Author: பதாகை

உடைநீர் ஓசை

ஸ்ரீதர் நாராயணன்

 

‘மாலி வந்திருக்குடா… வெரசா வெளில வா’ வெளியிலிருந்து அம்மா கத்தியது கீழே மெடிக்கல்ஷாப்வரை கேட்டிருக்கும். காசி கையில் புரட்டிக் கொண்டிருந்த புத்தகத்தை வேகமாக சுருட்டி சோப்புத்தூள் டப்பாவின் பின்னால் செருகி வைத்துவிட்டு எழுந்து நின்று கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான். ராஜமாணிக்கம் கொடுத்த புத்தகம் அது. வழவழ பேப்பர்களில் விதவிதமான போஸ்களில் படங்களை என்னமாய் ப்ரிண்ட் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு தினுசு. பொன்னிறக்கூந்தல் பெண்கள். செந்நிற கிராப்புத் தலைப் பெண்கள். ஒல்லி இடுப்பு பெண்கள். பெருத்த உடலைக் கொண்ட பெண்கள்.

‘ஒருநாளப் போல இப்படித்தாம்மா. பாத்ரூமுக்குள்ள போன ரெண்டவர் ஆக்கறான். என்னடா பிரச்னைன்னு சள்ளு புள்ளுன்னு எரிஞ்சு விழறான். எதாச்சும் சொல்பேச்ச கேட்டாத்தான. உடம்பு கிடம்பு சுகமில்லன்னா வைத்தியம் பாக்கதாவல’ அம்மாவின் பிலாக்கணம் காசியை அவசரப்படுத்த, கண்ணாடியில் தெரிந்த பிம்பம் குளித்தமாதிரிதான் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு வேகமாக வெளியில் வந்தான். (more…)

கோடுறு தீக்கூற்றம்

 

சிகந்தர்வாசி

நீண்டு என் முகம் தொடும் கை
விரல்களின் சுருக்கங்கள் கன்னத்தின்
மழிக்கப்படாத சருமத்தில் சொரசொரக்கின்றன.
கண்டுகொண்டது போன்ற மென்சிரிப்பு
தோன்றியதும் மறைகின்றது, மின்னலெனக்
கண்களில் உயிர்க்கும் ஒளிக்கீற்றும்.
எப்போதும் நிலைகொண்ட தொலைதூரப் பார்வை,
திரும்பவும் தன் இடம் வந்தமர்கிறது.

மெல்ல நடக்கும் அவர் பாதையில்
இடம் வலம் உந்திச் செல்கிறேன்,
வலிக்காமல்- அவர் கைபற்றிச் செல்கையில்,
நடை நிறுத்தி போக்குவரத்தைப் பார்க்கிறார்,
தான் இருப்பதை விளங்கிக் கொள்ள.
உன்னி வெறிக்கும் அவர் பார்வை
எதிர்படும் ஒருவரை மிரளச் செய்கிறது.
முன்னறிவிப்பின்றி, காரணமின்றி,
எங்கிருந்தோ வருகிறது அந்தப் புன்னகை,
சிரிப்பு, அது வெறும் சிரிப்பு, தூய சிரிப்பு,
அவர் முகத்தை தனதாக்கிக் கொள்ளும்
அதன்பின் நினைவேதும் இல்லை,
அல்லது உண்டா? தெரியவில்லை.

நடக்கத் துவங்குகிறோம்.
எண்ணங்களில் என்னை இழக்கின்றேன்.
அவர்? தெரியவில்லை.
வீடு சேர்ந்ததும் புதிராய்ப் பார்க்கிறார்,
தன்னை உள்ளழைத்துச் செல்லும்
என் அம்மாவை.
இணை வரலாற்றின் சமச்சீர் குலைவில்,
ஆதாரம் இழந்துவிட்டன
அம்மாவின் நினைவுகள்.
அவற்றை மெய்ப்படுத்த வேண்டியவர்
அமைதியாய் இருக்கிறார்.
கோடுறு தீக்கூற்றுவன்
கொன்று கொண்டிருக்கிறான்
என் அம்மாவை.

image credit : ‘Two People. The Lonely Ones’, Edward Munch, MomA

மோசமான ரசனையின் பிறப்பு – பாரி ஷ்வாப்ஸ்கி

The Nation என்ற தளத்தில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரையின் சற்றே தளர்ந்த தமிழாக்க வடிவம் 

Henri Matisse குறித்து ஒரு சம்பவம் சொல்லப்படுவதுண்டு. மாட்டிஸ் வரைந்த உருச்சித்திரங்கள் (portraits) ஒன்றில் உள்ள ஒரு பெண்ணின் கை மிக நீளமாக இருக்கிறது என்று அவரைச் சந்தித்தவர் ஒருவர் குறை கூறினாராம். “மேடம், நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்,” என்று பதில் சொல்லியிருக்கிறார் மாட்டிஸ். “இது பெண்ணல்ல, ஓவியம்”. மாட்டிஸ் இப்படிச் சொன்னதற்கு அவள் இது போன்ற ஒரு பதில் சொல்லியிருக்கலாம், “இது வாதமல்ல, பிடிவாதம்”. ஓவியரின் இந்தக் கேலிப் பேச்சைக் குறித்து ஈ.ஹெச். கோம்ப்ரிச் (E.H. Gombrich) இவ்வாறு எழுதுகிறார்: “நெடுங்காலமாக இவர்களைச் சகித்துக் கொண்டிருக்கும் பொதுமக்களோடு நவீன ஓவியர்களும் விமரிசகர்களும் விளையாடிப் பார்க்கும் முரணுரைகளில் (paradox) இதுவும் ஒன்று” (கோம்ப்ரிச்சின் மிகச் சிறந்த ஆய்வு நூலான ஆர்ட் அண்ட் இல்யூஷனில்தான் மேற்கண்ட சம்பவம் பற்றிய குறிப்பு இருக்கிறது).

இது போன்ற முரணுரைகளைத் தவிர்ப்பது மிகக் கடினம். ஓவியங்களைக் கொண்டு உருச்சமைத்தல் (pictorial illusionism), அதாவது, “நம்பும்படி காட்சியளிக்கத் தவறிய பிம்பங்கள் குறித்து மேற்கத்திய நாகரிகம் குறிப்பிட்ட சில காலகட்டங்களில் அடைந்த அதிருப்தியின் தூண்டுதலால்” உண்மை போல் தோற்றமளிக்கும் ஓவியங்களின் ஐரோப்பிய ஆதர்ச தொகுப்பு ஒன்று (European canon of realistic representation) உருவானது என்று கோம்ப்ரிச் கருதினார். அவரது கூற்றே முரணுரைத்தன்மை கொண்டதாக இருக்கிறது. காரணம், ஒரு பிம்பத்தை நம்ப விழைந்தவர்கள் எவர் என்ற கேள்வியை இது தவிர்க்கிறது. மாட்டிஸ் வருவதற்கு வெகு காலம் முன்னரே, மானரிஸ்ட்டுகள் (Mannerists) என்று அறியப்பட்ட பதினாறாம் நூற்றாண்டு இத்தாலிய ஓவியர்கள் தங்கள் ஓவியங்களிலுள்ள உருவங்களைப் பிறழச் செய்து பிழை பரிமாணங்களில் வரையத் தயாராய் இருந்தனர். அவர்கள் இப்படிச் செய்தது, நம்பத்தகுந்த பிம்பங்களைத் தோற்றுவிப்பதற்கல்ல, மாறாய், நம்பத்தகுந்த ஓவியங்களைப் படைக்கும் நோக்கத்தில் இதைச் செய்தனர். (more…)

அர்ஜுனன் காதல்கள் – ஊர்வசி

வெ. கணேஷ்

அலையிலாக் கடலின்
ஆழத்தில் ஜனனம்;
நித்ய யுவதி வடிவம்;
தேவர், மனிதர், அசுரர், கந்தர்வர்
எண்ணற்றோரைக் கிறங்கடிக்கும்
ஊர்வசிக்கு இது ஒரு
புது அனுபவம்.
மானிடன் ஒருவனின்
மறுதலிப்பு.

அர்ஜுனன் அறைக்கு
சென்று திரும்பியவள்
கண்களில் ஏமாற்றம்.
கரை மீறும் நதியலை போல்
வெகுண்டு
வேகவேகமாய்
அலங்காரத்தை கலைத்தாள்.

உடைகளைக் கழட்டத் தொடங்கியதும்
கொஞ்சம் அமைதி.
மார்புக்கச்சைகளை விலக்கியதும்
மின்னலொளியில் ஒரு முறை
பார்த்த மானிடன்,
புருரவஸ்-சின் நிர்வாண நினைவு.
கூடவே ஜோடி ஆடுகளின் பிம்பமும்.

குரு வம்சத்து மூதாதையனுடன்
முயங்கியதால்
நான் தாய் ஸ்தானமாம்,
வணக்கத்துக்குரியவளாம்,
புணர்வதற்கில்லை என்று சொல்லியனுப்பி விட்டான்.
பாவாடை தரையில் விழவும்
நினைவுக் குளத்திற்குள்
மூழ்கும் முன்னர்
இதழில் புன்சிரிப்பு:
அர்ஜுனனைக் கைபிடித்திழுத்து
அருகிருந்து பார்த்த
அவனது முகம் தோன்றி மறைந்தது-
“புருரவஸ் ஜாடைதான் உனக்கு”

+++++

முட்படுக்கையில்
கிடப்பவன் போல்
புரண்டான் அர்ஜுனன்,
நிர்வாணமாய்
நீச்சலடிக்கும்
ஊர்வசியின்
காட்சி அவன் கனவில்.
ஹ்ம்ம்ம்…
சாபமிட்டுச் சென்றவளை
இனி சந்திக்க முடியாது.
பெருமூச்சு விடுபட்டு
ஊர்வசி சூடிய
ஒற்றை மலரை
விழ வைத்தது.

+++++

“தாயையல்ல அர்ஜுனா,
நீ நிராகரித்தது மகளை…
நிம்மதியாய்த் தூங்கு!”
கண்ணன் சிரிக்கிறான்.

சலாம் குலாமு

– எஸ். சுரேஷ் –

தொப்பி அணிந்து நின்று கொண்டிருந்த
மனித குரங்கு கதவை எனக்காகத் திறந்தது
உள்ளே நுழைந்து ஒரு அறைக்குள் சென்றேன்
இரண்டு சிறுத்தைகள் மான் கறி தின்று கொண்டிருந்தன
கோட் சூட் அணிந்த ஒரு யானை என்னிடம் வந்து
“நீங்க வெஜ்ஜா நான்-வெஜ்ஜா” என்று கேட்டது
“இன்றைக்கு நான் வெஜ்” என்றேன்
“இங்கே வாருங்கள்” என்று வேறொரு அறைக்கு அழைத்து சென்றது

என் பக்கத்து மேஜையில் ஒரு பூனையும் நாயும்
கோப்பையிலிருந்த பாலை நக்கிக்கொண்டிருந்தன
“ஏன் நீங்கள் நான்-வெஜ் சாப்பிடவில்லை?” என்று கேட்டேன்
பூனை என்னை மெளனமாய் முறைத்தது
“இன்றைக்கு சனிக்கிழமை” என்று நாய் கூறியது

சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது
தொப்பி அணிந்திருந்த மனித குரங்கிற்கு
பத்து ரூபாய் டிப்ஸ்ஸாகக் கொடுத்தேன்
உடனே அது “சலாம் குலாமு குலாமு சலாம் குலாமு”
என்று ஒரு முறை குதித்துப் பாடி பணத்தை பெற்றுக்கொண்டு
சலாம் போட்டு என்னை வழியனுப்பி வைத்தது.

 

image credit – Tabatha Yeatts, The Opposite of Indifference