எழுத்து

உருமாற்றம்

காலத்துகள்

லிப்டில் ஏறிய ராஜன் மூன்றாம் தளத்திற்கான பொத்தானை இரண்டு முறை அழுத்த, சேருமிடத்தை சுட்டும் இலக்கம் ஒன்பதாக மாறியதை அவன் முதலில் கவனிக்கவில்லை. லிப்ட் வழக்கத்தை விட விரைவாகச் செல்லும், அதே நேரம் தன் தளம் வந்தடையத் தாமதமாவதை உணர்ந்த கணத்தில் அது கண்ணில்பட, தன்னிச்சையாக பின்னால் திரும்பி அங்குள்ள கண்ணாடியில் தன் பிம்பம் முரகாமியுடனும் போர்ஹெஸுடன் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து திகைத்தான்.

கண்ணாடியின் ஓரத்திலிருந்து ‘தலையைச் சீவி விடு’ என்று சினத்துடன் கூவியபடி சீட்டுக் கட்டு ராணியும் , அவரை சமாதானப்படுத்தியபடி ஒரு சீப்பு வாழைப்பழத்துடன் ஒரு சிறுமியும் வர, இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று குழம்பியவனிடம் ‘’நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போக வேண்டும்’ என்று உங்களூர் எழுத்தாளர் சொல்லியிருப்பது உனக்குத் தெரியாதா?” என்று அச்சிறுமி கேட்டாள்.

போர்ஹெஸின் கைகளைப் பற்றியபடி தன் பிம்பமும் முரகாமியும் நடந்து சென்று பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருப்பதை எதுவும் செய்ய முடியாமல் பார்த்துக்கொண்டிருந்த ராஜன், ‘இது கனவு, கனவுதான், கண்ணைத் திறந்தால் சரியாகி விடும்’ என்று முணுமுணுத்தபடி கண்களைத் திறக்க முயல, திடுக்கிட்டு விழித்ததில் கீழே விழுந்துவிட்ட கொர்தஸாரின் சிறுகதைத் தொகுப்பை எடுக்காமல் எழுந்து சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியில் தெரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தான் சேகர்.

உள்ளூரில் ஒற்றன் – தேஜூ கோலின் Every Day is for the Thief சிறுகதை தொகுப்பு

 அஜய் ஆர்

everydayisforthethief-bookcover

And there, behind it, marched so long a file
Of people, I would never have believed
That death could have undone so many souls.

என்ற ‘இன்ஃபெர்னோவின்’ (Inferno) வரிகளை ‘Every Day is for the Thief’ கதைசொல்லி ஒரு திருமண நிகழ்வின்போது நினைவு கூர்கிறார். பல்லாண்டுகளுக்குப் பின் தன் தாய் நாடான நைஜீரியாவிற்கு திரும்பியிருக்கும் அவர் அணிவகுத்துச் செல்லும் வரிசையில் காண்பது, இறந்தவர்களை மட்டுமல்ல, உயிரோடிருந்தும் அவர் நினைவுகளிலிருந்து விலகியவர்களையும்தான். தன் கடந்த காலத்தினூடாக ஒரு பயணமும், தன் நாட்டின் நிகழ்காலத்தினூடாக இன்னொரு பயணமுமாக அவர் விவரிக்கும் – எந்த வெளிப்படையான தொடர்பும் இல்லாத 27 அத்தியாயங்கள் கொண்ட – இந்தச் சிறு நூல் ‘குறுநாவல்’ என்று வகைப்படுத்தப்பட்டாலும், நினைவுக் குறிப்புகளாகவும் பார்க்கப்படும் சாத்தியம் உண்டு . இந்த விதத்தில் அசோகமித்திரனின் ‘ஒற்றனை’ ஒத்திருப்பதோடு, அந்நூல் வாசகனுள் உருவாக்கும் உணர்வையும், எழுப்பும் கேள்வியையும் இங்கும் எழுப்புகிறது. ஒற்றன் எத்தேச்சையாக தோன்றினான் என்று அ.மி சொல்வதற்கு நேர் மாறாக, “I’m very interested in fictional forms that challenge our idea of what fiction is,” …. “I think a lot of people will read Every Day Is for the Thief and feel that it’s nonfiction, but that confusion is intentional,” என்று இந்நூல் குறித்த ஒரு பேட்டியில் கோல் சொல்கிறார்.

சந்தையில் குழந்தையைத் திருட முயன்றதாகக் கூறி, டயரொன்றினுள் திணிக்கப்பட்டு காவல்துறை அதிகாரிகளின் கண்முன் எரித்துக் கொல்லப்படும் 11 வயது சிறுவன், திருட வருவதற்கு சில நாட்களுக்கு முன் அவ்வீட்டின் நாய்களை விஷம் வைத்து கொல்பவர்கள் (உண்மையில் அது திருட்டு நிகழப்போவதற்கான சமிக்ஞையாக புரிந்து கொள்ளப்படுவது நகைமுரண்தான்), தாங்கள் நுழைந்த முதல் வீட்டிலிருந்து ஒருவனை அழைத்துக் கொண்டு, அவன் மூலம் அடுத்த வீட்டிலுள்ளவரை கதவைத் திறக்கச் செய்து அங்கும் கொள்ளையடித்து, பிறகு அவர்களிருவரையும் அழைத்துக் கொண்டு செல்வதும் – அதிகாரத்திற்கு பயந்த காலம் கடந்து போய் சக குடிமகனையே யார் என்ன செய்வார்கள் என்று எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலையின் – மிகைப்படுத்தப்பட்ட உண்மையின் கோர புனைவாக தோன்றும் அதே நேரத்தில், உண்மையில் 11 வயது சிறுவன் எந்த தயக்கமும் இல்லாமல் பல பேர் முன இப்படிக் கொல்லப்படக் கூடுமோ என்ற பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இத்தகைய ஒரு குழு மனப்பான்மையின் தீர்ப்பை Lagos நகரை பின்புலமாக வைத்து புனையப்பட்டுள்ள பென் ஒக்ரியின் (Ben Okri) ‘Stars of the new Curfew’ தொகுப்பில் உள்ள ‘When the lights return’ கதையிலும் காண முடிகிறது. இரு நூல்களிலும் நைஜீரியாவின் நிகழ்கால அவலத்தை காண முடிகிறது என்றாலும், ஒக்ரியின் தொகுப்பைப் போல -கொடுங்கனவுகளால் நிறைக்கப்பட்ட, உண்மையின் சாயல் கொண்ட- புனைவுலகமாக ‘Every day is for the thief’யும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

முதல் பார்வையில், கோபம்/ ஆற்றாமை தவிர்த்த வேறு எந்த உணர்வெழுச்சியும் இல்லாத, அன்றாட நைஜீரிய நாட்களின் துல்லியமான -நூலில் அவர் இணைத்துள்ள கருப்பு வெள்ளை புகைப்படங்களை ஒத்த – சித்திரத்தை நூலெங்கும் அவர் அளிப்பதன் மூலம் புனைவின் சாயலை முடிந்தளவுக்கு குறைப்பது முதல் காரணம். ‘ஒற்றனின்’ காணக்கூடிய புனைவின் அம்சத்தைவிட இதில் குறைவாகவே பார்க்க முடிகிறது என்றே சொல்லலாம். பேருந்தில் பயணிக்கும் கோல், ‘Michael Odjante’ன் நூல் ஒன்றை வாசித்தபடி அதில் ஏறும் பெண்ணின் முகத்தைப் பார்க்க முடியாமல் போனாலும், அந்தப் புள்ளியிலிருந்து, அவள் இப்புத்தகத்தை எங்கு வாங்கி இருக்கக்கூடும், நைஜீரியர்களின் வாசிப்புப் பழக்கங்கள் (அல்லது பழக்கமின்மை) குறித்த சிந்தனைகளுக்குச் செல்கிறார். தன்னையொத்த ரசனை கொண்ட ஒருவரைக் கண்டவுடன் ஏற்படும் இயல்பான ஆர்வத்தில், அவளிடம் பேசுவதற்கான விஷயங்களை, தன்னுள்ளேயே (monologue) பேசிக்கொள்கிறார். 3 பக்கங்களில், நிதானமான நடையை கொண்ட இந்த அத்தியாயம், ஒரு சந்திப்பைப் பற்றிய அனுபவக் குறிப்பாக வாசிக்கப்படவே அதிகம் வாய்ப்புள்ளது.

அருங்காட்சியகத்திற்குச் செல்பவர், அது அரிய கலைப்பொருட்களின் சேகரிப்பாக இல்லாமல், ஏனோ தானோ என்று அரசின் அலட்சியத்தால் உருவாக்கப்பட்டிருப்பதையும், அதன் நீட்சியாக வேலை செய்பவர்களின் அசிரத்தையையும் பதிவு செய்கிறார். அங்கு அவர் கண்டதாக குறிப்பிடும் ஒரு சில விஷயங்கள் புனைவாக, சற்றே மிகைப்படுத்தப்பட்டவையாக – அங்கு வேலை செய்யும் பெண் கோல்லை கண்டு கொள்ளாமல் ஸ்தோத்திர துதியை சொல்லியபடி இருக்கிறார் – இருக்கக்கூடும், ஆனால் அவர் அத்தியாயம் முழுதும் சுட்டும், எந்த கலைப்பிரக்ஞையும் இல்லாத ஒரு சூழல், அதற்கு அபுனைவின் தொனியையே தருகிறது. “Why is history uncontested here? There is no sight of the dispute over words, that battle over versions of stories that marks the creative inner life of a society. Where are the contradictory voices?” என்று வேறொரு இடத்தில் கோல் கேள்வி எழுப்புவதை புனைவின் குரலாக அல்லாமல், நிஜத்தின் ஆற்றாமை நிறைந்த குரலாகவே கேட்க முடிகிறது.

உணர்வுபூர்வமாக அனைத்திலிருந்தும் ஒரு கட்டத்திற்கு மேல் விலகியே இருக்கும், ஆனால் எல்லாவற்றையும் கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கும் ஒருவரின் அவதானிப்புக்கள் எனும் தொனி நூலில் விரவி இருப்பதும் அதற்கு நாட்குறிப்பின் சாயலைத் தருகிறது. விலகியே இருத்தல் என்பதின் நீட்சியாக, நம்பிக்கையின், ஆசுவாசத்தின் சுவடே இல்லாத எதிர்மறை நோக்கு மட்டுமே இந்நூலில் உள்ளது, முதலாம் உலக நாடுகளில் பல்லாண்டுகள் வசித்து தாய் நாடு திரும்புபவர்களிடம் காணக்கூடிய அதே சலிப்பைத்தான் கோலும் வெளிப்படுத்துகிறார் – அமெரிக்காவில் இருந்து புறப்பட நைஜீரிய தூதரகத்தை அணுகும்போது லஞ்சத்தை எதிர்கொண்டு கோல் துணுக்குறுவதை அமெரிக்காவில் லஞ்சமே இல்லையா என்ற கேள்வியோடு எதிர்கொள்ள முடியும்- என்ற மேலெழுந்தவாரியான விமர்சனம் உருவாகுவதும் சாத்தியமே. இந்த விமர்சனம் காத்திரமானதா என்பது ஒருபுறம் இருக்க, வாசகன் மேலோட்டமாக உணரக்கூடிய இத்தகைய கசப்பும்கூட,- புனைவு அளிக்கக்கூடிய முப்பரிமாணச் சித்திரம், பன்முகப் பார்வைகள் – இவை இல்லாத, எதிர்மறை அனுபவங்களின் தொகுப்பாகவே நூலை முன்னிறுத்தக் கூடும்.

வெளிப்படையாகச் சொல்ல முடியாத ஏதோ ஒரு பிணக்கு/ காயம் காரணமாகவே அவர் நாட்டை நீங்கினார் என்பதைச் சுட்டும் சில இடங்கள் நூலில் உள்ளன என்பதால் அவர் வெளியாளாக அனைத்தையும் கவனிப்பது போல் வாசகனுக்குத் தோன்றுவது கோலின் மனநிலை சார்ந்து இயல்பான ஒன்றே. அதே போல் “The house of course is unchanged. Memory and the intervening years many of which I have spent in cramped English flats and American apartments, limitations I have endured like a prince in exile. Now, in the cool interior of this great house in Africa, proper size is restored.” போன்ற வரிகளில் உள்ள வலியையும், அவர் தன்னெஞ்சிலிருந்து நைஜீரியாவை முற்றிலும் அகற்றவில்லை, அகற்றவும் முடியாது என்பதையும் உணர முடியும்.

cole

நூலின் அபுனைவு தோற்றத்திற்கு அங்கங்கு இணைக்கப்பட்டுள்ள கருப்பு வெள்ளை புகைப்படங்களும் வலு சேர்க்கின்றன. இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் தான் ‘Michael Odjante’ஐ படித்துக்கொண்டிருந்தவராகவோ, கீழுள்ள கலங்கிய புகைப்படம், புகைமூட்டமாக உள்ள கோலின் கடந்த காலத்தையும், துலக்கமாக விளங்கிக்கொள்ள முடியாத நைஜீரியாவின் நிகழ் காலத்தையும் சுட்டுவதாகவும் இருக்கலாம். அவ்வப்போது இடையிடும் இத்தகைய புகைப்படங்களை உணர/ புரிந்து கொள்வதற்காக, வாசிப்பை சில கணங்கள் நிறுத்தி விடுகிறோம். கோல் சொல்வது போல் ‘புனைவு’ என்றால் என்ன என்பது குறித்த நம் கருத்தாக்கங்களுக்கு சவால் விடுபவையாக இவை உள்ளன.

cole2

புகைப்பட உத்தியில் மட்டுமின்றி, திடீர் பயணம், அதனூடான அனுபவங்கள், அதன் விளைவான சுயபரிசோதனை செய்யும் தன்னுரைகள் (introspective monologue) போன்றவற்றால் உருவாகும், புனைவா/அபுனைவா என பிரித்தறிய இயலாத நூலின் இறுதி வடிவம், என கோலின் எழுத்தின் கட்டமைப்பிலும், நடையிலும் சீபால்ட்டின் (Sebald) தாக்கத்தை காண முடிகிறது, சீபால்ட் தன்னை பாதித்தவர்களில் ஒருவர் என்று கோலும் சொல்கிறார். குறிப்பாக கோலின் முதல் நூலான ‘Open City’ல் இந்த தாக்கத்தை இன்னும் அதிகமாக உணர முடிகிறது. கோலின் எழுத்தே சீபால்ட்டின் தழுவல் எனவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தக் கட்டுரை இந்நூலின் வகைமை குறித்த சாத்தியக்கூறுகளையே மையமாகக் கொண்டுள்ளதால் இந்நூல் பற்றிய விரிவான பார்வையையும் (உண்மையில் அவர் நூல் முழுதும் எதிர்மறை உணர்வோடு , கசப்பை சுமந்தலைபவரா, நூல் ஒற்றைத்தன்மை கொண்டதா போன்ற கேள்விகள்), சீபால்ட்/ கோல் இடையேயான ஒப்புமை/ வேற்றுமையையும் பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.

மனச் சோர்வடையச் செய்யும் பெரும்பாலான அனுபவங்களுக்கிடையில், இசை/நாடகத்திற்காக இயங்கும் ஒரு தனியார் சங்கம்(பணக்காரர்களே சேரக்கூடியதாக அச்சங்கம் இருப்பதில் உள்ள முரணை கோல் உணர்ந்தாலும், இப்படியேனும் கலைக்கு வடிகாலாக ஒரு இடமாவது உள்ளதே என்று தன்னை சமாதானப்படுத்திக் கொள்கிறார்), இசைத்தட்டுக்களை நேரடியாக விற்பனை செய்யாமல் அவற்றை பிரதி எடுத்து விற்கும் கடைக்கு மாற்றாக, சட்டபூர்வமாக இசைத்தட்டுக்களை, இலக்கிய நூல்களை விற்பனை செய்யும், இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் கடை போன்ற ஒரு சில விஷயங்களைப் பார்க்கும் போது “The most convincing signs of life I see in Nigeria connected to the practice of the arts” என்று நூலின் ஒரு அத்தியாயத்தில் கோல் உணர்கிறார். அதையே இறுதியில் இந்த நூல் குறித்து நாமும் உணர முடிகிறது. எரிமலையென கொதித்துருகிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் புறச் சித்திரத்தோடு, எரிகுழம்பென அனைத்தையும் எரித்துக்கொண்டிருக்கும் சமூக பொருளாதாரச் சூழலுடனேயான பயணங்களின் மூலம் உருவாகும் அகச் சித்திரத்தையும் உயிர்ப்புடன் தீட்டியுள்ள கோலின் கலை புனைவா/அபுனைவா என்ற கேள்வியை ஒரு கட்டத்தில் தேவையற்றதாக்கி (moot point) விடுவதோடு, புத்தாயிரத்தின் புதுக்குரல்களில் குறிப்பிடத்தக்கவராக அவரை முன்னிறுத்துகிறது.

சதிக் ரீ

தி வேல்முருகன்

அந்த மிகப்பெரிய பள்ளத்தில் எச்சரிக்கையை உணர்த்தக் கட்டியிருந்த கொடி தோரணம் போல் காற்றில்  ஆடி படபடத்தது.எனக்கு சமிபத்தில் வாசித்த வடகொரியா பற்றிய செய்தியும் என் நன்பன் ரீயும் ஞாபகம் வந்தனர்.

அன்று கொரியன் ரீ முகத்தில் அன்று சிறிதும் களை இல்லை. குவைத்தின் மே மாத 50 டிகிரி வெயில் அவனது சிவந்த முகத்தை குங்குமச் சிவப்பாக்கி அதன் மேல் புழுதியைப் பூசியிருந்தது.

உலர்ந்து போயிருந்த வாயைத் திறந்து, சதிக் குவைத்தி ஆப்ரேட்டர்  எல்லோருடைய கேட் பாசையும் வாங்கிக கொண்டு, வேலையை நிறுத்திச் சென்று விட்டான், என்ன செய்வது என்று தெரியவில்லை, என்னை போன் செய்து  கூப்பிடுகிறார்கள், நீ கொஞ்சம் வர முடியுமா, நாம் போய்  பார்த்து விட்டு வரலாம், இன்று வேலை நடக்கவில்லை என்றால் மதியம் திட்டமிட்டபடி  காங்கீரிட் போடமுடியாது, என்று அவன் சொன்னதும் எனக்கு காச்மூச் என்று தேவையில்லாமல் கத்தும் கிளையன்ட் குவைத்தியின் ஞாபகம்தான் வந்தது

“ஏன் இப்பதானே அங்கிருந்து வந்தோம், என்ன  பிரச்சினையாம் கொஞ்சம் கேளு, நான்
மேனேஐரிடம் சொல்லிட்டு வரேன்,” என்றபோது எனக்கும் சூப்பர்வைசரிடமிருந்து போன் வந்தது.

“கொரியன்கள் இருவர் வேலை  செய்யும்போது சண்டை போட்டுக் கொண்டதால் கேட்பாஸ் எல்லாம் வாங்கிக் கொண்டு வேலையை நிறுத்தி விட்டார்கள். அவர்கள் பர்மிட்டில்  கையெழுத்து போட்டிருக்கும் உங்களை உடனே வரச் சொல்றான், சீக்கிரம் வாங்க,” என்றதும் எனக்கும் கவலை வந்து விட்டது

கொரியனை ஏற்றிக்கொண்டு வண்டியை எடுத்தேன்.

காலை மணி 6:10க்கு  ஸ்டார்ட் செய்த வண்டி. சாஐியை கொண்டு வந்து யார்டில் விட்டு, வேறு வண்டியில் சென்று வேலை செய்ய பர்மிட் எடுக்க GC 10 க்குச் போக சொல்லி விட்டு நான் சென்று GC 5 க்கு வேலைக்கு பர்மிட் எடுத்து சூப்பர்வைசரிடம் கொடுத்து வேலையை சொல்லி விட்டு திரும்ப சைட்டாபிஸ் யார்டு அப்போதுதான் வந்திருந்தேன்.

திரும்ப அவ்வளவு தூரம் போக வேண்டும். என்னதான் வண்டியில் சென்றாலும் வெட்டியாக அலைவதற்கு மனம் சோர்ந்தது அதுவும் மதியம் மீட்டிங் வேறு இருக்கிறது.
கிளையண்ட் ஒரு வெறிநாய் மாதிரி. அவன் முகத்தைக் கொண்டு ஒரு தீர்மானத்துக்கும் வரமுடியாது

வகை தொகையில்லாமல் பொறியில் மாட்டியது போல் இருந்தது இந்த கம்பேனிக்கு வந்ததிலிருந்து ஒன்றும் சரியில்லை. வெறும் வாய்ஐாலத்தை நம்பி இன்டர்வியூ சென்ற அன்று    பாவப்பட்ட உன்னி சொன்னான், “அண்ணாச்சி, என்கிட்ட எந்த டிகிரியும் டிப்ளாமாவும் இல்ல. எல்லா வேலையும் மனசு கொண்டு படிச்சதாக்கும் நீங்க ஒத்துக்கிட்டு வாங்க நான் கூட இருக்கேன். பிடிக்கலனா வேற வேல தேடலாம் தெய்வம் ஒன்னு இருக்குல்ல,” என்று.

தெய்வம் இருக்குதான் ஆனால் அது இல்லாதவர்களைத்தான் அதிகம் சோதிக்கிறது.. மேனேஐர் என்ன நினைத்து இந்த கம்பெனிக்கு வந்தாரோ, அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் தந்திரமாக வேலை வாங்கி விடுவார். அவர், “ என்ன செய்யறிங்க?, சும்மா கில்லி மாதிரி இருக்கனும் அந்த வேலை என்ன ஆச்சு? நான் சொன்ன வேலைய பாத்திங்களா? இப்ப இந்த வேலையும் அதோடு சேர்ந்து முடிங்க, ம்ம்… போங்க போங்க…” என்று சொல்லிக்கொண்டே போவதைக் கேட்கும் நபர் மகுடியை பார்த்தாடும் பாம்பு போல் சொல்ல வந்ததையும் கேட்க வந்ததையும் மறந்து உடன் கிளம்பி விடுவார்..

ஆனால் அவரது செயல்பாடுகள் மேலும் மேலும் அவருக்கு துன்பத்தையே அளித்தன. எங்களிடம் சொன்னது எதையும் அவரால் செய்ய  இயலவில்லை. கம்பெனிக்கு புதிய ஆட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஆகி மொத்த சிவில் கட்டுமான வேலைகளையும் வெளி கம்பெனி ஆட்களை கொண்டுதான் செய்ய வேண்டும் என்று முடிவாகி விட்டது

அப்படி வந்தவர்கள்தான் வடகொரியர்களும் பலுசிஸ்தான்காரர்களும். சாஐிக்கு இந்தி சரளமாக வரும். அவன் நல்ல உயரமும் கூட அதனால் அவனிடம் பலுசிஸ்தானிகளைப் பார்த்துக் கொள்ளச் சொன்னேன். .பிளான்ட் ஏரியாவில் கையால்தான் மண்ணை வெட்டி அள்ள வேண்டும். சவுல் கொண்டு பலுசிஸ்தானிகள் அள்ளி எரியும் வேகம் இயந்திரங்களுக்கு இணையாக இருக்கும். எனக்கு அரபி மற்றும் இந்தி ஒரளவு தெரியும் அதை வைத்துக் கொண்டு மேனேஜர் சொல்லும் வேலைக்கேற்ப்ப கில்லியாட்டம் ஆடிக் கொண்டிருந்தேன்..

சிந்தனை பலவிதமாக ஒடி கொண்டிருப்பதைக் கலைத்து, ரீயின் முகத்தைப் பார்த்தேன். அவரது 50 வயதுக்குரிய தோற்றம் கவலையில் பொலிவிழந்து வாடியிருந்தது. ஐந்தரை அடி உயரமும் விசாலமான  அறிவின் வெளிப்பாடான நெற்றியும் முடி அடர்ந்த புருவமும் அதன் இறக்கத்தில் நாலு கோடுகளும் மேலும் தட்டையான அந்த முகத்தில் ஒரு கோடு போட்டாற்போன்ற வாயும் அதற்க்கேற்ப மூக்கும் அமைந்து வயது தெரியா உழைப்பினால் இளமையாகத் தெரிந்தார்.

வாரத்தில் முதல் நாள் சனிக்கிழமை மாத்திரம் பளிச்சென்று வருவார்கள் பிறகு அப்படியே வேர்வையோடு குளிக்காமல்  வருவார்கள் சாஐியும் டிரைவரும் இவர்களை அருகே அமர விடமாட்டார்கள் நான் அப்படி எதுவும் செய்வது இல்லை அவர்களுக்கு என்ன
தண்ணீர் கஷ்டமோ என்று விட்டுவிடுவேன். அதுவும் ரீ அருகே அமரும்போது ஊற வைத்த ரேஷன் அரிசி வாடைதான் வரும்.  பழகிவிட்டது. வண்டி முழுவதும் அந்த ஊறல் வாடைதான்

வண்டி மெயின் ரோடிலிருந்து இறங்கி GC 5வை நோக்கிச் சென்று கொண்டு இருந்தது
ரீயிடமிருந்து, “சதிக்”, என்று சத்தம்

“என்ன?” என்றேன்.

வலதுபுறம் ரோட்டோரம் இருந்த எண்ணெய்க் கிணற்றை நோக்கி கை காட்டினார்.

அத்திசையை நோக்கினேன் கருநீல கலரில், முழுவதும் கவராலால் மறைக்கப்பட்ட, தாடி
வைத்த உருவம். தலையில் சிவப்பு கலரில்  ஹெல்மெட் அணிந்திருந்தவர், இரண்டு கைகளையும் ஆட்டி எங்களைக் கூப்பிட்டார்.

சாலையை திரும்பிப் பார்த்துவிட்டு வண்டியை  எண்ணெய் கிணற்றை நோக்கித் திருப்பி சற்று  பாதுகாப்பான தூரத்திலேயே நிறுத்திவிட்டு  ஹெல்மெட்டும் கையுறையும் அணிந்து கொண்டு அவரிடம் சென்றோம்.

எங்களை நோக்கி சைகையால்  எண்ணெய் கிணற்றில் இருந்து வந்த ஆயில் லைனின் கன்ட்ரோல் வால்வு வீலைச் சுற்றி மூடச் சொன்னார். கிராஸ் மறை ஏறியிருந்ததால் அதைச் செய்வது எளிதாக இல்லை. ரீ சீராக முன்னும் பின்னுமாக ஆட்டிச் சுற்றியபோது எளிதாக வந்து விட்டது.

ரீ என்னிடம் ஆயில் கிணற்றைக் காட்டி, “அது என்ன? அந்த லைன் எங்கு செல்கிறது?” என்று கேட்டபோது நான் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு ரீயின் அந்தச் சின்னக் கண்களைப் பார்த்ததும் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“ரீ, இது ஆயில் கிணறு நாம் செல்கிறோம் அல்லவா, அந்த இடம் குவைத்தின் மிகச்
செறிவான எண்ணெய் வளப்பகுதி ஒவ்வொரு 200 மீட்டருக்கும் இது போல் கிணறுகள் இருக்கு பாரு. நீ இப்போது திருகினாயே அது கிணற்றிலிருந்து வரும் எண்ணெய் லைன்தான்.  இது நேராக GC க்கு போகும். அங்கு குருடாயில், கேஸ் மற்றும் தண்ணீர் தனியாக பிரித்து டேங்க் பார்ம் அனுப்பி விடுவார்கள்.. அங்கிருந்து ஏற்றுமதியாகும்”

‘ம்ம்… நிறைய பணம்,” என்றார் ரீ. பிறகு, “சதிக் நீ எப்படியாவது பேசி கேட் பாஸை வாங்கி விடு,” என்றார்.

நான் மவுனமாக தலையாட்டினேன்.

நேற்றே அந்த பவுன்டேஷன் காங்கீரிட் முடிய வேண்டியது. மொத்தம் மூன்று பவுன்டேஷன்கள் ஒன்று ஒன்றாக மாற்றிபம்ப் வழியாக காங்கீரிட் போட்டுக் கொண்டு இருந்தோம் ரீயின் ஆட்கள்தான் வேலை செய்தனர். ரீ மேற்பார்வையிட்டு வேலை சொல்லி கொண்டு இருந்தார். நான் கிளையண்டுடன் பேசிக் கொண்டு இருந்தேன்

காங்கீரிட் முடிந்து கடைசியில் இருந்த சின்ன ஐாக்கி பம்ப் பவுன்டேஷனில் காங்கீரிட் இட மேல் இருந்த யானையின் துதிக்கைப்போல் தொங்கிய பூம்பிளேசர் பைப்பை இருவர் தள்ளி கொண்டு  வந்திருக்கின்றனர். அப்படி தள்ளும்போது முட்டுச்சட்டங்களில் காங்கீரிட் தொப் தொப் என்று விழுந்ததில் சின்னதாக ஒரு அசைவு. வேறோன்றுமில்லை, காங்கீரிட் முழுவதும் போட்டுவிட்டு வைப்ரெட்டர் போட்டு தளர்த்தி காங்கீரிட்டை இருவரும் நிரவி ஒருவர் மாற்றி ஒருவராக கீழே இறங்கியதும் ஒரு பெருமூச்சு விடுவது போல் ஒரு சத்தம் அவ்வளவுதான் பனியனை மேல்  நோக்கி கழட்டுவது போல் பலகைகள் பெட்டி போல் மேலே தூக்கிக்கொண்டன.

காங்கீரிட் நாலாபுறமும் இளகி தரையில் கொட்டிய எண்ணெய் போல் ஒடுகிறது
நாங்கள் பார்த்துக் கொண்டு இருந்தபோதே நடந்து விட்டது அதுவரை சிரித்துப் பேசிக் கொண்டு இருந்த கிளையன்ட் அவரது நிஐ ஒநாய் முகத்தை காட்டிச் சென்றார்.. நாங்கள் மவுனமாக ஆடுகள் போல் நின்றோம்.

இந்த பிரச்சனைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத ரீ வந்த நாள் அப்போது  ஞாபகம் வந்தது ரீதான் முதலில் பஸ்ஸிலிருந்து இறங்கினார் அவர்கள் மேனேஜர் வந்து அறிமுகப்படு்த்தும்போது, இவர்களை வைத்து எப்படி வேலை செய்யப் போகிறோம், என்று  கவலையாக இருந்தது. ஆனால் ரீ அதற்கு  வாய்ப்பே தரவில்லை. அவரது குழுவினர் அனைவருமே தேர்ந்த வேலைக்காரர்கள் வேலை முடிந்தால் அளவுகள் மிகத் துல்லியமாக இருக்கும் கிளையண்டிடம் அவர்களால் பிரச்சினை இருந்தது இல்லை. கொரியர்களைப் பற்றி. எல்லோரிடமும் பெருமையடித்து கொண்டிருந்தேன்.

முதல் முறையாக பங்கம் வந்து விட்டது.  வருத்தத்தில் இருந்த என்னைத் தட்டி, என்ன,
என்று கேட்பது போல் சைகை செய்தார். ஒன்றும் இல்லை என்று தலையாட்டி விட்டு,
வெளியேறிய காங்கீரிட் எவ்வளவு இருக்கும் என டிராயிங் பார்த்து கால்குலேட்டரில் போட்டுக் கொண்டி.ருந்தேன். என் எதிரே வந்த ரீ உற்றுப் பார்த்துவிட்டு காற்றிலே விரலால் கம்போசர் போல் எழுதி விட்டு கையில குறிப்பது தெரிந்தது.  எனக்கு கால்கேட்டரில் விடை 3.16 என்று இருந்தது. ரீ தன் கையைக் காட்டினார் அதில் 3.16 என்று இருந்தது.

“ரீ, எப்படி எப்படி எனக்கும் சொல்லிக்கொடு”, என்றதும், ரீ அவர்கள் மொழியில் ஏதோ சொன்னார்  அவர் குழுவினர் அனைவரும் சிரித்தார்கள். எனக்கு வருத்தமாக இருந்தது

எல்லோரும் சாப்பிடக் கலைந்தனர். பெரும்பாலும் அரிசி சாதம்தான். தண்ணீரோடு சேர்த்து தர்மோக்கூலரில் வைத்திருந்தனர். வெஞ்சனம் போல் தொட்டுக் கொள்ள அவித்த முட்டை, பச்சை வெங்காயம் மற்றும் தக்காளி அவ்வளவுதான் .எல்லோரும் ஒன்றாகதான் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

நான் வருத்தத்தோடு இருப்பதைப் பார்த்த ரீ, அதிலிருந்து ஒரு முட்டையை உரித்துக் கழுவி  கொண்டு வந்து என்னை எடுத்துக்கொள்ளச் சொன்னார்.  நான், “வேண்டாம் நீ அந்தக் கணக்கைச் சொல்லிக் கொடு அப்பத்தான் சாப்பிடுவேன்,” என்றதும் ரீ, வருத்தத்துடன் கூறினார்,

“எங்கள் மொழியில் உள்ள இந்த கணக்கு போடும் முறையைப் உன்னால் கற்றுக் கொள்ள முடியாது தயவு செய்து புரிந்து கொள். மேலும் நான் உன்னிடம் அதிகம் பேச முடியாது ஏன் என்றால் நான்  கண்காணிக்கும் இவர்கள் என்னையும் கண்காணிக்கின்றனர் .நாங்கள் ராணுவ  பயிற்சி முடித்தவர்கள். ஓரளவு எல்லா வேலையும் கற்றுள்ளோம் என்னை தயவு செய்து வேறு எதுவும் கேட்காதே.. நீ என் சதிக் என்றால் இதைச் சாப்பிடவேண்டும்,”

என்று முட்டையை வைத்து விட்டுச் சென்று விட்டார்.

நான் திரும்பிப் பார்த்தேன். ரீ அவர்களிடம் ஏதோ சொல்லுகிறார் அவர்கள் என்னைப் பார்த்து சிரிக்கின்றனர். நான் முட்டையை அவர்கள் கண் முன்னே தின்றேன்.

வண்டி Gc 5ஐ  நெருங்கியது. ஓரங்கட்டி நிறுத்திவிட்டு ஹெல்மெட் அணிந்து வேலையாட்களைப் பார்க்கச் சென்றோம். நல்ல கடுமையான வெயில் உக்கிரமாக அடித்துக்கொண்டு  இருந்தது ரோட்டில் கானல் தெரிந்தது காற்று சிறிதுகூட இல்லை.. அதற்குள்ளேயே வேர்வை தலையிலும் முதுகிலும் தோன்ற ஆரம்பித்து விட்டது  அங்கிருந்த ஸ்டோரேஐ் டேங்க் ஓரம் அருநிழலில் கால்நீட்டி அமர்ந்து ஆட்கள் ரீயைப் பார்த்ததும் எழுந்து கொண்டனர்.தப்பு பண்ணிய இருவர் மட்டும் கையைக் கொண்டு முக்கோணம் போல் கழுத்தை கட்டிக் கொண்டு நின்றனர்.

ரீ அவர்கள் மொழியில் கிட்டத்தட்ட உருமினார். அவர்கள் பயந்து நடுங்குவதைப் பார்த்தால்  என்னவிதமான தண்டனை தருகிறார் என ஊகிக்க முடியவில்லை. இருவரையும் பார்க்க மிக பரிதாபமாக இருந்தது

நான் அப்போது ரீயைப் பார்த்தேன். மிகுந்த வருத்தத்துடன் கோபமாக தெரிந்ததார்  இன்று இந்த வேலையை முடித்துவிட வேண்டும்  மேலும் கிளையண்ட்டுக்கு கேட்ப்பாஸ் பிரச்சினையும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கவலையாக இருந்தது.

சரி நாம் சென்று ஆப்ரேட்டரிடம் விளக்கம் சொல்லி கேட் பாசை வாங்குவோம் இங்கு நின்று ஆவப்போவது ஒன்றுமில்லை என்று கன்ட்ரோல் பில்டிங் உள் நுழைந்தேன். அங்கு நின்றிருந்த எங்களது சூப்பர்வைசரை வெளியே அனுப்பி விட்டு ஆப்ரேட்டர் ரூம் உள் நுழைந்தேன்.

முழுவதும் குளுகுளு வசதி செய்யப்பட்டு ஜில் என்று காற்று வீசிக்கொண்டு இருந்தது

வயதான ஆப்ரேட்டர் ஒரு நொடி என்னைப் பார்த்துவிட்டு திரும்பி எதிரில் இருந்த கம்ப்யூட்டரில் சீட்டாட்டத்தை தொடர்ந்தார். அவருக்கு எதிரில் அரைவட்ட டேபிளில் வரிசையாக பதிக்கப்பட்டிருந்த மானிட்டரில் கன்ட்ரோல் புரோகிராம் டிஸ்ப்ளே ஆகிக்கொண்டு இருந்தது. அவர் ஸ்பேடு ஆட்டினுக்கு ஐோடியை தேடிக்கொண்டு இருந்தார். மேலும் இரண்டு இளம் ஆப்ரெட்டரும் சற்று தள்ளியிருந்த  கம்யூட்டரில் எதிர் புறம் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு பின்னால் இருந்த மிகப்பெரிய கண்ணாடி சுவரில் GC 5 மொத்தமும் தெரிந்தது.

நான் செய்த வணக்கத்திற்கு பதிலோ அல்லது நீ யார் என்றோ கூட கேட்கவில்லை.
நான் அமைதியாக அவர் முகத்தைப் பார்த்து க் கொண்டு நின்றேன் நிமிடங்கள் ஒடிக்
கொண்டு இருந்தன.

“சார் அவர்கள் இது போலெல்லாம் எப்போதும்  நடந்து கொண்டதில்லை இதுதான் முதல் தடவை எங்களுக்கு அந்த வேலையை முடித்துக் காங்கீரிட் இடவேண்டும் இல்லை என்றால் எங்களால் கிளையன்டை சமாளிக்க  முடியாது நீங்கள் கொஞ்சம் பெரிய மனது பண்ணி உதவ வேண்டும்,” என்றதற்கு  அவரிடம் இருந்து எந்த அசைவும் இல்லை.

சரி நாம் மேலும் கெஞ்ச வேண்டும் என எதிர்பார்க்கிறார், என்று நினைத்து திரும்பவும் சொல்ல தொடங்கியதும், “ஸ்டாப் இட்!”  என்று கத்தினார். அவர்  கண்கள் முழுவதும் ஏளனமும் வெறுப்பும் நிறைந்திருந்தது..டீ கொண்டு வந்த பங்காளதேஷி முகம் கலவரத்தைக் காட்டியது.. இளம் ஆப்ரேட்டர் இருவரும் தலையைத் தூக்கிப் பார்த்து  தொடர்ந்தனர்.

உள்ளுணர்வு. “போய் விடு, போ” என்றது. கேட்காத நான் திரும்பவும், “சார்…” என்றேன்.

“கெட் அவுட்!”

“சார்…”

“தர முடியாது நீ போய் உன் கிளையண்ட்டை அழைத்து வா,” என்று என்னைத் தள்ளிக்கொண்டு ரூமுக்கு வெளியில் விட்டு கதவை அறைந்து சாத்தினார். படீர் சத்தத்துடன் கதவு மூடிக்கொண்டது என் முகத்தில் அடித்ததுப்போல் இருந்தது. அதிச்சியாகி இந்த சின்ன பிரச்சினையை இவ்வளவு பெரிதாக ஆக்குறானே,.
கிளையண்ட் குவைத்தி இப்போது எங்கே இருக்கிறானோ சும்மாவே அவன் வெறிநாய் இப்போது என்ன செய்வது தெரியவில்லையே, என்று திரும்பி வெளியில் வந்தேன்.

ரீயும் ஆட்களும் நின்று கொண்டிருந்தனர்.  கேட் பாஸ் கிடைக்கவில்லை என்று உதட்டைப் பிதுக்கியதும் எல்லாருடைய முகமும் வாடியது. .சாப்பாட்டு நேரம் தாண்டிக்
கொண்டிருந்தது. யாருக்கும் சாப்பிடும்  எண்ணம் இல்லாமல் என் முகத்தைப் பார்த்து கொண்டு இருந்தனர். நான், என்ன செய்யலாம், என்று வண்டியை திறந்து மோபைலை எடுத்தேன். வரிசையாக மிஸ்டு கால்கள் கிடந்தன.

பின்னால் ஒரு வண்டி வந்த சத்தம் கேட்டது

ரீ என் முதுகில் தட்டினார்

திரும்பினேன் அப்போது நாங்கள் காலையில்  பார்த்த கன்ட்ரோலர் உள்ளே சென்று கொண்டிருந்தார். எனக்கு குழப்பமாக இருந்தது நான் யோசித்ததைப் பார்த்து ரீ என்னிடம், “நான் கேட்கிறேன் நீ என்னை அழைத்துச் செல் நீ பேச வேண்டாம் நான் பேசுகிறேன்,” என்றார்.

சரி வயதில் மூத்தவர் என்ன நடக்கிறது பார்ப்போம், என்று அழைத்துக்கொண்டு திரும்பவும் உள்ளே சென்று ஆப்ரேட்டரிடம் செல்லாமல் வலதுபுறம் இருந்த கன்ட்ரோலர் ரூம் சென்றென் வாசலில் நின்று ரீ கம்பீரமாக கமாண்டோ போல் வணக்கம் சொன்னார்
என் வணக்கம் எனக்கே கேட்கவில்லை.

திரும்பிய கன்ட்ரோலர் எங்களை அடையாளம் கண்டுகொண்டு உள்ளே அழைத்தார்.

நான் நடந்தவற்றைப் பணிவாக சொன்னேன்.

கன்ட்ரோலர் ஆப்ரேட்டரின் மேல் அதிகாரி ஆதலால் அவரை வரச்சொல்லி இன்டர்காமில்
அழைத்தார்.. என்னை முறைத்துக் கொண்டே உள்நுழைந்த ஆப்ரேட்டர் காதில் அந்த வருடம் புதிதாக வந்த புளூடூத் காதில் கொம்பு முளைத்தது போல் வினோதமாக தெரிந்தது.

யாரிடமோ தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்த அவர், பிறகு பேசுவதாக சொல்லிவிட்டு
கடுமையாக என்னை பார்த்தார். பின்னர், கன்ட்ரோலரிடம் அலட்சியமாக, “இவர்கள் இருவரும் சைட்டில் இல்லை. அங்கு நடந்தது உங்களுக்குத் தெரியாது மறுநாள் காலை போலிசோ அல்லது செக்யூரிட்டியோ வரும்படி ஆயிருக்கும்.  நல்லவேளை நான் பார்த்து தடுத்து விட்டேன்” இவர்களின் மேலதிகாரிகளையும் வரச் சொல்லியிருக்கிறேன். வந்தால் தரலாம், அது வரை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த ரீ பேச ஆரம்பித்தார்.

“சார் வணக்கம்.  என் பேர் ரீ. வட கொரியாவிலிருந்து வேலைக்கு வந்திருக்கிறேன்.. அவர்கள் எல்லாம் எனது ஆட்கள்தான் நான்தான் அவர்களின் லீடர். நீங்கள் சொல்வது போல் அவர்கள் சன்டை எல்லாம் போட்டுக் கொள்ளவில்லை..  தயவு செய்து என் கையைப் பாருங்கள் அவர்களில் வயது குறைந்த அந்தச் சின்னவன்  சட்டங்களை முதுகில் அடுக்கி கொண்டு திரும்பும்போது வயது மூத்தவன் மேல் சட்டம் தட்டியிருக்கிறது. அதனால் அந்த மூத்தவன் சின்னவனை தள்ளியிருக்கிறான். அவர்களுக்குள் எந்த சண்டையுமில்லை நீங்கள்தான் பெரிதாக  நினைத்துக் கொண்டு விட்டீர்கள்”

“ரீ இப்படி கோமாளி போல் அவர்கள் முன்னால் செய்ததால் என் மனம் தவித்து அவமரியாதை செய்வார்களோ என்று அஞ்சியது  நல்ல வேளை, எதுவும் நடக்கவில்லை.. நான் அவர்கள் கண்களைப் பார்த்தேன். இருவர் கண்களும் ரீ  மேல் நிலைகுத்தி இருந்தது.

ரீ தொடர்ந்தார்.

“நான் பொதுமான தன்டனையைச் சொல்லி விட்டேன். இப்போது நீங்கள் கிளையண்ட்டை கூப்பிட்டு வரச் சொல்லியுள்ளீர்கள் அவர் வந்தால் பிரச்சினை இன்னும் பெரிதாகிவிடும். ஏன் என்றால் இந்த காங்கீரிட் நேற்றே முடிய வேண்டியது. துரதிருஷ்டவசமாக அந்த எகிப்திய காங்கீரிட் பூம் பிளேசர் ஆப்ரேட்டர் யானையின் துதிக்கை போல் தொங்கிய அந்த பைப்பை தாங்கு கட்டையில் விழும்படி காங்கீரிட்டை பிடித்து விட்டதால் கட்டைகள் நெகிழ்ந்து இடம் மாறியதால் பலகை திறந்து கொண்டு காங்கீரிட் எல்லாம் வெளியேறி விட்டது அதனால் இதோ நிற்கிறாரே இந்த லீடரும் நானும் எனது ஆட்களும் மேலும் மேலும் தண்டிக்கப்படுகிறோம்.

“நான் இன்று போல் எப்போதும் எனது ஆட்களைப் பேசியது இல்லை. அதுவும் குற்றமிழைக்காத அவர்களுக்கு ஆத்திரத்தில் தண்டனை சொல்லிவிட்ட நான் எப்படி உறங்குவேன் என்று தெரியவில்லை.”

“அப்படி என்ன தண்டனை?” என்று கேட்டார் கன்ட்ரோலர்

சிறிது செருமி ரீ தொண்டையைச் சரி செய்து கொண்டார்.

“சார் நாங்கள் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வரிசையாக ஒவ்வொருவராக காலைக் கடனை முடித்து  6 மணிக்கு பஸ் ஏறி 7 மணிக்கு வந்திறங்கி வே;லை தொடங்குகிறோம் .  தொடர்ந்து வேலைதான் 12 மணிக்குதான் சாப்பாட்டுக்கு கலைவோம் அதுவரை வெறும் தண்ணீர்தான்  பிறகு இரவு சாப்பாடு 9 மணிக்குதான் இடையில் எங்களுக்கு ஒன்றும் கிடையாது.. நான் இன்று இரவு அவர்களுக்கு சாப்பாடு இல்லை என்று சொல்லி விட்டேன்,”  என்று அவர் சொல்லி நிறுத்தியதும் பல நாட்டினரும் வந்து சேவை செய்வதனால் சுல்தானைப்போல் வாழும் இருவரும் அதிர்ந்து பார்த்தனர். இருவருக்கும் முகம் வாடி விட்டது என்ன சொல்வார்களோ என்று நான் அதிர்ச்சியோடு ரீயை பார்த்தேன்

ரீ தொடர்ந்து, “சார் என்னை நம்புங்கள் நாங்கள் பல ஆயிரம் மைல் தூரம் தாண்டி இங்கு வேலை செய்வது எதற்கு தெரியுமா உங்களுக்கு? எங்கள் அரசுதான் எங்களை இங்கு வேலை செய்ய அனுப்பி உள்ளது. நாங்கள்  வேலை செய்வது அரசுக்குதான் செல்லும்
மக்கள் எல்லாருக்கும் கிடைப்பதுதான் எங்களுக்கும் சிறிதும் அதிகம் கிடைக்காது”,, என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.

ஆப்ரேட்டரும் கன்ட்ரோலரும் எழுந்து விட்டனர்,

ரீ, “சதிக்” என்று சின்னதாகப் புன்னகைத்தார்…

சதிக் என்றால் நண்பன்….

 

 

கோஷ இடையீடு

பெருந்தேவி

தோற்றாலும்
முயற்சிப்போம்
மட்டையாகிக்
குப்புற விழும்வரை
மண்ணுக்கு உரமாகட்டும்
நம்
சப்பை மூக்குகள்

 

புனைவும் நிஜமும் – அசோகமித்திரன் படைப்புலகின் நெருங்கிய இரு வடிவங்கள்

 அஜய் ஆர்

நான் அமெரிக்கா பற்றி எழுதுவதாகவே இல்லை. அன்று பயணக்கட்டுரைகள் ஒவ்வொரு பிரபல பத்திரிகையிலும் தொடராக வெளிவந்துகொண்டிருந்தன. புதுடில்லி ஸ்பான் பத்திரிகை என்னை அயோவா குறித்து ஒரு கட்டுரை கேட்டது. நான் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி அனுப்பி வைத்தேன். அதைச் சிறுகதை என்று அப்பத்திரிக்கை வெளியிட்டது. ‘ஒற்றன்!’ பிறந்தான்.
– (ஒற்றன் நூலின் காலச்சுவடு பதிப்பிற்கான அசோகமித்திரனின் முன்னுரையில் இருந்து)

ashokamithiran-04

கல்லூரிக்குச் செல்ல ஹூசேன் சாகர் டாங்க் பண்ட் வழியாகவோ, பப்ளிக் கார்டன்ஸ் வழியாகவோ செல்வது, அந்தப் பாதையில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளம் அதில் குளித்த அனுபவம் என அசோகமித்திரனின் ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்’ துவங்குகிறது. இந்தியா மட்டுமல்ல ஐதராபாத்தும் சுதந்திரம் அடைந்த காலம். கடந்த ஒரு மாதமாகவே வகுப்புக்கள் சரியாக நடக்காதது, தொடர் பிரிவுபசார விழாக்கள் என இதில் விவரிக்கப்படுவதை ‘கதை’ என்று ஏற்றுக்கொள்ள வாசகனுக்கு அதிக சிரமம் இருக்காது. ஆனால் இதை கட்டுரை என்றே அசோகமித்திரன் வரையறுக்கிறார்.

அ.மியின் சிறுகதைத் தொகுதிகளிலும், ‘ஒற்றன்‘ நூலின் ஒரு அத்தியாயமாகவும் சேர்க்கப்பட்டுள்ள ‘அம்மாவின் பொய்கள்‘ ‘கதை’யில், ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்‘ கவிதையின் முதல் பகுதி தாய் தன் சிறு வயது மகனைப் பார்த்து சொல்வதாகவும், பின்னர் அவன் பெரியவனாகிய பின் முழு கவிதையைச் சொல்வது போலவும் நாடகமாக்கப்படுகிறது. அயோவாவில் ‘உறைவிட எழுத்தாளராக’ அசோகமித்திரன் இருந்தபோது நடந்த உண்மைச் சம்பவத்தைப் பற்றிய கட்டுரை என்று முதற் பார்வையில் இதை வரையறுக்க முடியும். அதே நேரம் ஞானக்கூத்தனின் கவிதையை வேறொரு சந்தர்ப்பத்தில் கதைசொல்லி மொழிபெயர்த்து வாசிக்க, அது ‘விக்டோரியா’ என்பவரிடம் கிடைத்து அதை அவர் நாடகத்தில் உபயோகிக்கிறார் என்பதை புனைவின் உத்தியாகப் பார்க்கலாம். ஒற்றன் நூலிலேயே ‘கவிதை வாசிப்பு’ என்ற அத்தியாயத்தில் அசோகமித்திரன் கவிதையை மொழிபெயர்த்து வாசித்தது குறித்து உள்ளது, ஆனால் அதில் கதைசொல்லி வாசிப்பது ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை‘ கவிதையை. இதுவும் இந்த படைப்பிற்கு புனைவின் சாயலையே தருகிறது. இந்த இரண்டு படைப்புக்களையும், யார் எழுதியது என்று சொல்லாமல், கதையா/ கட்டுரையா என்பதை மாற்றிக் குறிப்பிட்டு படிக்கக் கொடுத்தால், பலர் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

அசோகமித்திரனின் படைப்புகளில் இப்படிப்பட்ட மயக்கம் ஏற்படுவதற்கு காரணங்கள் என்னவாக இருக்கும்? கதைக்கென்று ஒரு நடையையும் கட்டுரைக்கென்று இன்னொன்றையும் அ.மி வைத்துக் கொள்வதில்லை. இரண்டிலும், மெல்ல ஒரே சரடாக இணையும் சம்பவங்கள், நுண்ணிய விவரிப்புக்கள், இதழோரச் சிரிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவை என்ற பொதுவான – ஒரே படைப்பில் புனைவாகவும், அபுனைவாகவும் உணரக்கூடிய – தொனி உள்ளது. அசோகமித்திரன் ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே‘ பாடலை ( ‘கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள்‘) பாடிய விதத்தை சொல்லும்போது (‘ஒவ்வொரு சரணத்தையும் வெவ்வேறு கதியில் பாடினோம். பாரதியார் சிறிது சுருக்கமாகவே பள்ளு பாடியிருக்கலாமென்று தோன்றிற்று‘) , அதைப் பாடியது தமிழ் மன்ற விழாவில், சாமி பாட்டு பாட பணிக்கப்பட்டு ‘சகுந்தலை‘ படத்தின் பாடலைப் பாடிய 18வது அட்சக்கோட்டின் சந்திரசேகரனாக இருக்கக் கூடும் என்றே அவரை பின்தொடர்ந்து வரும் வாசகன் எண்ணினால் அதில் பிழையேதும் இருக்க முடியாது.

அதே போல் விழா முடிந்து கதைசொல்லி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தனியாக வீடு திரும்பும்போது அது “இனி கல்லூரி கிடையாது, இனி கல்லூரி கிடையாது’ என சொல்வது போல உணர்ந்து ஆறுதல் கொள்வது புனைவின் உத்தியாகவே உள்ளது. இன்னொரு புறம் வில்லியம் டெல் பிறந்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரின்ஸ்பாலின் மனைவி, அவரின் ‘கலைந்த தலையுடன் போரிலிருந்து திரும்பிய ஜோன் ஆப் ஆர்க்’ போலிருக்கும் மகள் போன்ற விவரிப்புக்கள் புனைவு/அ-புனைவு இரண்டிற்கும் பொருந்துகின்றன. இந்தக் கட்டுரையில் உரையாடல்களே இல்லை என்பதும், இதன் அளவும், இந்தப் படைப்பு கட்டுரை என்ற தரப்பின் வாதத்திற்கு வலு சேர்க்கக் கூடும். கதை என்றால் கண்டிப்பாக உரையாடல் இருக்க வேண்டும் போன்ற அளவுகோலை இங்கு முன்வைக்கவில்லை, ஆனால் ஒரு படைப்பில் உரையாடல்கள் அதிகமிருப்பின் அதை ‘புனைவு’ என்ற கோணத்தில் வாசக மனம் அணுக சாத்தியமுண்டா என்று சந்தேகத்தை இங்கு முன்வைக்கிறேன்.

கதை, கட்டுரை எதுவாக இருந்தாலும் அ.மியின் நுண்ணிய நகைச்சுவையை அனைத்திலும் உணர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். எடுத்துக்கொள்ளும் புகைப்படம் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணில் பட்டவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு நிற்பதில் உள்ள ஹாஸ்யம் கட்டுரை/கதை இரண்டிற்கும் பொருந்துவதாகத் தான் உள்ளது. அம்மாவின் பொய்களில் நாடகம் நடக்கும் போது, அப்போது வாசிக்கப்படும் கவிதையை எழுதியவரிடம் கதைசொல்லி ஒரு கேள்வி கேட்க அவர் “..யமதர்மராஜன் போல் ‘ஆமாம்‘” என்று சொல்வதை நிஜத்திலும் நடந்திருக்கக்கூடியதாய் ஏற்றுக்கொள்வதில் கடினம் ஏதும் இருக்காது. எந்த எழுத்தாளர்தான் தன் படைப்பு அரங்கேற்றப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கும்போது தன் கவனம் குலைக்கப்படுவதை பொறுத்துக் கொள்வார்? இந்தக் கதையில் ஒப்பீட்டளவில் உரையாடல்கள் அதிகம் இருப்பதும் இதை கதையாக உள்வாங்கிக்கொள்ளச் செய்யக் கூடும். கதைசொல்லி வசிக்குமிடத்தில் உள்ள வங்கி மேலாளரின் மூக்கைப் பற்றிய விவரிப்பிலும் , ‘பறவை மனிதன்’ என அவரை கதைசொல்லி அழைப்பதிலும் humorஐ விட comedyஏ சற்று தூக்கலாக தெரிவதால் இந்தப் படைப்பிற்கு புனைவின் சாயல் வருகிறது.

காபி க்ரீம் – கமலதாஸ்‘ என்ற கட்டுரையின் மூன்றில் இரண்டு பகுதி வரை, அசோகமித்திரன் பிராங்க்பர்ட் புத்தகச் சந்தை, அதில் பங்கேற்க  பிராங்க்பர்ட் சென்றது, ஹோட்டலில் தங்கியது என்று கட்டுரையின் வரையறைக்குள் பயணம் செய்து, அ.மி கமலாதாஸ் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய பிரசுர நிறுவனத்தின் உரிமையாளர் மல்ஹோத்ராவும் ஒன்றாக காலையுணவு உண்ட/உண்ண ஆரம்பித்தபோது நடந்த – உதவி செய்யப் போய் மல்ஹோத்ரா மீது அ.மி க்ரீமை கொட்டி விடும் – நிகழ்வுடன், “என்றென்றும் மல்ஹோத்ரா என் நூல்களை வெளியிட மாட்டார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், எனக்குக் கமலாதாஸ் பற்றியும் சந்தேகம் வந்தது. காரணம் அன்று அதிகமாகச் சிரித்தது அவர் தான்” முடிகிறது. இந்த நிகழ்வு நடந்திருக்காது என்பதோ, அப்படியே நடந்திருந்தாலும் கமலாதாஸ் வெடிச் சிரிப்பை உதிர்த்திருக்க மாட்டார் என்றோ சொல்ல முடியாது. புனைவை விட நிஜம் விசித்திரமானது தான் என்றாலும், இந்நிகழ்வில் வாசகன் உணரக் கூடிய slapstick அம்சம், அதை வாசிக்கும் முதற்கணத்தில், கட்டுரை புனைவின் பாதைக்கு தடம் மாறுகிறதோ என்ற சந்தேகத்தை அவனுள் எழுப்பக்கூடும்.

ஒரு ஆக்கம் புனைவா அல்லது அ-புனைவா என்பதைப் பற்றிய உரையாடல் ஒரு கட்டத்திற்கு மேல் வெறும் கல்விசார் பயிற்சியாக (‘academic exercise’) மட்டுமே முடியக் கூடும் என்றாலும், பல பொது அம்சங்களைக் கொண்ட இரு எழுத்து வகைமைகள் எந்த இடத்தில் தமக்குரிய இடத்தை (கதை/கட்டுரை) தேர்வு செய்கின்றன என வாசகன் புரிந்து கொள்ள முயல்வது அவன் வாசிப்பை நுட்பமாக்க உதவக் கூடும். மொத்தமாக பார்க்கும்போது அ.மி எழுதியுள்ள கதைகளை/ கட்டுரைகளை ஒரு முழு வாழ்க்கையின் சிதறல்களாக – வேறு வேறு பெயர்களில் வரும் அவர் பாத்திரங்களையும், நாம் ஒருவருடன் ஒருவரை முடிச்சு போட முடிகிறது – ஒருவர் உணரக் கூடும். அவருடைய கட்டுரைகள் மட்டுமே படித்தவரும், கதைகள் மட்டுமே படித்த இன்னொருவரும் உரையாடினால், ஐதராபாத் இந்தியாவுடன் இணைந்ததைப் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்ள முடிவதோடு, ஹுசேன் சாகர் டாங்க் பண்ட்டையும், லான்சர் பாரகஸையும் எளிதில் அடையாளம் காண முடியும். அ.மியின் மாடு (கோணல் கொம்பு) வளர்ப்பு புராணத்தையும், மாரிஸ், லாரா, டெரின்ஸ், போன்றோரையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். எனவே அ.மியின் படைப்புலகம் குறித்து எந்த தடையும் இன்றி உரையாட முடிவதோடு அதில் ஒரு பொது தளத்தையும் அவர்கள் கண்டடையக் கூடும் என்றே தோன்றுகிறது.

அசோகமித்திரனின் குறும்புனைவுகள் குறித்து- 

ஒளிப்பட உதவி- காலச்சுவடு