நாளை முடிக்கப்பட வேண்டிய வேலை ஒன்று என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது அது உண்மையில் இருப்பதாகவோ அல்லது எனது கற்பனையாகவோ இருக்கலாம் நாளைக்குள் அது முடிக்கப்பட்டாக வேண்டும் என்ற அவசரம் என்னை பரபரப்பாக்கிறது அந்த வேலை எப்படிப்பட்டது? சித்திரம் போல் மனதுக்கு இதமூட்டக் கூடியதா தீ போல் சுட்டெரிக்கக் கூடியதா தொடர்ச்சியாய் ஒரே இருப்பில் செய்யக் கூடியதா அல்லது இடைநடுவில் ஓய்வு எடுக்க வேண்டி வருமா? அது ஒரு அலுவலகப் பணி போல் கண்காணிக்கப்படக் கூடியதா அல்லது சுதந்திரமானதா அது இயற்கையானதா அல்லது செயற்கையானதா நாளை முடிக்கப்பட வேண்டிய இன்னதென்று தெரியாத ஒரு பணி என்னை எப்போதும் உறுத்திக் கொண்டே இருக்கிறது அடையாளம் தெரியாத நாளை முடிக்கப்பட வேண்டிய உள்ளத்தை உறுத்தும் அந்தப் பணியின் அவஸ்தையால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கணமும் சிதைகிறான்
ஜிஃப்ரி ஹாசன்
“கவிஞன் ஒருபோதும் நினைவுகளை இழக்க விரும்புவதில்லை” – ஜிஃப்ரி ஹாசன்
நினைவுகளை மறத்தல் (அல்லது) தலைமறைவாதல் – குறித்து ஜிஃப்ரி ஹாசன்:
ஏதோ ஒருவகையில் நம் கடந்த காலத்தின் நிழல் நம்மீது படிந்தபடிதான் இருக்கிறது. துயர் நிறைந்ததாகவோ அல்லது மகிழ்வூட்டுவதாகவோ நம்மை அதன் நிழல் பின்தொடர்வதை உணர்ந்த தருணங்களில் அதை வெளிப்படுத்த நான் எடுத்துக்கொண்ட பிரயாசை ஒரு கவிதையின் சாயலைப் பெற்றுவிட்டது. ஈழத்தின் போர்ச்சூழலில் அழியுண்ட ஒரு கிராமத்தின் தெருக்களின் வழியே இலக்கிய உலகை நான் அடைந்தேன்.
அந்த நாட்கள் எம்மீது ஏற்படுத்திய வடுக்கள் இன்று உடலின் தடயங்களாகவும், மனதின் பாரங்களாகவும், ஞாபகங்களாகவும் எஞ்சியுள்ளன. ரணங்களாலான அந்த வாழ்வை ஞாபகிப்பதிலிருந்தும் தூரமாகிவிடவே இன்று எல்லோரும் முயற்சிக்கின்றனர்.
கவிஞன் ஒருபோதும் நினைவுகளை இழக்க விரும்புவதில்லை. தன் உடலெங்கும் மந்திர வார்த்தைகளால் அவற்றைப் பூசிக்கொள்கிறான். அவை மற்றவர் பார்வையில் புதுப்புது அர்த்தங்களைப் பெற்றுவிடுகின்றன.
போரின் நாட்களில் எல்லாவற்றுக்கும் அஞ்சி மனிதர்கள் குழந்தைகளைப் போல் தவழ்ந்தலைந்ததை இதன் சில வரிகள் சொல்கின்றன.
ஜிஃப்ரி ஹாசன் கவிதை இங்கு : நினைவுகளை மறத்தல் (அல்லது) தலைமறைவாதல்
நினைவுகளை மறத்தல் (அல்லது) தலைமறைவாதல் – ஜிஃப்ரி ஹாசன்
ஞாபகங்களால் நிரம்பியுள்ளது எனது வீடு. வெறுமையான சுவர்களில் ஒட்டி இருக்கின்றன நினைவுகள். என்னை மெளனம் போர்த்தும் ஒவ்வொரு பொழுதிலும் இதயத்தை நிரப்புகின்றன ஞாபகங்கள். வாழ்வு பற்றிய ஞாபகங்களுக்கு அஞ்சி ஒரு குழந்தையைப் போல் வீட்டின் மூலைகளில் பதுங்கிக் கொள்கிறேன். யன்னலின் வழியே யாரோ அழைக்கும் குரலுக்கு செவிசாய்த்தலின்றி என்னைக் கள்ளத்தனமாய் மூடுகிறது மௌனம். ஞாபகங்களின் கரங்கள் கதவில் பயங்கர இரைச்சலுடன் தட்டத் தொடங்குகையில் மௌனத்தின் ஆமை ஓட்டுக்குள் பதுங்குகிறது மனம். இந்தப் பொழுதும் ஞாபகமாய் நெஞ்சில் அறையுமுன் அதன் கனவுகள் இதயத்தில் இடறு முன் என் கதாபாத்திரத்தை நான் மாற்றிக் கொண்டு வருகிறேன். ஏனெனில், ஞாபகங்களால் நிரம்பியுள்ளது என் வீடு.