எழுத்து

பஸ்சில் ஒரு எருமை

எஸ். சுரேஷ்

காலை எல்லோரும் அலுவலகம் செல்லும் நேரத்தில்
அந்த எருமை வோல்வோ பஸ்ஸில் ஏறியது
“காடுபீசினஹல்லி ஒரு டிக்கெட்” என்று இருநூறு நீட்டியது
சில்லறை பணத்தை வாயில் வாங்கிக் கொண்டது
உட்கார்ந்துக் கொண்டிருந்தவரகள்
குளிர் காற்றை அனுபவித்தார்கள்
நின்றுக் கொண்டிருந்தவர்களுக்கு
நெரிசலினால் ஒரே புழுக்கம்
ரேடியோவில் யாரோ ஒருவன்
பாடல் என்ற பெயரில் கத்திக் கொண்டிருந்தான்
எருமை மாடு இதைபற்றியெல்லாம் கவலைப்படாமல்
கம்பியை பிடிக்காமல் நின்றுக் கொண்டிருந்தது

சில்க் போர்டு தாண்டியதும்,
“வண்டியை நிறுத்து, வண்டியை நிறுத்து” என்று கத்தியது
“ஸ்டாப் இன்னும் கொஞ்சம் முன்னாடி”
என்று சொன்ன கண்டக்டரைப் பார்த்து,
“நான் அவசரமாக சாணி போடவேண்டும்” என்றது
சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்திய ஓட்டுனரை
இறங்கும்போது பார்த்து,
“அந்த பயம் இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு இறங்கியது.

நாளை வருமா?​​

 

​இன்று ஒரே பெஞ்சில் அவர்களால் அமர முடிந்தது
தினமும் அவர்களுடன் வரும் ஒருவர் இன்று இல்லை
நடை பழகாமல் மெளனமாக உட்கார்ந்திருக்கிறார்கள்
தினமும் உரக்க சிரிப்பவரின் பார்வை வானத்தில்
எங்கோ பதிந்திருக்கிறந்து
கைத்தடியில் கைகள் ஊன்றி இன்னொருவர்
தரையை பார்க்கிறார்
மறையும் சூரியனின் ஒளி பட்டு மாமரத்தின் நிழல்
அவர்கள் மேல் மட்டும் படர்கிறது

நடப்பவர்கள் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்
அரை நிஜார் மனிதர் தனியாக ஓடிக்கொண்டிருக்கிறார்
எதிர் பெஞ்சில் சிரித்து பேசும் காதல் ஜோடி
பக்கத்து பெஞ்சில் குடும்ப விஷயம் பேசும் மாமிகள்
மெயின் ரோட்டில் வேகமாக பறக்கும் வாகனங்கள்
கேட்டுக்கு வெளியே ஆப்பிள் விற்கும் வண்டிக்காரன்

சிலைகள் போல் அவர்கள் ​

கறுப்புப் பெட்டி

றியாஸ் குரானா

யாருடைய கனவுக்குள் இருக்கும்
மனிதர்களுடனும் வசிக்க,
தூக்கத்தை பயன்படுத்த முடியாது
அதுதான் விழிப்பின் ரகசியம்
இந்தக் கதையில் சில புள்ளிகள் தளர்வாகவே உள்ளன
சில புள்ளிகள் இடம்மாறி மெதுவாக நகர்கின்றன
”இந்தக் கதை” என்பது வாசிக்கும் ஒவ்வொருவருக்கும்
வேறான, அவர்கள் நினைக்கின்ற கதையாகும்
அந்தக் காட்சியை முறையாக வர்ணித்தால்,
சில நேரங்களில் தூக்கமாகவும்
சில நேரங்களில் விழிப்பாகவும்
மாறி மாறி உருப்பெருகுகின்றன
இதைத் தாண்ட என்ன வழி
எதன் வாசலில் காத்திருக்க வேண்டும்
இப்படிச் சொல்லியே
பல ஆண்டுகளாக நான் தனியாகவே
தூங்கவும் விழித்திருக்கவும் செய்கிறேன்
மனம் திகைத்து உறையும் நேரங்களில்
எதிரே வந்து கனவு பிரகாசிக்கிறது
கனவுக்குள்ளிருந்து வெளியேறி வந்தவர்கள்
புன்னகையுடன் நமக்காக காத்திருக்கின்றனர்
இன்று காலையும் கனவுப் பெட்டியிலிருந்து
வெளியே வந்தேன்
உங்கள் குரல் கேட்டது.
அவரின் கனவுக்குள்ளிருக்கும் சிலருடன்
சண்டையிட வேண்டியிருக்கிறது
அந்த மனிதன் கனவுக்காக
எனது தூக்கத்தைத்தான் திருக்கொள்கிறான்
கனவு கறுப்புப் பெட்டி என்றான்
ஆதாரங்களை அதிலிருந்து
கண்டுபிடித்துவிட முடியுமென்றான்
என்னைப் பற்றி எல்லாம் தெரிந்தவன்போல்
கேலியாகச் சிரித்துவிட்டு
இந்த வரிகளில் நடந்து கடந்து போகிறான்
தயவு செய்து கொஞ்சம் அவனைப் பிடித்துத்தாருங்கள்
ஒருவர்மாறி ஒருவர் படிப்பதே
அவனைப் பிடிக்க கூடிய தந்திரமாகும்

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன்

ரா கிரிதரன்

அண்மையில், “உங்கள் கவிதைகள் எத்தகைய எதார்த்தத்தில் வேரூன்றி, எத்தகைய எதார்த்தத்தை நோக்கி விரிகிறது?” என்று என்னிடம் கேள்வி கேட்டிருந்தார் ஒரு நண்பர்.. “போட்டு வாங்குவோம்”, என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்ட நண்பர் கேள்விகளைத் தூண்டில்களாக பாவிப்பதால், கவிதை எழுதாத என் திசையிலும் அது விழுந்து பலி கொள்ளாமல் விலகியது.

கவிதை ஏதாவது ஓர் இடத்தில் வேரைப் பற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. அங்கேயே கிடக்காமல், எதையோ எட்டிப்பிடிக்கும் ஒரு தாவலையும் அது காட்ட வேண்டியுள்ளது. இந்த இரு நிலைகளையும் ரத்தினச்சுருக்கமாகவும் சொல்ல வேண்டியிருக்கிறது. அதே சமயம், இவற்றுக்கிடையேயான தூரமும் இரு துருவங்களுக்கிடையேயானதாக இருக்கவேண்டும். இதை ஒரு கவிதையை மட்டும் கணக்கிட்டுச் சொல்ல முடியாது.

ஆயுட்காலத்தில் ஒரு கவிஞன் எழுதும் சொல்வெளி தொடர்பற்ற அவனது சிந்தனைகளின் தொகை. ஆனால் அவன் அறியாமல் அவற்றினூடாக தறி போல ஓரிழை எல்லாவற்றையும் இணைக்கிறது. அவ்விழையை அவனது வாழ்க்கைப்பார்வை எனக்கொள்ளலாமா? அவன் பார்த்து அனுபவித்து அறிந்த காட்சியைக்கொண்டு நூலேணியை ஒரு திசை நோக்கி எறிகிறான். அவனது அனுபவம் என்பது கைக்கிளை. கவிதை புனையும் தருணம் வரை அதன் மறு கரையை அவன் அறிவதில்லை. அனுபவம் அவன் பற்றியிருக்கும் வேர். அங்கிருந்து எந்த நூலேணியைப் பிடித்து எங்கு செல்லும் என்பதை அவனது அறிதல் அவனுக்குப் புகட்டாது. கற்பனையும், பித்து உணர்வு நிலையும் அத்திசைக்காட்டிகள். (more…)

கற்பனையும் மொழியும்

றியாஸ் குரானா

பதாகை – கற்பனைக்கும் மொழிக்கும் உள்ள உறவின் இயல்பு என்ன?

றியாஸ் குரானா – மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரணமான கேள்விபோலதான் தோன்றும். ஆனால், உண்மையில் இது சற்றுக்கடினமான கேள்வியே. இந்தக் கேள்வியை பொருட்படுத்தி பதில் சொல்லுவதெனில், முதலில் ஒரு விசயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். கற்பனைக்கும் மொழிக்குமிடையில் உறவு இருக்கிறது என்பதுதான் அந்த விசயம். இப்படி ஏற்றுக்கொள்ளுவது என்னுடைய புரிதல் நிலைப்பாட்டில் பெரும் மாற்றங்களை கோரும் ஒன்று. ஆனால், பொதுவாக மொழிக்கும் கற்பனைக்கும் ஒரு உறவு உண்டென்று நம்பப்படுகிறது. அந்த உறவின் இயல்பு எப்படியானது என்பதில்தான், பல வகையான கருத்துக்கள் இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. அடிப்படையில் இது குறித்து வேறு கருத்துக்ளைக் கொண்டவன் நான். ஆக, இந்தக் கேள்விக்கான பதிலை நான் எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.

மொழி என்பதே ஒரு கற்பனைதான் எனச் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படிச் சொல்லுவதால், அடிப்படையில் மொழிக்கும் கற்பனைக்குமான உறவை மறுக்கிறேன். அப்படியானால், அதற்கிடையிலான உறவு குறித்து பேச எதுவுமில்லை. கற்பனையால் உற்பத்தி செய்யப்பட்ட மொழியே, மீண்டும் கற்பனையைப் பெருக்குவதற்கு தேவையான, மிக ஆற்றல் மிக்க உள்ளடக்கங்களையும், இயங்கு முறையையும் கொண்டிருப்பதால், இரண்டாம் நிலையில் மொழிக்கும் கற்பனைக்குமான உறவு உருவாகிவிடுகிறது. இந்த இடத்தில்- மொழிக்கும் கற்பனைக்குமான உறவின் இயல்பு என்ன என்பதை கற்பனை செய்யவும், உருவாக்கவும் முடிந்துவிடுகிறது என்பதும் ஒரு மர்மமான விசயம்தான். (more…)