Author: பதாகை

தண்டவாளத்தில் உடைந்து சிதறும் சில்லறைகளை சேகரிப்பவன்

மிகச்சரியாக
வாழநினைத்து
இப்போது
தண்டவாளத்தில்
ஒரு ஒழுங்கில்லாமல்
சிதறிக்கிடக்கிறது
அவனின்
உடல் தசைகள்
தொடர்பற்று;
ரத்தசிவப்பு நிறம்
கொஞ்சம் கொஞ்சமாக
அடர்கருப்பாக மாறத்துவங்குகிறது.
சுற்றி நிற்பவர்களின்
அனேக அனுமானங்களும்
சில நிஜங்களும்
குறித்துக்கொள்ளபடுகின்றது
அவனின் கதைக்கான
கடைசி
அத்தியாய
பக்கங்களை
நிரப்புவதற்காய்.
இதோ
அவன் வந்துவிட்டான்
சுற்றி நிற்கும் அனைவருக்கும்
ஒரு கும்பிடு மட்டும் போட்டுவிட்டு
அவன் வேலையை ஆரம்பித்தான்
தசையின்
வாசம்
அவனது
நாசிகளுக்கு
எந்த நெடியையும்
ஏற்படுத்தவில்லை;
ஒவ்வொரு
துண்டுகளையும்
பார்த்துப் பார்த்து
மிகச்சரியாக எடுத்துக்கொண்டிருந்தான்.
அங்கிருப்போரின்
அழுகுரல்,
விசாரணைகள்,
எதுவும்
அவன் செவிகளுக்குள்
இறங்கவில்லை.
மொத்தமாக
எடுத்து ஓலைக்குள் வைத்து
அவிழாமல் அதே சமயம் இறுக்கங்கலற்று
மடித்துக்கட்டி
முடிந்துவிட்டதாய்
சமிக்ஞை செய்கிறான்
பீடியைப் புகைத்தவாறே…
அந்த இடத்தின்
கடைசிக்காட்சியாக
அவன் கைகளில்
சில நூறு ரூபாய்களுடன்
நடந்து போயகொண்டிருக்கிறான்
ஒரு முழுவாரத்தின்
பசித்த வயிறுடன்.
                                                                – பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

வீடுபேறு அடைதல் – ஷைன்சன் அனார்க்கி

நான் முன்னால் இருந்த அறையைக் காலி பண்ண வேண்டி வந்ததற்குக் காரணம் நான் அல்ல. ஒரு வீட்டின் மேல்தளங்கள் இரண்டை வாடகைக்கு எடுத்து மகான் மாதவன்* ஒரு தங்கும் விடுதி நடத்தி வந்தார். அங்கே தங்கியிருந்த பத்து பேரில் நானும் ஒருவன்.

(* மகான் என்பது அவரது பெயரின் பகுதியன்று. ஆனால் அவரது பேச்சு அவர் முற்றும் துறந்த ஞானி என்பதற்கு சான்றாக இருக்கும். எ.டு: இவ்வீட்டுக்கு நான் ஒன்றரை லட்சம் வாடகை கொடுக்கிறேன்; அதனால் எனக்கு ஒரு லட்சம் நஷ்டமாகிறது. இக்கூற்றை உண்மை என்று கொண்டால் அவர் இச்சென்னை மாநகரிலே பெரும் மகான். ஆனால், அவர் பொய் சொல்லுதல் என்னும் பெருங்குற்றமிழைக்கிறார் என்று உங்களுக்குத் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது.)

எங்கள் அறையில் நான்கு பேர். அந்த தளத்தைப் பொறுத்த வரையில் அது சாதாரண அறை அல்ல, சமையல் அறை. எக்கச்சக்கமான ஷெல்ஃபுகளும், கிச்சன் ஸிங்கும் அந்த உண்மையை உரக்க சொல்லிக் கொண்டிருந்தன. பாத்திரங்களுக்குப் பதிலாக நான் புத்தகங்களை அடுக்கிக் கொள்ள வசதியாக இருந்தது.

ஆளுக்கு 3500 ரூபாய் வாடகை. மின்கட்டணம், நீர்கட்டணம், துணி துவைத்தல், அயர்ன் பண்ணுதல், வீடு பெருக்குதல் என அனைத்தும் அதற்குள் அடங்கும். அறையும் நன்றாகத் தான் இருந்தது. ஆனாலும் எனக்கேயுரிய தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தன. ஹாலில் இயங்கும் தொலைக்காட்சியின் சப்தம் படிப்பதற்கு மனதை ஒருமுகப்படுத்த விடாமல் செய்தது. இரவு பத்து மணிக்கு மேல் வரும் பக்கத்து படுக்கை சிங் டியூப்லைட்டைப் போடும் போது தூக்கம் போனது. அதுவும் அவர் அன்றைக்குக் காதலியிடம் பேசத் தொடங்கினாரானால் அன்றிரவு விழித்திருப்பவனின் இரவு தான். வெளிச்சத்துக்கும், சப்தத்துக்கும் எனக்கு இருந்த hypersensitiveness அப்போது தான் புரிந்தது. தனியறை எடுக்கலாம் என்று தோன்றியது. ஆனால் அண்ணாநகரில் அதற்கு எங்கே போவது? இந்த இடத்தில் எப்படியாவது இரண்டு மாதங்கள் ஓட்டிவிட்டு அதற்கப்புறம் தேடிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்த போது தான் வீட்டு உரிமையாளர்கள்* மாதவனிடம் காலி பண்ணச் சொன்னார்கள்.

(*இந்த வீட்டுக்கு உரிமையாளர் ஒரு நபர் தான். ஒரு வயதான பாட்டி. ஆனால் அந்த குடும்பத்துக்காரர்கள் அனைவரும், அதாவது அந்த பாட்டியின் பத்து வயது பேரப்பையன் வரைக்கும் அந்த வீட்டு சொந்தக்காரன் போலவே உரிமையுடன் எங்கள் அறைகளை அடிக்கடி சூப்பர்வைஸ் செய்வதால் உரிமையாளர்கள் என பன்மையில் அழைக்க வேண்டியது அவசியமாகிறது)

காலி பண்ணச் சொன்னதற்கான காரணங்களைப் பற்றி எக்கச்சக்கமான கருதுகோள்கள் உலவின. விடுதியில் இருந்தவர்கள், அதாவது நாங்கள், குடித்து விட்டு கலாட்டா செய்தோம் என்பது ஒரு கருதுகோள். குடித்து விட்டு கலாட்டா செய்தது உண்மையே, அதனால் பாத்ரூம் கதவு உடைந்ததும் உண்மையே என்ற போதும் அதற்காகத் தான் எங்களைக் காலி பண்ணச் சொன்னார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. சுவாரசியமான மற்றொரு கருதுகோள் – மாதவன் ஒழுங்காக வாடகை கொடுக்கவில்லை. இவ்விரு பெரும் கருதுகோள்களுக்கிடையே சிறு , குறு கருதுகோள்கள் நீர்க்குமிழிகளைப் போல் ஒரு உரையாடலுக்குள்ளேயே தோன்றியுடையும்.

ஒழுங்காய், லட்சணமாய் வேலைக்குப் போக வேண்டிய வயதில் சென்னையில் ஒரு அறையில் உட்கார்ந்து அரசியல், வரலாறு, புவியியல், சில கணக்குகளைப் போடுவதற்கான common sense என பள்ளியில் கற்றுக் கொண்டது அனைத்தையும் மீண்டும் கற்றுக் கொண்டு, செய்தித்தாள்களையும் தவறாமல் படித்து, இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் ஒரு அரசுப்பணியோ, அரசு சார்ந்த நிறுவனப்பணியோ கிடைக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு சிறிதும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல தகவல் வேதாளங்களைப் பிடித்தே நாட்களைக் கழிப்பது, படிக்காத சமயங்களில் பேரபத்தமாகப் பட்டது. அத்தகைய எதிர்மறை சிந்தனைகளுக்கு இடமளிக்கக் கூடாது என படிப்பில் மூழ்கி யாருங்காணாத ஆழத்துக்குப் போய் படிப்பைத் தியானம் போல் மாற்ற வேண்டும் என முயன்றாலும் தொலைக்காட்சி சப்தத்தாலும், அறை நடமாட்டங்களால் ஏற்படும் கடுந்தொந்தரவுகளாலும் அம்முயற்சிகள் தோல்வியடைந்தன.

அறை மாற்றப்படுவதால் எழுந்த கவலையால் படிக்க முடியாமற் போகவே என் உளச்சிக்கல்கள் மிகுந்தன. எந்த முகவரிக்கு மாறப் போகிறோம் என்பதை மாதவன் சொல்லாமற் போனதால் நான் அறைக்கு தபால் மூலம் வருவித்துக் கொண்டிருந்த வார, மாதமிருமுறை இதழ்களை எம்முகவரிக்கு மாற்றி அனுப்பக் கோருவது என்பதை அறியாமல் அல்லாடிக் கொண்டிருந்தேன். 25ம் தேதி மாதவன் ஒரு முகவரியைத் தந்தார் அம்முகவரியை மின்னஞ்சலில் பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்பி என்னுடைய ஒரு பிரச்சினை முடிவுக்கு வந்தது என்ற சந்தோஷத்தில் சரவண பவனிலிருந்து ஸ்பெஷல் சாப்பாடு வாங்கி வந்து அறையில் உட்கார்ந்து சாம்பார் கவளங்களையும், புளிக்கறி கவளங்களையும், ரச கவளங்களையும் விழுங்கி, மோர்க்கவளங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரே மாதவன் வந்து அமர்ந்தார். கையில் பாதி உருவாகியிருந்த மோர்க்கவளத்தை தட்டில் வைத்து நிமிர்ந்தேன்.

“அந்த ரூமுக்கு இப்ப மாற முடியாதுப்பா” என்றார்.

பதில் சொல்லவில்லை. முகத்தை ஒரு வட்ட வடிவ கேள்விக்குறியாக மாற்றிக் கொண்டேன். “அக்ரிமென்ட்டுக்குப் பேசும் போதே ரொம்ப குளறுபடி பண்றாங்க. அது தான் அந்த இடம் வேண்டாம்னு விட்டுட்டேன்”, முந்தின நாள் முகவரியைத் தந்து வெள்ளையடிக்கும் வேலை நடந்து கொண்டிருப்பதாகச் சொன்ன அதே மகான் மாதவன் தான் இதையும் சொன்னார். பாதி உருவாகி தட்டில் இருந்த மோர்க்கவளத்தை எடுத்து அவரின் முகத்தில் அடித்து, கவளத்தைப் பருக்கைகளாக மாற்றி பறக்க விட வேண்டும் என்று என் மனதுக்குள் எழுந்த அதீத ஆசையை நிறைவேற்றுவதற்கு அவகாசம் தராமல் எழுந்து கொண்ட மாதவன் சொன்னார், “நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க தம்பி, நம்மகிட்ட இன்னொரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. அங்க இப்போதைக்கு நீங்க எல்லாரும் தங்கிக்லாம். சீக்கிரமா புதுவீடு பாக்றேன்”.

எனவே, இப்போது போகப் போகிற அறையும் நிரந்தரமானது அல்ல. நிரந்தரமான முகவரிக்கு மாறும் வரை பத்திரிகைகள் அனுப்புவதைத் தற்காலிகமாக நிறுத்தச் சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டியது தான். ஒரு பத்திரிகை எளிதாகக் கிடைத்து விடும். இன்னொரு பத்திரிகை கிடைப்பது கஷ்டம். அப்படியே கிடைத்தாலும் இடையிடையே சில வாரங்களுக்கான இதழ்கள் விட்டுப் போகக் கூடும். ஏற்கனவே இருந்த திருப்தி கரைந்து போயிருக்க சாப்பாடும் எந்த உற்சாகமும் ஊட்டவில்லை. நல்லவேளை, தலப்பாகட்டி சிக்கன் சாப்பிட்டிருந்தால் காசு அதிகமாகச் செலவான கவலையும் கூடவே சேர்ந்திருக்கும்.

நேற்றைக்குக் கொடுத்துப் போன முகவரி நிஜ முகவரியா, இல்லையென்றால் வெறும் சமாளிப்பா என்பதைப் போய்ப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஆனால், அதற்கு இரண்டு அவென்யூக்களைக் கடந்து போக வேண்டும். எப்பொழுதும் வாகனங்கள் பறந்து கொண்டேயிருக்கும் சாலைகள். கவனக்குறைவாலோ, உளச்சிக்கலால் வேண்டுமென்றோ ஏதேனும் வாகனத்தின் முன் குதித்து விடுவேன் என்று என்மேலே எனக்கு சந்தேகம் இருந்ததால் அந்த யோசனையைக் கைவிட்டேன்.

 பக்கத்திலிருந்த மளிகைக்கடையில் அட்டைப் பெட்டிகளை வாங்கி, எடுத்துப் போக வேண்டிய பொருட்களை அவற்றுள் நிறைக்கத் தொடங்கினேன். ஆறு பெட்டிகள் நிறைந்தன. ஐந்து பெட்டிகளில் இருந்த புத்தகங்களுக்கும் அரசாங்க வேலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவற்றை எடுத்து வீட்டில் போய் போட்டு விட வேண்டியது தான். திரும்ப அறை மாறும் போது சுமையாவது குறையும்.

இருபத்தேழாந் தேதியே புதிய ரூமுக்குப் போக வேண்டியதாயிற்று. போன பின்பு தான் அது தங்கும் அறையே இல்லை என்று புரிந்தது. டைனிங் ஹாலில் நான்கு கட்டில்களை கொஞ்சங்கூட இடைவெளியில்லாமல் நெருக்கி, அவற்றை சுவரோடும் ஒட்டிப் போட்டு எங்கள் ‘அறையை’த் தயார் செய்திருந்தார் மாதவன். அந்த அறையில் மூன்று அறைகளின் கதவுகள் திறந்தன. கிச்சனில் தண்ணீர் குடிக்கப் போகிறவர்கள் அந்த அறையைத் தாண்டித் தான் போக வேண்டும். பல் தேய்க்க, முகங்கழுவ எல்லோரும் அந்த அறையில் இருந்த வாஷ்பேசினைத் தான் பயன்படுத்தினார்கள். பரபரப்பான ஒரு தெருவின் நடுவே கிடப்பதைப் போன்ற உணர்ச்சி. எனது கேரளக் காதலி டயானாவின் முகத்தை மடிக்கணினி திரைமுழுக்க வியாபிக்கச் செய்து, பின்னணியில் ஸ்விரிடோவின் “பனிப்புயல்” (Snowstorm) என்ற வால்ட்ஸ் இசைத்துணுக்கை ஒலிக்க விட்டு அவள் முகத்தின் ஒவ்வோர் அணுவையும் ரசிப்பது எனக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு. அதை இங்கே செய்யமுடியாது.

மெயின் ஹாலில் இருந்த தொலைக்காட்சியின் இரைச்சல் எத்தடையுமின்றி அறைக்குள் நுழைந்து சித்திரவதை செய்தது. முதல் நாளிலேயே தலை இரண்டாகப் பிளப்பதைப் போல் கடுமையான தலைவலி. அங்கிருந்து தப்பி தெருக்களில் அலைந்து இரவு ஒன்பது மணிக்கு மேல் அறைக்கு வந்தேன்.

(* ஒன்பது மணிக்கு மேல் தெருக்களில் அலைய பயம். அந்தப் பகுதியில் அமைச்சர்களின் வீடுகளும், அரசு அதிகாரிகளின் வீடுகளும் இருந்தன. இந்த சூழலில் என்னைப் போல் ஒருவன் இரவில் தெருக்களில் அலைந்து கொண்டிருந்தால் சந்தேகக் கேஸில் பிடித்துப் போய் விடுவார்கள். அக்காளின் கணவர் சென்னையில் இன்ஸ்பெக்டர் தான். ஆனால் அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காமல் அடிக்கத் துவங்கிவிட்டால்?)

அடுத்த நாள் வந்த மாதவனிடம் சொன்னேன், “இன்னும் ஒரு மாசத்துக்குள்ளார ரூம் காலி பண்ணிடுறேன்.”

“என்ன ஆச்சு? எங்க போற?”

“ஃப்ரண்டஸ்லாம் வெளிய ரூம் பாத்துகிட்ருக்காங்க. அங்க போலாம்னு இருக்கேன்”

“உனக்கு யாருப்பா ஃப்ரெண்டஸ்? நீ யார்கூட பேசியும் பாத்ததில்லேயே. உன் ரூம்மேட்ஸ் கிட்ட கூட பேச மாட்டேங்க்ற”. மாதவன் சொன்னதிலும் ஓரளவு உண்மை உண்டு. கிட்டத்தட்ட எப்போதுமே படித்துக் கொண்டிருப்பதால், அறைத் தோழர்களிடம் பேசுவதே குறைவு. ஆனால் எனக்கு அதைத் தாண்டி நண்பர்கள் உண்டு. அவரவர் அறைகளில் ஏற்கனவே செட்டில் ஆகி விட்டார்கள். வேறு அறை எதுவும் பார்க்கவில்லை. நான் தான் பார்க்க வேண்டும். ஆனால் எனக்கு இருக்கும் / இல்லாத நண்பர்களைப் பற்றிப் பேசுவதற்கு மாதவன் யார்?

“என் ஃப்ரெண்ட்ஸ் யாருமில்லேன்னா சிங்கிள் ரூம் எடுத்துகிட்டுப் போயிடுவேன். அவுட்டர் ஏரியாவானாலும் பரவாயில்லை”. மாதவனின் முகம் கூம்பிப் போவதைப் பார்க்கும் போது குதூகலமாகவே இருந்தது.

பேச வேண்டியதைப் பேசியாயிற்று. இனி ரூம் பார்க்க வேண்டியது தான். மகான் மாதவன் என் அட்வான்ஸ் ஐயாயிரத்தைத் திருப்பித் தருவாரா, இல்லையென்றால் தனது நஷ்டத்தை ஈடுகட்ட அதைப் பயன்படுத்திக் கொள்வாரா என்று தெரியவில்லை. இதைப் போன்ற விளம்பரங்களுக்கென்றே இருக்கும் இணையதளங்களில் எனது தேவையைப் பதிவு செய்தேன். “குடிப்பழக்கம், புகைப்பழக்கம் இல்லாத திருமணமாகாத இளைஞருக்கு (குடிமைப்பணித் தேர்வுகளுக்காகப் படித்துக் கொண்டிருப்பவர்) தனியறை தேவை”.

அடுத்த நாளிலிருந்தே அவ்விளம்பரத்துக்குப் பதில்கள் வரத் தொடங்கின. முதலில் பேசியவர் ஒரு பெண். அவர் முழுக்க ஆங்கிலத்திலேயே பேச நானும் ஆங்கிலத்திலேயே தட்டுத்தடுமாற வேண்டியதாயிற்று. மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட பல வசதிகளுடன் எனக்கு ஏற்ற மாதிரி ஒரு அறை இருப்பதாகச் சொன்னார். மைக்ரோவேவ் ஓவனை நான் அதற்கு முன்னால் சில ஆங்கிலப்படங்களில் நிச்சயமாகப் பார்த்திருக்கிறேன். சில ஹோட்டல்களில் பார்த்ததைப் போல் தோன்றினாலும் நினைவு சரியாக இல்லை. ஆனால் எந்த வீடுகளிலும் நான் அதைப் பார்த்ததில்லை. ஒரு ஆம்லெட் கூட வட்ட வடிவில் ஒழுங்காகப் போடத் தெரியாத எனக்கு ஒரு மைக்ரோவேவ் ஓவன் எவ்வகையில் வசதி என்றும் புரியவில்லை.

தொடர்ந்து மின்னஞ்சலில் அவ்வறையின் புகைப்படங்களை எனக்கு அனுப்பினார். பல்வேறு கோணங்களில் அவ்வறையின் பல்வேறு பகுதிகளை புகைப்படமெடுத்து அனுப்பியிருந்தார். அடுக்களையில் மைக்ரோவேவ் ஓவன்; படுக்கையறையில் தரை மட்டத்தின் மேல் உயர்த்திப் போடப்பட்ட மேடையில் இரண்டு பெரிய படுக்கைகள்; நவீன மேற்கத்திய பாணி கழிவறை. இரண்டு பேருக்கான அறை அது. மொத்த வாடகை 10000 ரூபாய். என்னோடு இன்னொரு நபர் யாரும் இல்லாததால் நானே அவ்வளவையும் கொடுக்க வேண்டும். எனக்கு ஒரு மாதத்துக்கான மொத்த செலவே அவ்வளவு தான். வீட்டில் அதற்கு மேல் காசு கேட்க சங்கடமாக இருந்தது. அதுவே அதிகம் என்று சமயங்களில் தோன்றியது.

ஆனால் அந்த அறைவீடு இரண்டு பேருக்கு ரம்மியமானதாக இருக்கும். கலியாணமானவுடன் ஒரு நீண்ட தேனிலவை அக்கட்டில்களில் உருண்டு புரண்டு கொண்டாடலாம். ஆனால் கலியாணம் ஆக வேண்டும். வேலையில்லாமல் இருக்கும் போது கலியாணத்தைப் பற்றி யோசிப்பதே பாவம். ஆனால் வேலையில்லை என்று இனப்பெருக்க சுரப்பிகளும் வேலையற்று இருந்து விடுகிறதா என்ன? காதலி இருந்தாலாவது அச்சுரப்புகள் வீணாய்ப் போகாது என்ற நிச்சயம் இருக்கும்.

 காதலைப் பற்றி நினைத்தவுடன் முதலில் ஜூலியின் முகம் நினைவுக்கு வந்தது.பள்ளியில் கூடப் படித்தவள். அவளுக்கு காதல் தொல்லை கொடுத்து அவள் அண்ணனிடமிருந்து திட்டு, மிரட்டல் எல்லாம் வாங்கியிருக்கிறேன். இப்போது திருவனந்தபுரத்தில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். 20000 சம்பளம் இருக்கும். அவள் சென்னைக்கெல்லாம் வரமுடியாது. முடிந்தாலும் எனக்காகவெல்லாம் வரமாட்டாள். இப்போது என்னை மறந்தே போயிருப்பாள்.

அடுத்து டயானா. கேரளத்துக் காதலி. கல்லூரியில் கூடப்படித்தவள். வடகேரளத்தில் ஒரு பாலிடெக்னிக்கில் லெக்சரராக இருக்கிறாள். ஒரே கல்லூரியில் படித்திருந்தாலும் அவளுக்கு நான் யாரென்றே தெரியாது. அடுத்த காதலி காவ்யஸ்ரீ. அவள் பதிவயதில் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய காலந்தொட்டு அவளை நான் காதலிக்கிறேன். அவளுடனேயே வளர்ந்தேன். அவளுக்கும் என் வயதென்பதால் வசதியாகப் போனது. இப்போது அவள் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் மிகப் பிரபலமான கதாநாயகி. அவளை நான் நேரில் பார்த்தது கூட கிடையாது.

இப்படி எனக்கு ஒன்றுக்கு மூன்றாக காதலிகள் இருந்தாலும், அவர்கள் யாரும் என்னைக் காதலிக்கவில்லையாதலால் எனக்கு அந்த வீடு வேண்டாம்.

அடுத்தும் சிலர் பேசினார்கள். பத்தாயிரம் வாடகை, லட்சம் அட்வான்ஸ் என்றார் ஒருத்தர். லட்சத்துக்கு நான் எங்கே போக? வீட்டில் கேட்க முடியாது. இன்னொருத்தர் வடசென்னையில் இருந்து பேசுவதாகச் சொன்னார். “குமார் பேசுறேன்” என்று அவர் சொன்னவுடன் பெயருக்கு முன்னால் கொக்கி இருக்கிறதா என்று கேட்க வேண்டும் போலிருந்தது. அப்படி இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் கேட்காமலேயே கைகள் நடுங்க தொலைபேசினேன். வேறு எங்குமே கிடைக்காவிட்டால் அவரிடம் தஞ்சம் புக வேண்டியது தான்.

அண்ணாநகரிலா வீடுகள் கிடைக்காது? என்போன்ற அகதிகள் எத்தனை ஆயிரம் உண்டு அண்ணாநகரிலே? தடுக்கி விழுந்தால் எழுப்பி விட்டு, “பாஸ், நான் சிவில் சர்வீசசுக்கு பிரிப்பேர் பண்றேன். நீங்க?” என்று கேட்பவர்கள் அண்ணாநகரின் ஒரிஜினல் ஜனத்தொகைக்கு சமமாகவோ அதிகமாகவோ இருக்கக் கூடும். சக அகதி என்ற முறையில் பழக்கமான ஒரு தோழனிடம் சொல்லி வைத்திருந்தேன். அவன் அவனுக்குத் தெரிந்த ஒரு சக அகதியிடம் சொல்லி ஒரு அறைக்கு அழைத்துப் போனான். இரண்டு பேர் தங்கும் அறை; ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் மூன்றாம் தளத்தில் இருந்தது. ஒரு முன்னறை, ஒரு பின்னறை, இடையில் ஒரு இந்தியப் பாணி கழிவறை, ஒரு சமையலறை. சமையலறை கிட்டத்தட்ட ஷெல்புகளால் ஆனதைப் போலிருந்தது. ஷெல்புகளில் தொட்டால் பொடியாகும் நிலையில் மூன்று பழம்புத்தகங்கள் இருந்தன. அவற்றைத் தொட்டுப் பொடியாக்கி கரைத்துக் குடிக்கும் மனநிலையில் நான் அப்போது இல்லையாதலால் அப்புத்தகங்கள் உயிர் பிழைத்தன.

இரண்டு பேர் தங்கலாம். சரி தான். ஆனால் இரண்டாவது நபரை எங்கே போய்த் தேடுவது? என்னை அழைத்துச் சென்ற அகதியிடமே “நீ இப்போது அறை மாறும் உத்தேசம் ஏதுமுண்டா?” என்று கேட்டேன். அவன் அத்தகைய உத்தேசங்கள் எதுவும் தனக்கு இல்லை என்பதைக் காண்பிக்கும் வகையில் மிக அழுத்தமாகவும், ஆழமாகவும் தலையசைத்து மறுத்தான். அதற்கும் இணையத்தில் விளம்பரம் கொடுக்கலாமா? ஆனால் அதைப் பார்த்து இரண்டாவது நபர் வருவதற்குள் வேறிருவர் வந்து வாடகை பிடித்தால் என்ன செய்வது?

என்ன செய்வதென்று அறியாமல் மனக்கரங்களால் மூளையைப் பிசைந்து கொண்டும், சதைக்கரங்களால் தலையைச் சொறிந்து கொண்டும் அறைக்குப் போகும் போது என்னைப் போல் மோகனுக்கும், ராஜீவுக்கும் அறை பிடிக்காமல் போயிருந்தது. அவர்கள் அடுத்தநாள் புதிதாக வேறொரு விடுதி பார்க்கக் கிளம்பினார்கள்.அவர்களுடனேனயே ஒட்டிக் கொண்டேன்.

முதலில் கிங்ஸ் கெஸ்ட் ஹவுஸ். பெரிய அறைகளை கண்ணாடித் தடுப்புகளால் சிறிய அறைகளாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் மூன்று இரண்டடுக்கு படுக்கைகளைப் போட்டிருந்தார்கள். அப்படி ஒரு அறையில் மொத்தம் ஆறு அரசர்கள். எப்படி அரசர்கள் ஆட்டுக் கொட்டகை போன்ற அறைகளில் தங்க சம்மதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. உணவுடன் சேர்த்து மாதம் 6500 ரூபாய். மோகனுக்கும் ராஜீவுக்கும் பிடித்துப் போனது. எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அறைக்குள் இருந்த ஏற்புணர்வு வெளியே வந்ததும் வடிந்து போனதால், அடுத்த அறையைத் தேடிப் போவதைப் பற்றி அவர்களுக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை.

மீண்டும் தெருக்களை அளந்தோம். கொஞ்ச தூரத்தில் இன்னொரு விடுதி. இரண்டு பேர் தங்கிக் கொள்வது மாதிரியான அறைகள். ஆனால் முழுதாக நிரம்பியிருந்தது அவ்விடுதி. அந்த விடுதியின் சொந்தக்காரர் வைஷ்ணவுக்கு அதைப் போல் இன்னும் சில விடுதிகள் இருப்பதாகச் சொல்லி அங்கே தங்கியிருந்தவர் ஒரு மொபைல் நம்பரைத் தந்தார்.

மோகன் வைஷ்ணவுக்கு ஃபோன் பண்ணினான். காலியிடங்கள் இருக்கும் இன்னொரு விடுதிக்கு போக வழி சொன்னார் அவர். சென்னைக்குள்ளேயே குக்கிராமம் போன்ற பகுதியில் அமைந்திருந்தது. உள்ளே சாலைகள் எதுவும் இல்லை. அரிசி மண்டியொன்றின் மூன்றாம் மாடியில் இருந்தது அது. அறை வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது. இரண்டு பேர் ஒரு அறைக்குள் தாராளமாகத் தங்கலாம். சாப்பாடோடு சேர்த்து 5500 ரூபாய். மூன்று பேருக்கும் பிடித்திருந்தாலும் அதைவிட நன்றாக ஒரு அறை கிடைக்காதா என்கிற நப்பாசை/ பேராசையில் யோசித்து சொல்கிறோம் என்று சொல்லி வெளியே வந்து விட்டோம்.

எங்கள் நப்பாசை நிறைவேறவில்லை. அதற்கப்புறம் பார்த்தவையெல்லாம் காற்றோட்டமில்லாமல், இருட்குகைகளைப் போலவும், மாட்டுத் தொழுவங்களைப் போலவும் இருந்தன. வைஷ்ணவை அடுத்த நாள் போனில் கூப்பிட்டு அந்த விடுதி ஓகே என்றோம். அடுத்தநாள் தான் அந்த அறைக்கு வருவதாகவும், அங்கே வந்து அட்வான்ஸ தரவும் சொன்னார் அவர். காலையிலேயே மூன்று பேரும் ஆளுக்கு ஐயாயிரத்துடன் கிளம்பி விட்டோம். வைஷ்ணவ் மாதவனை போன்றவராக இல்லாதவரைக்கும் நல்லது தான். சீக்கிரமாக வந்து விட்டோமா என்றெண்ணி அரிசி மண்டி வாட்ச்மேனிடம் “வைஷ்ணவ் சார்…” என்றோம். அவர் மேலே கைகாட்டினார்.

அன்றைக்குப் பார்த்த அறையின் கதவைத் திறந்து உள்நுழைந்தோம். வைஷ்ணவ் உட்கார்ந்திருந்தார். இல்லை, மாதவன் உட்கார்ந்திருந்தார். அப்படியும் சொல்ல முடியாது. சிலரால் வைஷ்ணவ் என்றும், சிலரால் மாதவன் என்றும், எங்களால் அவ்விரு பெயர்களாலும் அழைக்கப்பட்டிருந்த அந்நபர் உட்கார்ந்திருந்தார். நாங்கள் அறியாத வேறு பெயர்களும் அந்நபருக்கு இருக்கலாம்.

எங்களைப் பார்த்தவருக்கு எந்த அதிர்ச்சியுமில்லை. எங்களை எதிர்பார்த்திருந்தவர் போன்றே அமர்ந்திருந்தார். நாங்கள் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் நின்றிருந்தோம். “என்ன பாக்றீங்க? எல்லாருமே நான்தான். எங்க போனாலும் சுத்தி சுத்தி எங்கிட்ட தான் வரணும். சென்னை முழுசா என்னுது தான், ஒலகம் முழுசுமே என்னுது தான். வேணும்னா பாக்றீங்களா?” என்று வாயை விரிவாய்த் திறந்தார்.

சென்னை நகரம் அந்தச் சிறுவாய் முழுக்க நிறைய சிறுவாய் பெருவாயாகிக் கொண்டே போனது. கூவத்தின் வாடை அறைமுழுக்க வியாபிக்கவே திடுக்கிட்டு வாயை மூடிக் கொண்டார் சென்னையின் கடவுளான வைஷ்ணவ்/மாதவன்/பெயரற்றவர்.

‘Languedoc Trilogy’ – Kate Mosse – தனித்துவம் மிக்க ழானர் எழுத்து

பல நூற்றாண்டுகளாக மறைந்திருக்கும்/மறைக்கப்பட்டிருக்கும் ரகசியங்கள், அவற்றின் -உலகின் ஆக்கத்திற்கும்/அழிவிற்கும் பயன்படுத்தப் படக்  கூடிய -ஆற்றல், அவ்வாற்றலின்  ஈர்ப்பால் அம்மர்மங்களின் விடைகளைக் கண்டடையத் துடிக்கும் குழு, அவர்களைஎதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் நாயகிகள் என கேட் மாஸின்  (Kate Mosse) ‘Languedoc Trilogy’ பற்றிய அறிமுகத்தைப் படிக்கும் போது குடிசைத் தொழில் போல் பெருகியுள்ள ‘ancient conspiracy theory’ வகைமை நாவல்களின் இன்னொரு தயாரிப்பு இவை என்றே தோன்றினாலும் இந்த  ழானரில் தனித்தன்மை உடையதாக இந்தத் ட்ரிலஜி உள்ளது.

பிரான்ஸின் தெற்குப் பகுதியான Languedocல் புதைந்திருப்பதாக சொல்லப்படும் மர்மங்கள்  குறித்து பல ஹேஷ்யங்கள் நிலவுகின்றன. இயேசு சிலுவையில் மறித்தப் பின் மேரி மெக்டலின் இங்கு வந்ததாகவும், இயேசுவின் குருதிவழி  அவர் மூலம் தொடர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபையால் ‘மதத் திரிபு’  கருத்துக்கள் கொண்டவர்கள் (heretics) என்று முத்திரைக் குத்தப்பட்டு அழித்தொழிக்கப்பட்ட Catharism என்ற கிருத்துவத்தின் ஒரு பிரிவும், அதைப் பின்பற்றுபவர்களான Cathars  மிகுந்திருந்தப் பகுதி இது. இவர்கள் பெண்மையைப் போற்றியவர்கள், பெண்மத போதகர்களை/பூசாரிகளை ஏற்றுக்கொண்டவர்கள்  என்பதை  மெக்டலின் குறித்த ஹேஷ்யத்தோடு பொருத்திப் பார்த்தால்
இப்பகுதி பற்றிய யூகங்கள்  பரவுவதற்கு பல காரணங்கள் உள்ளன என்று புரிகிறது.  ஆன்ம ஞானம், மரணமில்லா வாழ்வு, பொருட்ச்செல்வம் என Catharsகளிடமிருந்த  புதையல் பற்றிய யூகங்களும் பலவாறு உள்ளன.

இந்த நிலவியலை, அதைச் சூழ்ந்துள்ள தொன்மங்களை (legends) ட்ரிலஜியின்  மூன்று நாவல்களான  (அவை வெளிவந்த வரிசையில்) ‘Labyrinth’, ‘Sepulchre’ மற்றும் ‘Citadel’ன் களமாக கேட் கொண்டுள்ளார். இந்த நாவல்களுக்கு முன் 90களில் ‘இலக்கியப் புனைவுகள்’ எழுதி இருந்தார்  கேட்.  ழானர் எழுத்திற்கு வந்ததைப் பற்றி
“I realised,” she admits, “that I should have listened to myself sooner. My skill is storytelling, not literary fiction.”
என்று சொல்கிறார்.  எனிமும் இலக்கிய அம்சத்தை முற்றிலும் அவர் கைவிடவில்லை. “History is written by the victors, the strongest, the most determined. Truth is found most often in the silence, in the quiet places.” என்று Labyrinth நாவலில் சொல்லப்படுவது இலக்கியத்தால் எப்போதும் சுட்டப்பட்டு வருவது தான். இந்த ழானர் நாவல்கள் தாங்கள் இயங்கும் களத்தில் தன்மையாலேயே பேசாப் பொருளைப் பற்றி பேச வாய்ப்புக்கள் அதிகம் கிடைத்தும், தன் வகைமையின் எல்லைகளாலேயே (வாசகனின் கவனத்தைத் புனைவின் மையத்திலிருந்து திசை  திருப்பாமல் நாவலின் அப்போதைய நிகழ்வுகளுடன் மட்டுமே ஒன்றைச் செய்வது) ,  அவற்றைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. கேட்  இந்த வரையறுக்குள்,  கடவுளின் பெயரால் அழித்தொழிப்பட்டவர்கள் (‘Labyrinth’), இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் ஆதிக்கத்தில் பிரான்ஸ் இருந்தபோது, எதிர் குரல் கொடுத்த, ஆனால் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத பெண்களின் பங்கு (Citadel)  (ஜெர்மானிய ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள் என அங்கீகரிக்கப்படவர்களில் பெண்கள் மிக மிகக் குறைந்த சதவீதமே என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய ஆதிக்கத்திலிருந்து பிரான்ஸ் விடுவிக்கப்பட்டது குறித்த தொன்மம் “military, national and male” என்று உருவானதை இந்தக் காலகட்டத்தைப் பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ள Robert Gildea குறிப்பிடுகிறார்)  என சில விஷயங்களை   நாவலின் மையத்தை சிதைக்காமல், அதனுடன் இணைத்தே சொல்லிச் செல்வது அவரைத் தனித்துக் காட்டுகிறது.

பெண் பாத்திரங்களின்  வார்ப்பு இந்த நாவல்களின் முக்கிய அம்சம்.  இந்த வகைமையில் பொதுவாக ஆணே நாயகனாகவும், சாகசங்கள் புரிபவனாகவும், பெண்  அவனுக்கு உதவும் பாத்திரமாகவே இருப்பாள். கேட்டின் மூன்று நாவல்களிலும்  முக்கியப் பாத்திரம் பதின் பருவத்தில் அல்லது அதன் முடிவில் உள்ள பெண்களே. முக்கியப் பாத்திரத்தின் பாலினத்தை மாற்றியமைப்பதை மட்டும் கேட் செய்யவில்லை. பதின் பருவத்திற்குரிய விழைவுகள், சலனங்கள் கொண்டவர்களாக அவர்கள் இருந்தாலும் நாவலின் போக்கில் தங்கள் சுயத்தைக் கண்டடைந்து, நாவலின் ஆண் பாத்திரங்களையும் வழிநடத்துபவர்களாகவும் அவர்கள்  இருக்கிறார்கள். அரச/மத பலம் போன்ற தங்களை மீறிய பெரும் சக்திகளை எதிர்கொள்ளவும் தயங்குவதில்லை இப்பெண்கள்.  ஊழை மீறிச் செல்ல முடியும் என்று நம்புகிறாயா என்ற கேள்விக்கு Labyrinth நாவலின் நாயகி ‘ஆலிஸ்’
‘Otherwise, what’s the point? If we are simply walking a path preordained, then all the experiences that make us who we are – love, grief, joy, learning, changing – would count for nothing.’
என்றுரைக்கிறாள். இங்கு இப்பெண்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதை விட தங்கள் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை தான் முக்கியமானது. ஒரு விதத்தில் இம்மூன்று நாவல்களுமே ஒரு பதின் பருவத்தவள் மனம் முதிவர்தைப் பற்றியது என்றும் புரிந்து கொள்ளலாம். முக்கியப் பாத்திரங்கள் நாவலின் போக்கை முன்னெடுத்துச் செல்வதற்காக மட்டுமே இருப்பது போல் இல்லாமல், அவர்களுக்கென்ற காரண காரியங்களை கொண்டவர்களாக,  அவை சார்ந்து அவர்கள் எடுக்கும் முடிவுகளே  நாவலின் போக்கைத் தீர்மானிப்பதாக அமைந்துள்ளன.

‘Languedoc’ இன்று  ‘பிரான்ஸ்’ என்று நாம் அறிந்து கொண்டிருக்கும் நிலப்பரப்பின் அங்கமாக இருந்தாலும், அது ஒருகாலத்தில் சுதந்திரப் பகுதியாக இருந்து, அப்போதைய பிரான்ஸ் மன்னர்களின்/அரச குடிகளின்  ஆக்கிரமிப்பை எதிர்த்து தோல்வி அடைந்ததும், அதன்  பூர்வ மொழியான Occitan மெல்ல மெல்ல நசிந்ததும் நாவல்களின் பின்னணி சரடாக உள்ளன. (Spain/Catalonia பிரிவினை பிரச்சனையை இத்துடன் பொருத்திப் பார்க்கக் கூடும். ஐரோப்பிய நிலவியல்/வரலாறு/அரசியல் நன்கறிந்த ஒருவர் இன்னும் விரிவாக இதைப் பற்றி பேச முடியும்).  ஜெர்மனி Languedoc பகுதியை உள்ளடக்கிய பிரான்ஸை ஆக்கிரமித்ததை  எதிர்த்தவர்களில் பலரின் மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் Languedocஐ கைப்பற்ற வந்தவர்களாக பார்க்கப்பட்டதும் (Labyrinth நாவல்), அவர்களை அப்போது எதிர்த்தவர்களின் சந்ததியர் 1940களில், பிரான்ஸ் என்ற சொல்லின் கீழ் ஒன்றிணைந்து ஜெர்மானியர்களை எதிர்ப்பதிலும் (Citadel நாவல்) உள்ள  நகை முரண் நிலத்திற்கான வல்லாதிக்கப் போர்கள் பல்வேறு பெயர்களில் (மதம்/இனத்தூய்மை) எப்போதும்  நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதைச்  சுட்டுகிறது.

நிலம்/மதம்/தனிமனித வேட்கை இவற்றின் பொருட்டு காலந்தோறும் நடத்தப்படும் அக்கிரமங்களுக்குச் சாட்சியாக,
மூன்று நாவல்களிலும் பொது பாத்திரமாய்/சரடாய் வரும் – தன் தாய் நிலத்தில் நடந்தவற்றை ஆவணப்படுத்த  தன் வாழ்வு முழுதையும் செலவிடும், அதே நேரத்தில் அறியா வயதில் அரும்பிய, நிறைவேறவே முடியாத காதலின் தோல்வியின் துயரோடு, காதலியின் நினைவை  சுமந்தலையும்   –  Sajhe/Audric  என்ற மர்மமான  ஆண் பாத்திரம், வாசகனுக்கு நெருக்கமாக இருப்பதோடு,  இறவாமை/மிக நீண்ட ஆயுள் போன்றவை வரமா சாபமா என்ற கேள்வியையும் அவன்  மனதில் எழுப்புகிறது. மூன்று நாவல்களிலும், இந்த ஒரு ஆண் பாத்திரம்  தவிர மற்ற அனைத்து ஆண்  பாத்திரங்களும் பெண் பாத்திரங்கள் அளவிற்கு காத்திரமாக வார்க்கப்படவில்லை என்பது ஒரு குறையே. எந்த ழானர் எழுத்திலும் அனைத்துப் பாத்திரங்களுக்கும்  அதிக கவனிப்பைத்  தர  இயலாது தான் என்றாலும், கேட் அத்தளையை இன்னும் தளர்த்த முயன்றிருக்கலாம். குறிப்பாக எதிர்நாயக/நாயகி பாத்திரங்களுக்காக.

கதைசொல்லலே தனக்கு உகந்து எனக் கூறும் கேட் இம்மூன்று நாவல்களுக்கும் – நாவலின் நிகழ்காலம், அதற்கு முந்தைய கடந்த காலம் என்று  இரண்டு காலகட்டங்களின் நடக்கும் நிகழ்வுகளை அடுத்தடுத்த  அத்தியாங்களில் விவரித்து அவை இணையும் புள்ளி –  என்ற  பாணியை உபயோகித்துள்ளார். இந்த ழானர் எழுத்துக்களில் பொதுவாக இருக்கக்கூடிய பக்கத்திற்குப் பக்க சாகஸ நிகழ்வுகளை எதிர்பார்க்கும் வாசகன்  கதையை அதன் போக்கில் விட்டு மெல்ல அதைச் சார்ந்த பின்னலை உருவாக்கும் கேட்டின் யுத்தியினால் முதலில் ஏமாற்றமடைவான். 700 பக்கங்களுக்கு குறையாமல் இருக்கும் ஒவ்வொரு நாவலையும் எளிதில் நம்பிக்கை இழக்காமல் தொடரும் வாசகன் ஒரு இடத்தில் ஒரு காலகட்டத்தின் அத்தியாயம் முடிந்து இன்னொரு காலகட்டத்தின் அத்தியாயம் ஆரம்பிக்கும் போது, அதை தாண்டிச் சென்று இப்போது விட்டு விட்டு வந்த காலகட்டத்திற்கு மீண்டும் செல்ல வேண்டும்  என தன்னையறியாமல் எண்ண ஆரம்பிக்கும் இடத்தில் கேட் அவனை வென்று விடுகிறார்.

ழானர் எழுத்தின் பலவீனமாக பொது இலக்கிய வாசகன் நினைக்கூடிய, அது அவனிடம் கோரும்  ‘புனைவினுள் அவநம்பிக்கையை கைவிடுதலை’ (suspension of disbelief) இந்த நாவல்களிலும் சற்றுச்   செய்யவேண்டியுள்ளது. ஆனால் அது எழுத்தாளர் கட்டமைக்கும் சம்பவங்களை, அதன் தர்க்கத்தை  எந்தக் கேள்வியும் இன்றி அப்படியே  ஒப்புக்கொள்வது என்பதாக  இல்லை என்பது இந்த ட்ரிலஜியின் நேர்மறையான அம்சம். இதில் வாசகன் செய்ய வேண்டிய மிக முக்கிய சமரசம் ஆன்மாக்கள்/ஆவிகள், அமானுஷ்ய நிகழ்வுகளின் களமாக உள்ள  ட்ரிலஜியின் புனைவுலகை, அதன் மையத்தில் உள்ள  மர்மத்தை, பாத்திரங்களின் ஊழை, அது பல ஆண்டுகளுக்குப் பின்பு வரும் தலைமுறையில் நிறைவை அடைவதை  ஏற்பதே.   அமானுஷ்யம், தற்செயல், ஊழ் என்று சொன்னாலும் அவற்றுக்கும் ஒரு தர்க்கம்/எல்லை இருப்பதாக கேட் கட்டமைப்பதால் அதை ஏற்பது ஒன்றும் கடினமான ஒன்றாக இராது. போர்கள், குண்டு வெடிப்புக்கள், கைகலப்புக்கள் போன்றவையும் வெறும் சாகஸ நிகழ்வுகளாக மட்டுமில்லாமல், வாழ்வா/சாவா என்ற உச்சகட்ட போராட்டத்தின்   பதற்றத்தை  உருவாக்குகின்றன. காதல், நம்பிக்கை துரோகம், பொறாமை என வழமையான உணர்வுகளையும் வாசகனுக்கு கேளிக்கை அளிப்பதற்க்கான வெறும் மூலப் பொருட்களாக உபயோகிக்காமல்  இவ்வுணர்வுகளின் பின்னணியில் உள்ள மனதின் பேராசையை, காலந்தோறும் அது ஆடி வரும் அதே (தன் கோரத்தை மறைக்கும் இனிய) நடனம்  உருவாக்கும் அழிவின் சோகத்தையே முன்வைக்கிறார் கேட்.  நன்மைக்கும்  தீமைக்கும் இடையேயான போராட்டத்தில் நன்மை தான் வெல்லும் என்பது ழானர் எழுத்தின் விதி. அதை கேட்டும் பின்பற்றுகிறார். ஆனால் இந்தக் களத்தில்  வெற்றி/தோல்வி என்பது தற்காலிகமானது என்றும் நன்மை/தீமைக்கு இடையிலேயான ஆடல் வேறு வேறு பெயர்களில், வேறு வேறு நபர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும் என்றும் அவர் ட்ரிலஜியின் போக்கில் உணர்த்துகிறார். வெற்றிக்கு விலையாக பெரும் இழப்பை நன்மை கொடுக்க வேண்டியுள்ளது. மூன்று நாவல்களின் இறுதியிலும்  வாசகனுக்கு அவன் எதிர்பார்க்கும் ஆசுவாசத்தை அளிக்காமல் அவன் மேல் துயரின் சுமையை இறக்கி, அவனை கையறு நிலையில் விட்டுச் செல்கிறார்.  துன்பவியல் முடிவுகள் வாசகனை அதிகம் நெகிழச் செய்யும் என்பதால் அவர் இப்படி செய்திருக்கக் கூடும் என்று வாதிடலாம் என்றாலும், எப்படியோ இதிலும் அவர் இந்த வகைமையின் வழமையை  மீறுகிறார் என்பதே உண்மை.

இந்த ட்ரிலஜியை இந்த வகைமையின் மற்ற படைப்புக்களுடன் ஒப்பிடுவதை விட  Elizabeth Kostovaன் ‘The Historian’ நாவலுடன் பொருத்திப் பார்ப்பதே ஏற்றதாக இருக்கும்.  இரண்டும் தொன்மங்களை
கையாள்கின்றன, தாங்கள் இயங்கும் தளத்தை விரிவாக்க முயல்கின்றன, காத்திரமான பெண் பாத்திரங்களை, வாசகனை முட்டாளாக கருதாத கதைப் பின்னலைக் கொண்டுள்ளன எனப் பல ஒற்றுமைகள் உள்ளன.   ஒரு வேறுபாடும் உள்ளது. கதைசொல்லல் என்பதில் அதிக கவனம் செலுத்தும் கேட் உரைநடையில் செறிவு என்ற அம்சத்தை இழக்கிறார். எனவே  ‘நாவலின் முழுமை’ என்ற அடைய முடியாத இலக்கை நோக்கியப் பயணத்தில்  கேட்டை விட Kostova அதிகம் தூரம் பயணிக்கிறார்.  உதாரணமாக Kostova, வாசகன் தன் அகத்தில்  துல்லியமாகக் காணக்கூடியதாக, அதில்  உலவுக்கூடியதாக உருவாகும்,  ருமேனியாவின்  நிலவியலின் சித்திரத்திற்கும் , கேட்டின் தட்டையான நடையில் துல்லியமான உருவெடுக்காத Languedocன் நிலவியலுக்கும் உள்ள வித்தியாசம்.  கோட்டைகள் (castle), மலைப் பிரதேசங்கள், பழங்கால தேவாலையங்கள் உள்ள Languedocன் புறச் சித்திரத்தை உருவாக்கும் கேட்டின் முயற்சி முழுமை பெறாததாகவே உள்ளது. இதை யாருக்கு வெற்றி/தோல்வி என்று பார்ப்பதை விட,  ஒரு ழானரை எந்தளவுக்கு வளைக்க இரு எழுத்தாளர்களும் முயன்றிருக்கிறார்கள் என்பதில் உள்ள வேறுபாடாகக் கருதலாம்.

“What we leave behind in this life is the memory of who we were and what we did. An imprint, no more.”  என்று இந்த ட்ரிலஜியில் ஒரு பாத்திரம் பேசுகிறார். ஆனால் வரலாற்றில் எளியவர்களின் நினைவுச் சுவடுகள் இடம் பெறுவதில்லை என்பதை நாம் அறிவோம்.  அவற்றை முழு அழிவிலிருந்து மீட்டெடுக்க  “Through the shared stories of our past, we do not die” என்று ஆலிஸ் சொல்வதே சிறந்த  வழியாக உள்ளது. அதைத் தான் Sajhe/Audricம், அவரைக் கருவியாகக் கொண்டு கேட்டும்  இந்த டிரிலஜியில் செய்ய முயல்கிறார்கள். இவை தூய இலக்கிய ஆக்கங்களாக உருவாகாமல் போயிருக்கலாம். ஆனால்  ‘சுவாரஸ்யம்’ என்ற – எந்த  ழானர் எழுத்திலும் கட்டாயமாக எதிர்பாக்கப்படும்  –
அம்சத்திற்காக அவ்வெழுத்தை மலினப்படுத்தாமல்,
அதன் சாத்தியங்களில் புதிய உயரங்களைத் தொட முயலும் இந்த ட்ரிலஜி இந்த வகை எழுத்துக்களை விரும்புவர்கள் மட்டுமின்றி, பொது இலக்கிய வாசகர்களும் அணுகக் கூடியதாகவே உள்ளது.

பின்குறிப்பு:

1. ட்ரிலஜியின் மூன்று நாவல்களும் தனித்தனியாக முழுமைப் பெற்றிருந்தாலும், அவற்றை அவை வெளிவந்த வரிசையில் வாசிப்பதே அவற்றினூடாக உள்ள சிறிய இடைவெளிகளை புரிந்து கொள்ள உதவும். அது முடியாத நிலையில் முதல் நாவலான ‘Labyrinth’யேனும் ஆரம்பத்தில் வாசிக்கலாம்.

2. ‘Labyrinth’  நாவல் தொலைக்காட்சி தொடராகவும் வெளிவந்துள்ளது.

3.  ‘Gothic Horror/Thriller’ தளத்திலும் இரு நாவல்கள் மற்றும் ஒரு சிறுகதை தொகுப்பை எழுதி உள்ளார் கேட்.

 

 

 

க்றிஸ் அந்தோணி: நேர்காணல்

க்றிஸ் அந்தோணி அமெரிக்காவில் வசிப்பவர். அண்மையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் அவருடைய முதல் நாவல் ‘துறைவன்’ வெளியாகி இருக்கிறது. நெய்தல் நிலா வாழ்வை பேசும் முக்கியமான நாவல் என ஜெயமோகன் அடையாளபடுத்துகிறார். அவருடன் இணையவழி நேர்காணலை பதாகை நிகழ்த்தியுள்ளது.

Chris Anthony

உங்களுடைய வாசிப்பை பற்றியும் இலக்கிய ஆதர்சங்களை பற்றியும் பகிரவும்

நான் பிறந்து வளர்ந்தது வள்ளவிளை என்னும் கேரள எல்லையிலிருக்கும் கடற்கரை கிராமம். எங்கள் ஊரில் 1948-ம் வருடத்திலிருந்து இயங்கிக்கொண்டிருக்கும் பெரிய நூலகம் ஒன்று உண்டு. [இப்போது  அது இடம் மாற்றப்பட்டு நூலகத்திலிருந்த நூல்கள் கவனிப்பாரின்றி செதிலரித்துக்கிடக்கின்றது.] நான் சிறுவானாக இருந்தபோதே புத்தகங்கள் எடுத்துப்படித்திருக்கின்றேன். மலயாளம் தமிழ் ஆங்கில புத்தகங்களும் உண்டு. ரஷ்ய தமிழாக்க நூல்களும், கேரள வரலாற்று நூல்களும் இதிலடக்கம். “லெஸ் மிசரபில்ஸ்” என்பதை “லே மிசரபிளே” என்று வாசிக்கவேண்டுமென்பதை என்னுடைய ஆசிரியர் சொல்லிக்கொடுத்த ஞாபகம் இப்போதும் பசுமையாக இருக்கின்றது. ராஜாஜியின் கைவிளக்கு, இர்வின் ஸ்டோன் எழுதிய “அழிவற்ற காதல்” என்னும் ஆங்கில மொழிபெயர்ப்பு, ரோமியோ ஜூலியட் நாவல் வடிவம், “இணைவுப்பாலம்” என்னும் ரஷ்ய யுத்தம் குறித்த மொழிபெயர்ப்பு, காந்தியின் சத்திய சோதனை, சாண்டில்யனின் கடல்புறா, கலைஞரின் ரோமாபுரி பாண்டியன், கண்ணதாசனின் அரங்கமும் அந்தரங்கமும், லியோ டால்ஸ்டாயின் கட்டுரைகள், மாக்சிம் கார்கியின் அன்னை, தரையிலிறங்கும் விமானங்கள்,  தகழியின் செம்மீன் என்பவை எப்போதும் என் ஞாபகத்தில் இருப்பவை.கல்லூரி நாட்களில் வைரமுத்துவின் கவிதைகள். வைரமுத்து என்றால் “இங்கே மலர்களுக்குத்தான் முதல் மரியாதை. வேர்கள் வெளியில் தெரிவதே இல்லை” என்னும் அவரது கவிதைவரிதான் ஞாபகத்துக்கு வரும்.  இதில் எது இலக்கியம் இலக்கியமில்லை என்பதெல்லாம் தெரியாது.

நான் ஒரு துவக்கநிலை இலக்கிய வாசகன் என்பதால் இலக்கிய ஆதர்சம் என்னும் பதம் சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. ஜெயமோகனின் அனைத்து ஆக்கங்களையும் படித்துக்கொண்டிருக்கின்றேன். என்னை எழுத ஊக்கமூட்டி நான் தொடர்ந்து எழுத காரணமாக இருந்தவர். அதுபோல் நிகாஸ் கசந்த்சாகீஸ் மற்றும் ஓசே சரமாகோவின் அனைத்து ஆக்கங்களையும் ஒன்றும் விடாமல் படிக்கின்றேன். நெய்தல் தமிழ் படைப்பாளிகளில் அண்ணன் ஜோ டி’குரூஸ். இவர்கள்தான் என்னுடைய தற்போதைய இலக்கிய ஆதர்சங்கள். டால்ஸ்டாயின் அன்னா கரீனினா பாதியிலிருக்கின்றது.

எழுத்தாளர் ஜெயமோகனுடன் தொடர்பு ஏற்ப்பட்ட பிறகே உண்மையான தமிழ் மற்றும் உலக இலக்கிய அறிமுகம் கிடைத்தது. ஜெயமோகன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன், எஸ்ரா, சாரு, நிகாஸ் கசந்த்சாகீஸ், ஓசே சரமாகோ  என்று யாரும் விதிவிலக்கல்ல. தமிழின் அனைத்து எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படிக்கவேண்டுமென்று ஆசை. நெய்தல் சார்ந்த அனைத்து படைப்புகளையும் படிக்க ஆசை. தோப்பில் மீரானின் “ஒரு கடலோர கிராமத்தின் கதை” ஜோவின் “ஆழிசூழ் உலகு” படித்த பிறகுதான் நானும் எழுத வேண்டுமென்ற ஆவல் பிறந்தது. இவர்களை ஜெயமோகனின் தொடர்பு கிடைப்பதற்கு முன்பே படித்திருக்கின்றேன். தற்போது விரும்பிப்படிப்பது குறும்பனை பெர்லினின் சிறுகதைகளை.

உங்களை பற்றி

நான் படித்தது கணிதத்தில் முதுகலை. பள்ளிப்படிப்பை புனித அலோசியஸ் உயர்நிலைப்பள்ளி, மார்த்தாண்டன்துறையிலும், இளங்கலையை புனித யூதாக்கல்லூரி, தூத்தூரிலும், முதுகலையை புனித சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டையிலும் பயின்றேன். என்னுடைய முதுகலை கணினி ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி மென்பொருள் துறையில் நுழைந்தேன். கடந்த இருபது வருடங்களாக மென்பொருள்துறையில் பணிபுரிகின்றேன். கடந்த பத்து வருடங்களாக எனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்துவருகின்றேன். எனக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள்.

நான் எப்போதும் என்னை மீனவனாகவே உணர்கின்றேன். இப்போது எழுதுவதால் சிந்திப்பதும் மீனவர்களின் வாழ்க்கையை மட்டுமே. எனவே நான் அமெரிக்காவில் இருந்தாலும் என் மனம் முழுக்க கடலும் மீனும் மீனவனும்தான் இருக்கின்றார்கள். வெளிநாட்டில் இருப்பது எழுதுவதற்கு இன்னும் கூடுதல் வசதி. மீனவர்களின் வாழ்கையை மிகவும் துல்லியமாக காணமுடிகின்றது.

எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?

எழுதுவதற்கான ஆவல் எப்போதுமுண்டு. நேரமும் மன எழுச்சியும் ஒருமித்து ஒருபோதும் அமைந்ததில்லை. 2009-ம் வருடம் பனிக்காலத்தில் நான் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணாத்தில் புதிய வேலைக்காக சென்றிருந்தேன். அப்போது விகடனில் எழுத்தாளர் ஜெயமோகனின் பிரச்சனைக்குரிய சர்ச்சை வந்தது. நான் எம்ஜியார் ரசிகன். எனவே ஜெயமோகனின் இணையதளத்தை தேடிச்சென்றது வியப்பில்லை. அப்போது அழிமுகம் என்னும் கட்டுரை அவரது தளத்தில் வந்தது. அதுதான் நான் முதலாவதாகப்படித்த அவரது கட்டுரை. அந்த கட்டுரைக்கும் என்னுடைய சிறுவயது வாழ்கைக்கும் சில ஒப்புமைகள் இருந்தன. அதை வைத்து நான் அவருக்கு முதலாவது கடிதமெழுதினேன். அதைத்தொடர்ந்து ஜெயமோகன் என்னை எழுத ஊக்கப்படுத்தினார். அப்போது என்னுடைய குடும்பம் இந்தியாவில் இருந்தது. எனவே எழுதவும் படிக்கவும் நேரம் அதிகமாக கிடைத்தது. அதன் பிறகு சொல்புதிது குழுமத்தில் இணைத்து விவாதத்தில் கலந்துகொண்டு, சண்டையிட்டு, சிறுகதைகள் எழுதி, இப்போது துறைவனில் வந்து நிற்கின்றேன்.

DSC_0555

இரண்டு மூன்று சிறுகதைகள் எழுதி இருப்பீர்கள். நாவலை உங்களுடைய புனைவு களமாக  தேர்வு செய்தது ஏன்?

நீங்கள் சொல்வது சரிதான். இரண்டு மூன்று சிறுகதைகள்தான் முதலில் எழுதினேன். ஆனால் அவை அனைத்திற்கும் ஒரு தொடர்பிருப்பதை கண்டுகொண்டேன். அனைத்தும் ஒரே காலகட்டத்தில் ஒரே வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருந்தது. அனைத்திலும் ஏராளம் கடல்குறித்தான பல தகவல்கள் சிதறிக்கிடந்தன. இந்த கதைகள் பிணைந்து நாவலாக உருக்கொண்டன.. எனக்கு கடற்கரையில் கிடைத்த அனுபவங்கள் ஏராளம் இருக்கின்றது. அதைச்சொல்ல சிறுகதையை விட நாவல்தான் வசதியாக இருக்கும். ஒரு முழுமையான வாழ்க்கையை சொல்லவே விரும்புகின்றேன்.

துறைவன் நாவலின் காலத்தை பற்றி?

எழுபதின் பின்பகுதியிலிருந்து தற்போது வரை. இடையில் 1880-ற்கும், பத்தாம் நூற்றாண்டிற்கும், பதினாறாம் நூற்றாண்டிற்கும் கதை பின்னோக்கிச்செல்லும்.

நாவல் எழுதுவது எத்தகைய சவாலை, அனுபவத்தை  அளித்தது?

நான் ஒரு தேர்ந்த எழுத்தாளனில்லை. ஒரு நாவலை எப்படி எங்கே முடிப்பதென்று முதலில் தெரியவில்லை. அதுபோல் நாவலுக்கு ஒரு முழுமையான வாழ்க்கையையும் ஒரு வடிவத்தையும் கொடுக்கவேண்டும். எழுத எழுத சிறிது கைகூடியது. நான் எழுதும்போது “கதையை சொல்லாதே, மாறாக அதைக்காட்டு” என்னும் ஜெயமோகன் சொல்லும் வாக்கியம் எப்போதும் ஞாபகத்திலிருக்கும். எனக்கு நாவல் எழுதுவது கடந்த காலத்தை முழுமையாக திரும்பிப்பார்ப்பதுதான்.

இந்த கதையை ஏன் எழுத வேண்டும் என எண்ணினீர்கள்? ஏதேனும் அகத்தூண்டுதல் உண்டா?

இந்தக்கதைக்கென்று தனிப்பட்ட அகத்தூண்டல் என எதுவுமில்லை. மீனவர்களின் எழுதவேண்டும், அவ்வளவுதான். தோப்பில் மீரான், ஜோ டி’குரூஸ் ஆகியோரை படித்தபிறகுதான் நானும் மீனவர்களின் வாழ்க்கையை எழுதவேண்டுமென்ற ஆர்வம் வந்தது. இல்லையென்றாலும் எழுதியிருப்பேன். ஆனால் துறைவன் என்னும் நெய்தல் படைப்பு கண்டிப்பாக கிடைத்திருக்காது. நெய்தல் வாழ்வை எழுத வேண்டும்  என்பதற்கு கண்டிப்பாக வேறு சில காரணங்களும் உண்டு.

1997-ல் நான் சென்னையில் ஒரு சிறிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போது காதலுக்கு மரியாதை திரைப்படம் வந்த சமயம். திரைப்படம் பார்த்துவிட்டு அலுவலகத்திலிருந்த ஒருவர் கேட்டார் “மணிவண்ணன் போல நீங்க எல்லாரும் எப்பவும் குப்பத்தில குடிச்சிட்டுத்தான் இருப்பீங்களா?”

கல்லூரியில் படிக்கும்போது ஒரு கடற்கரை நாவல் எனக்கு துணைப்பாடம். இன்னொரு சமுதாய பிரச்சனைக்காக எங்கள் கிராமத்திலிருந்து நான்கு அடியாட்களை கொண்டுசெல்வார்கள். சினிமாக்களில் காட்டப்படும் மீனவ பெண்களின் முகங்கள் எண்ணை வடிய, பவுடர் போடுவதற்குக்கூட  தகுதியில்லாதவர்களாக காட்டப்படுவதை பலமுறை கண்டிருக்கின்றேன்.

எனக்கு வரலாற்றின் மீது சிறிது மோகமுண்டு. வரலாற்றில் மீனவர்களை மிகவும் தரக்குறைவாக எழுதியிருப்பதையும், வரலாறுகள் திரிக்கப்பட்டிருப்பதையும் படித்திருக்கின்றேன். காந்தளூர் சாலை குறித்த ஒரு நாவல் படித்தேன். அதில் சோழர்கள் ஒரு தோணியில் பாண்டிய நாட்டிலிருந்து விஜிஞ்சம் வருகின்றார்கள். அவர்கள் கரையில் வந்து பக்கத்து ஊர்களில் தென்னைதோப்புகளில் ஒளிந்துகொள்கின்றார்கள். காலையில் விழிஞ்சம் கோட்டையை சுலபமாக தகர்த்தெறிகின்றார்கள். மீனவர்கள் என்னும் சில ஜந்துக்கள் இருப்பதைக்கூட நாவலாசிரியர் மறந்துவிடுகின்றார்.

மேலே சொல்லப்பட்டவைகளின் பிரச்சனை என்னவென்றால் மீனவர்களின் வாழ்வியலும் வரலாறும் தமிழ் இலக்கிய உலகிற்கு இன்னும் அன்னியமாகவே இருக்கின்றது. மீனவர்களின் வாழ்வியலை ஜோ டி’குரூஸ் போல் ஒரு மீனவன் எழுதுவதுதான் சிறப்பாக இருக்கும். தமிழ் இலக்கியத்திற்கு என்னுடைய பங்களிப்பு துறைவன். இதில் இந்தியாவின் பெரிய இனங்ககளில் ஒன்றான முக்குவர்கள் என்னும் கேரளக்கடற்கரை மீனவர்களின் வரலாறையும் வாழ்வியலையும் நேர்மையுடன் ஆராய்ச்சி நோக்கில் பதிவுசெய்திருக்கின்றேன். இதில் ஆய் அரசு, வாஸ்கோட காமாவின் காலகட்டம், கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரான மீனவர்களின் போராட்டம், அவர்களின் அரசியல், வாழ்வியல், மீன்பிடிக்கும் ஏராளமான யுத்திகள், கடலில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்று பலவற்றை துறைவனில் சொல்லியிருக்கின்றேன்.

தமிழக பிரசுர சாத்தியங்கள் எப்படி இருக்கிறது?

சொல்லும்படியாக இல்லை. எழுதுவது ஒரு சவால் என்றால் அதைவிட நூறுமடங்கு சவால் அதை புத்தகமாக பதிப்பிப்பது. அதுவும் முதல் புத்தகமென்றால் சொல்லவேண்டாம். அது ஒரு நிஜ பிரசவம்தான். இப்போது வெளியிட்டதும் ஒரு பதிப்பாளர்தானே என்று கேட்கலாம். உண்மைதான், அவர் ஒரு தேவதூதன்.

அடுத்தகட்ட திட்டம் என்ன?

இப்போது இன்னும் பெயரிடப்படாத ஒரு நாவலை எழுதிக்கொண்டிருக்கின்றேன். நான்கு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு எழுதுவது சிறிது சிரமமாக இருக்கின்றது. இருப்பினும், அடுத்த முறை நான் ஊருக்கு வரும்போது கண்டிப்பாக இன்னொரு நெய்தல் படைப்புடன் வருவேன்.

பத்திரம்பா

வேல்முருகன். தி

‘டூ நாட் என்டர்’ போட்ட போர்டு எங்களை வரவேற்றது நெருங்கி பார்த்த போது கன்னிவேடி மற்றும் எலும்பு கூடு படம் இரண்டிலும் மணல் படிந்து மங்கலாகத் தெரிந்தது.

சுற்றி கம்பி வேலி இட்டிருந்தது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதைச் சொல்லாமல் சொல்லியது. டெசர்டில் வண்டி தடமே இல்லாத தனித்த பகுதியாக தெரிந்தது. கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் இருக்கும்.

பாலைவனத்தில் வளரும் ஒட்டகம் மட்டுமே திங்கக் கூடிய முட்செடி காய்ந்தும் இளம் பழுப்பாகவும் குத்து குத்தாகவும் பரவி கீழிருந்த மணலை மூடி இருந்தது.

இருவரும் கம்பி வேலியை ஒட்டி பாதி தூரம் நடந்து வந்திருந்தோம். சாம்பல் பூத்த வானம். ஒரே வெய்யில். அலைஅலையாக இறங்கியது காற்று. அதன் மேல் மணலை அள்ளி வீசியது. அக்காற்றே சுழன்று சுழன்று மேலேற தூசும் சில பாலித்தீன் பேப்பர்களும் வட்டமிட்டன. பருந்தைப் போல இருந்தது கருத்த
பாலித்தீன் பை ஒன்று.

அதற்குள் உதடுகள் உலர்ந்து நா வறண்டு தாகமெடுத்தது. இரண்டு இடங்களில் சிவப்புக் கொடி கம்பியில் கட்டியிருந்து. சமீபத்தில் கட்டியிருக்க வேண்டும் புதிதாக இருந்தது.

’சூப்’ என்றார், அபுஅலி என்ற பாகத் அல் மியாஸ். எனது மேலதிகாரி. குவைத்தின் பூர்வகுடி. நல்ல ஆறே கால் அடி உயரத்தில் முடி எல்லாம் சுருளாக பிரம்மராட்சசன் போல் இருப்பார். குரலும் அதற்கேற்ற மாதிரியே இருக்கும். முதல் தடவை கேட்டால் பயத்திலே எல்லாம் நடப்பதற்கான சாத்தியம் உண்டு.

பார்த்த போது அந்த சிகப்பு கொடிகளுக்கு அருகில் மணல் பாருகளில் தங்கும் நரிகளின் குகை முகப்பு போல கருப்பாக ஒத்த அளவுள்ள பொந்து போன்ற தூவாரம் தெரிந்தது. அந்த இரண்டு துவாரமும் மிலிட்டரி டாங்கிகளை மண்ணில் மிக நேர்த்தியாக புதைத்து வைத்து இருக்கின்றனர். இரண்டு டாங்கையும் இணைக்கும் பங்கர் உள்ளது என்றார் அபுஅலி.

பிறகு அரபி கெட்ட வார்த்தையில் சதாமை திட்டினார்.

நான் உணர்ச்சியை மறைக்க பல்லை கடித்து திரும்பினேன்.

சதாம் தற்போது மாட்டிக் கொண்டான். குவைத்தை ஆக்ரமித்த போது அவனால் ஆன இழப்பு கொஞ்ச நஞ்சமல்ல. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மக்கள் எல்லாம் நடோடிகளாய் அலைய வைத்தான். 800 ஆயில் கிணறுகள், 4 GCகள் எரிக்கப்பட்டன பொருளாதாரம் அதள பாதளத்திற்குச் சென்று விட்டது. எல்லாம் சரியாக்க 5 பில்லியன் தினார் ஆனது.

தொலைபேசி ஒலிக்க தொடங்கியதும் எடுத்து பேசி விட்டு, ’இப்ப பாரு கடவுள் தண்டித்து விட்டார். அதா அல்லா கரீம்.’ என்றார்.

இந்த வரைபடத்தில் உள்ள மாதிரி நீ எனக்கு இந்த இடத்திற்கு வருவதற்கு பாலைவனத்தில் ரோடும், சுற்றிலும் அகழ்ந்து டாங்கிகளை வெளியில் எடுப்பதற்கும் உதவ வேண்டும் என்ற போது அதிர்ச்சியில் அதில் உள்ள ஆபத்தை எண்ணி மனம் உறைந்து எனக்கு பேச்சே வரவில்லை.

மொத்த இடமும் சர்வே செய்து எத்தனை நாள் ஆகும் என்று ரிப்போர்ட் நாளைக்கு வேண்டும் என்று சொல்லி அவர் வண்டியில் ஏறிச் சென்று விட்டார்.

எனது GMCல் ஏறி அமர்ந்து தண்ணீரை எடுத்தேன். வண்டி ஆடிக் கொண்டு இருந்தது. மனம் ஆடி பயப்படுகிறாயா என்று கேட்பது போல் அனிச்சையாய் இல்லை இல்லை என்று தண்ணீரை குடித்தேன்.

திரும்ப கீழே இறங்கி நின்று பார்த்த போது பைப் லைன் எல்லாம் எறிந்து முங்கில் போல் வளைந்து உருக்குலைந்து கிடந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆயில் கிணறுகள் எரிந்து கிடந்தன. மண் எல்லாம் குருடாயில் படிந்து காய்ந்து ஒரே கறுப்பாக காய்ந்த சாக்கடை போல் தெரிந்தது.

தூரத்தில் தெரிந்த GC 14 முற்றிலும் அழிக்கப்பட்டிருந்தது. திரும்பிய எனக்கு டாங்கி இருந்த இடம் அமானுஷ்யமாக தெரிய அப்படியே இரண்டு
துவாரமும் நினைப்பு வந்து அச்சமூட்டயது. வந்து வண்டியை நகற்றினேன். இலக்கு இல்லாமல் வண்டி முன்னொக்கி ஒடியது.

ஆழ்மன சிந்தனை அந்த இடங்களில் எத்தனை பேர் இறந்திருப்பார்கள் என்று போய்க் கொண்டிருந்தது. கம்பேனிக்கு தெரியப்படுத்தனும் என்று யோசிக்க யோசிக்க சிந்தனையில் குமார் வந்தார்.

குமாரைப் பார்க்க மேனேஜர் மாத்யுடமிருந்து போன் வந்தது. அடான் ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லி சென்ற போது வாயிலில் வந்து நின்று அழைத்து சென்றார். நான் குமாரை பார்த்து பதறிய போது எல்லாம் முடிந்து இருந்தது. புதுத் துணி மாத்தியிருந்தனர் பார்த்தவுடன் ஐிப்பை இழுத்து மூடி உள்ளே கொண்டு சென்றனர்.

என் கையைப் பற்றி ’இனி கம்பெனி பார்த்துக் கொள்ளும் நீ சென்று கிளையன்டுக்கும் நம்ம ஆட்களுக்கு தெரியாமல் வேலையைப் பார்த்துக் கொள்’ என்றார். நான் திகைத்து ஒன்றும் புரியாமல் திரும்பினேன். கூடவே வந்து குமாரின் டைம்ஷிட்டை வாங்கி சென்றார்.

சிந்தனை முழுவது‌ம் குமாரைச் சுற்றியே வட்டமிட்டது. குமார் குவைத்தில் எங்க கம்பேனிக்கு வந்தது டிரைவராக. வந்த புதிதில் எங்களுக்கு வண்டி பழகவும் வேலை சம்பளம் இல்லாத அந்த மூன்று மாதமும் சமைப்பது நேரப்போக்குக்கு பழைய கதையை சொல்லுவது என்று இருப்பார்

அவர் இருக்கும் இடம் கலகலப்பா இருக்கும். வேலை ஆரம்பித்து ஒரு வருடம் இருக்கும், ஒரு நாள் காலை அவர் டைம் ஷிட்டை கேட்டுப் பெற்று பார்த்து அதில் கம்மியாக இருப்பதாக கை நோட்டை காட்டினார். டைரியில் அந்த குறிப்பிட்ட தேதியை காட்டி சரியாக பாருங்கள் என்றேன். நம்ம ஆட்கள் எப்போதும் மற்றவர்களுக்கு தான் செய்வார்கள் என்றார்.

எனக்கு திடீர் கோவம் தலைக்கேறி விட்டது. “உங்களுக்கு குறைத்து போட்டு விட்டாதாக நினைத்தால் நான் என்ன செய்ய முடியும். எல்லோரும் ஒன்று தான்” என்றேன் சிறிது கடுமையாக.

முகம் வாடிப் போனார். மனம் கேட்காமல் அன்று மாலையே ஒவர் டைம் இரவு 8 மணி வரை அளித்தேன். அன்று அதிகாலை 3 மணிக்கு எனது செல்பேசி நிற்க்காமல் ஒலித்தது. எடுத்தப்போது ’குமார் கட்டிலில் இருந்து விழுந்து விட்டார் பேச்சு மூச்சு வரவில்லை உடன் வர வேண்டும்’ என்றார் வார்டனும் சூப்பர்வைசர் ராஐூம்.

ஒடிப் போய் பார்த்த போது சுத்தமாக ஒன்றும்மில்லை. கையைத் தொட்டு பார்த்தேன். உடம்புச் சூடு இருந்தது. மூச்சு இல்லை. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வார்டன் ஏற்பாடு செய்து உடன் அனுப்பி விட்டார்.

லேபர் கேம்ப் முழுவதும் பரபரப்பாகி எல்லாம் கூடி விட்டனர், வார்டனும் நானும் ரூம் சென்று பார்த்த போது அவர் படுக்கை கலைந்து இருந்தது. விசாரித்த போது’ கடுமையாக தும்மிக்கொண்டு குப்புற விழுந்து விட்டார். நாங்கள் பார்த்த போது கால் மட்டும் அசைந்தது பிறகு அதுவும் இல்லை’ என்றனர்.

கம்பெனி பார்த்து கொள்ளும் என்று சொல்லி விட்டு இப்ப இன்சூரன்ஸ் கிடைக்க வில்லை முயற்சிக்கிறோம் என்கிறார்கள். வீட்டினர் தொடர்ந்து போன் செய்து விட்டு கடிதம் எழுதுகிறார்கள்.

யாருக்காவது பாதிப்பு என்றால் கம்பேனி செய்யுமா?

சிந்தனை மாறி சுதாரித்த போது வண்டி முற்றிலும் எரிந்த GC 14 முன் பக்கம் வந்திருந்தது. நிறுத்தி பார்த்தேன்.

சூளையில் அதிக சூட்டில் வெந்த பானைகள் போல் குருடாயில் டேங்க் எல்லாம் வளைந்து கிடந்தன. பிளாட்பாரம் எக்யுப்மென்ட்கள் எல்லாம் சூட்டில் வெடித்துக் கிடந்தன, தீப் பற்றிக் கருகிய உடல்கள் போல. பார்க்க முடியவில்லை. மனம் சிந்தனையில் ஆழ்ந்து குழம்பி, எரியும் போது ஆட்கள் இருந்து இருப்போர்களோ என்று நினைத்து வண்டியை திருப்பி விரட்டினேன்.

எதிரில் வண்டி லைட்டைப் போட்டு நிறுத்தும்படி சைகையை பார்த்து வேகத்தை குறைத்து ஒரம் கட்டி பார்த்த போது, உதுமான் அலி எங்க சேப்டி ஆபிசர், ஊர்க்காரர் அனுபவம் முழுவதும் நெற்றியில் கோடாய் மிக கோவத்துடன் வரவேற்றார்.

’வணக்கம் சார்’

’சலாம் இருக்கட்டும் என்ன நினைச்சுகிட்டு இருக்க’ என்று எகிறினார்

’இல்ல சார் அபுஅலி கருப்பன் புதிய தலைவலிய குடுத்துட்டான் நான் உங்கள பார்க்க தான் வந்துட்டு இருந்தேன்’

’இல்ல வாப்பா. இம்மாம் வேகம்லாம் வேண்டாம் குடும்பம் இருக்கு’

’சரி சார்’

’என்ன தலைவலி வாப்பா அது’ என்றார் மூக்கு கண்ணாடியை சரியாக்கிக் கொண்டே.

’சார் வண்டிய விட்டு பூட்டி வாங்க பத்து நிமிஷம் பார்த்துடலாம்’

’ஏன் வாப்பா எப்ப ஊருக்கு’

’அத ஏன் சார் கேட்கறீங்க, மாத்யு நான் ஊருக்கு போனா பார்க்க வேற ஆளு வேணும்ன்னு வெயிட் பண்ண சொல்றாரு’

’உங்களுக்கு தான் தெரியும ஈராக்க நேட்டோ அடிக்க ஆயத்தமான போது இரா பகல் பாராமல் பாக்காம எல்லா GC க்கும் பயர் இன்ஜினுக்கு சுற்றி வரவேண்டி ரோடும் ஆபரேஷன் டீமுக்கு வேண்டி பங்கர் ரெடி பண்ணி தந்தோம்’

’நீங்க ஊருக்கு போயிருந்திங்க’

’வாப்பா ஒரு எமர்ஜென்சி அதான்’

’நாங்க இங்க சண்டை நடக்கும் போதும் எமர்ஜென்சி பாஸ்ல வேலை பார்த்தோம்’

’தெரியும் வாப்பா எப்படியா சாமளிச்சிங்க’

’சண்டை தொடங்கிய முதல் நாள் இதே அபுஅலி கருப்பன் அவன் வண்டில என்ன ஏத்திகிட்டு எல்லாம் GCயும் ஈஸ்ட் குவைத் முழுவதும் பார்க்கனும்னு சுத்துறான். புர்கன் ஏரியா வந்ததும் வீட்டிலேருந்து போனு. மனைவி சிதம்பரம் போயி அங்கிருந்து பண்றாங்க. டிவில பார்த்தேன். எல்லாம் ஊருக்கு வராங்க நீங்களும் ஊருக்கு வாங்க-கிறாங்க நான் பயப்படாத பயப்படாத நல்லா இருக்கேன் என்று சொல்றேன். இங்கே ஒரே சைரன் சத்தம் போன் கட்டாயிடுச்சி’

அப்ப GC 18, BS 140க்கு நேரா வந்திருந்தோம் அது இரண்டுலேருந்து பயங்கர சத்தத்துடன் ஊம்னு ஆரம்பிச்சு சைரன் சத்தம் தொடர்ந்து கேட்குது. கருப்பன் வண்டிய திருப்பி டெசர்ட்ல இறக்கி ஒட்டறான் இரண்டு சைடும் கிளாஸை இறக்கி, எல்லா சூப் சூப்னு மானத்தை காட்டரான்.

அதிர்ச்சியில மேல பார்த்துகிட்டு வரேன். மனதில் பல சிந்தனை ஒடுகிறது ஒடுது பையனை பார்க்க முடியுமா வந்து ஒன்றறை வருடம் ஆச்சு. வண்டி குழியில விழுந்து ஒரு பக்கம் சாய்வாக சென்று நிமிர்கிறது.

சதாமை திட்டரான் கருப்பன். ரெண்டு மூணு நிமிஷத்துல அப்படியே சைரன் சத்தம் சுத்தமாக நின்னு போய் ஒரே நிசப்தம். அதிர்ச்சில ஒன்றும் புரியல. குனிஞ்சு ரேடியாவ எடுத்து ரிசிவர்ல ’பகாத் அல் மியாஸ் ஒவர்’ ’பாகத் அல் மியாஸ் ஒவர்’ என்றதும் எதிர் முனையில் இருந்து ’அபுஅலி மூமூஸ்கில் ஒவர் , மூமூஸ்கில் ஒவர்’

அபுஅலி இந்த கலாம் டெலிபோன் என்றனர் வல்லா அதா அல்லா கரீம்’

’என் செல்போன் திரும்ப அடிக்குது.மனைவி என்னங்க கட்டாயிடுச்சி பிரச்சினை
அதிகம்னு சொல்ராங்க வர பாருங்க’

’வச்சிடட்டுமா’

’பையன்ட்ட குடு’

’த பையன்ட்ட பேசுங்க,பேசு அப்பா அப்பா’ என்றாள்

ஒன்றரை வயதில் விட்டு வந்தது ’அப்பா பத்திரம்! பத்திரம்பா!’

கண்ணில் நீர் கசிகிறது எனக்கு

அதா பச்சா என்கிறார் அபுஅலி ஆமாம் என்று தலையாட்டி கொண்டு பயப்படாதே வந்துடறேன் என்று சொல்லி வைத்தேன்.

என்ன சொல்றான்னு கேட்கிறான் கருப்பன்.

நான் கண் நிறைந்து பத்திரம்பானு எல்லாருக்குமான வார்த்தைய சொல்ரான் என்று சொன்ன உடன் ‘வல்லா அதா அல்லா கரீம்’ என்றார் அபுஅலி.

மறுநாள் அபுஅலி, நேத்து நாம வந்தப்ப வந்த மிஷேல் தான் பேட்ரியாட் அடிச்சப்ப மீனா அப்துல்லாவுல்லா எரிந்து விழுந்துச்சுன்னு சொல்றான். அதிர்ச்சியில் எனக்கு ஒன்றும் சொல்ல முடியல.

’வப்பா முதல் நாள் மாத்திரம் இரண்டு விழுந்துச்சுனு சொன்னாங்களே’

’பர்ஸ்ட் வந்தது மீன அப்துல்லாவிலும் இரண்டாவது மிஷேல் ஐகராவில உழுந்துச்சு சார் பேட்ரியாட்டோட கொஞ்சம் டைமிங் மிஸ்ஸாயிருக்கு. பிறகு எல்லாத்தையும் கிளம்பும் போதே அடிச்சுட்டானுங்க. ’அதான் TV பார்த்து இருப்பிங்களே’

’ஒரே ரூமர் அதிகம்பா’

’ஆமாம் சார் நடந்த 25 நாளும் ஒரே கதை தான்’

’ரோடு வெறிச்சொடிக் கிடக்கு. குவைத் அரசு நாட்ட விட்டு யாரும் போக அவங்க மக்களுக்கு தடை போட்டுடூச்சு. முத வாரம் மட்டும் பயங்கரமா குவைத்தாலதான் சன்டையே அதனால குவைத்த சதாம் நாசம் பண்ணுவான்ங்கற பயம் எல்லார்டியும் இருந்தது. அப்புறம் BBC பார்த்து போர் நிலவரம் தெரிஞ்சது அதுக்கு பிறகு தான் ஐனநடமாட்டம் சகஐ நிலைமைக்கு திரும்புச்சு.

’வாப்பா ஈராக் ஆள் எடுத்தாங்களே அதுல போயிருக்குலாம்’

’வாய்ப்பு வந்துச்சி அங்கு ரோடும் பாலமும்கட்டி கொடுத்தா மொத்தத்தையும் அள்ளி
போவதற்க்கா எனக்கு விருப்பமில்லை சார்’

’நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் உலகிலேயே விவசாயம் தோன்றியது ஈராக் தான் அந்த மக்கள் ரோடில் கையேந்த வச்சிட்டானுவ’

’யூஃப்ரட்டீஸ், டைக்ரிஸ் என்ற இரண்டு பெரு நதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இன்றை ஈராக் தேசமே அன்றைய மெஸப்பட்டேமியா சார்’

’மிக முக்கிய உணவுப் பயிர்களான கோதுமை, பார்லி, ரை, யூஃப்ரிட்டீஸ் – டைக்ரீஸ் நதிச்சமவெளிகளில் தோன்றியதாகச் சொல்லி உலக வரலாற்று ஆய்வாளர்கள்
நடக்கும் அநியாயத்தை பார்த்து எழுதுறாங்க. மேலும் இந்த குவைத் வழியாக தான் கொண்டு போறான். ஒரு டிராக் ரோடு முழுவதும் அவனுங்க வண்டி போக ஒதுக்கி விட்டாங்க, நடந்த அநியாயத்தை பேப்பர்ல புக்ல பார்த்துட்டு எப்படிச் செய்ய முடியும்’

’சதாம் என்னிடம் ஒன்றுமில்லை சொன்ன பிறகு அடிச்சு பிடுங்கிட்டானுவலே நியாமா சார்’

’பெரிய அநியாயம்பா எல்லாரையும் ரோட்டில் நின்று கையேந்த வச்சிட்டானுவ.
வுடு அத. மனசு கஷ்டமா இருக்கு’

’ஏன் வாப்பா, இன்னும் எவ்வளவு தூரம் போவனும்’

’வந்துட்டுது சார். இறங்கி நடந்துதான் பாக்கனும்’

’கேஸ் நாத்தம் அடிக்குது வாப்பா’

’ஆமாம் சார் சுற்றி இருக்குற எல்லா எண்ணெய் கிணறுகளையும் அழிச்சு இருக்கானுவ, அதில இருந்து வரும் சார்’

’வாப்பா, கேஸ் மானிட்டர் வண்டியில இருந்தது எடுத்து வந்து இருக்கலாம்.
பர்மிட் இல்லாம ஒரு வேலையும் செய்ய கூடாது புரியுதா’

’சார் நீங்க முதல்ல பாருங்க’

அச்சமயம் பார்க்காத மறுபுறத்திலிருந்து வந்தோம்.

’சார் ரெண்டு கொடி தெரியுதா அதுக்கு பக்கத்தில் பாருங்க தூவாரம் தெரியுதா’

’ஆமாம் வாப்பா அதுலேருந்து நாய் வருது பாரு’

’சார் நாய் இல்லை நரி. ஆமாம் சார். முன்னாடி பார்த்தப்ப மனசார நினைச்சன் நரி குகை மாதிரி இருக்குன்னு.

’இந்த மாதிரி குகை முன்னாலே பார்த்திருக்கியா’

’ஆமாம் சார். வெள்ளாத்து கரையோரம் கீரிப்பள்ளம் வயலுக்கு போவோம் அப்ப நரி நத்தை நண்டுவல மேயும் நம்மள பாத்துட்டுதுனா இந்த மாதிரி கரை பாருல டப்புன்னு ஒடி புகுந்துடும். நாம பார்க்காத போது அப்படியே நானல் வழியாக வெளியே வரும். ஏன் வாப்பா எனக்கு ஒன்னும் தெரியலையசார் அந்த இரண்டு துவாரமும் மிலிட்டரி டாங்கிகள், இரண்டையும் இணைத்து பங்கர் இருக்காம்.

’வாப்பா நரிவ வருது நிச்சயம் ஆளுவ செத்து இருப்பாங்க’

’என்ன செய்யனுமாம் கருப்பனுக்கு’

’மெயின் ரோடில் இருந்து ரோடு போட்டு வந்து இதுல கனைக்ட் பண்ணி டாங்கிகளை சுற்றி நோன்டி தர சொல்ரான் சார்’

’இது நம்ம வேலையே இல்ல வாப்பா நாம செய்ய வேண்டாம். நான் ஐார்ஐிகிட்ட பேசறேன். வேணுமுன்னா ஒனர் அல் மூசாரிய விட்டு பேச சொல்லும்’

எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது எப்படியாவது விட்டு போனா போதும் என்றது
மனம் உள்ளுக்குள்.

வெளியில் இருந்து பார்பவர்க்குத் தெரியாத வகையிலும் அங்கு இருந்த பார்த்த போது
சுற்றி இருந்த அனைத்து GC களும் 1,2,9,11,18 & 22 தெரியும் வண்ணம் இடம் தேர்வு செய்து அமைக்க பட்டிருந்தது.

’வாப்பா சதாம் குவைத்தை அவன் வச்சிக்கனுமுனுதான் மத்த GCக்கள விட்டு வச்சான்’

’ஆமாம் சார்’

’பின்ன இதெல்லாம் யார் அழிச்சது சார்’

’என்னப்பா தெரியாத மாதிரி கேட்கற எல்லாம் நேட்டோ தான்’

’வண்டிக்கு வந்ததும் நீ மேத்யுகிட்டச் சொல்லிடு. நான் போயி பேசி தகவல் சொல்றேன்’

’சரி சார்’

அப்போது மார்ச் மாதம். மாதத் தொடக்கத்தில் வரும் இளவெயிலும் குளிருமான காலை நேரத்தில் அபுஅலியுடன் சென்று கொண்டு இருந்தேன். புது மிட்சுபிஷி பஐிரோ வண்டி மெல்ல அகமதி மெயின் ஆபிசில் இருந்து வெளியேறி புர்கன் செல்லும் மெயின் ரோடில் வேகம் பிடித்தது.

வெளியில் பார்த்த போது வேலைக்கு செல்ல சாரியாக வாகனங்கள் சென்ற வண்ணம் இருந்தன. மிக்காலும் வண்டியில் ஒருவரே வீற்றிருந்தனர். வண்டி செக்யூரிட்டி கேட் நெருங்கிய போது, அபுஅலியின் நண்பர் நின்று இருந்தார். புர்கன் ஏரியாவின் செக்யூரிட்டி கெட் அவர்.

நிறுத்தி சலாம் சொன்னோம். இருவரும் அவர்கள் பழக்கப்படி மூக்கை உரசிக்கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். பேச்சு வேலையைப் பற்றி திரும்பியது. ’வல்லா முஸ்க்கிலா’ என்று அடிக்கொருதரம் சொல்லி கவலை கொண்டு
சதாம் குவைத்தை ஆக்ரமித்த போது விட்டு சென்ற ராணுவ டாங்கிகளை எடுத்து அந்த இடங்களில் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க வேண்டும்
என்று ஆர்டர் வந்திருந்தை சொல்லி வருத்தப்பட்டு பேச்சு வளர்ந்து கொண்டு இருந்தது.

கேட்டில் வாகனங்கள் எல்லாம் நிறுத்தி தொழிலார்களை இறக்கி விட்டன. அவர்கள் வரிசையாக நடைபாதையில் வந்து செக்யூரிட்டி செக்கப் முடித்து அவரவர் பஸ்களில் ஏறுவதற்கு வந்து கொண்டு இருந்தனர்.

வெயிலில் சாயம் போன வெளுத்த கவரால்கள். அதன் மேல் குளிருக்கு ஸ்வெட்டர்.
தலையில் மங்கி குல்லாய் கவலையும் ஏக்கமும் தூக்க பித்தும் நிரந்தரமாக தங்கி விட்ட முகங்கள்.

சேப்டி ஷூ அணிந்து நடந்து நடந்து வேலை செய்து வலியாகவே ஆன கால்களை கொண்டு நடந்து வரும் கலவையான தொழிலார்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை நாட்டினர் அதிகம்.

எனது கம்பேனி பஸ் வந்து நின்றது. இன்று யார் யாருக்கு ஊரிலிருந்து போன் வரும் என்று தெரியவில்லை. சாப்பாட்டு டைமில் செல்லவில்லை என்றால் இந்த லேபர்கள் தவித்து போவார்களே என்று எண்ணிய போது, ’எல்லா எல்லா’ என்று சத்தம் கேட்டு திரும்பினேன்.அபுஅலி வண்டியில் இருந்து கூப்பிட்டார். ஏறியதும் வண்டி புர்கன் மெயின் ஆபிஸ் சாலையில் ஒடியது.

வழியில் எனது வண்டியிடம் விட்டு பின் தொடர சொல்லி சென்றார்.

அரபிகளுக்கு பொதுவாகவே தான் சொல்லுவதுதான் சரி என்ற அகங்காரம் உண்டு. பிழைக்க வந்தவர்களிடம் மிக்க் கேவலமாக நடந்து கொள்வர். முடியாதவனை மாறி மாறி அடித்து துவைப்பது போல. அபுஅலிக்கு கம்யூட்டர் என்றால் பெரும் பயம்.
என்னிடம் சிறிது நட்பு காட்டுவான். அதுவும் வேலை ஆகும் வரைதான். விருப்பத்தை கேட்டாலின்றி வாயை திறப்பதில்லை. நரி இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காகாமல் இருந்தால் சரி.

ரோட்டின் இருபக்கத்திலும் வேலிக் கருவை மரங்களும், சில பெயர் தெரியா மரங்களும் வைக்கப்பட்டிருந்தன. மிகப் பிரயத்தனப்பட்டே வளர்கின்றன.

வெளிநாடு வந்து எவ்வளவோ பிரயத்தனப்பட்டு பார்க்கிறோம். இந்த பெயர் தெரியா மரங்களைப் போலே. இந்த மரஞ் செடிகளுக்காகவது நிச்சயமாக தண்ணீர் டேங்கர் மூலாமாகவோ, பைப் மூலமாகவோ நீர் கொடுக்கின்றனர்.

ஆனால் நமது தேவை எப்போது நிறைவுறும்? எப்படியாவது இருக்கும் கடன்களில் இருந்து மீண்டாலே போதும் நமக்கு எப்போது இங்கிருந்து விடுதலை?

மனம் கனத்து சிந்தனையில் ஆழ்ந்து, குழந்தையும் மனைவியும் நிழலாடினர். பையனை பார்க்க மனம் ஏங்கி ஊருக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணிய போது வண்டி புர்கன் ஆபிஸ் வந்து விட்டது.

அபுஅலி வண்டியில் இருக்க சொல்லி விட்டு டீம் லிடரை பார்க்கச் சென்றார்.

இவர்களுக்கு எப்போதும் வேலை இருக்கதான் செய்யும். அபுஅலி நல்ல மனநிலையில் இருக்கும் போது லீவு சொல்லி விட வேண்டும் இல்லை என்றால் காரியம் கெட்டு விடும். என்ன மாதிரி வேலை இருக்குமோ என்று கவலை வாட்டியது.

அவர்கள் எல்லாம் சென்று விட்டார்களாம். ஸ்பாட்டுக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்று அவர் வண்டியில் என்னை ஏறச் சொல்லி, எடுத்து விரட்ட ஆரம்பித்தார்.

ஃபுல் ஆட்டோமோட்டிவ் வண்டி 140கீமி வேகத்தை எட்டியது. கிறுக்கன்! முழுவதும் கொண்டு சேர்ப்பானா என்று நினைத்து டோர் கை பிடியைப் பிடித்ததும, ’பயந்து போய் விட்டாய்’ என்று சிரித்து கொண்டே மேலும் விரட்ட ஆரம்பித்து விட்டான்.

சோதனையாய் இருந்தது எனக்கு. இப்போது இவனிடம் எதுவும் பேசாமல் இருப்பதே நல்லது என்று மவுனமாகி விட்டேன்.

வண்டி சிறிது தூரம் சென்றதும் ரிக் ரோடில் இறங்கி ஒட ஆரம்பித்து விட்டது. முதலில் GC 14 வந்ததும்,

’சூப் ஆத சதாம் கவ்வாத்’

கொளுத்தி விட்டான் எவ்வளவு இழப்பு. அவன் கோபமாக இருப்பதை பார்த்து நான் ரோடை பார்க்க ஆரம்பித்தேன்.

வண்டி வளைவில் திரும்பி GC 10 செல்லும் ரிங் ரோடில் திரும்பி வேகம் பிடித்து லோகேஷன் வந்தது.

அங்கு Koc மேலதிகாரி அனைவரும் முகாமிட்டு இருந்தனர். எனது கம்பேனி ஐிஎம் ஐார்ஐ், மாத்யு, சேப்டி உதுமான் அலி மற்றும் ஒனர் அல் முசாரி வந்திருந்தனர்.

மீட்டிங் நடந்தது அந்த இடம்தான். குவைத்தில் மிக செறிவான எண்ணெய்ப் படலம் உள்ள பகுதி. எவ்வளவு விரைவில் அந்த இடங்களை கொடுக்க முடியும் என்று கேட்டவுடன், சேப்டி உதுமான்அலி, ’நாங்க ரோடு போட்டு மட்டும் தரோம் மற்ற வேலைகளை நீங்கள் ராணுவத்தினரை கொண்டு செய்து கொள்ளுங்கள்’ என்றதும், டீம் லீடர், ’எல்லா பரா’ என்று கோவப்பட்டு விட்டு, ஒனர், அல்முசாரியை அழைத்து மொத்த வேலையும் ஒரு மாசத்துக்குள் முடித்து தரணும் இல்லை என்றால் புதிய வேலை தர முடியாதுன்னு சொல்லி விட்டார்.

ஒரு மாதத்தில் முடித்து தருகிறோம் என்று மூவரும் ஒத்து கொண்டு என்னை அழைத்து தேவையானதை சொல் கம்பெனி செய்யும் என்றனர்.

நான் பரிதாபமாக உதுமானை பார்த்து கொண்டே வாயை திறக்காமல் தலையை
ஆட்டினேன். ஐார்ஐ் உதுமான் சாரிடம் ’இந்த வேலை முடியறவரை சேப்டியா செக் பண்ணி வேலை பார்க்கனும். கம்பேனி பிரஸ்டிஐ்யாயி போச்சு. வேற மீட்டிங்
இருக்கு நான் கிளம்பறேன். மாத்யு இவிட எல்லாம் அரேன்ஐ் செய்யனும் கேட்டோ?’ என்றார்.

ஒகே சார் என்று மாத்யு சொல்லி விட்டு என்னிடம், ’இரண்டு பைலை தந்து இந்த சர்விஸ் ஆர்டர் எல்லாம் முடிச்சுக் கொடு. வேலையைத் தொடங்கு ஏதாவது பிரச்சினை என்றால் என்னை தொடர்பு கொள்’ என்றார்.

நான் சர்விஸ் ஆர்டரைப் பிரித்தேன்.

உதுமான் சார் என்னை நோக்கி வந்தார்.

’என்ன வாப்பா எப்ப ஆரம்பிக்கப் போற’

’ஆரம்பிக்கலாம். இந்த அநியாயத்தை கொஞ்சம் பாருங்க’

’சர்விஸ் ஆர்டர்ல பாருங்க சார். ஓர்கிங் அவர்ஸ் 8, ஒவர் டைம் 4 அவர்ஸ், koc கொடுக்கிறது சார்.’

’எங்க டைம் ஷிட்டை பாருங்க ஒர்கிங் அவர்ஸ் 10 ஒவர் டைம் 2 அவர்ஸ் கேட்டால் எல்லாம் பத்து மணி நேர வேலைக்கு கையெழுத்து இட்டுள்ளிர்கள்’ என்கிறார்கள்.

Koc புராஐக்ட் வேலை இல்லாத மற்ற கம்பேனி நேரடி வேலைக்கு மாத்திரம் முறையே 8 அவர்ஸ் மற்றும் 4 அவர்ஸ் தருகிறார்கள்.

ஒரே கம்பேனியில ரெண்டு விதமாக சம்பளம் கொடுத்து மலையாளிங்க கொள்ளையிடுரானுங்க. பிழைக்க வழி இல்லாமல் இங்கே வந்தா நிலமை எப்படி இருக்கு பாருங்க. அட்லீஸ்ட் இந்த லேபர்களுக்காகவது கொடுக்க சொல்லுங்க சார்.’

’வாப்பா நான் செய்ய முடியாது இது எல்லாம். கம்பேனி பாலிசி. நா வரேன். வேலை
ஆரம்பித்துவிட்டால் போன் செய்.’

நான் வெறுப்பில் பைலை தூக்கி சீட்டில் எறிந்து விட்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

நினைவில் வேலையின்றி நின்றது நிழலாடியது. ஒவ்வொரு முறையும் சென்னை சென்று நேர்முக தேர்வில் கலந்து கொள்வதும் கிடைக்காமல் திரும்பியதும் கடைசியாக வேறு வழியில்லை என்ற நிலையில் இந்த வேலைக்கு ஒத்து கொண்டு வந்ததும் இங்கு வந்த பிறகு இவர்களது பித்தலாட்டம் தெரிந்த போது ஒன்றும் செய்ய இயலாத நிலை.

அதிகாரிகளை அனுப்பி விட்டு அபுஅலி என்னிடம் வந்தார்.

நான் முகம் வாடி இருந்ததை பார்த்து விட்டு, ‘என்ன?’ என்று விட்டு, ‘நாளை வேலை தொடங்கணும்’ என்றார்.

சரி என்று தலையாட்டினேன்.

தொடர்ந்து வந்த நாட்களில் உதுமான் சேப்டி மற்றும் அபுஅலி அவர்களது அதிகாரத்தில் வேலை செய்வது போல ஒரு தோற்றத்தை மேலிடத்தில் காட்ட பிரயத்தனப்பட்டனர்.

நான் தெளிவாக நமது உழைப்பு பார்க்கப்படாதுஎன்று அறிந்தே இருந்தேன். அதனால் அனைத்து வேலைகளையும் ஒருங்கிணைத்து விட்டு இருவரது நாடகத்தை பார்த்துக் கொண்டு இருந்தேன். வேலை அதுவாகவே நடந்தது.

குறிப்பிட்ட படி செல்வதற்காக ரோடு போட்டாயிற்று. டாங்கிகளை சுற்றிலும் மண் அகற்ற எந்த லோடர் ஆப்ரெட்டரும் தயாராக இல்லை.

நான் மாத்யுவிடம் விஷயத்தை சொன்ன போது ’என்னால் ஒன்றும் செய்ய இயலாது. இது கம்பேனி வேலை நீதான் செய்து சமாளிக்கனும்’ என்றார்.

மேலதிகாரிகள் ஆளாளுக்கு கடுமையாக நடந்து கொண்டு வந்தனர். அன்று காலை அபுஅலி, ’எப்போது முடிப்பாய்’ என்றார்.

அப்போது எனது செல்பேசி ஓலித்தது.

மினு அது மாத்யு ‘ஸ்பீக் ஸ்பீக்’ என்றார்.

’சார்!’ என்றதற்கு ’சர்வீஸ் ஆர்டர் எல்லாம் கையெழுத்து ஆயிடுச்சா’

’இல்ல சார் இரண்டு நாளில் வாங்கி தருகிறேன்’ என்றதும் வைத்து விட்டார்.

அபுஅலி ’என்ன!’ என்றான். உனது கையோப்பம் வேண்டும் என்ற போது திரும்ப செல்பேசி ஒலித்தது ‘மினு மாத்யு’.

ஐிவ்

இந்த கவ்வாத், ஐ பக் யூ

’வீ ஆர் ன் மீட்டிங் டோன்ட் கால்’

மாத்யுவிடம் அவர் அது வரை கேட்காத கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு என்னிடம் ஒரு வாரத்தில் எனக்கு வேலை முடியணும். நான் கையெழுத்து போட மாட்டேன் என்று சர்விஸ் ஆர்டரை கீழே வீசி விட்டு சென் று விட்டான்.

நான் ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்தேன் முகத்தில் துப்பிய எச்சிலை துடைப்பது போல் அவமானமாக இருந்தது. அப்படியே போட்டு விட்டு வீடு சென்றால் எப்படி இருக்கும்?

அவமானம் நமக்கு புதிது அல்ல முதலில் பிறந்து வளர்ந்த வீடு வெளியில் தள்ளியது பிறகு விதி கையில் எடுத்து ஆடியது.

ஆடி மாதத்தில் யாரோ கொடுத்த அவரை, சுரை விதைகளை என்னை ஊன்ற சொல்லி பிள்ளையை வைத்து கொண்டு அதை தண்ணீர் ஊற்றி வளர்த்தவளை காய்த்ததையும் பறித்துக் கொண்டு வரும் போது வண்டியில ஏற்றிவந்தியா என்று நிந்தித்தையும் பொறுத்து சமாளித்தாளே, இங்கு வருவதற்கு முதல் நாளன்று கூரையின் பொத்தல் வழியாக நிலவு எங்கள் மேல் விழுகிறது அதில் சிறு துளி பையன் மேல் பொட்டு பொட்டாக விழுந்தது.

நான் இங்கே இருந்தால் வறுமை மேலும் நம்மை தின்று விடும் பையன் மேல் விழும் இந்த நிலவொலி நாளை மழை நீராக இருந்தால் நாம் தாங்க மாட்டோம்.

நீ பெரிய மனது பண்ணி நான் போக அனுமதிக்க வேண்டும். காலம் நமக்கு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. முடிந்தால் இவ்விடத்தில் வீடு கட்டிடலாம் என்றதற்கு ஓ! என்று அழ ஆரம்பித்து விட்டாள். பிறகு அமைதியாக சமாதானமாகி என்னை அனைத்து தேற்றி் சந்தோஷப்படுத்தி பிரிவை எண்ணிக் கலங்கி தூங்கிவிட்டாள். பாவமாக இருக்கிறது.

நான் தூங்க வில்லை. நாம் இருக்கும் போதே இவளை பேசி அவமான படுத்துகிறார்களே நாம் இல்லை என்றால் எவ்வளவு படுத்துவர். பையன் எப்படி ஏங்கி போவான் கண்ணீர் கொட்டி கொண்டு இருந்தது. இரண்டு சொட்டுசர்வீஸ் ஆர்டர் மேல் விழுந்துவிட்டது. துடைத்து மேலே வைத்தேன்.

அவள் அருகே இருந்தால் எப்படி இருக்கும்? பாலைவனம் எத்தனையோ அன்பு கொண்டவர்களின் கண்ணிரை குடித்து தான் தாகம் தீர்க்கிறது.

இந்த மாத்யு என்ன நினைப்பாரோ தெரியவில்லை. பழி நினைத்தால் ஊருக்கு போவது அவர் மனது வைத்தால்தான் நடக்கும்.

இன்று காலையிலே ஏன் இப்படி நடக்கிறது நல்லதுக்கா கெட்டதுக்கா கடவுளே!.

நான் நிலைகுலைந்து இருப்பதை பார்த்த லோடர் ஆப்ரேட்டர் நெருங்கி, ’கியாகோகையாஐி,அவன் பைத்தியக்காரன், காண்டு. நீ விடு என்ன செய்யனும் சொல்லு நான் செய்யறேன்’ என்றான்.

நான் அவனை உற்றுப் பார்த்தேன். ஒன்றும் சொல்ல வில்லை.

’நான் செய்யறேன் சொல்லு’ என்றதும்

’ஒரு வாரம் லொடிங் பாயிண்ட் போய் டோசர் ஒட்ட முடியுமா. நான் தாய்லாண்டு கம்பேனி ஆள வச்சு இந்தவேலைய முடிக்கிறேன் என்றதும்அவன் மகிழ்ந்து ஒத்துக் கொண்டான்.;

தாய்லான்டு ஆபரேட்டரை கொண்டு வந்து பிரச்சினையைச் சொன்னேன். நீ செய்தால் உனக்கு 4 அவர்ஸ் ஒவர்டைம் கிடைக்கும். இந்தி ஆப்ரேட்டர் செய்தால் 2 அவர்ஸ் தான் கிடைக்கும் இதை செய்து கொடுத்தால் உனக்கு மேற்க்கொண்டு ஒவர்டைம் தருகின்றேன் என்றேன்.

தாய்லாண்டு சுற்றி பார்த்து கொண்டு இருந்தபோது அபுஅலி லோகேஷனுக்கு டீம் லீடருடன் பார்வையிட வந்தார்.

டீம் லீடர், இப்ராகிம் ’தாள்’ என்று என்னை அழைத்தார். ’

’சார் ஆனா இந்தி’என்று சிரித்தேன்.

ஒரு வாரத்தில் முடித்துக் கொடு என்றார். எனக்கு இதனால் மிக பிரசர் இருக்கிறது
அதனால் தான் சர்ப்ரைஸ் விசிட் வந்தேன். ’இல்லை முடிச்சுடறேன்’ என்றதும் மகிழ்ந்து சென்றார்.

கருப்பன் என்னிடம் ’சாரி சாரி பேப்பரை எடுத்து வா’ கையெழுத்து இடுகிறேன் என்று செய்து கொடுத்தான்.

’வேறு ஏதாவது வேண்டுமா?’

’ஆமாம் சார் இந்த வேலை முடிந்ததும் ஊருக்குச் செல்ல வேண்டும். தற்போது மேத்யு தருவார் என நம்பிக்கையில்லை நீ கொஞ்சம் பேச
முடியுமா?;

’ஓ எஸ்; போனை அடித்து ’மிஸ்டர் மேத்யு’

’ஐயம் சாரி’

’யூ நோ, வீ கேவ் பிரஷர். ’ஐ லாஸ்ட் மை கன்ரோல். சீ ஐ சைன் ஆல் யுவர் பேப்பர் யு கேன் கலேக்ட்’

’ஒகே சார் தாங்யூ’ என்று மேத்யு மகிழ்ந்த போது

’சீ மேத்யு ஹி வான்ட் கோ ஹோம். ஆப்டர் கம்பிளிட் யு சென்ட் ஹிம்’ என்று என்னை பார்த்து ஒரு கண்ணை மூடித் திறந்தான்.

’ஒகே ஒகே எஸ் சார்’ என்றார் மேத்யு.

மிகுந்த பிரயாசைப் பட்டு ஊர் வந்து இரண்டு நாளாகிறது. கூரையை செப்பனிட்டு வைக்கோல் இட்டு இருந்தார் மனைவி. வைக்கோலின் மணம் நான் கொண்டு சென்றிருந்த பெர்புயுமை எல்லாம் பொய்யாக்கியது.

யார் யாரோ வருகிறார்கள் விசாரிக்கிறார்கள். மனம் மட்டும் பிள்ளை நம்மிடம் வரவில்லையே என்று ஏங்கித் தவிக்கிறது.

தாய்லாண்டு மேற்க்கொண்டு செய்ய தயங்கியதும் அவனிடம் மேலே அரை மீட்டர் மட்டும் மண் எடு. உன் பக்கத்தில் வண்டியில் நான் இருக்கிறேன். நீ முழுவது‌ம் தோண்டி முடிக்கும் வரை எங்கும் செல்ல மாட்டேன். உறுதி கூறி அவன் முடிக்கும் வரை இருந்து ஒவர்டைம் அதிகம் கொடுத்து வேலையை முடித்து, மாத்யு கொடுத்த ஆபிஸ் வேலகளும் முடித்து விடைப்பெற்று வந்து சேர்ந்தேன்.

எந்தக் கெஞ்சலும் கொஞ்சலும் பையனிடம் செல்ல வில்லை இரண்டு நாளாய் அலைகழிக்கிறான்.

தூக்கச் சென்றால் ’அம்மா’ என்று கத்தி கொண்டு ஒடுகிறான். வீட்டில் இருந்தால் உள்ளேயே வருவதில்லை. போட்டாவில் இருப்பதை போல் இல்லையாம்.

மூன்றாவது நாள் காலை நான் அவனுக்கு பாகில் லூலூ சென்டரில் வாங்கிய துணி மணிகளும் மங்காப் சுல்தான் சென்டரில் வாங்கிய பொம்மை சாக்லேட் ஒன்றையுமே அவன் தொடவில்லை மனம் நடுங்கிக் கொண்டு இருந்தது.

’அப்பா எங்கம்மா’ என்று அவன் குரல் கேட்டது.

கண்ணில் தானாகவே நீர் நிறைந்து என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சிறு கேவல் எழுந்ததை கட்டுப்படுத்துகிறேன்.

’அப்பாவ இப்ப தான் தேடறியா? உள்ள போயி பார்’ என்றாள் மனைவி.

மெல்ல எட்டிப் பார்க்கிறான். நான் தலையை ஆட்டி சைகை செய்த போது
என் கண்ணில் நீர் நிறைந்து அவன் நிற்பது தெரியாமல் மறைத்து இருந்தது.

மெல்ல வந்து கட்டில் மேல் ஏறி என் இரண்டு கண்களையும் இரு கைகளாலும் துடைத்துகொண்டு, ’ப்பாஆ!’ என்று தேம்பி உடம்பு குலுங்க அழ ஆரம்பித்தான்.

நானும் தான்.