற மெட்ரிக்குலேசன் பள்ளிக்குப் போய் அப்ளிகேஷன் கொடுத்துவிட்டு வந்தாள். அடுத்தநாளே பள்ளியிலிருந்து ஒருத்தர் சைக்கிளில் வந்து, ‘உங்களை பிரின்சிபால் அம்மா மத்தியானத்துக்கு அப்புறம் இண்டர்வியூக்கு வரச் சொல்லி இருக்கிறாங்க…’ என்று சொல்லிவிட்டுப் போனார். இவளும் வீட்டில் சும்மாதானே இருக்கிறோம் என்று பள்ளிக்குப் போய்ப்பார்த்தாள்.

அடுத்த நாளிலிருந்தே வேலைக்கு வரச் சொல்லி விட்டாள் பிரின்சிபால்.

சுந்தரம் ஞாயிற்றுக் கிழமையை எதிர் நோக்கியே வார நாட்களைக் கழிப்பதால் சோர்வும் அசதியும் போட்டு அமுக்க, ஞாயிற்றுக் கிழமை முழுவதும் அக்கடா என்று ஓய்வாய் இருப்பதையே பெரிதும் விரும்பினான். வெளியில் கிளம்பிப் போய் அலைந்து திரிந்து அதனால் மேலும் சோர்வாகி திங்கட்கிழமைக்குள் நுழைவதை அவன் விரும்புவதில்லை.

முழுமையாய தூக்கம் கலைந்து எழுந்த சுந்தரம், பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் நெற்றியில் முத்தமிட நினைத்து, வேண்டாம்; தூக்கம் கலைந்து விடுமென்று அமைதியாக இருந்து விட்டான். அவளும் ஒருவகையில் பாவம் தான். திருமணமாகி சென்னைக்கு வந்து இருநூறு நாட்களைக் கடந்தும் பள்ளி வீடென்று பார்த்த முகங்களையே பார்த்து சலித்துப் போயிருப்பாள்.

”எங்க அண்ணனைச் சொல்லனும். தேடித்தேடி உங்களைப் போயி புடிச்சிட்டு வந்தாரே…!  இன்ஜினியர் மாப்பிள்ளை தான் வேணுமின்னு பிடிவாதம் பிடிச்சு உங்களக் கல்யாணம் பண்ணி செக்குமாட்டு வாழ்க்கையில வந்து மாட்டிக்கிட்டேன். புதுப் பொண்டாட்டிகூட கைகோர்த்துக்கிட்டு வெளியில போயிட்டு வரணும்னு கூட ஆசைப்படாத ஜடமா இருக்கீங்களே…! உங்களுக்கோ என்னைக்குத் தோணுதோ அன்னைக்கு என்னை வெளியில கூட்டிக்கிட்டுப் போங்க. அதுவரைக்கும் நான் உங்கள ஒன்னும் கேட்க மாட்டேன்….” என்று விரக்தியின் விளிம்பில் நின்று வெடித்தாள் மரியபுஷ்பம்.

”இல்லடா கண்ணு; இன்னும் ஒரு நாலஞ்சு மாதம் பொறுத்துக்கோ. இப்ப நடந்துக்கிட்டு இருக்கிற பிராஜெக்ட் ஒரு ஃபினிசிங் ஸ்டேஜுக்கு வந்துடும். அப்புறம் நாம ஜாலியா இருக்கலாம்….”

”இப்படித்தான் நமக்குக் கல்யாணமாகி சென்னைக்கு வந்த நாள்ளருந்து சொல்லிக்கிட்டு இருக்கீங்க. உங்க புராஜெக்ட் முடியறதுக்குள்ள அநேகமா நாம கெழடுகளா ஆயிடுவோம். அப்புறம் ஆளுக்கொரு கம்ப ஊனிக்கிட்டு ஊரு சுத்திப் பார்க்கலாம். புராஜெக்ட் முடிஞ்சப்புறம் தான் சேர்ந்து வெளியில போக முடியுமின்னா அவசரப்பட்டு எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. பிராஜெக்ட் முடிச்சிட்டு நிதானமா கல்யாணம் பண்ணி இருக்கலாமே…!”

”நீ படிச்ச பொண்ணு, புரிஞ்சுக்குவேன்னு பார்த்தா நீயும் இப்படி சண்டைக்கு நிற்குறியேம்மா…!” எல்லாச் சண்டையிலும் சுந்தரம் பிரயோகிக்கும் கடைசி அஸ்திரம். பெரும்பாலும் மரியபுஷ்பமும் அமைதியாகி விடுவாள்.

நேற்றைக்குத் தான் சுந்தரம் என்றைக்கு மில்லாமல் சீக்கிரமே வீட்டுக்கு வந்தான். “ஏற்கெனவே எங்க பார்த்தாலும் வெள்ளம், புயல்னு ஊரே ஒரே தண்ணிக்காடாக் கெடக்கு. இதுல நீங்கவேற இப்படி எல்லாம் சீக்கிரம் வந்தா வானம் மறுபடியும் பிய்ச்சுக்கப் போகுது. அப்புறம் அதை சென்னை தாங்காதுப்பா….” மரியபுஷ்பம் கேலி பேசினாள்.

”நீ என்ன வெணுமின்னாலும் கிண்டல் பண்ணிக்கோ; ஐயாவுக்கு இன்னைக்கு ரெஸ்ட். நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை முழுக்க ஊர் சுற்றல் தான்….” சுந்தரம் அவனுடைய நீண்ட திட்டத்தை விவரித்துக் கொண்டு போக, மரியபுஷ்பம் சந்தோஷமாக ஓடிவந்து சுந்தரத்தைக் கட்டிக் கொண்டு அவன் கேட்காமலேயே முத்தமழை பொழிந்தாள்.

மரியபுஷ்பத்தை எழுப்பலாம் என்று நினைத்த சுந்தரத்திற்கு அவளைக் கொஞ்சம் சீண்ட வேண்டுமென்று தோன்றியது. ஆவின் பால்பாக்கெட்டை எடுத்து வந்து ஜாக்கெட் ஹூக் பிரிந்து வெளீரென்று தெரியும் மார்பின் மீது வைத்தால் சிலீரென்ற குளிர்ச்சியில் அவள் பதறிப்போய் விழிப்பதைப் பார்த்து ரசிக்க நினைத்தான். அதனால் அலுங்காமல் எழும்பிப் போனான் சுந்தரம்.

வாசற்கேட்டில் தொங்கிய பையிலிருந்து பால் பாக்கெட்டை எடுத்து நிமிரவும், சைக்கிளில் வந்திறங்கிய ஒருவன் சுந்தரத்திற்கு வணக்கம் சொன்னான். பார்த்த முகமாய்த் தான் இருந்தது. ஆனால் பரிச்சயமான முகமாய்த் தெரியவில்லை.

”ஸார், நான் பிராஜெக்ட் சைட்டிலருந்து வர்றேன். சுரேந்திரன் ஸார் உங்களை சைட்டுக்கு வரச் சொன்னார்…..” என்று சொல்லி ஒரு கடித்த்தைக் கொடுத்தான். கடிதம் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தது. – போர்டு பைல் முடியும் தருவாயில் இருக்கிறது. இன்றைக்கே கான்கிரீட் போட வேண்டி இருக்கும். உடனேயே புறப்பட்டு வரவும் – சுரேந்திரன் தான் எழுதி இருந்தான்.

சைக்கிளில் வந்தவனை அனுப்பிவிட்டு சுந்தரம் வீட்டிற்குள் போனபோது, மரியபுஷ்பம் எழுந்து உட்கார்ந்திருந்தாள். “என்ன கம்பெனியிலருந்து ஓலை வந்தாச்சா? உங்களுக்கெல்லாம் வீடு, பொண்டாட்டி எல்லாம் எதுக்கு? பேசாம சைட்டிலேயே  ஒரு குடிசை போட்டுத் தங்கிக்க வேண்டியது தானே….” என்றவள், “உடம்பு சுகத்துக்கு ஒருத்தி வேணுமில்ல; அதுக்குத் தான் அப்பப்ப வீட்டுக்கு வந்து போறீங்களோ….?” அவளின் கண்களில் கண்ணீர் விளிம்புகட்டி நின்று கொண்டிருந்தது.

”ப்ளீஸ்; புரிஞ்சுக்கம்மா. போர்டு பைல்ங்குறது தரைக்குக் கீழ வட்டமா அறுபது எழுபது அடி ஆழத்துக்கு போர் போடுறது மாதிரி குழி தோண்டி அந்தக் குழிக்குள்ள கம்பியெல்லாம் இறக்கி கான்கிரீட் போடுறது. போர் பண்ணி முடிச்சதும் உடனேயே கான்கிரீட் போட்டுடனும். கான்கிரீட் போடாம விட்டுவச்சா, குழிக்குள்ள மண் சரிஞ்சு தூர்ந்து போயிடும். பத்துப்பதினைஞ்சு பேரோட இருபது மணிநேர உழைப்பு வீணாயிடும்.     கோல்டன் பீச் எங்கயும் ஓடிப் போயிடாது. நாம அடுத்தவாரம் போய்க்கலாம்…..”

”நான் உங்ககிட்ட விளக்கம் கேட்டனா? உங்களோட டெக்னிக்கல் சமாச்சாரமெல்லாம் எனக்கெதுக்கு? அதை நான் தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போறேன். நீங்க தாராளமாப் போயி வேலையப் பார்த்துட்டு வாங்க சாமி. அந்தக் கம்பெனியே உங்க தலையில தான் ஓடுது. வருஷக் கடைசியில தலையில கிரீடம் வைப்பாங்க. பெருமையா வாங்கீட்டு வாங்க….”

சுந்தரத்திற்கு கோபம் எகிறியது. இது குத்திக் காட்டுதல். எவ்வளவு கடினமாக உழைத்த போதும் சுந்தரத்திற்கு அவனுடைய கம்பெனியில் அத்தனை நல்ல பெயரில்லை. கம்பெனிக்குள் நிறைய பாலிடிக்ஸ். நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவர்களை விடவும் உயரதிகாரிகளுக்கு சோப்புப் போடுகிறவர்களுக்கும் காக்காய் பிடிக்கிறவர்களுக்கும் தான் மதிப்பும் மரியாதையும் அதிகமிருந்தது.

வருஷக் கடைசியில் உயரதிகாரிகளின் மதிப்பீடுகளில் இவனுக்கு குறைவான மதிப்பெண்களே போடப்பட்டு குறைவான சம்பள உயர்வும், தள்ளிப் போகிற பதவி உயர்வுமே நிகழ்ந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனசு ஆற்றாமல் மனைவியிடம் சுந்தரம் சொல்லிப் புலம்பியதை சரியான நேரம் பார்த்து சுட்டிக் காட்டுகிறாள்.

”அது எனக்கும் எங்க கம்பெனிக்கும் உள்ள பிரச்னை. அதைப்பத்தி நீ ஒன்னும் சொல்ல வேண்டியதில்லை. என்னை மதிப்பீடு செய்ய அங்க இருக்கிற எவனுக்கும் தகுதி இல்ல. நான் வேலை செய்றது சம்பள உயர்வுக்கும் பதவி உயர்வுக்கும் இல்ல. கம்பெனியோட வளர்ச்சிக்காகத் தான். கண்டிப்பா கடின உழைப்பும் திறமையும் என்றாவது ஒருநாள் கௌரவிக்கப்படும்னு நான் நம்புறேன்.  நீ மூடிக்கிட்டுப் போ….”

இருவருக்கும் வாக்குவாதம் வலுக்க வழக்கம் போல் மரியபுஷ்பம் கோபித்துக் கொண்டு படுக்கையில் போய் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

போரிங் முடிந்து கான்கிரீட் வேலைதானே மிச்சமிருக்கிறது என்று சுரேந்திரன் எழுதி இருக்கிறான். நான்கைந்து மணி நேரங்களில் வேலை முடிந்து விடும். அப்படி முடிந்து விட்டால் சீக்கிரம் கிளம்பி வந்து மனைவியை சமாதானப்படுத்திக் கொள்ளலாம் என்றும் முடிந்தால் சாயங்காலம் மெரினா பீச்சிற்கு அவளை அழைத்துக் கொண்டுபோய் வரலாம் என்றும் நினைத்தபடி அவசரமாய் கிளம்பிப் போனான்.

சைட்டிற்குப் போனபோது பைல் போரிங் முடிந்து பைப்புகளை ஒவ்வொன்றாகக் கழட்டிக் கொண்டிருந்தார்கள். சுரேந்திரன் சுந்தரத்திற்கு வணக்கம் வைத்து சிநேகமாய் சிரித்தான்.

”ஸாரி ஸார். உங்களோட ஞாயித்துக்கிழமை சந்தோஷத்தை கெடுத்து இங்க வரவழைச்சுட்டேன். நான் வேணுமின்னா ரூமுக்குப் போயிக் குளிச்சு ரெடியாகி திரும்பவும் வந்துடுறேன். நீங்க வீட்டுக்குப் போய்க்கிறீங்களா?”

”அதெல்லாம் தேவையில்ல. நீ கெளம்புப்பா. நான் பார்த்துக்கிறேன். இராத்திரியெல்லாம் கொட்டக் கொட்ட முழிச்சிருந்துருப்ப. ரூமுக்குப் போய் நல்லாத் தூங்கு….”

சுரேந்திரன் கிளம்பிப் போகவும், சுந்தரம் வேலை ஆட்களைப் பார்த்தான். எல்லோருடைய முகங்களிலும் களைப்பும், சோர்வும், தூக்கமும் வழிந்தது. நேற்றைக்கு இரவு எட்டு மணிக்கு பணிக்கு வந்தவர்கள், பைல் இன்னும் முடியாததால்  தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம்.

கான்கிரீட் முடிந்து கிளம்ப இன்னும் குறைந்தது நான்கைந்து மணி நேரமாவது ஆகும். சப் காண்ட்ராக்டர் கல்கத்தாக்காரர். அங்கிருந்தே ஆட்களைக் கொண்டு வந்து விட்டார். இவர்களுக்கெல்லாம் ஞாயிற்றுக் கிழமை சுகம் எப்போது கிடைக்கும்?

சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அந்த கோர விபத்து நிகழ்ந்தது. போரிங் பைப்களை ஒவ்வொன்றாகக் கழற்றி பக்கத்தில் அடுக்கி, கடைசியாக சிசல் (Chiesel) இணைக்கப்பட்ட பைப்பை வெளியே இழுத்துத் தள்ளி முடிந்த அந்த கடைசிப் புள்ளியில் கால்வழுக்கி சடாரென்று போரிங் குழிக்குள் அவன் விழுந்து விட்டான்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது நேர்ந்துவிட்ட விபத்து அங்கிருந்தவர்களுக்கு உறைக்கவே சில வினாடிகள் ஆனது. அப்புறம் தான் அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் குய்யோ முறையோ என்று கதறத் தொடங்கினார்கள்.

சுந்தாத்திற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒரு நிமிஷம் அப்படியே திக் பிரமை பிடித்தவன் போல் நின்று கொண்டிருந்தான். அப்புறம் தான் உணர்வு வந்து வேகமாய் ஓடிப்போய் ஃபயர் சர்வீசுக்கும் ஆம்புலென்சுக்கும் போன் பண்ணி வரச் சொன்னான். அவனுடைய உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தான்.

வெறும் இரண்டடி அகலமுள்ள எழுபது அடி ஆழக் குழிக்குள் விழுந்துவிட்டவனை எப்படி மீட்பது?  உள்ளே தவறி விழுந்தவன் போர்குழியின் அடி ஆழத்திற்குப் போயிருப்பானா? அல்லது நடுவில் எங்காவது தொங்கிக் கொண்டிருப்பானா? உள்ளே அவனால் சுவாசிக்க முடியுமா? சேறும் பெண்ட்டோனைட் கெமிக்கலும் நிறைந்திருக்கும் குழிக்குள் விழுந்தவனின் வாய்க்குள் இதெல்லாம் போய்விடாதா?

கொஞ்ச நேரத்தில் வேலைத்தளமே அல்லோலப்பட்டது. கம்பெனியின் உயரதிகாரிகள் பலரும் வந்து விட்டார்கள். தமிழும் ஆங்கிலமும் ஹிந்தியும் கலந்து ஒலிக்கும் கூக்குரல்களால் வேலைத்தளம் அதகளப்பட்டது. ஆளாளுக்கு கத்திக் கொண்டும் அபிப்ராயங்கள் சொல்லிக் கொண்டும் இருந்தார்கள்.

ஒருவழியாய் போர்குழிக்குள் விழுந்தவனை மீட்கும் போது அவன் சுத்தமாய் செத்துப் போயிருந்தான். வயிறு உப்பி மிகவும் கோரமாயிருந்தான். முப்பது வயதிற்குள் தான் இருக்கும் அவனுக்கு. கல்கத்தாவிலிருந்து வயிற்றுப் பிழைப்பிற்காக இங்கு வந்தவனுக்கு இந்த ஞாயிற்றுக் கிழமை இவ்வளவு குரூரமாய் விடிந்திருக்கிறது.

விபத்திற்கான காரணம் ஆராயப்பட்ட்து. விதி என்றார்கள். குழிக்குள் விழுந்து இறந்து போனவனின் கவனக் குறைவு என்றார்கள். இதற்கெல்லாம் பொறுப்பு என்று விபத்து நடந்தபோது பொறுப்பில் இருந்த சுந்தரம் தான் என்றார்கள். இவன் நாளைக்கு கைது செய்யப்படலாம். அல்லது சப்காண்ட்ராக்டரை கைது பண்ணச்சொல்லி கம்பெனி சுந்தரத்தைக் காப்பாற்றவும் வாய்ப்பிருக்கிறது.

போஸ்ட்மார்ட்டம் முடிந்து இறந்து போனவனின் உடலை பொட்டலம் கட்டிக் கொடுத்து மயானத்தில் கொண்டுபோய் சடங்கு சம்பிரதாயங்களுடன் அவனைப் புதைத்துவிட்டு சுந்தரம் வீட்டிற்குப் போனபோது இரவு பனிரெண்டு மணிக்கும் மேலாகி இருந்தது.

சுந்தரம் அவனிடமிருந்த சாவியால் வீட்டைத் திறந்து உள்ளே போனபோது மரியபுஷ்பமும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்தாள். அவளுடைய கண்களில் தூக்கத்தையும் மீறிக் கொண்டு கோபம் கொப்பளித்துக் கொண்டு இருந்தது.

விபத்து பற்றி மனைவியிடம் சொல்லலாமா என்று யோசித்த சுந்தரம், வேண்டாமென்று விட்டு விட்டான். அவளின் ஞாயிற்றுக் கிழமையாவது சிதிலப்படாமல் இருக்கட்டுமே.

”நாளையிலர்ந்து பத்து நாட்களுக்கு லீவு போடப் போறேன் மரியம். நாம வெளியூருக்கு டூர் போயிட்டு வரலாம்…..”

”நீங்க சொல்றதை எல்லாம் ஓடுற தண்ணியிலதான் எழுதி வைக்கனும்…” என்று சிரித்தபடி சொன்ன மரிய புஷ்பம் விளக்கணைத்து படுக்கையில் விழுந்து உறங்கத் தொடங்கினாள்.

மனைவியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரம் தன்னையும் அறியாமல் மனசு உடைந்து கதறி அழத் தொடங்கினான் சத்தமே வராமல்.

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.