எழுத்து

தாகூரின் ‘பிறை நிலா’- என்னும் பிள்ளைக்கவி – 2: வண்ணமயமான எண்ணச்சிதறல்கள் – மீனாக்ஷி பாலகணேஷ்

மீனாட்சி பாலகணேஷ்

குழந்தை பின்னும் இரட்டைவலை!

(ரவீந்திரநாத் தாகூர் கவிதைகள்– பிறைநிலா (Crescent Moon) எனும் கவிதைத் தொகுப்பிலிருந்து)

ஒரு சின்னஞ்சிறு பிஞ்சுப்பாப்பாவின் செயல்களுக்கு அழகான பொருளைக் கற்பிதம் செய்துகொள்ள உள்ளம் முழுவதும் கவிதையாலும் அதன் இனிமையாலும் நிரம்பி வழியும் தாகூரைப் போன்ற ஒரு கவிஞரால் மட்டுமே இயலும்.

பிறைநிலா எனும் தொகுப்பிலிருந்து மற்றொரு ‘அற்புதமா’ன கவிதை. அருமை என்று கூறாமல் அற்புதம் எனும் சொல்லைத் தேர்ந்தது எதனால் தெரியுமா? அருமை எனும் சொல் கவிதைச் சொல்லாக்கத்தின் உயர்வை மட்டும் பதிவு செய்கிறது. அற்புதம் என்பது படைப்பின் கற்பனை நயம்கண்டு வியப்பின் உச்சத்தைத் தொட்டு நிற்கிறது. வேறு எந்தக் கவிஞனாலும் தொட இயலாத தாகூரின் படைப்பின் உச்சம் இதுவாகும்.

‘குழந்தை மட்டும் தான் விரும்பினால் இந்த நிமிஷமே சுவர்க்கத்திற்குப் பறந்தோடிவிட முடியும்!
சும்மா ஒன்றும் அவன் நம்மை விட்டுப்பிரியாமல் இருக்கவில்லை!
தனது தலையை தாயின் மார்பில் புதைத்துக் கொள்வதில் அவனுக்கு
மிகவும் விருப்பம் உண்டு!
அவளைத் தனது பார்வையிலிருந்தும் தவற விடுவதை அவன்
பொறுக்கவேமாட்டான்!’

எனத் துவங்கும் கவிதை!

கடவுளைக் குழந்தையாக்கி அழகு பார்த்தது பிள்ளைத்தமிழ்!

குழந்தையைக் கடவுளாக்கிப் பொருள்கொண்டது தாகூரின் கவிதை!

ஒன்றும் அறியாதது போன்றிருக்கும் இந்தச் சின்னஞ்சிறு பிஞ்சின் செயல்முறைகள் அனைத்தும் ஒரு காரணத்தின் பொருட்டே நிகழ்கின்றன; அவனால் நிகழ்த்தப்படுகின்றன என்பதே வியப்பாக இல்லை?

தாயின் அன்பை அனுபவித்து நெகிழ்வதற்கான அவனுடைய சிறு தந்திரங்களே இவை என்கிறார் தாகூர். தாய்க்கு அவன் குழந்தைதான். கடவுளாக அவனை எண்ணுவது அவளுடைய அன்பு உள்ளமே தவிர அதன் உண்மையையோ அதன் நிதரிசனத்தையோ அவள் உணர்ந்தவளல்ல; உணர்ந்தாலும் அவளுக்கு அது ஒரு பொருட்டல்ல. கிருஷ்ணனின் அன்னை யசோதையைப்போல!

தாயின் மார்பில் தன்னைப் புதைத்துக் கொண்டு அவளுடைய அனைத்தும் உருகும் அணைப்பில் தன்னை இழந்து அவளையும் உருகவைக்கும் ஒப்பற்றதொரு அனுபவத்திற்காகவே குழந்தை இந்த உலகில் அவள் மகனாக வந்திருக்கிறான் என்பது எத்தனை உயரிய உண்மை! தாயான அவள் தனக்கு எவ்வளவு இன்றியமையாத ஒரு உறவு என உணர்த்தவே அவளைத் தன் பார்வையிலிருந்து தவற விடுவதை அவன் பொறுத்துக் கொள்வதில்லையாம்!

கருத்துக்களின் எல்லைகளில் சிறகடிக்கும் எண்ணங்கள் இவையன்றோ?

புத்திசாலித்தனமான சொற்கள் அனைத்தும் குழந்தைக்குத் தெரியும்;
ஆனால் இந்த உலகத்தில் ஒரு சிலருக்கே அவற்றின் பொருள் புரியும்!
வெறுமனே ஒன்றும் அவன் பேசாமல் இருக்க விரும்பவில்லை!
அவன் தனது தாயின் வாய்மொழியாகவே சொற்களைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான்.
அதனால்தான் ஒன்றுமே தெரியாத வெகுளிபோலக் காணப்படுகிறான்.’

பல தாய்மார்கள் குழந்தையின் சிணுங்கல் தொனியைக் கொண்டே அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள்- பசி அழுகையா? உறங்குவதற்கான சிணுங்கலா? குழந்தைக்குத் தன் தேவையைத் தாய்க்கு அறிவிக்க இந்தவிதமான சில ஒலிகளே போதுமானவையாகும். உலகில் அன்பான தாயாக இருப்பவர்களுக்கே இதன் பொருளும் புரியுமாம்! வார்த்தைகளைக் கொட்டிப் பேசுவதனால் என்ன பயன்? யார் எதனை அறிந்துகொள்ள வேண்டுமோ அவர்களுக்குப் புரிந்துவிட்டால் போதுமே! மேலும் சொற்கள் தேவைப்பட்டால் அன்னையே அதனைக் குழந்தைக்குப் பயிற்றுவிப்பாள். அதனால்தான் குழந்தை ஒன்றுமறியாத அப்பாவிபோல அவளுடைய அன்பையும் மற்றவைகளையும் அடைவதற்காகக் காத்திருக்கிறானாம்!

‘குழந்தையினிடம் தங்கம் முத்துக்கள் எனச் செல்வங்கள் குவியல் குவியலாக இருக்கின்றன;
இருந்தாலும் ஒன்றுமே இல்லாத பஞ்சைப்பராரி போல அவன் இந்த உலகத்திற்கு வந்திருக்கிறான்.

வேலையில்லாமல் ஒன்றும் அவன் இவ்விதத்தில் இங்கு வந்திருக்கவில்லை!
இந்த நிர்வாணமான அருமைச்சிறுகுட்டனான பராரி தனக்கு யாருமே ஒன்றுமே இல்லாததுபோல் வேடமணிந்து கொண்டிருப்பது தன் தாயின் அன்பெனும் இணையற்ற செல்வத்தை அனுபவிப்பதற்காகத்தான்!’

குழந்தை எனும் உயர்ந்த பிறவி உலகிற்கு வந்திருப்பதேஒரு அரிய பெரிய காரியத்திற்காகத்தான் என்கிறார் தாகூர். அவனிடம் இல்லாத செல்வங்களே இல்லை; இருந்தாலும் ஒன்றுமில்லாத பஞ்சைப்பராரி போல தாயிடமிருந்தே அனைத்தையும் பெற ஆசைப்படுகிறான் அவன்.

ஒரு குழந்தையைப் போற்றிக் கொண்டாடுவதனைப்போல் உன்னதமான பேரின்பம் வேறில்லை என்பதனால் அதனைத் தன் தாய் எனும் அன்பான பெண்மணி முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று ஆசைகொண்டு தனது பங்கையும் சேர்த்து அவளைப் பேரின்ப வெள்ளத்தில் ஆழ்த்துகிறான் குழந்தை.

‘பிறைநிலாவின் நாட்டில் ஒரு கட்டுத்தளையுமில்லாமல் சுதந்திரமாக இருந்தான் இக்குழந்தை!
காரணமொன்றுமில்லாமல் அவன் தனது சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கவில்லை!
தனது தாயின் உள்ளத்தின் சிறுமூலையில் எல்லையற்ற ஆனந்தத்திற்கு இடமிருப்பதனையும்,
அவளுடைய கைகளால் பிடித்து இறுக அணைத்துக்கொள்ளப்படுவது சுதந்திரத்தைவிட இனிமையானது என்பதனையும் அவன் அறிந்து வைத்திருக்கிறான்.’

நிலாக்கீற்றின் விளிம்பில் அமர்ந்துகொண்டு குட்டிக் கால்களை ஆட்டி மகிழ்பவன், தன் சுதந்திரத்தைத் தனக்காக உருகும் தாயன்பிற்காகவே விட்டுக் கொடுத்து விட்டான் போலும்! அவளுடைய இதயத்தில் தனக்கான ஒரு தனி இடம் இருப்பதனை எப்படியோ இக்கள்ளக்குட்டன் அறிந்து கொண்டு விட்டான். அதனை எல்லையற்ற ஆனந்தத்தினால் நிரப்புவதனைத்தன் கடமையாகக் கருதி விட்டான் இவன்! ‘அவளுடைய அன்பெனும் அமுதம் பெருகியோடும் கரங்களால் சிறைப்படுத்தப் படுவதனை மிகவும் இனிமையானதென அறிந்து கொண்டு விட்டான்; ஆகவே அதனை விரும்பி அந்த அன்புச்சிறையில் அகப்படவே வந்துள்ளான்,’ என்று அழகாகக் கூறுகிறார் தாகூர்.

‘குழந்தைக்கு அழவே தெரிந்திருக்கவில்லை. அவன் பூரணமான பேரானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவன்.
ஒரு காரியமுமில்லாமல் அவன் கண்ணீர் விட்டு அழ முயலவில்லை!
முகத்தில் காட்டும் குறுநகையால் அவன் தாயின் ஆவல்பொங்கும் உள்ளத்தைத் தன்பால் கவர்ந்திழுத்தாலும், சின்னச்சின்ன காரணங்களுக்காகச் சிறிது அழுவதனால் அன்பு- பரிவு எனும் இரட்டைவலையையும் அவளைச்சுற்றிப் பின்னுகிறான்!’

அழவே தெரியாதவன், அன்னையின் அன்புள்ளத்தைத் தன்பால் கவர்ந்திழுக்க, காரணமேயில்லாமல் சிணுங்கி அழுதும், பின்பு குட்டிப் புன்முறுவலால் அவள் உள்ளத்தைக் கொள்ளைகொண்டும் விளையாடுகிறான். இந்த விளையாட்டை ரசிக்கிறான். அவளிடமிருந்து பெருகும் அன்பு- பரிவு எனும் இரண்டிலும் தானும் பங்குகொண்டு அவற்றாலான இரட்டைவலையை அவளைச் சுற்றிப் பின்னுகிறான் இந்தக் கள்ளக்குட்டன்.

ஒன்றுமறியாத ஒரு பச்சிளங்குழந்தையை, எல்லாம் அறிந்த பரம்பொருளாக்க தாகூரால்தால் முடியும்! ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே,’ எனக்கூறியது வெறும் பேச்சுக்காக மட்டுமில்லை என இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாமா? அந்தக் குழந்தையை தெய்வமாகக் கொண்டாட தாயைவிடப் பொருத்தமானவர் வேறு யாருமேயில்லை! பிள்ளைத்தமிழ் பாடிய கவிஞர்கள் கடவுளைக் குழந்தையாக்கி மகிழ்ந்தார்கள். தாகூர் நவீன பாணியில், குழந்தையைக் கடவுளாக்கி மகிழ்கிறார்! (மானிடர்கள்மேல் பாடப்பட்ட பிற்காலப் பிள்ளைத்தமிழ் நூல்கள் இவ்வுத்தியைக் கடைப்பிடித்தனவா எனத் தெரியவில்லை!) தெய்வம், கடவுள் எனும் சொற்களைக் கையாளாவிடினும், குழந்தைக்கு எதுவும் தேவையில்லை எனும் நிலையைக் கூறி- அது உண்மைதானே?- அவனை தெய்வத்தின் நிலைக்கு உயர்த்திவிடுகிறார். வேண்டுதல், வேண்டாமை இலான் யார்? கடவுள் தானே?

தாகூரை, பிள்ளைத்தமிழ் புலவர்களுடன் ஒப்பிடுவதில் மகிழ்ச்சி பொங்குகிறது!

தாயின் அணைப்பில் பரவசமடைவதற்காக குழந்தை சுவர்க்கத்திலிருந்து வந்திருக்கிறான்.

எல்லாம் தெரிந்திருந்தும் தெரியாதவனைப்போலத் தாயினிடமிருந்து கற்றுக்கொள்வதில் விருப்பமுள்ளவனாக இருக்கிறான்.

எல்லாச் செல்வங்களையும் துச்சமாக மதித்து தாயன்பு எனும் செல்வத்தை மட்டும் அள்ளியள்ளி அனுபவிக்க ஆசைப்படுகிறான்.

தாயின் அணைப்பில் சிறைப்பட்டு ஆனந்திப்பதற்காகவே தன் பூரண சுதந்திரத்தை விட்டுக்கொடுத்துள்ளான்.
(உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன்?) சிரிப்பு, அழுகை இவற்றினால் அன்பு பரிவு எனும் இரட்டைவலையைத் தாயுள்ளத்தில் பின்னுகிறான்!

‘மினுக், மினுக்’கென எத்தனை வண்ணங்களின் சிதறல்கள் மத்தாப்பு போல இக்கவிதையின் சொற்களில் தெறித்து ஒளிர்கின்றன? கனவுகளும் கற்பனைகளும் உணர்வுகளும் உன்னத எண்ணங்களும் பொங்கியெழும் உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்த அற்புதமான கவிதைகள். பொழுது போவதே தெரிவதில்லை!

சமயம் வாய்த்தால் இன்னும் காணலாம்.

தாகூரின் ‘பிறை நிலா’ 1

முகமூடிகளின் நகரம் – காஸ்மிக் தூசி கவிதை

காஸ்மிக் தூசி

எங்கிருந்தோ ஒருநாள்
ஊருக்குள் வந்துவிட்டான்

பாண்டாக்கரடியின்
முகமூடியுடன்,
ஒரு புதியவீரன்.

அவன்
ஒரு சாகசக்காரன்
மும்முறை
செத்துப்பிழைத்தவன்

என எவரோ சொல்ல

ஊதாநிற புகையைப்போல
ஊருக்குள் கசிந்த
முகமூடியின் மர்மம்

கால்வாயின்
பாலத்தைக் கடந்து

வடக்குத்தெரு முதல்
ஊர்க்கோடியின்
கடைசித்தெரு வரை
நிறைந்து விட்டது.

முடிவில்
வடக்குத்தெருவின்
எண்ணிக்கையில்

பாதிப்பேர்
பாண்டாக்கரடி
முகமூடிகள்

புலி வேடமணிந்த
வீரர்களின்
விளையாட்டுப் போட்டியில்

பார்வையாளர்களுள்
பாதிப்பேர்
பாண்டாக்கரடி
முகமூடிகள்.

ஊர்க்கோடியில்
புதிதாய்
தோன்றி விட்ட
முகமூடிக் குடியிருப்பில்

முழுக்கவும்
முகமூடிகள்.

முகமூடி அணிவது
ஊரின்
புது மோஸ்தராய்
மாறிவிட

முகமூடியின் மிடுக்கில்
முகமூடிகள்
நடக்கும் தெருவில்

முகமூடிகள்
ஒருவருக்கு ஒருவர்
முகமன்
சொல்வதில்லை.

தவறிப்போய்
முகமூடித்தெருவில்
நுழைந்து

யாருடைய
கவனமும் இன்றி
சாலையைக் கடந்துவிட்ட
சலிப்பில்

ஒர் இளம் வீரன்
ஆயாசமாய்
முகமூடி கழற்றும்
சிற்றுண்டிச்சாலையின்
மேசையில்

முதல்முறையாய்
முகமூடி அணிகிறான்
இன்னொருவன்.

ஆடையை மாற்றியபின்
முகமூடியை தாண்டியும்
படிந்துவிட்ட
நிரந்தர மிடுக்கை
அகற்றத் தெரியாமல்

கண்ணாடியின் முன்
திகைத்து நிற்கிறான்
வேறொருவன்.

முகமூடிகள்
தெருவெங்கும் மிதிபடும்
முகமூடிக்கடை வாசலில்

முகமூடியின்
வரைகலையை
குறைகூறி

பேரம்பேசி
வாங்கிச்செல்கின்றனர்
சிலர்

மற்றொரு
புதிய சிக்கல்

துப்புரவு செய்த
பழைய முகமூடிகளை
புதைப்பதா?
எரிப்பதா?

நினைவுநாள் – வே. நி. சூரியா கவிதை

வே. நி. சூரியா

1

செடிகள் யாவும்
கூச்சலிட்டிருந்தபோது
நீ வந்தாய்
பிரமையோ நிஜமோயென
அனுமானிக்க முடியாதபடிக்கு
உன்னை என்ன செய்வதென்றே
தெரியவில்லை
இந்த இரவு காமத்தையும்
வரையப்பட்ட காமம்
மீண்டும் இரவையும் வரைகிறது
எதிலும் வண்ணமில்லை
வெளியை நிறைக்கிறது இருட்டு
மரணம் பிரிவா என்ன
கரையானால் அரிக்கப்பட்ட சின்னஞ்சிறிய சாக்கு
இந்நெடிய இன்மைக்கு பிறகு
உன்னிடம்
எது கூடியிருக்கிறதோ இல்லையோ
புதிர்த்தன்மை கூடியிருக்கிறது
பெய்கிற மழை எண்ணங்களை நனைக்கிறது
அதை எங்கு உலர்த்துவது
மண்டைக்குள் புழுங்கிய நாற்றமடிக்கிறது
இப்பொழுது தோன்றுகிறது
என் வெற்றுப் பீடிகைகள்
சகட்டுமேனிக்கு
உன்னை ஏமாற்றியிருக்கக்கூடும்

2

தனிமையின் நிவாரணியே
என் குற்றவுணர்ச்சியின் கிணறே
உதிரும் சிற்றிலையும்
உன்னை
ஞாபகப்படுத்திவிடுகிறது
உடலுக்குள்ளிருக்கும் பூரான்கள்
துடிகொண்டு
அலைகின்றன அங்கும் இங்கும்
மூளைக்கும் இதயத்திற்குமான
பாலத்தில் கனரகவாகனங்கள்
கடந்தகாலத்தை ஏற்றிக்கொண்டு
தாறுமாறாக திரிகின்றன
நடுக்கம் ஏன் துருப்பிடித்த ஏக்கத்துடன்
பேசிக்கொண்டிருக்கிறது இப்போது
சன்னதிகளில் காமம் ஏன்
இப்படி கரைபுரண்டோடுகிறது
இந்த வாழ்க்கையே உனக்கான காணிக்கைதான்
இருப்பு இன்மை என்பதெல்லாம் கட்டுக்கதையென
சொல்லத்தான் வந்தாயோ
வில்லென இவ்வுடலைப்பிடி
நினைவின் நாணிலேற்றிவிடு வாழ்வை
அதோ அந்த நட்சத்திரத்திற்கு குறிவை
தவறினாலும் பிசகில்லை தேவி
ஞாபகம் என்ன ஒற்றையிலை மரத்தின் நிழலோ
இல்லை இலையற்ற மரத்தின் துயரமோ

3

இருந்தாலும்
காலம் இப்படி
அரிக்கப்பட்டிருக்கக்கூடாது
சீரழிவு அச்சுறுத்துகிறது
வழித்துணையாக வந்திருக்கலாம் நீ
இப்படி சுக்குநூறாய்
உடைந்திருக்க நேர்ந்திருக்காது
சீழ்நதியும் வற்றியிருக்கும்
எந்த அறிவும் எனக்கு உதவவில்லை
இந்த அறிவை தீவைத்து எரிக்கமுடியுமா
அதற்கொரு வழியுண்டா
மனதை தோண்டத் தோண்ட
காதலின் எலும்புக்கூடுகளை
கண்டெடுக்கும் துயரத்தை
என்னவென்று சொல்வேன்
பிரமைகளை கத்தரித்து
எடுக்கப்பார்க்கின்றது காலம்
உன்னை குறித்த பிரமைகளை
பத்திரப்படுத்திக் கொள்கிறேன்
ஏழு மலை ஏழுகடல் தாண்டியிருக்கும்
என் இன்னொரு உடலின் நிலவறைக்குள்
வெளியே காவலுக்கு பணித்திருக்கிறேன் பூரான்களை
இனி விசனப்பட வேண்டாம்

4

இச்சையின் நெளியும்
சாலைகளினூடாக
எங்கெங்கோ செல்லும் நம் ஊழ்வினையை
எப்படி விபத்துக்குள்ளாக அனுமதித்தோம்
உன் வெறிபிடித்த வெற்றிடத்தை
எதையெதையோ
இட்டு நிரப்ப முயற்சித்தேன் இதுகாறும்
அத்தனையும் தங்கள் தோல்வியை
விடியும் முன்னதாகவே
சொல்லிச்சென்றுவிட்டன
உன்னை இவ்வளவு தனியாக
விட்டுச் சென்றிருக்கக்கூடாது
வெளவால்களும் இருட்டும்
மோதிப்பறக்கும் குகைவிழிகளையோ
நன்மையும் தீமையும்
சறுக்கிவிளையாடும் பின்னங்கழுத்தையோ
விட்டுவிட்டு வந்திருக்கக்கூடாது
குறைந்தப்பட்சம் கடலோரங்களில்
கொடும்புயலாய் கனக்கும்
உன் குரலையாவது வாங்கிவந்திருக்கவேண்டும்
பிரம்மாண்ட எலும்புத்துண்டொன்று
வானில் மிதக்கிறது இப்பொழுது
சன்னலை சாத்திவிடவா
இந்த இரவின் சிற்பம் தள்ளாட
எதிரொலிக்கிறது உன் வளையோசை
உன் மாயையை எதிர்கொள்ள இயலுமோ
இன்னது இன்னதென விதிக்கும்
உன் உள்மனதை அறியமுடியுமோ
இந்நாளில் இப்படி
வந்துநிற்கும் உன்னை
என்ன செய்வதென்றே தெரியவில்லை

ஹூஸ்டன் சிவா கவிதைகள்

ஹூஸ்டன் சிவா

புகைப்படம்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
கடக்கும் கணம்
துள்ளும் சிறுமி
எத்துப் பற்கள்
மின்னும் கண்கள்
பறக்கும் கூந்தல்
மிதக்கும் மழைத்துளிகள்
காலம் இமைக்கவில்லை
இன்னும்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்

oOo

தனியில்லை

இன்று அதிகாலை துயில் விழிப்பில்
விழிகளில் நீர் கோர்த்து வழியவில்லை
சுயபச்சாதாபத்தில்
எப்போதும் போல்
தனிமையில் வராது போனது ஏனென்று
யோசித்து பின் உறங்கி மதியம் எழுந்து
கண்ணாடியில் முகம் பார்க்கையில்
விழிகளில் நீர் கோர்த்து வழிந்தது
சுயபச்சாதாபத்தில்
எப்போதும் போல்
தனிமையில் வராது இனி

oOo

தகப்பன் பிள்ளை

நீண்ட நெடிய தகப்பன்களைக்
கண்டு வியக்கும் பிள்ளைகள்
அத்தகப்பன்களின் தோள்களிலேறி
நின்று பயக்கூச்சலிடுகிறார்கள்
கீழே தம் அம்மாக்களைக் கண்டு
கூவிக் கொக்கரிக்கிறார்கள்
பின் அம்மாக்களின் மார்ப்பகங்களில்
முகம் புதைத்து உறங்குகிறார்கள்
கனவுகளில் அத்தகப்பன்களை
வெல்கிறார்கள் சண்டைகளில்
கொல்கிறார்கள் சிலசமயம்
விழித்தவுடன் விதிர்த்து அழுது
ஓடுகிறார்கள் அத்தகப்பன்களிடமே

மந்திரம் கவிதைகள்

மந்திரம்

21ஆம் நூற்றாண்டின் சந்தர்ப்பவாதி

நான் ஒரு நாடோடி
என்னிடம் ஒரு மடிக்கணினி உண்டு.
இரண்டு தொடுதிரை கைபேசிகள்
ஒன்று அலுவலுக்கு.
மற்றது அந்தரங்கத்திற்கு.

8மணி நேரம் தண்டுவடம் மடித்து
பணம் பண்ணுகிறேன்
மீதி நேரங்களில் பயணம், உறக்கம், கலவி
ஆம் திருமணமாணவன் -கரணம்
நான் ஒரு 90களின் சிறுவன்.

ஒரு கையால் பம்பரம் விட்டுக்கொண்டே
இன்னொரு கையால் தற்படம் எடுத்து
நிலை தெரிவிக்கும் விநோதன்.

வாய்ப்புகளை நோக்கி ஓடும் பகடையாளன்
எப்போதும் விருத்தங்கள் வேண்டி
வாழ்வை உருட்டி கொண்டிருப்பவன்.

எங்கும் வேர் விடாமல் பார்த்துக்கொள்ளும்
ஒரு மணிபிளாண்ட் மனிதன்.

எனது இளமை நினைவுக்குள் ஒரு ஊர் சுமப்பவன்
என் மகனின் நினைவுகளோ
ஒரு அடுக்ககத்தின் பல நகரங்களை ஏற்றிருக்கும்.

சந்தர்ப்பவாதத்தின் தத்துவம் கொண்ட என் வாழ்வில்
என் அப்பா ஒரு வாகை மரத்தின் செம்பூக்களோடும்,
நான் ஒரு வேப்ப மரத்தின் மஞ்சள் பூக்களோடும்,
என் பிள்ளையோ வண்ணம் குழைந்த குரோட்டன்ஸ் இலையோடும்
பால்யத்தை பகிர்ந்து கொண்டிருப்போம்.

oOo

கீழ்மையின் ஒளி

அகாலமாய் நீள்கிறது நாட்கள்.
நான்கு சுவர் ஒரு கூரை
கைபேசி திரைஒளியில் ஒளிர்கிறது இருளறை.
பெருவிரலின் அசைவுகளில்
தொடுதிரையில்
நுற்றுக்கணக்கானவர்களின் காலம்
உயிர் பெறுகிறது.
காலக்கோடு ஒரு தற்பெருமை அட்டவணை.

முகப்புத்தகத்தின்
இடுகைகளில்
மின்னும் விருப்பக்குறிகளில்
பொறாமையின்
இயலாமையின்
நுண்ணிய ரேகை பதிந்திருக்கிறது

கீச்சுகளின் கருத்துலகில்
உரையாடும் மறுமொழிகளில்
வக்கிரத்தின்
விரசத்தின்
ஆழ்மன முகமூடி
கள்ள புன்னகை பொதிந்திருக்கிறது.

தேடுபொறியின்
வலை வரலாற்றில்
அந்தரங்கங்களின் ரகசியங்கள்
வால் தீண்டும் நாகமென
தீரா காமத்தின் பின்னிரவுகளை
முடிவற்று சூழ்ந்திருக்கிறது.

அணையா இருண்மையின்
கீழ்உணர்ச்சிகள்
கரும் இரவின் போர்வையாக
எல்லா அறைகளிலும்
திரையிட்டிருக்கிறது.
ஆதி மிருகத்தின் உயிர்விசையை
அத்திரையொளி
தனித்த சுடர் போல்
நகரின் எல்லா மனிதருக்குள்ளும்
ஒளிர செய்து கொண்டிருக்கிறது