எழுத்து

அந்த நிறம் – ஜான் மெக்கிரகர் (தமிழாக்கம்- விஷால் ராஜா)

ஜான் மெக்கிரகர் (தமிழாக்கம்- விஷால் ராஜா)

ஜன்னல் பக்கம் நின்று அவள் கூறினாள், அம்மரங்கள் மீண்டும் அந்த அழகிய நிறத்திற்கு திரும்புகின்றன. அப்படியா என்று கேட்டேன். நான் வீட்டின் பின்புறம் இருந்தேன், சமையலறையில். பாத்திரங்கள் விளக்கிக் கொண்டு. தண்ணீர் போதிய வெப்பத்துடன் இல்லை. அவள் கூறினாள், அதை நீ என்ன நிறத்தில் அழைப்பாய் என்று எனக்குத் தெரியவில்லை. அவள் பேசிக் கொண்டிருந்தது சந்திப்பைத் தாண்டி சாலையின் மறுபுறத்தில் இருந்த மரங்கள் பற்றி. அது ஒரு ஆச்சர்யம், போக்குவரத்துக்கு மத்தியில் அவை தாம் இருக்கிற இடத்தில் அவ்வளவு நன்றாக வளர்வது. அவை என்ன மரங்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை ஏதோ வகை மாப்பில் அல்லது சிகமோர். ஒவ்வொரு வருடமும் இது நடக்கிறது அவளும் எப்போதும் எதிர்பாராது வியப்ப்புற்றவளாய்த் தெரிகிறாள். இந்த வருடங்கள் குறுகிக் கொண்டிருக்கின்றன, ஒவ்வொரு ஆண்டும். அவள் கூறினாள், நான் அவற்றை நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருக்க முடியும், நிஜமாகவே என்னால் முடியும். நான் தண்ணீரில் என் கையை ஓய்வாக பரப்பியபடி கவனித்தேன் அவள் அங்கே நின்றுக் கொண்டிருப்பதை. அவளது மூச்சை. அவள் எதுவும் சொல்லவில்லை. அவள் அங்கு நின்றுக் கொண்டேயிருந்தாள். நான் கழுவற்தொட்டியை காலியாக்கிவிட்டு மீண்டும் அதை சுடு தண்ணீரால் நிரப்பினேன். அறைக் குளிர்ந்திருக்க, நீரிலிருந்து ஆவி பெருகி பாத்திரங்களிலிருந்து வெளியேறுகிறது. நான் அதை என் முகத்தில் உணர முடிகிறது. அவள் கூறினாள், அவை வெறும் சிவப்பு அல்ல, அது அல்ல இது, இப்போது அதுவாகிவிட்டதா. பொரிக்கும் தட்டை கழுவிவிட்டு நான் அதைச் சுற்றி என் விரல்களை ஓட்டினேன், பிசுக்கை சோதிக்க. ஏற்கனவே என் விரல்மூட்டுகள் பழையபடி வலிக்க ஆரம்பித்திருந்தன. அவன் கூறினாள், ஒரு வெயில் தினத்தில் நீ கண்களை மூடுகிறபொழுது, அது கொஞ்சம் போல் அந்த நிறம்தான். அவளது குரல் மிகவும் சன்னமாக இருந்தது. நான் அசைவற்று நின்று கவனித்தேன். அவள் கூறினாள், அதை விவரிப்பது கடினம். ஒரு லாரி கடந்து சென்றதில் மொத்த வீடும் அதிர ஜன்னலைவிட்டு அவள் விலகி நிற்பது கேட்டது, அவள் எப்போதும் செய்வது போல். எதற்கு அவள் இவ்வளவு வியப்படைகிறாள் என நான் வினவினேன். நான் அவளிடம் இது இலையுதிர் காலம் என்றேன், இதுதான் நடக்கும் : பகல்கள் சுருங்குகின்றன, பச்சையம் உடைகிறது, இலைகள் வேறு நிறத்திற்கு மாறுகின்றன. நான் அவளிடம் சொன்னேன் ஒவ்வொரு வருடமும் இதை அவள் கடப்பதாக. அவள் கூறினாள், இது அழகாக இருக்கிறது, அவை அழகாக இருக்கின்றன, அவ்வளவுதான், உனக்கு இது தேவையில்லை. நான் பாத்திரங்களை தேய்த்து முடித்துவிட்டு நீரை வெளியேற்றி தொட்டியை கழுவினேன். அவள் அணிகிற ஒரு அசல் சிவப்புப் பாவாடை இருந்தது எங்கள் இளமைக்காலத்தில். அவள் தன் கூந்தலின் நிறத்தை அதற்கு பொருத்தமாக ஒருமுறை மாற்ற, ஊரில் இருந்த சிலர் அதை வர்ணித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். அப்போது ஜ்வாலை- சிவப்பு என்று அவள் அதை அழைத்தாள். ஒருவேளை அவள் விவரிக்க நினைத்த இலைகளும் அது போலவே இருக்கலாம். நான் என் கைகளை துடைத்துக்கொண்டு முன்னறைக்குச் சென்று அவள் அருகில் நின்றேன். அவள் கையை தேடித் தடவி பற்றிக் கொண்டேன். நான் சொன்னேன், இருக்கட்டும், மீண்டும் எனக்குச் சொல்.

oOo

(This is an unauthorised translation of the short story, “That Colour” by Jon McGregor included in the collection, “This Isn’t the Sort of Thing That Happens to Someone Like You“. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

இப்படியுமோரமைப்பு – ஆகி

ஆகி

கண்ணாய் தாய்மார்
தந்தைமார் தோளாய்
கேசமாய் மெத்தப்படித்தோர்
மதம்பிடித்தோர் மயக்கமாய்
இதயமாய் வீடற்றோர்
பாலியக்கமற்றோர் இயல்பாய்
இயலுணர்வாய் திருனர்கள்
கலைஞர்கள் நுண்ணுயிர்கட்டாய்
உணர்கொம்பாய் தாவரங்கள்
தோட்டத்திற்கு நீர்பாசனத்தை சட்டெனத்துண்டித்த உணவதிகாரியை
நீயதை வாசிக்காதே என்றாணையிட்டறைந்த நூலதிகாரியை
ஆசைப்பட்டானென்று பட்டென்றுதைத்தக் காதலதிகாரியை
பாதிக்கப்பட்டோரனைவரின் உயிரணுக்களில் வசிக்கும் தீங்கற்ற
இச்சைகளனைத்தும் முடிவிலிவரை ஒத்திசைத்து பச்சைபச்சையாய்
வசை பாடுகின்றன
குரல்நாணாய் மகள்கள்
மகன்கள் செவியாய்
நனவாய் விலங்குகள்
பறவைகள் கனவாய்
இப்படி யோரமைப்பு
பிறப்புறுப்பாய் இச்சைகள்
இச்சைகள் இரைப்பையாய்
மூளையாய் இச்சைகள்
குறிக் கோள்களற்ற
பரிசுத் தமான
இச்சைகள்

இக்கவிதை – சரவணன் அபி

சரவணன் அபி

வானின்று பொழியும் நீர்ச்சரங்களில்
மழை வில்லை மண் இறக்கிவிடும்
பிரயத்தனங்களின் கனமில்லாத கவிதை

பதிந்து சென்ற தடங்களின் அழுத்தமும்
புதுப்பாதை சமைக்க நேரும்
நிர்பந்தங்களின் எடையுமற்ற கவிதை

தன் சிறகின் இளைப்பு தவிர
எதன்பொருட்டும்
தோள்தர நேர்ந்துவிடும் கட்டுப்பாடற்ற கவிதை

எளிதில் உருவழிந்துபோகும்
எதிலும் குறிக்கப்பெறா
இந்தக்கணம் போலும்
இக்கணம் வாழும்
இக்கவிதை

தனித்தல் – ஜிஃப்ரி ஹாஸன்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

வெளிர் மஞ்சள் வெயிலில்
தனித்து நிற்கிறது மரம்
தனித்தல் ஒரு கலை
தனித்தல் ஒரு எழுச்சி
தனித்தல் ஒரு வளர்ச்சி

வெளிர் மஞ்சள் வயலில்
தனித்து நிற்கிறது மரம்

தனித்தல் அதன் சுதந்திரம்
தனித்தல் அதன் கனவு
தனித்தல் அதன் எழுச்சி

வெளிர் மஞ்சள் வெயிலில்
தனித்து நிற்கிறது மரம்

கூட்டத்திலிருந்து
திசைமாறிச் செல்லும் பறவை ஒன்று
அதன் தனிமையை பகிர்ந்து கொள்ளலாம்
பயணக் களைப்பில்
வழிப்போக்கன் ஒருவன்
ஒரு இடைத்தங்கலுக்காய்
அதன் நிழலில் அமரலாம்
அப்போது மரம் ஒரு துணை
மரம் ஒரு இல்லம்
மரம் ஒரு கேண்மை

வெளிர் மஞ்சள் வெயிலில்
தனித்து நிற்கிறது மரம்
திசைதப்பிப் பறக்கும் பறவைகளுக்காகவும்
வழிப்போக்கர்களுக்காகவும்!

சாயல் – ஆகி

ஆகி

மெட்ராசா என்பார் ஐதராபாதிலிருந்து திரும்பினால்
புது தில்லியிலிருந்து திரும்பினாலும் மெட்ராசாதான்
கிட்டத்தட்ட ஓர் நூற்றாண்டைக் கண்டவரானால்
திருச்சிக்கு அந்தப் பக்கம் கண்டதில்லையாதலால்
அவர் இருந்திருந்தால் கொள்ளுப்பேரன் நிலவிலிருந்து
திரும்பியிருந்தால் எப்பப்பு வந்தா மெட்ராசிலிருந்து என்றிருப்பார்
அகமாசா என்றுணர்ந்து கைகளைத் தடவி முகத்தில் ஒத்தியெடுத்து
விரல்கள் உள்ளீடற்று போகிறார்போல் முகர்ந்துகொள்வார்
பிளசர் கார் ஒத்துவராதென்று ஜெயசீலி சித்தி வசிக்கும்
திருச்சிக்கும் சென்றிருக்கவில்லை கடைசி நாட்களில்
படுத்த படுக்கையாயிருந்த நட்சத்திரம் பாட்டிம்மாவை பல மாதங்கள்
மாங்கு மாங்கெனத் தாங்கிக்கொண்டார் ஜெபதங்கம் பெரியம்மா
கர்த்தருக்குள் நித்திரையடைந்தவரின் முகம் கன்னம் வற்றி
எலும்பு துருத்தி சாயலொன்றை கொணர்ந்தது கண்ணாடிப்பெட்டியுள்
பலநாள் பட்டினியில் என்னைக் கண்ணாடியில் நானே முறைத்தால்
காணும் பழந்தின்னி வௌவாலின் சாயல் அதைவிட அச்சு அசலாக
நானிப்போதெல்லாம் வீம்புக்காகவன்றி பட்டினி கிடப்பதில்லை
பழந்தின்னி வௌவால் பறக்கும் நரியென்றுமறியப்படுகிறதாம்
தேரிக்காட்டின் நிலவொளியில் பறக்கும் நரிகள் அருகி வருகின்றன