Author: பதாகை

வைரம்

ஸிந்துஜா

ஐந்து மணி அடித்ததும் எல்லோரும் அலுவலகத்தை விட்டுக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக ஐந்தேகால் மணிக்கு மேல்அந்த அலுவலகத்தில் பெண்கள் யாரும் இருக்கக் கூடாது என்ற கடுமையான விதி இருந்தது. அதே போலக் காலையில் ஒன்பது மணிக்கு ஊழியர்கள் அவரவர் இடத்தில் பிரசன்னமாகி இருக்க வேண்டும். மாதத்தில் மூன்று முறை ஒன்பது ஐந்துக்குள் வர அனுமதி இருந்தது. அதற்கு மேலான தாமதம் என்றால் அன்றைய தினம் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதான். இது போலப் பல விதிகள் ஒழுங்கையும் கண்டிப்பையும் நிலை நிறுத்துவன போல இருந்தன. வேலைக்கு வந்த முதல் ஒரு வாரம் செல்லாவுக்குச் சற்றுத் தடுமாற்றமாக இருந்தது. ஆனால் அதற்கப்புறம் பழகி விட்டது.

அந்த நிறுவனத்தில் அவள் கணவன் வாசு வேலை பார்த்தான். திடீரென்று அவன் இறந்து விட்டான். அந்த அலுவலகத்தில் இறந்தவரின் கணவன் அல்லது மனைவி அல்லது வாரிசுக்கு வேலை வாய்ப்புத் தரும் திட்டமோ விதிகளோ எதுவும் இல்லை. அப்படியிருந்தும் அவளுக்கு வேலை கிடைத்தது தனிக் கதை.

செல்லா மேஜையிலிருந்த தாள்களையும், ஃபைல்களையும் எடுத்து டிராயருக்குள் வைத்துப் பூட்டினாள். அலுவலகத்தில் வேலை பார்த்த மூன்று பெண்களில் செல்லாதான் இளையவள். அவள் வேலையில் அமர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருஷமாகப் போகிறது. அசிஸ்டன்ட் ஆக வேலை கிடைத்தது. செல்லாவின் உடனடி மேலே சீனியர் அசிஸ்டன்ட் ஆக இருந்தது ஸ்ரீதேவி. சுசீலா அவர்கள் இருவருக்கும் மேலதிகாரி. ஸ்ரீதேவி ஆறு வருஷமாகவும் சுசீலா பத்து வருஷமாகவும் அங்கே வேலை பார்த்தார்கள் என்று சில வாரங்கள் கழித்து அவள் தெரிந்து கொண்டாள். .

எல்லா அலுவலகத்திலும் நடந்து கொள்வது போல செல்லா புதியவளாக உள்ளே நுழைந்ததும் மற்ற இரு பெண்களும் தத்தம் அலட்சியத்தை அவள் மேல் தெளித்தார்கள். குறிப்பாக அவள் வேலையில் சேர்ந்த விதம் அவர்களுக்கு உவப்பாக இல்லை என்று செல்லா நினைத்தாள். வாசு செய்து விட்டுச் சென்றது நிறுவனத்தில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அந்தத் தெரிதலின் விளைவாக அவள் மீது ஒட்டிக் கொள்ள எவரும் முனையவில்லை என்று அவள் அப்போது தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டாள். தன் வாழ்க்கையில் கவலைப்படுவதற்குத் தனக்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன என்று அவள் அவர்களின் அலட்சியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் ஆறு மாதம் கழித்து அவளுக்குக் கன்ஃபர்மேஷன் லெட்டர் கிடைத்த பின் எல்லா அலுவலகத்திலும் நடப்பது போல அவர்கள் இருவரும் அவளைப் பார்த்தால் புன்னகை செய்யும் மரியாதையைச் செலுத்தினார்கள். நாளடைவில் அவள் வேலையில் காண்பித்த திறமையும் அது நிர்வாகத்தின் மேல் மட்டத்தில் அவளுக்கு ஏற்படுத்தித் தந்த ஒரு வித மரியாதையும் அவர்களை அவளுடன் சற்று மேலும் நெருக்கமாகப் பழக வழி வகுத்தது.

இன்று சுசீலா உடல்நலம் சரியில்லை என்று வரவில்லை. கிளம்பும் முன் முகத்தைக் கழுவிக் கொள்ள ஸ்ரீதேவி பாத்ரூமுக்குச் சென்றிருந்தாள். அவள் வந்த பின் செல்லா அங்கே போய் விட்டு வந்து வீட்டுக்குக் கிளம்ப வேண்டும்.

பாத்ரூமிலிருந்து திரும்பி வந்த ஸ்ரீதேவி அன்றைய வேலை அவளது முகத்தில் ஏற்றியிருந்த களைப்பை எல்லாம் பாத்ரூமில் உதறி விட்டு வந்தவள் போல் இருந்தாள்.

செல்லா தன்னைப் பார்ப்பதைப் பார்த்து ஸ்ரீதேவி சிரித்தபடி “சினிமாவுக்குப் போறேன். அதான் அழுது வடிஞ்ச மூஞ்சியோட எதுக்குப் போகணும்னு….” என்றாள்.

செல்லா “என்ன படம்?” என்று கேட்டாள்.

“ஆர் ஆர் ஆர்.”

“ஓ அதுவா? அமெரிக்காலே கூட ஏதோ பரிசு கொடுத்திருக்காங்களாமே அதுக்கு.”

“அவன் அவார்ட் கொடுத்தா அப்ப படம் மட்டம்தான்!” என்று சிரித்தாள்.

சில வாரங்களுக்கு முன்புதான் ஒரு நாள் லஞ்சுக்குப் பிறகு அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்த போது சுசீலா சொன்னாள்: இந்த உலக அழகிப் பட்டம், ஆஸ்கர் பரிசு எல்லாம் கண்துடைப்பு வேலை. ஏதோ நம்ம ஆட்களைப் பாத்து பிரமிச்சிடற மாதிரி பாவலா பண்ணிட்டு பின்னாலேயே அவங்க கம்பனி சாமான்களையெல்லாம் இந்த அழகன் அழகிகளை வச்சு விளம்பரம் பண்ணி இங்கே கொண்டு வந்து கொட்டிப் பணம் பண்ணறதுதான் ஐடியா. நாமளோ அமெரிக்கா ஆஸ்திரேலியான்னு எவனாவது வெளிநாட்டுக் காரன்னா அப்படியே மயங்கிக் கீழே விழுந்து அடிபட்டது கூட நமக்குத்தான்னு தெரியாம சந்தோஷப்பட்டுக்கிட்டு இருப்போம்” என்றாள்…

“சரி, நீ காசு கொடுத்துப் போய்க் கஷ்டத்தை அனுபவிச்சிட்டு வா” என்று செல்லா சிரித்தாள் ஸ்ரீதேவியிடம்.

“ஆளைப் பாத்தியே. செல்வம்தான் டிக்கட் புக் பண்ணியிருக்கு. போய்ட்டு செல்வம் செலவிலயே டின்னரை முடிச்சிருவேன்” என்று ஸ்ரீதேவியும் சிரித்தாள்.

ஸ்ரீதேவி டைவர்சி. செல்வம் அவளது உறவினன். அவளைத் திருமணம் செய்து கொள்ள ஒரு காலில் நிற்கிறான். இவள்தான் இடம் கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.

“சரி, அப்ப நான் கிளம்பட்டுமா செல்லா? நீ நாளைக்கு வர மாட்டேல்லே? எப்போ பாண்டிலேர்ந்து திரும்புவே?” என்று கேட்டாள்.

“இன்னிக்கி ராத்திரி கிளம்பிப் போயிட்டு நாளைக்கு ஃபங்ஷன் முடிஞ்சதும் ராத்திரி கிளம்பி வரதா இருக்கேன். குழந்தையை அம்மா கிட்டே விட்டுட்டுப் போறேனே. அதனாலே உடனே திரும்ப வேண்டியதுதான்” என்றாள் செல்லா.

செல்லா கன்னிங்ஹாம் ரோடு பஸ் நிறுத்தத்தை அடைந்த போது ஏழெட்டு பேர்தான் காத்துக் கொண்டிருந்தார்கள். மல்லேஸ் வரத்தைத் தாண்டிச் செல்லும் பஸ் ஐந்து இருபதுக்கு வரும். அதில் இங்கிருக்கும் பேர்களுடன் ஏறுவதில் கஷ்டம் எதுவும் இருக்காது. சில சமயம் உள்ளே உட்காரக் கூட இடம் கிடைக்கும். இதைத் தவற விட்டால் அடுத்த பஸ் ஐந்து ஐம்பதுக்குத்தான். ஆனால் ஐந்தரை மணிக்கு ஆபீஸ் முடிந்தவுடன் பாய்ந்து வெளியே வரும் அரசாங்க ஊழியர்கள் கூட்டத்தோடு அந்தப் பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறத் தனித் திறமை, தனிப் பலம் எல்லாம் வேண்டும். அது தவிர அதில் மல்லேஸ்வரம் வரை நின்று கொண்டே
தான் போக வேண்டும்.

அவள் வீட்டை அடைந்ததும் அவளுடைய அம்மாவை விடுதலை செய்வாள். செல்லா இருக்கும் ஆறாவது கிராஸிலிருந்து எட்டாவது கிராஸில் இருக்கும் தன் வீட்டுக்கு அம்மா இருட்டுவதற்கு முன் கிளம்பிப் போக அது ஏதுவாக இருக்கும். மூன்றரை மணிக்குப் பள்ளிக்கூடத்தை விட்டு வீட்டுக்கு வரும் அவளது குழந்தையைப் பார்த்துக் கொள்ளவென்று அம்மா தினமும் இரண்டு மணிக்கு செல்லாவின் வீட்டுக்கு வந்து விடுவாள். குழந்தை வந்தவுடன் குடிப்பதற்குப் பாலும் தின்பதற்குப் பட்சணமும் கொடுப்பாள். நாலரை மணி வாக்கில் வீட்டுக்கு அருகில் இருக்கும் மல்லேஸ்வரம் கிரவுண்டில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுடன் சுகுவையும் விளையாடக் கூட்டிக் கொண்டு போவாள். அரைமணியிலிருந்து முக்கால் மணி நேரம் அங்கே செலவாகும்.

செல்லாவின் அம்மா வீட்டுக்குத் திரும்பியதும், சாதம் வடித்து வைத்து விடுவாள். செல்லா வந்த பின் குழந்தையும் அவளும் சாப்பிட ஏதாவது ஒரு காயை நறுக்கி கறி பண்ணிக் கொள்வாள். சனி ஞாயிறு விடுமுறை தினங்கள் என்று குழந்தையும் செல்லாவும் அம்மாவின் வீட்டுக்குப் போய் விடுவார்கள். அந்த இரண்டு நாளும் அம்மாவுக்குப் பேரனைப் பார்த்துக் கொள்வது தவிர வேறு வேலை எதுவும் கிடையாது. “அதான் வாரத்திலே அஞ்சு நாள் ஆபீஸிலே கிடந்து மன்னாடிட்டு வரியே. நான் வேலையெல்லாம் பாத்துக்கறேன். நீ ரெஸ்ட் எடு” என்று அம்மா சொல்வதை அவள் காதில் வாங்கிக் கொள்ள மாட்டாள். ஒய்வு என்றால் என்ன? மறுபடியும் ஆபீஸ், வாசு என்று நினைவு தறிகெட்டு ஓடும். உடம்புக்கு அலுப்பை ஏற்க வேண்டிய நெருக்கடி நிகழும் போது மனதுக்கு வேலை செய்ய வாய்ப்புக் கிட்டுவதில்லை.

அவள் வீட்டை அடைந்த போது அம்மா சுகுவைத் தன்னுடன் கூட்டிக் கொண்டு செல்லும் நிலையில் தயாராக இருந்தாள்.

அம்மா செல்லாவிடம் “டிரெயின் எத்தனை மணிக்கு?” என்று கேட்டாள்.

“எட்டே முக்காலுக்கும்மா. நல்ல வேளையா யஷ்வந்த்பூர்லேந்து கிளம்பறது. ஒரு ஊபர் பிடிச்சா பத்து நிமிஷத்திலே கொண்டு போய் விட்டுடுவான்” என்றாள் செல்லா.

“அங்க கார் வருமா ஸ்டேஷனுக்கு?”

“இந்தக் கிரகப் பிரவேசக் களேபரத்திலே உனக்கு எதுக்கு சிரமம், நானே பாத்துக்கறேன்னு பட்டு கிட்டே சொன்னேன். அவளா கேக்கறவ? அடச்சீ, சும்மா கிடன்னு என் வாயை அடைச்சிட்டா” என்று செல்லா சிரித்தாள். பட்டம்மாவும் செல்லாவும் எல். கே. ஜி, ஸ்கூல், காலேஜ் வரை ஒன்றாகப் படித்தவர்கள். அவளுக்குக் கல்யாணம் ஆகிப் பாண்டிச்சேரியில் செட்டில் ஆகி விட்டாள். பட்டு, அவள் கணவன் இருவருமே வங்கியில் வேலை பார்க்கிறார்கள். நாளை அவர்கள் கட்டியுள்ள புதிய வீட்டுக்குக் கிரகப் பிரவேசம்.

& & &

ரயில் கிளம்பக் கால் மணி முன்பே செல்லா ஸ்டேஷனுக்கு வந்து வண்டியில் ஏறிக் கொண்டாள். இரண்டாம் வகுப்பு என்ற போதிலும் வார நாள் என்பதால் அவ்வளவாகக் கூட்டம் இல்லை என்று நினைத்தாள். வாசு இறந்த பிறகு அவள் மேற்கொள்ளும் முதலாவது வெளியூர்ப் பயணம் இது. கடைசியாக ரயிலில் சென்றது இரண்டடுக்கு ஏ.சி. வகுப்பில். மிக சௌகரியமான பயணமாக அது இருந்தது. வாசு இருந்த கடைசி ஒரு வருஷம் அவன் அதிகப்படியான சௌகரியங்களைச் செய்து கொடுத்தான். ஜெயநகரிலேயே கொஞ்சம் பெரிய வீட்டுக்கு வாடகைக்குப் போனார்கள். வாசு ஒரு புதிய ஸ்கூட்டர் வாங்கி அவன் அலுவலகம் போகும் வழியில் அவள் அவெனியூ ரோடில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெரிய துணிக் கடை வாசலில் இறக்கி விட்டுப் போவான். வார இறுதிகளில் தியேட்டர்களுக்குப் போவது, வழக்கமாகி விட்டது. அதே மாதிரி சனி ஞாயிறில் காப்பிக்காகத் தவிர வீட்டில் அடுப்பு பற்ற வைக்கப்படவில்லை. சினிமா வெளியூர்ப் பயணங்களில் அவன் இரண்டு அல்லது மூன்றடுக்கு ஏ.சி. கோச்சில்தான் அவளை அழைத்துச் சென்றான். அலுவலகத்தில் கிடைத்த பதவி உயர்வும் அவன் புதிதாகப் பங்குச் சந்தையில் ஈடுபட ஆரம்பித்து அதில் வந்த அதிக வருமானமும்தான் அவர்கள் கொஞ்சம் வசதியாக இருக்க உதவுகிறது என்று அவளிடம் சொன்னான். அவன் சொன்னவற்றை அவள் அப்படியே நம்பினாள். வாசு இறந்து போகும் வரை.

வாசு இறப்பதற்கு இரண்டு நாள் முன்பு பெலத்தங்கடி அருகே இருந்த சதாசிவ ருத்ரா கோயிலுக்குக் கிளம்பிச் சென்றான். இதற்கு முன் பல தடவை அங்கே சென்றிருக்கிறான். மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் என்று ஜனங்களால் நம்பப்பட்ட அந்தக் கோயிலில் அவரவர் பிரார்த்தனைகள் நிறைவேறும் போது அந்தக் கோயிலுக்குச் செல்வார்கள். அங்கு பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்று சமர்ப்பிக்கும் பொருளைக் களிமண்ணால் செய்யச் சொல்லிக் கோயிலில் படைத்துப் பூஜை செய்வார்கள். சில தடவை வாசுவும் செல்லாவும் ஜோடியாகவும் சில தடவை அவன் தனியாகவும் அந்தக் கோயிலுக்குச் சென்றதுண்டு. வேலையில் பதவி உயர்வு கிடைத்து ஆறு மாதங்களாகியும் இன்னும் பிரார்த்தனையைச் செலுத்தவில்லை என்றுதான் போகப் போவதாகச் சொன்னான். செவ்வாய் இரவு பஸ்ஸில் ஏறிய அவன் வியாழன் மாலையில் திரும்பி வந்து விடுவதாகச் சொல்லி விட்டுச் சென்றான்.

வியாழக்கிழமை இரவு ஆகியும் அவன் வரவில்லை. அவள் அவனுக்குப் போன் செய்த போது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாகக் கைபேசி சொன்னது. அந்தப் பிரதேசங்களில் இம்மாதிரிப் பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு என்று அவள் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள். வெள்ளியன்று காலையிலும் அவன் வராததும் இன்னும் போன் எடுக்கப்படாமல் இருந்ததும் அவளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அவள் காலையில் குழந்தையை ஸ்கூலில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்து அலுவலகம் செல்லத் தயாரான போது வாசலில் அழைப்பு மணி அடித்தது. வாசு என்று நினைத்தபடி அவள் கதவைத் திறக்கச் சென்றாள். வாசலில் இரண்டு பேர் நின்றார்கள். அவர்களில் ஒருவர் வாசுவின் அலுவலகத்தில் உள்ள ஜி.எம். அவரை அவள் இரண்டொரு முறை சந்தித்திருக்கிறாள். அவரது அருகில் இருந்த அறிமுகமற்ற மனிதர் வாட்டசாட்டமாக நின்றார்.

செல்லா அவர்களை உள்ளே வரும்படி அழைத்தாள்.

மேலதிகாரி நேரடியாக அவளிடம் “மேடம், நாங்க ஒரு துக்கமான விஷயத்தைச் சொல்ல வந்திருக்கோம்” என்றார்.

அவள் வயிற்றுக்குள் கல் விழுந்தது.

மேலதிகாரியின் கூட வந்த மனிதர், தன் கையில் வைத்திருந்த பையிலிருந்து ஒரு கவரை எடுத்தார். அதைப் பிரித்து உள்ளிருந்த கண்ணாடித் தாளால் சுற்றப்பட்டிருந்த இன்னொரு கவரை எடுத்தார். அவளிடம் கையில் கொடுக்காமல் அதைப் பார்க்கச் சொன்னார். மடித்த சட்டை தெரிந்தது. பச்சை நிறச் சட்டை. வாசுவிடம் இது மாதிரி ஒரு சட்டை ….

அவள் திடுக்கிட்டு அவர்களைப் பார்த்தாள்.

மேலதிகாரியின் உடன் வந்தவர் தன்னைப் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். வியாழக்கிழமை காலையில் தர்மஸ்தலாவில் நேத்ராவதி நதியின் கரையில் வாசுவைக் கடைசியாகப் பார்த்தது கோயிலுக்கு வந்த ஓர் தம்பதி. அவர்களிடம் தன் பொருளைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டு வாசு நதிக்குள் இறங்கிக் குளிக்கச் சென்றதாகவும், அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தொலை தூரம் சென்ற வாசு திடீரென்று மறைந்து விட்டதாகவும் கால் மணி கழித்தும் அவன் திரும்பி வராததைக் கண்டு பயந்து அந்தத் தம்பதி பக்கத்தில் இருப்பவர்களிடம் சொல்ல, உள்ளூர்க்காரர்கள் வாசு சென்ற இடம் ஆழமான சுழல்களைக் கொண்டது என்று போலீசிடம் போயிருக்கிறார்கள். சில மீனவர்களைப் பிடித்துப் பார்க்கச் சொல்லியிருக்கிறது போலீஸ். அவர்களும் கிட்டத்தட்ட ஏழெட்டு மைல் சென்று பார்த்தும் உடல் கிடைக்கவில்லை என்று திரும்பி வந்து விட்டார்கள். சட்டைப் பையில் இருந்த விசிட்டிங் கார்டை வைத்துப் போலீஸ் வாசுவின் ஆபீஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இப்போது இங்கு வந்திருப்பதாக இன்ஸ்பெக்டர் சொன்னார். அவர் கொண்டு வந்திருப்பது வாசுவின் சட்டைதானா என்று பார்த்து உறுதி செய்யச் சொன்னார். உடல் கிடைக்காததால் சந்தர்ப்ப சாட்சியங்களின் மூலமே அவனது இறப்பு உறுதியானது.

அந்த அடியிலிருந்து செல்லா மீண்டு வர நாள் பிடித்தது.

ஒரு நாள் காலையில் அவளுக்கு வாசுவின் அலுவலகத்திலிருந்து போன் வந்தது. ஜி.எம்.மின் பி.ஏ., ஜி.எம். அவளுடன் பேச விரும்புவதாகக் கூறி
லைனைக் கொடுத்தாள்.

“குட் மார்னிங் மிஸஸ் வாசு. உங்களோட நான் ரெண்டு நிமிஷம் பேச முடியுமா?”

அவள் பதில் வணக்கம் சொன்னாள்.

“நீங்க உங்க ஆபீசுக்குப் போக ஆரமிச்சிட்டீங்களா?” என்று கேட்டார்.

“இல்லே சார். அடுத்த திங்கக் கிழமைலேந்து போகணும்.”

எதிர்முனையில் சில வினாடிகள் மௌனத்தில் ஊர்ந்தன.

“நீங்க இன்னிக்கி எங்க ஆபீசுக்கு வர முடியுமா?”

“எத்தனை மணிக்கு சார்?”

“இப்போ ஒம்பதரை ஆகுது. பத்தரை, பதினோரு மணிக்கு?”

அவள் பதினோரு மணிக்கு அவரைச் சந்தித்தாள்.

அவர் அவளிடம் “இதோ பாரம்மா. உனக்கு என் பொண்ணு வயசு இருக்கலாம். அதனாலே நீன்னே உன்னைக் கூப்பிடறேன். நா சுத்தி வளைக்காம உங்கிட்டே சொல்லிடறேன். வாசு எங்க ஆபீஸ் பணத்தைக் கையாடல் செஞ்சிருக்கான்” என்றார்.

அதைக் கேட்டதும் அவள் உறைந்தாள்.

அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட ஐந்து நிமிஷமாயிற்று அவளுக்கு. ஜி.எம். மௌனமாக உட்கார்ந்திருந்தார்.

“எவ்வளவு பணம் சார்?”

அவர் குரலைச் செருமிக் கொண்டு “எட்டு லட்சம்” என்றார்.

“என்னது?”

“வாசு செத்துப் போறதுக்கு ரெண்டு நாள் முன்னதான், அதாவது அந்த வாரத் திங்கக்கிழமை ஆடிட்டர்ஸ் கண்டு பிடிச்சாங்க. திங்களும் செவ்வாயும் வாசுவை விசாரிச்சோம். அவன்தான் கஸ்டமர்களோட கணக்குகளைப் பாத்துக்கிறவன். பல பேர் கிட்ட கம்பனிலேந்து வித்த சாமான்களுக்கு கேஷ் கலெக்ட் பண்ணிட்டு கணக்குலே கொண்டு வராம கையாடல் செஞ்சிருக்கான். தான் அப்படி ஒண்ணும் செய்யலேன்னு அவன் அடம் பிடிச்சான். புதன் கிழமை காலேலே எங்க செக்யூரிட்டி இங்க வந்து ‘அவசரமா ஊருக்குப் போறேன். ரெண்டு நாளைக்கு லீவு லெட்டர் இது. காலேலே ஆபீஸ்லே கொடுத்துடு’ன்னு அவன் கையிலே வாசு முந்தின நாள் ராத்திரி கொடுத்துட்டுப் போனதா சொன்னான். மறுநாள் இன்ஸ்பெக்டர் வந்து நின்னாரு.”

“அப்போ வாசு தற்கொலை செஞ்சுக்கிட்டதா நீங்க நினைக்கிறீங்களா?”

அவர் அவளை உற்றுப் பார்த்தார். எதுவும் பேசாமல் சில நிமிஷங்கள் கடந்தன. பிறகு அவர் “வாசு செத்துப் போனது ஒண்ணுதான் உண்மையா இருக்கு. அவன் பாடி கிடைக்காம இருக்கறப்பவும் கூட. தற்கொலையா, ஆக்சிடெண்டான்னு எல்லாம் நாங்க உள்ளே போக விரும்பல. உன்கிட்ட உண்மையைச் சொல்லணும்னா இந்த எட்டு லட்ச நஷ்டத்தை விட நாங்க பெரிசா மதிக்கிறது எங்களோட கம்பனி பேரை. எங்க கஸ்டமர்கள் எங்க மேலே வச்சிருக்கிற நம்பிக்கை ரொம்ப முக்கியம். அது தவிர எங்க எம். டி.யோட பையன் இன்னும் மூணு மாசத்திலே இந்தக் கம்பனியோட எம்.டி.யா வர இருக்காரு. இப்பப் பாத்து எங்க கம்பனி பேரை வெளியிலே யாராவது இழுத்து அசிங்கமாப் பேச நாங்க இடம் கொடுக்க முடியாது. அதனாலேதான் நாங்க எங்க சைடிலேந்து போலீஸ் அது இதுன்னு கூடப் போகலே” என்றார்.

அவள் பிரமை பிடித்தவள் போல உட்கார்ந்திருந்தாள். வாசுவின் சாவை விட இந்த அவமானம் அவள் மீது மரண அடியாக விழுந்தது.

ஜி.எம். அவளிடம் “உன்கிட்டே இதெல்லாம் சொல்ல மட்டும் நான் கூப்பிடலே. இந்த ஃபிராடு கடந்த எட்டு மாசமா நடந்திருக்கு. இந்த பணத்தையெல்லாம் வாசு எங்கே வாரி விட்டான் தெரியுமா? ஷேர் மார்க்கெட்டுலே. நாங்க அவனோட ரெண்டு பேங்க் அக்கவுண்டையும் வாங்கி சல்லடை போட்டுப் பாத்துட்டோம். அவன் எடுத்த பணம் எல்லாம் புரோக்கர் கம்பனிக்குதான் போயிருக்கு. வாங்கி வித்த ஷேர்ல அவ்வளவு நஷ்டம். கம்பனி பணத்தை வச்சு விளையாடிட்டான். ஆனாலும் நான் எங்க கம்பனி ரிக்கார்டுக்காக உன் கிட்டே இதைக் கேக்கணும். இந்த எட்டு மாசத்திலே வாசு எங்கேயாவது நிலம், வீடு, நகை நட்டுன்னு கேஷ் கொடுத்து வாங்கினானா உனக்குத் தெரிஞ்சு ?”

அவள் தனக்குத் தெரிந்து அவன் அப்படி எதுவும் வாங்கவில்லை என்றாள்.

சற்று நேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள். செல்லா தனக்குக் குடிக்க நீர் கிடைக்குமா என்று கேட்டாள். அவர் தனது வலது பக்கத்து ஸ்டூலில் இருந்த தண்ணீர்ப் பாட்டிலை எடுத்து அவளுக்குத் தந்தார். அவள் அதிலிருந்த அவ்வளவு நீரையும் ஒரே மூச்சில் குடித்து விட்டாள். கைப்பையிலிருந்த கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டாள் .

பிறகு அவரைப் பார்த்து “நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்” என்றாள்.

“சொல்லும்மா.”

“இந்த எட்டு லட்சத்தையும் ஒரு கடனா நான் அடைச்சிரணும்” என்றாள்.

“என்னது?”

“ஆமா சார். இப்ப சித்த முந்தி நீங்க உங்க கம்பனி பேரு உங்களுக்கு முக்கியம்னு சொன்னீங்கல்லே. அதே மாதிரி எனக்கும். இதை உங்களுக்குத் திருப்பிக் கொடுத்தாதான் என்னைப் பத்தி நானே கௌரவமா நினைச்சுக்க முடியும். இல்லாட்டா இந்த அவமானத்தை நான் சாகற மட்டும் தூக்கிட்டுத் திரியணும். அது என்னாலே முடியவே முடியாத காரியம்” என்றாள்.

ஜி.எம். அவளை அதிர்ச்சியுடன் பார்த்தார். அவர் கண்களிலும் முகத்திலும் தென்பட்ட திக்பிரமையைச் செல்லா பார்த்தாள்.

“நீ என்னம்மா சொல்றே? இது நடக்கற காரியமா?”

“நான் வேலை பாத்து மாசச் சம்பளம் வாங்கறேன்லே. வாயைக் கட்டி வயித்தைக் கட்டி மாசா மாசம் உங்க கிட்டே வந்து கட்டறேன்.
ஒரு பத்து வருஷத்துக்குள்ளே கட்டிற மாட்டேனா? நீங்க அதுக்கு மாத்திரம் டயம் கொடுக்கணும் எனக்கு” என்றாள் செல்லா.

ஜி. எம். அவளிடம் “ஒரு அஞ்சு நிமிஷம் இங்கியே இரு. நான் வந்திடறேன்” என்று சொல்லி விட்டு வெளியே சென்றார். சொன்னபடி ஐந்து நிமிஷத்தில் திரும்பி விட்டார்.

“உன்னை எங்க எம்.டி.பாக்கணுங்கிறாரு. வா போகலாம்” என்று அழைத்துச் சென்றார்.

எம்.டி.யின் அறையில் ஏசியின் குளிர்ச்சி படர்ந்திருந்தது. ஜி.எம். அவளை எம்.டி.க்கு அறிமுகப்படுத்தினார். அவள் அவருக்கு வணக்கம்செலுத்தினாள். அவர் அவளைப் பார்த்து “உக்காரு” என்று அங்கிருந்த நாற்காலியைக் காட்டினார். வயதானவராக இருந்தார். பளீரென்று வெள்ளை நிறம். அகன்ற நெற்றி. தீர்க்கமான நாசி. முன்தலையில் முடியைச் சன்மானமாக அனுபவம் எடுத்துக் கொண்டிருந்தது. எதிராளியிடம் பணிவை ஏற்படுத்தும் உருவம் என உட்கார்ந்திருந்தார்.

“நீ எங்கே வேலை பாக்கறே?” என்று கேட்டார்.

அவள் சொன்னாள்.

“எவ்வளவு வருஷமா?”

“பனிரெண்டு வருஷமா சார்.”

“என்ன மாதிரியான வேலை?”

“அக்கவுண்ட்ஸ் பாத்துக்கறேன் சார்.”

“உனக்கு மேலே அக்கவுண்ட்ஸ் மேனேஜர்னு யாரு இருக்கா?”

“அப்படி யாரும் இல்லே. எனக்கு பாஸ் கடைக்கு சொந்தக்காரர்தான்.”

“அப்ப ஆடிட்டு, டாக்ஸ் மேட்டர்ஸ்லாம்?”

“நான்தான் சார் ஆடிட்டர்கிட்டே கணக்கை ஒப்படைச்சு மத்த வேலை
களையும் பாத்துக்கறேன்” என்றாள் அவள்.

“என்ன சம்பளம் கொடுக்கறாங்க?”

அவள் சொன்னாள்.

“இது உன் குடும்ப செலவுக்கே ஆயிரும். எங்கே இருந்து நீ எங்களுக்குப் பணம் கொடுக்கறது?”

அவள் முதல் தடவையாக எம்.டி.யின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தாள்.

“நீங்க பெரியவங்க. இவ என்னடா சின்னப் பொண்ணு இப்படிப் பேசறான்னு தப்பா நினைச்சிராதீங்க. இங்க வரதுக்கு முன்னாலே நான் ஜி.எம்.சார் கிட்டே சொன்னேன். இந்த அவமானத்தோட நான்,அதாவது என் மனசு, உயிர் வாழறதுக்கு எடம் கொடுக்காதுன்னு. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பொறுத்துகிட்டு நான் பணத்தைத் திருப்பிக் கொடுத்தே ஆகணும் சார். நான் உங்க கிட்டே கேக்கற தெல்லாம், திருப்பிக் கொடுக்க எனக்கு கொஞ்சம் ஜாஸ்தி டயம் கொடுங்கன்னுதான்” என்றாள் செல்லா.

எம்.டி. அவளைக் கனிவுடன் பார்ப்பதை அவள் உணர்ந்தாள்.

“உலகம் கெட்டுப் போச்சுன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை வாசுக்களைப் பாத்து புலம்பற ஜனங்க கிட்டே உலகத்திலே நல்லதும் நடக்கறதைப் பாருங்கடான்னுதான் கடவுள் உன்னை மாதிரிக் கொஞ்சப் பேரையும் படைச்சு அனுப்பிருக்கான் போல” என்று எம்.டி. சொன்னார். தொடர்ந்து “வாசு ஒரு முட்டாள். கடவுள் அவனுக்கு கொடுத்த வைரத்தை வெறுங்கல்லுன்னு கீழே போட்டுட்டுப் போய்ச் சேர்ந்திருக்கான் பாரு” என்றார். பிறகு “நீ ஜி. எம். ரூம்லே போய்க் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு. நீ மாசா மாசம் எவ்வளவு கட்டணும்னு பேசிட்டு சொல்றேன்” என்றார்.

செல்லா ஜி.எம். அறைக்குச் சென்றாள். பத்து வருஷம் அவளுடன் வாழ்ந்தவன் இவ்வளவு பெரிய அயோக்கியத்தனத்தை செய்ததும், அவன் நடித்து அவளை ஏமாற்றி விட்டதும் தாங்கவொண்ணாத வலியை ரணகளத்தை மனதில் ஏற்படுத்தின. இனி வரும் நாள்களில் சொல்ல முடியாத பொருளாதாரச் சுமையைத் தலையில் சுமந்து கொண்டு நடமாட வேண்டும். இத்தகைய வாழ்வில், அவள் குழந்தை படவிருக்கும் கஷ்டங்களை நினைத்த போது துக்கம் பீறிட்டுக் கொண்டு வந்தது.

சற்றுக் கழித்து அறைக் கதவைத் திறந்து கொண்டு ஜி.எம். வந்தார். தன் இடத்தில் உட்கார்ந்து கொண்டு செல்லாவிடம் “உனக்கு இந்தக் கம்பனியில் வேலை பாக்க இஷ்டமான்னு எம்.டி. கேக்கறாரு” என்றார்.

அவள் தாங்க முடியாத ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தாள்.

“நீ இவ்வளவு யோக்கியமான பெண்ணாயிருக்கியேன்னு அவர் சொல்லிச் சொல்லி மாஞ்சு போயிட்டாரு. அதனாலேயே உன்னோட ரெக்கார்டுகளைப் பாக்கறது, உன்னைய இன்டெர்வியு பண்ணுறதுங்கிற ரொடீனை எல்லாம் மூட்டை கட்டி வைன்னு என்கிட்டே சொல்லிட்டாரு” என்றார். “நீ இப்ப வாங்கற சம்பளத்தை விடக் கொஞ்சம் ஜாஸ்தியா இங்கே உனக்குக் கிடைக்கும். உன் குணத்துக்கு மட்டுமில்லே, உன்னோட எக்ஸ்பீரியன்சுக்கும் சேத்துதான் இந்த சம்பளம். இந்த எக்ஸ்ட்ரா பணமும் உனக்கு கடனைத் திருப்ப கொஞ்சம் ஹெல்ப் பண்ணும்லே?”

பதினைந்து நாள்கள் கழித்து செல்லா புதிய நிறுவனத்தில் வேலைக்கு வந்தாள்.

& & &

பட்டுவின் புதிய வீடு அட்டகாசமாக இருக்கிறது என்று செல்லா சிநேகிதியைப் பாராட்டினாள். காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பித்த பூஜைகள் முடியப் பனிரெண்டு மணியாகி விட்டது. சாப்பிட்ட பின் பட்டு செல்லாவிடம் “நேத்தி ராத்திரி வேறே உனக்கு சரியா தூக்கம் இருந்திருக்காது. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோயேன்” என்று தனியறைக்கு அழைத்துச் சென்றாள். அவளை விட்டு விட்டு அங்கிருந்து கிளம்பும் போது பட்டு அவளிடம் “ராத்திரி டிரெயின் எத்தனை மணிக்கு?” என்று கேட்டாள்.

“ஒம்பதரைக்கு” என்றாள் செல்லா.

“அப்ப ஒரு நாலரை அஞ்சு மணிக்கு இங்கே பக்கத்திலே பாப்பன்சாவடி கிட்டே ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கு. பன்னெண்டு ஏக்கர்லே பிரமாதமா கட்டியிருக்கா. முப்பது அடிக்கு மேலே ஒரே கல்லிலே கட்டின ஆஞ்சநேயரைப் பாக்கவே கண் கொள்ளாது. இவருக்கு ஆஞ்சநேயர் குலதெய்வம். போய்ப் பாத்துட்டு வரலாமா?” என்று கேட்டாள் பட்டு.

செல்லாவும் பட்டுவும் அவள் கணவருமாகக் காரை எடுத்துக் கொண்டு சென்றார்கள். கோவில் முகப்பிலிருந்து பார்க்கையிலேயே உள்ளே நின்ற பிரும்மாண்டமான ஐந்து முக ஆஞ்சநேயரின் வடிவம் தெரிந்தது. பிரகாரத்துக்கு வெளியே பச்சை மரங்கள் கண்ணில் பட்டன. கோயிலைச் சுற்றிப் படர்ந்திருந்த அமைதியும் புஷ்பங்களின் வாசனைகளும் செல்லாவின் மனதை ஈர்த்தன.

கோயிலில் பட்டு அர்ச்சனை செய்த பின் அவர்கள் வெளியே வந்தார்கள். அருகிலிருந்த கட்டிடத்தைக் காண்பித்து பட்டு செல்லாவிடம் “இது ஒரு டிரஸ்ட்டு. நாங்க வருஷா வருஷம் காணிக்கையா பணம் கொடுப்போம். நீயும் உள்ளே வரயா?” என்று கேட்டாள்.

“இல்லே. நீ போயிட்டு வா பட்டு. சும்மா நான் இங்கே நின்னு வேடிக்கை பாத்துண்டு இருக்கேன்” என்றாள் செல்லா.

மெயின் ரோடில் பஸ்களும் கார்களும் லாரிகளும் வேகமாகச் சென்றன. அவள் சாலையை ஒட்டிய மண்பாதையில் நடந்தாள். மாலை வேளையின் மயக்கத்தைச் சுமந்து கொண்டு பொழுது மங்கிக் கொண்டிருந்தது. வீடு திரும்பும் பறவைக் கூட்டம் ஒன்று வானில் ஓர் ஓவியத்தை வரைந்து கொண்டு சென்றது. கலைந்த முடியும் அலுப்பு முகமுமாக சில பெண்கள் பேசியபடி எதிரில் வந்தார்கள். பலமாக வீசினாலும் காற்று இதமாக இருந்தது. மண் பாதையாதலால் காற்றில் எழும்பி வந்த மண் துகள்கள் முகத்தையும் கண்களையும் தாக்குவதிலிருந்து தப்பிக்க செல்லா புடவைத் தலைப்பை இழுத்துக் கும்டா போட்டுக் கொண்டாள். கர்சீப்பை எடுத்து மூக்கைப் பொத்திக் கொண்டு நடந்தாள்.

அப்போது அவளை ஒட்டிச் சென்ற ஒரு பஸ் கொஞ்ச தூரம் சென்று நின்றது. அது எழுப்பிய புழுதியால் அவள் நடப்பதை நிறுத்தி விட்டு நின்றாள். பஸ் கண்டக்டர் “பாப்பஞ்சாவடி எல்லாம் இறங்குங்க” என்று சத்தம் போடுவது அவளுக்குக் கேட்டது. இரண்டு மூன்று பேர் இறங்கி அவளுக்கு முன்னால் சென்றார்கள். மறுபடியும் பஸ் புழுதியையும் புகையையும் கிளப்பிக் கொண்டு புறப்பட்டது. செல்லாவின் பார்வை முன்னால் சென்று கொண்டிருந்தவர்களின் மீது விழுந்தது.

அப்போது அவள் கண்ட காட்சியில் இதயம் நின்று விடும் போலிருந்தது.

இடது காலை விட வலது காலைப் பாதையில் வைக்கும் போது வலது கால் வளைந்து ஏறி இறங்கும் நடை, அதே சமயம் இடது கை முதுகில் படுத்தாற்போல சாய்ந்திருந்தது. பத்து வருஷமாகப் பார்த்த நடை, உடல். அவளால் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் எங்காவது திரும்பிப் பார்த்து விடுவானோ என்று செல்லா அஞ்சித் திரும்பி நின்று கொண்டாள். சில நிமிடங்கள் கழிந்ததும் ஆவல் உந்த லேசாகத் திரும்பி ஓரக் கண்ணால் பார்த்தாள். அவன் அப்போது சாலையைக் கடந்து வலது பக்கம் சென்ற பாதையில் நடந்தான். பக்கவாட்டில் தெரிந்த முகத்தை மறைக்க முயன்ற அடர்ந்த தாடி.

அவனைப் பார்த்ததும் தனக்குப் படபடப்பு ஏற்பட்டாலும் அவனை நெருங்கிப் பேச விடாமல் தன்னைத் தடுப்பது என்ன என்று அவள் மனதில் கிலேசம் உண்டாயிற்று. சரிந்து போய் விட்டது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட வாழ்க்கையில் தெய்வம் ஏதோ ஒரு வகையில் தன் கருணையைக் காண்பித்து அவள் மேலே எழுந்து நிற்க உதவியது. மறுபடியும் சறுக்கலுக்குத் தயாராகும் காட்சியைத்தான் இப்போது அவள் கண்டாளா என்று அடிவயிற்றிலிருந்து பயம் எழுந்தது. குழந்தையின் முகமும், ஆபீஸ் நினைவும் ஏனோ மனதில் எழுந்து விரிந்தன.

அவள் வந்த வழியே திரும்பிக் கோயில் அருகே சென்ற போது பட்டுவும் அவள் கணவரும் கார் அருகில் நின்று கொண்டிருந்தார்கள். அவள் அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வாயைத் திறக்கும் முன் பட்டு “நாங்களும் இப்பதான் வந்தோம். ஏன் உன் மூஞ்சி என்னமோ போலிருக்கு? அலைச்சல் ஒத்துக்கலை உனக்கு. இன்னிக்கி ஒரு நாள் இங்கே இருந்துட்டு நாளைக்குக் கிளம்பியிருக்கலாம் ” என்றாள்.

செல்லா புன்னகை செய்தபடி காரில் ஏறிக் கொண்டாள்.

பெங்களூரை வந்து அடைந்ததும் செல்லா நேரே அம்மாவின் வீட்டுக்குப் போய் விட்டாள் . குழந்தை அவளை பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டான். “என்னடா, பாட்டியை ரொம்பத் தொந்தரவு பண்ணியா?” என்று அவன் தலைமயிரைக் கோதினாள்.

“ஐயோ, அவன் ரொம்ப சமத்துன்னா? அடம் பிடிக்காம நேரத்துக்கு சாப்டுண்டு, ஆத்துக்குள்ளேயே விளையாடிண்டு…ராஜாப் பயல்னா அவன்!” என்று அம்மா பரிந்து கொண்டு வந்தாள்.

“இவன் அம்மா செல்லம் ஆச்சே! ஏதாச்சும் தப்பு பண்ணினாக் கூடப் பாட்டி விட்டுக் கொடுக்க மாட்டா!” என்று செல்லா சிரித்தாள்.

குழந்தையை ஸ்கூலில் கொண்டு போய் விட்டு விட்டு அவள் வீட்டுக்குள் நுழைந்த போது கூடத்தில் அம்மாவுடன் கணபதி வாத்தியார் பேசிக் கொண்டிருந்தார்.

“வாங்கோ மாமா” என்றாள் செல்லா.

“நீ எப்படிம்மா இருக்கே?” என்று அவர் கேட்டார். “ஆபீசுக்குக் கிளம்பணு
மோல்லியோ?”

அவள் ஆமென்று தலையசைத்தாள்.

“நான் உங்க ரெண்டு பேரையும் பாத்து சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். அடுத்த வெள்ளிக்கிழமை அமாவாஸ்யை திதி வரது. வாசுவோட வருஷாப்திகம் பண்ணனும். நான் காலம்பற எட்டு மணிக்கு வந்துடறேன். ரெண்டு பிராமணாளுக்கு எலை போட்டு தக்ஷிணை கொடுக்கணும். உங்களுக்குத் தெரியாததா?” என்றார்.

செல்லா அம்மாவைப் பார்த்தாள்.

அம்மா அவரிடம் “சரி, எட்டு மணிக்கு வந்துடுங்கோ” என்றாள்.

கணபதி வாத்தியார் செல்லாவிடம் “அன்னிக்கி நீதாம்மா எல்லாக் காரியமும் பண்ணனும்” என்றார்..

“அதிலென்ன கஷ்டம்?” என்றாள் செல்லா.

இதுவொரு அதிசய உலகம்

எஸ். சுரேஷ்

மளிகை கடையை கடக்கும்பொழுது மீண்டும் அதே கேள்வி, “நர்சிங் வந்தானா?” இந்த கேள்வி சிதம்பரத்திற்கு எரிச்சல் தந்தது. “அப்பா, நாம பெங்களூருல இருக்கோம். நமக்கு நர்சிங்ன்னு யாரையும் தெரியாது. நாம இருக்கற இடம் மல்லேஷ்வரம். நான் உன் பிள்ளை, சிதம்பரம். நீ பி.எஹ்.ஈ.எல்ல வேலை செஞ்சு ரிடயர் ஆயிட்டே. நமக்கு நர்சிங்ன்னு யாரையும் தெரியாது.”

சிதம்பரத்தின் தந்தை சண்முகம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் கன்சல்டன்ட்டாக பணி புரிந்தார். அந்த வேலையை விட்ட பிறகு அவருக்கு டிமென்ஷியா வந்தது. அல்ஜேமர்ஸ் நோயும் வரும் அறிகுறி இருக்கிறது என்று டாக்டர்கள் சொன்னார்கள். இப்பொழுது அவருக்கு மறதி முற்றி விட்டிருந்தது. சிதம்பரத்தின் அப்பாவும், அம்மாவும் ஒரு குடியிருப்பில் தனியாக இருந்தார்கள். தினமும் மாலை வேளையில் சிதம்பரம் அங்கு சென்று அப்பாவை வாக்கிங் கூட்டிக்கொண்டு போவது வழக்கம். அந்த மளிகை கடையை கடக்கும் பொழுது, அப்பா தவறாமல் கேட்கும் கேள்வி, “நர்சிங் வந்தானா?”

“யாரும்மா இந்த நர்சிங்?” என்றுதன் அம்மாவிடம் சிதம்பரம் கேட்டான். “தெரியலடா. பேர கேட்டா ஏதோ தெலுங்கு ஆளு பேரு போல இருக்கு. கல்யாணத்துக்கு முன்ன அப்பா ஹைத்ராபாத்ல வேலைல இருந்தாரு. அங்க அவருக்கு தெரிஞ்ச ஆளா இருக்கலாம்.” “உன் கிட்ட  இந்த பேர எப்பவும் சொன்னதில்லையா?” “இல்ல. எந்த காலத்து நினைவோ தெரியல.” “அது எப்படி எந்த காலத்து நினைவோ மனசுல தங்கி இருக்கு? நாம யாருன்னு அவருக்கு தெரியல. ஏதோ ஒரு நர்சிங் பற்றி தினமும் கேக்குறாரு. ஒரே விசித்திரமா இருக்கு.”

சிதம்பரத்துக்கும், அவன் அம்மாவுக்கும் இந்த நோயை எப்படி எதிர்கொள்வது என்று புரியவில்லை. முதலில் அவர்கள் ஏதோ சிலவற்றை சண்முகம் மறந்துவிடுவார் என்றும் பலது அவர் நினைவில் இருக்கும் என்றும் நம்பினார்கள். டாக்டர்கள் இதை இர்ரிவர்சிபில் வியாதி என்று சொன்ன போதும் அப்பாவை குணப்படுத்திவிட முடியும் என்றே நினைத்தார்கள். ஒருவர் வாழ்கையில் நடந்ததை முழுவதுமாக மறந்துவிட முடியும் என்பதை அவர்கள் நம்பவில்லை. தனக்கு வெகு நெருக்கமானவர்களையும் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடும் என்பதையும் அவர்கள் மனம் ஏற்க மறுத்தது.

ஆனால் டாக்டர்கள் சொன்னது போல், சண்முகம் எல்லாவற்றையும் மறக்க ஆரம்பித்தார். இப்பொழுது அவருக்கு தன் மனைவி லக்ஷ்மி யார், தன் மகன் யார், அமெரிக்காவில் இருக்கும் தன் பெண் யார் என்பது எதுவும் நினைவில் இல்லை. யாரோ தனக்கு சாப்பிடத் தருகிறார்கள், தான் சாப்பிட வேண்டும். இதுதான் அவர் மனதில் ஓடிக்கொண்டிருப்பது போல் இருந்தது.

நோய் முற்ற, அவர் அடிக்கடி கோபம் கொள்ள ஆரம்பித்தார். அவருக்கு உணவு கொடுப்பது பெரும்பாடாக ஆனது. சில சமயங்களில் தட்டை தட்டி விடுவார். வீட்டை விட்டு வெளியே போகப் பார்ப்பார். யாராவது தடுத்தால் அவர்களை வேகமாக தள்ளிவிட பார்ப்பார். அம்மாவுக்கு துணையாக ஒரு பெண்மணியை சிதம்பரம் அமர்த்தியிருந்தான். சில சமயங்களில் இருவர் பிடித்துக் கொண்டாலும் திமிறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற பார்ப்பார். “நாளுக்கு நாள் உங்க அப்பா கோவம் அதிகம் ஆவுது தம்பி” என்று வேலைக்கு வைத்திருந்த பெண்மணி கூறினாள்.

இப்படி இருந்தபொழுதும், சிதம்பரமும் அவன் அம்மாவும், அப்பாவிற்கு பழையதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார்கள். “இதுனால ஏதாவது உபயோகமுண்டா?’ என்ற சிதம்பரத்தின் கேள்விக்கு, அம்மா, “ஏதோ ஒண்ணு நடந்தது அவர் மனசில் ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருக்கும். அதை நாம அவருக்கு சொன்னா, அவர் நினைவு திரும்பி வரலாம். ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு அவர் யாருனு புரிஞ்சி, நாம யாருன்னு அவருக்கு  நினைப்பு வந்தா போதும். மறுபடியும் ஒரு முறை என்ன லக்ஷ்மின்னு கூப்பிடணும். அதுதான் என் பிரார்த்தனை. நாம செய்யறதைச் செய்வோம்” என்றாள். சிதம்பரமும் முடிந்தபொழுதெல்லாம் அப்பாவுக்கு தான் யார் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருந்தான். இருப்பினும் அவர் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார், “நர்சிங் வந்தானா?”

“வள்ளி டிக்கெட் புக் பண்ணிட்டாளாம். அடுத்த வாரம் வருவா” என்று அம்மா சொன்னாள். வள்ளி சிதம்பரத்தின் அக்கா. அவள் அப்பாவை போல் ‘மெக்கானிக்கல் இஞ்சினியர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டு படித்து, இப்பொழுது சிதம்பரம் போல் அவளும் ஐ.டி. நிறுவனத்தில் கணவனுடன் அமெரிக்காவில் இருக்கிறாள். அப்பாவை பார்க்க வரவேண்டும் என்று அவள் நினைத்தபொழுது உலகமே கொரொனா வியாதியின் காரணமாக மூடப்பட்டது. நான்கு வருடத்துக்குப் பின் இப்பொழுதுதான் அவளால் வரமுடிகிறது. “ஏண்டா, அவளையாவது நேர்ல பாக்குறப்போ உங்க அப்பாவுக்கு அடையாளம் தெரியுமா?” என்ற அம்மாவின் கேள்விக்கு, “தெரிஞ்சா நல்லா இருக்கும்” என்று சிதம்பரம் பதில் கூறினான்.

“இத பார் சிது. உங்க அக்கா வந்து உன் அப்பா அம்மாவை நம்ம கூடவே வச்சிக்க சொன்னா நீ முடியாதுன்னு  ஸ்டராங்கா சொல்லு. இங்க என்னால வேலைக்கு போயி, ரெண்டு குழந்தைகளை பாத்துண்டு உங்க அம்மா அப்பாவையும் பாத்துக்க முடியாது. நீ தினமும் அங்க போ. எவ்வளவு நேரமானாலும் அவங்களோட இரு. ஆனா அவங்கள இங்க கொண்டு வரத பத்தி யோசிக்காத. அத நான் நடக்க விடமாட்டேன். சொல்லிட்டேன்” என்று சிதம்பரத்தின் மனைவி  ஷ்வேதா சொல்லி விட்டாள். வள்ளி என்ன சொல்லப் போகிறாளோ என்ற அச்சம் சிதம்பரத்திற்கும் ஷ்வேதாவிற்கும் இருந்தது. “இதுக்கு மேல நம்மால ஒன்னும் செய்ய முடியாது. உங்க அக்கா இது சரியில்ல அது சரியில்லன்னு ஏதாவது சொன்னா அவளை இந்தியாவுக்கு திரும்பி வர சொல்லு. அவ சொல்றத எல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா நிக்காத” என்று ஷ்வேதா அறிவுரை கூறினாள

வள்ளி அப்பாவை வந்து பார்க்கும் நாளை லக்ஷ்மி வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். தன் கணவனுக்கு ஆசை மகளை பார்க்கும்பொழுது சற்று நினைவு திரும்பாதா என்ற ஒரு நப்பாசை அவளுக்குள் இருந்தது. ஆனால் அவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. தான் மிகவும் நேசித்த மகளை அப்பா அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இவ்வளவு வருடங்கள் அடக்கி வைத்திருந்த கண்ணீர் அன்று வெளிவந்தது. தன் மகளை இறுக்கமாக கட்டிக்கொண்டு லக்ஷ்மி கேவி கேவி அழுதாள்.

அடுத்த நாள் மாலை சிதம்பரம் அப்பாவுடன் வாக்கிங் கிளம்பும்பொழுது வள்ளியும் சேர்ந்து கொண்டாள். மளிகை கதையை கடக்கும்பொழுது அப்பா, “நர்சிங் வந்தனா?” என்று கேட்டார். சிதம்பரம் பதில் கூறுவதற்குள், வள்ளி, “காலைல வந்தானே” என்று கூறினாள்.

“ஓ. ஸைன் வாங்கிண்டு போனானா?”

“ஆமாம்.”

“அப்படின்னா சரி. நான் ஸைன் போட்டாதான் லாரிய கேட் வெளியிலே விடுவான்”

“அவன் சொன்னான்.”

சற்று தூரம் அப்பா மௌனமாக வந்தார். அவர் முகத்தில் பல நாட்களுக்கு பிறகு சிதம்பரத்தால் சிரிப்பை பார்க்க முடிந்தது. சிறிது நேரம் கழித்து, “அந்த ஸ்ரீநிவாஸ் ரெட்டி இன்னிக்கி வரமாட்டான்.”

“அப்படியா? ஏன்?” வள்ளி கேட்டாள்

“அவன் பெண் பார்க்க போறான்.”

“நீங்க எப்போ கல்யாணம் கட்டிக்க போறீங்க?”

அப்பா உரக்க சிரித்தார். “அப்பா அம்மா பெண் தேடராங்க. பார்போம்.”

வாக்கிங் முடியும் வரை சிதம்பரம் அறியாத பலரை பற்றி அப்பா கேட்க, வள்ளி அவர்களை அறிந்தவள் போல் பதில் அளித்துக் கொண்டிருந்தாள்.

அப்பா சிரித்துக் கொண்டிருப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளித்தாலும், வள்ளி செய்வது சரியில்லை என்று சிதம்பரத்துக்குப் பட்டது. அம்மாவும் இவனும் அவரை இந்த உலகத்தில் வைத்திருக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கும்போது வள்ளி அவரை வேறொரு உலகத்துக்கு கொண்டு செல்கிறாள். வள்ளி ஒரு மதியம் வீட்டுக்கு வந்தாள். அவளிடம் சிதம்பரம், “வள்ளி. நீ அப்பாகிட்ட அவர் சொல்றதெல்லாம் நிஜம்ன்னு நினைக்கற போல நடந்துக்கற. இது அவர் மறதியை இன்னும் அதிகமாக்கும். நாங்க அவர இந்த நிஜ உலகத்துக்கு கொண்டு வரணும்னு பாக்கறோம். அவருக்கு எங்களை தெரியாமலே போயிடும்னு பயமா இருக்கு” என்றான்.

வள்ளியின் சிரித்தாள். “சிது, ஒருவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அதுதான் அவருடைய உலகம். நமக்கு இந்த உலகம் எவ்வளவு நிஜமோ அதே போல் ஸ்ரீநிவாஸ் ரெட்டியும் நர்சிங்கும் வாழும் உலகம் அவருக்கு நிஜம். நாம எவ்வளவு படுத்தினாலும் அவர நம்ப உலகத்துக்கு கொண்டுவர முடியாது, அவருக்கு இங்க யாரோடயும் ஒட்டாது நாமும் கஷ்டப்பட்டுக்கிட்டு அவரையும் கஷ்டப்படுத்தறதுக்கு பதிலா நாம அவர் உலகத்துல அவரோட சேர்ந்து இருக்கலாம் இல்லையா?” என்றாள்.

அன்று மாலை சிதம்பரத்தை பார்த்தவுடன் அப்பா கேட்டார், “ராகவ் ராவ் ரா மெட்டீரியல் ரிலீஸ் பண்ணிட்டானா?”

ஒரு நொடி வள்ளியை உற்று நோக்கிவிட்டு, சிதம்பரம் சொன்னான், “நாள காலைலதான் ரிலீஸ் பண்ணுவேன்னு சொல்றாரு.”

தாது

ஸிந்துஜா

அன்று கடைசி நாள் பள்ளிக்கூடம் என்று வாணி ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து விட்டாள். அவள் ஆறாம் வகுப்பு படிக்கிறாள். வீட்டுக்குள் நுழையும் போதே “அம்மா, பசிக்குது” என்று கத்தியபடி சமையலறையை நோக்கிப் பாய்ந்தாள். ஆனால் சட்டென்று ஓட மறுத்துக் கால்கள் நின்று விட்டன. அவளுடைய வீட்டில் பாட்டி இருக்கும் அறை வாசலில் பாட்டியின் சிறிய பெட்டியும் ஒரு துணிப்பையும் உட்கார்ந்திருந்தன. அவள் ஆச்சரியத்துடன் பாட்டியின் அறை வாசலுக்குச் சென்றாள் . உள்ளே எட்டிப் பார்த்த போது பாட்டி கட்டிலின் மேல் இருந்த போர்வையை மடித்துக் கொண்டி
ருந்தாள். இவள் வருகையை உணர்ந்தவள் போலப் பாட்டி திரும்பிப் பார்த்து “வாடி சின்னவளே!” என்று வழக்கம் போல அழைத்தாள். வாணிக்கு அக்கா கிடையாது என்றாலும்.

“பாட்டி, எங்க ஊருக்கா?” என்று வாணி கேட்டாள். பாட்டி வழக்கமாக அணியும் சாயம் போன புடவையிலிருந்து பார்க்கக் கூடிய ஒரு புடவைக்கு மாறியிருந்தாள். எப்போதும் தலைமயிரைக் குடுமி போலக் குவித்துக் கொண்டு அலட்சியத்தைக் காண்பிக்கும் தலையை இன்று நேர்த்தியாக வாரி நெற்றியில் விபூதி பூசியிருந்தாள்.

அப்போது மாணிக்கம் வீட்டுக்குள் வந்தார். “என்னப்பனே முருகா!” என்று சத்தமாகச் சொல்லியபடி ஹாலில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். சத்தம் கேட்டுக் கலாவதி கையில் தண்ணீர் ஜக்கோடு வந்து கணவரிடம் கொடுத்தாள். அவர் ஒரே வாயில் அவ்வளவு நீரையும் குடித்து விட்டார்.

“இப்படித் தண்ணியைக் குடிச்சு வயித்தை ரொப்பினா எப்ப சாப்பிடறது?” என்று அறையிலிருந்து வெளியே வந்த பாட்டி கடிந்து கொண்டாள்.

அவளைப் பார்த்ததும் மாணிக்கம் “எங்கம்மா கிளம்பிட்டே?” என்று கேட்டார்.

“அதான் நானும் கேட்டேன்” என்றாள் வாணி.

பாட்டி இருவரையும் பார்த்தாள். அங்கே நின்ற கலாவதியை அவள் பார்வை தொடவில்லை.

“ஆமா. சிவகாமியப் பாத்திட்டு நாலு நாள் இருந்திட்டு வரலாம்னு…”

சிவகாமி வாணியின் அத்தை. பக்கத்தில் மாலூரில் கொடுத்திருந்தது.

“இப்பதானேம்மா அங்க போயிட்டு வந்தோம்?”

“இப்பவா? அதுவும் அஞ்சு மாசமாச்சே!” என்றாள் பாட்டி.

“அஞ்சா? வாணிக்கு பிறந்த நாளன்னிட்டு ஜனவரி முப்பதாம் தேதி எல்லாருமா இங்கேந்து கிளம்பி சிவகாமி வீட்டுக்குப் போயி கொண்டாடினோம். அப்புறம் நாங்க மட்டும் உடனே திரும்பிட்டோம். நீ பத்து நாள் கழிச்சு திரும்பி வந்தே. இன்னிக்கி மே மூணாம் தேதி…” என்ற அவரைப் பாட்டி இடைமறித்தாள்.

“ஆமா, ஜனவரி, பிப்ருவரி, மார்ச்சு, ஏப்ரலு, மேன்னு அஞ்சு மாசம் ஆயிருச்சுல்லே?”

மாணிக்கம் அவளைத் திகைப்புடன் பார்த்தார். “அடேயப்பா! என்னா கணக்கு! உங்கிட்ட சகுந்தலா தேவியே பிச்ச வாங்கணும்.”

“அது யாரு தேவி? சினிமாக்காரியா?” என்று பாட்டி கேட்டாள்.

“ஆமா. சிவாஜியோட ஜோடியா நடிச்சா.”

அதைக் கேட்டு வாணி சிரித்தாள். கலாவதி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

பாட்டி மருமகளை எரிக்கும் பார்வையால் சுட்டு விட்டு ஒன்றும் பேசாமல் உள்ளே நடந்தாள்.

சமையலறைக்குத் திரும்பிச் சென்ற கலாவதி “எல்லோரும் சாப்பிட வாங்க” என்று அங்கிருந்து குரல் கொடுத்தாள்.

வாணி உள்ளே சென்ற போது மாணிக்கமும் அவளைப் பின் தொடர்ந்தார்.

சமையலறையில் கலாவதி கணவனைப் பார்த்து “போயிட்டு வரதுன்னு நினைச்சப்பறம் நாலு நாள் என்ன, நாலு மாசம் இருந்துட்டு வரவேண்டியதுதானே?” என்றாள் மெல்லிய குரலில்.

“நாலு மாசமா? சரியாப் போச்சு. சிவகாமி விட்டாக் கூட அவ புருஷன் விடமாட்டானே. பாரு இப்ப அஞ்சாம் நாளே கார்லே கொண்டு வந்து விட்டுட்டுப் போயிருவான்” என்றார் மாணிக்கம்.

“இந்த விளக்குமாத்துக் கட்டைக்குத்தான் இத்தனைப் பட்டுக் குஞ்சலம்” என்றாள் கலாவதி.

“அம்மா, சும்மா இரு. பாட்டி வந்துரும்” என்று வாணி எச்சரித்தாள்.

“அதெல்லாம் வர மாட்டாங்க. கோபத்துல இருக்காங்க. மகன் போய் சமாதானப்படுத்திக் கூப்பிட்டாதான் சாப்பிட வருவாங்க” என்றாள் கலாவதி.

மாணிக்கம் “சரி அப்ப நான் சமாதானப் புறாவை எடுத்துகிட்டுப் போயி பேசிக் கூட்டியாறேன்” என்று கிளம்பினார்.

அவர் திரும்பி வரப் பத்து நிமிஷமாயிற்று. அதற்குள் கலாவதி சமையல் அறையிலிருந்து சமைத்து வைத்திருந்த பாத்திரங்களை ஹாலில் போட்டிருந்த டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்தாள். வாணி பிரிஜ்ஜிலிருந்து தயிர் பாத்திரத்தையும் ஊறுகாய் பாட்டிலையும் கொண்டு வந்து மேஜையில் வைத்து விட்டு . எல்லோருக்குமான தட்டுக்களை எடுத்து வந்து போட்டாள்.

மற்ற மூவரும் உட்கார்ந்து கொள்ள கலாவதி தட்டுகளில் பரிமாறினாள்.

“அம்மாவை மூணு மணி டிரெய்ன்லே ஏத்தி விட்டா போறேங்கறாங்க. எனக்குதான் இன்னிக்கி லீவு எடுக்க முடியாம இருக்கு. நாளைக்கி போகலாமா அம்மா? நா கொண்டு போய் விட்டுடறேன்” என்றார். மதியம் மூன்று மணி வாக்கில் மரியகுப்பம் வண்டி கிளம்புகிறது. அதில் போனால் ஒரு மணி நேரத்தில் மாலூரை அடைந்து விடலாம். மறுநாள் காலையில் ஒன்பது மணிக்கு அங்கு வரும் ரயிலைப் பிடித்தால் பத்து மணிக்குப் பெங்களூர் வந்து விடலாம்.

பாட்டி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டதை வாணி பார்த்தாள்.

“கிளம்பணும்னு எல்லாத்தையும் நான் எடுத்து வச்சிட்டேன். அதை எதுக்கு நிறுத்தணும்? நான் வாணியைக் கூட்டிகிட்டு போறேன்” என்றாள் பாட்டி வாணி பதில் சொல்லாமல் தாயைப் பார்த்தாள். அதைப் பாட்டி பார்ப்பதையும் அவள் பார்த்தாள்.

“சின்னப் பிள்ளையை எப்படி…?” என்று கலாவதி ஆரம்பித்தாள்.

பாட்டியின் முகம் சுருங்கிற்று.
.
வாணி “அதெல்லாம் பயப்பட ஒண்ணும் இல்லேம்மா. இப்ப பாட்டி கூடப் போறேன். நாளைக்குக் காலையிலே அத்தையோ மாமாவோ வந்து ரயில்லே ஏத்தி விட்டுருவாங்கல்லே?” என்றாள்

“நீயும் அத்தே வீட்டிலே நாலு நாள் இருந்துட்டு வரலாமில்லே? முழுப் பரிச்சைதான் முடிஞ்சு நாளேலேந்து லீவுதானே உனக்கு?” என்று கேட்டாள் பாட்டி.
.
“இல்லே பாட்டி. நான் டான்ஸ் கிளாசில சேரப் போறேன். நாளைக்கி சாயங்காலம் அஞ்சு மணிக்கு டான்ஸ் டீச்சர் வீட்டுக்குப் போகணும்” என்றாள் வாணி.

மாணிக்கம் அவர்களை ஆட்டோவில் கொண்டு போய் ஸ்டேஷனில் இறக்கி விட்டுவிட்டுப் பாக்டரிக்குப் போவதாகச் சொன்னார். கிளம்பும் போது தாயாரின் பெட்டியையும் துணிப்பையையும் தன் இரு கைகளில் சுமந்து கொண்டார்.”

“என்னம்மா, பை இந்தக் கனம் கனக்குது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“காலையிலே இந்த சிக்கப்பா அவன் பழ வண்டியை எடுத்துக்கிட்டு வாசல்லே வந்து நின்னான். அதான் சிவகாமிக்குன்னு நாலு மாம்பழமும், நாலு கொய்யாப் பழமும் வாங்கிப் போட்டேன்” என்று வாசலைப் பார்த்து நடந்தாள்.

அவள் பின்னால் மற்றவர்கள் சென்றார்கள்.

மாணிக்கம் கூடவே வந்த கலாவதி “அஞ்சு கிலோ” என்று முனகினாள்.

“போகட்டும் போ” என்றார் மாணிக்கம்.

பாட்டியும் பேத்தியும் ஸ்டேஷன் வாசலில் இறங்கிக் கொண்டார்கள். மாணிக்கம் “நா வேணுமின்னா சாமான்களை பிளாட்பாரத்திலே கொண்டு வந்து வச்சிடவா?” என்று கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்தபடி கேட்டார்.

“நீங்க போங்கப்பா, உங்களுக்கு டயமாயிடிச்சி” என்றாள் வாணி.

அவர் போன பின் வாணி பாட்டியிடம் “பாட்டி! பை கனமா இருக்குன்னு அப்பா சொன்னாங்கல்லே. அத நான் எடுத்துக்கட்டா? நீங்க பெட்டியைத் தூக்கியார முடியுமா?” என்று கேட்டாள்.

“தூக்க முடியாம என்ன?” என்றாள் பாட்டி. இருவரும் சுமையைத் தூக்கிக் கொண்டு ஸ்டேஷன் பிளாட்பாரத்தை நோக்கிச் சென்றார்கள்.

பிளாட்பார சுவரில் ஓடிய கடிகாரத்தைப் பார்த்து விட்டு வாணி “பாட்டி, நல்ல வேளை வண்டி கிளம்ப இன்னும் அரை மணி நேரம் இருக்கு. பைய வாங்க” என்றாள். நடந்தபடியே “பெட்டி ஒண்ணும் ரொம்பக் கனமா இல்லியே பாட்டி?” என்று கேட்டாள்.

அவள் கேள்விக்குப் பதில் எதுவும் வரவில்லை. வாணி திரும்பிப் பார்த்தாள். சற்றுத் தொலைவில் பாட்டி பெட்டியைக் கீழே வைத்து விட்டுக் கையை உதறிக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சு பாட்டி?” என்று வாணி பாட்டியை நோக்கி வேகமாக நடந்து சென்றாள்.

“சனியன். கையை வலிக்குது” என்றாள் பாட்டி.

“ஐயையோ. பாட்டி நீங்க முன்னாலே நடங்க. நான் ரெண்டையும் தூக்கிகிட்டு வரேன்” என்றாள் வாணி.

பாட்டி மெதுவாகத் தப்படி வைத்து நடந்தாள். அவளிடமிருந்து சற்று இடைவெளி விட்டு வாணி அவளைப் பின் தொடர்ந்தாள். இரண்டு கைகளிலும் ஏறியிருந்த சுமை கனமாகத்தான் இருந்தது. சற்று நடந்ததும் கைகளில் வலி தோன்றத் துவங்கி விட்டது. ரயில் பெட்டியை அடையும் வரை எங்கும் நிற்காமல் போக வேண்டும் என்று வாணி நினைத்தாள். ஏனென்றால் பாட்டியின் நடை அவ்வளவு மெதுவாக இருந்தது.

அவர்கள் ஏறிக் கொள்ள வேண்டிய பெட்டியை அடைந்ததும் “அம்மாடி, கை போயிருச்சு” என்று வாணி இரண்டு சுமைகளையும் பிளாட்பாரத் தரையில் வைத்தாள்.

“ஜாக்கிரதையா வையி. பழங்கள்லாம் நசுங்கிடப் போகுது” என்றாள் பாட்டி.

“நா கை வலிக்குதுங்கறேன். நீங்க அதைக் கண்டுக்காம என்னமோ சொல்றீங்களே பாட்டி. நா என்ன பழம் இருக்கற பையை டொம்முனு கீழே போட்டேனா?” என்றாள் வாணி.

“அப்பா, என்ன வாயி என்ன வாயி ” என்றாள் கிழவி. “அவன் கொண்டு வந்து வச்சிட்டுப் போறேன்னான். நீதான் வேண்டாம்னு அனுப்பிச்சிட்டே” என்று குற்றம் சாட்டினாள்.

வாணி பதில் சொல்ல வாயைத் திறந்து பிறகு மூடிக் கொண்டாள்.

“பாட்டி, நா மொதல்ல போயி உள்ற சாமானை வச்சிட்டு வரேன். அப்புறம் நீங்க ஏறிக்கலாம்” என்று பெட்டியையும், பையையும் தூக்கிக் கொண்டு படியில் கால் வைத்து பெட்டிக்குள் சென்றாள். அவர்கள் உட்கார வேண்டிய இடத்துக்கு மேலேயிருந்த சாமான்கள் வைக்குமிடத்தில் இரண்டையும் வைத்தாள். அதற்காக அவள் ஒரு சீட்டில் கால் வைத்து எம்ப வேண்டியிருந்தது. அங்கிருந்த ஒரு பெண்மணி அவள் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துப் புன்னகை செய்து விட்டு வாணி பாட்டியை நோக்கிச் சென்றாள்.

அவள் பாட்டியின் ஒரு கையைப் பிடித்துக் கொள்ள பாட்டி சிரமத்துடன் படியில் கால் வைத்து ஏறினாள். அப்போது அவள் கீழே விழத் தயாராவது போல சாய்ந்தபடியே இருந்தாள். படியில் ஏறிக் கொண்டதும் வாணி “கம்பியைப் பிடிச்சுக்கிட்டு ஏறுங்க பாட்டி” என்று சொல்லி விட்டுத் தன் இரு கைகளையும் பாட்டியின் பிருஷ்டங்களில் பதித்துக் கொண்டாள். பாட்டி முனகிக் கொண்டே ஒரு வழியாக ஏறி விட்டாள் வாணியும் அவள் பின்னால் ஏறிக் கொண்டு அவளது கையைப் பிடித்தபடி சென்றாள். பாட்டி சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்.

அங்கு உட்கார்ந்திருந்த பெண்மணி பாட்டியிடம் “கெட்டிக்காரக் குட்டி” என்றாள்.

“எப்பக் கிளம்புவான்?” என்று பாட்டி அலுப்புடன் வாணியிடம் கேட்டாள். ஜன்னல் வழியாகப் பிளாட்பாரத்தில் தொங்கிக் கொண்டிருந்தகடிகாரத்தைப் பார்த்து “இன்னும் பத்து நிமிஷம் இருக்கு பாட்டி” என்றாள்.

“அப்பாடா, வருவமான்னு ஆயிருச்சு. உங்கம்மா என்னடான்னா, தனியாப் போன்னு நாக்கு மேல பல்லைப் போட்டுச் சொல்லுறா” என்றாள் பாட்டி.

“அவங்க எங்க அப்படி சொன்னாங்க? அப்பா நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னதுக்கு சரின்னாங்க” என்றாள் வாணி.

“உங்க ஆத்தாவை விட்டுக் கொடுக்க மாட்டியே நீ” என்றாள் பாட்டி.

வாணி அங்கு இருந்த பெண்மணியைப் பார்த்தாள். அவள் கையில் வைத்திருந்த பத்திரிகையில் ஆழ்ந்திருப்பது போலக் காணப்பட்டாள்.

“ஐயோ தண்ணி பாட்டிலை எடுத்துக்கிட்டு வரலையே?” என்று திடீரென்று நினைவுக்கு வந்தவளாய்ப் பாட்டி பதறினாள்.

“சரி, பணத்தைக் கொடுங்க. போய் வாங்கிட்டு வரேன். டிரெயின் கிளம்ப இன்னும் அஞ்சு நிமிஷந்தான் இருக்கு” என்று வாணி பணத்தை வாங்கிக் கொண்டு ஓடினாள். அவள் அதை வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறவும் வண்டி நகர ஆரம்பித்தது.வழியில் நின்ற நான்கைந்து மனிதர்களை விலக்கிக் கொண்டு அவள் தன் இடத்தை அடைய இரண்டு நிமிடங்கள் ஆகின.

“வந்திட்டியா? நல்ல வேளை வண்டி கிளம்பிடுச்சே, உன்னையக் காணுமேன்னு ஒரு நிமிஷம் திடுக்குன்னு ஆயிருச்சு” என்று அந்தப் பெண்மணி சிரித்தாள் . வாணியும் பதிலுக்கு அவளைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

“எங்க, மரியகுப்பம் போறீங்களா?” என்று அந்தப் பெண்மணி கேட்டாள்.

“இல்லே மாலூர்” என்றாள் வாணி.

“என் பொண்ணு வீட்டுக்குப் போறோம்” என்றாள் பாட்டி பெருமை குரலில் தொனிக்க.

“நானும் மாலூர்தான் போறேன். என் பேரு கிரிஜா” என்றாள் அவள். தொடர்ந்து “மாலூர்லே எங்கே?” என்று கேட்டாள்.

பாட்டி விலாசத்தைச் சொல்லி விட்டு “மாப்பிள்ள பெரிய செங்கல் சூளை வச்சிருக்காரு. வல்லபா பிரிக்ஸ் ஓர்க்ஸ்னு.”

“ஓ, வல்லபன் சார் உங்க மாப்பிள்ளையா?” என்று கேட்டாள் கிரிஜா.

“உனக்குத் தெரியுமா? ஆனா பெரிய வியாபாரம்னா ஊர்லே எல்லாருக்கும் தெரியுந்தானே!” என்றாள் பாட்டி. இப்போது மேலும் பெருமிதம் அவள் குரலில் ஏறினாற் போல ஒலி சற்று அதிகமாக இருந்தது.

கிரிஜா அவளருகே வைத்திருந்த பையிலிருந்து மூன்று ஆரஞ்சுப் பழங்களை எடுத்தாள். பாட்டிக்கொன்றும் வாணிக்கொன்றுமாக நீட்டினாள். இருவரும் வேண்டாமென்று மறுத்தாலும் கிரிஜா விடவில்லை. பாட்டியிடம் பழத்தை கொடுத்து விட்டு அவள் வாணியிடம் “இரு, நான் உனக்கு உரிச்சுத் தரேன்” என்று உரிக்க ஆரம்பித்தாள்.

சுளைகள் தித்திப்பாக இருந்தன. “அம்மாடி, என்னமா இனிக்குது!” என்று பாராட்டுடன் கிரிஜாவைப் பார்த்துச் சிரித்தாள்.வாணி. கிரிஜா தன் கையிலிருந்த இன்னொரு பழத்தையும் உரித்து வாணியின் கைகளில் திணித்தாள். வாணி மறுப்பெதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள். பாட்டியைப் பார்த்த போது அவள் பழத்தை உரித்தபடி ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். பாட்டியின் பையில் இருக்கும் மாம்பழத்தையோ, கொய்யாப்பழத்தையோ கிரிஜாவுக்குப் பாட்டி எடுத்துத் தரலாமே என்று வாணிக்குத் தோன்றிற்று.

கிரிஜா “நான் பாத்ரூமுக்குப் போயிட்டு வரேன்” என்று எழுந்து சென்றாள்.

“‘ரொம்ப நல்லவங்களா இருக்காங்க இல்லே?” என்று வாணி பாட்டியிடம் சொன்னாள்.

“உங்க மாமா பேரைச் சொன்னதும் அசந்துட்டா பாரு!” என்றாள் பாட்டி. “பெரிய மனுஷன் வீட்டுக்காரங்கன்னுதான் பழ உபசாரம் எல்லாம் பண்ணிட்டா!” என்று சிரித்தாள்.

அப்போது ஒருவன் “அதிரசம், அதிரசம்” என்று தலையில் கூடையை வைத்துக் கூவிக் கொண்டே வந்தான்.

“அதிரசம் சாப்புடறயாடி?” என்று பாட்டி அவளிடம் கேட்டாள்

“இல்லே, எனக்கு வேணாம்” என்றாள் வாணி. அப்போதுதான் சாப்பிட்ட இரண்டு பழங்களும் வயிற்றில் பம்மென்று உட்கார்ந்திருந்தன.

“அவனைக் கூப்பிடு. வாங்கிட்டுப் போலாம். நானும் அதிரசம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. உங்க அத்தைக்கும் ரொம்பப் பிடிக்கும்” என்றாள் பாட்டி.

ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்த வாணி பாட்டியைத் தாண்டிக் கொண்டு வந்து நடக்கும் பாதையில் நின்று கூடைக்காரன் சென்ற வழியில் பார்த்தாள். அவனைக் காணவில்லை.

“அவரக் காணோம் பாட்டி” என்று வாணி பாட்டியின் பக்கம் திரும்பினாள். பாட்டி பணத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டிருந்தாள்.

“இங்கதான் யார் கிட்டயாவது வித்துக்கிட்டு இருப்பான். ஓடிப் போயி ஏழெட்டு அதிரசம் வாங்கிட்டு வந்துர்றியா? என்று ஐம்பது ரூபாயை நீட்டினாள்.

வாணி அந்தப் பெட்டியின் கடைசி வரைக்கும் சென்று பார்த்தாள். காணவில்லை. அவள் அடுத்த பெட்டிக்குச் சென்று பார்த்தாள் அங்கும் காணப்படவில்லை. அங்கு உட்கார்ந்தவர்களிடம் விசாரிக்கவும் அவளுக்குக் கூச்சமாக இருந்தது. அதற்கும் அடுத்த பெட்டியில் இருப்பானோ என்று அங்கும் சென்று பார்த்தாள். கிடைக்கவில்லை.

அவள் திரும்பி வந்து பாட்டியிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்தாள்.

“நீ சரியா பாக்கலே. அவன் என்ன ரயில்லேந்து குதிச்சு ஓடிட்டானா” என்று பாட்டி சற்றுக் கடுமையான குரலில் கூறினாள்

வாணி பாட்டியின் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒரு வாய் குடித்தாள். . .

கிரிஜா திரும்பி வந்து சீட்டில் உட்கார்ந்தபடி “இன்னும் அஞ்சுநிமிஷத்திலே மாலூர் வந்துரும்” என்றாள். வாணியின் கண்கள் சாமான்கள் வைக்கும் பகுதியைப் பார்த்ததைப் பார்த்த கிரிஜா “இரு நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்று எழுந்து வந்து மேலேயிருந்த பெட்டியையும் பையையும் எடுத்து பாட்டியின் அருகில் வைத்தாள். பிறகு “என்கிட்டே சாமான் ஒண்ணுமில்லே. கீழ இறங்கறப்போ நான் பையை எடுத்துக்கிறேன். நீ பெட்டியை எடுத்துக்கோ” என்றாள் வாணியிடம்.

“உனக்கு எதுக்கு கஷ்டம்? நாங்க எடுத்துக்கிட்டு வரோம்” என்றாள் பாட்டி.

இறங்கும் போது கிரிஜா பையை எடுத்துக் கொண்டு இறங்கினாள்.

மூவரும் ஸ்டேஷன் வாசலை நோக்கி நடந்தார்கள்.

“உங்களைக் கூட்டிக் கிட்டுப் போக யாராச்சும் வருவாங்களா?” என்று கிரிஜா கேட்டாள்.

“மாப்பிள்ள வருவாரு. அவரு வேறே வேலையாப் போயிருந்தா என் பொண்ணு வரும்” என்றாள் பாட்டி. திடீரென்று “அதோ வராரே மாப்பிள்ள” என்றாள்.

“மாமா!” என்று வாணி கத்தினாள்.

அவர்கள் அருகே வந்த வல்லபன் கிரிஜாவைப் பார்த்து “வணக்கம் மேடம்!” என்றான். “அந்தப் பையை என்கிட்டே கொடுங்க. நீங்க போய்த் தூக்கிட்டு…”

“அது உங்க வீட்டுப் பைதான்” என்று கிரிஜா சிரித்தாள்.

“என்னது? அதை நீங்க தூக்கிட்டு வரதாவது?” என்றபடி வல்லபன் பையை வாங்கிக் கொண்டான்.

பாட்டி அவர்கள் இருவரையும் ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

வல்லபன் கிரிஜாவிடம் “இது எங்க மாமியார். இது ” என்று அவன் முடிக்கும் முன் “வாணி” என்றாள் கிரிஜா. “ரயில்லியே எங்க அறிமுகமெல்லாம் முடிஞ்சிருச்சு!” என்று சிரித்தாள்.

அவர்கள் ஸ்டேஷனுக்கு வெளியே வந்ததும் வல்லபன் அவர்கள் இருவரையும் காரில் ஏற்றி விட்டு விட்டு மறுபடியும் கிரிஜாவிடம் போனான். ஐந்து நிமிஷம் பேசி விட்டுத் திரும்பினான். தூரத்திலிருந்து கிரிஜா வாணியைப் பார்த்துக் கையசைத்தாள்.

காரில் போகும் போது வல்லபன் மாமியாரிடம் “அவங்களும் கில்ன் வச்சிருக்கறவங்கதான். ஒண்ணு இல்லே, ரெண்டு இல்லே. அஞ்சு கில்ன் வச்சிருக்காங்க. கால்வாசி மாலூர் அவங்களோடதுதான்” என்றான்.

“கொஞ்சம் மண்டைக்காரியா இருப்பா போல” என்றாள் பாட்டி

“ஏன், ட்ரெய்னலே வரப்போ உரசலாச்சா? நீங்க உரசினீங்களா, இல்லே அவங்களா?” என்று பாட்டியைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தான் வல்லபன்.

அவர்கள் வீட்டை அடைந்த போது வீட்டு வாசலில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். காரில் இருந்து இறங்கிய வாணியைப் பார்த்து “அய் வாணி அக்கா!” என்று கத்திக் கொண்டே ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டான் பாபு. வல்லபன் மாமாவின் மகன். பாட்டியையும் தழுவிக் கொண்டான்.

“அக்கா, நீயும் விளையாட வா. டியாண்டோ. மஜாவா இருக்கு” என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

“இருடா. உள்ள போயி மூஞ்சியக் கழுவிட்டு வரேன். நீங்க விளையாடிகிட்டு இருங்க” என்று அவனிடமிருந்து வாணி தன்னை விடுவித்துக் கொண்டாள். அவள் வீட்டுக்குள் நுழைந்ததும் சிவகாமி அத்தை அவளைப் பார்த்து “வாங்கம்மா, வாங்க.பெங்களூர் மகாராணி! என்னடி இப்பிடி உசந்துட்டே!” என்று வரவேற்றபடி அவளைக் கட்டிக் கொண்டாள். “பெரிய மனுஷி! பாட்டியக் கூட்டிட்டு வந்தியா! பெரிய ஆளுடா நீ!” என்று கொஞ்சினாள்.

“அத்தே, நான் போயி ஒரு குளியலைப் போட்டுரட்டா? ஒரேயடியா விசத்துக் கெடக்கு உடம்பெல்லாம்” என்றாள். அவளிடமிருந்து ஒரு டவலை வாங்கிக் கொண்டு பாத்ரூமுக்குச் சென்றாள்.

அவள் தலையைத் துவட்டிக் கொண்டே திரும்பி வரும் போது சமையல் அறையில் பாட்டியும் அத்தையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“ஆனாலும் வாணி தனியா தைரியமா வந்திருச்சே!” என்றாள் சிவகாமி.

“இந்த சின்னவளை இங்க கூட்டிட்டு வரதுக்குள்ளே எனக்கில்லே தாவு தீந்திருச்சு” என்றாள் பாட்டி.

வாணி கேட்டுக் கொண்டே வாசலை நோக்கிச் சென்றாள்.

 

 

 

 

 

கடலெனும் பெருவெளி

-ஜிஃப்ரி ஹாஸன் – 

எல்லாவற்றையும்
அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தது கடல்
தன் உடலில் நீந்திச் செல்பவர்களை
கடலில் கட்டித் தழுவும் காதலர்களை
அலைகளைக் கண்டு ஒதுங்கிச் செல்லும்
ஒரு கர்ப்பிணியை
கரைகளில் புரளும் குழந்தைகளை
அமைதியாய் இரசிக்கிறது கடல்

கடற்கரையில் கூடும் மனிதர்கள்
துயருற்ற வானம் போல்
ஓங்கி அழும் ஓசையை
கடல் தன் பேரோசையால் மறைக்கிறது
கடல் போல் குமுறும் தங்கள் மனஓசையை
கவலை தோய்ந்த மனிதர்கள்
கடலோசையில் கேட்டனர்.

கடலின் இசை அதன் துயர் குறித்ததா?
அல்லது அதன் மகிழ்ச்சியைக் குறித்ததா?
கரை மனிதர்கள் குழம்பியபடி கலைகின்றனர்.

கிஃப்ட்

லட்சுமிஹர்

மேலும் கீழுமாக ஒழுங்கற்று அடுக்கப்பட்டிருந்த கிஃப்ட்கள் அவர்கள் பார்வைக்குத் தென்பட்டது. இதுவரை இருவரும் பேசத் தொடங்கி அதை எப்படித் தொடர்வது என்று தெரியாமல் இருந்த நேரம், கலர் கலர் பெட்டிகளான அந்தக் கிஃப்ட்களைப் பற்றிய பேச்சு ஆரம்பிக்க அது தன்னை இழந்தது.

இருவரும் ஒருவருக்கொருவர் அருகில் அமர்ந்திருந்தாலும் அவ்வளவு நெருக்கம் என்று சொல்ல முடியாது. இப்போதைக்கு இடைவெளியை பேச்சு நிரப்பத் தொடங்கியிருந்தது . அவள் சூடியிருந்த பூவின் வாசனை இவனை ஒருவித போதைக்குள் தள்ளிவிட முயன்று கொண்டேயிருக்க முத்தங்கள் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அவள் எளிதில் கையாண்டு விடலாம், என்ன பெரிய விசயம் . என்று தான் இருந்தாள். ஆனால் இங்கு, இப்போது கொஞ்சம் உதறல் . பட்டுக்குள் பறக்க முயன்றவளாய் . இந்த நிலையை எப்படிக் கையாள்வது என்று அட்வைஸ் கேட்டுத் திறமையாகச் செயல் படக்கூடிய இடமா என்ன?. எப்படியோ இதில் மற்றவர்களின் கேலி வேறு. “மொத ராத்திரி பொண்ணு, எவ்வளவு ரூபாய்க்கு புடவை எடுத்தா என்ன ” கலுக் சிரிப்பு.

கிஃப்ட்களை ஒவ்வொன்றாக, இருவரும் பிரிக்கத் தொடங்கினர். முதலில் தயங்கிய அவளை நீயும் பிரி நமக்கு வந்தது தான என்றான். பெரு மூச்சு விட்டுக்கொண்டாள். “எப்பயும் கொடுக்கும் பார்மாலிட்டி் கிஃப்ட்கள் தான ” என்றவனைப் பார்த்த இவள், ஒரு பச்சை நிற கிஃப்ட் பாக்சை எடுத்து நீட்டினாள்.

‘என்னவென்று’ மூஞ்சியை வைத்துக்கொண்டு பார்த்தவனின் முகப் பாவனை எப்படி மாறப் போகிறது என்பதை அறிய ஆவலாக அவளின் முகம் சிவந்திருந்தது.

பெயர் எழுதப்படாத கிஃப்ட். .

பச்சை கலரால் சுற்றப்பட்டு கைக்கு அடக்கமாக இருந்தது அது . அவனுக்குத் தெரியும், ஆனால் அவளுக்கு . என்ற பாவனையில் அதை வாங்காமல் பார்த்தான்.

” இத நீங்களே பிரிங்க ” என்றாள்.

அவன் அதைத் தயக்கத்தோடு வாங்கிக்கொண்டு பிரிக்க மனமின்றி, அதைக் கையிலேயே வைத்திருந்தான். அவன் முகம் பல நினைவுகளை இவளுக்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.

இதிலிருந்து தான் ஆரம்பித்திருக்க வேண்டுமா என்று கூட யோசித்தாள் . அப்பா சொல்வது இப்போது மீண்டும் காதிற்குள் . எல்லாத்தையும் (உச்சு) விளையாட்டா எடுத்துக்கக் கூடாது ( உச்சு ). மீண்டும் ஒரு முறை விளையாடி விட்டதாகத் தோன்றியது அவளுக்கு .

இந்த நிலை முன்னே இருந்த இடைவெளியை நிரப்பிய பேச்சிற்கும் விடுதலை கொடுத்தது.

அறை சுதந்திரமாக இருவரையும் கைது செய்திருந்தது.

கையில் அந்தக் கிஃப்டை வைத்திருந்தவனின் முகம் இப்போது அவளை நோக்கியிருந்தது , அவள் எதிர் பார்த்தது போலில்லாமல், நினைவுகளை அள்ளிவரும் சிரிப்பு அவன் முகம் எங்கும் பரவி இருந்தது, இவளுக்கு ஆச்சரியம். அவனைச் சுற்றி இவள் மண்டைக்குள் பின்னப்பட்டிருந்த காதல் கதைகள் சுக்குநூறாக உடைத்திருந்தது அந்தச் சிரிப்பு.

அப்போ இது காதல் கதை இல்லை போல இந்தப் பெயர் எழுதாத கிஃப்ட் பின்னால் என்று நினைத்துக்கொண்டிருக்கையில் அவன் விலகிக் கிடந்த இடைவெளியை நிரப்பத் தொடங்கினான்.

” இத பிரிக்க பயமா இருக்கு ”

“. ”

” பயமா இருக்கு ” என்று அவன் மறுபடி சொல்லும் வரை அவனையே பார்த்துக்கொண்டே இருந்தாள் பதிலேதும் சொல்லவில்லை.

” எப்படி இத கரெக்டா எடுத்த ”

“. “.

” ஹே. என்னாச்சு ” என்று அழுத்தி கூறியவன், அவளின் மௌனத்தைக் களைத்தான்.

” ஆங். ஒன்னும் இல்ல ”

சரி என்பது போல முகத்தை வைத்துக்கொண்டு தலையாட்டினான். பின் பேச தொடங்கினான்.

அவனின் குரலுக்கு இருக்கும் தனித்த அடையாளத்தைக் கண்டு கொண்டாள். அவளோடு இறுதி வரை தன்னுடன் பிணைக்கப்பட்ட அந்தக் குரலை, அவள் உள்வாங்க . கோபமோ, பாசமோ எதுவானாலும், அவள் காதுகளில் கேட்கப் போகும் அந்தக் குரலை கவனித்தாள், அவளின் தந்தை குரலுக்குப் பதிலாக இருப்பதை. அப்பா எப்போதும் அதிர்ந்து பேச கூடியவர். கணவனின் குரலை அவள் எதனோடு ஒப்பிட போகிறாள். என்று யோசித்துக்கொண்டிருந்தவளை அந்த ஹே தடுத்தது. இதற்கடுத்து தான் அவன் கூற வந்த விசயத்திற்குள் உள் நுழைய வேண்டியிருந்தது.

” எதனால பயம்னு கேக்க மாட்டியாடி? ”

அவளுக்குச் சிறுவயதில் இருந்தே’ டி ‘ போட்டு பேசுவதோ, அவளோடு படிக்கும் பிள்ளைகள் ‘ என்னாலே ‘என்று பேசுவதோ சுத்தமாகப் பிடிக்காது. பெயர் சொல்லித்தான் கூப்பிட வேண்டும் இல்லை என்றாள் திரும்பி கூடப் பார்க்க மாட்டாள்.

” இந்து ” என்றாள்.

” அவன் ஓ. கேட்க மாட்டியா இந்து? ” என்றான் அவளை ஏற்று.

” என்ன ” என்பது போல ஒரு சமிங்கை.

கையில் வைத்திருந்த பெயர் இல்லாத கிஃப்ட் பின்னால் இருக்கும் பயத்திற்கு ஒரு கதையை ஆரம்பித்தான்.

‘ நிறையக் கதை சொல்லியே, உங்க அப்பா என்ன ஏமாத்திருவாரு ‘ என்று அம்மா சொல்வது ஞாபகம் வந்தது அவளுக்கு . ‘ அது கதைனு உனக்குத் தெரியும்ல , அப்பறோம் ஏன் கேக்குற.” என்பாள். ‘ அவரு சொல்றது நல்லாருக்கும் ‘ என்று அம்மா வெட்கப் பட்டுக் கொள்வாள். அப்பாவி ஜீவன்கள் தான் பெண்கள் என்று தோன்றும். ‘ நானும் தான்’ என்று மனதிற்குள் இல்லாமல் வெளியே கேட்கும்படி சொல்ல, கதையை ஆரம்பிக்கப் போனவன் ” என்ன நானும்தான் ” என்றான். அவள் மனதிற்குள் நினைத்ததை அவனிடம் சொல்ல சிரித்துக்கொண்டான்.

” ஆரம்பிக்கவா. ” என்றவனின் குரலில் நெருக்கம் கூடியிருப்பது இதழ் முத்தங்களுக்கான முன்னேற்பாடு, இன்னும் நெருங்கி வந்து அமர்ந்தான் தோள்கள் உரச.

” உங்க அப்பா பேசுறத கேட்டுருக்கியா. ” என்றாள் அம்மா ஒரு நாள் திடீரென்று.

” ஏன் திடீருனு, என்ன ரொமான்சா ” என்றதற்கு, அதெல்லாம் ஒன்னும் இல்ல என்பது போல மூஞ்சிய வைத்துக்கொண்டு அம்மா.

” ரெண்டு வார்த்தை நடுவுல ‘உச்சு ‘ கொட்டிப்பாரு ” என்று சொல்லி சிரித்துக்கொண்டாள். இதுவரை அவள் நினைத்தது கூடக் கிடையாது, அம்மா எதையெல்லாம் அப்பாவிடம் கவனித்திருக்கிறாள்.

” எதனால அப்படியாம் “.

” தெர்ல ”

” ம்ம்ம். ”

அம்மா சொன்னபின், அப்பா பேசும் போது கவனித்தவளுக்கு ” உச்சு ” தரிசனம் கிடைத்தது.

அம்மா மட்டும் தான் கவனித்திருக்கிறார் என்று பார்த்தாள். அப்பாவும் அப்படிதான் அம்மாவின் நகர்வை வைத்தே ” அவளுக்கு (உச்சு ) உடம்பு செரியில (உச்சு ) எப்பயும்) வாயத் தெறந்து (உச்சு ) சொல்ல மாட்டா ” என்பார்.

அம்மா உடம்பு வலியிலும் சிரிப்பதை பார்த்து ” ( உச்சு )என்ன கொழுப்பு இவளுக்கு (உச்சு ) பாரேன்” என்பார் அப்பா என்னைப் பார்த்து.

அம்மா என்னிடம் ” இரண்டு உச்சு ” என்று சொல்லிச் சிரிக்கத் தொடங்குவாள். கவனிப்பு வாழ்வில் எப்படிப்பட்டது ?. அடுத்தவர்கள் மீதான அக்கறையின் பித்தாகி எதையும் அதன் போக்கில் ரசிக்கத் தெரிந்திருந்த கவனிப்பு இன்னும் வாழ்க்கையின் மீதான பிடிப்பை இறுக்கி கொள்கிறது. வாழ்வின் அடிப்படையாய். அந்த நிலையிலிருந்து ஒட்டிக் கொண்டது தான் இந்தக் குரல் கவனிப்பு .
அவன் சொல்லத் தொடங்கி இருந்தான் . இவள் கவனிக்கத் தொடங்கியிருந்தாள் .

” கண்டிப்பா என் பிரண்ட்ஸ் வேலையா தான் இருக்கும் ”

” ஏன் ”

” இதுக்குள்ள என்ன இருக்கும்னு நெனைக்குற ”

” பிரிச்சா தான் தெரியும் ”

” அவசர படுற ”

“.”

” இதுக்குள்ள நம்ம நெனைக்குற மாதிரி புதுசாலா எதுவும் இருக்காது ”

“அப்படி இல்ல, கிஃப்ட் கிஃப்ட் தான ”

“அதுவும் சரிதான், பேரு போடாம கொடுக்குறப்பவே நான் கண்டு புடுச்சுட்டேன் ”

“.”

அவன் மறைக்க என்னென்னவோ சொல்லி தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்தான். கோமாளியாக . தன் நண்பர்களின் விளையாட்டு என்று .

ஆனால் அவனுக்குள் இந்த கிஃப்ட் ஆயிஷா கொடுத்தது என்று தெரியும். கல்யாண மேடையில் இந்த கிஃப்டை அவள் கொடுத்த போது பெயர் இல்லை என்பதை அறிந்தே இருந்தான். பழைய நினைவுகளின் சின்ன உரசல் . இதைத் தனியாக எடுத்து வைக்க முயன்றும், அவன் மனைவியின் கைப்பட்டு அவனிடமே வந்திருக்கிறது. இதைச் சமாளிக்கக் கதைகளை ரெடி தயார் செய்து கொண்டிருக்கிறான்.,

” இத பாத்தாலே தெரில “.

“தெரில “.

” எனக்குக் கூச்சமா இருக்கு ”

“. ” அவள் கண்டு பிடித்துவிட்டது போல நடிக்க. அவனின் குரல் எதையோ நினைத்து அதுக்குப் பொருந்தாத வேஷம் போட்டு மேடையில் ஆடிக்கொண்டிருந்தது. அவள் விட்டுவிட்டாள்.

அவன் அதைத் தள்ளி வைத்துவிட்டு அடுத்த கிஃப்ட்களைப் பிரிக்கத் தொடங்கி இருந்தான். அவள் கண்டுகொள்ளாததைக் கவனித்துத் தான் இருந்தான். கண்டுகொள்ளாமல் இல்லை. பெரிதுபடுத்தவில்லை.பின்னால் அதைப் பற்றி அவள் கேட்டாள் என்ன சொல்லுவது…

கிஃப்ட்கள் பிரிக்கப் பிரிக்கக் கம்மியானது. அவன் கையில் மற்றுமொரு பெயர் போடாத கிஃப்ட் .

ஆச்சரியமானவன் அருகில் இருந்தவளிடம் திரும்பி ” இது எனக்கு இல்ல ” என்றான் பதட்டமாக.இருவரும் சிரித்து விட்டனர். அமைதி நிலவியது. காலையில் இருந்து கல்யாண மேடையில் நின்றிருந்த களைப்பில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தவர்களுக்கு அது சொளகர்யமாக இருந்தது. ஏசி இருபதில் இருந்தது. முதல் இரவுக்காக அலங்கரித்து இருந்த மெத்தை உறங்கி கொண்டிருக்க கண்ணாடி அவளின் முகத்தை ஏந்தக் காத்துக் கொண்டிருந்தது. அறையெங்கும் கல்யாண மாலையின் மணம் புணர்ந்து கிடந்தது .

அப்பா முதலிரவின் போது தன் காதல் தோல்வியின் கதையை அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அம்மா இப்போதும் சண்டை வந்தாள், அதை இழுக்காமல் இருக்க மாட்டாள்.

” உங்களுக்கு அவளோட கம்மல் தான் பிடிக்கும் ” . அதே கவனிப்பு. ” ஏன் பா மொத ராத்திரில உன் காதல் படத்தை ஓட்டிருக்க ” என்று. சொல்லும்போது அப்பா சொன்ன ஒரே அட்வைஸ் இதான் ” நோ காதல் ஷோ “. .

” நோ, காதல் ஷோ ” .

இருந்தும்.

அவள் தன் தலையில் வைத்திருந்த பூவை எடுத்து அருகில் வைத்தாள்.’ ஏன் ‘ என்பது போலப் பார்த்தவனுக்குப் பதிலேதும் இல்லை.அவனிடம் பெயர் இல்லாத கிஃப்டை நீட்டும் போது. தன்னுடைய பின் கதையைச் சுருக்கமாகச் சொல்லிவிட வேண்டும் என்று தான் இருந்தாள். ஆனால் அது வேறு விதமாகப் போனது. அவன் அதே பச்சை நிறத்தில் கை அடக்கப் பெயர் இல்லாத இன்னொரு கிஃப்ட் பாக்சை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.

அவள் அதைப் பார்த்து விட்டு.ஏற்கனவே அவன் வைத்திருந்த கிஃப்ட் பாக்ஸ் பக்கத்தில் வைத்தாள். இரண்டும் ஒன்று போல இருந்தது . இருவரின் இடைவெளியில் .

ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். பின் இரண்டு கிஃப்ட்களையும் பார்த்தனர்.என்ன சொல்லவென்று தெரியாமல் இருந்தவர்களுக்கு ஏசி நடுக்கத்தைக் கொடுத்ததா என்று தெரியவில்லை.

அவள் பேச ஆரம்பித்தாள்.

” அந்தப் பிங்க் கலர் சாரில அவங்க அம்மா கூட வந்த முஸ்லீம் பொண்ணு தான ”

” ஆமா ”

“பேரு.? ”

” ஆயிஷா . ”

ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அவன் பேசத் தொடங்கியபின் ” அந்தப் பிளாக் குர்த்தால ட்ரிம் பண்ணி ஹைட்டா வந்தவன் தான ”

” இல்ல ”

” இல்லையா ”

” இல்ல ”

” அப்பறோம் ”

” கண்டு புடுச்சுக்கோங்க ”

இருவர் மனதிலும் இப்படி ஆரம்பித்திருக்கக் கூடாது என்பது போலத் தோன்றியது. அவனே ஆரம்பித்தான்

” ஏன் உனக்குப் பூ வைக்கப் பிடிக்கல ”

” பிடிக்காது. ”

” அப்பறோம் என்ன பிடிக்கும் உனக்கு.?. ” என்றான் .குரலில் இருந்த அக்கறையைக் கவனித்தவளாய் ” அது வந்து. ”

கவனிப்பாரின்றி, பிரிக்கப்படாமல் கிடந்தது இரண்டு கிஃப்ட்கள்.

***