எழுத்து

மீண்டும் வந்த ஜீனி

ஸ்ரீதர் நாராயணன்

‘இரண்டே நிமிஷம்தான் அவகாசம். அதுக்கு மேல ஒரு நொடி கூட நீ உயிரோடு இருக்க முடியாது. இது எங்க ஜின்குலத்து மேல ஆணை’ அப்படின்னு ஒரு சின்னப்பயலப் பாத்து சபதம் போட்ட ஜீனி கத தெரியுமா?

genie_bigger

பொலபொலவென விடிஞ்சது போல வெளிச்சம் மேலே வந்து விழுந்ததும் ஜீனிக்கு முழிப்பு தட்டியது. முழிப்புன்னா சாதாரண முழிப்பா… பெரிய யுகமுழிப்புல்ல அது.  எம்புட்டு காலம் அந்த அரையாளு உயர ஜாடியில மண்ணுள்ளி பாம்பு மாதிரி சுருண்டு படுத்துகிட்டே கெடந்தது அது.  முதல்ல கொஞ்சகாலத்துக்கு நாளு, நேரம்னு கணக்கெல்லாம் மனசுக்குள்ள ஓடிட்டிருந்தாலும் அப்புறம் எல்லாம் மறந்து மரத்துப்போயிட்டது.  இப்ப பொசுக்குன்னு யாரோ ஜாடியை திறந்தவிட்ட மாதிரி அம்புட்டு வெளிச்சம் உள்ளாற.  மளமளன்னு தன்னோட முழு உருவத்துக்கு வளர்ந்து நிமிர்ந்து நின்ன ஜீனி சுத்துமுத்தும் பாத்துட்டு தடால்னு குனிஞ்சு

‘பேரரசன் சாலமனுக்கு வணக்கம்.  நீரே எம் அரசர்.  எம் எஜமானர். ‘ அப்படின்னு சொல்லிகிட்டே ஒரு சுத்து சுத்தி சலாம் போட்டது.  ஏன்னா, அது கடைசியா அந்த ஜாடிக்குள்ள அடைபடும்போது பேரரசன் சாலமனும் அவனுடைய வேட்டைபடைகளும் சுத்தி நின்னுட்டிருந்ததுதான் அதன் நினைப்புல இருந்தது.  வேட்டைப்படைன்னா சாதாரணமானதா? ஜின்குலத்தை மொத்தமும் வேட்டையாடற அதிபயங்கர வேட்டைப்படை.

‘பேரரசன் சாலமனுக்கு அடிபணிகிறாயா இல்லை தண்டனைக்கு ஆளாகிறாயா’ன்னு ஒரே கேள்வியத்தான் எல்லா ஜீனிகளிடமும் கேட்டாங்க.  அப்போ என்னமோ வீரமா ‘அதெல்லாம் முடியாது’ன்னு சவடால் விட்டது எவ்வளவு தப்பாகிப் போச்சு.  இம்புட்டு வருசங்களுக்கு அப்புறம் இப்பபதான் தெரியுது அது எவ்வளவு முட்டாள்த்தனம்னு. (more…)

பாம்பு

எஸ். சுரேஷ்

 

அவன் கால்களை பாம்பு சுற்றிக்கொண்டது
அதை உதறிவிட்டு மூச்சிரைக்க ஓடினான்
(பயப்பட வேண்டாம்,
அந்த கவிதையை இங்கு எழுதப்போவதில்லை)
வீட்டுக்குச் சென்று இருட்டில் ஒளிந்துகொண்டான்
ஏதோ ஊர்ந்து வருவது போல் தெரிந்தது
மறுபடியும் கால்களைச் சுற்றி அதே பாம்பு
கையால் அதை பிடுங்கி தூரே வீசிவிட்டு
மறுபடியும் ஓடினான், இம்முறை மூச்சை அடக்கி
கிணற்றுக்குள் ஒளிந்துகொண்டான்
விடாது கருப்பு போல் பாம்பு அங்கும் வந்தது
தன் கால்களை அது சுற்றிக் கொள்ளும்முன்
வெளியேறி மரத்தின் மேல் ஏறினான்
அவனுக்கு மேலே இருந்த ஒரு கிளையிலிருந்து
பாம்பு அவனை நோக்கி இறங்கியது
பீதியுடம் கீழே இறங்கி கோவில் வாசலில்
உட்கார்ந்து கொண்டிருந்த சாமியாரிடம் சென்று
“நான் எங்கு சென்றாலும் அந்த பாம்பு என்னை
எப்படி கண்டுபிடிக்கிறது?” என்று கேட்டான்
அவன் கைரேகையை பார்த்த சாமியார்
உரக்கச் சிரித்துவிட்டு சொன்னார்
“உனக்கு தெரியாதா, பாம்பறியும் பாம்பின் கால்”

ஒளிப்பட உதவி – freedesignfile.com
​​

அஞ்சலி கட்டுரை: ராபின் வில்லியம்ஸ் – உயிருள்ள உணர்ச்சிப்பிழம்பு

பாஸ்டன் பாலா

ராபின் வில்லியம்ஸ் என்றதும் அவர் நடித்த கதாபாத்திரங்கள் பலதும் கலந்துகட்டி நினைவிற்கு வந்துபோகிறது. துணையெழுத்துகள் உச்சரிப்பை சொல்லிக் கொடுக்காத, ஆங்கிலத் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பித்த புதுதில் இவருடைய படங்கள் மட்டும்தான் எனக்கு எளிதாகப் புரிந்தன. என்னால் மனம் விட்டுச் சிரிக்க முடிந்தது. ஜுமாஞ்சி ஆகட்டும், ஹுக் (Hook) ஆகட்டும், அலாவுதீன் ஆகட்டும்… எல்லாமே கோமாளித்தனமும் கிறுக்குத்தனமும் சரி பாதி கலந்து ஜாலியாக இருந்தது.

ஒரு முறை, அலுவலின் மதிய நேரத்தில் சாப்பாட்டுக் கடையின்போது பேசுவதற்கு பொதுவான விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில், ‘உனக்குப் பிடித்த சினிமா நடிகர் யார்?’ எனக் கேட்டு வைத்தார்கள். உச்சரிப்பதற்கு எளிமையான பெயர்; அதே சமயம் புகழ்பெற்ற பெயர், எனவே ‘ராபின் வில்லியம்ஸ்’ என்கிறேன். அவர்கள் முகத்தில் அதிர்ச்சியா, குழப்பமா, பயமா எனக் கண்டுபிடிக்க முடியாத அசட்டு உணர்வு. ‘அப்படியா…! உனக்கு வேறு யாருமே கிடைக்கலியா! உனக்கு என்ன பிரச்சினை? சந்தோஷமாகத்தானே இருக்கிறாய்?’ என கரிசனத்துடன் வினவினார்கள். (more…)

நினைவு தேன்கூடு

றியாஸ் குரானா

மிக நீண்ட திட்டமிட்ட நினைவு
அவரைத் திருப்பிக்கொண்டு வந்து தந்ததும்
எத்தனை முறை தொலைத்தாலும்
அவரைக் கண்டுபிடிக்க முடியுமென்று நினைத்தேன்
இந்தக் கட்டத்தில்,
எனது மதியத் தூக்கம்
சொர்க்கத்தில் தொடங்கியது
நினைவைக் கூடாரம்போல் சுருட்டும்போது
அதன் மடிப்புகளில்,
குழந்தைகளைப்போல் ஒரு பியானோ
வீறிட்டுக் கத்தத் தொடங்கியது
வெருண்ட சில குருவிகள்
உள்ளிருந்து கிளம்பிப் பறந்தன
மழையா வெயிலா மப்பும் மந்தாரமுமா
தேர்வு செய்வதில் எப்போதும்
வானத்தில் ஒரு குழப்பம் இருக்கிறது
அந்தக் குழப்பத்தை நினைவு
பின்தொடரவே கட்டாயப்படுத்துகிறது
நினைவை விரிக்க விரிக்க
இப்படித் தொடர்பற்ற சம்பவங்கள்
வந்து குவிந்தபடி இருக்கின்றன
என் மகனை கடைசியாகப் பிரியும்போது
அவன் சொன்ன கனவும் இதுபோலதான்
திட்டமிட்டபடி
இத்தோடு நினைவு முடிவடைகிறது.
நினைவுக்கு தேன் கூட்டை ஒப்பிடுவதுதான் மிகச் சரி
எங்கெல்லாம் இருந்து எடுத்து வந்து தேனை
சேகரித்து வைக்கிறது.
யாராவது அதைக் கலைத்தால்,
பல்லாயிரம் குழவிகள் கொட்டி
துடிதுடித்து வலியில் தவிக்கிறது.

மெல்லிய ஒளி

ஜன்னலைத் திறந்தவுடன் சூரிய ஒளி
அவர் மேல் படர்கிறது
அவர் மெதுவாக முனகுகிறார்
ஒளியின் பாரத்தை தாங்கமுடியாத அளவு
புற்றுநோய் அவர் உடலைத் தின்றிருக்கிறது

முதலில் அவர் வலியில் முகம் சுளிக்கும்பொழுது
எங்களுக்கும் வலித்தது, அவர் முனகியபொழுது
எங்கள் கண்ணோரத்தில் ஈரம் கோர்த்தது

வலி தொடரத் தொடர எங்கள் காதுகளையும் கண்களையும்
எங்களை அறியாமல் எங்கள் அறிவு பொத்திவிட்டது
இப்பொழுது சிறு முனகல்கள் எங்களுக்கு கேட்பதில்லை
முக கோணல்களை எங்கள் கண்கள் பார்ப்பதில்லை
படுக்கையில் ஒருவர் இல்லை என்று நினைத்துக்கொண்டே
அறை முழுவதும் சுற்றுகிறோம்

மறுத்தும் மறந்தும் தினம் வாழ்கையை ஓட்டுகிறோம்
ஆனால் அந்தக் கட்டிலை சுற்றிதான் எங்கள் உலகம்
மீறிச் செல்ல நினைத்தாலும் கட்டில் எங்களை விடுவதில்லை
வேறெங்கோ பார்த்தபடி கட்டில் அருகில் நிற்கிறோம்

காலை வெளிச்சத்தில் வற்றிவிட்ட தேகத்தின் வலியை
தெளிவாக உணர்கிறேன்
மரணம்தான் ஒரே தீர்வு என்று நான் நினைக்கையில்,
வலி தோய்ந்த குரலில், “ஏன் காபி இன்னும் குடுக்கல?”
என்று அவர் கேட்கிறார்

ஒளிப்பட உதவி – Susana Weber