எஸ். சுரேஷ்

கருப்பு ஆந்தை

 எஸ். சுரேஷ் –

 

கண்ணாடி ஜன்னலில் இருந்த சிறு ஓட்டை வழியாக
கருப்பு ஆந்தை ஒன்று தினமும் நள்ளிரவில் உள்ளே வந்து
தலைமாட்டில் உட்கார்ந்து ​கொண்டு
இரத்தத்திற்கு பதிலாக அவர் நினைவுகளைக் குடிக்கிறது.

“அவன் வந்தானாடா இன்னிக்கி?”
“யாருப்பா?”
“அதான்டா. அவன் பேர் மறந்துட்டேன். இன்னக்கி வரேன்னானே அவன்”

சரளமாக​க் குடித்துக் கொண்டிருந்த ஆந்தை
இப்பொழுதெல்லாம் ​​தேடித் தேடிக் குடிக்க வேண்டியிருக்கிறது.

“இவங்க யாரு?”
“இவதான் உங்க பொண்ணு”
“ஓஹோ, அந்த நர்சிங் இன்னும் வரலையா?”

ஆழத்தில் அழுத்தமாக பதிந்திருக்கும் நினைவுகளைக்
குடிக்க முயன்று தோற்றாலும் கருப்பு ஆந்தை
தினமும் மேலோட்டமாகச் ​சேரும் நினைவுகளைக் குடித்துவிடுகிறது.

“நாளைக்கு பாரு காங்கிரஸ் தோக்கற​த.
மொரார்ஜி தேசாய் எப்படியும் ஜெயிப்பார்.
நர்சிங் இன்னுமா வரல?”

கருப்பு ஆந்தைக்கு இனி இங்கு தீனி இல்லா​ததால்
உடைந்த ​வேறொரு ​கண்ணாடி ஜன்னலையும்
நிறைந்த நினைவுகளை​யும் ​தேடிச் செல்கிறது.

“இவங்கல்லாம் யாரு?”​

image credit : ArtlbleLandscape with Grave Coffin and Owl , Caspar David Friedrich

பிரார்த்தனை – 2

 எஸ். சுரேஷ் –

கிரெடிட் கார்டுக்காகவோ இல்லை பெர்சனல் லோனுக்காகவோதான் யாரோ அழைக்கிறார்கள் என்று அந்த நம்பரைப் பார்த்ததும் நினைத்தேன். நாலு வார்த்தை நன்றாக திட்டலாம் என்று மொபைலை எடுத்தேன்.

“என் மனைவி உங்களுடன் இரண்டாம் வகுப்பு வரை ஃபிலோமினா ஸ்கூலில் படித்தார்” என்று அந்த ஆண்குரல் ஆரம்பிக்க, நான் குழம்பிப் போனேன்.

“என் பெயர் அசோக். தெரியாதவர்களுக்குப் போன் செய்தால் அவர்கள் நான் ஏதோ பர்சனல் லோன் கொடுக்கும் ஆள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

இறுக்கமாக இருந்த என் முகம் தளர்ந்தது. நானும் வாய்விட்டுச் சிரித்தேன்.

“அந்த மாதிரி பண்ணி வச்சிட்டாங்க சார் இவங்கெல்லாம்”.

“ஆமாம்,” என்றேன் நான்.

“அத விடுங்க சார். பேச ஆரம்பிச்சா அத பத்தி நாள் பூரா பேசலாம்” என்றார் அவர். “நான் உங்கள கூப்பிட்டது வேற ஒரு விஷயமா”.

‘சொல்லுங்க” என்றேன்.

“என் மனைவி பெயர் தனுஜா. நாங்கள் தனு என்று கூப்பிடுவோம். அவர் உங்களுடன் இரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்” (more…)

ஒற்றைப் புன்னகை வெளிச்சம் – ராண்டோ

 

 

நடுநிசி நேரத்தில் நான் அங்கு வந்து சேர்ந்தேன்.
காரிருளில் மூழ்கி இருந்த அந்த பங்களாவுக்குள்
பணியாள் காட்டிய மெல்லிய டார்ச் ஒளியில்
தட்டுத் தடுமாறி பயத்துடன் சென்று கொண்டிருந்தவனுக்கு
பரவசம் அளித்தது பக்கத்து அறையில் இருந்த
சுந்தரியின் ஒற்றை புன்னகை

வெளிச்சத்தில் அடுத்த நாள் காலை பார்த்தபோதுதான்
தெரிந்தது அது ஒரு சிரிக்கும் கருங்குரங்கு பொம்மை.

– எஸ். சுரேஷ் (more…)

அன்பெனும் மழை – ராண்டோ

 

“மேகங்கள் கறுத்து மழை பெய்யாவிட்டால் என்ன?
நம் ஊரில் என்றும் பெய்கிறது அன்பெனும் மழை”
என்று முழங்கிக் கொண்டிருந்தார் பேச்சாளர்

அந்த வழியாக சென்றுகொண்டிருந்த
அழுக்கு வெள்ளை நாய் ஒன்று
அவரைப் பார்த்து ஆக்ரோஷமாக குரைத்தது

பேச்சை நிறுத்திவிட்டு அவர் நாயை முறைத்தார்
குரைப்பதை நிறுத்திவிட்டு நாய் அவரை முறைத்தது

நாய் ஒய்ந்துவிட்டதாக நினைத்து அவர் பேச்சை தொடந்தார்
நாய் மறுபடியும் கோபமாக குரைத்தது

கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்தார்
நாய் அவரைப் பார்த்து பலமாக சிரித்துக்கொண்டே
அங்கிருந்து ஓடி விட்டது.

ஒரு கையில் கல்லும்
மறு கையில் மைக்கும் வைத்துக் கொண்டு
பிரசங்கத்தை தொடர்ந்தார் பேச்சாளர்

(எஸ். சுரேஷ்) (more…)

கவியின் கண் – 13 “சூரியனின் இந்த மூன்றாம் கோளில்..”

 எஸ். சுரேஷ் –

 

 

வல்லூறுகள் என்றும் தாம் குற்றம் புரிந்ததை ஏற்பதில்லை
சிறுத்தைகளுக்கு நியாய அநியாயம் தெரிவதற்கில்லை
தாக்கும்போது பிரான்ஹாக்கள் வெட்கப்படுவதில்லை.
பாம்புகளுக்குக் கையிருந்தால், கறைபடாத கரங்களைக் காட்டும்.

நரிகளுக்கு வருத்தம் என்றால் என்னவென்று புரியாது.
சிங்கங்களுக்கும் உண்ணிகளுக்கும் பாதையில் தடுமாற்றமில்லை,
அவசியமென்ன, எது சரி என்று நன்றாகத் தெரிந்தபின்னே?
திமிங்கலங்களின் இதயங்கள் ஒரு டன் எடை இருந்தாலும்,
பிற அனைத்து வகைகளிலும் கனமற்றவை.

சூரியனின் இந்த மூன்றாம் கோளில்
மிருகத்தனத்தின் அடையாளங்களில்
சுத்தமான மனசாட்சிக்கே முதலிடம்.

– விஸ்லாவா ஸிம்போர்ஸ்கயா (more…)