எழுத்து

கவியின் கண் – அன்னிய வானின் கீழல்ல

எஸ். சுரேஷ்

அன்னிய வானின் கீழல்ல
அன்னிய சிறகுகளின் நிழலில்ல-
இவையனைத்தையும் என் மக்களுடன் பகிர்ந்து கொண்டேன்
இங்கே, தீவினை எம்மைக் கைவிட்ட இடத்தில்
– அன்னா அக்மதோவா

சில நாட்களுக்கு முன்னர் நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். அப்போது ஊடக கட்டுரைகளிலும் சமூக ஊடகச் சிற்றுரைகளிலும் இருவேறு தீவிர குரல்களைக் கேட்க முடிந்தது. ஒரு முனையில், தேசபக்திக் கட்டுரைகள்- நாம் ஏன் உலகின் தலைசிறந்த நாடாக விளங்குகிறோம் என்று. மறுமுனையில், நம்பிக்கையற்றவர்கள்- நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா என்ற சந்தேகத்துடன், நம் சமூகத்தில் உள்ள தீமைகள் அனைத்தையும் பட்டியலிட்டு இவையே இந்தியாவின் சாதனைகள் என்ற குற்றச்சாட்டு (வழக்கம் போலவே உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் எங்கோ இருக்கிறது).

ஒரு வகையில் நாம் அதிர்ஷ்டக்காரர்கள் – நம் எதிரி யார் என்பதை நாம் அறிந்திருந்தோம். நம்மை ஆக்கிரமித்திருந்தவர்கள் பிரிட்டிஷார், அவர்களை விரட்டிவிட்டால் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று நம்பினோம். ஆனால் இதற்கு மாறாக, உலகின் பல நாடுகளும் வேற்று எதிரியை அடையாளம் காண முடியாத காரணத்தால் அடிமைத்தளையில் அவதிப்பட்டன. அவர்களின் எதிரி உள்ளிருந்தான். சர்வாதிகாரி, கொடுங்கோலன், பாசிஸ்டு என்று எப்படி அழைத்தாலும் அவன் அந்நாட்டு குடிமக்களில் மக்களில் ஒருவன். இவர்களில் பலர் மக்களின் ஒருமித்த ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள். இது போன்ற ஓர் அதிகார அமைப்புடன் கடுமையாகப் போராடினாலன்றி விடுதலை பெறுதல் அரிது.. (more…)

கவிதையின் உண்மைகள்

றியாஸ் குரானா

பதாகை – “உங்கள் கவிதைகள் எதை உண்மையாகக் கொள்கின்றன, அவை எத்தகைய உண்மைகளை வெளிப்படுத்த முனைகின்றன?”

றியாஸ் குரானா – இப்படி ஒரு கேள்வியைக் கேட்பதற்கு எது உங்களைத் தூண்டியது என்பதை நான் அறிவேன். நீங்கள் மட்டுமல்ல தமிழ் சூழலில் இலக்கியப் பரிச்சயம் இருக்கின்ற அனைவரும் இப்படி அல்லது இதற்கு நெருக்கமான சொற்களால் இந்தக் கேள்வியை கேட்பவர்களாகவே இருப்பர். அந்தக் கேள்விகள் இப்படி இருக்கலாம். எத்தகைய யதார்த்தத்தை வெளிப்படுத்த முனைகின்றன என்றோ எத்தகைய சூழலை பிரதிபலிக்க முனைகின்றன என்றோ இருக்கலாம். அல்லது இப்படி இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்தக் கேள்வி நமது இலக்கிய பெருவெளியின் நெடுங்கால மனச்செயலாக இருக்கின்ற ஒன்றாகும். இலக்கியத்தின் பயன், இலக்கியத்தின் பணி, இலக்கியம் இயங்குவதற்கான ஒரு பொதுத் தடம் போன்றவற்றை விசாரணைக்குட்படுத்தும்போது கண்டடையப்பட்ட ஒன்றாகும். வாழ்தல் வாழ்விலிருந்து பெறுதல் என்ற ஒரு வறண்ட புரிதலில் இருந்து உருவான ஒன்றாகும். அது மாத்திரமல்ல, அந்தப் புரிதலினால்தான் இன்னும் இது காப்பாற்றப்பட்டு புழக்கத்திலிலும் இருக்கிறது. (more…)

THE GRANTA BOOK OF THE AMERICAN SHORT STORY – RICHARD FORD : ஊடுபாவுகள் 3

அஜய் ஆர்

IV பால்யத்தின் நினைவுகளும் பதின் பருவ அலைகழிப்புக்களும்

oates-child

ஜோய்ஸ் கரோல் ஓட்ஸின் (Joyce Carol Oates) ‘Where is Here’, சிறுகதை, ஒரு அந்நியன் மாலை வேளையில் வீட்டின் அழைப்பு மணியை அழுத்துவதுடன் ஆரம்பிக்கிறது. நாற்பதுகளின் இறுதியில் இருக்கும் அந்த அந்நியன் தன்னுடைய 11ஆம் வயதில் இந்த வீட்டில் தங்கியிருந்ததாகவும் பிறகு தன் தாய் இந்த வீட்டை விற்றபிறகு இப்போதுதான் இந்த பக்கம் வந்ததால் வீட்டைப் பார்க்கலாம் என எண்ணி வந்ததாகவும் கூறி, வீட்டின் வெளிப்புறத்தில் மட்டும் சிறிது நேரம் இருக்கட்டுமா என அனுமதி கேட்கிறான். கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் இப்போது அந்த வீட்டில் வசிக்கிறார்கள். கணவன் அந்நியனை வீட்டின் வெளியே சுற்றிப் பார்க்க அனுமதி அளிக்கிறார்.

ஓட்ஸ் மனைவியின் மூலம் மனித மனம் சட்டென்று பல்வேறு ஒன்றுக்கொன்று நேர்மாறான நிலைப்பாடுகள் எடுப்பதைக் காட்டுகிறார். முதலில் அந்நியனை அனுமதித்ததைக் குறித்து கணவனை கடிந்து கொள்கிறார் மனைவி, அவன் கொலைகாரனாகவோ, திருடனாகவோ இருக்கலாமே என்கிறார். (“Isn`t that just like you!” என்று தன் சலிப்பை வெளிப்படுத்துகிறார்) வெளியில் அந்த அந்நியன் என்ன செய்கிறான் என்று பார்க்கும் கணவன், அவன் அங்குள்ள ஊஞ்சல் அருகில் செல்வதைப் பார்த்து அவன் குழந்தையாக இருக்கும்போது அதில் விளையாடி இருக்கக்கூடும் என்கிறார். இப்போது மனைவி சட்டென்று அவனை உள்ளே அழைக்கும் மனநிலைக்கு சென்று, அவனை அழைக்காத கணவனை மீண்டும் கடிந்து கொள்கிறார் (மீண்டும் “Isn`t that just like you!“)!!!. அந்நியன் வீட்டிற்குள்ளும் அனுமதிக்கப்படுகிறான். (more…)

பேயோனுடன் ஒரு சந்திப்பு

பஷீர் பாய்

நான் அவர் அறைக்குள் நுழைந்தபோது அவர் கணினியில் கதையோ கட்டுரையோ கவிதையோ எழுதிக்கொண்டிருந்தார். நான் பக்கத்தில் சென்று ‘ஹலோ’ என்றதும் திடுக்கிட்டு பார்த்தார்.

“ஒ, நீங்களா? கறிகாய் வாங்கப் போன என் மாமியார்தான் திரும்பி வந்துவிட்டாங்களோன்னு பயந்துட்டேன். அப்படி ஓரமா உக்காருங்க. அவங்க வரதுக்குள்ள இதை முடிக்கணும்”

“எதை சார்? கதையா, கவிதையா, கட்டுரையா?”

“ஓஹோ. என் படைப்புல இந்த மூணுத்துக்கும் உனக்கு வித்தியாசம் தெரியுதா? அப்படின்னா நான் இன்னும் உழைக்கணும்,” என்று சொல்லிவிட்டு கீபோர்ட்டை ஆக்ரோஷமாக தாக்க ஆரம்பித்தார் பேயோன். அரைமணி கழித்துதான் நிறுத்தினார். (more…)

அதிகாலை ஒரு வெள்ளைக் கதவு

றியாஸ் குரானா

 

வடிவமைத்த திரைச் சீலையை
ஆற்றங்கரையில் விட்டு நெடுநதூரம் வந்த நான்,
பின்னர் திரும்பிப் பார்க்கிறேன்
பயப்பட ஏதுமில்லை
பிரச்சினையை கடந்துவிட்டேன்
எனினும், அதிக விலைகொடுக்க வேண்டியிருந்தது
எவைகளை இழக்க வேண்டியிருந்ததோ
அந்நிலையில்தான் ஏற்கனவே இருந்தேன்
முழு நேரமும்,
புல்வெளியில் அலைய வேண்டியிருந்தது
கைகளில் நிரம்பியிருந்து காட்டுப் பூக்கள்
இறந்த ஏதோவொன்றை மறைக்கிறது
எல்லோரும் திரைச்சீலையிலுள்ள
அழகிய வேலைப்பாடுகளை காட்சியாகப் பார்க்கின்றனர்
நான் கிடந்து போராட வேண்டிவந்தது
கட்டாயம் இங்கிருந்து விலகிப்போய்
திரும்பிவந்து இவர்கள் பார்க்க வேண்டும்
திரைச் சீலையில் சுருக்கம் விழுந்திருப்பதை
யாரும் ஒப்புக்கொள்ளவில்லை
அதிகம் பேர் அதன் கரையில்தான்
வாழ்வைத் தொடருகிறார்கள்
நானோ, சிறிது நேரமே தங்குகிறேன்
திரைச் சீலை மாட்டப்பட்ட
அந்த வெள்ளைக் கதவிற்குப் பின்னால்
எனது மகனின் கனமான கைப்பை மறைந்திருக்கிறது
வட்டமான பிரகாசிக்கும் கைப்பையை
அவன் இன்னும் தொட்டுத் தூக்கியதில்லை
ராணி தனது படுக்கையில்
தனித்து உறங்குகிறாள்
ம்…திறக்க வேண்டாம்
திரைச் சீலையை மகன் திறந்துவிட்டான்
வைகறை மெதுவாக வெளிப்பட்டது
இரவு என்பது, வெள்ளைக் கதவின் மீது
நான் போட்ட திரைச் சீலை
கவிதையில் தேர்ந்த உளவாளி எனில்,
எப்படித் தயாரித்தேன் என்பதன் அத்தாட்சிகளை
நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.

கேள்வி: “கவிதைக்கும் அதன் வாசகனுக்கும் இடைப்பட்ட உறவு எத்தகையது என்று கருதுகிறீர்கள்?”