Author: பதாகை

முட்டை – மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

Andy Weir அளித்த பேட்டி ஒன்றின் மூலமாகத்தான்  The Egg என்ற கதை பற்றி அறிந்துகொண்டேன். பிறகு சென்ற வாரம் அதைத் தேடிப்படித்தபோது ஒரு பெரிய ஐடியாவை (அல்லது தத்துவத்தை) மிகவும் கச்சிதமாக முன்வைப்பதாக தோன்றியது. ‘இயற்கையின் முன் நாமெல்லாம் சிறு துளி’, ‘ஏன் ஒருவருக்கொருவர் இத்தனை வெறுப்பு?’, ‘பிரபஞ்சத்தின் அர்த்தம்’, ‘காலச்சக்கரத்தில் நடப்பதே திரும்பத் திரும்ப நடப்பது’ போன்றவை எனக்கு மிகவும் நெருக்கமான விஷயங்கள். எனது இக்கதையிலும் வேறு வகையில் அவற்றை மறைமுகமாக பேசியிருந்தேன் – வால் விழுங்கி நாகம்

மறுபிறவி போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், காலம் முன்பின்னே பிறப்பெடுப்பது என்பது ‘மறுபிறவி’ தலைப்பில் எழுப்பப்படும் சில சந்தேகங்களுக்கு லாஜிக்கலாக பதில் அளித்துவிடுகிறது.

இதெல்லாம் எனக்கு கதை பிடித்ததற்கான சில காரணங்கள். ஆனால் மொழிபெயர்த்தது ஏன் என்று இப்போது யோசித்தால், இது சிறிய கதையாக, மொழிபெயர்க்க அதிக நேரம் பிடிக்காமல் இருந்ததும்கூட முக்கிய காரணமாக இருக்கலாம் 🙂

பிரசன்னா

தமிழாக்கத்தை இங்கு வாசிக்கலாம்- முட்டை 

ஜெயகாந்தன் முதல் கண்மணி குணசேகரன் வரை – சத்யானந்தன்

தீராநதி ஜனவரி 2015 இதழில் ‘வாடாமல்லி’ கண்மணி குணசேகரனின் கதை ஒரு நடுவயது பெண், ( மணமாகி மகிழ்ச்சியான​ குடும்ப​ வாழ்க்கை வாழ்ந்தாலும்) தான் பதின்களில் காதலித்துக் கைப்பிடிக்க​ முடியாமற் போனவனுக்கு அவனது மரணத்துக்கு பின் மாலை போடும் உருகலோ உருகலான​ கதை.

வாசித்த பின் மிகவும் மனச் சோர்வே ஏற்பட்டது. ஏன் ‘அஞ்சலை’ என்னும் ஆழமும் நுட்பமும் உள்ள​ நாவலைத் தந்த​ கண்மணி குணசேகரன் இப்படி ஒரு சிறுகதையை எழுதினார் என்று மனம் அசை போடுவதை வெகு நேரம் நிறுத்தவில்லை. இப்போதெல்லாம் எதிர்மறை விமர்சனம் இருந்தால் எழுதாமல் நல்ல​ படைப்பு என்று விமர்சிக்கத் தக்கதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு சுயகட்டுப்பாடு வேறு வைத்திருக்கிறேன். அதில் யாருக்கு விதி விலக்கு என்றால் மூத்த​ எழுத்தாளர்ளுக்கு. அவர்கள் புனைவின் நுணுக்கங்களில் அல்லது உள்ளடக்கத்தின் செறிவில் சமாதானம் செய்யும் போது படைப்புக்களை எதிர்மறையாகவே விமர்சிக்க​ வேண்டி இருக்கிறது. புதிதாக​ எழுத​ வருவோருக்கு ஒரு சுய​ தணிக்கை செய்ய​ அது வாய்ப்பாக​ அமையும்.

மீண்டும் சிறுகதைக்கு வருவோம். கண்மணி குணசேகரன் மூத்த எழுத் தாளர் தான். ஆனால் விமர்சனம் எப்படி எழுதப் போகிறேன் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது சக​ எழுத்தாளர் தொலைபேசியில் வந்தார். என்னையுமறியாமல் ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ மற்றும் ‘வாடாமல்லி’ சிறுகதையை ஒப்பிட்டுப் பேசினேன்.

‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ 40 ஆண்டுகளுக்கு முன்பு நாவலாக​ வெளிவந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பீம்சிங் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்தது. நிறையவே வரவேற்பைப் பெற்றன​ இரண்டுமே. இருந்தாலும் கதையை சுருக்கமாகக் கீழே தருகிறேன்:

முதிர்கன்னியான​ ஒரு நாடக​ நடிகை, கறாரான​ ஒரு நாடக​ விமர்சகர் இருவரும் காதல் வயப்படுகிறார்கள். உடலாலும் மனதாலும் நெருங்கி, திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வருகிறார்கள். திருமணத் துக்குப் பின் வீட்டில் ரோஜா வளர்ப்பது தொடங்கி பல​ விஷயங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு. மனைவி அடங்கிப் போனாலும் கணவன் “அந்தத் திருமணம் போதும் விவாகரத்து பெறலாம் ” என்று முடிவெடுக்கிறான். வழக்கறிஞர் உடனடியாக​ விவாகரத் து கிடைக்காது ஓரிரு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து பிறகு விவாகரத்துக்கு முயல​ வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். ஒருவருக்கு ஒழுக்கக் குறை அல்லது உடற் கோளாறு இருந்தால் மட்டுமே உடனடி விவாகரத்து கிடைக்கும் என்பது மாற்று வழி என்றும் கூறுகிறார்.. இருவரும் பிரிந்து வாழும் கால​ கட்டத்தில் ஒரு நாள் அவன் அவளைப் பார்க்க​ வரும் போது இந்த​ உரையாடல் நடக்கிறது:

“நான் இப்போ வந்தேனே சந்தோஷமா?”

” சந்தோஷம் தாங்க​”

“அப்படின்னா இத்தனை நாள் நான் வரவே இல்லையே. அதில​ வருத்தமில்லையா?”

“அப்பிடி இல்லீங்க​. நீங்க​ வந்தப்போ சந் தோஷமா இருப்பேன். நீங்க​ வராதப்போ வந்தத​ நினைச்சு சந்தோஷமா இருப்பேன்”

கதையின் முடிவில் வழக்கறிஞர் குறிப்பிட்ட​ மாற்றுக் காரணம் கிடைக்கிறது. மனைவிக்கு காலில் நடமாட​ முடியாத​ படி முடக்குவாதம் வருகிறது. “இதைக் காரணம் காட்டி விவாகரத்துக்கு முயலலாம்” என்கிறாள் மனைவி உற்சாகமாக​. ‘உன்னுடனேயே இனி வாழ்வேன்” என​ கணவன் முடிவாகக் கூறுகிறான்.

‘வாடாமல்லி’ கண்மணி குணசேகரனின் சிறுகதைக்கு மீண்டும் வருவோம். கதாசிரியர் முதலில் இந்த மாதிரியான் ஆணை வழி படும் பெண் என்னும் பிம்பத்தையே கதை விட்டுச் செல்லப் போகிறது என்று எண்ணியிருந்தாரா? ஏனெனில் வேறு ஒரு சரடு கதைக்குள் இருக்கிறது. பிணமாகக் கிடக்கும் ஒரு நடு வயது ஆள் பற்றி அவரது ஒழுக்கம் பற்றித் தவறான விமர்சனங்கள் வருகின்றன. அந்தப் பிணத்தை உண்மையான அன்பு மட்டும் மரியாதையுடன் வணங்க யாரும் இல்லை என்று துவங்கி கடந்த காலம் பக்கம் போயிருந்தால் ? கதாநாயகன் தரப்பு நாயகி தரப்பு இரண்டுமே பெரிதும் வாசகனின் புரிதலின் வழி அவன் சென்றடையும் படி நுட்பமாகச் சொல்லப்பட்டிருந்தால்? மரணத் தருவாயில் கூட அவனை நேசித்தவள் மட்டுமே அவனைப் புரிந்து கொண்டாள் என்னும் மையத்தைக் கதை கொண்டிருந்தால்? அப்போது இந்தக் கதையின் தளம் வழிபடும் நாயகி, குடிகார நாயகன் என்பதைத் தாண்டி இருக்கும். மனித உறவுகள் சகமனிதர்கள் ஒருவரை ஒருவர் பற்றிக் கொள்ளும் புரிதல் அல்லது புரிதலின்மையின் உள்ளார்ந்த அரசியல் இவை எல்லாமே பின்னப்பட்டு வேறு ஒரு தளத்தில் கதை மேற்சென்றிருக்கும்.

ஜெயகாந்தனின் நாவல் மற்றும் கண்மணி குணசேகரனின் சிறுகதை இரண்டிலுமே கதாநாயகன் மிகுந்த​ ஆண்மை அம்சம் உள்ள​ ஆளுமையுள்ளவன். நாயகி தள்ளி இருந்தே அதை கவனித்துக் காதல் வயப்பட்டாள் இத்யாதி உண்டு.

நம் முன் நிற்கும் பெரிய​ கேள்வி இது. ஏன் இப்படி பெண் ஆணிடம் அப்படியே அடைக்கலம் தேடி சமர்ப்பணம் ஆகும் (மனோரீதியாக​) வழிபடும் மனநிலை கொண்டாடப்படுகிறது? அது அவளின் பெண்மையின் சிறப்பு அம்சமாக​ நாம் ஏன் கொள்கிறோம்? நாம் என்பது இந்த​ இடத்தில் ஆண்களை மட்டுமே குறிப்பிடுகிறது என்பதை நான் சொல்லத் தேவையே இல்லை. எல்லா சூழ்நிலையிலும் எல்லா இடத் திலும் நாம் என்பது ஆண்கள் மட்டுமே. ஆணுக்கு அடங்கிய​ பெண் அதற்குள் ஐக்கியமானவள் தானே?

பெண் படைப்பாளிகளில் குறைவானோரே இந்த​ நாமில் ஐக்கியமாகாமல் இந்த​ வழிபடும் நிலை பெண்கள் மீது திணிக்கப்பட்டது என்று பதிவு செய்தவர்கள்.

பெண்ணின் உலகம் ஆணின் உலகை விட​ மிகவும் விரிந்தது. உணர்வு நிலையில் ஆணை விடப் பெண் உறுதியானவள். குடும்பம் என்னும் அமைப்பு பெண்ணுக்கு மிகவும் பிரியமானது. அதைக் காக்க​ அவள் செய்யும் முதல் தியாகம் அல்லது ஒரு புரிதல் ஆணை அவனது ஆதிக்க​ நிலையுடனேயே ஏற்று மேற்செல்லல்.

ஆணைச் சார்ந்தே நான் இருக்கிறேன் என்று எந்தப் பெண்ணும் அடிபணிய​ விரும்பவில்லை. மறுபக்கம் ஆண் இல்லாமல் என் வாழ்க்கை முழுமையானதே அல்ல​ என​ ஏறத்தாழ​ எல்லாப் பெண்களுமே ஆழமாக​ நம்புகிறார்கள். அவன் தன்னைப் பயன்பாட்டின் அடிப்படையில் மட்டுமே அணுகிறான் என்று தெரிந்தும் அப்படி நம்புகிறார்கள். ஒரு ஆணால் நிராகரிக்கப்படுவது தனது பெண்மைக்கு இழுக்கு என்னும் பிரமையை காலங்காலமாகச் சுமக்கிறார்கள்.

அதனாலேயே ஜெயகாந்தன் காலமோ சமகாலமோ என்றும் அவர்கள் ஆணின் உலகை அமைதியாக​ சகிக்கிறார்கள்.

மீள்பார்வை

பத்து எம்.எம் அகலப் பரப்பில் 
படமாக்கிய காட்சியை 
விரியச் செய்கிறேன்
பதினேழு அங்குலக் கணினித் திரையில்.
தொலை தூரத்தில் அடிவானம்
பந்தலிட்டிருந்தன கருமேகங்கள்
இடது மூலையில் 
அறுவடைக்குக் காத்திருக்கும் 
சோளக் கதிர்கள்.
வலது எல்லையோ 
தலைதுருத்தும் பாறைகளுடன் 
தரிசு நிலமாக.
ஓங்கிய மரங்களுக்கு மத்தியில்
ஈரத்தில் மினுமினுத்த மண் சாலையில்
இரட்டைக் கோடுகள் படிய
தனித்தூர்ந்த மாட்டுவண்டி 
என் நிழற்படத்தின் மையக் கருவாக.
பதிந்த நொடியில் 
மனதில் பதியாத விவரங்கள்
மீள்பார்வையில் 
மனதைப் பிசைபவையாக.
சக்கரங்களில் அப்பியிருந்தது
மழைச் சேறு
துருத்திய எலும்புகளுடன் தள்ளாடியது
காளை மாடு
வண்டியோட்டியின் முகத்திலோ
பெருஞ்சோர்வு.
உறைந்து போன காட்சியில்
உறையாது காலம் உருள
இரவு பகல்களை விழுங்கியபடி
நூற்றாண்டுகால வேதனைகளைப் புதைத்தபடி
வானம்பூமி சாட்சியாக 
வந்து கொண்டிருந்தார்கள் மெல்ல மெல்ல
மாடும், ஓட்டியும், வண்டியும்.
                                                                      – ராமலக்ஷ்மி

துறைவன் – ஒரு வாசக அனுபவம் – காளி பிரசாத்

image

பார்க்கப்பார்க்க அலுக்காத ஒன்று கடல். வேளாங்கண்ணிக்கு  மெழுகுவர்த்தி ஏற்றிவைத்துவிட்டு வெளியே வந்து சோழிகளை கொண்டமாலைகள் வழியே கடலை கண்டது எட்டாவது வயதில்.  அதன்பின் ஓரிருமுறை மெரினாவில் கால் நனைத்ததுண்டு. நாகப்பட்டினத்தில் பாலிடெக்னிக் விடுதியிலிருந்து ஒரு மைல் நடந்து போனால் கடற்கரை. அக்கம்பக்கம் ஆளில்லாத கரை. கடலில் நீச்சல் அடிப்பது ஒரு விளையாட்டு போல.. அலையடிக்கும் போது குனிந்து பாய்வது போல கரையைநோக்கி நின்று கொண்டால் அதுவே இழுத்துக்கொண்டு வந்து கரையில் போட்டுவிடும். அந்தளவிற்கு மட்டும் ஞாபகம் இருக்கிறது.

முத்துராமன் என்றொரு நண்பன் என்னோடு விடுதியில் தங்கியிருந்தான். கடல் நீச்சல் அவன் சொல்லித்தந்தது. அவனைத்தவிர மீனவர் என யாரையும் சந்தித்ததும் இல்லை.
கடலை அறிந்த அளவு கூட கடல்வாழ் மக்கள் குறித்து அறிந்ததில்லை. மீன்கள் சுத்தம். அசைவம் உண்பதில்லை என்பதால் என சொல்ல மாட்டேன். எனக்கு விவசாயம் பற்றியும் தெரியாது. சாம்பாரில் உள்ள செள செள விற்கும் பூசணிக்காயக்கும்,பொரியலில் போட்ட சேனைக்கும் கருணைக்கும் வித்தியாசம் அறிந்ததில்லை.

சுனாமி வந்த நேரம் டிவியில் மீனவர்களை பற்றி அதிகம் பார்த்தேன். பெற்றோரையும் உற்றாரையும் பறிகொடுத்த மீனவ குழந்தைகள் மன்னார்குடியில் ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருக்க, அந்த ஐந்து வயது குழந்தைகள் ஏதும் அறியமல் பாண்டி ஆடிக்கொண்டிருந்த்தை கண்டு அதிர்ந்து நின்றிருக்கிறேன். ஸ்டேட் சென்டிரலுக்கு எழுதும் அத்துமீறல் மற்றும் துப்பாக்கி சூடு குறித்த கடிதங்களில் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தான அரசின் கவலையை எண்ணி ஆனந்த கண்ணீரை அடிக்கடி  மல்கியிருக்கிறேன். படகோட்டி, கடலோர கவிதைகள் என இரு கடல் சார்ந்த படைப்புகளை கண்டிருக்கிறேன்.

என் வீட்டிலிருந்து அலுவலகம் சென்று திரும்பி வருவதில் எனக்கு பெரிதாக பயம் இல்லை. ஒருமுறை  அலுவலகம் அதிர்ந்திருக்கிறது. எர்த் குவேக் என ஓடிவந்து பாதுகாப்பாக நின்று, எமர்ஜென்ஸி ரெஸ்க்யூ டீம் அது பக்கத்து ப்ளாட்வாலா சுவற்றில் போட்ட ட்ரில்லிங்தானே தவிர வேறில்லை என அமைதிப்படுத்திய போது ஆசுவாசபட்டுக்கொண்டே ஆரஞ்சு ஜூஸ் குடித்து அதை பற்றி அடுத்த நான்கு நாட்கள் என் கருத்தையும் பதிவு செய்திருக்கிறேன். ஒரு ஆட்டத்துக்கே இப்படி வந்து விட்டோமே ஆனால் ஆடிக்கொண்டே இருக்கும் கடலில்  வேலைக்கு போனால் திரும்ப வருவோமா என்ற நிச்சயமில்லாத வேலைக்கு ஏன் மக்கள் போகிறார்கள் என யோசித்ததில்லை.

கடல் திரைப்படமும், க்றிஸ் எழுதிய கடலாழம் என்னும் சிறுகதையுமே நான் கடலை அறிந்த முதற்படைப்புகள். கடலாழம் என்கிற சிறுகதைஇரு வருடங்கள் ஜெ. தளத்தில் வந்தது. தன் அண்ணனை பாம்பேக்கு அனுப்பிவைத்து, அவனுக்கு வரும் வரதட்சனையை கொண்டு தங்கைக்கு மணம்முடித்து, அதன்பின் அதன் தொடர்ச்சியாக தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விழையும் மத்தியாஸ்,  தன்மையில் சொல்லும் சிறுகதை. அந்த சமயத்தில் பரதவர்களில் இன்னொரு தேர்ந்த கதைசொல்லி ஒருவர் வந்துவிட்டார் என மகிழ்ச்சியோடு வந்த பல கடிதங்களும் நினைவிருக்கின்றன.

அது சிறுகதையாகவே துறைவனிலும்  வருகிறது அதற்கு பிறகு மத்தியாஸின் குடும்பம் என்ன ஆனது என்பதும் வருகிறது. அதனால் இது அவர் குறித்த குடும்ப நாவலா என்றால் இல்லை. பர்த்லோமி என்றொரு மீனவர் முதல் அத்தியாயத்திலும் கடைசி வரையும் வருகிறார். அவர் தன் குல / இன வரலாறை அறிந்திருக்கிறார். தன் மகனை படிக்க வைக்கிறார். இது அவரது வாழ்க்கை சரித்திரமா என்றால் அதுவும் இல்லை.

துறைவன் முழுக்க முழுக்க கடலும், கடல் சார்ந்த மனிதர்களும் கொண்ட ஒரு நெய்தல் நிலத்தின் வாழ்க்கை பதிவு என சொல்லலாம். பரதவன், துறைவன்என பழந்தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்படும் சமுதாயத்தை சார்ந்த முக்குவர் என்றொரு பிரிவினரோடு இரு தலைமுறை காலம் பயணப்படும் நாவல் இது. நாவலை சுவாரசியமாக்குவது அதில் க்றிஸ் தரும் தகவல்கள். கலிங்க யுத்தம்,புனித சவேரியார் வருகை, கத்தோலிக்கம் மற்றும் லண்டன் மிஷனுக்கான உரசல்கள், குறிப்பாக வள்ளத்தை குறித்தான வர்ணனைகள் மற்றும் ஜிபிஎஸ், வயர்லெஸ் போன்ற உபகரணங்களை பரதவர் கையாளும் முறைகள், திசைகள் குறித்தான குழப்பம் , விளக்கம்  என தகவல்களை வரவேற்பறை பன்னீர் போல் தெளிக்காமல் நன்றாக சுண்ணாம்பு தடவி, சீவல் வைத்து தாம்பூலமாகவே தருகிறார். இது இரு சிறுகதைகளுக்குப்பிறகான  இவரின் முதல் நாவல் என்பது நம்புவதற்கு சிரமமாக உள்ளது.

கதை நிகழும் வருடங்களை  குறிப்பிட்டு சொல்லாமல், மீனவ நண்பன் அடுத்த வரம் ரிலீஸ், அன்னை ஓர் ஆலயம் போன மாதம் பார்த்தேன் போன்ற வரிகளின் வழியாகவே குறிப்புணர்த்தி இருப்பது நல்லதொரு யுக்தி

பர்த்லொமி பல இடங்களில் வரலாற்று தகவல்கள் மூலம் கதையை நகர்த்தி செல்கிறார் என்றாலும்  லார்சன் கணவாய் பிடிக்கும் நுட்பமும், கட்டகொம்பனை பிடிக்கும் போராட்டமும் சுவாரசியாமாக எடுத்து செல்கின்றன. சின்ன நண்டை வைத்து பெரிய நண்டு, அதை வைத்து கணவாய் என மீன்பிடி நுட்பங்களை இடையிடையே சொல்லி சுவாரசியமக்கியிருக்கிறார் க்றிஸ்.
ஓங்கில் குடும்பத்தை பிரித்தற்காக வருந்தும் ராயப்பன், படிக்கவிடாத வாத்தியாரை ஓடவைக்கும் ஸ்டீபன், பின் ஆரோன், சிறியபுஷ்பம், தனக்கு கல்லறை கட்டி வைத்திருக்கும் ஊர்த்தலைவர் தாசையா என ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்து பார்த்து உருவாக்கியிருக்கிறார்.

படகு வாடகை, டீசல் போக மாதம் பத்தாயிரம்தான் கையில் நிற்கும் என அடிம சொல்லும் இடமும் ஏழு வருடங்கள்வரை ஒருவரை தேடப்படுபவராகவே வைத்திருந்து நிவரணத்தை தாமதபடுத்தும் சட்ட திட்டங்கள் என மனதை பிணையும் சித்திரங்களும் உண்டு.

நாவலின் மொழி நாகர்கோயில் வட்டார வழக்கு. கன்யாகுமரி மாவட்ட மக்களுக்கும்,ஜெ., நாஞ்சில்  வாசகர்களுக்கும் கஷ்டம் தெரியாது. ஆழி சூழ் உலகு படித்தவர்களும் இதை சரளமாக படிக்கலாம். மற்றவர்கள் இதன் மொழிநடையிலும், வள்ளம் கரைமடி போன்ற பிரத்யேக வார்த்தை பிரயோகங்களிலும் சற்று தடுமாறக்கூடும். பாஸ்டர் எம்லின் அந்த ஊர்க்காரர் இல்லை. ஆகவே, மிக அழகாக நாலுவரி ‘நல்ல’  தமிழ் பேசுகிறார்.

சுவாரசியமான நாவலில் குறைகளையும் சொல்ல வேண்டிய மரபை காக்க வேண்டிய கடமை இருப்பதால், இரு விஷயங்களை குறிப்பிடலாம். முதலாவது, மிகவும் நேரான பாதையில் சொல்ல வந்த கருத்தை மட்டும்சொல்லும் விதமாக இருப்பதால் நாவல் சில தளங்களில் விஸ்தரிக்காமல் விட்டுவிட்டார். முக்குவர் என்றால் நல்லா முக்குவாங்க என்ற பெயர் குறித்த அத்தியாத்தைதவிர கறாரான நடையில் நாவல் செல்கிறது. இரண்டாவது, வட்டார வழக்கு வார்த்தைகளுக்கு ஒரு அகராதியை இணைத்திருக்கலாம் என தோன்றியது. ஆழி சூழ் உலகில் இணைத்திருக்கும் அகராதியில் சில வார்த்தைகளை பார்த்து தெளிய வேண்டியிருந்தது.

இந்த நாவலின் முக்கியத்துவத்தை பற்றி ஜெயமோகன் முன்னுரை விரிவாகவே பேசுகிறது.

துறைவன் நாவல் முன்னுரை: ஜோ டி குருஸ்

இலங்கிறும் பரப்பின் எறி சுறா நீக்கி…

image

மகிழ்வதற்கான தருணமிது. தென்மேற்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், நெய்தலே அதன் வீரத்தை, விவேகத்தை, வாழ்க்கைக்கான போராட்டத்தை, கடலாடும் வித்தையை அகவிழி திறந்து பேச ஆரம்பித்திருக்கிறது. வரலற்றுக் காலந் தொட்டு இன்று வரையிலான வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை துறைவன் என்ற பதிவின் மூலம் ஒருசேர அள்ள முயன்ற தம்பி கிறிஸ்டோபர் ஆன்றனியின் முயற்சியைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆனி, ஆடி ஆண்ட புரட்டாசி தேடித் தின்போர்க்கு தெய்வமே துணை என்பார்கள், கடலடி அதிகமாய் இருக்கும் தென்மேற்கு கடற்கரையின் மீனவர் வாழ்வை, தெள்ளிய தமிழால் எடுத்து இயம்பியிருக்கிறார் தம்பி. வாழ்வின் வளமை தேடி எங்கெங்கோ போய்விட்டோம் ஆனாலும் கடமரத்துக் கடியாலில் கயிறு கட்டி இழுத்ததும், பொக்கை வாய்க் கிழவர்களைப் போத்தி போத்தி என அன்பொழுக அழைத்து மகிழ்ந்ததும் எமக்கு மறந்து விடவில்லை என்று துறைவனில் காட்டியிருக்கிறார் தம்பி.

துணைக்கு வந்ததாய் மாயத் தோற்றம் காட்டிய போர்த்துக்கீசியமும் அதன் மூலம் வந்த கத்தோலிக்கமும்,  அவரடிமை, இவரடிமை என எங்களுக்கு பெயர் சூட்டி கடற்கரைக்குள்ளேயே எம்மை முடக்கிப் போட்டதோடல்லாமல் கடல் தாண்டி, கரை தாண்டி யோசிக்கவும் விடவில்லை. தூவர்த் பர்போசா போல வந்தவனும் போனவனும் வாய்க்கு வந்தபடி எதை எதையோ பதிந்து விட்டுப் போனதை உரையாடல் வழி ஆய்வு மனப்பான்மையோடு அலசுகிறது துறைவன்.

பரசுராமர் கேரளக் கடற்கரையிலிருந்த மீனவரைத்தான் நம்பூதிரிகளாக மாற்றினார் என்பதற்கு சான்றாய் இன்றும் தொடர்கிறது அவர்தம் திருமணத்தில் வலைவீசி மீன் பிடிக்கும் சடங்கு. எப்படி ஒட்டகக் கயிறுகளை தேவை கருதி அரேபியர்கள் தலையில் சுற்ற ஆரம்பிக்க பின்னாளில் அதுவே அவர்களின் ஆடையில் ஓர் அங்கமாய் மாறிப் போனதைப் போல, மீன் பிடிக்கும் தூண்டில் கயிறு பூனூலாய் மாறியதோ என்னவோ!

துறைவனில், நாஞ்சிலின் நல்ல தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. பண்டைய தமிழ்ச் சொற்களே மலையாள மொழியின் ஆதார சுருதியாய் இருப்பது கண்டு வியந்து போனேன்.

“பகவதியம்ம, நம்ம கடலம்மைக்க சகோதரி.”

“மீன ஓடவிட்டுப் பிடிச்சனும்.”

“நம்ம ஜாதியில எல்லாரும் தலைவமாரு, ஏசு கிறிஸ்து பெறந்ததுல இருந்து இந்தத் தலவமாரெல்லாம் சேந்து ஒரு தலைவன தேர்ந்துடுக்கத் தெரியாது இருக்கானுவ, ரண்டாயிரம் வருசமா இதுதாம் நெலம அதுனாலதாம் வந்தவனும் போனவனும் தலைவராயிட்டு இருக்காம்.”

“ஊர்ல ஒருத்தனுக்கும் குடிச்சாத சாப்பாடு எறங்காதே.”

“இந்தக் கரமரவும், கரமடியும் இழுத்திட்டு கெடந்தா செரியாவாது. யமாகாயும், சுசுகியும், போட்டும் வச்சி கடல்ல கெடக்க மீன வாரியெடுக்கும்போ, நீ மரத்தில போயி கொக்கு மாரி ஒவ்வொண்ணா கொத்தி எடுத்திட்டிருந்தா எப்புடில. இந்த எஞ்சின் சாதனங்க வந்த பெறவு  மீனெல்லாம் பேடிச்சி வெலங்க ஓடியாச்சி.”

“இதில குருவான கள்ளன் யாரு?”

“குருமிளகு கொண்டுபோக வந்தவன் வாஸ்கோட காமா.”

உரையாடலின் ஊடே எட்டிப் பார்க்கும் சிறு செய்திகளை போத்தியின் வாய் வழியாய் வரலாற்றுக்குள் இணைக்கும் பக்குவத்தைத் தெரிந்து வைத்திருக்கிறார் தம்பி. எது எப்படியோ, எனக்கு தெரிந்தவரை பரதவரில், முக்குவ பரதவர்தான் துறைவன். அவர்கள்தான் இன்றும் பெருங்கடல் வேட்டத்துக்குச் சொந்தக்காரர்கள். அவர்தம் வாழ்வு துறைவனில் பதிவாகி அதன் மூலம் நெய்தலின் நீண்ட நெடிய துயில் கலைகிறது என்பதே என்போன்றோரின் மகிழ்ச்சிக்கான காரணம்.

வாழ்த்துகள்!

                                                 ஆர் என் ஜோ டி குருஸ், சென்னை – 600 013