(அண்மையில் Irish Times என்ற தளத்தில் “Book review: ‘Notes on the Death of Culture’ by Mario Vargas Llosa” என்ற தலைப்பில் Anne Haverty எழுதியுள்ள நூல் மதிப்பீடு )
இது மிக மோசமான காலம் என்று வாதிட முடியும். ஆனால், நம் காலம் வரலாற்றின் மிக மோசமான காலமாக இல்லாதிருக்கலாம். எனினும்கூட, சிந்திக்கத் தெரிந்த அனைவருமே நாம் வாழும் காலம் மிக மூடத்தனமான காலம் என்று சொல்ல இடமுண்டு. நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் மரியோ வர்காஸ் லோஸா அதை உறுதியாக நம்புகிறார். நாம் ஒரு பெருங்கூட்டமாய் அறிவின்மைக்கு அடிபணிந்து விட்டோம் என்று கலாசார நிலை குறித்த உணர்ச்சி மிகுந்த, ஒளிரும், இந்தக் கட்டுரைத் தொகுப்பில் அவர் வலியுறுத்துகிறார்.
இது துக்கத்தை வெளிப்படுத்தும் புத்தகம். அரசியல் முதல் ஆன்மிகம் வரை இதுவரை உலகம் எப்படி இருந்தது என்றும் இப்போது எப்படி இருக்கிறது என்றும் ஒப்பிட்டு தன் துயரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் வர்காஸ் லோஸா. “கலாசாரத்தை வரையறை செய்வது முன்னிட்ட குறிப்புகள்,” என்ற கட்டுரையில் டி. எஸ். எலியட் 1948ஆம் ஆண்டில் எழுதியது போலவே இவரும் கலாசாரத்தைப் பொதுப்பொருளில் எடுத்துக் கொள்கிறார்- அது பகிர்ந்து அறியப்படும் நுண்ணுணர்வு, வாழ்வு முறை.
எலியட்டும் தன்னைச் சுற்றி கலாசாரச் சீரழிவைக் கண்டார், கலாசாரம் இல்லாத ஒரு காலம் வரப்போவதை அனுமானித்தார். அந்தக் காலம் இதுவே, என்று வாதிடுகிறார் வர்காஸ் லோஸா. எலியட்டின் பார்வையை மேட்டுக்குடி மனப்பான்மை என்றும் இன்னும் பலவாறாகவும் விவரிக்கும் விமரிசகர்கள் அன்று முதல் அவரைக் கண்டித்து வருகின்றனர். லோஸா எடுத்துக் கொள்ளும் முயற்சிகளுக்காக அவருக்கும் அதே சாயம் பூசப்படலாம்.
ஆனால் அவர், உலகமயமாக்கப்பட்ட நம் கலாசாரம் தற்போது போலித்தனத்திலும் வெறுமையிலும் வீழ்ந்திருப்பதையும், அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்;லை என்பதையும் ஒப்பீட்டளவில் சீரான வகையில் விவரிக்கிறார். இதற்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.
ஆனால் நாம் இப்போது வாழும் வாழ்வைப் போன்ற நுட்பமான, அனைத்தையும் உள்ளடக்கிய விஷயத்தை சீரான வகையில் விவரிப்பது என்பது சுலபமல்ல. கலைப் பொருள் வர்த்தகம் போன்ற விஷயங்களில் வர்காஸ் லோஸா ஏறத்தாழ வாயில் நுரை பொங்கச் சினக்கிறார். “அடிமட்டம் வரை அழுகிப் போனது,” என்று கலையுலகைக் கண்டனம் செய்கிறார், அந்த உலகின் கலைஞர்கள் மலிவான உத்திகளைத் தெரிந்தே மேற்கொள்கின்றனர். டாமியன் ஹிர்ஸ்ட் போன்ற நட்சத்திரங்கள், “மோசடி-வித்தை” பயில்பவர்கள், அவர்களது, “அலுப்பூட்டும் வெற்றுக் கேளிக்கையாய் அமைந்த ஒளியற்ற” படைப்புகளுக்கு “அரை வேக்காட்டு விமரிசகர்கள்” துணை போகிறார்கள்.
சிறுபான்மை அளவினான மக்களுக்கு உரியதாய் இருந்த கலாசாரத்தை நாம் கைவிட்டுவிட்டோம். அது உண்மைத் தேடலில் ஈடுபட்டிருந்தது, ஆழ்ந்த சிந்தனைகள் கொண்டிருந்தது, அமைதியாய் இருந்தது, நுண்மைகள் பொருந்தியதாய் இருந்தது. அதைக் கைவிட்டு மையநீரோட்டம் அல்லது பெரும்பான்மை மக்களின் பொழுதுபோக்குக்குரிய விஷயங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இது உணர்ச்சி விழைவு கொண்டதாகவும் ஆழமற்றதாகவும் அனைவருக்கும் எட்டக்கூடியதாக்வும் இருந்தாக வேண்டும்.- அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற விஷயத்தை விமரிசிப்பவர்கள் இந்நாட்களில் முரட்டுத் துணிச்சல் கொண்டவர்களாகதான் இருக்க முடியும்.
மதிப்பீடுகளற்ற இத்தகைய கலாசாரம் அடிப்படை மதிப்பில்லாதது.
ரொட்டியும் சர்க்கஸ்களும்
நம் காலத்தை விவரிப்பதற்குரிய அடைமொழியை பிரஞ்சு மார்க்சிய கோட்பாட்டாளர் கை டிபோர்டிடம் இரவல் பெற்றுக் கொள்கிறார் வர்காஸ் லோஸா. நாம் கேளிக்கைக் காட்சிச் சமூகத்தில் வாழ்கிறோம் (Society of the Spectacle). அழிந்து கொண்டிருந்த ரோமானிய பேரரசின் சீரழிந்த மக்கள் கூட்டத்துக்கு அளிக்கப்பட்ட ரொட்டிகளையும் சர்க்கஸ்களையும் நினைவுறுத்தும் அடைமொழி இது. கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாசாரத்தின் குருட்டு விசைகளால் சுரண்டப்பட்டு, நாமே நம் வாழ்வின் பார்வையாளர்கள் ஆகிவிட்டோம், நம் வாழ்வு நம்மால் வாழப்படுவதல்ல.,
நம் நுண்ணுணர்வுகளின் மரபார்ந்த பாதுகாவலர்களாக இயங்குவது தம் பணி என்று எண்ணியிருந்தவர்களே இப்போது நம் நுண்ணுணர்வுகளை, ஏன், நம் மானுடத்தின் கூர்முனையையும் மழுங்கச் செய்து விட்டார்கள்.
புத்திஜீவிகள், முதுகெலும்பற்ற ஊடகங்கள், அரசியல் வர்க்கம்- அனைவரும் உள்ளீட்டையும் ரசனையையும் தமக்கே தீங்கிழைத்துக் கொள்ளும் பேரார்வத்துடன் கைவிட்டு பிம்பமே உண்மை என்ற சிந்தனையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். 1960களின் லிபரல் புரட்சி, குறிப்பாக 1968ஆம் ஆண்டின் பிரஞ்சு நிகழ்வுகள், மிசேல் பூக்கோ மற்றும் ழான் பாட்ரில்லார்ட் போன்ற பிரஞ்சு கோட்பாட்டியலாளர்கள் மீது கணிசமான அளவு வசைபாடப்படுகின்றது. கலாசாரத்தை அவர்கள், “சமூகத்தை விட்டு முகம் திருப்பிக்கொண்ட, சுயமோகம் கொண்ட கல்விப்புலத்தாருக்கும் புத்திஜீவிகளுக்கும் மட்டுமே உரிய கண்கட்டு விளையாட்டாய்” மாற்றிவிட்டனர்.
ஆனாலும்கூட முனைப்பற்றவர்களாக, அடிமைகளாக, தோற்றங்களின் உலகின் பார்வையாளர்களாக பெருந்திறள் மக்கள் இருக்கவே செய்கின்றனர். முரட்டு தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட நம் அலுத்துப் போன கண்களின் முன் அற்ப பகட்டு நாடகத்தின் காட்சிகள் வன்முறையும் அர்த்தமின்மையுமாய் மாறுகின்றன. நட்சத்திர இசைக்கலைஞர்கள் அரசியல்வாதிகளைவிட நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கின்றனர், நகைச்சுவை வேடம் தரிப்பவர்கள்தான் புதிய தத்துவ மேதைகள். ஒரு காலத்தில் எழுத்தாளர்களுக்கு இருந்த மதிப்பு சமையல்காரர்கள், தோட்டவேலை செய்பவர்கள் போன்ற வாழ்க்கை முறையின் வர்த்தகர்களுக்கே உள்ளது. முன்னிருந்த நிலையுடன் ஒப்பிடும்போது இது சோகமான, நம்பிக்கைக்கு இடமற்ற வீழ்ச்சி நிலையாகிறது..
இலக்கியத்தின் தொடர்ந்த முக்கியத்துவம் குறித்து வர்காஸ் லோஸா நம்பிக்கையற்றவராக உள்ளார். அதாவது, பொழுதுபோக்காகவோ பயன்மதிப்பு கொண்டதாகவோ இல்லாத புத்தகங்களின் முக்கியத்துவம் நீடிக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. அவரால் தெய்வ நம்பிக்கை இல்லாமல் வாழ முடிகிறது என்றாலும், சமய நம்பிக்கையற்ற சமூகம் ஊக்கம் குன்றாமல் நீடிக்க முடியுமா அந்தரங்கத்தைக் கைவிடாமல் தொடர முடியுமா என்று அவர் சந்தேகிக்கிறார். இன்று அக உணர்வுகளை நாம் எப்போதும் பொதுவெளியில் காட்சிக்கு வைத்திருக்க வேண்டும் என்று நம்மிடம் எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒரு காட்டுமிராண்டித்தனம் என்று அவர் நினைக்கிறார்.
இதில் பண்பாட்டில் முன்னேறிய தேசங்களே பெரும் குற்றவாளிகள். நமக்கு முந்தைய பல நாகரீகங்களைப் போலவே கையளிக்கப்பட்ட அனைத்தையும் வீணாக்கி நாமும் அழிவோம், பல்லாயிரம் ஆண்டுகால தொடர்ச்சியில் உருவாக்கப்பட்ட, நம் வாழ்வுக்கு பொருளும், உள்ளடக்கமும் ஒழுங்கும் அளிக்கும் இந்த நுண்பொருளை இழப்போம். வர்காஸ் லோஸாவின் கதையாடலில் “அர்த்தமின்மை” “மூடத்தனம்”, “சுவாரசியமின்மை” போன்ற பதங்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறுகின்றன. இணையத்தின் அசாதாரண, அதிசய வளங்கள் நம்மில் பலராலும் சமூக ஊடகத்தின் அர்த்தமற்ற உரையாடல்கள் வழியாக மட்டும் அறியப்படும் நிலையில், யாரால் அவர் கூறுவதை மறுக்க முடியும்?
ஆனால் இணையம் ஆழமற்ற அறிவு சேகரத்தின் கருவி மட்டுமே. அறிவு நம்மைக் கவர்கிறது என்றாலும், அதுவே கலாசாரமாகாது. சிந்தனைக்குத் துணை செய்யும் அளவில்தான் அறிவுக்கு இடமுண்டு. இதைச் சொல்லும்போது வேறொரு கேள்வி தோன்றுகிறது- பாலுணர்வின் இடத்தைச் சிந்தனை கைப்பற்றிவிட்டதா- ரகசிய, மீறலாக அது இன்றும் இருக்கிறதா?
பாலுணர்வைப் பெருமைப்படுத்துதல்
பாலுணர்வு குறித்து எழுதும்போது வர்காஸ் லோஸாவிடம் பெரும் அவநம்பிக்கையும் தீவிர உணர்ச்சியும் வெளிப்படுகிறது. கலைகள், எழுத்து மற்றும் அறிவுப்புலத்தில் என்ன நடந்ததோ அதுவே நாகரீகத்தின் மிக உன்னத வெளிப்பாடுகளையும் சாதனைகளையும் அழித்துவிட்டது என்று அவர் துக்கப்படுகிறார்- ஆம், காமம் மலினப்படுகிறது என்று வருந்துகிறார்.
பாலுணர்வைப் பெருமைப்படுத்தி உன்னத காமம் என்ற நிலைக்குக் கொண்டு சென்றதால்தான் நாம் மிருகத்தனத்திலிருந்து மானுடம் தொட்டோம் என்கிறார் அவர். ஆளுமை உருவாக்கத்தில் பாலுணர்வுக்கு உள்ள முக்கியத்துவத்தை உணர்த்த சிக்மண்ட் பிராய்ட் மற்றும் ஜார்ஜ் படெயில் இருவரையும் மேற்கோள் காட்டுகிறார் அவர். பாலுணர்வில் ஒரு மீறலும் ரகசிய பரிமாணமும் இருப்பது என்பது காமத்தின் தேவையாகிறது. பாலுணர்வைப் பொதுவெளிக்குக் கொண்டு வருவதென்பது, அதை ஒரு பொழுதுபோக்கு அல்லது விளையாட்டு அல்லது மருத்துவ நிலைக்குக் குறைத்து காதலிலிருந்தும் வழிபாட்டு உணர்வுகளிலிருந்தும் துண்டித்து நம்மை ஆர்வமற்ற நிலைக்கே கொண்டு செல்லும்.
இது ஏதோ பழைய காலத்தில் சொன்னது போலிருக்கிறது. அடக்கம், சடங்கு, மர்மம், அழகு போன்ற கருத்தாக்கங்களில் வர்காஸ் லோஸா இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கிறார். அவர் இந்த வயதில் வாழ்கிறார் என்பது சோகமான ஒரு விஷயம் என்று நான் சொல்லும்போது- அவருக்கு வயது கிட்டத்தட்ட எண்பது ஆகிவிட்டது- நான் அவரது வயதைச் சுட்டவில்லை. உலகம் போகும் போக்கு சரியில்லை என்ற அருசி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படும் வயதில் அவர் வாழ்வதைச் சொல்கிறேன். “உனக்கு எங்களைப் புரிந்து கொள்ள முடியாது,” என்று இளைஞர்கள் அலட்சியப்படுத்தும் வயதில் வாழ்கிறார் அவர்.
தன் தரப்பு வாதங்களை உருவாக்குவதில் அவருக்கு அத்தனை திறமை போதாது என்றுதான் சொல்ல வேண்டும்- கருத்து, எதிர்கருத்து என்பதன் நுண்மைகளைவிட அவர் கருத்துகளை ஒன்றுதிரட்டுவதையே விரும்புகிறார். சில சமயம் தீவிரமான முன்முடிவுகளைக் கொண்ட சாமியாரிணி அல்லது ஜெபமேடை பிரசாரகர் போலிருக்கிறார்.
ஆனால் அவர் சொல்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்பது நல்ல விஷயம்- இதைச் சொல்லுவது அவசியமில்லை, அவர் மிகத் தெளிவாகவும் எழுதுகிறார். இளமையோ முதுமையோ சிந்திப்பவர்கள் ஒவ்வொருவரும் இவரைப் படிப்பார்கள், படிக்க வேண்டும்.
இவர் தீர்வுகள் எதுவும் அளிக்கிறார் என்று சொல்ல முடியாது. கடந்த காலத்துக்குரிய நம் ஆதார வளங்கள் இல்லாதபோது நம் எதிர்கால சந்தோஷம் வறண்டதாய் தெரிகிறது. ஆனால் ஒரு விஷயம் நிச்சயம்- நம்மால் எதிர்காலத்தை கணிக்க முடியாது. மானுடம் எவ்வளவு முட்டாள்தனத்தைச் சகித்துக் கொள்ளும்? சீக்கிரமே இந்தப் பொழுதுபோக்கு கேளிக்கைக் காட்சிகளுக்கு எதிராக நம் சமூகம் கிளர்ந்து எழுந்து போராடாது என்பது நிச்சயமில்லை.
நன்றி – The Irish Times http://www.irishtimes.com/culture/books/book-review-notes-on-the-death-of-culture-by-mario-vargas-llosa-1.2308929…