எழுத்து

மாதொருபாகனைத் தொடர்ந்து – பெருமாள்முருகன்

– உரையாடல்: எழுத்தாளர் பெருமாள்முருகன்

Alavayan arrhanari

மிழிலக்கியம் பயின்ற அரசுக்கல்லூரி விரிவுரையாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பெருமாள் முருகன் தமிழிலக்கியத்தின் முக்கியமான அடையாளமாக விளங்கிவருபவர். மக்கள் கலாச்சார கழகம் வழியே மார்க்சிய ஈடுபாட்டு கொண்டவர், இலக்கிய பங்களிப்பாக ஏறுவெயில், திருச்செங்கோடு, கூளமாதாரி, மாதொருபாகன், பீக்கதைகள், நீர் மிதக்கும் கண்கள், நிழல்முற்றத்து நினைவுகள் என்று பெருமளவு கொங்குநாட்டு வட்டாரத்து வரலாற்றை ஏழு நாவல்கள், நான்கு சிறுகதை தொகுப்புகள், நான்கு கவிதை தொகுப்புகள், எட்டு கட்டுரை நூல்கள் மற்றூம் மொழிபெயர்ப்புகள், தொகுப்புகள் என்று மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார். சூழலை மீறி செயல்படும் உத்வேகத்துடன், திசைதெரியாத பெருங்குகைக்குள் வாசிப்பு என்னும் விளக்கோடு தொடர்ந்து பயணப்படுவதாக சொல்லும் பெருமாள் முருகனின் பயணத்தின் அடுத்த அடையாளமாக இரு புதிய நாவல்களை – ஆலவாயன் மற்றும் அர்த்தநாரி – 2015 புத்தக வெளியீட்டு விழாவிற்கு காலச்சுவடு கொண்டு வருகிறது. அதையொட்டி அவரோடு பதாகை நடத்திய மின்அஞ்சல் உரையாடல்.

பதாகை: நிலத்தை துறந்து மொழியைப் பற்றிக் கொண்ட தலைமுறையின் முதல் பதிவாக ‘ஏறுவெயில்’ நாவலை உருவாக்கினீர்கள்.  ஆறு நாவல்களுக்கு பிறகு ஆலவாயனையும் அர்த்தநாரியையும் உருவாக்கும்போதும் அதே தவிப்பை உணர்கிறீர்களா? ஒருவிதமான நிறைவை நோக்கி நகர்வதாக நினைக்கிறீர்களா?

பெருமாள்முருகன்: ஏறுவெயிலை எழுதியபோது தயக்கமும் பயமும் கொண்டிருந்தேன். நாவல் நமக்கு வருமா, எழுத்துப் பயிற்சி நாவல் எழுதப் போதுமா, மாபெரும் நாவல்கள் இருக்கும் மொழியில் பிரசுரத்துக்குத் தகுதியான அளவிலேனும் எழுத இயலுமா என்றெல்லாம் தயக்கம். திசைவழி தெரியாத பெருங்குகை ஒன்றுக்குள் புகுந்து செல்லும் பயமும் இருந்தது. வாசிப்பு என்னும் விளக்கின் துணை ஒன்றைக்கொண்டே உள்ளே சென்றேன். எதிலாவது மோதும்போது பயணத்தை நிறுத்துவேன். சோர்வும் சலிப்பும் தோன்றிப் பின்வாங்கத் தூண்டும். துணிவைப் பெற்று மேற்செல்லச் சில நாட்கள் ஆகும். எங்கிருந்து வந்தது என்று தெரியாத ஒருவகையான அசட்டுத் துணிச்சலே என்னைச் செலுத்தியது. உண்மையில் அதை எழுதிய காலம் தவிப்பு மிகுந்த காலம்தான். இப்போது அத்தகைய தயக்கமும் பயமும் இல்லை. ஆனால் அசட்டுத் துணிச்சலே இப்போதும் செயல்படுத்துகிறது. இது கொஞ்ச தூரம் நடந்து வந்துவிட்டதால் ஏற்பட்டிருக்கும் அசட்டுத் துணிச்சல் என்று புரிகிறது. நிறைவை நோக்கிய நகர்வு  என்று சொல்ல முடியுமா? அப்படி ஒரு நிறைவைக் கண்டடைவது சாத்தியமா? இன்னும் எவ்வளவோ பயணப்படும் பேராசை இருக்கிறது. நிறைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்றே நினைக்கிறேன். (more…)

Standing in Another Man’s Grave- ரீபஸின் மீள்வருகை

அஜய் ஆர்

ரான்கின் பற்றிய சொல்வனம் கட்டுரையிலிருந்து சில பத்திகள்

1987-இல் முதல் ரீபஸ் நாவல் வெளிவந்தபோது, ரீபஸின் வயது நாற்பது. இதனால் 2007-இல் வெளி வந்த எக்ஸிட் ம்யூஸிக் (Exit Music) நாவலின்போது அவருக்கு அறுபது வயதாகி விட, பணி ஒய்வு பெறுகிறார். இந்தத் தொடரும் (இப்போதைக்கு?) முடிவடைகிறது……

ஷுவான் இன்னும் பணியில் இருப்பதால் அவருக்கு வெளியில் இருந்து ரீபஸ் உதவுவதாக நாவல்கள் வெளிவரும் என்னும் நம்பிக்கை உள்ளது. “ரீபஸ் வெளியேயிருந்து ஷுவானுக்கு உதவுவதன் மூலம் இத்தொடரை நகர்த்தப் பல வழிகள் இருக்கின்றன,” என்று ரான்கின் முன்பு ஒரு நேர்காணலில் கூறியது அதற்கு வலு சேர்க்கின்றது.

ஒரு தொடரை முடித்தபின் அதன் முக்கியப் பாத்திரத்தை உயிர்த்தெழச் செய்வதென்பது, இலக்கியத்தில் அவ்வப்போது நடக்கும் ஒன்றுதான். ஹோல்ம்ஸ் (வாசகரின் ஏகோபித்த விருப்பத்தின் பேரில்) துவங்கி வாலண்டர் வரை இதற்கு உதாரணங்கள் உள்ளன. அந்த வழியில் இப்போது ரீபஸ் (more…)

2015 புத்தக வெளியீடுகள் – பேயோன்!

– உரையாடல்: பேயோன்

  துண்டிலக்கியம் என்ற வகைமை தமிழிலக்கியதற்கு இவர் அளித்த கொடை எனக் கொள்ளலாம். ஏறத்தாழ ஏழு வருடங்களாக இணையத்தில் இடையறாது எழுத்தாளராக இயங்கி வருபவர், உண்மையில் ஒரு புனைவு பாத்திரமாகத்தான் உருவாக்கப்பட்டவர். இவருடைய படைப்புகளைப் போலவே இவரும் சட்டகங்களை உடைத்துக் கொண்டு புனைவையும் தாண்டி நிலையான ஆளுமையாக உருவெடுத்திருக்கிறார். 2015ம் ஆண்டு ஜனவரி புத்தக கண்காட்சியை முன்னிட்டு, நாம் அவரிடம் இருந்து என்ன படைப்புகளை எதிர்பார்க்கலாம் என்று சிறு உரையாடல்.

பதாகை: இணையத்தில் ஒரு புனைவு பாத்திரமாக அரங்கேறிய புதிதிலேயே, அவ்வருட புத்தக கண்காட்சியில் உங்கள் துண்டிலக்கிய தொகுப்பை அச்சு பிரதியாக கொண்டு வந்தீர்கள். இப்போது ஆனந்தவிகடன் புகழ் பேயோனாகிய பிறகு இணைய வெளியீடு மட்டும் போதும் என்று நீங்கள் ஒதுங்கியிருப்பதன் காரணம் என்ன?

பேயோன்: என்னுடைய அபிமானப் பதிப்பாளரின் சுமையைக் குறைக்கத்தான். ஆழி பதிப்பகம் சிறு முதலீட்டில் நடத்தப்பட்டுவரும் பதிப்பகம். பதிப்பாளர், நண்பர் செ.ச. செந்தில்நாதன் இப்போது அரசியலிலும் தீவிரமாகிவிட்டதால் அவர் புத்தகங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறார். எனவே செப்டம்பர் வந்ததும் அவரைத் தொலைபேசியில் அழைத்து ‘இந்த முறை என்ன டைட்டில்ஸ் போடறதா இருக்கீங்க?’ என்று நைச்சியமாகக் கேட்கும் பழக்கத்தைச் சென்ற ஆண்டிலிருந்தே விட்டுவிட்டேன். ஆழியில் கிடைத்த சுதந்திரம் வேறு எந்தப் பதிப்பகத்திலும் எனக்குக் கிடைக்காது என்று தோன்றியதால் இணையத்தில் மட்டுமே வெளியிடுவது என்று முடிவு செய்தேன். இணைய எழுத்தாளன் என்ற அடைமொழி கொஞ்சம் வசவு மாதிரி இருப்பதால் அதை நான் விரும்புவதில்லை என்றாலும் இப்போது நான் அப்படித்தான் ஆகியிருக்கிறேன். ‘ஃபேஸ்புக் எழுத்தாள’னாக இருப்பதற்கு இது மேல். (more…)

குன்றுள்ள இடமெல்லாம்…

அன்று பழனி முருகனை தரிசிக்கும்பொழுது
அந்த பெரியவர் முகம்தான் தெரிந்தது.

“ஒரு வேலையிருந்தா கொடுங்க”, பெரியவர் தீனசுரத்தில் கேட்டார்.
கரிய மேனி, நரைத்த தலைமுடிகளில் ஆங்காங்கே கருமுடிகள்.
கூப்பிய கைகள் நடுங்கின.
அழுக்கு சட்டை, அழுக்கு வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார்- நாம் பார்க்கும் ஆயிரக்கணக்கான முதியவர்களில் ஒருவர்.
“எங்க நாலு பேருக்கே வேலை இல்லை. தாத்தாவுக்கு எதாவது டிபன் கொடு,”
என்றார் முதலாளி நடுவயது அம்மையார் ஒருவரிடம்.

“ஐயா, நீங்க ஒரு வேல போட்டு கொடுங்க”,
கிழவர் என் பக்கத்தில் வந்து கேட்டார்.

“அவர் வெளியூரு. அவர தொல்ல பண்ணாத”,
என்றார் பக்கத்து மேஜையில் இருந்தவர்.

“என்ன வேலைனாலும் செய்யறேன்.
ஒரு வேலை போட்டு கொடுங்க சாமி”

“தாத்தா. இங்க உட்காரு. இந்த இட்லிய சாப்பிடு”
மூன்று இட்லிகளை வாழையிலை மேல் வைத்தாள் நடுவயது அம்மணி.

நடுங்கும் விரல்களினால் மெதுவாக சாப்பிட ஆரம்பித்த அவர் கண்கள் என்னை விட்டு விலகவில்லை.
கண்களில் ஏக்கமும் நம்பிக்கையும் கலந்திருந்தது போல் எனக்குப் பட்டது, சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போதும் என் மேல் அவர் கண்கள் படிந்திருப்பதை கவனித்தேன்.

என் கண்களில் தெரிந்த குழப்பத்தை பார்த்த முதலாளி, “இப்படிதான் சார் வீட்ல ஏதோ சண்டைன்னு கிளம்பிடுறாங்க, இந்த வயசுக்கு மேல என்ன வேலை செய்ய முடியும்? பொண்ணோ பையனோ வந்து திரும்ப கூட்டிண்டு போவாங்க”

விடுதிக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு வெளியே வரும்பொழுது பெரியவரைப் பார்த்து நடையை துரிதமாக்கினேன்.

நீதியின் சவால் – Etgar Keret எழுதிய One Gram Short சிறுகதையை முன்வைத்து

பாஸ்டன் பாலா

fritz erler snake

அமெரிக்காவில் இப்பொழுது கொண்டாட்ட காலம். நன்றியறிவித்தலையொட்டி நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து விருந்து கொடுக்கிறேன். கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அலுவலில் நடக்கும் களியாட்டுகளுக்குச் செல்கிறேன். ரொம்ப நாளாகத் தொடர்பில் இல்லாதவர்களையும் புத்தாண்டை முன்னிட்டு ஏதாவதொரு ஜமா சந்திப்பில் முகமன் சொல்லி சந்திக்கிறேன். கையில் போஜனம்; முகத்தில் புன்னகை; எப்பொழுதோ தொடர்பறுந்த கிரிக்கெட்டோ, யாரோ கண்டுபிடித்த ஆங்ரி பேர்ட்ஸ் நிரலியோ, ஏதோ ஒன்றை விவரித்து சாப்பாட்டை உள்ளே தள்ளுகிறேன்.

டிசம்பர் முதல் வார நியு யார்க்கரில் எட்கர் (Etgar Keret) எழுதிய ”ஒரு கிராம் குறைகிறது” (One Gram Short) இது போன்ற மனநிலை கொண்ட நாயகனையும் ஊட்டமற்ற சம்பாஷணையில் இயங்கும் வாழ்க்கையையும் சிறுகதை ஆக்குகிறது.

காபி கடையில் பணிபுரியும் பெண்ணை ஒருவன் விரும்புகிறான். அவளோடு திரைப்படம் பார்க்க ஆசைப்படுகிறான். ஆனால், “படம் போகலாம், வருகிறாயா?” என பட்டென்று கேட்டால், அது அவனது ஆசையைப் பட்டென்று போட்டு உடைத்து நிராகரிப்பிற்குக்கூட வழிவகுக்கும். அதனால், நாசூக்காக, மீசையில் மண் ஒட்டாமல் வினவ விரும்புகிறான். சினிமாவிற்கு பதில் போதை மருந்தடிக்க அழைக்க முடிவெடுக்கிறான். அவனுக்கு போதை சரக்கு எப்படி கிடைத்தது? அவள் அவனுடைய கேள்விக்கு என்ன பதில் சொன்னாள் என்பது பாக்கி கதை. (more…)