மகான்

ஸிந்துஜா

பாலு எட்டு மணி வாக்கில் மகானைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்தான். வந்தவரின் முழங்காலுக்குச் சற்றுக் கீழ் வரை மஞ்சள் கரையுடன் வெள்ளை வேஷ்டி, கொஞ்சம் இளகின காவியில் தொள தொளவென்று அரைக்கைச் சட்டை. தலையில் முக்காலும் வழுக்கை. தெளிவான சதுர முகத்தின் நெற்றியில் மூன்று வரி வெள்ளைப் பட்டை. நடு வரியில் இப்போது புழக்கத்தில் இல்லாது மறைந்து விட்ட ஒரு ரூபாய் நாணய அளவில் சந்தனப் பொட்டு. அதன் நடுவில் அரக்குக் குங்குமம். மனிதன் சற்று உயரமாய் இருந்ததால் இளம் தொந்தி அடங்கிக் கிடந்தது போல் ஒரு தோற்றம். மேனி கறுப்பும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் மரியகுப்பம் செங்கல் பளபளப்பில் மின்னிற்று. காலில் செருப்புக் கிடையாது.

பாலு உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தான். அவன் மனைவி சுலோச்சு கையில் ஒரு சிறிய பிளாஸ்டிக் வாளியுடன் வந்தாள். வாளியில் இருந்த குவளையில் நீர் எடுத்து மகானிடம் கொடுத்தாள். அவர் கால்களை அலம்பிக் கொண்டதும் மூவரும் வீட்டுக்குள் சென்றார்கள்.

காலை இளம் வெய்யிலின் சூட்டுக்காக எதிர் வீட்டு வாசலில் சேரைப்
போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த ராமேந்திரன் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். நேற்றே பாலு அவரிடம் இம்மாதிரி மகானை அழைத்து வரப் போவதாகக் கூறியிருந்தான். ராமேந்திரன் இருந்த குடியிருப்புக்குப் பக்கத்தில் ஒரு வருஷம் முன்னால்தான் பாலு வந்தான். அவனாகவே அவரைத் தேடிக் கொண்டு வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தனியார் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் வீயாரெஸ்ஸில் வேலையை விட்டு விட்டு வந்ததாகத் தெரிவித்தான். அவன் மனைவி சுலோச்சு தெலுங்கு ரெட்டியார் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்றும் அவர்கள் காதல் திருமணத்தில் முடிந்ததாகவும் ஒரு நாள் சொன்னான்.

பாலு அக்கம் பக்கத்தில் எல்லோரும் தன்னைப் பற்றி அறியுமாறு வைத்துக் கொண்டிருந்தான். வங்கியில் வேலை பார்த்திருந்தாலும் அவனுக்கு எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்திருந்தது. பாலு யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று அவன் தானாக ஒரு கணியன் பூங்கொன்றனாரைத் தனக்குள் வைத்துக்கொண்டு விட்டான். அவன் பேச்சும் கேளீர் கேளீர் என்று கூப்பிட்டு மயக்குவதாய்த்தான் இருந்தது, வார்த்தைகளில் அப்படி ஒரு ராயசம்.

பாலு அவன் வீட்டிலிருந்து வெளியே வந்து தன்னைப் பார்த்து விட்டு நெருங்குவதை ராமேந்திரன் கவனித்தார்.

“என்ன மகானை அழைச்சுண்டு வந்துட்டியா?”

“ஆமா. அவர் பானஸ்வாடிலே ரெண்டு நாள் தாமசம். இன்னிக்கி இங்கே வந்துட்டு கம்மனஹள்ளிக்குப் போயிடுவார். சாயந்திரம் வரை இருக்கேன்னார்.”

“சாப்பாடு உங்காத்திலேதானா?”

“அதெல்லாம் மூச்சுப் பரியப்படாது. குடிக்கறதுக்கு ஜலம் வாங்கிண்டாலே
பெரிய விஷயம். எல்லாருக்கும் எல்லாம் கொடுக்கிற கை, கொடுக்கிற மனசு அது.”

“இந்தத் தெருவிலே இருக்கறவா எல்லாரும் காத்திண்டிருக்கா. சாமி படத்திலேந்து விபூதி விழறதைப் பாத்து வாங்கி இட்டுக்கணும், அவர் கையிலே இருந்து சங்கு வரவழைச்சுக் கொடுக்கறதை வாங்கிக்கணும்னு தவிக்கிறதுகள். எல்லாம் நீ சொல்லி வச்சதுதான்” என்றார் ராமேந்திரன்.

“நீங்க இன்னும் நம்பலே இல்லே?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே.”

“இல்லே, உங்க குரலே காட்டிக் கொடுக்கறதே” என்றான் பாலு சற்றுச் சலிப்பான குரலில். தான் முக்கியத்துவம் தரும் இவர், தான் முக்கியத்துவம் தரும் அவருக்கு முக்கியத்துவம் தரவில்லையே என்னும் சலிப்பு.

அப்போது நாலாவது வீட்டில் குடியிருக்கும் அப்பண்ணா அவர்களை நெருங்கினார்.

பாலுவிடம் “நேத்திக்கு மணியோட ரிசல்ட் வந்தது பாஸ் பண்ணிட்டான். கணக்கு காலை வாரி விட்டுடுமோன்னு எனக்குக் கொஞ்சம் கவலை
யாத்தான் இருந்தது” என்றார்.

“ராமநாதன் ஸார் பாஸ் பண்ணிட்டார்னு சொல்லுங்கோ” என்றான் பாலு. ராமநாதன் வாத்தியார் மணியின் டியூஷன் மாஸ்டர்.

“அவனுக்குக் காலேஜிலே கேக்கற க்ரூப் கிடைச்சா நன்னாயிருக்கும். மகான்தான் வழி காட்டணும்” என்றார் அப்பண்ணா பாலுவிடம் தாழ்ந்த குரலில்.

“அதுக்கென்ன? வாங்கோ, வாங்கோ. அவர் அனுக்கிரகம் பண்ணுவார்.”

“எங்காபீஸ்லே சுப்பாராவ்னு இருக்கார். அவர் பொண்ணுக்குக் கல்யாணமே ஆகாம இருந்தது. அவரும் பானஸ்வாடிலேதான் இருக்கார். மகான் கிட்டே போய்க் கால்லே விழுந்திருக்கார். இன்னும் ஒரு மாசத்திலே வடக்குலேந்து உமக்கு மாப்பிள்ளை வருவான்னு மகான் சொன்னாராம். இருபது நாள் கழிச்சுப் பொண் கேட்டுண்டு டெல்லிலேந்து வந்தாளாம்.. சரியா முப்பதாவது நாள் நிச்சயதார்த்தம் நடந்துதுன்னார்” என்றார் அப்பண்ணா.

பாலு ராமேந்திரனைச் சற்றுப் பெருமையுடன் பார்த்து விட்டு “அவர் இன்னும் கால் மணியிலே பூஜை ஆரம்பிக்கிறேன்னார். போய் பூஜை சாமானெல்லாம் எடுத்து வைக்கணும். வரட்டா?” என்று கிளம்பினான். அப்பண்ணாவும் அவனுடன் சென்றார்.

“சாப்பிட வரேளா?” என்று அபயத்தின் குரல் கேட்டு அவர் திரும்பிப் பார்த்தார். வாசல் நிலைப்படியில் நின்றிருந்தாள். பாலுவுடன் பேசியது அவள் காதிலும் விழுந்திருக்கும்.

அவர் எழுந்து வீட்டுக்குள் சென்று கை கழுவி விட்டு சாப்பிட உட்கார்ந்தார். இட்லிகளையும் சட்டினியையும் அவரது தட்டில் வைத்தவாறே அபயம் “நீங்க அந்த மகானைப் பாக்கப் போறேளா?” என்று கேட்டாள். அவர் உடனடியாகப் பதில் அளிக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அபயம் எதுவும் பேசாமல் உள்ளே சென்று கொஞ்சம் இட்டிலிகளை ஒரு தட்டில் போட்டுக் கொண்டு வந்து உட்கார்ந்து தானும் சாப்பிட ஆரம்பித்தாள்.

அவர் “அங்க போகணுமான்னுதான் இருக்கு” என்றார். அப்போது வெளியிலிருந்து நரசி வீட்டுக்குள் வந்தான். அவரின் ஒரே பிள்ளை.

“இன்னிக்கி ஆபீசுக்கு லீவுன்னு பெரிய வாக்கிங்கா?’ என்றார் ராமேந்திரன் பிள்ளையைப் பார்த்து. அவன் ஒரு அமெரிக்கக் கம்பனியின் இந்தியக் கிளைப் பொறுப்பாளராக இருக்கிறான். அங்கே அவர்களுக்கு லீவு என்றால் இங்கே இவனுக்கும் லீவு.

அவன் சிரித்தவாறே “ஆமா. அம்மா, எனக்கும் டிபன் கொடுத்துடு” என்றான். பிறகு ராமேந்திரனைப் பார்த்து “எதிராளாத்து வாசல்லே என்ன திடீர்னு அப்படி ஒரு கூட்டம்? ஏதாவது விசேஷமா?” என்று கேட்டான்.

“ஓ, உனக்கு அதைப்பத்தி எதுவும் தெரியாதோ? நீதான் கார்த்தாலே சூரியன் மனுஷாளைப் பாக்க வரதுக்கு முன்னாலேயே ஆபீசுக்குப் போயிடறே. ஆபிஸ்லேந்து நீ திரும்பறப்போ உனக்கு ஜோடியா கோட்டான்தான் முழிச்சிண்டு இருக்கு. நம்பாத்து விஷயத்தையே உன்கிட்டே முழுசாப் பேச முடியறதில்லே. எதிராளாத்து பாலு ஒரு மகானைப் பத்தி ஒரு மாசமா பேசிண்டு அலையறான். இன்னிக்கி அவர் பாலு ஆத்துக்கு வந்திருக்கார்” என்றார் ராமேந்திரன்.

“மகானா?”.

“ஆமா. பாலு அவரை நடமாடற தெய்வம்னு சொல்லிச் சொல்லி மாஞ்சு போறார். அவர் முழங்கைலேந்தும் உள்ளங்கைலேந்தும் சங்கு, முத்து, ஸ்வாமி டாலர்னு எடுத்து வரவாளுக்குக் கொடுக்கறாராம். அவர் பூஜை பண்ணி முடிச்சப்பறம் ஸ்வாமி படம் மாட்டியிருக்கற சுவத்திலேந்து குங்குமம், விபூதி எல்லாம் கொட்டறதாம்” என்றாள் அபயம்.

“அப்பா, இதையெல்லாம் நீங்க நம்பறேளா?” என்று கேட்டான் நரசி.

“எனக்கு நம்பிக்கையில்லேனு சொன்னா பாலு அடிக்க வந்துடுவான்” என்று சிரித்தார் ராமேந்திரன். “சித்த நாழி மின்னேதான் உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லேல்லேன்னு கேட்டான். ஒரு மாசமா தெனைக்கும் கார்த்தாலே குளிச்சிட்டு அந்த மகான் ஆத்துக்குக் கிளம்பிப் போறான். சாயரட்சைதான் திரும்பறான். தினம் அவர் மகாத்மியத்தை என்கிட்டே வந்து சொல்லாமப் போகமாட்டான். ஒவ்வொண்ணும் ஒரு கதை மாதிரி இருக்கும். திருடன் கிட்டே பறி கொடுத்த நகையைப் பத்தி ஒருத்தி வந்து சொன்னா. மறுநாள் திருடனே பறிகொடுத்தவ ஆத்துக்கு வந்து நகையைத் திருப்பிட்டானாம். பெங்களூர் முழுக்கக் காமிச்சும் தேவலையாகாம அப்படி ஒரு ஜுரம் வாரக்கணக்கிலே படுத்தின குழந்தைக்கு ஒரு வாரம் அவரோட பிரசாதத்தைக் கொடுத்துக் குணமாச்சாம், இன்சால்வன்ஸி நோட்டீஸ் கொடுக்கப் போற ஸ்டேஜிலே யாரோ ஒரு மைசூர்காரர் இவரைத் தேடிண்டு வந்து காப்பாத்துங்கோன்னு அழுதாராம். ரெண்டு நாள் கழிச்சு அவருக்கு கேரளா லாட்டரியிலே பிரைஸ் அடிச்சதாம். அதை ஏன் கேக்கறே? பாலு கிட்டே உக்காந்தா, நாள் கணக்கிலே என்ன, வாரக் கணக்கிலே மாசக் கணக்கிலே சொல்லுவான்.”

“பாலு அங்கிள் இப்படி அந்த மகான் ஆத்திலேயே குடி இருந்தா, குடும்பம் நடத்தறது எப்படி?” என்று கேட்டான் நரசி.

“எதுக்குடா அவர் பொண்டாட்டியே கவலைப்படாத விஷயத்துக்கு எல்லாம் நீ கவலைப்பட்டுண்டு இருக்கே?” என்று அபயம் பையனைப் பார்த்துச் சிரித்தாள்.

“அங்கையும் பாலு ஒரு பொடி வச்சிருக்கான். போனவாரம் லெவென்த் கிராஸ் மார்க்கெட்லே ராமண்ணா கடையிலே காய்கறி வாங்கிண்டு வரப் போனப்போ அவன்தான் சொன்னான். தினம் உங்க பக்கத்து வீட்டுக்காரர் பத்துப் பதினஞ்சு தேங்கா கொண்டு வந்து போடறாருன்னு. மார்க்கெட்டிலே ஒரு தேங்கா முப்பது முப்பத்தஞ்சுக்குக் குறைச்சு விக்கறதில்லேயே. ராமண்ணா ஒரு காய்க்கு இருபது ரூபா கொடுத்தான்னாக் கூட இருநூறு முந்நூறு கிடைக்காதா பாலுவுக்கு?மகானைப் பாக்க வர்ற ஜனங்கள்தான் வெத்திலே, பூ, தேங்காய், பழம், சுவீட்டுன்னும் கொண்டு வந்து கொட்டறதாமே. அவர் ஒண்ணுத்தையும் கையாலே தொடறதில்லையாம். எல்லாத்தையும் வந்து போறவா கிட்டேயே கொடுத்து அனுப்பிச்சிடறாராம். அவர் வேறே யாராத்துக்காவது பூஜை பண்ணனும்னு போறதா இருந்தா, இப்பல்லாம் பாலுதான் சாரதி. அவனோட ஸ்கூட்டர்லே அழைச்சுண்டு போயிட்டுத் திரும்ப ஆத்திலே கொண்டு வந்து விட்டுடறான்.”

“நீங்க சொல்றதை எல்லாம் கேட்டா எனக்கும் அவரைப் பாக்கணும் போல இருக்கு” என்றான் நரசி.

“அப்படிப் போடு!” என்று சிரித்தார் ராமேந்திரன். “ஆனா நீதான் விபூதி குங்குமம் எல்லாம் இட்டுக்க மாட்டியேடா?”

“அவர் தரப்போ மரியாதைக்கு நெத்தியிலே வச்சுண்டு ஆத்துக்கு வந்ததுக்கு அப்புறம் அழிச்சிண்டாப் போச்சு” என்றான் நரசி.

பனிரெண்டு மணி வாக்கில் அவர்கள் மூவரும் கிளம்பி பாலுவின் வீட்டுக்குச் சென்றார்கள். அவர்களைப் பார்த்ததும் பாலு தன்ஆச்சரியத்தைக்
கண்களை அகல விரித்துத் தெரிவித்தான். ராமேந்திரன் சுற்றும் முற்றும் பார்த்தார். தெரிந்தவர்கள் அவர் கண்களைச் சந்தித்ததும் கையசைத்து வணக்கம் தெரிவித்தார்கள். தெரியாதவர்களும் சேர்ந்து கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது.

பாலு “இன்னும் அஞ்சு நிமிஷத்திலே பூஜை முடிஞ்சு பிரசாதம் கொடுப்பார். வாங்கிண்டு கூட்டம் கலைஞ்சிடும். அதுக்கப்புறம் அவரோட நீங்க சித்த நாழி இருந்து பேசிட்டுப் போகலாம்” என்றான்.

பூஜை முடிந்ததும் அவரவர் கைகளில் எடுத்துக் கொண்டு வந்த பைகளை மகான் கையில் கொடுத்தார்கள். அவரும் வாங்கிப் பலரிடம் அதை விநியோகம் செய்தார். எதையும் அவர் தன்னிடம் வைத்துக் கொள்ளவில்லை. ஒரு வயதான கணவனும் மனைவியும் பேரக் குழந்தையுடன் மகானை நெருங்கினார்கள்.

மகான் அவரைப் பார்த்து “சேஷு , எப்படியிருக்கேள்?” என்று கேட்டார்.

சேஷு “எல்லாம் மகானோட ஆசீர்வாதம்” என்றார் குரல் நடுங்க. “நேத்திக்கு மத்தியானம்தான் மது மேலே ஒண்ணும் குத்தம் இல்லேன்னு கோர்ட்லே ரிலீஸ் பண்ணிட்டா..”

பாலு ராமேந்திரன் காதருகில் நின்று “இவர் பாலஸ் ஆர்ச்சர்ட்லே இருக்கார். பெரிய மருந்துக் கடைக்காரர். ஏகப்பட்ட ஹோல்சேல்.பெங்களூர்லேயே எட்டு பிராஞ்சு இருக்கு, பையன்தான் பாத்துக்கறான். போன மாசம் யாரோ வேண்டாதவன்கள் இவா கோடவுன்லே போதை மருந்து கொண்டு போய்ப் போட்டுட்டு போலீஸ்லே வத்தி வச்சிட்டான்கள். போலீஸ் கேஸ் போட்டு பையனை அரெஸ்ட் பண்ணிடுத்து. இவர் மகான் கிட்டே வந்து என்ன பண்ணறதுன்னு கேட்டார். பையனைக் கோர்ட்டுக்கு இழுத்துண்டு போனதும் பகவான்தான். அவனைக் கொஞ்ச நாள் கழிச்சு வெளியே விடறதும் அவரேதான். நல்ல காரியங்களைப் பண்ணிண்டே இருங்கோ. அது போதும்னார் மகான். அதைத்தான் இப்போ சொல்றார் சேஷு”
என்றான்.

சேஷு தன்னிடமிருந்த பையிலிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தார். அதைப் பிரித்து ஒரு நகையை எடுத்தார். அந்த ஹாலின் விளக்கு வெளிச்சத்தில் அது மஞ்சளாய்ப் பளபளத்தது. வெற்றிலை பாக்கு பழம் தேங்காயுடன் அதையும் வைத்து மகானை நமஸ்கரித்து அவர் கையில் கொடுத்தார். “இதை நீங்களே வச்சுக்கணும். வேறே யாருக்கும் வழக்கம் போலக் கொடுத்திடப்படாது” என்றார் சேஷு.

மகான் புன்முறுவலுடன் அவர்களுடன் வந்திருந்த பெண் குழந்தையைத் தன்னிடம் இழுத்துக் கொண்டார். “யாரு இவோ?”

“எங்காத்து வேலைக்காரியோட பொண்ணு. வீட்டு வேலை, சமையல் வேலை எல்லாம் இவ அம்மாவே எடுத்துப் போட்டுண்டு செய்யறா. அதான் ஆத்தோட வச்சிண்டிருக்கோம். நாங்க கிளம்பி வரச்சே நானும் சாமியைப் பாக்கணும்னு அடம் பிடிச்சது. அதான் அழைச்சுண்டு வந்தோம் ” என்றார் சேஷு.

“குட்டி பேரென்ன?” என்று மகான் குழந்தையிடம் கேட்டார்.

“தேவி” என்றது.

“ஓ, அது என்னோட தாயார் பேருன்னா?.இதைத் தேவிக்கு சாத்தாம வேறே யாருக்குப் போய்ச் சாத்தறது?” என்று அந்த மாலையைக் குழந்தையின் கழுத்தில் அணிவித்தார். “இப்ப சாட்சாத் தேவியான்னா இருக்கா.”

அங்கு இருந்தவர்கள் திகைப்புடனும் சந்தோஷத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பாலு ராமேந்திரனிடமும் நரசியிடமும் “நான் சொன்னேன் இல்லியா? எதையும் கேட்கவோ வாங்கவோ மாட்டார். அது கொடுக்கற கைதான். கர்ணன் மாதிரி” என்றான்.

கூட்டம் கலைந்ததும் பாலு ராமேந்திரனையும் அபயத்தையும் நரசியையும் கூட்டிக் கொண்டு போய் மகானிடம் அறிமுகம் செய்வித்தான்.

“இவர் ராமேந்திரன். பக்கத்தாத்துலே இருக்கார். டெல்லியிலே ஹோம் செக்ரட்டரிக்கு அடுத்தாப்பிலே இருந்தார். இது,மாமி. சுலோச்சுவுக்கு குரு எல்லா விஷயத்திலேயும்” என்றான் பாலு சிரித்தபடி.

“நன்னாயிருக்கு! நான்னா சுலோச்சு கிட்டேர்ந்து நிறைய சமையல் கத்துண்டு இருக்கேன்” என்றாள் அபயம்.

“இது நரசி. இவாளோட ஒரே பிள்ளை. அமெரிக்கன் கம்பனியிலே இந்தியா ஆபீசை நடத்திண்டு பெரிய போஸ்ட்லே இருக்கார். இவ்வளவு சின்ன வயசிலே பெரிய பதவி” என்றான் பாலு.

இந்த முகமன் கேட்டு நரசி சிரித்து வெட்கப்பட்டாற் போல உடலை ஒருமுறை வளைத்துக் கொண்டான்.

“பேஷ். பேஷ். ஒரு காலத்திலே மேக்கே பாரு மேக்கே பாருன்னு கும்பிடு போட்டுண்டு இருந்தா. இப்போ அவா அங்கேர்ந்து கெழக்கைப் பாத்து நமஸ்காரம் பண்றா” என்று மகான் புன்முறுவல் பூத்தார்.
.
மூவரும் விழுந்து அவரை நமஸ்கரித்தனர் அவர் ஆசீர்வாதம் செய்தார். கையில் வைத்திருந்த சாமான்கள் நிரம்பிய பையை ராமேந்திரன் அவரிடம் தந்தார். அவர் அங்கு நின்றிருந்த சுலோச்சுவிடம் கொடுத்து விட்டுக் கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்தார். பிறகு பாலுவிடம் “கிளம்பலாமா?” என்று கேட்டபடி எழுந்தார்.

பாலு அவரிடம் “சாயந்திரம் வரை இருக்கேன்னேளே!” என்றான்.

“நாலரை மணிக்கு மல்லேஸ்வரத்துக்கு வரச் சொல்லி சங்கரமடத்திலேந்து
கூப்பிட்டு அனுப்பிச்சிருக்கா . அதான் ஆத்துக்குப் போயிட்டு அங்கே போலாம்னு இருக்கேன்” என்றார்.

பாலு அவரிடம் “நாம காத்தாலே இங்க ஸ்கூட்டர்லே வரப்பவே பிரேக் சரியாப் பிடிக்காம இருந்தது. வண்டியை இங்கே கொண்டு வந்து நிறுத்தினதும் பிரேக் கேபிள் கட்டாயிடுத்து. இருங்கோ. ஒரு ஒலாவைக் கூப்பிடறேன்” என்றான்.

நரசி ” டாக்சி எதுக்கு? நான் என் கார்லே கொண்டு போய் விட்டுடறேன்” என்றான். பாலு அவனை நன்றியுடன் பார்த்தான்.

“உனக்கு எதுக்குப்பா சிரமம்?” என்றார் மகான்.

“நீங்க இப்பிடிச் சொல்றதைக் கேக்கறதுதான் எனக்கு சிரமம்” என்றான் நரசி. அவர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

காரில் உட்கார்ந்ததும் நரசி ஏ.சி.யைப் போட்டான்.

“ஏ.சி. வேணுமா?” என்று அவர் கேட்டார்.

“உங்களுக்கு வேணுமோன்னுதான் போட்டேன். அணைச்சிடட்டுமா?”

அவர் தலையசைத்ததும் அவன் ஏ.சி.யை அணைத்து விட்டு இருவர் பக்கமிருந்த ஜன்னல்களை லேசாகத் திறந்து வைத்தான்.

காரில் செல்லும் போது அவர் அவனைப் பற்றி விஜாரித்துக் கொண்டு வந்தார். அவர்களது பூர்விகம் எது, அவனுக்குக் கூடப் பிறந்தவர்கள் இருக்கிறார்களா, அவன் வயசு என்ன, எந்த ஸ்கூல், காலேஜில் படித்தான், இப்போது இருக்கும் வேலையில் அவனை வெளிநாட்டுக்கு வரச் சொல்லி அங்கே வேலை பார்க்கச் சொல்லுவார்களா என்றெல்லாம் கேட்டார். அவன் பதிலளித்துக் கொண்டு வந்தான்.

அப்போது அவனது மொபைல் ஒலித்தது. எடுத்து “ஹலோ!” என்றான். வெளியிலிருந்து எழுந்து வந்த ஒலிகளினால் மொபைலை ஸ்பீக்கரில் போட்டான்.

“சார், ரங்கநாதன் பேசறேன்” என்றது எதிர்க்குரல்.

“எதுக்கு லீவு நாள்லே ஆபீசுக்கு வந்திருக்கே?”

“இந்த ஜூனியர் எஞ்சினியர் அப்ளிகேஷன்களைப் பாத்து லிஸ்ட் எடுத்திடலாம்னு வந்தேன். ஆபீஸ் நாள்லே வேறே வேலை ஏதாவது குறுக்கே வந்துட்டே இருக்குமே. ஆனா நான் கூப்பிட்டது இதுக்கிலே சார்.”

“சொல்லு.”

“இருபது அப்ளிகேஷன்லே எட்டு பேர் எலிஜிபிளா இருக்காங்க. அதிலே ஒரு ஆள் ஐ.ஐ.டி லக்னவ்.”

“என்னது?”

“ஆமா சார். நீங்க ஒரு பார்வை பாத்துட்டா இன்டெர்வியு எப்ப வச்சுக்கலாம்னு டிசைட் பண்ணி நாளைக்கி கால் லெட்டர்சை அனுப்பிச்சிடலாம்.”

“சரி, இப்ப ஒரு மணி நேரத்திலே வரேன். பாத்துடலாம்” என்று நரசி மொபைலை ஆஃப் செய்தான்.

கார் மரியப்பா சர்க்கிளைக் கடக்கும் போது அவர் “அதோ அங்கே ஒரு பஸ் ஸ்டாப் தெரியறது இல்லியா? அதுக்கு அடுத்த லெப்ட்லே இருக்கற சந்துலே போகணும்” என்றார். நரசி அவர் சொன்ன வழியில் சந்துக்குள் நுழைந்து சென்றான். சந்து சாலைகளின் ஒரிஜினல் சொந்தக்காரர்களான மாடுகள் வழியில் படுத்திருந்தன. கார் வரும் சத்தம் கேட்டுத் தலையை உயர்த்திப் பார்த்துவிட்டு ‘சரி ஒழிந்து போ’ என்பது போல எழுந்து நகர்ந்து சென்றன. சற்றுப் பெரிதாக இருந்த கட்டிடம் ஒன்றின் அருகில் நிறுத்தச் சொன்னார்.

பிறகு அவர் இறங்கிக் கொண்டு ‘உள்ளே வா” என்றார்.

“பரவாயில்லே. நான் கிளம்பறேன்” என்றான் நரசி.

“ஆத்து வாசலுக்கு வந்தவாளை வாசல் வழியே திருப்பி அனுப்பிச்சுடற நாகரிகத்தை நான் இன்னும் கத்துக்கலே” என்றார்.

அவன் சிரித்தபடி அவருடன் சென்றான். பெரிய கட்டிடத்தை ஒட்டியிருந்த ஒரு பழைய கட்டிடத்தில் நுழைந்தார்கள். அது ஒரு காம்பவுண்டுக் குடித்தனம் என்று ஒவ்வொரு சிறிய வீட்டு வாசலிலும் தென்பட்ட கோலங்கள் தெரிவித்தன.

“தலையைக் கொஞ்சம் குனிஞ்சுண்டு வரணும்” என்றபடியே அவர் தன் போர்ஷனுக்குள் நுழைந்தார்.

உள்ளே சிறிய ஹாலில் இருந்த சிறிய நாற்காலியில் அமர்ந்திருந்த வாலிபன் வந்த விருந்தினரைக் கண்டு எழுந்து நின்றான். அவன் ஒல்லியாக உயரமாக இருந்தான். அரையில் வேட்டியும் மேலே கை வைத்த பனியனும் அணிந்திருந்தான். மகான் நரசியிடம் “என் பிள்ளை. வெங்கடேசன்னு பேரு” என்றவர் பிள்ளையின் பக்கம் திரும்பி “இவர் நம்ம பாலு சார் ஆத்துக்குப் பக்கத்து ஆத்திலே இருக்கார். கார்லே கொண்டு வந்து விடறேன்னு வந்தார்” என்றபடி உள்ளே சென்றார்.

“உக்காருங்கோ” என்று வெங்கடேசன் நரசியிடம் நாற்காலியைத் தள்ளினான். உட்கார்ந்து கொண்ட நரசியின் பார்வை கூடத்தைச் சுற்றி வந்தது. வெண்மை மறைந்து லேசாக மஞ்சளாகிக் கொண்டிருந்த சுவர்கள் வீட்டுக்குள் இருந்த வெளிச்சத்தை அடக்க முயன்று வெற்றி பெற்றிருந்தன. கூடத்துக்குள் வலது மூலையில் ஒரு மேஜை மீது செம்பருத்திப் பூக்கள் செருகப்பட்டு வெங்கடாஜலபதி படமும் மீனாட்சி அம்மன் படமும் இருந்தன. மேஜையை ஒட்டி இருந்த ஒரு ஸ்டூலில் மடித்த படுக்கை விரிப்புகளும் தலையணைகளும் காணப்பட்டன. இடது பக்க மூலையில் நிறைய கீறல்களுடன் ஒரு பழைய பிரிட்ஜ் நின்றது.

நரசி வெங்கடேசனைப் பார்த்து “எங்கே வேலை பாக்கற? இன்னிக்கி ஆபீஸ் லீவா?” என்று கேட்டான்.

வெங்கடேசன் நரசியின் கண்களைப் பார்க்காமல் “இப்ப ஒண்ணும் வேலை இலாமதான் இருக்கேன்” என்றான்.

அப்போது உள்ளேயிருந்துவந்த மகான் “லெமன் ஜுஸ்தான். சாப்பிடு” என்று ஒரு கிளாஸ் தம்ளரை நீட்டினார். அவன்”தாங்க்ஸ்” என்றபடி எடுத்துக் கொண்டான்.

“என்ன படிச்சிருக்கே?” என்று நரசி கேட்டான்.

வெங்கடேசன் “கம்ப்யூட்டர் இஞ்சினீரிங்” என்றான்.

“எப்போ முடிச்சே?”

“2018லே. உடனே வேலை கிடைச்சது. எலக்ட்ரானிக் சிட்டிலே ஒரு பிரைவேட் ஹார்டுவேர் கம்பனியிலே இருந்தேன். கோவிட் சமயத்திலே வேலை போயிடுத்து.” என்றான் வெங்கடேசன்.

“ஆமா. ரொம்பப் பேர் அப்பலெந்து இந்த மாதிரிக் கஷ்டத்தை ஃபேஸ் பண்ணிண்டு இருக்கா” என்றான் நரசி மகானைப் பார்த்து. .

“இப்ப மறுபடியும் ஆள் கேக்க ஆரம்பிச்சிருக்கால்லியா. அப்ளை பண்ணிண்டு இருக்கேன்” என்றான் வெங்கடேசன்.

நரசி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு “அப்ப நான் கிளம்பட்டுமா? ஆபீசுக்குப் போகணும்” என்று எழுந்தான்.

மகான் அவன் கூடவே வந்தார். “உங்களுக்கு எதுக்குக் கஷ்டம்?” என்று நரசி வாசலருகே அவரைத் தடுத்தான்.

“இதிலென்ன?” என்றபடி அவர் அவன் கூட வந்தார்.

அவன் காரில் ஏறிக் கொண்டு அவரைப் பார்த்தான்.

“போயிட்டு வா. உன்னைப் பார்த்தது ரொம்ப சந்தோஷம்” என்று கையை அசைத்தார். பிறகு தன் வீட்டை நோக்கிச் சென்றார்.

Advertisement

One comment

  1. இதிலே என்ன சொல்ல வருகிறார் மகான் தன் மகனுக்கே வேலை வாங்கித்தரல் காக்கை உட்கார பனம் பழமா நடப்பது மகான் விடயம் என்பது போல இருக்கே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.