தாது

ஸிந்துஜா

அன்று கடைசி நாள் பள்ளிக்கூடம் என்று வாணி ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து விட்டாள். அவள் ஆறாம் வகுப்பு படிக்கிறாள். வீட்டுக்குள் நுழையும் போதே “அம்மா, பசிக்குது” என்று கத்தியபடி சமையலறையை நோக்கிப் பாய்ந்தாள். ஆனால் சட்டென்று ஓட மறுத்துக் கால்கள் நின்று விட்டன. அவளுடைய வீட்டில் பாட்டி இருக்கும் அறை வாசலில் பாட்டியின் சிறிய பெட்டியும் ஒரு துணிப்பையும் உட்கார்ந்திருந்தன. அவள் ஆச்சரியத்துடன் பாட்டியின் அறை வாசலுக்குச் சென்றாள் . உள்ளே எட்டிப் பார்த்த போது பாட்டி கட்டிலின் மேல் இருந்த போர்வையை மடித்துக் கொண்டி
ருந்தாள். இவள் வருகையை உணர்ந்தவள் போலப் பாட்டி திரும்பிப் பார்த்து “வாடி சின்னவளே!” என்று வழக்கம் போல அழைத்தாள். வாணிக்கு அக்கா கிடையாது என்றாலும்.

“பாட்டி, எங்க ஊருக்கா?” என்று வாணி கேட்டாள். பாட்டி வழக்கமாக அணியும் சாயம் போன புடவையிலிருந்து பார்க்கக் கூடிய ஒரு புடவைக்கு மாறியிருந்தாள். எப்போதும் தலைமயிரைக் குடுமி போலக் குவித்துக் கொண்டு அலட்சியத்தைக் காண்பிக்கும் தலையை இன்று நேர்த்தியாக வாரி நெற்றியில் விபூதி பூசியிருந்தாள்.

அப்போது மாணிக்கம் வீட்டுக்குள் வந்தார். “என்னப்பனே முருகா!” என்று சத்தமாகச் சொல்லியபடி ஹாலில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். சத்தம் கேட்டுக் கலாவதி கையில் தண்ணீர் ஜக்கோடு வந்து கணவரிடம் கொடுத்தாள். அவர் ஒரே வாயில் அவ்வளவு நீரையும் குடித்து விட்டார்.

“இப்படித் தண்ணியைக் குடிச்சு வயித்தை ரொப்பினா எப்ப சாப்பிடறது?” என்று அறையிலிருந்து வெளியே வந்த பாட்டி கடிந்து கொண்டாள்.

அவளைப் பார்த்ததும் மாணிக்கம் “எங்கம்மா கிளம்பிட்டே?” என்று கேட்டார்.

“அதான் நானும் கேட்டேன்” என்றாள் வாணி.

பாட்டி இருவரையும் பார்த்தாள். அங்கே நின்ற கலாவதியை அவள் பார்வை தொடவில்லை.

“ஆமா. சிவகாமியப் பாத்திட்டு நாலு நாள் இருந்திட்டு வரலாம்னு…”

சிவகாமி வாணியின் அத்தை. பக்கத்தில் மாலூரில் கொடுத்திருந்தது.

“இப்பதானேம்மா அங்க போயிட்டு வந்தோம்?”

“இப்பவா? அதுவும் அஞ்சு மாசமாச்சே!” என்றாள் பாட்டி.

“அஞ்சா? வாணிக்கு பிறந்த நாளன்னிட்டு ஜனவரி முப்பதாம் தேதி எல்லாருமா இங்கேந்து கிளம்பி சிவகாமி வீட்டுக்குப் போயி கொண்டாடினோம். அப்புறம் நாங்க மட்டும் உடனே திரும்பிட்டோம். நீ பத்து நாள் கழிச்சு திரும்பி வந்தே. இன்னிக்கி மே மூணாம் தேதி…” என்ற அவரைப் பாட்டி இடைமறித்தாள்.

“ஆமா, ஜனவரி, பிப்ருவரி, மார்ச்சு, ஏப்ரலு, மேன்னு அஞ்சு மாசம் ஆயிருச்சுல்லே?”

மாணிக்கம் அவளைத் திகைப்புடன் பார்த்தார். “அடேயப்பா! என்னா கணக்கு! உங்கிட்ட சகுந்தலா தேவியே பிச்ச வாங்கணும்.”

“அது யாரு தேவி? சினிமாக்காரியா?” என்று பாட்டி கேட்டாள்.

“ஆமா. சிவாஜியோட ஜோடியா நடிச்சா.”

அதைக் கேட்டு வாணி சிரித்தாள். கலாவதி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

பாட்டி மருமகளை எரிக்கும் பார்வையால் சுட்டு விட்டு ஒன்றும் பேசாமல் உள்ளே நடந்தாள்.

சமையலறைக்குத் திரும்பிச் சென்ற கலாவதி “எல்லோரும் சாப்பிட வாங்க” என்று அங்கிருந்து குரல் கொடுத்தாள்.

வாணி உள்ளே சென்ற போது மாணிக்கமும் அவளைப் பின் தொடர்ந்தார்.

சமையலறையில் கலாவதி கணவனைப் பார்த்து “போயிட்டு வரதுன்னு நினைச்சப்பறம் நாலு நாள் என்ன, நாலு மாசம் இருந்துட்டு வரவேண்டியதுதானே?” என்றாள் மெல்லிய குரலில்.

“நாலு மாசமா? சரியாப் போச்சு. சிவகாமி விட்டாக் கூட அவ புருஷன் விடமாட்டானே. பாரு இப்ப அஞ்சாம் நாளே கார்லே கொண்டு வந்து விட்டுட்டுப் போயிருவான்” என்றார் மாணிக்கம்.

“இந்த விளக்குமாத்துக் கட்டைக்குத்தான் இத்தனைப் பட்டுக் குஞ்சலம்” என்றாள் கலாவதி.

“அம்மா, சும்மா இரு. பாட்டி வந்துரும்” என்று வாணி எச்சரித்தாள்.

“அதெல்லாம் வர மாட்டாங்க. கோபத்துல இருக்காங்க. மகன் போய் சமாதானப்படுத்திக் கூப்பிட்டாதான் சாப்பிட வருவாங்க” என்றாள் கலாவதி.

மாணிக்கம் “சரி அப்ப நான் சமாதானப் புறாவை எடுத்துகிட்டுப் போயி பேசிக் கூட்டியாறேன்” என்று கிளம்பினார்.

அவர் திரும்பி வரப் பத்து நிமிஷமாயிற்று. அதற்குள் கலாவதி சமையல் அறையிலிருந்து சமைத்து வைத்திருந்த பாத்திரங்களை ஹாலில் போட்டிருந்த டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்தாள். வாணி பிரிஜ்ஜிலிருந்து தயிர் பாத்திரத்தையும் ஊறுகாய் பாட்டிலையும் கொண்டு வந்து மேஜையில் வைத்து விட்டு . எல்லோருக்குமான தட்டுக்களை எடுத்து வந்து போட்டாள்.

மற்ற மூவரும் உட்கார்ந்து கொள்ள கலாவதி தட்டுகளில் பரிமாறினாள்.

“அம்மாவை மூணு மணி டிரெய்ன்லே ஏத்தி விட்டா போறேங்கறாங்க. எனக்குதான் இன்னிக்கி லீவு எடுக்க முடியாம இருக்கு. நாளைக்கி போகலாமா அம்மா? நா கொண்டு போய் விட்டுடறேன்” என்றார். மதியம் மூன்று மணி வாக்கில் மரியகுப்பம் வண்டி கிளம்புகிறது. அதில் போனால் ஒரு மணி நேரத்தில் மாலூரை அடைந்து விடலாம். மறுநாள் காலையில் ஒன்பது மணிக்கு அங்கு வரும் ரயிலைப் பிடித்தால் பத்து மணிக்குப் பெங்களூர் வந்து விடலாம்.

பாட்டி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டதை வாணி பார்த்தாள்.

“கிளம்பணும்னு எல்லாத்தையும் நான் எடுத்து வச்சிட்டேன். அதை எதுக்கு நிறுத்தணும்? நான் வாணியைக் கூட்டிகிட்டு போறேன்” என்றாள் பாட்டி வாணி பதில் சொல்லாமல் தாயைப் பார்த்தாள். அதைப் பாட்டி பார்ப்பதையும் அவள் பார்த்தாள்.

“சின்னப் பிள்ளையை எப்படி…?” என்று கலாவதி ஆரம்பித்தாள்.

பாட்டியின் முகம் சுருங்கிற்று.
.
வாணி “அதெல்லாம் பயப்பட ஒண்ணும் இல்லேம்மா. இப்ப பாட்டி கூடப் போறேன். நாளைக்குக் காலையிலே அத்தையோ மாமாவோ வந்து ரயில்லே ஏத்தி விட்டுருவாங்கல்லே?” என்றாள்

“நீயும் அத்தே வீட்டிலே நாலு நாள் இருந்துட்டு வரலாமில்லே? முழுப் பரிச்சைதான் முடிஞ்சு நாளேலேந்து லீவுதானே உனக்கு?” என்று கேட்டாள் பாட்டி.
.
“இல்லே பாட்டி. நான் டான்ஸ் கிளாசில சேரப் போறேன். நாளைக்கி சாயங்காலம் அஞ்சு மணிக்கு டான்ஸ் டீச்சர் வீட்டுக்குப் போகணும்” என்றாள் வாணி.

மாணிக்கம் அவர்களை ஆட்டோவில் கொண்டு போய் ஸ்டேஷனில் இறக்கி விட்டுவிட்டுப் பாக்டரிக்குப் போவதாகச் சொன்னார். கிளம்பும் போது தாயாரின் பெட்டியையும் துணிப்பையையும் தன் இரு கைகளில் சுமந்து கொண்டார்.”

“என்னம்மா, பை இந்தக் கனம் கனக்குது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“காலையிலே இந்த சிக்கப்பா அவன் பழ வண்டியை எடுத்துக்கிட்டு வாசல்லே வந்து நின்னான். அதான் சிவகாமிக்குன்னு நாலு மாம்பழமும், நாலு கொய்யாப் பழமும் வாங்கிப் போட்டேன்” என்று வாசலைப் பார்த்து நடந்தாள்.

அவள் பின்னால் மற்றவர்கள் சென்றார்கள்.

மாணிக்கம் கூடவே வந்த கலாவதி “அஞ்சு கிலோ” என்று முனகினாள்.

“போகட்டும் போ” என்றார் மாணிக்கம்.

பாட்டியும் பேத்தியும் ஸ்டேஷன் வாசலில் இறங்கிக் கொண்டார்கள். மாணிக்கம் “நா வேணுமின்னா சாமான்களை பிளாட்பாரத்திலே கொண்டு வந்து வச்சிடவா?” என்று கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்தபடி கேட்டார்.

“நீங்க போங்கப்பா, உங்களுக்கு டயமாயிடிச்சி” என்றாள் வாணி.

அவர் போன பின் வாணி பாட்டியிடம் “பாட்டி! பை கனமா இருக்குன்னு அப்பா சொன்னாங்கல்லே. அத நான் எடுத்துக்கட்டா? நீங்க பெட்டியைத் தூக்கியார முடியுமா?” என்று கேட்டாள்.

“தூக்க முடியாம என்ன?” என்றாள் பாட்டி. இருவரும் சுமையைத் தூக்கிக் கொண்டு ஸ்டேஷன் பிளாட்பாரத்தை நோக்கிச் சென்றார்கள்.

பிளாட்பார சுவரில் ஓடிய கடிகாரத்தைப் பார்த்து விட்டு வாணி “பாட்டி, நல்ல வேளை வண்டி கிளம்ப இன்னும் அரை மணி நேரம் இருக்கு. பைய வாங்க” என்றாள். நடந்தபடியே “பெட்டி ஒண்ணும் ரொம்பக் கனமா இல்லியே பாட்டி?” என்று கேட்டாள்.

அவள் கேள்விக்குப் பதில் எதுவும் வரவில்லை. வாணி திரும்பிப் பார்த்தாள். சற்றுத் தொலைவில் பாட்டி பெட்டியைக் கீழே வைத்து விட்டுக் கையை உதறிக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சு பாட்டி?” என்று வாணி பாட்டியை நோக்கி வேகமாக நடந்து சென்றாள்.

“சனியன். கையை வலிக்குது” என்றாள் பாட்டி.

“ஐயையோ. பாட்டி நீங்க முன்னாலே நடங்க. நான் ரெண்டையும் தூக்கிகிட்டு வரேன்” என்றாள் வாணி.

பாட்டி மெதுவாகத் தப்படி வைத்து நடந்தாள். அவளிடமிருந்து சற்று இடைவெளி விட்டு வாணி அவளைப் பின் தொடர்ந்தாள். இரண்டு கைகளிலும் ஏறியிருந்த சுமை கனமாகத்தான் இருந்தது. சற்று நடந்ததும் கைகளில் வலி தோன்றத் துவங்கி விட்டது. ரயில் பெட்டியை அடையும் வரை எங்கும் நிற்காமல் போக வேண்டும் என்று வாணி நினைத்தாள். ஏனென்றால் பாட்டியின் நடை அவ்வளவு மெதுவாக இருந்தது.

அவர்கள் ஏறிக் கொள்ள வேண்டிய பெட்டியை அடைந்ததும் “அம்மாடி, கை போயிருச்சு” என்று வாணி இரண்டு சுமைகளையும் பிளாட்பாரத் தரையில் வைத்தாள்.

“ஜாக்கிரதையா வையி. பழங்கள்லாம் நசுங்கிடப் போகுது” என்றாள் பாட்டி.

“நா கை வலிக்குதுங்கறேன். நீங்க அதைக் கண்டுக்காம என்னமோ சொல்றீங்களே பாட்டி. நா என்ன பழம் இருக்கற பையை டொம்முனு கீழே போட்டேனா?” என்றாள் வாணி.

“அப்பா, என்ன வாயி என்ன வாயி ” என்றாள் கிழவி. “அவன் கொண்டு வந்து வச்சிட்டுப் போறேன்னான். நீதான் வேண்டாம்னு அனுப்பிச்சிட்டே” என்று குற்றம் சாட்டினாள்.

வாணி பதில் சொல்ல வாயைத் திறந்து பிறகு மூடிக் கொண்டாள்.

“பாட்டி, நா மொதல்ல போயி உள்ற சாமானை வச்சிட்டு வரேன். அப்புறம் நீங்க ஏறிக்கலாம்” என்று பெட்டியையும், பையையும் தூக்கிக் கொண்டு படியில் கால் வைத்து பெட்டிக்குள் சென்றாள். அவர்கள் உட்கார வேண்டிய இடத்துக்கு மேலேயிருந்த சாமான்கள் வைக்குமிடத்தில் இரண்டையும் வைத்தாள். அதற்காக அவள் ஒரு சீட்டில் கால் வைத்து எம்ப வேண்டியிருந்தது. அங்கிருந்த ஒரு பெண்மணி அவள் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துப் புன்னகை செய்து விட்டு வாணி பாட்டியை நோக்கிச் சென்றாள்.

அவள் பாட்டியின் ஒரு கையைப் பிடித்துக் கொள்ள பாட்டி சிரமத்துடன் படியில் கால் வைத்து ஏறினாள். அப்போது அவள் கீழே விழத் தயாராவது போல சாய்ந்தபடியே இருந்தாள். படியில் ஏறிக் கொண்டதும் வாணி “கம்பியைப் பிடிச்சுக்கிட்டு ஏறுங்க பாட்டி” என்று சொல்லி விட்டுத் தன் இரு கைகளையும் பாட்டியின் பிருஷ்டங்களில் பதித்துக் கொண்டாள். பாட்டி முனகிக் கொண்டே ஒரு வழியாக ஏறி விட்டாள் வாணியும் அவள் பின்னால் ஏறிக் கொண்டு அவளது கையைப் பிடித்தபடி சென்றாள். பாட்டி சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.

அங்கு உட்கார்ந்திருந்த பெண்மணி பாட்டியிடம் “கெட்டிக்காரக் குட்டி” என்றாள்.

“எப்பக் கிளம்புவான்?” என்று பாட்டி அலுப்புடன் வாணியிடம் கேட்டாள். ஜன்னல் வழியாகப் பிளாட்பாரத்தில் தொங்கிக் கொண்டிருந்தகடிகாரத்தைப் பார்த்து “இன்னும் பத்து நிமிஷம் இருக்கு பாட்டி” என்றாள்.

“அப்பாடா, வருவமான்னு ஆயிருச்சு. உங்கம்மா என்னடான்னா, தனியாப் போன்னு நாக்கு மேல பல்லைப் போட்டுச் சொல்லுறா” என்றாள் பாட்டி.

“அவங்க எங்க அப்படி சொன்னாங்க? அப்பா நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னதுக்கு சரின்னாங்க” என்றாள் வாணி.

“உங்க ஆத்தாவை விட்டுக் கொடுக்க மாட்டியே நீ” என்றாள் பாட்டி.

வாணி அங்கு இருந்த பெண்மணியைப் பார்த்தாள். அவள் கையில் வைத்திருந்த பத்திரிகையில் ஆழ்ந்திருப்பது போலக் காணப்பட்டாள்.

“ஐயோ தண்ணி பாட்டிலை எடுத்துக்கிட்டு வரலையே?” என்று திடீரென்று நினைவுக்கு வந்தவளாய்ப் பாட்டி பதறினாள்.

“சரி, பணத்தைக் கொடுங்க. போய் வாங்கிட்டு வரேன். டிரெயின் கிளம்ப இன்னும் அஞ்சு நிமிஷந்தான் இருக்கு” என்று வாணி பணத்தை வாங்கிக் கொண்டு ஓடினாள். அவள் அதை வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறவும் வண்டி நகர ஆரம்பித்தது.வழியில் நின்ற நான்கைந்து மனிதர்களை விலக்கிக் கொண்டு அவள் தன் இடத்தை அடைய இரண்டு நிமிடங்கள் ஆகின.

“வந்திட்டியா? நல்ல வேளை வண்டி கிளம்பிடுச்சே, உன்னையக் காணுமேன்னு ஒரு நிமிஷம் திடுக்குன்னு ஆயிருச்சு” என்று அந்தப் பெண்மணி சிரித்தாள் . வாணியும் பதிலுக்கு அவளைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

“எங்க, மரியகுப்பம் போறீங்களா?” என்று அந்தப் பெண்மணி கேட்டாள்.

“இல்லே மாலூர்” என்றாள் வாணி.

“என் பொண்ணு வீட்டுக்குப் போறோம்” என்றாள் பாட்டி பெருமை குரலில் தொனிக்க.

“நானும் மாலூர்தான் போறேன். என் பேரு கிரிஜா” என்றாள் அவள். தொடர்ந்து “மாலூர்லே எங்கே?” என்று கேட்டாள்.

பாட்டி விலாசத்தைச் சொல்லி விட்டு “மாப்பிள்ள பெரிய செங்கல் சூளை வச்சிருக்காரு. வல்லபா பிரிக்ஸ் ஓர்க்ஸ்னு.”

“ஓ, வல்லபன் சார் உங்க மாப்பிள்ளையா?” என்று கேட்டாள் கிரிஜா.

“உனக்குத் தெரியுமா? ஆனா பெரிய வியாபாரம்னா ஊர்லே எல்லாருக்கும் தெரியுந்தானே!” என்றாள் பாட்டி. இப்போது மேலும் பெருமிதம் அவள் குரலில் ஏறினாற் போல ஒலி சற்று அதிகமாக இருந்தது.

கிரிஜா அவளருகே வைத்திருந்த பையிலிருந்து மூன்று ஆரஞ்சுப் பழங்களை எடுத்தாள். பாட்டிக்கொன்றும் வாணிக்கொன்றுமாக நீட்டினாள். இருவரும் வேண்டாமென்று மறுத்தாலும் கிரிஜா விடவில்லை. பாட்டியிடம் பழத்தை கொடுத்து விட்டு அவள் வாணியிடம் “இரு, நான் உனக்கு உரிச்சுத் தரேன்” என்று உரிக்க ஆரம்பித்தாள்.

சுளைகள் தித்திப்பாக இருந்தன. “அம்மாடி, என்னமா இனிக்குது!” என்று பாராட்டுடன் கிரிஜாவைப் பார்த்துச் சிரித்தாள்.வாணி. கிரிஜா தன் கையிலிருந்த இன்னொரு பழத்தையும் உரித்து வாணியின் கைகளில் திணித்தாள். வாணி மறுப்பெதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள். பாட்டியைப் பார்த்த போது அவள் பழத்தை உரித்தபடி ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். பாட்டியின் பையில் இருக்கும் மாம்பழத்தையோ, கொய்யாப்பழத்தையோ கிரிஜாவுக்குப் பாட்டி எடுத்துத் தரலாமே என்று வாணிக்குத் தோன்றிற்று.

கிரிஜா “நான் பாத்ரூமுக்குப் போயிட்டு வரேன்” என்று எழுந்து சென்றாள்.

“‘ரொம்ப நல்லவங்களா இருக்காங்க இல்லே?” என்று வாணி பாட்டியிடம் சொன்னாள்.

“உங்க மாமா பேரைச் சொன்னதும் அசந்துட்டா பாரு!” என்றாள் பாட்டி. “பெரிய மனுஷன் வீட்டுக்காரங்கன்னுதான் பழ உபசாரம் எல்லாம் பண்ணிட்டா!” என்று சிரித்தாள்.

அப்போது ஒருவன் “அதிரசம், அதிரசம்” என்று தலையில் கூடையை வைத்துக் கூவிக் கொண்டே வந்தான்.

“அதிரசம் சாப்புடறயாடி?” என்று பாட்டி அவளிடம் கேட்டாள்

“இல்லே, எனக்கு வேணாம்” என்றாள் வாணி. அப்போதுதான் சாப்பிட்ட இரண்டு பழங்களும் வயிற்றில் பம்மென்று உட்கார்ந்திருந்தன.

“அவனைக் கூப்பிடு. வாங்கிட்டுப் போலாம். நானும் அதிரசம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. உங்க அத்தைக்கும் ரொம்பப் பிடிக்கும்” என்றாள் பாட்டி.

ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்த வாணி பாட்டியைத் தாண்டிக் கொண்டு வந்து நடக்கும் பாதையில் நின்று கூடைக்காரன் சென்ற வழியில் பார்த்தாள். அவனைக் காணவில்லை.

“அவரக் காணோம் பாட்டி” என்று வாணி பாட்டியின் பக்கம் திரும்பினாள். பாட்டி பணத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டிருந்தாள்.

“இங்கதான் யார் கிட்டயாவது வித்துக்கிட்டு இருப்பான். ஓடிப் போயி ஏழெட்டு அதிரசம் வாங்கிட்டு வந்துர்றியா? என்று ஐம்பது ரூபாயை நீட்டினாள்.

வாணி அந்தப் பெட்டியின் கடைசி வரைக்கும் சென்று பார்த்தாள். காணவில்லை. அவள் அடுத்த பெட்டிக்குச் சென்று பார்த்தாள் அங்கும் காணப்படவில்லை. அங்கு உட்கார்ந்தவர்களிடம் விசாரிக்கவும் அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அதற்கும் அடுத்த பெட்டியில் இருப்பானோ என்று அங்கும் சென்று பார்த்தாள். கிடைக்கவில்லை.

அவள் திரும்பி வந்து பாட்டியிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்தாள்.

“நீ சரியா பாக்கலே. அவன் என்ன ரயில்லேந்து குதிச்சு ஓடிட்டானா” என்று பாட்டி சற்றுக் கடுமையான குரலில் கூறினாள்

வாணி பாட்டியின் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒரு வாய் குடித்தாள். . .

கிரிஜா திரும்பி வந்து சீட்டில் உட்கார்ந்தபடி “இன்னும் அஞ்சுநிமிஷத்திலே மாலூர் வந்துரும்” என்றாள். வாணியின் கண்கள் சாமான்கள் வைக்கும் பகுதியைப் பார்த்ததைப் பார்த்த கிரிஜா “இரு நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்று எழுந்து வந்து மேலேயிருந்த பெட்டியையும் பையையும் எடுத்து பாட்டியின் அருகில் வைத்தாள். பிறகு “என்கிட்டே சாமான் ஒண்ணுமில்லே. கீழ இறங்கறப்போ நான் பையை எடுத்துக்கிறேன். நீ பெட்டியை எடுத்துக்கோ” என்றாள் வாணியிடம்.

“உனக்கு எதுக்கு கஷ்டம்? நாங்க எடுத்துக்கிட்டு வரோம்” என்றாள் பாட்டி.

இறங்கும் போது கிரிஜா பையை எடுத்துக் கொண்டு இறங்கினாள்.

மூவரும் ஸ்டேஷன் வாசலை நோக்கி நடந்தார்கள்.

“உங்களைக் கூட்டிக் கிட்டுப் போக யாராச்சும் வருவாங்களா?” என்று கிரிஜா கேட்டாள்.

“மாப்பிள்ள வருவாரு. அவரு வேறே வேலையாப் போயிருந்தா என் பொண்ணு வரும்” என்றாள் பாட்டி. திடீரென்று “அதோ வராரே மாப்பிள்ள” என்றாள்.

“மாமா!” என்று வாணி கத்தினாள்.

அவர்கள் அருகே வந்த வல்லபன் கிரிஜாவைப் பார்த்து “வணக்கம் மேடம்!” என்றான். “அந்தப் பையை என்கிட்டே கொடுங்க. நீங்க போய்த் தூக்கிட்டு…”

“அது உங்க வீட்டுப் பைதான்” என்று கிரிஜா சிரித்தாள்.

“என்னது? அதை நீங்க தூக்கிட்டு வரதாவது?” என்றபடி வல்லபன் பையை வாங்கிக் கொண்டான்.

பாட்டி அவர்கள் இருவரையும் ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

வல்லபன் கிரிஜாவிடம் “இது எங்க மாமியார். இது ” என்று அவன் முடிக்கும் முன் “வாணி” என்றாள் கிரிஜா. “ரயில்லியே எங்க அறிமுகமெல்லாம் முடிஞ்சிருச்சு!” என்று சிரித்தாள்.

அவர்கள் ஸ்டேஷனுக்கு வெளியே வந்ததும் வல்லபன் அவர்கள் இருவரையும் காரில் ஏற்றி விட்டு விட்டு மறுபடியும் கிரிஜாவிடம் போனான். ஐந்து நிமிஷம் பேசி விட்டுத் திரும்பினான். தூரத்திலிருந்து கிரிஜா வாணியைப் பார்த்துக் கையசைத்தாள்.

காரில் போகும் போது வல்லபன் மாமியாரிடம் “அவங்களும் கில்ன் வச்சிருக்கறவங்கதான். ஒண்ணு இல்லே, ரெண்டு இல்லே. அஞ்சு கில்ன் வச்சிருக்காங்க. கால்வாசி மாலூர் அவங்களோடதுதான்” என்றான்.

“கொஞ்சம் மண்டைக்காரியா இருப்பா போல” என்றாள் பாட்டி

“ஏன், ட்ரெய்னலே வரப்போ உரசலாச்சா? நீங்க உரசினீங்களா, இல்லே அவங்களா?” என்று பாட்டியைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தான் வல்லபன்.

அவர்கள் வீட்டை அடைந்த போது வீட்டு வாசலில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். காரில் இருந்து இறங்கிய வாணியைப் பார்த்து “அய் வாணி அக்கா!” என்று கத்திக் கொண்டே ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டான் பாபு. வல்லபன் மாமாவின் மகன். பாட்டியையும் தழுவிக் கொண்டான்.

“அக்கா, நீயும் விளையாட வா. டியாண்டோ. மஜாவா இருக்கு” என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

“இருடா. உள்ள போயி மூஞ்சியக் கழுவிட்டு வரேன். நீங்க விளையாடிகிட்டு இருங்க” என்று அவனிடமிருந்து வாணி தன்னை விடுவித்துக் கொண்டாள். அவள் வீட்டுக்குள் நுழைந்ததும் சிவகாமி அத்தை அவளைப் பார்த்து “வாங்கம்மா, வாங்க.பெங்களூர் மகாராணி! என்னடி இப்பிடி உசந்துட்டே!” என்று வரவேற்றபடி அவளைக் கட்டிக் கொண்டாள். “பெரிய மனுஷி! பாட்டியக் கூட்டிட்டு வந்தியா! பெரிய ஆளுடா நீ!” என்று கொஞ்சினாள்.

“அத்தே, நான் போயி ஒரு குளியலைப் போட்டுரட்டா? ஒரேயடியா விசத்துக் கெடக்கு உடம்பெல்லாம்” என்றாள். அவளிடமிருந்து ஒரு டவலை வாங்கிக் கொண்டு பாத்ரூமுக்குச் சென்றாள்.

அவள் தலையைத் துவட்டிக் கொண்டே திரும்பி வரும் போது சமையல் அறையில் பாட்டியும் அத்தையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“ஆனாலும் வாணி தனியா தைரியமா வந்திருச்சே!” என்றாள் சிவகாமி.

“இந்த சின்னவளை இங்க கூட்டிட்டு வரதுக்குள்ளே எனக்கில்லே தாவு தீந்திருச்சு” என்றாள் பாட்டி.

வாணி கேட்டுக் கொண்டே வாசலை நோக்கிச் சென்றாள்.

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.