சதிக் ரீ

தி வேல்முருகன்

அந்த மிகப்பெரிய பள்ளத்தில் எச்சரிக்கையை உணர்த்தக் கட்டியிருந்த கொடி தோரணம் போல் காற்றில்  ஆடி படபடத்தது.எனக்கு சமிபத்தில் வாசித்த வடகொரியா பற்றிய செய்தியும் என் நன்பன் ரீயும் ஞாபகம் வந்தனர்.

அன்று கொரியன் ரீ முகத்தில் அன்று சிறிதும் களை இல்லை. குவைத்தின் மே மாத 50 டிகிரி வெயில் அவனது சிவந்த முகத்தை குங்குமச் சிவப்பாக்கி அதன் மேல் புழுதியைப் பூசியிருந்தது.

உலர்ந்து போயிருந்த வாயைத் திறந்து, சதிக் குவைத்தி ஆப்ரேட்டர்  எல்லோருடைய கேட் பாசையும் வாங்கிக கொண்டு, வேலையை நிறுத்திச் சென்று விட்டான், என்ன செய்வது என்று தெரியவில்லை, என்னை போன் செய்து  கூப்பிடுகிறார்கள், நீ கொஞ்சம் வர முடியுமா, நாம் போய்  பார்த்து விட்டு வரலாம், இன்று வேலை நடக்கவில்லை என்றால் மதியம் திட்டமிட்டபடி  காங்கீரிட் போடமுடியாது, என்று அவன் சொன்னதும் எனக்கு காச்மூச் என்று தேவையில்லாமல் கத்தும் கிளையன்ட் குவைத்தியின் ஞாபகம்தான் வந்தது

“ஏன் இப்பதானே அங்கிருந்து வந்தோம், என்ன  பிரச்சினையாம் கொஞ்சம் கேளு, நான்
மேனேஐரிடம் சொல்லிட்டு வரேன்,” என்றபோது எனக்கும் சூப்பர்வைசரிடமிருந்து போன் வந்தது.

“கொரியன்கள் இருவர் வேலை  செய்யும்போது சண்டை போட்டுக் கொண்டதால் கேட்பாஸ் எல்லாம் வாங்கிக் கொண்டு வேலையை நிறுத்தி விட்டார்கள். அவர்கள் பர்மிட்டில்  கையெழுத்து போட்டிருக்கும் உங்களை உடனே வரச் சொல்றான், சீக்கிரம் வாங்க,” என்றதும் எனக்கும் கவலை வந்து விட்டது

கொரியனை ஏற்றிக்கொண்டு வண்டியை எடுத்தேன்.

காலை மணி 6:10க்கு  ஸ்டார்ட் செய்த வண்டி. சாஐியை கொண்டு வந்து யார்டில் விட்டு, வேறு வண்டியில் சென்று வேலை செய்ய பர்மிட் எடுக்க GC 10 க்குச் போக சொல்லி விட்டு நான் சென்று GC 5 க்கு வேலைக்கு பர்மிட் எடுத்து சூப்பர்வைசரிடம் கொடுத்து வேலையை சொல்லி விட்டு திரும்ப சைட்டாபிஸ் யார்டு அப்போதுதான் வந்திருந்தேன்.

திரும்ப அவ்வளவு தூரம் போக வேண்டும். என்னதான் வண்டியில் சென்றாலும் வெட்டியாக அலைவதற்கு மனம் சோர்ந்தது அதுவும் மதியம் மீட்டிங் வேறு இருக்கிறது.
கிளையண்ட் ஒரு வெறிநாய் மாதிரி. அவன் முகத்தைக் கொண்டு ஒரு தீர்மானத்துக்கும் வரமுடியாது

வகை தொகையில்லாமல் பொறியில் மாட்டியது போல் இருந்தது இந்த கம்பேனிக்கு வந்ததிலிருந்து ஒன்றும் சரியில்லை. வெறும் வாய்ஐாலத்தை நம்பி இன்டர்வியூ சென்ற அன்று    பாவப்பட்ட உன்னி சொன்னான், “அண்ணாச்சி, என்கிட்ட எந்த டிகிரியும் டிப்ளாமாவும் இல்ல. எல்லா வேலையும் மனசு கொண்டு படிச்சதாக்கும் நீங்க ஒத்துக்கிட்டு வாங்க நான் கூட இருக்கேன். பிடிக்கலனா வேற வேல தேடலாம் தெய்வம் ஒன்னு இருக்குல்ல,” என்று.

தெய்வம் இருக்குதான் ஆனால் அது இல்லாதவர்களைத்தான் அதிகம் சோதிக்கிறது.. மேனேஐர் என்ன நினைத்து இந்த கம்பெனிக்கு வந்தாரோ, அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் தந்திரமாக வேலை வாங்கி விடுவார். அவர், “ என்ன செய்யறிங்க?, சும்மா கில்லி மாதிரி இருக்கனும் அந்த வேலை என்ன ஆச்சு? நான் சொன்ன வேலைய பாத்திங்களா? இப்ப இந்த வேலையும் அதோடு சேர்ந்து முடிங்க, ம்ம்… போங்க போங்க…” என்று சொல்லிக்கொண்டே போவதைக் கேட்கும் நபர் மகுடியை பார்த்தாடும் பாம்பு போல் சொல்ல வந்ததையும் கேட்க வந்ததையும் மறந்து உடன் கிளம்பி விடுவார்..

ஆனால் அவரது செயல்பாடுகள் மேலும் மேலும் அவருக்கு துன்பத்தையே அளித்தன. எங்களிடம் சொன்னது எதையும் அவரால் செய்ய  இயலவில்லை. கம்பெனிக்கு புதிய ஆட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஆகி மொத்த சிவில் கட்டுமான வேலைகளையும் வெளி கம்பெனி ஆட்களை கொண்டுதான் செய்ய வேண்டும் என்று முடிவாகி விட்டது

அப்படி வந்தவர்கள்தான் வடகொரியர்களும் பலுசிஸ்தான்காரர்களும். சாஐிக்கு இந்தி சரளமாக வரும். அவன் நல்ல உயரமும் கூட அதனால் அவனிடம் பலுசிஸ்தானிகளைப் பார்த்துக் கொள்ளச் சொன்னேன். .பிளான்ட் ஏரியாவில் கையால்தான் மண்ணை வெட்டி அள்ள வேண்டும். சவுல் கொண்டு பலுசிஸ்தானிகள் அள்ளி எரியும் வேகம் இயந்திரங்களுக்கு இணையாக இருக்கும். எனக்கு அரபி மற்றும் இந்தி ஒரளவு தெரியும் அதை வைத்துக் கொண்டு மேனேஜர் சொல்லும் வேலைக்கேற்ப்ப கில்லியாட்டம் ஆடிக் கொண்டிருந்தேன்..

சிந்தனை பலவிதமாக ஒடி கொண்டிருப்பதைக் கலைத்து, ரீயின் முகத்தைப் பார்த்தேன். அவரது 50 வயதுக்குரிய தோற்றம் கவலையில் பொலிவிழந்து வாடியிருந்தது. ஐந்தரை அடி உயரமும் விசாலமான  அறிவின் வெளிப்பாடான நெற்றியும் முடி அடர்ந்த புருவமும் அதன் இறக்கத்தில் நாலு கோடுகளும் மேலும் தட்டையான அந்த முகத்தில் ஒரு கோடு போட்டாற்போன்ற வாயும் அதற்க்கேற்ப மூக்கும் அமைந்து வயது தெரியா உழைப்பினால் இளமையாகத் தெரிந்தார்.

வாரத்தில் முதல் நாள் சனிக்கிழமை மாத்திரம் பளிச்சென்று வருவார்கள் பிறகு அப்படியே வேர்வையோடு குளிக்காமல்  வருவார்கள் சாஐியும் டிரைவரும் இவர்களை அருகே அமர விடமாட்டார்கள் நான் அப்படி எதுவும் செய்வது இல்லை அவர்களுக்கு என்ன
தண்ணீர் கஷ்டமோ என்று விட்டுவிடுவேன். அதுவும் ரீ அருகே அமரும்போது ஊற வைத்த ரேஷன் அரிசி வாடைதான் வரும்.  பழகிவிட்டது. வண்டி முழுவதும் அந்த ஊறல் வாடைதான்

வண்டி மெயின் ரோடிலிருந்து இறங்கி GC 5வை நோக்கிச் சென்று கொண்டு இருந்தது
ரீயிடமிருந்து, “சதிக்”, என்று சத்தம்

“என்ன?” என்றேன்.

வலதுபுறம் ரோட்டோரம் இருந்த எண்ணெய்க் கிணற்றை நோக்கி கை காட்டினார்.

அத்திசையை நோக்கினேன் கருநீல கலரில், முழுவதும் கவராலால் மறைக்கப்பட்ட, தாடி
வைத்த உருவம். தலையில் சிவப்பு கலரில்  ஹெல்மெட் அணிந்திருந்தவர், இரண்டு கைகளையும் ஆட்டி எங்களைக் கூப்பிட்டார்.

சாலையை திரும்பிப் பார்த்துவிட்டு வண்டியை  எண்ணெய் கிணற்றை நோக்கித் திருப்பி சற்று  பாதுகாப்பான தூரத்திலேயே நிறுத்திவிட்டு  ஹெல்மெட்டும் கையுறையும் அணிந்து கொண்டு அவரிடம் சென்றோம்.

எங்களை நோக்கி சைகையால்  எண்ணெய் கிணற்றில் இருந்து வந்த ஆயில் லைனின் கன்ட்ரோல் வால்வு வீலைச் சுற்றி மூடச் சொன்னார். கிராஸ் மறை ஏறியிருந்ததால் அதைச் செய்வது எளிதாக இல்லை. ரீ சீராக முன்னும் பின்னுமாக ஆட்டிச் சுற்றியபோது எளிதாக வந்து விட்டது.

ரீ என்னிடம் ஆயில் கிணற்றைக் காட்டி, “அது என்ன? அந்த லைன் எங்கு செல்கிறது?” என்று கேட்டபோது நான் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு ரீயின் அந்தச் சின்னக் கண்களைப் பார்த்ததும் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“ரீ, இது ஆயில் கிணறு நாம் செல்கிறோம் அல்லவா, அந்த இடம் குவைத்தின் மிகச்
செறிவான எண்ணெய் வளப்பகுதி ஒவ்வொரு 200 மீட்டருக்கும் இது போல் கிணறுகள் இருக்கு பாரு. நீ இப்போது திருகினாயே அது கிணற்றிலிருந்து வரும் எண்ணெய் லைன்தான்.  இது நேராக GC க்கு போகும். அங்கு குருடாயில், கேஸ் மற்றும் தண்ணீர் தனியாக பிரித்து டேங்க் பார்ம் அனுப்பி விடுவார்கள்.. அங்கிருந்து ஏற்றுமதியாகும்”

‘ம்ம்… நிறைய பணம்,” என்றார் ரீ. பிறகு, “சதிக் நீ எப்படியாவது பேசி கேட் பாஸை வாங்கி விடு,” என்றார்.

நான் மவுனமாக தலையாட்டினேன்.

நேற்றே அந்த பவுன்டேஷன் காங்கீரிட் முடிய வேண்டியது. மொத்தம் மூன்று பவுன்டேஷன்கள் ஒன்று ஒன்றாக மாற்றிபம்ப் வழியாக காங்கீரிட் போட்டுக் கொண்டு இருந்தோம் ரீயின் ஆட்கள்தான் வேலை செய்தனர். ரீ மேற்பார்வையிட்டு வேலை சொல்லி கொண்டு இருந்தார். நான் கிளையண்டுடன் பேசிக் கொண்டு இருந்தேன்

காங்கீரிட் முடிந்து கடைசியில் இருந்த சின்ன ஐாக்கி பம்ப் பவுன்டேஷனில் காங்கீரிட் இட மேல் இருந்த யானையின் துதிக்கைப்போல் தொங்கிய பூம்பிளேசர் பைப்பை இருவர் தள்ளி கொண்டு  வந்திருக்கின்றனர். அப்படி தள்ளும்போது முட்டுச்சட்டங்களில் காங்கீரிட் தொப் தொப் என்று விழுந்ததில் சின்னதாக ஒரு அசைவு. வேறோன்றுமில்லை, காங்கீரிட் முழுவதும் போட்டுவிட்டு வைப்ரெட்டர் போட்டு தளர்த்தி காங்கீரிட்டை இருவரும் நிரவி ஒருவர் மாற்றி ஒருவராக கீழே இறங்கியதும் ஒரு பெருமூச்சு விடுவது போல் ஒரு சத்தம் அவ்வளவுதான் பனியனை மேல்  நோக்கி கழட்டுவது போல் பலகைகள் பெட்டி போல் மேலே தூக்கிக்கொண்டன.

காங்கீரிட் நாலாபுறமும் இளகி தரையில் கொட்டிய எண்ணெய் போல் ஒடுகிறது
நாங்கள் பார்த்துக் கொண்டு இருந்தபோதே நடந்து விட்டது அதுவரை சிரித்துப் பேசிக் கொண்டு இருந்த கிளையன்ட் அவரது நிஐ ஒநாய் முகத்தை காட்டிச் சென்றார்.. நாங்கள் மவுனமாக ஆடுகள் போல் நின்றோம்.

இந்த பிரச்சனைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத ரீ வந்த நாள் அப்போது  ஞாபகம் வந்தது ரீதான் முதலில் பஸ்ஸிலிருந்து இறங்கினார் அவர்கள் மேனேஜர் வந்து அறிமுகப்படு்த்தும்போது, இவர்களை வைத்து எப்படி வேலை செய்யப் போகிறோம், என்று  கவலையாக இருந்தது. ஆனால் ரீ அதற்கு  வாய்ப்பே தரவில்லை. அவரது குழுவினர் அனைவருமே தேர்ந்த வேலைக்காரர்கள் வேலை முடிந்தால் அளவுகள் மிகத் துல்லியமாக இருக்கும் கிளையண்டிடம் அவர்களால் பிரச்சினை இருந்தது இல்லை. கொரியர்களைப் பற்றி. எல்லோரிடமும் பெருமையடித்து கொண்டிருந்தேன்.

முதல் முறையாக பங்கம் வந்து விட்டது.  வருத்தத்தில் இருந்த என்னைத் தட்டி, என்ன,
என்று கேட்பது போல் சைகை செய்தார். ஒன்றும் இல்லை என்று தலையாட்டி விட்டு,
வெளியேறிய காங்கீரிட் எவ்வளவு இருக்கும் என டிராயிங் பார்த்து கால்குலேட்டரில் போட்டுக் கொண்டி.ருந்தேன். என் எதிரே வந்த ரீ உற்றுப் பார்த்துவிட்டு காற்றிலே விரலால் கம்போசர் போல் எழுதி விட்டு கையில குறிப்பது தெரிந்தது.  எனக்கு கால்கேட்டரில் விடை 3.16 என்று இருந்தது. ரீ தன் கையைக் காட்டினார் அதில் 3.16 என்று இருந்தது.

“ரீ, எப்படி எப்படி எனக்கும் சொல்லிக்கொடு”, என்றதும், ரீ அவர்கள் மொழியில் ஏதோ சொன்னார்  அவர் குழுவினர் அனைவரும் சிரித்தார்கள். எனக்கு வருத்தமாக இருந்தது

எல்லோரும் சாப்பிடக் கலைந்தனர். பெரும்பாலும் அரிசி சாதம்தான். தண்ணீரோடு சேர்த்து தர்மோக்கூலரில் வைத்திருந்தனர். வெஞ்சனம் போல் தொட்டுக் கொள்ள அவித்த முட்டை, பச்சை வெங்காயம் மற்றும் தக்காளி அவ்வளவுதான் .எல்லோரும் ஒன்றாகதான் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

நான் வருத்தத்தோடு இருப்பதைப் பார்த்த ரீ, அதிலிருந்து ஒரு முட்டையை உரித்துக் கழுவி  கொண்டு வந்து என்னை எடுத்துக்கொள்ளச் சொன்னார்.  நான், “வேண்டாம் நீ அந்தக் கணக்கைச் சொல்லிக் கொடு அப்பத்தான் சாப்பிடுவேன்,” என்றதும் ரீ, வருத்தத்துடன் கூறினார்,

“எங்கள் மொழியில் உள்ள இந்த கணக்கு போடும் முறையைப் உன்னால் கற்றுக் கொள்ள முடியாது தயவு செய்து புரிந்து கொள். மேலும் நான் உன்னிடம் அதிகம் பேச முடியாது ஏன் என்றால் நான்  கண்காணிக்கும் இவர்கள் என்னையும் கண்காணிக்கின்றனர் .நாங்கள் ராணுவ  பயிற்சி முடித்தவர்கள். ஓரளவு எல்லா வேலையும் கற்றுள்ளோம் என்னை தயவு செய்து வேறு எதுவும் கேட்காதே.. நீ என் சதிக் என்றால் இதைச் சாப்பிடவேண்டும்,”

என்று முட்டையை வைத்து விட்டுச் சென்று விட்டார்.

நான் திரும்பிப் பார்த்தேன். ரீ அவர்களிடம் ஏதோ சொல்லுகிறார் அவர்கள் என்னைப் பார்த்து சிரிக்கின்றனர். நான் முட்டையை அவர்கள் கண் முன்னே தின்றேன்.

வண்டி Gc 5ஐ  நெருங்கியது. ஓரங்கட்டி நிறுத்திவிட்டு ஹெல்மெட் அணிந்து வேலையாட்களைப் பார்க்கச் சென்றோம். நல்ல கடுமையான வெயில் உக்கிரமாக அடித்துக்கொண்டு  இருந்தது ரோட்டில் கானல் தெரிந்தது காற்று சிறிதுகூட இல்லை.. அதற்குள்ளேயே வேர்வை தலையிலும் முதுகிலும் தோன்ற ஆரம்பித்து விட்டது  அங்கிருந்த ஸ்டோரேஐ் டேங்க் ஓரம் அருநிழலில் கால்நீட்டி அமர்ந்து ஆட்கள் ரீயைப் பார்த்ததும் எழுந்து கொண்டனர்.தப்பு பண்ணிய இருவர் மட்டும் கையைக் கொண்டு முக்கோணம் போல் கழுத்தை கட்டிக் கொண்டு நின்றனர்.

ரீ அவர்கள் மொழியில் கிட்டத்தட்ட உருமினார். அவர்கள் பயந்து நடுங்குவதைப் பார்த்தால்  என்னவிதமான தண்டனை தருகிறார் என ஊகிக்க முடியவில்லை. இருவரையும் பார்க்க மிக பரிதாபமாக இருந்தது

நான் அப்போது ரீயைப் பார்த்தேன். மிகுந்த வருத்தத்துடன் கோபமாக தெரிந்ததார்  இன்று இந்த வேலையை முடித்துவிட வேண்டும்  மேலும் கிளையண்ட்டுக்கு கேட்ப்பாஸ் பிரச்சினையும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கவலையாக இருந்தது.

சரி நாம் சென்று ஆப்ரேட்டரிடம் விளக்கம் சொல்லி கேட் பாசை வாங்குவோம் இங்கு நின்று ஆவப்போவது ஒன்றுமில்லை என்று கன்ட்ரோல் பில்டிங் உள் நுழைந்தேன். அங்கு நின்றிருந்த எங்களது சூப்பர்வைசரை வெளியே அனுப்பி விட்டு ஆப்ரேட்டர் ரூம் உள் நுழைந்தேன்.

முழுவதும் குளுகுளு வசதி செய்யப்பட்டு ஜில் என்று காற்று வீசிக்கொண்டு இருந்தது

வயதான ஆப்ரேட்டர் ஒரு நொடி என்னைப் பார்த்துவிட்டு திரும்பி எதிரில் இருந்த கம்ப்யூட்டரில் சீட்டாட்டத்தை தொடர்ந்தார். அவருக்கு எதிரில் அரைவட்ட டேபிளில் வரிசையாக பதிக்கப்பட்டிருந்த மானிட்டரில் கன்ட்ரோல் புரோகிராம் டிஸ்ப்ளே ஆகிக்கொண்டு இருந்தது. அவர் ஸ்பேடு ஆட்டினுக்கு ஐோடியை தேடிக்கொண்டு இருந்தார். மேலும் இரண்டு இளம் ஆப்ரெட்டரும் சற்று தள்ளியிருந்த  கம்யூட்டரில் எதிர் புறம் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு பின்னால் இருந்த மிகப்பெரிய கண்ணாடி சுவரில் GC 5 மொத்தமும் தெரிந்தது.

நான் செய்த வணக்கத்திற்கு பதிலோ அல்லது நீ யார் என்றோ கூட கேட்கவில்லை.
நான் அமைதியாக அவர் முகத்தைப் பார்த்து க் கொண்டு நின்றேன் நிமிடங்கள் ஒடிக்
கொண்டு இருந்தன.

“சார் அவர்கள் இது போலெல்லாம் எப்போதும்  நடந்து கொண்டதில்லை இதுதான் முதல் தடவை எங்களுக்கு அந்த வேலையை முடித்துக் காங்கீரிட் இடவேண்டும் இல்லை என்றால் எங்களால் கிளையன்டை சமாளிக்க  முடியாது நீங்கள் கொஞ்சம் பெரிய மனது பண்ணி உதவ வேண்டும்,” என்றதற்கு  அவரிடம் இருந்து எந்த அசைவும் இல்லை.

சரி நாம் மேலும் கெஞ்ச வேண்டும் என எதிர்பார்க்கிறார், என்று நினைத்து திரும்பவும் சொல்ல தொடங்கியதும், “ஸ்டாப் இட்!”  என்று கத்தினார். அவர்  கண்கள் முழுவதும் ஏளனமும் வெறுப்பும் நிறைந்திருந்தது..டீ கொண்டு வந்த பங்காளதேஷி முகம் கலவரத்தைக் காட்டியது.. இளம் ஆப்ரேட்டர் இருவரும் தலையைத் தூக்கிப் பார்த்து  தொடர்ந்தனர்.

உள்ளுணர்வு. “போய் விடு, போ” என்றது. கேட்காத நான் திரும்பவும், “சார்…” என்றேன்.

“கெட் அவுட்!”

“சார்…”

“தர முடியாது நீ போய் உன் கிளையண்ட்டை அழைத்து வா,” என்று என்னைத் தள்ளிக்கொண்டு ரூமுக்கு வெளியில் விட்டு கதவை அறைந்து சாத்தினார். படீர் சத்தத்துடன் கதவு மூடிக்கொண்டது என் முகத்தில் அடித்ததுப்போல் இருந்தது. அதிச்சியாகி இந்த சின்ன பிரச்சினையை இவ்வளவு பெரிதாக ஆக்குறானே,.
கிளையண்ட் குவைத்தி இப்போது எங்கே இருக்கிறானோ சும்மாவே அவன் வெறிநாய் இப்போது என்ன செய்வது தெரியவில்லையே, என்று திரும்பி வெளியில் வந்தேன்.

ரீயும் ஆட்களும் நின்று கொண்டிருந்தனர்.  கேட் பாஸ் கிடைக்கவில்லை என்று உதட்டைப் பிதுக்கியதும் எல்லாருடைய முகமும் வாடியது. .சாப்பாட்டு நேரம் தாண்டிக்
கொண்டிருந்தது. யாருக்கும் சாப்பிடும்  எண்ணம் இல்லாமல் என் முகத்தைப் பார்த்து கொண்டு இருந்தனர். நான், என்ன செய்யலாம், என்று வண்டியை திறந்து மோபைலை எடுத்தேன். வரிசையாக மிஸ்டு கால்கள் கிடந்தன.

பின்னால் ஒரு வண்டி வந்த சத்தம் கேட்டது

ரீ என் முதுகில் தட்டினார்

திரும்பினேன் அப்போது நாங்கள் காலையில்  பார்த்த கன்ட்ரோலர் உள்ளே சென்று கொண்டிருந்தார். எனக்கு குழப்பமாக இருந்தது நான் யோசித்ததைப் பார்த்து ரீ என்னிடம், “நான் கேட்கிறேன் நீ என்னை அழைத்துச் செல் நீ பேச வேண்டாம் நான் பேசுகிறேன்,” என்றார்.

சரி வயதில் மூத்தவர் என்ன நடக்கிறது பார்ப்போம், என்று அழைத்துக்கொண்டு திரும்பவும் உள்ளே சென்று ஆப்ரேட்டரிடம் செல்லாமல் வலதுபுறம் இருந்த கன்ட்ரோலர் ரூம் சென்றென் வாசலில் நின்று ரீ கம்பீரமாக கமாண்டோ போல் வணக்கம் சொன்னார்
என் வணக்கம் எனக்கே கேட்கவில்லை.

திரும்பிய கன்ட்ரோலர் எங்களை அடையாளம் கண்டுகொண்டு உள்ளே அழைத்தார்.

நான் நடந்தவற்றைப் பணிவாக சொன்னேன்.

கன்ட்ரோலர் ஆப்ரேட்டரின் மேல் அதிகாரி ஆதலால் அவரை வரச்சொல்லி இன்டர்காமில்
அழைத்தார்.. என்னை முறைத்துக் கொண்டே உள்நுழைந்த ஆப்ரேட்டர் காதில் அந்த வருடம் புதிதாக வந்த புளூடூத் காதில் கொம்பு முளைத்தது போல் வினோதமாக தெரிந்தது.

யாரிடமோ தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்த அவர், பிறகு பேசுவதாக சொல்லிவிட்டு
கடுமையாக என்னை பார்த்தார். பின்னர், கன்ட்ரோலரிடம் அலட்சியமாக, “இவர்கள் இருவரும் சைட்டில் இல்லை. அங்கு நடந்தது உங்களுக்குத் தெரியாது மறுநாள் காலை போலிசோ அல்லது செக்யூரிட்டியோ வரும்படி ஆயிருக்கும்.  நல்லவேளை நான் பார்த்து தடுத்து விட்டேன்” இவர்களின் மேலதிகாரிகளையும் வரச் சொல்லியிருக்கிறேன். வந்தால் தரலாம், அது வரை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த ரீ பேச ஆரம்பித்தார்.

“சார் வணக்கம்.  என் பேர் ரீ. வட கொரியாவிலிருந்து வேலைக்கு வந்திருக்கிறேன்.. அவர்கள் எல்லாம் எனது ஆட்கள்தான் நான்தான் அவர்களின் லீடர். நீங்கள் சொல்வது போல் அவர்கள் சன்டை எல்லாம் போட்டுக் கொள்ளவில்லை..  தயவு செய்து என் கையைப் பாருங்கள் அவர்களில் வயது குறைந்த அந்தச் சின்னவன்  சட்டங்களை முதுகில் அடுக்கி கொண்டு திரும்பும்போது வயது மூத்தவன் மேல் சட்டம் தட்டியிருக்கிறது. அதனால் அந்த மூத்தவன் சின்னவனை தள்ளியிருக்கிறான். அவர்களுக்குள் எந்த சண்டையுமில்லை நீங்கள்தான் பெரிதாக  நினைத்துக் கொண்டு விட்டீர்கள்”

“ரீ இப்படி கோமாளி போல் அவர்கள் முன்னால் செய்ததால் என் மனம் தவித்து அவமரியாதை செய்வார்களோ என்று அஞ்சியது  நல்ல வேளை, எதுவும் நடக்கவில்லை.. நான் அவர்கள் கண்களைப் பார்த்தேன். இருவர் கண்களும் ரீ  மேல் நிலைகுத்தி இருந்தது.

ரீ தொடர்ந்தார்.

“நான் பொதுமான தன்டனையைச் சொல்லி விட்டேன். இப்போது நீங்கள் கிளையண்ட்டை கூப்பிட்டு வரச் சொல்லியுள்ளீர்கள் அவர் வந்தால் பிரச்சினை இன்னும் பெரிதாகிவிடும். ஏன் என்றால் இந்த காங்கீரிட் நேற்றே முடிய வேண்டியது. துரதிருஷ்டவசமாக அந்த எகிப்திய காங்கீரிட் பூம் பிளேசர் ஆப்ரேட்டர் யானையின் துதிக்கை போல் தொங்கிய அந்த பைப்பை தாங்கு கட்டையில் விழும்படி காங்கீரிட்டை பிடித்து விட்டதால் கட்டைகள் நெகிழ்ந்து இடம் மாறியதால் பலகை திறந்து கொண்டு காங்கீரிட் எல்லாம் வெளியேறி விட்டது அதனால் இதோ நிற்கிறாரே இந்த லீடரும் நானும் எனது ஆட்களும் மேலும் மேலும் தண்டிக்கப்படுகிறோம்.

“நான் இன்று போல் எப்போதும் எனது ஆட்களைப் பேசியது இல்லை. அதுவும் குற்றமிழைக்காத அவர்களுக்கு ஆத்திரத்தில் தண்டனை சொல்லிவிட்ட நான் எப்படி உறங்குவேன் என்று தெரியவில்லை.”

“அப்படி என்ன தண்டனை?” என்று கேட்டார் கன்ட்ரோலர்

சிறிது செருமி ரீ தொண்டையைச் சரி செய்து கொண்டார்.

“சார் நாங்கள் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வரிசையாக ஒவ்வொருவராக காலைக் கடனை முடித்து  6 மணிக்கு பஸ் ஏறி 7 மணிக்கு வந்திறங்கி வே;லை தொடங்குகிறோம் .  தொடர்ந்து வேலைதான் 12 மணிக்குதான் சாப்பாட்டுக்கு கலைவோம் அதுவரை வெறும் தண்ணீர்தான்  பிறகு இரவு சாப்பாடு 9 மணிக்குதான் இடையில் எங்களுக்கு ஒன்றும் கிடையாது.. நான் இன்று இரவு அவர்களுக்கு சாப்பாடு இல்லை என்று சொல்லி விட்டேன்,”  என்று அவர் சொல்லி நிறுத்தியதும் பல நாட்டினரும் வந்து சேவை செய்வதனால் சுல்தானைப்போல் வாழும் இருவரும் அதிர்ந்து பார்த்தனர். இருவருக்கும் முகம் வாடி விட்டது என்ன சொல்வார்களோ என்று நான் அதிர்ச்சியோடு ரீயை பார்த்தேன்

ரீ தொடர்ந்து, “சார் என்னை நம்புங்கள் நாங்கள் பல ஆயிரம் மைல் தூரம் தாண்டி இங்கு வேலை செய்வது எதற்கு தெரியுமா உங்களுக்கு? எங்கள் அரசுதான் எங்களை இங்கு வேலை செய்ய அனுப்பி உள்ளது. நாங்கள்  வேலை செய்வது அரசுக்குதான் செல்லும்
மக்கள் எல்லாருக்கும் கிடைப்பதுதான் எங்களுக்கும் சிறிதும் அதிகம் கிடைக்காது”,, என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.

ஆப்ரேட்டரும் கன்ட்ரோலரும் எழுந்து விட்டனர்,

ரீ, “சதிக்” என்று சின்னதாகப் புன்னகைத்தார்…

சதிக் என்றால் நண்பன்….

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.