Author: பதாகை

இளைப்பாறுதல்

ஸ்ரீதர் நாராயணன்

image1

மூலக்கடை பிள்ளையார் கோவில் பக்கமாக வரும்போது சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. ‘சிக்னல் போட்டிருக்கு’ என்று சாந்தலட்சுமியின் காதுகளில் கேட்கும்படி முணுமுணுத்துவிட்டு சிவசுப்ரமணியன் வேகமாக பஸ்ஸின் படிக்கட்டுகள் பக்கமாக வந்தான். எதிர்பார்த்தது போல டிரைவர் வேகத்தைக் குறைக்க சட்டென குதித்து இறங்கினான். பின்னாடியே தடதடவென சாந்தலட்சுமி இறங்குவதற்குள் பஸ் வேகமெடுத்து விட்டது. அந்த மதிய நேரத்தில் நூறடிச்சாலை வெறிச்சோடி இருந்ததால், டிரைவர் வேகமெடுத்தபடி சிக்னலைத் தாண்ட, பஸ்ஸிலிருந்து குதித்த சாந்தலட்சுமி கொஞ்சம் தூரம் ஓடி சமாளித்து நின்றாள்.

‘த, விழுந்து சாவறதுக்குனு வந்துக்குது பாரு. ஸ்டாப்பிங்ல இறங்கி நடந்து வாறதுக்கு என்னா கேடு’ கண்டக்டர் தலையை நீட்டி திட்டுவது சிவசுப்ரமணியன் காதுகளில் நன்றாகவே கேட்டது.

‘பேமானி. ரெட்ல கிராஸ் பண்ணிட்டு, என்னா சவுண்டு விடறான்’ சாந்தலட்சுமியின் குரல் பஸ்ஸை எட்டியிருக்காது என்றாலும், சாலையோரத்து இளநீர் கடைக்காரரின் காதுகளை எட்டியிருந்தது அவருடைய சிரிப்பின் மூலம் தெரிந்தது.

‘அதான், ஸ்பீடு கூட்டிக்கிறான்ல. என்னாத்துக்கு குதிக்கிற நீயு?’ (more…)

யாரோ ஒருவன்

ஹரன் பிரசன்னா

பிரகதி மைதானத்தில் நடக்கும் டெல்லி புத்தகக் கண்காட்சியின் குளிரூட்டப்பட்ட அரங்குக்குள் நுழைந்தபோதே என் நாசி அந்த மணத்தை உணர்ந்து இதற்கு முன்பு டெல்லி வந்ததன் நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்தது. உடனே நினைவுக்கு வந்தவன் சுனில் வர்மாதான். கடந்தமுறை என் புத்தக அரங்குக்குப் பக்கத்து அரங்கில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தான். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்துகொண்டிருந்த புத்தகக் கண்காட்சியில் எத்தனையோ முறை பங்கேற்றிருந்தாலும், யாருடனும் ஒட்டிப் பழகியதில்லை. ஒரு ஹாய் ஒரு ஹலோ, அவ்வளவுதான். ஆனால் கடந்தமுறை சுனில் வந்து வந்து பேசினான். எத்தனை முறை கிழே இறக்கிவிட்டாலும் வலிந்து இடுப்பேறிக் கொள்ளும் குழந்தை போல.

அவனுக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் விடாமல் பேசிக்கொண்டே இருப்பான். எனக்கும் அவனுக்கும் பத்து வயது வித்தியாசமாவது இருக்கும். வெளுத்த தோலுடன் ஒல்லியாக உடல் உள்ளொடுங்கி அவன் பேசும்போதெல்லாம் தொண்டைக் குமிழ் ஏறி இறங்குவது எனக்கு சிரிப்பாக வரும். அவனைப் பார்க்கும்போதெல்லாம் சிரிப்பேன். சம்பந்தமில்லாமல் என்னென்னவோ பேசுவான். ரொட்டியை வாங்கி சாயாவில் முக்கி யாரோ அடித்துப் பிடுங்கவருவதுபோல வேகவேகமாக அவன் உண்பதைப் பார்க்க எனக்குச் சிரிப்பாக வரும். அதே ரொட்டியைக் காண்பித்து சாப்பிடறீங்களா ஜி என்பான். வேண்டாம் என்று மறுப்பேன். சுடச்சுட கடும் சாயா வாங்கித் தருவான். மெல்லிய மீசை நெளிய இது தனது ட்ரீட் என்று சொல்வான். (more…)

பிளான் பி

எஸ். சுரேஷ்

பாடிக்கொண்டிருந்த கழுதை முன் ‘சபாஷ் சபாஷ்’ என்று தலையாட்டி ரசித்துக் கொண்டிருந்தது குள்ளநரி.

கழுதையை ‘குஷிப்படுத்தி’ சிங்கத்திடம் அழைத்துச் சென்றால், சிங்கம் விட்டு வைத்த மீதி தனக்கு கிடைக்கும் என்ற நப்பாசை நரிக்கு.

ரசித்துக்கொண்டிருந்த நரியைக் கண்ட காட்டு மிருகங்கள் கழுதை முன் உட்கார்ந்து பாட்டை ‘ஹும்’ கொட்டி ரசிக்க ஆரம்பித்தன.

இதைக் கண்ட நரி எல்லோரிடமும் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தது.

கிடைத்த பணத்தில் தனக்கொரு மட்டன் பிரியாணியும் கழுதைக்கு ஒரு கட்டு புல்லும் ஆர்டர் செய்தது.

ஒளிப்பட உதவி – mummy-donkey, Deviant Art

எறும்பு வீடுகள்

childimage

எறும்புகளை வளர்க்க என
சிறிய நெகிழி பெட்டிகளில்
கண்ணாடி மூடிகள் கொண்ட
சச்சதுர வீடுகள் அவை.

ஒவ்வொன்றிலும் காற்றுபோக்கியாக
சிறு துளைகளும் உண்டு.

அவற்றின் வழியே வந்து போகும்
எறும்புகள் ஒவ்வொன்றுக்கும்
ஒரு பெயரும், குடும்பமும்
கண்டுபிடித்து வைத்திருந்தாள்

நுணுக்கிய சர்க்கரை
இணுக்குகளை சேர்த்து
வைத்துக் கொள்ள ஓரத்தில்
சிறு மூலையும் உண்டு.

எறும்புகள் வந்து சேர
தாமதமாகும்போது
தேடிப்பிடித்து கொண்டுவந்து
சேர்ப்பார்கள்
அவளும் அண்ணனும்.

குளிர்காலங்களில் மட்டும்
முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில்
வெறிச்சோடிக் கிடக்கின்றன.

அவற்றை உள்ளங்கையில் ஏந்தி
உதடுகளால் ஊதி
கதகதப்பாக்குகிறாள்.

சாரிசாரியாக வந்து நிறைக்கின்றன
நெகிழ்ச்சியின் தருணங்கள்.

வெள்ளி வீதியில்…

நம்பி கிருஷ்ணன்

        
       பூக்கள்
         மது
     தனி    மை
       நிலவு
       நிழல்
என்னொடும் மூவரானோம்!
சுயமின்றி பிரதிபலிக்கிறது நிழல் .
நிலவிற்கோ ஒழுக்கமெய்தும் பாவனைகள்.
தனியாகத்தான் குடிக்கிறேன்.

பாடினால் நிலவு நாசூக்காக நழுவுகிறது.
ஆடினாலோ நிழல் துள்ளி விலகுகிறது.
என்ன செய்வது , நட்பின் பாசாங்குகள்
குடிக்கையில் சிதைந்தழிகின்றன.

இப்போதைக்கு இவர்கள் போதும்
காலத்தின் சுமையை சற்றே மறக்க.
அதோ தெருமுனையில் வசந்தம் காத்திருக்கிறது.

ஆனாலும் வாருங்கள், கைகுலுக்குவோம்,
வெள்ளி வீதியின் வெறுமையையும் மீறி
மீண்டும் சந்திப்போம்,
நண்பர்களாக.

( After Li Bai’s Drinking Alone)

ஒளிப்பட உதவி – Poems Found in Translation