இதுவொரு அதிசய உலகம்

எஸ். சுரேஷ்

மளிகை கடையை கடக்கும்பொழுது மீண்டும் அதே கேள்வி, “நர்சிங் வந்தானா?” இந்த கேள்வி சிதம்பரத்திற்கு எரிச்சல் தந்தது. “அப்பா, நாம பெங்களூருல இருக்கோம். நமக்கு நர்சிங்ன்னு யாரையும் தெரியாது. நாம இருக்கற இடம் மல்லேஷ்வரம். நான் உன் பிள்ளை, சிதம்பரம். நீ பி.எஹ்.ஈ.எல்ல வேலை செஞ்சு ரிடயர் ஆயிட்டே. நமக்கு நர்சிங்ன்னு யாரையும் தெரியாது.”

சிதம்பரத்தின் தந்தை சண்முகம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் கன்சல்டன்ட்டாக பணி புரிந்தார். அந்த வேலையை விட்ட பிறகு அவருக்கு டிமென்ஷியா வந்தது. அல்ஜேமர்ஸ் நோயும் வரும் அறிகுறி இருக்கிறது என்று டாக்டர்கள் சொன்னார்கள். இப்பொழுது அவருக்கு மறதி முற்றி விட்டிருந்தது. சிதம்பரத்தின் அப்பாவும், அம்மாவும் ஒரு குடியிருப்பில் தனியாக இருந்தார்கள். தினமும் மாலை வேளையில் சிதம்பரம் அங்கு சென்று அப்பாவை வாக்கிங் கூட்டிக்கொண்டு போவது வழக்கம். அந்த மளிகை கடையை கடக்கும் பொழுது, அப்பா தவறாமல் கேட்கும் கேள்வி, “நர்சிங் வந்தானா?”

“யாரும்மா இந்த நர்சிங்?” என்றுதன் அம்மாவிடம் சிதம்பரம் கேட்டான். “தெரியலடா. பேர கேட்டா ஏதோ தெலுங்கு ஆளு பேரு போல இருக்கு. கல்யாணத்துக்கு முன்ன அப்பா ஹைத்ராபாத்ல வேலைல இருந்தாரு. அங்க அவருக்கு தெரிஞ்ச ஆளா இருக்கலாம்.” “உன் கிட்ட  இந்த பேர எப்பவும் சொன்னதில்லையா?” “இல்ல. எந்த காலத்து நினைவோ தெரியல.” “அது எப்படி எந்த காலத்து நினைவோ மனசுல தங்கி இருக்கு? நாம யாருன்னு அவருக்கு தெரியல. ஏதோ ஒரு நர்சிங் பற்றி தினமும் கேக்குறாரு. ஒரே விசித்திரமா இருக்கு.”

சிதம்பரத்துக்கும், அவன் அம்மாவுக்கும் இந்த நோயை எப்படி எதிர்கொள்வது என்று புரியவில்லை. முதலில் அவர்கள் ஏதோ சிலவற்றை சண்முகம் மறந்துவிடுவார் என்றும் பலது அவர் நினைவில் இருக்கும் என்றும் நம்பினார்கள். டாக்டர்கள் இதை இர்ரிவர்சிபில் வியாதி என்று சொன்ன போதும் அப்பாவை குணப்படுத்திவிட முடியும் என்றே நினைத்தார்கள். ஒருவர் வாழ்கையில் நடந்ததை முழுவதுமாக மறந்துவிட முடியும் என்பதை அவர்கள் நம்பவில்லை. தனக்கு வெகு நெருக்கமானவர்களையும் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடும் என்பதையும் அவர்கள் மனம் ஏற்க மறுத்தது.

ஆனால் டாக்டர்கள் சொன்னது போல், சண்முகம் எல்லாவற்றையும் மறக்க ஆரம்பித்தார். இப்பொழுது அவருக்கு தன் மனைவி லக்ஷ்மி யார், தன் மகன் யார், அமெரிக்காவில் இருக்கும் தன் பெண் யார் என்பது எதுவும் நினைவில் இல்லை. யாரோ தனக்கு சாப்பிடத் தருகிறார்கள், தான் சாப்பிட வேண்டும். இதுதான் அவர் மனதில் ஓடிக்கொண்டிருப்பது போல் இருந்தது.

நோய் முற்ற, அவர் அடிக்கடி கோபம் கொள்ள ஆரம்பித்தார். அவருக்கு உணவு கொடுப்பது பெரும்பாடாக ஆனது. சில சமயங்களில் தட்டை தட்டி விடுவார். வீட்டை விட்டு வெளியே போகப் பார்ப்பார். யாராவது தடுத்தால் அவர்களை வேகமாக தள்ளிவிட பார்ப்பார். அம்மாவுக்கு துணையாக ஒரு பெண்மணியை சிதம்பரம் அமர்த்தியிருந்தான். சில சமயங்களில் இருவர் பிடித்துக் கொண்டாலும் திமிறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற பார்ப்பார். “நாளுக்கு நாள் உங்க அப்பா கோவம் அதிகம் ஆவுது தம்பி” என்று வேலைக்கு வைத்திருந்த பெண்மணி கூறினாள்.

இப்படி இருந்தபொழுதும், சிதம்பரமும் அவன் அம்மாவும், அப்பாவிற்கு பழையதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார்கள். “இதுனால ஏதாவது உபயோகமுண்டா?’ என்ற சிதம்பரத்தின் கேள்விக்கு, அம்மா, “ஏதோ ஒண்ணு நடந்தது அவர் மனசில் ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருக்கும். அதை நாம அவருக்கு சொன்னா, அவர் நினைவு திரும்பி வரலாம். ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு அவர் யாருனு புரிஞ்சி, நாம யாருன்னு அவருக்கு  நினைப்பு வந்தா போதும். மறுபடியும் ஒரு முறை என்ன லக்ஷ்மின்னு கூப்பிடணும். அதுதான் என் பிரார்த்தனை. நாம செய்யறதைச் செய்வோம்” என்றாள். சிதம்பரமும் முடிந்தபொழுதெல்லாம் அப்பாவுக்கு தான் யார் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருந்தான். இருப்பினும் அவர் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார், “நர்சிங் வந்தானா?”

“வள்ளி டிக்கெட் புக் பண்ணிட்டாளாம். அடுத்த வாரம் வருவா” என்று அம்மா சொன்னாள். வள்ளி சிதம்பரத்தின் அக்கா. அவள் அப்பாவை போல் ‘மெக்கானிக்கல் இஞ்சினியர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டு படித்து, இப்பொழுது சிதம்பரம் போல் அவளும் ஐ.டி. நிறுவனத்தில் கணவனுடன் அமெரிக்காவில் இருக்கிறாள். அப்பாவை பார்க்க வரவேண்டும் என்று அவள் நினைத்தபொழுது உலகமே கொரொனா வியாதியின் காரணமாக மூடப்பட்டது. நான்கு வருடத்துக்குப் பின் இப்பொழுதுதான் அவளால் வரமுடிகிறது. “ஏண்டா, அவளையாவது நேர்ல பாக்குறப்போ உங்க அப்பாவுக்கு அடையாளம் தெரியுமா?” என்ற அம்மாவின் கேள்விக்கு, “தெரிஞ்சா நல்லா இருக்கும்” என்று சிதம்பரம் பதில் கூறினான்.

“இத பார் சிது. உங்க அக்கா வந்து உன் அப்பா அம்மாவை நம்ம கூடவே வச்சிக்க சொன்னா நீ முடியாதுன்னு  ஸ்டராங்கா சொல்லு. இங்க என்னால வேலைக்கு போயி, ரெண்டு குழந்தைகளை பாத்துண்டு உங்க அம்மா அப்பாவையும் பாத்துக்க முடியாது. நீ தினமும் அங்க போ. எவ்வளவு நேரமானாலும் அவங்களோட இரு. ஆனா அவங்கள இங்க கொண்டு வரத பத்தி யோசிக்காத. அத நான் நடக்க விடமாட்டேன். சொல்லிட்டேன்” என்று சிதம்பரத்தின் மனைவி  ஷ்வேதா சொல்லி விட்டாள். வள்ளி என்ன சொல்லப் போகிறாளோ என்ற அச்சம் சிதம்பரத்திற்கும் ஷ்வேதாவிற்கும் இருந்தது. “இதுக்கு மேல நம்மால ஒன்னும் செய்ய முடியாது. உங்க அக்கா இது சரியில்ல அது சரியில்லன்னு ஏதாவது சொன்னா அவளை இந்தியாவுக்கு திரும்பி வர சொல்லு. அவ சொல்றத எல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா நிக்காத” என்று ஷ்வேதா அறிவுரை கூறினாள

வள்ளி அப்பாவை வந்து பார்க்கும் நாளை லக்ஷ்மி வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். தன் கணவனுக்கு ஆசை மகளை பார்க்கும்பொழுது சற்று நினைவு திரும்பாதா என்ற ஒரு நப்பாசை அவளுக்குள் இருந்தது. ஆனால் அவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. தான் மிகவும் நேசித்த மகளை அப்பா அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இவ்வளவு வருடங்கள் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அன்று வெளிவந்தது. தன் மகளை இறுக்கமாக கட்டிக்கொண்டு லக்ஷ்மி கேவி கேவி அழுதாள்.

அடுத்த நாள் மாலை சிதம்பரம் அப்பாவுடன் வாக்கிங் கிளம்பும்பொழுது வள்ளியும் சேர்ந்து கொண்டாள். மளிகை கதையை கடக்கும்பொழுது அப்பா, “நர்சிங் வந்தனா?” என்று கேட்டார். சிதம்பரம் பதில் கூறுவதற்குள், வள்ளி, “காலைல வந்தானே” என்று கூறினாள்.

“ஓ. ஸைன் வாங்கிண்டு போனானா?”

“ஆமாம்.”

“அப்படின்னா சரி. நான் ஸைன் போட்டாதான் லாரிய கேட் வெளியிலே விடுவான்”

“அவன் சொன்னான்.”

சற்று தூரம் அப்பா மௌனமாக வந்தார். அவர் முகத்தில் பல நாட்களுக்கு பிறகு சிதம்பரத்தால் சிரிப்பை பார்க்க முடிந்தது. சிறிது நேரம் கழித்து, “அந்த ஸ்ரீநிவாஸ் ரெட்டி இன்னிக்கி வரமாட்டான்.”

“அப்படியா? ஏன்?” வள்ளி கேட்டாள்

“அவன் பெண் பார்க்க போறான்.”

“நீங்க எப்போ கல்யாணம் கட்டிக்க போறீங்க?”

அப்பா உரக்க சிரித்தார். “அப்பா அம்மா பெண் தேடராங்க. பார்போம்.”

வாக்கிங் முடியும் வரை சிதம்பரம் அறியாத பலரை பற்றி அப்பா கேட்க, வள்ளி அவர்களை அறிந்தவள் போல் பதில் அளித்துக் கொண்டிருந்தாள்.

அப்பா சிரித்துக் கொண்டிருப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளித்தாலும், வள்ளி செய்வது சரியில்லை என்று சிதம்பரத்துக்குப் பட்டது. அம்மாவும் இவனும் அவரை இந்த உலகத்தில் வைத்திருக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கும்போது வள்ளி அவரை வேறொரு உலகத்துக்கு கொண்டு செல்கிறாள். வள்ளி ஒரு மதியம் வீட்டுக்கு வந்தாள். அவளிடம் சிதம்பரம், “வள்ளி. நீ அப்பாகிட்ட அவர் சொல்றதெல்லாம் நிஜம்ன்னு நினைக்கற போல நடந்துக்கற. இது அவர் மறதியை இன்னும் அதிகமாக்கும். நாங்க அவர இந்த நிஜ உலகத்துக்கு கொண்டு வரணும்னு பாக்கறோம். அவருக்கு எங்களை தெரியாமலே போயிடும்னு பயமா இருக்கு” என்றான்.

வள்ளியின் சிரித்தாள். “சிது, ஒருவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அதுதான் அவருடைய உலகம். நமக்கு இந்த உலகம் எவ்வளவு நிஜமோ அதே போல் ஸ்ரீநிவாஸ் ரெட்டியும் நர்சிங்கும் வாழும் உலகம் அவருக்கு நிஜம். நாம எவ்வளவு படுத்தினாலும் அவர நம்ப உலகத்துக்கு கொண்டுவர முடியாது, அவருக்கு இங்க யாரோடயும் ஒட்டாது நாமும் கஷ்டப்பட்டுக்கிட்டு அவரையும் கஷ்டப்படுத்தறதுக்கு பதிலா நாம அவர் உலகத்துல அவரோட சேர்ந்து இருக்கலாம் இல்லையா?” என்றாள்.

அன்று மாலை சிதம்பரத்தை பார்த்தவுடன் அப்பா கேட்டார், “ராகவ் ராவ் ரா மெட்டீரியல் ரிலீஸ் பண்ணிட்டானா?”

ஒரு நொடி வள்ளியை உற்று நோக்கிவிட்டு, சிதம்பரம் சொன்னான், “நாள காலைலதான் ரிலீஸ் பண்ணுவேன்னு சொல்றாரு.”

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.