எதற்காக எழுதுகிறேன்? – சத்யானந்தன்

சத்யானந்தன்

sathyanandhan

பகுதி ஒன்று – கேள்வியைப் புரிந்து கொள்ளுதல்

ஏன் எழுதுகிறேன் என்று பதாகை கேட்டிருந்தால் அவர்கள் எதிர்பார்க்கும் பதில் என்னை எழுத உந்துவது எது மற்றும் என் சிந்தனையின் தொடர் பயணம் எப்படிப்பட்டது என்பதைப் பற்றி கேட்கிறார்கள் என்று பொருள். ஆனால் எதற்காக எழுதுகிறேன் என்பதே கேள்வி. எதற்காக? எந்தக் குறிக்கோளுடன் அல்லது நோக்கத்தோடு என்பதான கேள்வி அது.

பதிலைத் துவங்கும் முன் எழுத்தாளர்கள் நோக்கத்தோடு குறிப்பிட்ட ஓர் இலக்கோடு எழுதுகிறார்கள் என்று நாம் பொதுவாகக் கூற முடியுமா என்ற கேள்வியை எடுத்துக் கொள்வோம். ஒரு நோக்கத்தைக் கற்பித்து ஒரு பதிப்பாசிரியர் என் மனதைப் புண்படுத்தினார். அதை முதலில் பார்ப்போம்.

அவரது நூல் வெளியீட்டு விழாவில் நான் நூலின் மதிப்பு கருதி அதன் செறிவு கருதி பேசுவதற்காகப் போயிருந்தேன். மற்றொரு பேச்சாளர் வந்தவுடன் நமது பதிப்பாசிரியருக்கு உற்சாகம் அதிகமாகியது. மடை திறந்த வெள்ளமாகத் தாறுமாறாகப் பேசிக் கொண்டே போனவர், “எழுத்தாளர்கள் தன்னை (பிறர் பார்வையில்) மேம்படுத்திக் கொள்வதற்காக எழுதி செலவு செய்து வெளியிடுகிறார்கள்,” என்று ஒரு போடு போட்டார்.

புகழ் பெறுவது தன்னை புத்திசாலியாக, சிந்தனையாளனாகக் காட்டிக் கொள்வது இதற்கெல்லாம் அரசியல் அல்லது சினிமா போன்றவை நிச்சயம் மிகுந்த துறைகள். இன்று கவிஞன் என்று தமிழ்நாட்டில் ஒருவர் அறியப் பட வேண்டுமென்றால் அவர் சினிமாப்பாடல் எழுதியிருக்க வேண்டும். மேடைப் பேச்சு அரசியலில் முக்கியத்துவம் இவற்றால் தனது சிந்தனையை வியாபாரப் பொருளாக்கி நிறைய தூரம் போக முடியும்.

நம்முடைய எழுத்தாளர்களும் புத்தகம் கவனம் பெற விழாக்கள் பெரிய அளவில் நடத்துவது என்று களம் இறங்கி விட்டார்கள். மறுபடி கேள்விக்கு வருவோம். ஒரு நோக்கம் அல்லது இலக்கு என்ற ஒரு புள்ளியைச் சுட்டிக் காட்டி இதனால் எழுதுகிறார்கள் என்று கூற முடியாது.

உண்மையில் எழுத்து என்னும் மனோரதம் எழுத்தாளனின் சிந்தனையை வாசகனுடன் பகிரும் உந்துதல் உள்ளவரை நகர்கிறது. இந்தப் பகிரும் உந்துதல் எழுத வைக்கிறது. பகிர்வதற்காக எழுதுகிறார்கள் என்ற விடை மிகவும் கேள்விக்கு அண்மையானது. இந்தப் பகிரும் உந்துதல் எப்படி எல்லா எழுத்தாளர்களிடமும் இருக்கிறது?

இதற்கான விடை மிகவும் எளிமையானது. தீவிர எழுத்துப்பணியில் ஒருவர் குதிக்கும் முன் அவர் வாசிப்பில் துவங்குகிறார். இது எல்லாப் படைப்பாளிகளுக்குமே பொருந்தும். வாசிப்பில் இலக்கியம் என்னும் விளிம்பில்லாப் பெருவெளியில் தான் லயித்தவை ரசித்தவை அவை பற்றிய விமர்சனங்கள் யாவற்றையும் வாசித்து ஒரு கட்டத்தில் தன்னுள் அசலாய் இருக்கும் ஒரு கருவை இலக்கிய வடிவாக்கும் முனைப்பைப் பெறுகிறார். அந்த முனைப்பில் அவர் தனது அசலான கற்பனை, சிந்தனை, விமர்சனம் இவை யாவுமே சமுதாயத்தை விலகி நின்று விமர்சிக்கும் கலகப் பொறியுடனிருப்பதாக உணர்கிறார். தனித்து அறச் சீற்றத்துடன் சமூகத்தில் தான் ஏற்காதவற்றாய் அங்கத்ததுடன் கூர்மையாக ஒரு கலை வடிவாகக் கவிதையாகவோ கதையாகவோ கட்டுரையாகவோ பகிர்கிறார்.

மறுபடியும் பகிர்வதற்கு வந்து விட்டோம். சமுதாயத்திலிருந்து தனித்து நின்று சிந்தித்தாலும் நான் அல்லன் – என் சகஜீவிகளே உம்மோடு பகிர்வதில் நான் சமூகஜீவியாக, பிணைப்புள்ளவனாக இருக்கிறேன் என்னும் நட்புக்கரத்துடன் படைப்பாளி முன்னகர்கிறார்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வியை நாம் கடக்கிறோம். எது இரண்டு எழுத்தாளர்களை வேறுபடுத்துகிறது. பன்மையே சரியானது. எவை இரண்டு எழுத்தாளர்களை வேறுபடுத்துகின்றன?

முதலாவது பின்னணி. வெள்ளிக் கரண்டியுடன் அமையும் குழந்தைப் பருவம் கண்டிப்பாக பாதிக்கிறது. மிகவும் மோசமான வறுமை சார்ந்த வலி மிகுந்த குழந்தைப்பருவம் எதிர் துருவம்.

இணையானது அவர் எழுதத் துவங்கும் காலகட்டம். காலகட்டம் இரண்டு விதமாக. ஒன்று அவரது வயது மற்றும் குடும்பத்தில அவர் நிலை. இரண்டாவது அவரது சமகாலத்தில் வெளியாகும் படைப்புக்கள். பாரதியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் மற்றும் சமகாலம் என நாம் ஒரு வசதிக்காகப் பிரித்துக் கொள்ளலாம்.

அடுத்தது அவர் எந்த அளவு வாழ்க்கையைக் கூர்ந்து கவனிக்கிறார்? தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களை- நிகழ்வுகளை- பேச்சை – மௌனத்தை- சுரண்டலை – வன்முறையை -அதிகாரத்தை – அடிமைத்தனத்தை- வாய்ப்பை – இழப்பை- வெற்றிகளை- தோல்விகளை- கொண்டாட்டங்களை – புறக்கணிப்புக்களை எப்படி உள்வாங்குகிறார்? அதில் எவற்றைப் பதிவு செய்யத் தேர்ந்தெடுக்கிறார்? எப்படிப் பதிவு செய்கிறார்?

பகிர்வதற்காக எழுதியவர் வாசகரை எங்கே இட்டுச் செல்கிறார்? அவர் இட்டுச் செல்ல விரும்பிய இடத்துக்கு எந்த அளவு அருகில் சென்றார்? எந்த அளவு வெற்றி பெற்றார்? இந்த வெற்றி படைப்புக்குப் படைப்பு வேறுபடும். ஒரு பெரிய எழுத்தாளர் சறுக்கிய இடங்கள் நிறைய இருக்கலாம். அதிகம் எழுதாத, கவனம் பெறாத ஒரு பெண் கவிஞர் சாதித்தது நம்மை அயர வைக்கலாம். ஒவ்வொரு படைப்பிலும் எழுத்தாளர் ஒரு உறைகல்லில் சீர்தூக்கப்பட்டு அந்தப் படைப்பில் அவரது வெற்றி இந்த அளவு என்று ஒரு புள்ளியில் நிலை பெறுகிறார். தொடர்ந்து எழுதும் உந்துதல் விமர்சகர், வாசகர் மற்றும் சக படைப்பாளிகளுடனான விவாத‌த்தால் கிடைக்கிறது.

இன்றைய தமிழ்ச்சூழலில் தீவிரமாக இயங்கும் எந்த ஒரு படைப்பாளியும் சகஜீவிகளுடன் பகிர விரும்பும் பரிவு ஜீவ நதியாக ஊற்றெடுப்பதால் மட்டுமே இயங்குகிறார். மிகவும் சோர்வுதரும் எதிர்மறையான சூழல் இது.

எனவே பகிரும் பரிவின் இடையறா உந்துதலால் பகிர்வதற்காக அதுவே ஆகச் சிறந்த வாழ்நாள் முனைப்பு என்பதாக எழுதுகிறார் என்றே இந்தக் கேள்விக்கு மிக அருகாமையான விடையைத் தருகிறேன்.

பகுதி 2 – நான் எதற்காக எழுதுகிறேன்?

முதல் பகுதியில் குறிப்பிடாத எந்தப் புதிய காரணத்தை, விளக்கத்தை நீ கூறப் போகிறாய் என்ற கேள்விக்கு ஒரு விடை உண்டு. என் பயணம் பற்றிய சில விவரங்கள் பல சாளரங்களைத் திறக்கும். அதுவே பகுதி ஒன்றிலிருந்து மேற்செல்வதாகும்.

என்னைப் பற்றிய எளிய அறிமுகம் கவிஞன், விமர்சகன் மற்றும் புனைகதை எழுதுபவன். கவிதை எழுதுவோர் அபூர்வமாகவே பிற வடிவங்களில் படைப்பளிப்பதில் வெற்றி காண்பவர்கள். அந்த அபூர்வம் எனக்கு அமைந்தது. கணையாழி உள்ளிட்ட பல சிறுபத்திரிகைகளில் என் பணி துவங்கியது. 2009க்குப் பிறகு திண்ணை, பின்னர் நவீன விருட்சம், பதாகை, பதிவுகள் ஆகிய இணைய தளங்களில் எனது பதிவுகள் வந்துள்ளன. மிகச் சமீப காலத்தில் மீண்டும் அச்சு ஊடகத்தில் எழுத எண்ணி சில படைப்புக்களை அனுப்பி இருக்கிறேன். விமர்சகனாக இயங்குவதில் சமகால எழுத்துக்களை வாசித்து விமர்சிப்பதில் என் பங்கையும் வெற்றியையும் பல படைப்பாளிகள் பாராட்டியுள்ள‌னர்.

சோர்வு தரும் தமிழ்ச் சூழலில் பலமுறை என்னை நானே கேட்டுக் கொள்வேன், “எப்படித் தொடர்ந்து இயங்குகிறேன்?” எழுதுவதை நிறுத்தி விட்டால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? இன்னும் பணியில் இருப்பதால் பல முறை வேலைப்பளு தாள முடியாததாயிருக்கிறது. அலுவலகம், குடும்பம் இரண்டில் ஒன்று படைப்பூக்கம் எழும்பும் நல்ல மனநிலையைக் காவு வாங்கி விடும். இதையெல்லாம் மீறி எழுதினால் தமிழ்ச்சூழல் சோர்வைக் கொண்டுவரும்.

பலமுறை மனதுள் அலசி நான் எழுத்துப் பணியை, படைப்புவெளியில் தீவிரமாக இயங்குவதை எனக்கான ஓர் இடத்தைத் தேடும் பயணமாகக் காணவில்லை. என் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளும் ஒரு முயற்சியாகக் காண்கிறேன்.

ஜனவரியில் ‘சொல்வனம்’ இணைய இதழ் மற்றும் இலக்கியப் பத்திரிகையான‌ ‘நவீன விருட்சம்’ ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் பெரியவர் எழுத்தாளர் அசோகமித்திரனை சந்தித்தேன். ‘எங்கே வேலை பார்க்கிறாய்?” என்று கேட்டார். சொன்னேன். அடுத்து ஒருவரிடமும் அறிமுகத்தில் அதேயே கேட்டு பதில் வந்த பிறகு அவர் கூறினார், “நீ எங்கே வேலை பார்க்கிறாயோ அது தான் உன் அடையாளம்”. எதையும் எளிமைப்படுத்திக் கூறுபவர் அல்லர் அவர். ஆனாலும் நுட்பமாகவே அதைக் குறிப்பிட்டார்.

எல்லா அடையாளங்களும் குறுகியவையே. நம்மிது சுமத்தப்படுபவையே. சாதி, வயது, பால், வருமானம், குடும்பப் பின்னணி, தோலின் நிறம், தொழில் என மூச்சுமுட்ட வைக்கும் மலினப்படுத்தப்பட்ட அடையாளங்கள்.

இவை எல்லாமே ‘மந்தையின் ஓர் அங்கமாய் வாழ்நாளெல்லாம் வாழ சபிக்கப்பட்டவன் நீ’ என்று சுட்டுபவை. ‘எண்ணிக்கையில் மிகவும் குறுகிய மனதால் மிகவும் விரிந்த இலக்கியவாதிகளுள் நானும் ஒருவன்’ என்னும் அடையாளத்தை மட்டுமே நானாக ஏற்றுக் கொண்டு என் வாழ்க்கையின் பொருளை அந்த அடையாளத்தில் தேடுகிறேன். அதற்காகவே எழுதத் துவங்கினேன். தொடர்கிறேன்.

என் குடும்பத்தினர் முற்றிலும் நிராகரிக்கும் இந்த அடையாளத்தை சகஜீவிகள் முன் எனது ஒரே அடையாளமாகக் கொண்டு நான் நிற்கிறேன்.

oOo

(சத்யானந்தன் கவிஞர். புனைகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளரும்.. பதினைந்து வருடங்களுக்கு மேலாக சதங்கை, கணையாழி, நவீன விருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, சங்கு, புதிய கோடாங்கி, இலக்கியச் சிறகு ,கனவு உள்ளிட்ட சிறு பத்திரிக்கைகளிலும், திண்ணை மற்றும் சொல்வனம் ஆகிய இணைய தளங்களிலும் தீவிரமாகத் தன் இலக்கியப் படைப்புகளைத் தந்தவர். குறிப்பாகத் திண்ணை இலக்கிய இணைய தளத்தில் இவரது சமீபத்திய கவிதைகள், கட்டுரைகள் திண்ணையில் வெளிவந்தவை. திண்ணையில் தொடராக “ஜென் ஒரு புரிதல்”, முள்வெளி- சமூக நாவல், போதிமரம்- சரித்திர நாவல், ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை இவைகள் அச்சு வடிவத்தில் வராதவை. இவை sathyanandhan.com என்னும் அவரது இணைய தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. http://www.pratilipi.com/ இணையத்தில் ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி மற்றும் சரித்திர நாவல் போதி மரம் வெளியிடப்பட உள்ளன. அச்சு வடிவில் வந்த “புருஷார்த்தம் (2000 வருடம்) நாவல் மற்றும் விக்கிரகம் (2003) நாவல் மற்றும் வெளியே வீடு (2003) கவிதைத் தொகுதி ஆகியவை இன்னும் மின் வடிவம் பெறவில்லை. சத்யானந்தன் தொடர்ந்து இயங்கி வரும் சிந்தனையாளர் எழுத்தாளர். sathyanandhan.mail@gmail.com மின்னஞ்சல் வழி அவரைத் தொடர்பு கொள்ளலாம் – நன்றி, பிரதிலிபி.காம்)