எழுத்து

உனது பிரதியாய் – ஏ. நஸ்புள்ளாஹ் கவிதை

ஏ. நஸ்புள்ளாஹ்


ஔியுள்ள இடத்தில்
முளைக்கத் துவங்குகிறது ஆன்மா
ஒரு விநாடியேனும்
ஔியற்ற இடத்தில் அது
வாழ விரும்பவில்லை

இறுகி விலங்கிடப் பட்ட
இதயத்தின் மேல்
ஔி பட்டுப்பட்டு விலகும் போதெல்லாம்
ஆதியில் விடுபட்டுப் போன எல்லாம் அறியப்படாத புலத்திலிருந்து
ரேகைகளைத் தடவிப்பார்க்கின்றன

அடர் துயர்
கனத்த வலி
மிக எளிதாக ஆன்மாவுள்ளே
நுழைய முடியாமல்
ஔி பறந்து திரிந்து பசுமையின்
உச்சம் தருகிறது

நீ கோப்பையில் வழங்கிய
நஞ்சின் ருசியும்
ஔி ஊடுருவும் சிறு கணத்தில்
நிறமுமற்று சுவையுமற்று உனது பிரதியாய்
காதல் விதைத்து நிற்கிறேன்.

00

முத்துபொம்மு – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

கருவேலங்காட்டுக்குள் புதைந்துக் கிடந்தது அந்த குடியிருப்பு. மண்சுவரும் கீற்றுக்கூரையுமாக ஒழுங்கமையாத வரிசைக்குள் வீடுகள் நெருங்கிக் கிடந்தன. படுக்கவும் உடுக்கவும் தவிர்த்து மீதி புழக்கமனைத்தும் வெளியே சிதறியிருக்க, சாக்கடையாக தேங்கிக் கிடந்த புழங்குநீரை ஈக்கள் கொண்டாடிக் களித்தன. பத்தேறிய கரிப்படிந்த பாத்திரங்களை புழங்காத நேரத்தில் உருட்டி விளையாட நாய்களுக்கு அச்சமிருப்பதில்லை. குடங்களில் பத்திரப்படுத்தியிருந்த பிளாஸ்டிக் நீர் சூடேறிக் கிடந்தது. சோற்றுக்கஞ்சியின் தடம் பதிந்த தரைகள், பாயோடு படுக்கையோடு கிடக்கும் வயதானவர்கள் என யாரையும் எதையும் மிச்சம் வைக்காமல் மதிய வெயில் குடியிருப்பை எரிச்சலாய் சூழ்ந்திருந்தது. வெயிலை உறிஞ்சிக் கொண்டு காற்றிலசைந்த கறிவேலஞ்செடிகள் மெலிதாய் மலவாடையை பரப்பியது.

”சோறாக்கி வச்சிட்டு போறதில்லயா..?”

காத்தானின் கேள்விக்கு சோலை பதிலேதும் சொல்லவில்லை. குடத்திலிருந்த நீரை அரிசியில் சரித்து கையால் அளைந்தாள். விரல்களே மூலதனம். பிழைப்பை தேடி இங்கு வந்த பிறகு, ஓட்டலில் பாத்திரங்கள் கழுவித் தள்ளும் வேலை அவளுக்கு வாய்த்திருந்தது. அதிகாலையி்லேயே அங்கிருக்க வேண்டும். ஆனால் அதற்கும் அதிகாலையிலேயே சமையலை முடித்திருப்பாள்.

உலைநீரை அடுப்பிலேற்றியபோது டேக்சா லேசாக சரிந்து நீர் விறகடுப்பில் சிந்த, பாத்திரத்தை நிமிர்ந்தி வைத்தாள். காலை எழுந்ததிலிருந்தே தடுமாற்றம்தான். அவளிடம் குக்கர் ஒன்றிருந்தது. அதை உபயோகப்படுத்த கரண்ட்அடுப்பு வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். வேலை செய்யுமிடத்தில் பார்த்திருக்கிறாள். கரண்ட்அடுப்பில் பாத்திரங்கள் கரிப்பிடிக்காதாம். சூடு ஏறாதாம்… என்ன மாயாஜாலமோ.. ஒருமுறையாவது அந்த அடுப்பில் சமைக்க வேண்டும் என உலை வைக்கும்போதெல்லாம் தோன்றும் வழக்கமான எண்ணம் இன்று தோன்றவில்லை.

”பயலுக்கு சரியான பசி.. பிஸ்கட் வாங்கியாந்துக் குடுத்தேன்..” பேச்சுக் கொடுத்தான் காத்தான்.

”ஆயிடும்.. ஆயிடும்..” என்றாள் வெற்றாக.

கொடியடுப்பில் பருப்பை வேகவிட்டாள். குடிசைக்குள் காய் எதாவது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவசரமாய் வந்தவளை புடவைத் தடுக்கியது. “நவுந்து ஒக்கார்லாமில்ல” பிஸ்கெட் பாக்கெட்டோடு குடிசை வாசலி்ல் அமர்ந்திருந்த மகனை கடிந்தாள்.

”இப்ப எதுக்கு அவன்ட்ட கத்தற..?”

”ஒத்தரயும் ஒண்ணுஞ்சொல்லிடக் கூடாது.. எல்லாம் என் எழவயே எடுங்க..” காய்ந்து சூம்பியிருந்த நாலைந்து கத்திரிக்காய்களை பருப்பில் அரிந்து போட்டாள். புகைந்த அடுப்பில் விறகை நுழைத்து காற்றை ஊத, பற்றிக் கொண்ட விறகை நிதானமாக்கினாள். குடிசைக்குள்ளிருந்த மிளகாய்துாள் டப்பாவை எடுத்துக் கொண்டு  திரும்பியபோது வடித்து விட்டிருந்த கஞ்சியில் கால் வழுக்கியது.

”சனியனே.. போ அங்கிட்டு” சோற்று வாசத்துக்கு கால்களுக்குள் வாலை ஒளித்துக் கொண்டு பம்மிய நாயை விரட்டினாள்.

”நீ சாப்ட்ல..?” காத்தான் சுடசுட சோற்றில் குழம்பை கலந்து பிசைந்துக் கொண்டே கேட்டபோது, சோலை புழங்கியப் பாத்திரங்களை அடுப்பு சாம்பலால் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

”என்னாச்சுல..” கைகளை துடைத்துக் கொண்டே அருகில் வந்தவனிடம் நிமிர்ந்தபோது கண்கள் கலங்கியிருந்தன.

“இன்னிக்கு அப்பிசி ரெண்டு..” என்றாள்.

2

அடித்து பெய்த கனமழை ஓய்ந்திருந்தாலும், ஒளி போதாமையால் படப்பிடிப்பை நிறுத்தியிருந்தான் இயக்குநர் சரண். காற்று சிலிர்ப்பாகவும் வெப்பம் மிதமாகவும் நிலவ, கிளம்ப மனமின்றி ஓடைக்கரையோரமாக கிடந்த பாறையொன்றில் அமர்ந்துக் கொண்டான். உதவி இயக்குநரை தவிர்த்து மீதமானவர்களை அனுப்பி விட்டிருந்தான். மெலிதாக விழுந்த இளந்துாறல் ஓடை நீருக்குள் வட்டவட்டமாக சிலிர்த்துக் கொண்டிருந்தது. பெருங்குடைகளாக பரவியிருந்த கரையோர மரங்களில் வெண்பூக்களாய், துள்ளியெழும் மீன்களுக்காக வெண்கொக்குகள் காத்துக் கிடந்தன. பூவாய் சிதறிய துாறல்களை பூமி பூரிப்பாக உள்வாங்கிக் கொண்டிருந்தது. சிலீரென்றிருந்த ஓடைநீரும் வெதுவெதுப்பாக உடலில் வழிந்த மழைநீரும் மனதை கிளர்ந்தெழுப்ப, கைகளை விரித்து முகத்தை பின்னுக்குத் தள்ளி துளிகளை முகத்தில் ஏந்திக் கொண்டான் சரண்.

எதிரே தெரிந்த மலையடுக்குகள் பால் மார்புகளை திறந்தவாறு மல்லாந்துக் கிடக்கும் மங்கையாய் மதர்த்துக் கிடந்தன. பச்சை மனிதனுக்கு பொன்கொண்டையிட்டது போல அதனுாடே சூரியன் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. ஈரத்தை உறிஞ்சிய புற்கள் கசிய விடும் பசிய வாசம் நாசியை நிறைக்க காலமத்தனையும் இங்கேயே தொலைத்து விடும் பேராவலோடு இயற்கையின் முன் நிராயுதபாணியாக நின்றிருந்தான். இம்மாதிரியாதொரு உந்துதலில்தான் படமெடுக்கும் எண்ணம் தோன்றியதும்.

”சார்.. மழை பெருசாயிடும் போலருக்கு.. கேரவனுக்கு போயிடலாம் சார்..” ஐப்பசி மழை அத்தனை சீ்க்கிரத்தில் விடாது.

”ம்ம்..” என்றான் எழுந்துக் கொள்ளும் எண்ணமேதுமின்றி.

அவனுடைய யூனிட்டில் வளர்மதிக்கு் மட்டுமே அவனையொத்த ரசனையிருந்தது. காடுதான் நாயகன் என்றாலும் அவளை சுற்றியும் கதையை அமைத்திருந்தான். பனிரெண்டு வயதிருக்கும் அவளுக்கு. அவளை கண்டுக்கொண்டதும் அழகான இளங்காலை நேரமொன்றில்தான். கதவை திறந்துக் கொண்டு தெருவில் இறங்கி ஓடியபோது ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நாயொன்று தலையை துாக்கி பார்த்து விட்டு பிறகு அசட்டையாக படுத்துக் கொண்டது. சைக்கிளின் பின்னிருக்கையிலில் கட்டியிருந்த துளசியிலை முட்டையை ஒரு கையால் தாங்கி பிடித்தபடி சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்ற தந்தையின் பின்னோடு நடந்துக் கொண்டிருந்தாள் வளர்மதி. அவன் அவர்களை உரக்க அழைத்தபோது திரும்பிய வளர்மதியின் உதடுகள் புன்னகைத்தப்படியே இருந்தது. அடர்ந்த புருவங்களுக்கு கீழிருக்கும் கரிய உருண்ட விழிகளோடும் மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறத்தில் துறுதுறுப்பான நாசிகளோடுமிருந்த அவளை அப்போதே ஒப்பந்தம் செய்து விட்டான்.

கதையில் உள்ளவாறே நிஜத்திலும் அவளுக்கு காடு பிடித்திருந்தது. இடுப்பிலிருந்து இறக்கி விட்ட குழந்தையாய் ஓடை நீரில் இயல்பாக மீன் பிடித்தாள். மழை பெய்த சகதிகளில் வழியுண்டாக்கிக் நடந்தாள். படுகையெங்கும் உருண்டுக் கிடக்கும் கூழாங்கற்களில், பொடிகளாக சேகரித்து மடியில் கட்டிக் கொண்டாள். நீருக்கும் மரத்துக்குமிடையே நீளமான வால்களை தொங்க விட்டு அலையும் குரங்குகளை பயங்கலந்த பிரமிப்போடு பார்த்து “கொரங்காட்டீ எங்க..“ என்றாள். தாவர இடுக்குகளுக்குள் சொட்டுசொட்டாக நுழையும் சூரியன் தன் மீதிடும் கோடுகளுடன், உடலை அங்குமிங்கும் நகர்த்தி விளையாடுபவளின் பாவனைக் காட்டும் கண்களை அவன் காமிராவுக்குள் ஏந்திக் கொண்டேயிருந்தான்.

பசுங்குகைக்குள்ளிருந்து வனமகள் நீந்தியபடி வர, வழியெங்கும் மலர்கள் உதிர்ந்து அவளை வரவேற்றன. அவள் உடலிலிருந்து கசியம் பசியவாசம் பூமியெங்கும் பரவியது. காட்டின் ஓசையும் நறுமணமும் அதற்கு பக்கவாத்தியங்களாயின. பிரக்ஞைப்பூர்வமான மௌனங்கள் பாடல்களாலும் இசையாலும் கலைந்துப் போவதை அவன் விரும்புவதி்ல்லை. காட்சிகளின்போது கூட காட்டின் ஒலிகளை அதிகமும் பயன்படுத்தியிருந்தான. இயற்கையின் முன் மொத்த அகந்தையும் அழிந்து விடுகிறது. ஆனால் சில கணங்களிலேயே அது முன்பை விட தீவிரமாக எழுந்தும் விடுகிறது. அது காட்டின் அற்புத கணங்களை அவனுக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தது.

.”சார்.. மழ வலுத்திடுச்சு சார்..”

வாய்க்குவாய் சார் போட வேண்டியிருந்தது அவன் இயக்குநர் என்பதால் மட்டுமல்ல.. சரண் மெத்த பணக்காரன் என்பதற்காகவும் இருக்கலாம்.

”செரி.. கௌம்பலாம்…”

சரணை போலவே ஓடையும் மழையை உள்வாங்கிக் கொண்டு பூரிப்பாக நகர்ந்தது.

3

அது ஒரு ஐப்பசி மாத காலை. மழை நான்கு நாட்களாக விடாமல் பெய்ததில் பாதையெங்கும் செம்மண் சேறாக ஓடியது. மரங்களும், புல்பூண்டுகளும் வேரறுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருந்த அந்த நிலத்தில் என்றோ நடப்பட்டிருந்த அந்த சிறு செவ்வக வடிவ கருங்கல் துறுத்தலாய் தொற்றிக் கொண்டிருந்தது. அவர்கள் அங்கு சிறு கூட்டமாய் கூடியிருந்தனர்.

வளமான மண்ணும் சுற்றிலும் மலைகளுமான இதமான சூழலுக்குள் கதகதப்பாய் ஒளிந்திருக்கும் இந்தப்பகுதியில் முன்பெல்லாம் மரங்களடர்ந்திருக்கும். புல்பூண்டு தாவரங்களுக்கும் குறைவிருக்காது. மேய்ச்சலுக்கு வரும் ஆடுகள் பெயருக்கு அங்குமிங்கும் அலைந்து விட்டு இறுதியில் இங்கு தஞ்சமடைந்து விடும். மழை உருவாக்கும் சிறுசிறு ஓடைகளால் நீருக்கும் பஞ்சமிருக்காது. இந்த பகுதியை யாரோ விலைக்கு வாங்கி சொகுதி விடுதி கட்டப் போவதாக பேச்சு அடிப்பட்ட கொஞ்சநாட்களிலேயே முள்வேலி அமைக்கப்பட்டு வெளிநடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

”கும்பல பாத்துட்டு வாச்சுமேனு எதும் வந்து தொலச்சிடப் போறான்.. சீக்ரமா முடிச்சுக்குணும்..” என்று அபிப்பிராயப்பட்டது கும்பல்.

முள்வேலி கிழித்த காயத்திலிருந்த வழிந்த இரத்ததை சட்டை செய்யும் மனநிலையின்றி கூப்பிய கையோடு நின்றிருந்தாள் சோலை. பலியிட முடியாது. கண்டுபிடித்து விடுவார்கள்.

”ஆயி.. தப்புதவருந்தா மன்னிச்சு சுத்த பூசய ஏத்துக்க தாயீ..”

சென்ற ஆண்டு இத்தனை கெடுபிடி இல்லை. கனவில் வந்துக் கொண்டேயிருந்த மகளுக்கு சேவலை பலியிட்டு இரத்தகாவு கொடுத்திருந்தாள். கையில் அமுக்கிப் பிடித்திருந்த சேவல், திமிறலாய் விலகி இறக்கையை படபடப்பத்துக் கொண்டு கட்டியக் கால்களோடு தானாகவே பலிபீடத்தில் அமர்ந்துக் கொண்டது.

”மவளே.. ஏத்துக்க. ஏத்துக்க.. ரெத்த காவ ஏத்துக்க.. ஏத்துக்கிட்டு அவுக வம்சத்தயே கொலயறுக்குணும்.. செய்வியா.. செய்வியா..” தன்நிலையிழந்து ஆவேசப்பட்ட சோலையை அம்சடக்கிய போது வாட்ச்மேன் வந்திருந்தான். மயங்கி சரிந்தவளை தாங்கிப்பிடித்தபடி கலைந்து போனதை நினைத்துக் கொண்ட கூட்டம் அவளை அவசரப்படுத்தியது.

”ஆயி.. சட்டுன்னு ஆவுட்டும்.. வாச்சுமேனு வந்துரப்போறான்..”

காத்தான் மழைக்கு அணையாக குடையை சரித்து பிடித்திருந்தான். சோலை நிறை வயிற்றோடு குனிந்து கல்லிலிருந்த நீரை கையால் வழித்து விட்டாள். மஞ்சளைக் குழைத்து கல்லின் நடுவே பூசி அதன் மீது குங்குமத்தால் பொட்டிட்டாள். கதம்ப மாலையைச் சூட்டி நடுவே காட்டு செம்பருத்தியை வைத்தாள். துாக்கில் எடுத்து வந்திருந்த சர்க்கரைசோற்றை இலையிலெடுத்து கல்லின் மீது வைத்தாள். அதற்குள் மழை கூடியிருந்தது.

“நா தன்னந்தனியா கெடக்கேன்.. தவியாதவிக்கறன்.. விடமாட்டேம்பில.. விட மாட்டேன்..” இரட்டை பின்னலும் காட்டுச்செம்பருத்தி சூடிய தலையுமாக பாவடை சட்டையணிந்த சிறுமி ஒருத்தி முள்வேலியை பிடித்தபடி கத்தியதாக வேலுமணி மேஸ்திரி பதறிக் கொண்டு சொன்னது நினைவுக்கு வந்தது அவளுக்கு.

”மவ கேட்டத நீயும் மறந்துட்டீயா..” என்றாள் அழுகை கொப்பளிக்க நின்ற கணவனிடம்.

4

சரண் என்று பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்த அந்த சொகுசு விடுதியின் அலங்கார புல்வெளியைக் கடந்து, பெரிய போர்ட்டிகோவிற்குள் நுழைந்தபோது சரணின் நனைந்த உடல் நடுங்கத் தொடங்கியது. இயற்கையின் ஈர்ப்பில் மனம் கவிதையாய் உருக, உடன் வந்த பணியாளையும் நகரும் படிக்கட்டையும் மின்துாக்கியையும் ஒதுக்கி விட்டு படிகளில் ஈரம் சொட்ட சொட்ட நடந்து மேலேறி முதல் தளத்திலிருந்த தனது அறையை நோக்கி நடந்தான். அறையின் தடிமனான மரக்கதவின் செதுக்கல்கள் ஓடையிலிருந்து சுழித்து கீழிறங்கும் நீரை போல படிபடியாக உள்ளொடுங்குவதை ரசித்தவாறு நின்றிருந்தவனிடம், யாரோ தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சிநேகமாக சிரிக்க, சூழலிலிருந்து கலைய மனமில்லாதவனின் மௌனம் வந்தவருக்கு கனமாக தோன்றியிருக்கலாம். மேற்கொண்டு யாரையும் சங்கடப்படுத்த விரும்பாமல் அறைக்குள் நுழைந்து, மிதமாக இயங்கிக் கொண்டிருந்த சூடேற்றியை நிறுத்தினான்.  டிகாஷன் துாக்கலாக அரை இனிப்பில் மிதமாக சூட்டில் காபி தேவைப்பட்டது அவனுக்கு. அப்பாவிடமிருந்து அவனுக்கு தொற்றிக் கொண்ட ருசி அது.

உடைகளை மாற்றிக் கொண்டான். ஃப்ளாஸ்க்கிலிருந்த காபியை கோப்பைக்கு மாற்றிக் கொண்டு ஜன்னலோர சோபாவில் அமர்ந்தான். மழை முற்றிலும் நின்றிருந்தது. தெளிந்த வானில் வெண்ணிற மேகம் துணுக்குகளால் விரவியிருந்தன. மலையடுக்குகள் பனித்திரைக்குள் கோட்டோவியங்களாய் தெரிந்தன. அதனுள் உறைந்திருக்கும் மௌனத்தை மேகங்களால் புரிந்துக் கொள்ள இயலும். அவனும் மேகத்தையொத்தவனே. தனிமை அவனுக்கு நிறையவே பிடித்திருந்தது. அதுவும் தந்தையின் இறப்புக்கு பிறகு அதற்கான சந்தர்ப்பங்களை அவனையுமறியாது நிறையவே உருவாக்கியிருந்தான். அறுபது வயதில் எதிர்பாராது நிகழ்ந்த அவரின் மரணத்தை ஏற்றுக் கொள்ளவியலாத தவிப்பே தனிமையை நாட வைத்திருக்கலாம். அன்பை தோழமையாக காட்டத் தெரியாது அவருக்கு. ஆனால் உணர்வின் வழியாக அவர் கடத்தியிருந்ததை அவன் உணர்ந்துக் கொண்டேயிருந்தான்.

இதே மாதிரியான அடைமழை நாளில்தான் அவர் இறந்துப் போயிருந்தார். இதே சொகுசு விடுதியின் தோட்டத்தில் சேற்றில் முகம் பதித்து மரித்துக் கிடந்தவரின் நினைவுகளை ரசனையின் வழியேதான் கடக்க வேண்டும்.

நின்றிருந்த மழை கனத்து பெய்யத் தொடங்கியது.

5

மதியம் அடித்த வெயிலின் சுவடேயின்றி வானம் கருமைத்தட்டிப் போயிருந்தது.

”ஒரு நா அங்க போய்ட்டு வர்லாங்கறேன்..” என்றாள் சோலை.

சொகுசு சுற்றுலா விடுதி கட்டப்பட்ட பிறகு வாழிடம் கை நழுவிப் போக, பிழைப்புக்காக ஊருராய் அலைந்தாலும் முத்துபொம்முவின் நினைப்பு மட்டும் அவர்களுக்குள் மாறாமலேயே இருந்தது.

“போயீ..?” என்றான் காத்தன்.

”உசுருட்ட எடத்தில பலி குடுத்து படயல் போடணும்.. அவ நெனப்பு நமக்கிருக்கமேரி நம்ப நெனப்பு அவளுக்கிருக்குமில்ல.. காத்துல அலஞ்சுட்டிருக்கவள கலங்க வுடக்குடாது”

”கட்டடம் கட்டங்குள்ளவே நம்பள வெரட்டியடிச்சிட்டானுங்க.. கட்டுன கட்டடத்தில ஊசுருட்ட எடத்த எங்கன்னு நீ தேடுவ..  அதும்பக்கங்கூட போ முடியாது பாத்துக்க..”

மழையில் காடுகள் செழித்து, மலையே தீவனமாக தெரிந்ததில் ஆடுகள் கொண்டாட்டத்தில் திக்குமுக்காடிக் கிடந்தன. அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதில் முத்துபொம்முவுக்கும் கொண்டாட்டம்தான்.  நீண்ட கழியும், மதிய சோறுமாக கிளம்பி விடுவாள். வயிறு நிறைந்த திருப்தியில் மசங்கி மசங்கி வரும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு கீழிறங்கும்போது அந்திசாய தொடங்கியிருக்கும். அன்று அந்தி சாயத் தொடங்கிய நேரத்தில் ஆடுகள் ஒவ்வொன்றாக பட்டிக்கு வரத் தொடங்கின, மேய்த்துச் சென்ற முத்துபொம்முவை தவிர்த்து.

மழை பெய்த சகதியில் கால்களை பரப்பியபடி செத்துக் கிடந்தாள் முத்துபொம்மு. பனிரெண்டு வயதின் குழந்தைத்தனமும், பருவம் எய்தும் குமரித்தனமுமான அவளின் இளம்உடல் மரங்களடர்ந்த காட்டுப்பகுதியில் விறைத்து மல்லாந்திருந்தது உடலில் ஆடை ஏதுமின்றி. பதிலாக அது கழுத்தை இறுக்கிக் கிடந்தது.

ஆவேசம் தாளாது ஈரமண்ணை வாரியடித்தாள் சோலை. ”தாயீ.. பெத்த வயிறு ஒலையா கொதிக்குது… என் உசுரு எறியறப்பல ஒங்கொலய அறுத்தவன் வமுசத்தயே கொலயறுக்குணும் தாயீ..” வயிற்றிலறைந்துக் கொண்டாள்.

மழை பேயாய் அடிக்கத் தொடங்க, வீடு முழுமையாக நனைந்துப் போனது.

6

கலவையான எண்ணங்களில் சரணுக்கு உறக்கம் நகர்ந்திருந்தது. அறையின் பின்புற கதவை திறந்து பால்கனிக்கு வந்தான். பால்கனி கண்ணாடி தடுப்புகளால் மூடப்பட்டு சிறுஅறை போன்ற தோற்றத்திலிருந்தது. உடுத்தியிருந்த கம்பளியையும் மீறி குளிர்காற்று சிலிர்ப்பாக உடலில் இறங்கியது. காணுமிடங்கெங்கும் ஆர்ப்பரிப்பாக தோன்றியது வனத்தின் இருள். விளக்குகளை வெற்றிக் கொள்ளும் இருளின் அவ்வொளி, அகத்தின் அடுக்குகளில் ஊடுருவி கண்களை நிறைந்துக் கொண்டே வர, ஒலிகளும் பழகத் தொடங்கின. எங்கோ விழும் அருவியின் ஓசையும், விடாது கேட்கும் சீவிடுகளின் ஒலியும் மெலிதாக எழும் காற்றின் இசையோடு கலந்திருந்தன. இவை மௌனத்தின் மொழிகளாகதானிருக்க வேண்டும். கண்களை மூடி அனுபவித்தான்.

அதேநேரம் இன்னும் ஓரிரு நாட்களில் இங்கிருந்து கிளம்ப வேண்டியிருக்கும் என்ற எண்ணம் அச்சுறுத்தலாக எழுந்தது.  படப்பிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்திருந்தன. இது சரணின் இரண்டாவது படம். தந்தையின் திடீர் மரணத்தையொட்டி வெளிநாட்டிலிருந்து திரும்பியவனுக்கு மீண்டும் அங்கு செல்ல மனமில்லாமல்போனது அவனுக்கே புதிராகதானிருந்தது. கூடவே படமெடுக்கும் ஆசையும் தொற்றிக் கொள்ள, முதல் படத்தில் தன்னை நன்றாகவே நிரூபித்திருந்தான்.

உறக்கமும் விழிப்புமாக நகர்ந்த இரவு பறவைகளின் கீச்சொலிகளால் மீள, எழுந்து பால்கனிக்கு வந்தான். இருளும் விலகாத நிலவும் நகராத புத்தம்புதிதான நாள். வானில் நட்சத்திரங்கள் மினுங்கலாய் நடுங்கின. காடு பொழுதுகளுக்கேற்ப ரூபம் கொள்பவை. பழக்கப்பட்ட காட்சிகள் கூட அவனுக்கு புதிது போல தோன்றின.  கண்ணாடி தடுப்பை திறந்தான். காத்துக் கிடந்ததுபோல காடு உள்ளே வரத் தொடங்கியது. துாரத்து காட்டையும் அழைத்துக் கொள்ள விரும்பி பைனாக்குலரை கண்களில் பொருத்திக் கொண்டான்.

மலையடுக்குகள் பெரும்சரிவாக இறங்கி மீண்டன. சிறு குன்றுகளும் அதை தொடர்ந்து சாலைகளும் ஊர்களை அடையாளம் காட்டின. மலையை நீராக சரித்து விட்டதுபோல் அருவி ஆர்ப்பரிப்பாய் கொட்ட, அதன் ஓடையோ எவ்வித பரபரப்புமின்றி நிதானமாக ஒடிக் கொண்டிருந்தது. அதிக உயரமில்லாத மரங்கள் சரிவுகளில் செறிந்திருந்தன. பசும் பரப்பின் மீது மேகங்கள் குவியல் குவியலாக பரவி பின் கரைவதும் தோன்றுவதுமாக இருந்தன. பெரிய மரமொன்று வேரோடு விழுந்து பொக்கையாகி போன இடத்தில் நீர் குட்டையாக தேங்கிக் கிடந்தது. தேன்கூடுகள் ஆங்காங்கே கருத்த பைகளாய் தொங்கிக்கொண்டிருந்தன.

காட்சிகள் மாறிக் கொண்டே வர, அங்கு வளர்மதி நின்றுக் கொண்டிருந்தாள். மிகுந்த ஆச்சர்யத்தோடு காட்சியை துல்லியமாக்கி அவளருகே கொண்டுச் சென்றான். அவளேதான். விடுதியின் வெளிப்புற சரிவில் நின்றுக்  கொண்டிருந்தாள். உடுப்புக்கு மேல் கம்பெனி ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். குளிருக்கு அணையாக கைகளை கன்னங்களுக்கு முட்டுக் கொடுத்து தோள்களை உயர்த்தியபடி நின்றிருந்தாள். இயற்கை மீது இத்தனை ஈர்ப்பா இவளுக்கு..? என்று தோன்றியபோதே, அவளது பாதுகாப்புக் குறித்த பதற்றமும் எழுந்தது அவனுக்கு.

விடுதி உறங்கிக் கொண்டிருந்தது. ஓசையெழுப்பாது வெளியே வந்தான். வானம் மழைக்கான அறிகுறிகளோடு கம்மிக் கொண்டிருந்தது. இன்றும் படப்பிடிப்பு தள்ளிப் போகலாம். அதுவும் நல்லதுதான். கூடுதலாக இங்கு தங்கிக் கொள்ள வாய்ப்புக் உருவாகும். எடிட்டிக், ரீரிகாட்டிங்.. இசைக்கோர்ப்பு என இனி அடுத்தடுத்து வரவிருக்கும் நாட்கள் இயந்திரத்தனமானவை.

உறை அணிந்த கைகளை ஜெர்க்கினுக்குள் விட்டபடியே நடந்தான். விடுதியின் போக்குவரத்துக்காக போடப்பட்டிருந்த தார்சாலை கரும்பாம்பாய் வளைந்தோடியது. விடுதிக்கு எதிர்புறம் மலை சரிந்திருந்தது. வளர்மதி சாலையை கடந்து சரிவை நோக்கி திரும்பியபடி நின்றிருந்தாள். கைகளிரண்டும் இயற்கையை அள்ளிக் கொள்வதுபோல வானை நோக்கி விரிந்திருந்தன.

சாலையை கடந்து அவளருகே சென்றான். இயற்கைக்குள் ஆழ்ந்துக் கிடப்பவளை கலைக்க எண்ணமில்லாமல். ”வளர்மதி..” என்றான் அவளுக்கு கேட்காத குரலில்.

வெளிச்சத்துக்காக செல்போன் டார்ச்சை இயக்க எண்ணி, ஜெர்கினுக்குள் கை விட்டு செல்போனை உருவ, அது லேசாக நழுவியது. அதை பிடிக்க எண்ணிய வேளையில் இடதுகால் சரிவிலிறங்கியது. வலதுகால் உடலை தாங்கவியவாது தடுமாற,  சுதாரிக்கும்முன்பே உடல் வழுக்கி வழுக்கி முனைப்புடன் சரிவில் உருண்ட போது வெட்டிய மின்னல் ஒளியில் அவள் வளர்மதி அல்ல என்று அனிச்சையாக அவன் சிந்தைக்குள் படிந்ததே கடைசி உணர்வாக இருக்கலாம். சூடியிருந்த காட்டுச்செம்பருத்தி அதிகாலையில் மலர்ந்திருக்கலாம்.

அன்றும் அப்படியானதொரு மின்னலொளியில்தான் முத்துபொம்மு பிணமாக கிடந்ததை கண்டுக் கொள்ள முடிந்தது. அவளுடன் சென்ற சிலுப்பி, மதிய சாப்பாட்டுக்கு பிறகு ஆடுகளை ஒருங்கு கூட்டுவதற்காக தானும் முத்துபொம்முவும் ஆளுக்கொரு திசையாக பிரித்து சென்று விட்டதாக சொன்னாள். கூடவே முத்துபொம்மு போன திசையில் யாரோ ஒரு ஆள் சென்றதாகவும் கூறினாள். பிறகு அவருக்கு அறுவது வயதிருக்கலாம் என்றும் சொன்னாள்.

***

 

 

சருகு – ம. கிருஷ்ணகுமார் கவிதை

ம. கிருஷ்ணகுமார்

கொஞ்சந் தான்
எதிரெதிர் தான்
இடைவெளி தான்
ஒரு காலை உள்ளே விட்டு
இப்படியும் அப்படியும் உடலைக் குறுக்கி
வெளி வந்துவிடும் காலஅளவு தான்
காலம் சருகைப் போல் உதிரக் கூடியது
ஒரு கணம்
ஒருசில நினைவுத் துளிகள்
உள்ளிழுக்கும் கடல் அலையில்
புதைந்து விடும் பழைய தடங்கள்

சூஃபிசம் வழிந்தோடும் அனார் கவிதைகள் ♪ ~ஏ.நஸ்புள்ளாஹ் ~

ஏ. நஸ்புள்ளாஹ்

அனாரின் “எனக்கு கவிதை முகம்”கவிதைத் தொகுதியை 2007 இல் வாசித்த அனுபவம் எனக்கு உண்டு. நான் வாசித்த போது அத்தொகுப்பின் அனைத்துக்கவிதைகளும் என்னை மெய்சிலிர்க்க வைத்ததை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.கால நகர்வில் இன்று அனாரின் இன்றைய கவிதா கூடங்களுக்குள் நுழைகிறேன்.மேலும் பல பரப்புகளால் அனாரின் கவிதைகள் வான் உயரத்தை நெருங்கியிருப்பதை எவராலும் மறுக்க முடியாது

வேகமும் அதிர்வும் கவிதைகளில் நிரம்பி வழிவதை நான் காண்கிறேன். சொற்களை பிரதியாளனுக்கு கொடுக்கும் அனார் அச் சொற்களில் மந்திரப் புன்கையை பிரத்தியேகமாக சூடுகிறார். கவிதையில் வரும் இறுதி வரிகள் கவிஞரை நிரந்ரமான தளத்திலிருந்து மாற்றி வேறொரு நிலைக்கு கொண்டு போகிறது.

ஒவ்வொரு காலத்துக்குமான பிரதிகளை எல்லாப் பிரதியாளர்களாலும் தரமுடிவாதில்லை.ஆனால் தனது எழுத்தின் வேகத்தை எதிர்நிலைச் சித்திரங்களாய்த் தந்துகொண்டிருப்பவர் அனார் இவரின் அண்மைய கவிதை

அவன் நிறங்களாலானவன் என்பது
எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது

காலை ஒளி
மாவிலைத் தளிர்களில் மினுங்கும் நிறம்
கடைசிச் சொட்டு மதுத்துளியின் ருசி
அவனுடைய சொற்களுக்கு

அவன் செருக்குமிகு கவிதைகள்
மாயாலோகத்தின்
மொத்த நிறங்களையும் ஆள்கின்றன

என் திசைகள் அணிந்திருக்கின்றது
அவன் காதலால் நிறந் தீட்டிய இசையை

அவனைக் காத்திருக்கும் தருணம்
வாயூறிக் கொட்டும்
வர்ணங்களாகிவிடுகின்றன பிரார்த்தனைகள்

ஒரு மயில் தோகையின்
ஆனந்த வர்ணமெருகுடன்
காலத்தை மிகைத்து விரித்தாடுகிறான் வாழ்வை

அவன் நிறங்களின் கடல் குடித்த பறவை நான்

மீன் குஞ்சுகளின்
அபூர்வ நிறங்களால் முத்தம் வரைந்து
குறும்பாய் நரம்புகளுக்குள் நீந்தவிட்டு
எங்கு போய் மறைந்தான்

இதமும் புதிரும் பூசிடும்
இருள் பிரியா வைகறை மெல்லப் பதுங்குகிறது
தாபம் துளிர்த்திடும் அவனுடைய கருநிற விழிகளுடன்
அறையில் உயிருடன் அவிந்து
மெழுகு உருகித் தீர
அணைந்து போன சுடரின்
சாம்பல் நிறப் புகை காற்றில் கீறும்
என் இறுதிச் சொற்கள் …
நிறங்களாலானவனைக் காத்திருக்கிறேன்

ஒரு பிரதியை வாசிப்பாளன் கொண்டாடுவதற்கு பிரதியின் உட்தள முன்னிறுத்தம் பிரதியாளனின் அனுபவ மொழிவழியும் அவசியமானது அந்த வேலைப்பாடுகள் அனாரின் இந்தக் கவிதையில் நிறையவே சாத்தியமாகியுள்ளது.வாசிப்பாளனின் ஆன்மாவை தொந்தரவு செய்யும் தாய்க் கவிதையாக இதனை பார்க்கிறேன்.

எல்லாக் பிரதிகளிலும் தன்னுடைய மொழிப்பரப்பை நிலை நிறுத்தும் அனார் வாசிப்பாளனின் மனப் பரப்பில் வேரூன்றி மறுவாசிப்புக்கான வசீகரத்தையும் பிரதி முழுக்க நிரப்பி விடுகிறார்.

நமது சுயங்களையே தொந்தரவுக்குள்ளாக்கும் வகையில் ஒருவர் மீது அதீத பிரியத்தை எது உருவாக்குகின்றது…

உன்மத்தமான தனிமைக்குள்ளாக நிற்பதுதான் பௌர்ணமி. அந்த நிலவோடு புத்தனுக்குள்ள பந்தம் தான் உலகின் பரிசுத்தமான அன்புணர்ச்சியென எனக்குத் தோன்றுவதுண்டு….
குறைவதுமல்ல கூடுவதுமல்ல…
முழுமையாக இருப்பது…
தன்னிறைவானது நிலவொளி.

அனாரின் கவிதை சூட்சுமத்தை இந்தப் பிரதியில் நிறையவே நான் காண்கிறேன்.ஒரு வாசிப்பான் கிரகித்துக் கொள்ளும் மொழிவழியும் மொழிசார் அர்த்தப் பரப்பும் இந்தப் பிரதியில் ஒலிக்கின்றது.

வெளிச்சத்தை இருட்டைத்
தின்று வளர்கிறது கனவு

தண்ணீரிலும் காற்றிலும்
தன்னைப் பூசிவிடுகின்றது

காலத்தின் தொலைவுவரை தகிக்கும்
வெப்பத்தைக் குடித்த கடுங்கோடையென
உதடுகளில் தேங்கிக்கிடக்கிறது

அறியப்படாத புலத்திலிருந்து
நீலச்சிறகுகள் மின்னலென விரிந்திற்று
அவ்விரு சிறகுகளில் தூக்கிவைக்க முயல்கிறேன்
தழல் விட்டெரிகிற அதே கனவை
தப்பமுயன்ற அதன் அதிசய நிழல்
காலை வெயிலில்
உருவற்று அலைகின்றன

ஆதியில் விடுபட்டுப்போயிருந்த
என் பொற்காலக் கனவை
மெல்லக் கைகளில் அள்ளுகிறேன்

இசையின் நுண்இழைகளால் மூடுண்டகாடு
அதன் இயல்புகளுடன்
அனுமதிக்கின்றது

மழையின் கனவை
நீர்ப்பெருக்கின் கசிவு படிந்திருக்கும் கரையில்
தீராத கேவல்களாய்ப்
பரவிச் சிதறும் கனவுக் குமிழிகள்

கட்டிலின் மூலை நான்கிலும்
முயலின் பளபளக்கும் கண்களாய்
மிரட்சியுடன்
உன்னை வெறித்தபடியிருக்கும் என் கனவு

புனைவு வெளியில் நுண்கதையாடலை ஆதி கனவுப் பாதையை கவிதைச் சம்பவமாய் அனார் அணுகிய அமைப்பியல் வாழ்வியல் சார்ந்த மற்றும் மொழியல் சார்ந்த வாசகப் பிரதி இது.

ஈழத்துக் கவிதைப் புலத்தில் அனார் கவிதைகள் அனுபவ பரவசத்தை அரசியல் நுண்ணுணர்வை சூஃபிச வடிவத்தை ஆத்மாவின் சந்தம் பிசகாது தருகின்றன.

அனாரின் பிரதியில் காணப்படும் துவக்கமும் நிறைவும் அவரது பிரதியுடன் வாசிப்பாளன் பயணப்படுவதுமாய் வாசிப்பாளனின் மனசு முழுக்க அதிக உராய்வை ஏற்படுத்தக்கூடியதுமாய் தயாரிக்கப்படுகின்றது.இதன் ஒற்றை வடிவமே கவிதை வெளியில் அனார் கொண்டாடப்படுகிறார்.

சூஃபித்துவம் வழியும் இவரின் கவிதை
“இசையின் சுவரில் பொறிக்கப்பட்டிருந்த கவிதை”

வெண் சாம்பலின் நினைவிலிருந்து
இசையின் சுவரில் பொறிக்கப்பட்டிருந்த கவிதை

ஒற்றயாய் சுவரில் சாய்ந்தும்
இருவர் இருக்கமாய் சாய்க்கப்படும் நிற்கும்போது
பரிசுத்தமான ஔியில்
தாழ்ந்து…
ஆழம் சென்று மீள்கிறோம்

தன்னை சிலாகித்தபடியே
மற்றுமொரு சமமான செருக்குமிகும்
பதிலீட்டை
எச்சிலால் கோர்க்கின்றான்
கர்வமிடும் பெண் உதடுகளுக்கு

மூடியிருந்த முத்தத்தை
பிரித்தெடுத்த ஔித்திரவத்தை
சுவரில் தெளிக்கிறாள்

சூஃபியின் தனித்த புல்லாங்குழலிலிருந்து
வழியும்
தனிமையின் பித்து
புனிதத் தவப் பெருக்கின் உயிரை
அப்படியே சாரமாய் சுவருக்கு ஊதுகிறது

அவளோடு சேர்த்து இசையையும்
உறிஞ்சுகிற சுவரில்
செவிவைத்துக் கேட்டால்
சூ.ஃபி
சுவரிலிருந்தே
இசைத்துக் கொண்டிருப்பார்.

சூஃபி கவிதைகளில் ஜென் கவிதைகளின் உரையாடல்கள் பிரதிபலித்தல்கள் ஆங்காங்கே பயணப்பட்டாலும் சூஃபிக்கவிதைள் வேறு புள்ளியிலிருந்து செல்லும் தவத்தை மற்றும் பரவத்தை ஒரு வாசிப்பாளன் கண்டு கொள்ள முடியும்

அனாரின் இந்தக் கவிதையும் சூஃபிக் கவிதைகள் மொழியும் நான் அற்ற நிலையைச் சுட்டிக் காட்டுகின்றது.என்,எனது,என்ற இருந்தலையும் ஒவ்வொரு வரிகளிலும் பிரபஞ்ச ரீதியாக ஒன்றினைக்கின்றது.சூஃபிகளுக்கே உரியதான இசைக் களிப்பையும் சந்தோஷத்தையும் நடனத்தையும் கொண்டு காதாலின் மர்மத்தைப் பேசுகின்றது.

இசையின் மென்னுடல் தரும் ஒலியில் பிரபஞ்சத்தை ஆரத்தழுவி மிகவும் புதுமையான புள்ளியிலிருந்து புனைவுகளால் கவிதையை உயிர்ப்பிக்கும் கலைநுட்பம் அனாருக்கு மட்டுமே விசித்துரமானது.இவரது மற்றுமொரு கவிதை “மென் சொற்கள்”

மெருகேறிய இரண்டு மென்சொற்கள்
மாபெரும் கடலையும்
ராட்சத மலையையும்
அருகருகே நகர்த்துகின்றன

பொன்னொளிர் நீலக்கடல் வாசனை
விண் மீன்கள் மினுங்கும்
மலையுச்சியின் காரிருள்
அவனும் அவளுமானர்

தன் பிரமாண்டத்தில்
புதையுண்ட இரு உடல்களை
பிரமித்தபடியே
வானவில்லென
அவர்கள் மேல் பட்டுக்கிடந்தன
இரு சொற்கள்

அவளது தோழில்
அலைகள் ஆர்ப்பரித்தன
அருள்பாலிக்கும் தன்னிகரில்லாத ஆலிங்கனத்தில்
மலை அதைக் கேட்டிருந்தது

அதி ரகசியமான அவ்விரு சொற்களும்
ஜின்னின் இரு தோகையென
வானளாவ விரிந்து கொண்டன.

மாட்சிமைக்குரியவன் கடவுள் அவனது இயக்குதலின் படியே பிரபஞ்சத்தின் கோணங்கள் இயங்குவதை நான் அறிவேன்.கடவுளின் படைப்புகளில் மனிதன் மற்றும் ஜின்கள் முக்கிய வகிபாகத்தையுடைய படைப்புகள் மனிதன் கண்களுக்கு உருவ அடிப்படையில் புலப்படுவதும் ஜின்கள் உருவ அடிப்படையில் கண்களுக்கு புலப்படாத வகையுமாகும் இந்த ஜின்னின் இரு தோகையென வானளாவ விரிந்து கொண்டன அதி ரகசியமான அவ்விரு சொற்களும் என அனார் கவிதையை நிறைவு செய்திருப்பது பிரதியின் ஆன்மிகம் நோக்கிய விரிவையும் காதலின் தீவிர அழகியலையும் உருவாக்கியிருக்கிறது.

கவிதையென்பது எல்லோருக்கும் எப்படியோ அதன் கோணங்கி தனமாகவே அனாரும் பார்க்கின்றார். அதுவே அவரின் மகிழ்ச்சியை அவரின் துயரை பேசுகின்ற வெவ்வேறு அனுபவமாகின்றன .அனாருக்குள் ஒரு காதலிஷ நதி முன் நோக்கிப் பாய்ந்ததன் ஒரு குறியீட்டுப் பிரதியாக மற்றும் ஒரு ரசனையின் ஔிப்பதிவாக புதிய பரிசோதனை முயற்சியக இக்கவிதையை அடையாளமிட முடியும்.

இவரின் “தலைப்பிறைக்கு சலாம்”என்ற கவிதை

இன்மையின் திசையிலிருந்து
நீ ரோஜா என உச்சரித்த கணம்
என் நேர் எதிராக
முதல் மாதப்பிறையை நோக்கினேன்

வெள்ளிக் கிழமைகளை
வளைத்து நெகிழ்த்து
கொண்டாட்டத்திற்கு ஈர்க்கிறது

அத்தியின் மீதும்
செய்த்தூனின் மீதும் சத்தியம் செய்தவனின்
பிரமாணடத்தை
அந்நறு மணத்தின் களிப்பும்
குளிர்ந்திருக்கலாம்

ஹசன் ஹுசையினின் குழந்தைமையாய்
பேரீச்சைத் தோப்புகளில்
தவழ்கின்றன பல்லாயிரம் வளர்பிறைகள்

முடிவுகளுக்கும் ஆரம்பங்களுக்குமான
அழைப்புவிடுகிறது வாளின் குருதியில்
தோய்ந்துள்ளது அத்தர்மணம்

சாட்டைத் தழும்புகளில் உருவான
ரோஜாவின் அடர் சிவப்பு
தவறுகளுக்காக
பிராய்ச்சித்தங்களை கோருகின்றன

எண்ணற்ற சிலிர்ப்புகளை துய்க்கும்
ரோஜா மலர்
பேராசிகளின் பொருட்டு முளைக்கும்
தலைப்பிறைக்கு சலாம் உரைப்பதில்
என்னை முந்திக் கொள்கிறது.

ஜிப்ரான்,உமர் கயாம்,ரூமி போன்றவர்களுடைய சூஃபிச கவிதைகளிலிருந்து அனாரின் இந்த கவிதை தள்ளிப் போவதாகவும் ஜிப்ரான்,கயாம் இருவரின் கவிதைகள் ஒரே பாதையில் பயணிப்தையும் ரூமியின் கவிதைகள் இவர்கள் இருவரின் கவிதைகளிலிருந்து தள்ளிப் போதையும் ஒரு வாசிப்பாளன் கண்டு கொள்ள முடியும்.

சூஃபிச கவிதைகள் நான்அறிந்தவரை ஒரு நிகழ்ந்த சம்பவமாக இருக்கும் அல்லது கவிதை ஒரு நிகழும் சம்பவமாக இருக்க வேண்டும்.அப்படியான முன்வைப்பை அனாரின் இந்த கவிதையும் கொஞ்சமும் சம்பவம் பிசகாத வடிவமாக தயாரிக்கப்பட்டுள்ளது .

சூஃபிச கவிதை முனைப்பு புதிய தலைமுறை பிரதியாளர்களால் தயாரிக்கப்படுவது மிகக் குறைவு என அடையாளப்படுத்த முடியும்.எனினும் மனித முயற்சியினால் பலதையும் உற்பத்தி செய்ய முடியும் தயாரிக்க முடியும் என்பதற்கு அனாரின் இவ்வகையான கவிதைகள் பெரும் சான்று.வைரத்தின் தேவை குறைவாக இருப்பினும் அதன் மதிப்பு குறைந்துவிடுவதில்லை.ஒரு தலைமுறை கொண்டாடும் சூஃபிச கவிதைகளில் அனாரின் கவிதைகள் முதன்மை பெரும் என்பது திண்ணம்.

 

முகம் – செல்வசங்கரன் கவிதை

செல்வசங்கரன்

ஒரு மொபைல் தொலைந்ததை பற்றிய விசாரணை போய் கொண்டிருந்தது
எல்லார் மீதிருந்த சந்தேகமும் விலகி
விசாரணை வளையத்திற்குள் நானும் அவனும் மட்டும் இருந்தோம்
இந்த வளையத்திற்குள்ளாக அவனையும் இழுத்து வந்ததற்காக
அதிகாரிகளே உங்கள் நெஞ்சை ஒருமுறை விடைத்துக் கொள்ளலாம்
ஒரு முறையென்ன ஒருமுறை
உங்கள் நெஞ்சு உங்கள் முறுக்கு விடைத்துக் கொண்டே இருந்தாலும்
யார் கேட்பது
எடுத்தவன் அவனென தெரியுமென்பதால் கூறினேன்
எனக்கென்ன இன்னும் ஒரேயொரு வேலை மட்டும்
வடிகட்டித் தூக்கும் போது வழிந்தோடுவது மட்டுமே பாக்கி
அதிகாரி விசாரணையை முடுக்கி விட்டிருந்தார்
எடுத்தவன் அவனென கூறி விட்டால் வேலை சுளுகு ஒப்புக்கொள்கிறேன்
அந்த மயிர் புடுங்குறது எனக்கெதற்கு என்று தான்
நான் எடுக்கவில்லை
நான் எடுக்கவில்லையென்ற முகமிருக்கிறது அது போதும்
அப்படி வைத்துக் கொண்டேன்
இல்லையென்றாலும் அப்படித் தானே இருக்குமது
எடுத்தவனைப் பார்த்தேன் அவன் முகத்தில் ஒரு அசால்ட்டு தெரிந்தது
அசால்ட்டையே ஒரு தோரணை போல காட்டினான்
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது
ஏன் இப்படி அசால்ட்டு காட்டுகிறான்
இவனெல்லாம் எடுத்திருக்கவே மாட்டான் என்பது போலயிருந்தது
அந்த அசால்ட்டு
இப்பொழுது என் முகம் மீது எனக்குச் சின்னதாக ஒரு டவுட்
உண்மையிலேயே எனது முகம் எடுக்காத மாதிரி தான் தெரிகிறதா
அவனது அசால்ட்டை தூக்கிச் சாப்பிடுவது மாதிரியா உள்ளதது
யார் கண்டது எனக்கது இன்னும் வரவில்லையோ
இது சரியா இல்லை இப்படிக் காட்டினால் சரிப்பட்டு வருமாயென
கையை வைத்து உருளையான ஒன்றை
உருட்டியுருட்டிச் சரிசெய்வது போல
என் முகத்தை வைத்தே என் முகத்தை இப்படி அப்படித் திருகி
கோட்டித்தனங்கள் காட்டிக் கொண்டிருந்தேன்
இப்பொழுது அதிகாரிக்கு என் மீது லைட்டாக ஒரு டவுட்
அதிகாரி மற்றும் அவனோடு சேர்ந்து கொண்டு
நானுமே என்னைக் கை காட்ட பேருதவி புரிந்துவிட்டதால்
சந்தேகம் உறுதியாகி என்னை அரெஸ்ட் செய்வதாகக் கூறினார்கள்
அதிகாரி அவர்களே
நான் எடுக்கவில்லையென்றாலும் அப்படி வாதிடுவதே கூட
என்னைப் பொறுத்த வரையில் கெட்ட கேவலம்
இது மைண்ட் வாய்ஸ் இது கேட்காது
அதற்கு முன்னால் எனக்கு ஒன்று தெரிந்தாக வேண்டும்
உங்களைப் பொறுத்தவரை இதை விட அசிங்கமான கேள்வியொன்றை
உங்களிடம் கேட்க முடியாது ஆனாலும் சொல்லுங்கள்
உண்மையிலேயே குற்றம் செய்த மாதிரி என் முகம் தெரிகிறதா
ஆமென மண்டையை ஆட்டிவிட்டால்
நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன்
இதையாவது முகம் காட்டியதேயென
எனக்கும் கால காலத்திற்கும் நக்கிக் கொள்ள ஒன்று வேண்டாமா