வைரம்

ஸிந்துஜா

ஐந்து மணி அடித்ததும் எல்லோரும் அலுவலகத்தை விட்டுக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக ஐந்தேகால் மணிக்கு மேல்அந்த அலுவலகத்தில் பெண்கள் யாரும் இருக்கக் கூடாது என்ற கடுமையான விதி இருந்தது. அதே போலக் காலையில் ஒன்பது மணிக்கு ஊழியர்கள் அவரவர் இடத்தில் பிரசன்னமாகி இருக்க வேண்டும். மாதத்தில் மூன்று முறை ஒன்பது ஐந்துக்குள் வர அனுமதி இருந்தது. அதற்கு மேலான தாமதம் என்றால் அன்றைய தினம் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதான். இது போலப் பல விதிகள் ஒழுங்கையும் கண்டிப்பையும் நிலை நிறுத்துவன போல இருந்தன. வேலைக்கு வந்த முதல் ஒரு வாரம் செல்லாவுக்குச் சற்றுத் தடுமாற்றமாக இருந்தது. ஆனால் அதற்கப்புறம் பழகி விட்டது.

அந்த நிறுவனத்தில் அவள் கணவன் வாசு வேலை பார்த்தான். திடீரென்று அவன் இறந்து விட்டான். அந்த அலுவலகத்தில் இறந்தவரின் கணவன் அல்லது மனைவி அல்லது வாரிசுக்கு வேலை வாய்ப்புத் தரும் திட்டமோ விதிகளோ எதுவும் இல்லை. அப்படியிருந்தும் அவளுக்கு வேலை கிடைத்தது தனிக் கதை.

செல்லா மேஜையிலிருந்த தாள்களையும், ஃபைல்களையும் எடுத்து டிராயருக்குள் வைத்துப் பூட்டினாள். அலுவலகத்தில் வேலை பார்த்த மூன்று பெண்களில் செல்லாதான் இளையவள். அவள் வேலையில் அமர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருஷமாகப் போகிறது. அசிஸ்டன்ட் ஆக வேலை கிடைத்தது. செல்லாவின் உடனடி மேலே சீனியர் அசிஸ்டன்ட் ஆக இருந்தது ஸ்ரீதேவி. சுசீலா அவர்கள் இருவருக்கும் மேலதிகாரி. ஸ்ரீதேவி ஆறு வருஷமாகவும் சுசீலா பத்து வருஷமாகவும் அங்கே வேலை பார்த்தார்கள் என்று சில வாரங்கள் கழித்து அவள் தெரிந்து கொண்டாள். .

எல்லா அலுவலகத்திலும் நடந்து கொள்வது போல செல்லா புதியவளாக உள்ளே நுழைந்ததும் மற்ற இரு பெண்களும் தத்தம் அலட்சியத்தை அவள் மேல் தெளித்தார்கள். குறிப்பாக அவள் வேலையில் சேர்ந்த விதம் அவர்களுக்கு உவப்பாக இல்லை என்று செல்லா நினைத்தாள். வாசு செய்து விட்டுச் சென்றது நிறுவனத்தில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அந்தத் தெரிதலின் விளைவாக அவள் மீது ஒட்டிக் கொள்ள எவரும் முனையவில்லை என்று அவள் அப்போது தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டாள். தன் வாழ்க்கையில் கவலைப்படுவதற்குத் தனக்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன என்று அவள் அவர்களின் அலட்சியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் ஆறு மாதம் கழித்து அவளுக்குக் கன்ஃபர்மேஷன் லெட்டர் கிடைத்த பின் எல்லா அலுவலகத்திலும் நடப்பது போல அவர்கள் இருவரும் அவளைப் பார்த்தால் புன்னகை செய்யும் மரியாதையைச் செலுத்தினார்கள். நாளடைவில் அவள் வேலையில் காண்பித்த திறமையும் அது நிர்வாகத்தின் மேல் மட்டத்தில் அவளுக்கு ஏற்படுத்தித் தந்த ஒரு வித மரியாதையும் அவர்களை அவளுடன் சற்று மேலும் நெருக்கமாகப் பழக வழி வகுத்தது.

இன்று சுசீலா உடல்நலம் சரியில்லை என்று வரவில்லை. கிளம்பும் முன் முகத்தைக் கழுவிக் கொள்ள ஸ்ரீதேவி பாத்ரூமுக்குச் சென்றிருந்தாள். அவள் வந்த பின் செல்லா அங்கே போய் விட்டு வந்து வீட்டுக்குக் கிளம்ப வேண்டும்.

பாத்ரூமிலிருந்து திரும்பி வந்த ஸ்ரீதேவி அன்றைய வேலை அவளது முகத்தில் ஏற்றியிருந்த களைப்பை எல்லாம் பாத்ரூமில் உதறி விட்டு வந்தவள் போல் இருந்தாள்.

செல்லா தன்னைப் பார்ப்பதைப் பார்த்து ஸ்ரீதேவி சிரித்தபடி “சினிமாவுக்குப் போறேன். அதான் அழுது வடிஞ்ச மூஞ்சியோட எதுக்குப் போகணும்னு….” என்றாள்.

செல்லா “என்ன படம்?” என்று கேட்டாள்.

“ஆர் ஆர் ஆர்.”

“ஓ அதுவா? அமெரிக்காலே கூட ஏதோ பரிசு கொடுத்திருக்காங்களாமே அதுக்கு.”

“அவன் அவார்ட் கொடுத்தா அப்ப படம் மட்டம்தான்!” என்று சிரித்தாள்.

சில வாரங்களுக்கு முன்புதான் ஒரு நாள் லஞ்சுக்குப் பிறகு அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்த போது சுசீலா சொன்னாள்: இந்த உலக அழகிப் பட்டம், ஆஸ்கர் பரிசு எல்லாம் கண்துடைப்பு வேலை. ஏதோ நம்ம ஆட்களைப் பாத்து பிரமிச்சிடற மாதிரி பாவலா பண்ணிட்டு பின்னாலேயே அவங்க கம்பனி சாமான்களையெல்லாம் இந்த அழகன் அழகிகளை வச்சு விளம்பரம் பண்ணி இங்கே கொண்டு வந்து கொட்டிப் பணம் பண்ணறதுதான் ஐடியா. நாமளோ அமெரிக்கா ஆஸ்திரேலியான்னு எவனாவது வெளிநாட்டுக் காரன்னா அப்படியே மயங்கிக் கீழே விழுந்து அடிபட்டது கூட நமக்குத்தான்னு தெரியாம சந்தோஷப்பட்டுக்கிட்டு இருப்போம்” என்றாள்…

“சரி, நீ காசு கொடுத்துப் போய்க் கஷ்டத்தை அனுபவிச்சிட்டு வா” என்று செல்லா சிரித்தாள் ஸ்ரீதேவியிடம்.

“ஆளைப் பாத்தியே. செல்வம்தான் டிக்கட் புக் பண்ணியிருக்கு. போய்ட்டு செல்வம் செலவிலயே டின்னரை முடிச்சிருவேன்” என்று ஸ்ரீதேவியும் சிரித்தாள்.

ஸ்ரீதேவி டைவர்சி. செல்வம் அவளது உறவினன். அவளைத் திருமணம் செய்து கொள்ள ஒரு காலில் நிற்கிறான். இவள்தான் இடம் கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.

“சரி, அப்ப நான் கிளம்பட்டுமா செல்லா? நீ நாளைக்கு வர மாட்டேல்லே? எப்போ பாண்டிலேர்ந்து திரும்புவே?” என்று கேட்டாள்.

“இன்னிக்கி ராத்திரி கிளம்பிப் போயிட்டு நாளைக்கு ஃபங்ஷன் முடிஞ்சதும் ராத்திரி கிளம்பி வரதா இருக்கேன். குழந்தையை அம்மா கிட்டே விட்டுட்டுப் போறேனே. அதனாலே உடனே திரும்ப வேண்டியதுதான்” என்றாள் செல்லா.

செல்லா கன்னிங்ஹாம் ரோடு பஸ் நிறுத்தத்தை அடைந்த போது ஏழெட்டு பேர்தான் காத்துக் கொண்டிருந்தார்கள். மல்லேஸ் வரத்தைத் தாண்டிச் செல்லும் பஸ் ஐந்து இருபதுக்கு வரும். அதில் இங்கிருக்கும் பேர்களுடன் ஏறுவதில் கஷ்டம் எதுவும் இருக்காது. சில சமயம் உள்ளே உட்காரக் கூட இடம் கிடைக்கும். இதைத் தவற விட்டால் அடுத்த பஸ் ஐந்து ஐம்பதுக்குத்தான். ஆனால் ஐந்தரை மணிக்கு ஆபீஸ் முடிந்தவுடன் பாய்ந்து வெளியே வரும் அரசாங்க ஊழியர்கள் கூட்டத்தோடு அந்தப் பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறத் தனித் திறமை, தனிப் பலம் எல்லாம் வேண்டும். அது தவிர அதில் மல்லேஸ்வரம் வரை நின்று கொண்டே
தான் போக வேண்டும்.

அவள் வீட்டை அடைந்ததும் அவளுடைய அம்மாவை விடுதலை செய்வாள். செல்லா இருக்கும் ஆறாவது கிராஸிலிருந்து எட்டாவது கிராஸில் இருக்கும் தன் வீட்டுக்கு அம்மா இருட்டுவதற்கு முன் கிளம்பிப் போக அது ஏதுவாக இருக்கும். மூன்றரை மணிக்குப் பள்ளிக்கூடத்தை விட்டு வீட்டுக்கு வரும் அவளது குழந்தையைப் பார்த்துக் கொள்ளவென்று அம்மா தினமும் இரண்டு மணிக்கு செல்லாவின் வீட்டுக்கு வந்து விடுவாள். குழந்தை வந்தவுடன் குடிப்பதற்குப் பாலும் தின்பதற்குப் பட்சணமும் கொடுப்பாள். நாலரை மணி வாக்கில் வீட்டுக்கு அருகில் இருக்கும் மல்லேஸ்வரம் கிரவுண்டில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுடன் சுகுவையும் விளையாடக் கூட்டிக் கொண்டு போவாள். அரைமணியிலிருந்து முக்கால் மணி நேரம் அங்கே செலவாகும்.

செல்லாவின் அம்மா வீட்டுக்குத் திரும்பியதும், சாதம் வடித்து வைத்து விடுவாள். செல்லா வந்த பின் குழந்தையும் அவளும் சாப்பிட ஏதாவது ஒரு காயை நறுக்கி கறி பண்ணிக் கொள்வாள். சனி ஞாயிறு விடுமுறை தினங்கள் என்று குழந்தையும் செல்லாவும் அம்மாவின் வீட்டுக்குப் போய் விடுவார்கள். அந்த இரண்டு நாளும் அம்மாவுக்குப் பேரனைப் பார்த்துக் கொள்வது தவிர வேறு வேலை எதுவும் கிடையாது. “அதான் வாரத்திலே அஞ்சு நாள் ஆபீஸிலே கிடந்து மன்னாடிட்டு வரியே. நான் வேலையெல்லாம் பாத்துக்கறேன். நீ ரெஸ்ட் எடு” என்று அம்மா சொல்வதை அவள் காதில் வாங்கிக் கொள்ள மாட்டாள். ஒய்வு என்றால் என்ன? மறுபடியும் ஆபீஸ், வாசு என்று நினைவு தறிகெட்டு ஓடும். உடம்புக்கு அலுப்பை ஏற்க வேண்டிய நெருக்கடி நிகழும் போது மனதுக்கு வேலை செய்ய வாய்ப்புக் கிட்டுவதில்லை.

அவள் வீட்டை அடைந்த போது அம்மா சுகுவைத் தன்னுடன் கூட்டிக் கொண்டு செல்லும் நிலையில் தயாராக இருந்தாள்.

அம்மா செல்லாவிடம் “டிரெயின் எத்தனை மணிக்கு?” என்று கேட்டாள்.

“எட்டே முக்காலுக்கும்மா. நல்ல வேளையா யஷ்வந்த்பூர்லேந்து கிளம்பறது. ஒரு ஊபர் பிடிச்சா பத்து நிமிஷத்திலே கொண்டு போய் விட்டுடுவான்” என்றாள் செல்லா.

“அங்க கார் வருமா ஸ்டேஷனுக்கு?”

“இந்தக் கிரகப் பிரவேசக் களேபரத்திலே உனக்கு எதுக்கு சிரமம், நானே பாத்துக்கறேன்னு பட்டு கிட்டே சொன்னேன். அவளா கேக்கறவ? அடச்சீ, சும்மா கிடன்னு என் வாயை அடைச்சிட்டா” என்று செல்லா சிரித்தாள். பட்டம்மாவும் செல்லாவும் எல். கே. ஜி, ஸ்கூல், காலேஜ் வரை ஒன்றாகப் படித்தவர்கள். அவளுக்குக் கல்யாணம் ஆகிப் பாண்டிச்சேரியில் செட்டில் ஆகி விட்டாள். பட்டு, அவள் கணவன் இருவருமே வங்கியில் வேலை பார்க்கிறார்கள். நாளை அவர்கள் கட்டியுள்ள புதிய வீட்டுக்குக் கிரகப் பிரவேசம்.

& & &

ரயில் கிளம்பக் கால் மணி முன்பே செல்லா ஸ்டேஷனுக்கு வந்து வண்டியில் ஏறிக் கொண்டாள். இரண்டாம் வகுப்பு என்ற போதிலும் வார நாள் என்பதால் அவ்வளவாகக் கூட்டம் இல்லை என்று நினைத்தாள். வாசு இறந்த பிறகு அவள் மேற்கொள்ளும் முதலாவது வெளியூர்ப் பயணம் இது. கடைசியாக ரயிலில் சென்றது இரண்டடுக்கு ஏ.சி. வகுப்பில். மிக சௌகரியமான பயணமாக அது இருந்தது. வாசு இருந்த கடைசி ஒரு வருஷம் அவன் அதிகப்படியான சௌகரியங்களைச் செய்து கொடுத்தான். ஜெயநகரிலேயே கொஞ்சம் பெரிய வீட்டுக்கு வாடகைக்குப் போனார்கள். வாசு ஒரு புதிய ஸ்கூட்டர் வாங்கி அவன் அலுவலகம் போகும் வழியில் அவள் அவெனியூ ரோடில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெரிய துணிக் கடை வாசலில் இறக்கி விட்டுப் போவான். வார இறுதிகளில் தியேட்டர்களுக்குப் போவது, வழக்கமாகி விட்டது. அதே மாதிரி சனி ஞாயிறில் காப்பிக்காகத் தவிர வீட்டில் அடுப்பு பற்ற வைக்கப்படவில்லை. சினிமா வெளியூர்ப் பயணங்களில் அவன் இரண்டு அல்லது மூன்றடுக்கு ஏ.சி. கோச்சில்தான் அவளை அழைத்துச் சென்றான். அலுவலகத்தில் கிடைத்த பதவி உயர்வும் அவன் புதிதாகப் பங்குச் சந்தையில் ஈடுபட ஆரம்பித்து அதில் வந்த அதிக வருமானமும்தான் அவர்கள் கொஞ்சம் வசதியாக இருக்க உதவுகிறது என்று அவளிடம் சொன்னான். அவன் சொன்னவற்றை அவள் அப்படியே நம்பினாள். வாசு இறந்து போகும் வரை.

வாசு இறப்பதற்கு இரண்டு நாள் முன்பு பெலத்தங்கடி அருகே இருந்த சதாசிவ ருத்ரா கோயிலுக்குக் கிளம்பிச் சென்றான். இதற்கு முன் பல தடவை அங்கே சென்றிருக்கிறான். மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் என்று ஜனங்களால் நம்பப்பட்ட அந்தக் கோயிலில் அவரவர் பிரார்த்தனைகள் நிறைவேறும் போது அந்தக் கோயிலுக்குச் செல்வார்கள். அங்கு பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்று சமர்ப்பிக்கும் பொருளைக் களிமண்ணால் செய்யச் சொல்லிக் கோயிலில் படைத்துப் பூஜை செய்வார்கள். சில தடவை வாசுவும் செல்லாவும் ஜோடியாகவும் சில தடவை அவன் தனியாகவும் அந்தக் கோயிலுக்குச் சென்றதுண்டு. வேலையில் பதவி உயர்வு கிடைத்து ஆறு மாதங்களாகியும் இன்னும் பிரார்த்தனையைச் செலுத்தவில்லை என்றுதான் போகப் போவதாகச் சொன்னான். செவ்வாய் இரவு பஸ்ஸில் ஏறிய அவன் வியாழன் மாலையில் திரும்பி வந்து விடுவதாகச் சொல்லி விட்டுச் சென்றான்.

வியாழக்கிழமை இரவு ஆகியும் அவன் வரவில்லை. அவள் அவனுக்குப் போன் செய்த போது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகக் கைபேசி சொன்னது. அந்தப் பிரதேசங்களில் இம்மாதிரிப் பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு என்று அவள் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள். வெள்ளியன்று காலையிலும் அவன் வராததும் இன்னும் போன் எடுக்கப்படாமல் இருந்ததும் அவளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அவள் காலையில் குழந்தையை ஸ்கூலில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்து அலுவலகம் செல்லத் தயாரான போது வாசலில் அழைப்பு மணி அடித்தது. வாசு என்று நினைத்தபடி அவள் கதவைத் திறக்கச் சென்றாள். வாசலில் இரண்டு பேர் நின்றார்கள். அவர்களில் ஒருவர் வாசுவின் அலுவலகத்தில் உள்ள ஜி.எம். அவரை அவள் இரண்டொரு முறை சந்தித்திருக்கிறாள். அவரது அருகில் இருந்த அறிமுகமற்ற மனிதர் வாட்டசாட்டமாக நின்றார்.

செல்லா அவர்களை உள்ளே வரும்படி அழைத்தாள்.

மேலதிகாரி நேரடியாக அவளிடம் “மேடம், நாங்க ஒரு துக்கமான விஷயத்தைச் சொல்ல வந்திருக்கோம்” என்றார்.

அவள் வயிற்றுக்குள் கல் விழுந்தது.

மேலதிகாரியின் கூட வந்த மனிதர், தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து ஒரு கவரை எடுத்தார். அதைப் பிரித்து உள்ளிருந்த கண்ணாடித் தாளால் சுற்றப்பட்டிருந்த இன்னொரு கவரை எடுத்தார். அவளிடம் கையில் கொடுக்காமல் அதைப் பார்க்கச் சொன்னார். மடித்த சட்டை தெரிந்தது. பச்சை நிறச் சட்டை. வாசுவிடம் இது மாதிரி ஒரு சட்டை ….

அவள் திடுக்கிட்டு அவர்களைப் பார்த்தாள்.

மேலதிகாரியின் உடன் வந்தவர் தன்னைப் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். வியாழக்கிழமை காலையில் தர்மஸ்தலாவில் நேத்ராவதி நதியின் கரையில் வாசுவைக் கடைசியாகப் பார்த்தது கோயிலுக்கு வந்த ஓர் தம்பதி. அவர்களிடம் தன் பொருளைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டு வாசு நதிக்குள் இறங்கிக் குளிக்கச் சென்றதாகவும், அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தொலை தூரம் சென்ற வாசு திடீரென்று மறைந்து விட்டதாகவும் கால் மணி கழித்தும் அவன் திரும்பி வராததைக் கண்டு பயந்து அந்தத் தம்பதி பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்ல, உள்ளூர்க்காரர்கள் வாசு சென்ற இடம் ஆழமான சுழல்களைக் கொண்டது என்று போலீசிடம் போயிருக்கிறார்கள். சில மீனவர்களைப் பிடித்துப் பார்க்கச் சொல்லியிருக்கிறது போலீஸ். அவர்களும் கிட்டத்தட்ட ஏழெட்டு மைல் சென்று பார்த்தும் உடல் கிடைக்கவில்லை என்று திரும்பி வந்து விட்டார்கள். சட்டைப் பையில் இருந்த விசிட்டிங் கார்டை வைத்துப் போலீஸ் வாசுவின் ஆபீஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இப்போது இங்கு வந்திருப்பதாக இன்ஸ்பெக்டர் சொன்னார். அவர் கொண்டு வந்திருப்பது வாசுவின் சட்டைதானா என்று பார்த்து உறுதி செய்யச் சொன்னார். உடல் கிடைக்காததால் சந்தர்ப்ப சாட்சியங்களின் மூலமே அவனது இறப்பு உறுதியானது.

அந்த அடியிலிருந்து செல்லா மீண்டு வர நாள் பிடித்தது.

ஒரு நாள் காலையில் அவளுக்கு வாசுவின் அலுவலகத்திலிருந்து போன் வந்தது. ஜி.எம்.மின் பி.ஏ., ஜி.எம். அவளுடன் பேச விரும்புவதாகக் கூறி
லைனைக் கொடுத்தாள்.

“குட் மார்னிங் மிஸஸ் வாசு. உங்களோட நான் ரெண்டு நிமிஷம் பேச முடியுமா?”

அவள் பதில் வணக்கம் சொன்னாள்.

“நீங்க உங்க ஆபீசுக்குப் போக ஆரமிச்சிட்டீங்களா?” என்று கேட்டார்.

“இல்லே சார். அடுத்த திங்கக் கிழமைலேந்து போகணும்.”

எதிர்முனையில் சில வினாடிகள் மௌனத்தில் ஊர்ந்தன.

“நீங்க இன்னிக்கி எங்க ஆபீசுக்கு வர முடியுமா?”

“எத்தனை மணிக்கு சார்?”

“இப்போ ஒம்பதரை ஆகுது. பத்தரை, பதினோரு மணிக்கு?”

அவள் பதினோரு மணிக்கு அவரைச் சந்தித்தாள்.

அவர் அவளிடம் “இதோ பாரம்மா. உனக்கு என் பொண்ணு வயசு இருக்கலாம். அதனாலே நீன்னே உன்னைக் கூப்பிடறேன். நா சுத்தி வளைக்காம உங்கிட்டே சொல்லிடறேன். வாசு எங்க ஆபீஸ் பணத்தைக் கையாடல் செஞ்சிருக்கான்” என்றார்.

அதைக் கேட்டதும் அவள் உறைந்தாள்.

அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட ஐந்து நிமிஷமாயிற்று அவளுக்கு. ஜி.எம். மௌனமாக உட்கார்ந்திருந்தார்.

“எவ்வளவு பணம் சார்?”

அவர் குரலைச் செருமிக் கொண்டு “எட்டு லட்சம்” என்றார்.

“என்னது?”

“வாசு செத்துப் போறதுக்கு ரெண்டு நாள் முன்னதான், அதாவது அந்த வாரத் திங்கக்கிழமை ஆடிட்டர்ஸ் கண்டு பிடிச்சாங்க. திங்களும் செவ்வாயும் வாசுவை விசாரிச்சோம். அவன்தான் கஸ்டமர்களோட கணக்குகளைப் பாத்துக்கிறவன். பல பேர் கிட்ட கம்பனிலேந்து வித்த சாமான்களுக்கு கேஷ் கலெக்ட் பண்ணிட்டு கணக்குலே கொண்டு வராம கையாடல் செஞ்சிருக்கான். தான் அப்படி ஒண்ணும் செய்யலேன்னு அவன் அடம் பிடிச்சான். புதன் கிழமை காலேலே எங்க செக்யூரிட்டி இங்க வந்து ‘அவசரமா ஊருக்குப் போறேன். ரெண்டு நாளைக்கு லீவு லெட்டர் இது. காலேலே ஆபீஸ்லே கொடுத்துடு’ன்னு அவன் கையிலே வாசு முந்தின நாள் ராத்திரி கொடுத்துட்டுப் போனதா சொன்னான். மறுநாள் இன்ஸ்பெக்டர் வந்து நின்னாரு.”

“அப்போ வாசு தற்கொலை செஞ்சுக்கிட்டதா நீங்க நினைக்கிறீங்களா?”

அவர் அவளை உற்றுப் பார்த்தார். எதுவும் பேசாமல் சில நிமிஷங்கள் கடந்தன. பிறகு அவர் “வாசு செத்துப் போனது ஒண்ணுதான் உண்மையா இருக்கு. அவன் பாடி கிடைக்காம இருக்கறப்பவும் கூட. தற்கொலையா, ஆக்சிடெண்டான்னு எல்லாம் நாங்க உள்ளே போக விரும்பல. உன்கிட்ட உண்மையைச் சொல்லணும்னா இந்த எட்டு லட்ச நஷ்டத்தை விட நாங்க பெரிசா மதிக்கிறது எங்களோட கம்பனி பேரை. எங்க கஸ்டமர்கள் எங்க மேலே வச்சிருக்கிற நம்பிக்கை ரொம்ப முக்கியம். அது தவிர எங்க எம். டி.யோட பையன் இன்னும் மூணு மாசத்திலே இந்தக் கம்பனியோட எம்.டி.யா வர இருக்காரு. இப்பப் பாத்து எங்க கம்பனி பேரை வெளியிலே யாராவது இழுத்து அசிங்கமாப் பேச நாங்க இடம் கொடுக்க முடியாது. அதனாலேதான் நாங்க எங்க சைடிலேந்து போலீஸ் அது இதுன்னு கூடப் போகலே” என்றார்.

அவள் பிரமை பிடித்தவள் போல உட்கார்ந்திருந்தாள். வாசுவின் சாவை விட இந்த அவமானம் அவள் மீது மரண அடியாக விழுந்தது.

ஜி.எம். அவளிடம் “உன்கிட்டே இதெல்லாம் சொல்ல மட்டும் நான் கூப்பிடலே. இந்த ஃபிராடு கடந்த எட்டு மாசமா நடந்திருக்கு. இந்த பணத்தையெல்லாம் வாசு எங்கே வாரி விட்டான் தெரியுமா? ஷேர் மார்க்கெட்டுலே. நாங்க அவனோட ரெண்டு பேங்க் அக்கவுண்டையும் வாங்கி சல்லடை போட்டுப் பாத்துட்டோம். அவன் எடுத்த பணம் எல்லாம் புரோக்கர் கம்பனிக்குதான் போயிருக்கு. வாங்கி வித்த ஷேர்ல அவ்வளவு நஷ்டம். கம்பனி பணத்தை வச்சு விளையாடிட்டான். ஆனாலும் நான் எங்க கம்பனி ரிக்கார்டுக்காக உன் கிட்டே இதைக் கேக்கணும். இந்த எட்டு மாசத்திலே வாசு எங்கேயாவது நிலம், வீடு, நகை நட்டுன்னு கேஷ் கொடுத்து வாங்கினானா உனக்குத் தெரிஞ்சு ?”

அவள் தனக்குத் தெரிந்து அவன் அப்படி எதுவும் வாங்கவில்லை என்றாள்.

சற்று நேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள். செல்லா தனக்குக் குடிக்க நீர் கிடைக்குமா என்று கேட்டாள். அவர் தனது வலது பக்கத்து ஸ்டூலில் இருந்த தண்ணீர்ப் பாட்டிலை எடுத்து அவளுக்குத் தந்தார். அவள் அதிலிருந்த அவ்வளவு நீரையும் ஒரே மூச்சில் குடித்து விட்டாள். கைப்பையிலிருந்த கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டாள் .

பிறகு அவரைப் பார்த்து “நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்” என்றாள்.

“சொல்லும்மா.”

“இந்த எட்டு லட்சத்தையும் ஒரு கடனா நான் அடைச்சிரணும்” என்றாள்.

“என்னது?”

“ஆமா சார். இப்ப சித்த முந்தி நீங்க உங்க கம்பனி பேரு உங்களுக்கு முக்கியம்னு சொன்னீங்கல்லே. அதே மாதிரி எனக்கும். இதை உங்களுக்குத் திருப்பிக் கொடுத்தாதான் என்னைப் பத்தி நானே கௌரவமா நினைச்சுக்க முடியும். இல்லாட்டா இந்த அவமானத்தை நான் சாகற மட்டும் தூக்கிட்டுத் திரியணும். அது என்னாலே முடியவே முடியாத காரியம்” என்றாள்.

ஜி.எம். அவளை அதிர்ச்சியுடன் பார்த்தார். அவர் கண்களிலும் முகத்திலும் தென்பட்ட திக்பிரமையைச் செல்லா பார்த்தாள்.

“நீ என்னம்மா சொல்றே? இது நடக்கற காரியமா?”

“நான் வேலை பாத்து மாசச் சம்பளம் வாங்கறேன்லே. வாயைக் கட்டி வயித்தைக் கட்டி மாசா மாசம் உங்க கிட்டே வந்து கட்டறேன்.
ஒரு பத்து வருஷத்துக்குள்ளே கட்டிற மாட்டேனா? நீங்க அதுக்கு மாத்திரம் டயம் கொடுக்கணும் எனக்கு” என்றாள் செல்லா.

ஜி. எம். அவளிடம் “ஒரு அஞ்சு நிமிஷம் இங்கியே இரு. நான் வந்திடறேன்” என்று சொல்லி விட்டு வெளியே சென்றார். சொன்னபடி ஐந்து நிமிஷத்தில் திரும்பி விட்டார்.

“உன்னை எங்க எம்.டி.பாக்கணுங்கிறாரு. வா போகலாம்” என்று அழைத்துச் சென்றார்.

எம்.டி.யின் அறையில் ஏசியின் குளிர்ச்சி படர்ந்திருந்தது. ஜி.எம். அவளை எம்.டி.க்கு அறிமுகப்படுத்தினார். அவள் அவருக்கு வணக்கம்செலுத்தினாள். அவர் அவளைப் பார்த்து “உக்காரு” என்று அங்கிருந்த நாற்காலியைக் காட்டினார். வயதானவராக இருந்தார். பளீரென்று வெள்ளை நிறம். அகன்ற நெற்றி. தீர்க்கமான நாசி. முன்தலையில் முடியைச் சன்மானமாக அனுபவம் எடுத்துக் கொண்டிருந்தது. எதிராளியிடம் பணிவை ஏற்படுத்தும் உருவம் என உட்கார்ந்திருந்தார்.

“நீ எங்கே வேலை பாக்கறே?” என்று கேட்டார்.

அவள் சொன்னாள்.

“எவ்வளவு வருஷமா?”

“பனிரெண்டு வருஷமா சார்.”

“என்ன மாதிரியான வேலை?”

“அக்கவுண்ட்ஸ் பாத்துக்கறேன் சார்.”

“உனக்கு மேலே அக்கவுண்ட்ஸ் மேனேஜர்னு யாரு இருக்கா?”

“அப்படி யாரும் இல்லே. எனக்கு பாஸ் கடைக்கு சொந்தக்காரர்தான்.”

“அப்ப ஆடிட்டு, டாக்ஸ் மேட்டர்ஸ்லாம்?”

“நான்தான் சார் ஆடிட்டர்கிட்டே கணக்கை ஒப்படைச்சு மத்த வேலை
களையும் பாத்துக்கறேன்” என்றாள் அவள்.

“என்ன சம்பளம் கொடுக்கறாங்க?”

அவள் சொன்னாள்.

“இது உன் குடும்ப செலவுக்கே ஆயிரும். எங்கே இருந்து நீ எங்களுக்குப் பணம் கொடுக்கறது?”

அவள் முதல் தடவையாக எம்.டி.யின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தாள்.

“நீங்க பெரியவங்க. இவ என்னடா சின்னப் பொண்ணு இப்படிப் பேசறான்னு தப்பா நினைச்சிராதீங்க. இங்க வரதுக்கு முன்னாலே நான் ஜி.எம்.சார் கிட்டே சொன்னேன். இந்த அவமானத்தோட நான்,அதாவது என் மனசு, உயிர் வாழறதுக்கு எடம் கொடுக்காதுன்னு. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பொறுத்துகிட்டு நான் பணத்தைத் திருப்பிக் கொடுத்தே ஆகணும் சார். நான் உங்க கிட்டே கேக்கற தெல்லாம், திருப்பிக் கொடுக்க எனக்கு கொஞ்சம் ஜாஸ்தி டயம் கொடுங்கன்னுதான்” என்றாள் செல்லா.

எம்.டி. அவளைக் கனிவுடன் பார்ப்பதை அவள் உணர்ந்தாள்.

“உலகம் கெட்டுப் போச்சுன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை வாசுக்களைப் பாத்து புலம்பற ஜனங்க கிட்டே உலகத்திலே நல்லதும் நடக்கறதைப் பாருங்கடான்னுதான் கடவுள் உன்னை மாதிரிக் கொஞ்சப் பேரையும் படைச்சு அனுப்பிருக்கான் போல” என்று எம்.டி. சொன்னார். தொடர்ந்து “வாசு ஒரு முட்டாள். கடவுள் அவனுக்கு கொடுத்த வைரத்தை வெறுங்கல்லுன்னு கீழே போட்டுட்டுப் போய்ச் சேர்ந்திருக்கான் பாரு” என்றார். பிறகு “நீ ஜி. எம். ரூம்லே போய்க் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு. நீ மாசா மாசம் எவ்வளவு கட்டணும்னு பேசிட்டு சொல்றேன்” என்றார்.

செல்லா ஜி.எம். அறைக்குச் சென்றாள். பத்து வருஷம் அவளுடன் வாழ்ந்தவன் இவ்வளவு பெரிய அயோக்கியத்தனத்தை செய்ததும், அவன் நடித்து அவளை ஏமாற்றி விட்டதும் தாங்கவொண்ணாத வலியை ரணகளத்தை மனதில் ஏற்படுத்தின. இனி வரும் நாள்களில் சொல்ல முடியாத பொருளாதாரச் சுமையைத் தலையில் சுமந்து கொண்டு நடமாட வேண்டும். இத்தகைய வாழ்வில், அவள் குழந்தை படவிருக்கும் கஷ்டங்களை நினைத்த போது துக்கம் பீறிட்டுக் கொண்டு வந்தது.

சற்றுக் கழித்து அறைக் கதவைத் திறந்து கொண்டு ஜி.எம். வந்தார். தன் இடத்தில் உட்கார்ந்து கொண்டு செல்லாவிடம் “உனக்கு இந்தக் கம்பனியில் வேலை பாக்க இஷ்டமான்னு எம்.டி. கேக்கறாரு” என்றார்.

அவள் தாங்க முடியாத ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தாள்.

“நீ இவ்வளவு யோக்கியமான பெண்ணாயிருக்கியேன்னு அவர் சொல்லிச் சொல்லி மாஞ்சு போயிட்டாரு. அதனாலேயே உன்னோட ரெக்கார்டுகளைப் பாக்கறது, உன்னைய இன்டெர்வியு பண்ணுறதுங்கிற ரொடீனை எல்லாம் மூட்டை கட்டி வைன்னு என்கிட்டே சொல்லிட்டாரு” என்றார். “நீ இப்ப வாங்கற சம்பளத்தை விடக் கொஞ்சம் ஜாஸ்தியா இங்கே உனக்குக் கிடைக்கும். உன் குணத்துக்கு மட்டுமில்லே, உன்னோட எக்ஸ்பீரியன்சுக்கும் சேத்துதான் இந்த சம்பளம். இந்த எக்ஸ்ட்ரா பணமும் உனக்கு கடனைத் திருப்ப கொஞ்சம் ஹெல்ப் பண்ணும்லே?”

பதினைந்து நாள்கள் கழித்து செல்லா புதிய நிறுவனத்தில் வேலைக்கு வந்தாள்.

& & &

பட்டுவின் புதிய வீடு அட்டகாசமாக இருக்கிறது என்று செல்லா சிநேகிதியைப் பாராட்டினாள். காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பித்த பூஜைகள் முடியப் பனிரெண்டு மணியாகி விட்டது. சாப்பிட்ட பின் பட்டு செல்லாவிடம் “நேத்தி ராத்திரி வேறே உனக்கு சரியா தூக்கம் இருந்திருக்காது. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோயேன்” என்று தனியறைக்கு அழைத்துச் சென்றாள். அவளை விட்டு விட்டு அங்கிருந்து கிளம்பும் போது பட்டு அவளிடம் “ராத்திரி டிரெயின் எத்தனை மணிக்கு?” என்று கேட்டாள்.

“ஒம்பதரைக்கு” என்றாள் செல்லா.

“அப்ப ஒரு நாலரை அஞ்சு மணிக்கு இங்கே பக்கத்திலே பாப்பன்சாவடி கிட்டே ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கு. பன்னெண்டு ஏக்கர்லே பிரமாதமா கட்டியிருக்கா. முப்பது அடிக்கு மேலே ஒரே கல்லிலே கட்டின ஆஞ்சநேயரைப் பாக்கவே கண் கொள்ளாது. இவருக்கு ஆஞ்சநேயர் குலதெய்வம். போய்ப் பாத்துட்டு வரலாமா?” என்று கேட்டாள் பட்டு.

செல்லாவும் பட்டுவும் அவள் கணவருமாகக் காரை எடுத்துக் கொண்டு சென்றார்கள். கோவில் முகப்பிலிருந்து பார்க்கையிலேயே உள்ளே நின்ற பிரும்மாண்டமான ஐந்து முக ஆஞ்சநேயரின் வடிவம் தெரிந்தது. பிரகாரத்துக்கு வெளியே பச்சை மரங்கள் கண்ணில் பட்டன. கோயிலைச் சுற்றிப் படர்ந்திருந்த அமைதியும் புஷ்பங்களின் வாசனைகளும் செல்லாவின் மனதை ஈர்த்தன.

கோயிலில் பட்டு அர்ச்சனை செய்த பின் அவர்கள் வெளியே வந்தார்கள். அருகிலிருந்த கட்டிடத்தைக் காண்பித்து பட்டு செல்லாவிடம் “இது ஒரு டிரஸ்ட்டு. நாங்க வருஷா வருஷம் காணிக்கையா பணம் கொடுப்போம். நீயும் உள்ளே வரயா?” என்று கேட்டாள்.

“இல்லே. நீ போயிட்டு வா பட்டு. சும்மா நான் இங்கே நின்னு வேடிக்கை பாத்துண்டு இருக்கேன்” என்றாள் செல்லா.

மெயின் ரோடில் பஸ்களும் கார்களும் லாரிகளும் வேகமாகச் சென்றன. அவள் சாலையை ஒட்டிய மண்பாதையில் நடந்தாள். மாலை வேளையின் மயக்கத்தைச் சுமந்து கொண்டு பொழுது மங்கிக் கொண்டிருந்தது. வீடு திரும்பும் பறவைக் கூட்டம் ஒன்று வானில் ஓர் ஓவியத்தை வரைந்து கொண்டு சென்றது. கலைந்த முடியும் அலுப்பு முகமுமாக சில பெண்கள் பேசியபடி எதிரில் வந்தார்கள். பலமாக வீசினாலும் காற்று இதமாக இருந்தது. மண் பாதையாதலால் காற்றில் எழும்பி வந்த மண் துகள்கள் முகத்தையும் கண்களையும் தாக்குவதிலிருந்து தப்பிக்க செல்லா புடவைத் தலைப்பை இழுத்துக் கும்டா போட்டுக் கொண்டாள். கர்சீப்பை எடுத்து மூக்கைப் பொத்திக் கொண்டு நடந்தாள்.

அப்போது அவளை ஒட்டிச் சென்ற ஒரு பஸ் கொஞ்ச தூரம் சென்று நின்றது. அது எழுப்பிய புழுதியால் அவள் நடப்பதை நிறுத்தி விட்டு நின்றாள். பஸ் கண்டக்டர் “பாப்பஞ்சாவடி எல்லாம் இறங்குங்க” என்று சத்தம் போடுவது அவளுக்குக் கேட்டது. இரண்டு மூன்று பேர் இறங்கி அவளுக்கு முன்னால் சென்றார்கள். மறுபடியும் பஸ் புழுதியையும் புகையையும் கிளப்பிக் கொண்டு புறப்பட்டது. செல்லாவின் பார்வை முன்னால் சென்று கொண்டிருந்தவர்களின் மீது விழுந்தது.

அப்போது அவள் கண்ட காட்சியில் இதயம் நின்று விடும் போலிருந்தது.

இடது காலை விட வலது காலைப் பாதையில் வைக்கும் போது வலது கால் வளைந்து ஏறி இறங்கும் நடை, அதே சமயம் இடது கை முதுகில் படுத்தாற்போல சாய்ந்திருந்தது. பத்து வருஷமாகப் பார்த்த நடை, உடல். அவளால் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் எங்காவது திரும்பிப் பார்த்து விடுவானோ என்று செல்லா அஞ்சித் திரும்பி நின்று கொண்டாள். சில நிமிடங்கள் கழிந்ததும் ஆவல் உந்த லேசாகத் திரும்பி ஓரக் கண்ணால் பார்த்தாள். அவன் அப்போது சாலையைக் கடந்து வலது பக்கம் சென்ற பாதையில் நடந்தான். பக்கவாட்டில் தெரிந்த முகத்தை மறைக்க முயன்ற அடர்ந்த தாடி.

அவனைப் பார்த்ததும் தனக்குப் படபடப்பு ஏற்பட்டாலும் அவனை நெருங்கிப் பேச விடாமல் தன்னைத் தடுப்பது என்ன என்று அவள் மனதில் கிலேசம் உண்டாயிற்று. சரிந்து போய் விட்டது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட வாழ்க்கையில் தெய்வம் ஏதோ ஒரு வகையில் தன் கருணையைக் காண்பித்து அவள் மேலே எழுந்து நிற்க உதவியது. மறுபடியும் சறுக்கலுக்குத் தயாராகும் காட்சியைத்தான் இப்போது அவள் கண்டாளா என்று அடிவயிற்றிலிருந்து பயம் எழுந்தது. குழந்தையின் முகமும், ஆபீஸ் நினைவும் ஏனோ மனதில் எழுந்து விரிந்தன.

அவள் வந்த வழியே திரும்பிக் கோயில் அருகே சென்ற போது பட்டுவும் அவள் கணவரும் கார் அருகில் நின்று கொண்டிருந்தார்கள். அவள் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வாயைத் திறக்கும் முன் பட்டு “நாங்களும் இப்பதான் வந்தோம். ஏன் உன் மூஞ்சி என்னமோ போலிருக்கு? அலைச்சல் ஒத்துக்கலை உனக்கு. இன்னிக்கி ஒரு நாள் இங்கே இருந்துட்டு நாளைக்குக் கிளம்பியிருக்கலாம் ” என்றாள்.

செல்லா புன்னகை செய்தபடி காரில் ஏறிக் கொண்டாள்.

பெங்களூரை வந்து அடைந்ததும் செல்லா நேரே அம்மாவின் வீட்டுக்குப் போய் விட்டாள் . குழந்தை அவளை பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டான். “என்னடா, பாட்டியை ரொம்பத் தொந்தரவு பண்ணியா?” என்று அவன் தலைமயிரைக் கோதினாள்.

“ஐயோ, அவன் ரொம்ப சமத்துன்னா? அடம் பிடிக்காம நேரத்துக்கு சாப்டுண்டு, ஆத்துக்குள்ளேயே விளையாடிண்டு…ராஜாப் பயல்னா அவன்!” என்று அம்மா பரிந்து கொண்டு வந்தாள்.

“இவன் அம்மா செல்லம் ஆச்சே! ஏதாச்சும் தப்பு பண்ணினாக் கூடப் பாட்டி விட்டுக் கொடுக்க மாட்டா!” என்று செல்லா சிரித்தாள்.

குழந்தையை ஸ்கூலில் கொண்டு போய் விட்டு விட்டு அவள் வீட்டுக்குள் நுழைந்த போது கூடத்தில் அம்மாவுடன் கணபதி வாத்தியார் பேசிக் கொண்டிருந்தார்.

“வாங்கோ மாமா” என்றாள் செல்லா.

“நீ எப்படிம்மா இருக்கே?” என்று அவர் கேட்டார். “ஆபீசுக்குக் கிளம்பணு
மோல்லியோ?”

அவள் ஆமென்று தலையசைத்தாள்.

“நான் உங்க ரெண்டு பேரையும் பாத்து சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். அடுத்த வெள்ளிக்கிழமை அமாவாஸ்யை திதி வரது. வாசுவோட வருஷாப்திகம் பண்ணனும். நான் காலம்பற எட்டு மணிக்கு வந்துடறேன். ரெண்டு பிராமணாளுக்கு எலை போட்டு தக்ஷிணை கொடுக்கணும். உங்களுக்குத் தெரியாததா?” என்றார்.

செல்லா அம்மாவைப் பார்த்தாள்.

அம்மா அவரிடம் “சரி, எட்டு மணிக்கு வந்துடுங்கோ” என்றாள்.

கணபதி வாத்தியார் செல்லாவிடம் “அன்னிக்கி நீதாம்மா எல்லாக் காரியமும் பண்ணனும்” என்றார்..

“அதிலென்ன கஷ்டம்?” என்றாள் செல்லா.

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.