– பெருந்தேவி –
பைங்கிளிக்
கதைகளில் வரும்
பைங்கிளியைத் தேடி
தாடி
தீவிர இலக்கிய
வாதி

பகுதி ஒன்று – கேள்வியைப் புரிந்து கொள்ளுதல்
ஏன் எழுதுகிறேன் என்று பதாகை கேட்டிருந்தால் அவர்கள் எதிர்பார்க்கும் பதில் என்னை எழுத உந்துவது எது மற்றும் என் சிந்தனையின் தொடர் பயணம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி கேட்கிறார்கள் என்று பொருள். ஆனால் எதற்காக எழுதுகிறேன் என்பதே கேள்வி. எதற்காக? எந்தக் குறிக்கோளுடன் அல்லது நோக்கத்தோடு என்பதான கேள்வி அது.
பதிலைத் துவங்கும் முன் எழுத்தாளர்கள் நோக்கத்தோடு குறிப்பிட்ட ஓர் இலக்கோடு எழுதுகிறார்கள் என்று நாம் பொதுவாகக் கூற முடியுமா என்ற கேள்வியை எடுத்துக் கொள்வோம். ஒரு நோக்கத்தைக் கற்பித்து ஒரு பதிப்பாசிரியர் என் மனதைப் புண்படுத்தினார். அதை முதலில் பார்ப்போம்.
அவரது நூல் வெளியீட்டு விழாவில் நான் நூலின் மதிப்பு கருதி அதன் செறிவு கருதி பேசுவதற்காகப் போயிருந்தேன். மற்றொரு பேச்சாளர் வந்தவுடன் நமது பதிப்பாசிரியருக்கு உற்சாகம் அதிகமாகியது. மடை திறந்த வெள்ளமாகத் தாறுமாறாகப் பேசிக் கொண்டே போனவர், “எழுத்தாளர்கள் தன்னை (பிறர் பார்வையில்) மேம்படுத்திக் கொள்வதற்காக எழுதி செலவு செய்து வெளியிடுகிறார்கள்,” என்று ஒரு போடு போட்டார்.
புகழ் பெறுவது தன்னை புத்திசாலியாக, சிந்தனையாளனாகக் காட்டிக் கொள்வது இதற்கெல்லாம் அரசியல் அல்லது சினிமா போன்றவை நிச்சயம் மிகுந்த துறைகள். இன்று கவிஞன் என்று தமிழ்நாட்டில் ஒருவர் அறியப் பட வேண்டுமென்றால் அவர் சினிமாப்பாடல் எழுதியிருக்க வேண்டும். மேடைப் பேச்சு அரசியலில் முக்கியத்துவம் இவற்றால் தனது சிந்தனையை வியாபாரப் பொருளாக்கி நிறைய தூரம் போக முடியும்.
நம்முடைய எழுத்தாளர்களும் புத்தகம் கவனம் பெற விழாக்கள் பெரிய அளவில் நடத்துவது என்று களம் இறங்கி விட்டார்கள். மறுபடி கேள்விக்கு வருவோம். ஒரு நோக்கம் அல்லது இலக்கு என்ற ஒரு புள்ளியைச் சுட்டிக் காட்டி இதனால் எழுதுகிறார்கள் என்று கூற முடியாது.
உண்மையில் எழுத்து என்னும் மனோரதம் எழுத்தாளனின் சிந்தனையை வாசகனுடன் பகிரும் உந்துதல் உள்ளவரை நகர்கிறது. இந்தப் பகிரும் உந்துதல் எழுத வைக்கிறது. பகிர்வதற்காக எழுதுகிறார்கள் என்ற விடை மிகவும் கேள்விக்கு அண்மையானது. இந்தப் பகிரும் உந்துதல் எப்படி எல்லா எழுத்தாளர்களிடமும் இருக்கிறது?
இதற்கான விடை மிகவும் எளிமையானது. தீவிர எழுத்துப்பணியில் ஒருவர் குதிக்கும் முன் அவர் வாசிப்பில் துவங்குகிறார். இது எல்லாப் படைப்பாளிகளுக்குமே பொருந்தும். வாசிப்பில் இலக்கியம் என்னும் விளிம்பில்லாப் பெருவெளியில் தான் லயித்தவை ரசித்தவை அவை பற்றிய விமர்சனங்கள் யாவற்றையும் வாசித்து ஒரு கட்டத்தில் தன்னுள் அசலாய் இருக்கும் ஒரு கருவை இலக்கிய வடிவாக்கும் முனைப்பைப் பெறுகிறார். அந்த முனைப்பில் அவர் தனது அசலான கற்பனை, சிந்தனை, விமர்சனம் இவை யாவுமே சமுதாயத்தை விலகி நின்று விமர்சிக்கும் கலகப் பொறியுடனிருப்பதாக உணர்கிறார். தனித்து அறச் சீற்றத்துடன் சமூகத்தில் தான் ஏற்காதவற்றாய் அங்கத்ததுடன் கூர்மையாக ஒரு கலை வடிவாகக் கவிதையாகவோ கதையாகவோ கட்டுரையாகவோ பகிர்கிறார்.
மறுபடியும் பகிர்வதற்கு வந்து விட்டோம். சமுதாயத்திலிருந்து தனித்து நின்று சிந்தித்தாலும் நான் அல்லன் – என் சகஜீவிகளே உம்மோடு பகிர்வதில் நான் சமூகஜீவியாக, பிணைப்புள்ளவனாக இருக்கிறேன் என்னும் நட்புக்கரத்துடன் படைப்பாளி முன்னகர்கிறார்.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வியை நாம் கடக்கிறோம். எது இரண்டு எழுத்தாளர்களை வேறுபடுத்துகிறது. பன்மையே சரியானது. எவை இரண்டு எழுத்தாளர்களை வேறுபடுத்துகின்றன?
முதலாவது பின்னணி. வெள்ளிக் கரண்டியுடன் அமையும் குழந்தைப் பருவம் கண்டிப்பாக பாதிக்கிறது. மிகவும் மோசமான வறுமை சார்ந்த வலி மிகுந்த குழந்தைப்பருவம் எதிர் துருவம்.
இணையானது அவர் எழுதத் துவங்கும் காலகட்டம். காலகட்டம் இரண்டு விதமாக. ஒன்று அவரது வயது மற்றும் குடும்பத்தில அவர் நிலை. இரண்டாவது அவரது சமகாலத்தில் வெளியாகும் படைப்புக்கள். பாரதியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் மற்றும் சமகாலம் என நாம் ஒரு வசதிக்காகப் பிரித்துக் கொள்ளலாம்.
அடுத்தது அவர் எந்த அளவு வாழ்க்கையைக் கூர்ந்து கவனிக்கிறார்? தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களை- நிகழ்வுகளை- பேச்சை – மௌனத்தை- சுரண்டலை – வன்முறையை -அதிகாரத்தை – அடிமைத்தனத்தை- வாய்ப்பை – இழப்பை- வெற்றிகளை- தோல்விகளை- கொண்டாட்டங்களை – புறக்கணிப்புக்களை எப்படி உள்வாங்குகிறார்? அதில் எவற்றைப் பதிவு செய்யத் தேர்ந்தெடுக்கிறார்? எப்படிப் பதிவு செய்கிறார்?
பகிர்வதற்காக எழுதியவர் வாசகரை எங்கே இட்டுச் செல்கிறார்? அவர் இட்டுச் செல்ல விரும்பிய இடத்துக்கு எந்த அளவு அருகில் சென்றார்? எந்த அளவு வெற்றி பெற்றார்? இந்த வெற்றி படைப்புக்குப் படைப்பு வேறுபடும். ஒரு பெரிய எழுத்தாளர் சறுக்கிய இடங்கள் நிறைய இருக்கலாம். அதிகம் எழுதாத, கவனம் பெறாத ஒரு பெண் கவிஞர் சாதித்தது நம்மை அயர வைக்கலாம். ஒவ்வொரு படைப்பிலும் எழுத்தாளர் ஒரு உறைகல்லில் சீர்தூக்கப்பட்டு அந்தப் படைப்பில் அவரது வெற்றி இந்த அளவு என்று ஒரு புள்ளியில் நிலை பெறுகிறார். தொடர்ந்து எழுதும் உந்துதல் விமர்சகர், வாசகர் மற்றும் சக படைப்பாளிகளுடனான விவாதத்தால் கிடைக்கிறது.
இன்றைய தமிழ்ச்சூழலில் தீவிரமாக இயங்கும் எந்த ஒரு படைப்பாளியும் சகஜீவிகளுடன் பகிர விரும்பும் பரிவு ஜீவ நதியாக ஊற்றெடுப்பதால் மட்டுமே இயங்குகிறார். மிகவும் சோர்வுதரும் எதிர்மறையான சூழல் இது.
எனவே பகிரும் பரிவின் இடையறா உந்துதலால் பகிர்வதற்காக அதுவே ஆகச் சிறந்த வாழ்நாள் முனைப்பு என்பதாக எழுதுகிறார் என்றே இந்தக் கேள்விக்கு மிக அருகாமையான விடையைத் தருகிறேன்.
பகுதி 2 – நான் எதற்காக எழுதுகிறேன்?
முதல் பகுதியில் குறிப்பிடாத எந்தப் புதிய காரணத்தை, விளக்கத்தை நீ கூறப் போகிறாய் என்ற கேள்விக்கு ஒரு விடை உண்டு. என் பயணம் பற்றிய சில விவரங்கள் பல சாளரங்களைத் திறக்கும். அதுவே பகுதி ஒன்றிலிருந்து மேற்செல்வதாகும்.
என்னைப் பற்றிய எளிய அறிமுகம் கவிஞன், விமர்சகன் மற்றும் புனைகதை எழுதுபவன். கவிதை எழுதுவோர் அபூர்வமாகவே பிற வடிவங்களில் படைப்பளிப்பதில் வெற்றி காண்பவர்கள். அந்த அபூர்வம் எனக்கு அமைந்தது. கணையாழி உள்ளிட்ட பல சிறுபத்திரிகைகளில் என் பணி துவங்கியது. 2009க்குப் பிறகு திண்ணை, பின்னர் நவீன விருட்சம், பதாகை, பதிவுகள் ஆகிய இணைய தளங்களில் எனது பதிவுகள் வந்துள்ளன. மிகச் சமீப காலத்தில் மீண்டும் அச்சு ஊடகத்தில் எழுத எண்ணி சில படைப்புக்களை அனுப்பி இருக்கிறேன். விமர்சகனாக இயங்குவதில் சமகால எழுத்துக்களை வாசித்து விமர்சிப்பதில் என் பங்கையும் வெற்றியையும் பல படைப்பாளிகள் பாராட்டியுள்ளனர்.
சோர்வு தரும் தமிழ்ச் சூழலில் பலமுறை என்னை நானே கேட்டுக் கொள்வேன், “எப்படித் தொடர்ந்து இயங்குகிறேன்?” எழுதுவதை நிறுத்தி விட்டால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? இன்னும் பணியில் இருப்பதால் பல முறை வேலைப்பளு தாள முடியாததாயிருக்கிறது. அலுவலகம், குடும்பம் இரண்டில் ஒன்று படைப்பூக்கம் எழும்பும் நல்ல மனநிலையைக் காவு வாங்கி விடும். இதையெல்லாம் மீறி எழுதினால் தமிழ்ச்சூழல் சோர்வைக் கொண்டுவரும்.
பலமுறை மனதுள் அலசி நான் எழுத்துப் பணியை, படைப்புவெளியில் தீவிரமாக இயங்குவதை எனக்கான ஓர் இடத்தைத் தேடும் பயணமாகக் காணவில்லை. என் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளும் ஒரு முயற்சியாகக் காண்கிறேன்.
ஜனவரியில் ‘சொல்வனம்’ இணைய இதழ் மற்றும் இலக்கியப் பத்திரிகையான ‘நவீன விருட்சம்’ ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் பெரியவர் எழுத்தாளர் அசோகமித்திரனை சந்தித்தேன். ‘எங்கே வேலை பார்க்கிறாய்?” என்று கேட்டார். சொன்னேன். அடுத்து ஒருவரிடமும் அறிமுகத்தில் அதேயே கேட்டு பதில் வந்த பிறகு அவர் கூறினார், “நீ எங்கே வேலை பார்க்கிறாயோ அது தான் உன் அடையாளம்”. எதையும் எளிமைப்படுத்திக் கூறுபவர் அல்லர் அவர். ஆனாலும் நுட்பமாகவே அதைக் குறிப்பிட்டார்.
எல்லா அடையாளங்களும் குறுகியவையே. நம்மிது சுமத்தப்படுபவையே. சாதி, வயது, பால், வருமானம், குடும்பப் பின்னணி, தோலின் நிறம், தொழில் என மூச்சுமுட்ட வைக்கும் மலினப்படுத்தப்பட்ட அடையாளங்கள்.
இவை எல்லாமே ‘மந்தையின் ஓர் அங்கமாய் வாழ்நாளெல்லாம் வாழ சபிக்கப்பட்டவன் நீ’ என்று சுட்டுபவை. ‘எண்ணிக்கையில் மிகவும் குறுகிய மனதால் மிகவும் விரிந்த இலக்கியவாதிகளுள் நானும் ஒருவன்’ என்னும் அடையாளத்தை மட்டுமே நானாக ஏற்றுக் கொண்டு என் வாழ்க்கையின் பொருளை அந்த அடையாளத்தில் தேடுகிறேன். அதற்காகவே எழுதத் துவங்கினேன். தொடர்கிறேன்.
என் குடும்பத்தினர் முற்றிலும் நிராகரிக்கும் இந்த அடையாளத்தை சகஜீவிகள் முன் எனது ஒரே அடையாளமாகக் கொண்டு நான் நிற்கிறேன்.
oOo
(சத்யானந்தன் கவிஞர். புனைகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளரும்.. பதினைந்து வருடங்களுக்கு மேலாக சதங்கை, கணையாழி, நவீன விருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, சங்கு, புதிய கோடாங்கி, இலக்கியச் சிறகு ,கனவு உள்ளிட்ட சிறு பத்திரிக்கைகளிலும், திண்ணை மற்றும் சொல்வனம் ஆகிய இணைய தளங்களிலும் தீவிரமாகத் தன் இலக்கியப் படைப்புகளைத் தந்தவர். குறிப்பாகத் திண்ணை இலக்கிய இணைய தளத்தில் இவரது சமீபத்திய கவிதைகள், கட்டுரைகள் திண்ணையில் வெளிவந்தவை. திண்ணையில் தொடராக “ஜென் ஒரு புரிதல்”, முள்வெளி- சமூக நாவல், போதிமரம்- சரித்திர நாவல், ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை இவைகள் அச்சு வடிவத்தில் வராதவை. இவை sathyanandhan.com என்னும் அவரது இணைய தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. http://www.pratilipi.com/ இணையத்தில் ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி மற்றும் சரித்திர நாவல் போதி மரம் வெளியிடப்பட உள்ளன. அச்சு வடிவில் வந்த “புருஷார்த்தம் (2000 வருடம்) நாவல் மற்றும் விக்கிரகம் (2003) நாவல் மற்றும் வெளியே வீடு (2003) கவிதைத் தொகுதி ஆகியவை இன்னும் மின் வடிவம் பெறவில்லை. சத்யானந்தன் தொடர்ந்து இயங்கி வரும் சிந்தனையாளர் எழுத்தாளர். sathyanandhan.mail@gmail.com மின்னஞ்சல் வழி அவரைத் தொடர்பு கொள்ளலாம் – நன்றி, பிரதிலிபி.காம்)

ஒரு விரல் உலகைப் பார்த்து நீட்டும் போது மத்த மூணு விரல்கள் உன்னையே காட்டுகிறது என்பார்கள். அதைத் தவிர்க்க முடியாது. பிறரைப் பற்றி எழுதுவதான பாவனையில் மிக்கவாறும் தன்னையே காட்டிக் கொடுத்து விடுகிறது எழுத்து. அதற்கு ஓர் எழுத்தாளன் தயாராய் இருக்க வேண்டும். காலப்போக்கில் ஒரு வேடிக்கை போல அந்த எழுத்தின் அடிநாதமான விமரிசனக் குரலை அவன் தன் வாழ்க்கை பாவனைகளாக ஆக்கிக்கொள்ள உந்தப் படுகிறான். அது ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறது. முதல் நிலை, இந்த பாவனைகளில் இருந்து தான் அநத எழுத்து பிறக்கிறது. அடுத்த நிலை, எழுத்து என்று சகஜப்பட்டான பின், எழுத்தில் இருந்து இவனுக்கு ஒரு கிரண வீச்சு கிடைக்கிறது. பெறும் நிலைக்கு, வாசக நிலைக்கு அவன் மீண்டும் வந்தமைகிற வேளை அது.
எதனால் எழுதுகிறேன்?
அப்படி அலலாமல் வேறு எவ்வாறும் என்னை, என் இருப்பை என்னால் நியாயப் படுத்திக் கொள்ள முடியாது என்று தோன்றுகிறது. நான் ஒரு அலுவலகப் பணியாளி. பிணியாளி. இது பிணிக்கப் பட்ட பணி. அன்றாடங்களின் ஒழுங்கு அதில் உள்ளது. ஆனால் வாழ்க்கை? அது ஒழுஙகற்று நேர்ப் பாதையாய் அல்லாமல் முப்பரிமாணக் காட்சி என பரந்து விரிந்து கிடக்கிறது, ஒரு வானம் போல. சமுதாயம் என்கிறது ஒரு தன்னார்வ அமைப்பு. நாம் கட்டமைத்த ஒரு கற்பனை வடிவம். மனித உயிர் சிரஞ்ஜீவியாக வாழ அவாவுறுகிறது. குறைந்த பட்சம் பாதுகாப்பாக வாழ அது ஆவேசப்படுகிறது. அதை அலட்சியமாக, சம்பவங்களின் இடிபாடுகளில் மாட்டிக்கொள்ள அனுமதிக்க முடியாது. இதற்கு வாழ்வில் ஒரு கூட்டு அமைப்பு, ஒழுங்கு, நியதிகள் என அடுக்குகளை உருவாக்கிக் கொள்கிறான் மனிதன்.. இந்த ஒழுங்கற்ற மொத்ததில் சிறு ஒழுங்கைப் பிரித்து தன் ராஜ்ஜியத்தை அவன் அமைத்துக் கொள்கிறான். எதிர்பாராத ஒரு ஆபத்தைச் சமாளிக்க, தன்னால் தனியாக அலலாமல், ஒரு மனிதக் கூடடமாக என்றால் வேலை எளிது, என்பது அவன் துணிபு. ஒவ்வொரு கேள்விக்கும் பதில் வேறு வேறு நபர்கள் தருகிறார்கள். மானுடம் வெல்க. மிருகம் மாருதம் ஆனது கிடையாது. மனிதம் மானுடம் ஆகி விட்டது.
மேலதிக ஒழுங்குகளை அவன் வரையறை செய்துகொண்டபோது, அதற்கான கணக்குகளில், இந்த ஒழுங்கு சார்ந்த கலை வடிவம் தன்னைப் போல சித்தித்தது அவனுக்கு. வாழ்க்கையைக் காரண காரியங்களுக்கு உட்படுத்துகிற அவனது பிரியத்தில், இந்த கலை ஒழுங்குகள் அவனைக் கவர்கின்றன. இப்படிப்பட்ட ஒன்றைத்தான் அவன் வாழ்க்கையில் லட்சியப்படுத்துகிறான். ஒழுங்குகள் சார்ந்த உலகத்தில் மரண பயம் இல்லை. மரணத்தை மீறி வாழ்க்கை சார்ந்து அவனுக்கு நெடுந்தூரப் பயணம் இருக்கிறது. வாழ்க்கை அற்புதமானது என்கிறது கலை. எடுத்துச் சொல்கிறது கலை. அவனது மனசின் விழைவு அது.
ஆனால் கலை என்பது என்ன? கலை எப்படித் தோன்றியது?
கலை என்பது அடிப்படையில் முரண். ஒரு கருத்துக்கு நீட்சி என்றோ, மாற்று எனறோ உதிக்கும்போது அங்கே பரிமாற்றம் நிகழ்கிறது. எது சரி எது தவறு போன்ற விவாதங்கள் நிகழ்கின்றன. கலை அதற்கு ஏற்பாடு செய்கிறது. நல்லது நிற்க வேண்டும். நிலைக்க வேண்டும். இதுவரை இருந்தது அகன்று வேறு, சரி எனப் படும் ஒன்று, மேல் மட்டத்துக்கு, புழக்கத்துக்கு வருகிறது. கலை ஒரு முரண் சார்ந்த வழியில் மேலதிக உன்னதம் நோக்கி மனிதனை வழி நடத்துகிறது.
அதோ, என்கிறது கலை.
ஒரு நல்ல பாடல் கேட்கிறோம். மனசின் இருட்டு, அல்லது கவலை மெல்ல மேகம் விலகுவதாக உணர்கிறோம். கலையின் ஒழுங்கு, அந்த உள்மனச் சிதறலைத் திரும்ப சமப்படுத்த முயல்கிறதாக நமக்கு அமைகிறது. ஒரு பிரச்னை. அதைத் தீர்க்க வேண்டியிருக்கிறது. கலை, புனைவு என்கிற வடிவம் வேறொரு பிரச்னையை எடுத்துப் பேசுகிறது. அதற்கான தீர்வு அதில், அந்தப் புனைவில் நேரடியாகவோ உட்பொருளாகவோ காட்டப் பட்டிருக்கும். அல்லது விவாதிக்கப் பட்டிருக்கும். வேறொரு பிரச்னையை அங்கே விவாதித்திருக்கலாம். நம் பிரச்னை என்ன? அதன் தீர்வு நோக்கி நம்மை எப்படி சமப்படுத்திக் கொள்கிறோம்… என கலை சிந்தினைகளைத் தருகிறது. அது சொன்ன தீவை ஒட்டியும் வெட்டியும் இப்படியும் அப்படியுமாய் கலை ஊடாடுகிறது.
மின கம்பிக் குருவிகள்.
எதனால் எழுத வந்தேன் தெரியாது. ஆனால் ஒழுங்குகளுக்கும், ஒழுங்கற்ற சம்பவங்களுக்கும் ஒரு ஒத்திசைவைத் தர கலை முயல்வதை நான் அவதானிக்கிறேன். கட்டாயம் மனிதனுக்கு அது தேவையாய் இருக்கிறது, என்பதை உணர்கிறேன். எனக்கு அது தேவை.
இந்த சமூகத்தில் நான் ஓர் இடத்தில் பணி செய்கிறேன். எனக்கு அந்த வேலை அத்தனை உவப்பாய் இல்லை. ஒருவேளை வேறொரு இடத்தில் நான் இன்னும் சிறப்பாக இயங்க முடியுமோ என நினைக்கிறேன். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. இதைவிட ஒரு நல்ல மனைவி திடைத்திருக்கலாம், என்று சில சமயம் தோன்றுகிறது. நான் பிறந்த ஊர், என் குடும்பம்… எல்லாம் சார்ந்து எனது அதிருப்திகளை நான் கவனிக்கிறேன். அமைதல், புண்ணியம், விதி என்றெல்லாம் மனசு ஊசல் ஆடுகிறது. யாருக்கும் எல்லாமும் கிடைத்து விடாது, என்று தான் உலகம் அமைந்திருக்கிறது. அல்லது, இல்லாத ஒன்றுக்குக் கை நீட்டுவதே மனசின் எடுப்பாக இருக்கிறது. இன்றை விட நாளை மேலாக இருக்க வேண்டும் என மனசு வேண்டுகிறது. அப்படியானால் இருக்கிற இருப்பில் ஒரு மனம் திருப்தி கொண்டு அடங்கவிட முடியாது.
மேலான வாழ்க்கை பற்றிய ஒரு கற்பனையைக் கலை ஊக்குவிக்கிறது.
நான் எனக்கு உகந்த பிரதேசங்களில் பயணிக்க என் கலை எனக்கு, ஒரு படைப்பாளனாக வெகு உதவி. இந்த வாழ்க்கை, இது னக்கு அமைந்தது. என்றால், நானாகத் தேர்ந்து கொண்ட என் எழுத்து, அதில் எனக்கான ஒரு வாழ்க்கையை, உன்னதத்தை நான சிருஷ்டி செய்து கொள்வேன். அதில் எனக்கு வாயத்தது இது என்கிற, இன்னொரு தலையீடு இல்லை. ஏமாற்றங்கள் சாத்தியமே இல்லை.
நான் என் எழுத்தை நேசிக்கிறேன். கலைஞர்கள் பிறப்பது இல்லை. அப்படியெல்லாம் அதித நம்பிக்கை எனக்கு இல்லை. நான் கலைஞனாக உருவானவன். இந்த வாழ்க்கையில் வேறு எங்கும் கிடைக்காத அமைதி, திருப்தி எனக்கு நான் கலைஞனாக ஈடுபாடு காட்டுகையில் எனக்கு வாய்க்கிறது.
ஆகா, இதைக் கைமாற்ற முடியுமா?
அதனால் எழுதுகிறேன்.
என் கதைகள் அதை உறுதி செய்கின்றனவா? செய்ய வேண்டும்.இது என் அவா.
oOo
(எண்பதுகளின் தமிழ் இலக்கியவாதியாக அடையாளப்படும் எஸ். சங்கரநாராயணன் கதை கவிதை குறுநாவல் நாவல் கட்டுரை மொழிபெயர்ப்பு என்று பல்துறைகளில் கால் பதித்தவர். உலகச் சிறுகதைகள் மூன்று தொகுதிகள் உட்பட ஏறத்தாழ 80 நூல்களின் ஆசிரியர். நிஜம் என்கிற சிற்றிதழ் நடந்தியவர். தற்போது ஆண்டுதோறும் இருவாட்சி பொங்கல் மலர் கொண்டு வருகிறார். கச்சிதமான உவமை வீச்சுடனான கவிதை நடை இவரது முத்திரை. சொல்லாடல்களில் புன்னகை வரவழைக்கக் கூடிய நகைச்சுவை மிளிரும். மொழிபெயர்ப்பு குறித்து இவரது கருத்துக்கள் கவனங் கொள்ளத் தக்கவை)
பலிகளம்
தயாராகி விட்டது
நினைவை மீட்டி உரைக்கிறேன்
இது போல் ஏதும் நாம் கண்டதில்லை
களமெழுதி திரையிறக்கி
வண்ணமும் சுண்ணமும் சார்த்தி
நான்மூலைகளில்
தீபமும் தூபமும் பொருத்தி
கொட்டும் முழக்கும் கூட்டி
பலிகளம்
தயாராகி விட்டது
அம்பும் வில்லும்
வாளும் சூட்டி
இளித்தும் அழுதும்
இன்முகம் காட்டி
கனலென எரியும்
கண்கள் உருட்டி
காற்றில் நடிக்கும்
உடைகள் பூட்டி
பெருந்தெய்வங்களும்
குறுந்தேவதைகளும்
களமாடும் நியதி
கூடி வருவன தனித்து
ஆடி வருவன
என
அவையனைத்தும்
இந்தக் கதிர்மங்கும்
அந்தியில்
களம் வந்து சேர்ந்துவிட்டன
விடியும் வரை அல்லது
பலிகள் விழும் வரை
சந்நதம் அடங்காதாடும்
அவை
பெரும்பலிகள்
கொள்ள வேண்டி
சினந்தவை இணைவதும்
கூடியவை பொருதுவதும்
காத்திருக்கும் பலிகள்
கண்முன் நிகழ்வதுமோர்
ஆட்டமே
யாசித்தல் போல் கையேந்தும் சில
அபயஹஸ்தம் காட்டும் சில
உரத்த பாவனைகளில்
மறைந்து கொள்ளும் சில
முஷ்டி மடக்கி
காற்றில் சமர் புரிந்து
பலிகளை மகிழ்விக்கும் சில
எனினும்
கவலை வேண்டாம்
குழம்ப வேண்டாம்
தேவதைகளின் தெய்வங்களின்
தேவை ஒன்றே
களம்புகக் காத்திருக்கும்
பலிகளின்
சித்தத்தின் உறுதியை
அவ்வப்போது சோதித்துக்
கொண்டே ஆடுமவை
பலிகள்
ஒருநொடி
கண்கிறங்கி
உணர்வு மயங்கி
சிரம் சாய்ந்தால்
துள்ளிப் பாய்ந்து
முதற்பலி ஏற்கும்
துடிக்கும் தாளம்
துவளா ஆட்டத்திற்கும்
தடுமாறும் பிரக்ஞை
நிலைதவறும் சித்தத்திற்கும்
இடையில்
காத்திருக்கிறது
இந்த பலிகளம்
அவை ஆடும்
அந்தக் களம் காத்திருக்கும்
சித்தம் சோரும்வரை