ஸ்ரீதர் நாராயணன்

துளிகள் – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

ஈர விறகுகள் ஊறிப் பெருத்து
வெடித்து எரிகின்றன,
விரிசல்கள் வழியே
இசை ஒன்றை எழுப்பிக் கொண்டு.

உருட்டிக் கொண்டு வரப்பட்ட
உடல் மழுங்கிய கூழாங்கற்கள்
நதியின் மடியில்
புரண்டு எழுகின்றன,
மலை முகட்டுகளை
எதிரொலித்துக் கொண்டு.

பருவ மாற்றத்தை
பழகிக் கொண்ட
தடித்த மரவுச்சியிலிருந்து
பழுத்து உதிரும் இலை,
காட்டின் பரிணாமத்தை
மாற்றி அமைக்கிறது.

வடிந்தது போக ஒதுங்கிய
மழைநீரில் நொதித்த கூரை
சொட்டிக் கொண்டிருக்கிறது
துளித்துளியாக.

சாமக் கோடங்கி – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

அள்ளிச்செருகிய குடுமியுடன்
அதக்கிய வெற்றிலை ஊறிவழிய
ஓலைப்பெட்டியில் சேர்த்து வைத்த
தலைச்சன் மண்டையோட்டு மையுடன்
நட்டநடு நிசியில் சுடுகாட்டிலிருந்து
அள்ளி வந்த சாம்பலுமாய்
குறி சொல்ல வரும் சாமக்கோடங்கி
புதைச்சு வச்ச சூனியத் தகடு
சோற்றில் சிக்கும் சுருள் முடி
பற்றி எரியும் கூரை
சுற்றி வரும் நாகம்
பரிகாரங்கள் எல்லாம் பாட்டில் இருக்கும்.
ஆழாக்கு அரிசிக்கும், பூச்சி அரித்த போர்வைக்கும்
இணக்கமாக ஜக்கம்மாவின் அருள் உரைக்கும்..
வெயில் ஏறிய வெக்கை வேளைகளில்
தலையில் சுற்றிய துண்டோடு
கல்திண்ணையில் சாக்கட்டியில் வரைந்த
வெட்டுப்புலி ஆட்டம் விளையாட
அள்ளையை சொறிந்து கொண்டு
குத்த வைத்து உட்கார்ந்திருக்கும்.

oOo

ஒளிப்பட உதவி – Board Games of India

வண்டல் – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

ஆலங்குச்சி கொண்டு
வண்டல் மண்ணைக் கிளறி
வலப்பக்கம் குவித்து இடப்பக்கம் இறைக்கிறேன்.

அழிக்கம்பி கதவின் பின்னே
பிறைநுதலென எழுந்து
சிலையென முகம் காட்டி
கவிழ்கிறது தலை.

ஆர்வம், அசூயை, நாட்டம், நாணம்,
சீற்றம், ஆவலாதி, சூன்யம், கைக்கிளை
என அந்த கண்தேடலை
பல வழிகளில் கடந்து போகிறேன்.

நீ எவ்வழி சென்றாயோ?

சர்ப்பம் – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

ஒளிரும் மேலுடல் மினுக்க
நெருஞ்சி முட்புதர் ஊடே ஊர்கிறது.
சுற்றி அணையும் சுவர்கள்
நெருக்குந்தோறும்
விரிவடைகின்றன அதன் மூலைகள்.
கூட்டின் அமைதி பொழுதெல்லாம்
நச்சுப்பை முடைந்து
விடம் செறிகின்றது.
வால் குலைத்து
போகும் தடமெல்லாம்.
பற்றி எரிகிறது காடு.
கை பற்றி ஏறி வந்து
தோள் சுற்றி
முறுக்கிக் கொள்கிறது.

சுடர் நெருப்பென நாக்கு நீட்டி
தலையென நிலை கொள்கிறது.

வரம்புகளற்ற அகண்ட நிசப்த வெளியில்
தன் வால் கவ்விச் சுருண்டு உறங்கும்
சர்ப்பம்.

பேரமைதி – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

சரவிளக்கொளியால் மெருகேற்றப்பட்ட
அகண்ட அரங்கத்தில்,
நறுவிசாய் உடுத்திய
கனவான்களும் குணவதிகளும்
சீரான வரிசையில்
தூசியற்ற தரைவிரிப்புக்கு நோகாதபடி
ஊர்ந்து செல்கிறார்கள்,
கரம் பற்றியும், மெலிதாக கட்டியணைத்தும்,
ஆறுதல் சொற்களை அளந்து பரிமாறியபடி.

பேரமைதியை குலைத்தபடி
வெடித்து கிளம்புகிறது
ஓர் அழுகைக் குமுறல்,

மலர் ஜோடனையுடனான மரப்பெட்டியினுள்
லினன் விரிப்பின் மேல்
நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டுக் கிடந்தவரை
இரத்தமும் சதையுமாக
இழுத்து வெளியில் போட்டது.