கட்டுரை

அடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை

வரலாற்றில் நிகழ்ந்த அரிய நிகழ்வை விவரிக்கும் போது அதுவொரு வரலாற்றுத் தருணம் எனக் கூறுபவர் உண்டு. நான் எடுத்துக் கொண்டது காவியத் தருணம். ஆம், காவியத்திலுள்ள ஓர் அரிய நிகழ்வுகாதலன் தன் காதல் இணையை வர்ணித்தல் இயல்பு. கணவன் தன் மனைவியை வர்ணித்தல் அரிது. அதுவும் மற்றொரு ஆணிடம் தன் காதல் மனைவியின் உடலகை வர்ணித்தலென்பது அரிதினும் அரிதென்றே நான் கருதுகிறேன். கம்பராமாயணத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தக் காவியத் தருணம் வேறு ஏதேனும் காவியங்களில் இருப்பதாக என் சிற்றறிவிற்கு தென்படவில்லை.

வனவாசம் முடிவுறும் தருவாயில் இராவணன் சீதையை கவர்ந்து சென்றுவிட சுக்ரீவனின் வானரப் படைகளை சீதா தேவியைத் தேட அனுப்புகிறார்கள். அப்போது அனுமனைத் தனியே அழைத்த இராமன் தன் மனைவியை இதுவரை கண்டிராத அனுமனுக்கு அவளின் அங்க அடையாளங்களை விரிவாகக் கூறுகிறான்.

கம்பர், காவியத்தின் பல இடங்களில் சீதையின் அழகை வர்ணித்திருந்தாலும், இராமன் சீதையின் நினைவில் தனியே புலம்பியிருந்தாலும் அணுக்கன் அனுமனிடம் அவளின் அவயங்களின் அழகை விவரிப்பது அரிய அழகிய நிகழ்வு. இது கிஷ்கிந்தா காண்டத்தின் நாட விட்ட படலத்தில்இடம் பெற்றிருக்கிறது. முப்பத்து மூன்று பாடல்களில் பாதாதி கேசமாக விரிவாக வர்ணித்துள்ளார்.

இந்தப் பாடல்களின் மற்றொரு சிறப்பு பெண்களின் அவயங்களுக்கு மரபாக என்னன்ன உவமைகள் கூறப்படுகின்றன என்பதை வரிசையாகக் கூறிவிட்டு அதில் சீதைக்கு எது பொருத்தமானது என்பதைக் கூறுவது போன்று அமைக்கப் பட்டிருக்கும் பாங்கு.

கம்பராமாயணப் பதிப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கும் வரிசை எண்களைத் தந்தால் அது அவரவர் கையிலிருக்கும் பதிப்புகளிலிருந்து மாறுபடக்கூடும். எனவே கிஷ்கிந்தா காண்டத்தில் நாட விட்ட படலத்தில்33-ம் பாடலில் இருந்து அடுத்த முப்பத்து மூன்று பாடல்களிலேயே நான் குறிப்பிடும் பின்வரும் பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இராமன் ,சீதையின் இருபத்தாறு அவயங்களின் அடையாளங்களைக் கூறுகிறான். அனைத்தையும் கூற ஆவல் எழுந்தாலும் முக்கியமானதென்று நான் கருதுவனவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

கால் விரல்கள்

பாற்கடல் பிறந்த செய்ய

பவளத்தை, பஞ்சி ஊட்டி,

மேற்பட மதியம் சூட்டி,

விரகுற நிரைத்த மெய்ய,

கால் தகை விரல்கள்ஐய!-

கமலமும் பிறவும் எல்லாம்

ஏற்பில என்பது அன்றி, இணை

அடிக்கு உவமை என்னோ?

பாற்கடலில் தோன்றிய தெய்வப் பவளத்திற்கு பஞ்சின் மென்மையை ஊட்டி, அதன் மேல் முழு நிலவொளியை ஒளிரச் செய்து , திறமையுடன் அடுக்கி வைத்தது போன்ற எழிலுடன் சீதையின் கால் விரல்கள் இருக்கும். செந்தாமரை மலரையோ பிறவற்றையோ அப்பாதங்களுக்கு உவமையாக ஏற்க முடியவில்லையே வேறெதைக் கூறுவதென திகைக்கிறான். சொல்பவனே திகைத்துவிட்டால் கேட்பவன் நிலையென்ன.

வயிறு

ஆல் இலை, படிவம் தீட்டும்

ஐய நுண் பலகை, நொய்ய

பால் நிறத் தட்டம், வட்டக்

கண்ணாடி, பலவும் இன்ன,

போலும் என்று உரைத்த போதும்,

புனைந்துரை; பொதுமை பார்க்கின்,

ஏலும் என்று இசைக்கின், ஏலா;

இது வயிற்று இயற்கை; இன்னும்

பொதுவாக மகளிரின் வயிறுக்கு உவமையாகக் கூறப்படும் ஆலிலை, ஓவியம் தீட்டும் பலகை, பால் போன்ற வெண்தட்டு, வட்டக் கண்ணாடி போன்றவை சீதையின் வயிறுக்கு உவமையாகாது.

தனங்கள்

செப்பு என்பேன்;கலசம் என்பேன்;

செவ் இளநீரும் தேர்வென்;

துப்பு ஒன்று திரள்சூது என்பென்;

சொல்லுவென் தும்பிக் கொம்பை;

தப்பு இன்றிப் பகலின் வந்த

சக்கரவாகம் என்பென்;

ஒப்பு ஒன்றும் உலகில் காணேன்;

பலநினைத்து உலைவென் இன்னும்.

மகளிரின் தனங்களுக்கு உவமையாக சிமிழ் , பொற்கவசம் , செவ்இளநீர்க்காய் , சூதாட்ட களத்தில் வைக்கும் செப்பு , யானைத் தந்தம், சக்கரவாகப் பறவையென்று இத்தனை இருந்தாலும் சீதையின் தனங்களுக்கு ஒப்புமை கூற உலகில் ஒரு பொருளையும் காணாமல் வருந்துகிறேன்.

கைகள்

ஏலக் கொடு ஈன்ற பிண்டி இளந்

தளிர் கிடக்க; யாணர்க்

கோலக் கற்பகத்தின் காமர் குழை,

நறுங் கமல மென் பூ,

நூல் ஒக்கும் மருங்குலாள்தன்

நூபுரம் புலம்பும் கோலக் காலுக்குத் தொலையும்என்றால்,

கைக்கு ஒப்பு வைக்கலாமோ?

அசோக மரத்தின் கிளைகளிலுள்ள இளந்தளிர்கள் ஒருபுறம் கிடக்கட்டும், வளமையான கற்பக மரத்தின் மனங்கவரும் தளிர்களும், செந்தாமரை மலரும், நூல் போன்ற இடையுடைய சீதையின் சிலம்பு ஒலிக்கும் அழகிய கால்களுக்கே ஒப்புமை ஆகாதே அவற்றை கைகளுக்கு கூறலாமா.

கை நகங்கள்

வெள்ளிய முறுவல், செவ் வாய்,

விளங்கிழை,இளம்பொற்

கொம்பின்

வள் உகிர்க்கு, உவமை நம்மால்

மயர்வு அற வகுக்கலாமோ?

எள்ளுதிர் நீரே மூக்கைஎன்று

கொண்டு, இவறி, என்றும்,

கிள்ளைகள், முருக்கின் பூவைக்

கிழிக்குமேல், உரைக்கலாமோ?

வெண்மையான பற்களும் சிவந்த வாயும் ஒளிரும் அணிகலன்களும் கொண்ட இளமையான பூக்கொம்பு போன்ற சீதையின் கூரிய நகங்களுக்கு உவமையை குழப்பமின்றி தெளிவாகக் கூறமுடியுமா. மகளிரின் கை நகங்களுக்கு ஒப்புமை ஆகாது என தனது மூக்கை இகழ்வதாக் கருதி மகளிரின் இதழ்கள் போலத் தோன்றும் கல்யாண முருங்கையின் மலர்களைக் கொத்தும் கிளியின் மூக்கைத்தான் உரைக்க முடியுமா.

கழுத்து

அங்கையும் அடியும் கண்டால்,

அரவிந்தம் நினையுமாபோல்

செங் களி சிதறி, நீலம்

செருக்கிய தெய்வ வாட் கண்

மங்கைதன் கழுத்தை நோக்கின்,

வளர் இளங் கழுகும், வாரிச்

சங்கமும் நினைதிஆயின்,

அவை என்று துணிதி; தக்கோய்

சீதையின் கைகளையும் கால்களையும் காணும்போது செந்தாமரை நினைவுக்கு வருவதுபோல, சிவந்த, களி பொங்கும் குவளை மலர் போன்ற விழிகள் கொண்ட சீதையின் கழுத்தைக் காணும்போது வளரும் இளம் பாக்கு மரமும், கடலில் இருக்கும் சங்கும் உன் நினைவுக்கு வருமாயின் அது குற்றமென்ற முடிவுக்கு வருவாயாக.

வாய்

பவளமும், கிடையும், கொவ்வைப்

பழனும், பைங்குமுதப் போதும்,

துவள்வுஇல் இலவம், கோபம்,

முருக்கு என்று இத்தொடக்கம்

சாலத்

தவளம்என்று உரைக்கும்

வண்ணம்

சிவந்து, தேன் ததும்பும்ஆயின்,

குவளை உண் கண்ணி வண்ண.

வாய் அது; குறியும் அஃதே

சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை;

தேன் இல்லை; உள என்றாலும்,

கவர்ந்த போது அன்றி, நினைப்ப.

ஓர் களிப்பு நல்கா;

பவர்ந்த வாள் நுதலினால்தன்

பவள வாய்க்கு உவமை பாவித்து

உவந்தபோது, உவந்த வண்ணம்

உரைத்தபோது, உரைத்ததாமோ?

குவளை மலர் போன்ற விழிகளுடைய சீதையின் வாய்க்கு உவமையாக பவளத்தையும் சிவந்த நெட்டியையும் கோவைப் பழத்தையும், சிவந்த அல்லி மலரையும் துவளாத இலவ மலரையும், சிவப்பான இந்திர கோப பூச்சியினையும் கல்யாண முருங்கையின் பூவினையும் உவமை கூறினால் அது உண்மையாக இருக்காது. ஏனென்றால் சீதையின் வாய் பல வண்ண மலர்களின் சிவந்த தேனால் நிறைந்த இனிமையுடன் அழகாக ஒளிர்வதாகும்.

சிவந்த நிறத்தில் அமிர்தம் இல்லை, தேனும் இல்லை. அப்படி உள்ளது என்றாலும் சுவைக்கும் போதுதான் இனிமை தருமேயன்றி நினைக்கும்போதே இனிமை தராது. ஒளி பொருந்திய நெற்றியை உடைய சீதையின் பவளம் போன்ற வாய்க்கு மனதில் உவமையை எண்ணி மகிழ்ந்து அதே மனநிலையுடன் உரைப்பது உண்மையாகுமா.

காதுகள்

வள்ளை, கத்திரிகை வாம

மயிர் வினைக் கருவி என்ன,

பிள்ளைகள் உரைத்த ஒப்பைப் பெரியவர் உரைக்கின் பித்து ஆம்;

வெள்ளி வெண் தோடு செய்த

விழுத் தவம் விளைந்தது என்றே

உள்ளுதி; உலகுக்கு எல்லாம்

உவமைக்கும், உவமை உண்டோ?

வள்ளைக் கொடியின் இலையையும், கத்திரிக் கோலையும், அழகிய மயிரை ஒப்பனை செய்யும் கருவியையும் மகளிரின் காதுகளுக்கு உவமையாக இளையோர்கள் கூறுவனவற்றை

பித்துப் பிடித்த பெரியவர்கள்தான் கூறுவார்கள். சீதை அணிந்துள்ள வெள்ளியென மின்னும் வெண்காதணியின் தவமே அவளின் காதுகளாக அமைந்துள்ளது. உலகிலுள்ள எல்லாப் பொருளுக்கும் உவமையாகக் கூடிய ஒப்பற்ற ஒன்றுக்கு உவமை என்பதும் உண்டோ.

கண்கள்

பெரிய ஆய்; பரவை ஒவ்வா;

பிறிது ஒன்று நினைந்து பேச

உரிய ஆய், ஒருவர் உள்ளத்து

ஒடுங்குவ அல்ல; உண்மை

தெரிய, ஆயிரக் கால் நோக்கின்,

தேவர்க்கும் தேவன் என்னக்

கரியஆய், வெளிய ஆகும்; வான்

தடங் கண்கள் அம்மா!

தேவர்களுக்கெல்லாம் இறைவனான திருமாலின் நிறத்தின் கருமையையும் அவனிருக்கும் பாற்கடலின் நிறத்து வெண்மையையும் கொண்டு ஒளிவிடும் சீதையின் கண்களை ஆயிரம் முறை நோக்கினாலும், விரிந்து பரந்த கடலும் அதற்கு உவமையாகாது. அதைவிட சிறந்த உவமையை எவரும் உள்ளத்தால் எண்ணுவதும் அரியதாகும்.

புருவங்கள்

கேள் ஒக்கும் அன்றி, ஒன்று

கிளத்தினால் கீழ்மைத்து ஆமே;

கோள் ஒக்கும்என்னின் அல்லால்,

குறி ஒக்கக் கூறலாமே?

வாள் ஒக்கும் வடிக் கணாள்தன்

புருவத்துக்கு உவமை வைக்கின்

நாள் ஒக்க வளைத்து நிற்ப

இரண்டு இல்லை, அனங்க சாபம்.

வாள் போன்ற கண்களையுடைய சீதையின் புருவங்கள் ஒன்றுக்கொன்று உவமையாகுமே தவிர அவற்றிற்கு வேறொன்றைக் கூறுவது இழிவானதாகும். மனதிற்கு ஏற்புடைய உவமை பொருளுக்கும் பொருத்தமானதாக அமையுமா. சீதையின் புருவங்களுக்கு மன்மதனின் வில்லை உவமையாகக் கூறலாமெனில் அவனிடம் இரண்டு வில் இல்லையே.

முன் நெற்றி மயிர்

வனைபவர் இல்லை அன்றே,

வனத்துள் நாம் வந்த பின்னர்?

அனையன எனினும், தாம் தம்

அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா;

வினை செயக் குழன்ற அல்ல;

விதி செய விளைத்த; நீலம்

புனை மணி அளகம் என்றும்

புதுமை ஆம்; உவமை பூணா.

நாங்கள் வனத்திற்குள் வந்தபிறகு சிகையை பராமரிப்பதற்கு அப்பணியாற்றுபவர் எவருமில்லை. ஆயினும் இயற்கையான அழகுக்கு அழிவு உண்டாகாது. சீதையின் குழல் ஒப்பனையாளர்களால் குழன்றது அல்ல. நீலமணி போன்ற சீதையின் நெற்றியின் மேல் இயல்பாகவே விழும் கூந்தல் புதுமை கொண்டதாகவும் உவமை கூற முடியாததாகவும் விளங்கும்.

முகம்

கொண்டலின் குழவி, ஆம்பல்,

குனி சிலை, வள்ளை, கொற்றக்

கெண்டை,ஒண் தரளம் என்று இக்

கேண்மையின் கிடந்த திங்கள்

மண்டலம் வதனம் என்று

வைத்தனன், விதியே; நீ, அப்

புண்டரிகத்தை உற்ற பொழுது,

அது பொருந்தி ஓர்வாய்.

கரிய மேகத்தின் கொழுந்தும் சிவந்த அல்லி மலரும் வளைந்த வில்லும் வள்ளைக் கொடியின் இலையும் சிறப்புடைய கெண்டை மீனும் ஒளிரும் முத்துக்களும் மேலும் இவற்றிற்கு உறவாக விளங்குகின்ற ஏனையவும் திகழ்கின்ற சந்திர மண்டலத்தை சீதைக்கு முகம் என்று பிரம்மன் படைத்தான். தாமரை போன்ற முகம் உடைய அவளை நேரில் காணும்போது நீ இதை உணர்வாய்.

( மேகம் கூந்தலுக்கும், அல்லி மலர் வாய்க்கும், வில் புருவத்திற்கும், வள்ளையிலை காதுக்கும், கெண்டை மீன் கண்களுக்கும், முத்துக்கள் பற்களுக்கும் உவமையாக கூறப்பட்டுள்ளது )

கூந்தல்

காரினைக் கழித்துக் கட்டி,

கள்ளினோடு ஆவி காட்டி,

பேர்இருட் பிழம்பு தோய்த்து,

நெறி உறீஇ, பிறங்கு கற்றைச்

சோர் குழல் தொகுதி என்று

சும்மை செய்தனையது அம்மா!-

நேர்மையைப் பருமை செய்த

நிறை நறங் கூந்தல் நீத்தம்!

நுண்மையானதை பருப்பொருளாக்கியது போன்ற சீதையின் கூந்தல், கரிய மேகத்தை துண்டுகளாக்கி கட்டி, தேனும் அகிற் புகையும் அதனோடு சேர்த்து , பேரிருள் குழம்பை அதில் தோய்த்து, அதனை நெறிப்படுத்தி, ஒளிரும் குழல் கற்றையாக்கிய பெரும் சுமையைப் போல தோன்றுவதாகும்.

இன்சொற்கள்

வான் நின்ற உலகம் முன்றும்

வரம்பு இன்றி வளர்ந்தவேனும்,

நா நின்ற சுவை மற்று ஒன்றோ

அமிழ்து அன்றி நல்லது இல்லை;

மீன் நின்ற கண்ணினாள்தன்

மென்மொழிக்குஉவமைவேண்டின்

தேன் ஒன்றோ? அமிழ்தம்ஒன்றோ?

அவை செவிக்கு இன்பம்

செய்யா.

மீன் போன்ற கண்களையுடைய சீதையின் மென்மையான இனிய மொழிக்கு உவமை கூற விரும்பினால் இனிய தேன் என்றோ பால் என்றோ கூறமுடியாது. இவை செவிக்கு இன்பம் அளிக்காது. மூன்று உலகங்கள் வான்வரை எல்லையின்றி பரந்திருந்தாலும் நாவில் பரவும் சுவைகளில் அமிர்தத்தையன்றி சிறந்ததில்லை என்றாலும் அதுவும் செவிக்கு இன்பம் அளிக்காது.

நடையழகு

பூ வரும் மழலை அன்னம்,

புனை மடப் பிடி என்று இன்ன,

தேவரும் மருளத் தக்க

செலவின எனினும் தேறேன்;

பா வரும் கிழமைத் தொன்மைப்

பருணிதர் தொடுத்த, பத்தி

நாஅருங் கிளவிச் செவ்வி

நடை வரும் நடையள்நல்லோய்!

நற்குணத்தோனே, தாமரையில் வாழ்கின்ற இள அன்னப் பறவையும் அழகிய பெண் யானையும் தேவர்களும் கண்டு வியக்கும் நடையழகு உடையன. என்றாலும் சீதையின் நடையழகிற்கு இவற்றை உவமையாக சொல்லமாட்டேன். பாடல்கள் இயற்றுவதில் அனுபவம் வாய்ந்த மரபான கவிஞர்கள் இயற்றிய அடியொழுங்கும் நாவால் உரைக்கத் தக்க பாவழகும் விளங்க நடக்கும் சொற்களின் சிறந்த நடையழகு போன்றதாகும் சீதையின் நடை.

நிறம்

எந் நிறம் உரைக்கேன்?-மாவின்

இள நிளம் முதிரும்; மற்றைப்

பொன் நிறம் கருகும்; என்றால்,

மணி நிறம் உவமை போதா;

மின் நிறம் நாணி எங்கும்

வெளிப்படா ஒளிக்கும்; வேண்டின்

தன் நிறம் தானே ஒக்கும்;

மலர் நிறம் சமழ்க்கும் அன்றே!

சீதையின் நிறத்திற்கு எதை உவமையாக உரைப்பேன். மாவின் இளந்தளிர் நிறம் மாறி முற்றிவிடும். பொன்னிறமோ இவள் நிறத்திற்குமுன் கறுத்துத் தோன்றும். நவரத்தின மணிகளோ உவமை கூறத்தக்கதல்ல. மின்னலைக் கூறுவதென்றால் அது தோன்றியவுடனேயே நாணம் கொண்டு ஒளிந்துகொள்ளும். தாமரையும் அவள் நிறம் கண்டு நாணித் தாழும். எனவே சீதையின் நிறத்திற்கு ஒப்புமை அவள் நிறம் மட்டுமே.

கட்டுரையின் நீளம் கருதி புறங்கால்கள், கணுக்கால்கள், தொடைகள், அல்குல், இடை உந்திக்கமலம், மயிர் ஒழுங்கு, வயிற்று மடிப்பு, தோள்கள், முன் கைகள், கழுத்து பற்கள், மூக்கு மற்றும் நெற்றி போன்ற அவயங்களுக்கான பாடல்களை கூறாமல் விட்டுள்ளேன். ஆவலுடையோர் அணுகியறிந்து மகிழலாம்.

சீதையின் அடையாளத்தை விவரிக்க முயன்ற இராமன் பெரும்பாலான அவயங்களுக்கு ஒப்புமை கூறும் உவமைகள் இல்லையே என்று வருத்தமுறுகிறான். அத்துடன் எல்லாம் அறிந்த அனுமனே நீயே உணர்ந்துகொள், அறிந்துகொள் என்றும் கூறுகிறான். பிரம்மச்சாரியான அனுமன் பலவான்தான். அறிவுக் கூர்மையுடையவன்தான். ஆனால் கற்பனைத் திறனும் உடையவன் என இராமன் நம்புகிறான் போலும்.

ஆனால் சற்று கூர்ந்து நோக்கினால் ஒரு அவயத்தைப் பற்றி கூற முயலும்போது வேறு அவயங்களுக்கான உவமைகளை உரைப்பதைக் காணலாம். இவற்றை விரிவாக எடுத்துக் கூறாததற்கு காரணம் ஆர்வமுள்ள வாசகர்களின் கண்டறியும் சுவாரசியத்திற்கு தடை போடவேண்டாமே என்பதற்காகத்தான்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மற்ற அவயங்களுக்கு உவமை சொல்ல தயங்கி திகைக்கும் இராமன் , முகத்திற்கான அடையாளத்தை எந்த ஐயமோ தயக்கமோ இன்றி தெளிவாக உரைத்துள்ளான். ஒரு பெண்ணைத் தேடி செல்பவனுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டிய அடையாளம் முகம்தானே. எனவே அதனை அனுமன் மனதில் நிறுத்திக் கொள்ளுமாறு உரைத்துள்ளான் எனப் புரித்து கொள்ளலாம்.

இக்கட்டுரையின் நோக்கம் சீதையின் பாதாதி கேசத்தை இராமன் உரைக்கும் பாங்கினை விவரிப்பதுதான் என்றாலும் இராமன் கூறிய அடையாளங்களைக் கொண்டு அனுமன் எப்படி சீதையை அடையாளம் கண்டுபிடித்தான் என்பதைக் கூறினால்தான் நிறைவடையும் என கருதுகிறேன்.

சுந்தர காண்டத்தில் காட்சிப் படலத்தில் இக்காட்சி இடம் பெற்றுள்ளது. அனுமன் இலங்கைக்குள் நுழைந்து ஒவ்வொரு இடமாக தேடி மலர்த் தேன் நிறைந்த சோலை ஒன்றைக் கண்டான்.

கடக்க அரும் அரக்கியர்

காவல் சுற்று உளால்

மடக்கொடி சீதையாம்

மாதரே கொலாம்

கடல் துணை நெடிய தன்

கண்ணின் நீர்ப் பெருந்

தடத்திடை இருந்தது ஓர்

அன்னத் தன்மையாள்

//எம் அரும் உருவின் அவ்

இலக்கணங்களும்

வள்ளல் தன் உரையோடு

மாறு கொண்டில //

//அரவணைத் துயிலின் நீங்கிய

தேவனே அவன் இவள்

கமலச் செல்வியே //

கடல்போன்ற. தன் பெரிய கண்களில் நீர் பெருகித் தடாகமான இடத்தில் அமர்ந்த, அன்னம் போன்றவளைச் சுற்றி

கடந்து செல்ல இயலாதவாறு அரக்கிகள் காவல் காக்கிறார்களே. இளங்கொடி போன்ற அவள் சீதையாகிய பெண்தானோ?.

குற்றமற்ற இந்த உருவத்தின் இலக்கணங்கள் இராமன் கூறிய அடையாளங்களுக்கு மாறுபாடு இல்லாமல் ஒத்துள்ளது.

பாம்புப் படுக்கையில் துயில் கொண்ட தேவனே அவன். இவள் தாமரையில் அமர்ந்திருந்த திருமகளே.

இலங்கை முழுக்க நிறைந்திருந்தவர்கள் அரக்கர்கள். அரக்கிகளால் சீதை சூழப்பட்டுள்ளாள். ல்அரக்கிகளிடையே பெண்ணுருவில் துயருடன் இருப்பவளை கூர்ந்த அறிவுடைய அனுமன் எளிதாகவே அடையாளம் கண்டுவிடுவான். இது இராமனுக்கும் தெரியும். கம்பருக்கும் தெரியும். அதற்காக நீயே கண்டுபிடித்து வா என்று கூறிவிடமுடியுமா. காவியத்தின் கூறுகளிலொன்று, காவியகர்த்தா தான் வாழும் காலத்தில் வழங்குபவற்றில் முக்கியமானதென்று கருதுவனவற்றை காவியத்தினுள் அருமணியென பொதித்து எதிர்காலத்திற்கு கடத்துவதாகும். பத்தாயிரத்திற்கு அதிகமான பாடல்கள் கொண்ட காவியம் இவற்றையும் உள்ளடக்கித்தான் நிறைவு பெற்றுள்ளது.

எப்படியோ, நாம் மீண்டும், மீண்டும் படித்தும், மனதில் நினைத்தும், திளைத்தும் இன்புறுவதற்கு இத்தனை இனிய பாடல்கள் கிடைத்ததற்காக மகிழ்வோம்.

கடைசியாக ஒன்று, சுட்டிக் காட்டப்பட்டு இக்கட்டுரையை வாசிக்கும் வெண்முரசு ஆசானோ, நாஞ்சில் கும்பமுனியோ முனிந்து எனக்கு சாபம் ஏதும் கொடுத்துவிடக் கூடாதென விஷ்ணுபுரத்தில் புரண்டு புரண்டு துயிலும் நீள் கரியபெருமானை வேண்டிக் கொள்கிறேன்.

 

நிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்

அறிமுக எழுத்தாளர் நாகபிரகாஷ் எழுதிய எரி என்ற சிறுகதை தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன. யாவரும் பதிப்பகம் 2019 வெளியீடு. இந்த சிறுகதைகளை வாசிக்கும் போது முன்னுரையில் எழுத்தாளர் கோபாலகிருஷ்ணனின் தலைப்பையே மறுமொழிய வேண்டியிருக்கிறது. இந்த சிறுகதைகள் பால்யத்தின்/பதின்பருவத்தின் துயர் சித்திரங்கள். குடும்பச்சுழல் பொருட்டு சிறுவயதிலேயே ஏதேனும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்திலிருக்கும் கதைமாந்தர்களில் வாழ்க்கையை மையமாக கொண்ட பல சிறுகதைகள் இந்த தொகுப்பில் வாசித்து பல நாட்கள் இந்த தொகுப்பிலிருந்து வெளியேற இயலாமல் தடுமாறியிருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும் போது உணர்ச்சிவசப் படாமல் வெறும் புனைவாக விலகி நின்று வாசிக்க இந்த கதைகள் இடம் தரவில்லை.

என் வீடு என்ற கதையில் கதைசொல்லி மீண்டும் மீண்டும் தேடத் தொடங்குவது தனது வீடு என்ற ஒரு வடிவத்தை. அவனுடைய தேடலில் அடுத்த படி அன்னையின் அருகாமை கலந்த வெம்மை. குளிர்ந்த இரவுகளில் சுருண்டு கொள்ள நினைப்பவனுக்கு அந்த வெம்மை அன்னையின் புடவைக்குள் ஒளிந்திருக்கிறது. அந்த கடந்த காலத்தின் நினைவாக உபயோகமில்லாமலும் ஒரு ஸ்வெட்டர் வாங்க நினைக்கிறான். அன்னையின் அரவணைப்பில் அவளருகிலிருப்பது பிள்ளைக்கு எவ்வளவு பாதுகாப்பைத் தரும். இது ஒவ்வொரு குழந்தையின் உரிமையல்லவா குடும்ப சுமையை ஏற்க அந்த வெம்மை இழக்கும் பாலகனுக்கு இந்த சமூகம் என்ன பெரிதாய் தந்துவிட முடியும்?

கூப்பன் இந்த கதையிலும் இயல்பான இரண்டு சிறுவர்கள். இருவரின் உலகமும் மிக எளியது. அவர்கள் பாவனைகள், இன்பங்கள் எளியது. குடும்ப சூழல் பொருட்டு பொருள் ஈட்ட பட்டறைகள், கடைகளில் வேலை செய்யும் சிறுவர்கள் இயல்பாகவே தமக்கென்று ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றார்கள். இயல்பாகவே ஒருவர் மேல் மற்றொருவர் அன்பாலும் அக்கரையாலும் பிணைகின்றனர். தினப்படி வேலையில் குடும்பத்துக்கு தேவையான சம்பளம் கிடைக்காத போது அவர்கள் வருமானம் ஈட்ட வேறு வழிகளை தேடத் தொடங்குகின்றார்கள். அது மிக இயல்பாக வெளிப்படும் அருமையான கதை. ஆனால் பள்ளிக்கூட பையை சுமக்க வேண்டிய கையால் துறு பிடித்த இரும்புப் பிசிறுகளை அள்ளிப் போட்டுவிட்டு கையில் கசியும் ரத்தக்காயங்களை சித்திரமாக்கியிருக்கும் வரிகளை படிக்கும் போது அய்யோ இந்த பையன் டெட்டனஸ் ஊசி போட்டுக்கொள்வானா அப்படி போடவில்லையென்றால் என்ன ஆகும் என்று அது புனைவென்பதையும் மீறி தோன்றும் தருணமே இந்த கதையின் வெற்றி என்று நினைக்கிறேன். இது போன்ற தரிசனங்கள் இவர் கதைகளில் பல இடங்களில் நிகழ்கிறது.

சுவருக்கு அப்பால் சிறுகதை மிக அடர்த்தியான கதை. இந்த கதையிலும் கதைசொல்லிக்கு தேடல் இருக்கிறது. அந்த தேடல் ஆன்மீகத்துக்குள் என்ற புரிதலோடு இருந்த அவனுக்குள் நிகழும் மாற்றமே கதை. அந்த கதையை அவர் கதையாக்கிய விதம் கதையுள் நாமும் பயணிக்கும் நம்பதன்மையை கொடுக்கிறது. கதைசொல்லி பதின்பருவத்து இளைஞன் போல சித்தரிக்கபடுகிறது. ஆனால் அவனுக்கு சக பிரம்மச்சாரிகளிடம் பழக தயக்கமிருக்கிறது. வெளியிலிருந்து அவன் இருக்குமிடம் வரும் சிறுவர்களுடன் பழகுவதை விரும்புகிறான். இன்னொரு கதைமாந்தரிடம் தனது வயதுக்கும் தகுதிக்கும் மீறி ஒரு சிறுவன் நட்பு பாராட்டப்படுவதாக, அவர் அதை விரும்புவதாக அல்லது அதுவே வசதியானது என்ற சித்தரிப்பு வருகிறது. இருவருமே ஏதோ தாழ்வு மனப்பான்மையோடு இருக்கும் உளவியலை கதையோட்டத்தோடு நமக்கு புரியவைக்கிறார் சிறுகதையாசிரியர். ஆகவே தான் இவ்விருவராலும் சம அந்தஸ்துள்ள நபர்களுடன் எளிதாக உறவாட முடிவதில்லை. தேடலும், தாழ்வுமனப்பான்மையும் கதைசொல்லியை எதிலும் நிலையற்று தடுமாறவிடுகிறது. மிக முக்கியமான கதை.

நோக்கு கதையில் வரும் ஒரு கதைமாந்தாரான பஸிரா, அவள் முன் முறை தனியாக பயணித்து வரும்போது அவளுக்குள் உருவாகும் உணர்வு கதையின் உச்சமாகிறது. இந்த கதையில் இருக்கும் பல கதைபாத்திரங்கள், உரையாடல்களை கொஞ்சம் குழப்பத்தை உண்டாக்கினாலும், பஸிரா போன்ற பெண்ணின் மனநிலையை மிக நுட்பமாக பேசியதில் இந்த கதை முக்கியமானதாகிறது. கதையுள் ஒரு குறிப்பிட்ட இனத்து மக்களின் வீடு, நடைமுறை எல்லாமும் எப்படியிருக்குமென்று மிக நுட்பமாக விளக்கி இருப்பதும், கதை நிகழும் காலத்தை சொல்ல தற்காலத்து கைபேசி செயலிகளை குறிப்பிட்டு எழுதியிருப்பது மிக கூர்ந்து நோக்க வேண்டிய விஷயம். இந்த காலத்திலும் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த பெண் தனியாக பேருந்தில் பணிப்பது ஒரு சாகச செயல் என்பது போன்ற கதையமைப்பு வியக்கதக்கது. ஆனால் தொகுப்பின் பலவீனமான கதைகளில் இதுவும் ஒன்று.

அட்டை துப்புரவு தொழிலாளியின் எளிய வாழ்க்கை. அடையாளம் என்பது எல்லோரும் ஒருவித லட்சியம். அதுவும் மறுக்கப்பட்டு, மிக போராடி பின்னர் பெறும் அடையாளம் நிச்சயமாய் பித்துமனநிலையை தரும் போதை. அந்த மனநிலையை அப்படியே அழகாய் கதைக்குள் கொண்டு வந்திருக்கும் நாகபிரகாஷ் இந்த கதையின் மூலம் மிகச்சிறந்த கதைசொல்லியாக மாறுகிறார். இந்த கதையில் சொல்லிக் கொண்டிருக்கும் கதையொன்று உள்ளே மறைத்து வைத்திருக்கும் கதை இன்னொன்று, உறவுகளில் கயமை, தன் தகுதியை உணர்ந்திருக்கும் கதைசொல்லி ஒருவேளை அவன் தன்னைத் தானே குறைவாய் மதிப்பிட்டுக் கொள்கின்றானோ என்று கூட தோன்றுகிறது. மிகவும் நேர்த்தியாக சிறுகதையின் கச்சித வடிவத்தோடு எழுதி இருக்கும் இந்த கதை தொகுப்பின் மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று.

கோதைமங்கலம் நாகபிரகாஷ் கதைகளில் இன்னொரு பரிமாணம், தோற்றத்தில் கொஞ்சம் பருமனான அழகு என்பது பால்ய காலத்திலும் இல்லாத ஒரு இளைஞன், சொந்த வாழ்க்கை பிரச்சனைகளுக்குள், தனது இழந்த காதலை நினைத்து அந்த நினைவுகளை எங்காவது அனாதை போல விட்டுவிட்டு போக வேண்டும் என்று துடிக்கும் சராசரி இளைஞன். அவனால் அந்த நினைவுகளில் கிளறும் விதம் வந்து சேரும் இலச்சினை பயணிக்கும் பேருந்திலேயே விட்டுவிட்டு கிளம்ப மட்டுமே முடிகிறது, வேண்டாத நினைவு தானே என்ற போதும் கூடவே வைத்துக் கொள்ளவும் முடியாத ஒன்று அதை வீசியெறிய ஏன் மனம் வருவதில்லை ஏன் இந்த தெளிவின்மை, இந்த தெளிவின்மையே அகசிக்கல் அனைத்திருக்குமான திறவுகோல். ஒரு பேருந்து பயணம் முடிவதற்குள் கதைசொல்லிக்குள் நடக்கும் மன போராட்டங்கள் அவை சொல்லப்பட்ட விதம் இதனை கச்சிதமான கதையாக காட்டியிருக்கிறது.

அடுத்த கதை சகடம், இந்த கதையில் அப்பாவின் கதையொன்று, மகனின் கதை ஒன்று, இரண்டும் இணைத்து பின்னும் கதை இன்னொன்று. இந்த வடிவயுத்தியை பலர் உபயோகபடுத்தியிருக்கின்றனர். பெரும்பாலான கதையில் வரும் கதைசொல்லிகள் சிறுவர்களாக இருக்கின்றனர். அவர்களின் அப்பா கொஞ்சம் பொறுப்பினை திறந்தவராக அல்லது எந்த வேலையிலும் நிலைக்க முடியாத, பணம் சேர்க்க திறமையற்றவராக இருக்கிறார். இது ஒருவித டெம்பிலேட் மனநிலையை நமக்குள் கொண்டு வந்துவிடுகிறது. மேலும் இவர் கதையில் சொல்லும் கதை, சொல்லப்பட்ட கதைக்கிடையே மறைபொருளாக உணர்த்தபடும் கதை வாசிப்பனுபவத்தை இன்னும் சுவாரஸ்யாமாக்குகிறது. இதுவே நாகபிரகாஷ் பெரும்பாலான கதைகளில் கையாளும் உத்தியாகும். இது வாசிப்பு சுவாரஸ்யத்தை கூட்டினாலும் பல இடங்களில் கதையின் உள்முடிச்சிகளில் சிக்கி சிலசமயம் கதையிலிருந்து நழுவிச் செல்ல வாய்ப்புகளை உள்ளடக்கியே இருக்கின்றன.

எரி நுட்பமான விஷயங்கள் பல பின்னப்பட்ட பலகதைகளை உள்ளடக்கிய கதை, கூட்டத்தில் வளர்மதியை தேடும் ஒருவரி ஒரு காதல் கதையை சொல்ல வந்து சொல்லாமலோ, சொல்ல முடியாமலோ விக்கித்து நிற்கிறது அல்லது நீங்கள் ஊகித்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அடுத்த வரிக்கு நகர்ந்து விடுகிறது. திருவிழா காட்சிகளும், நிஜ மாந்தர்கள் கடவுளர்களாக வலம் வரும் சித்தரிப்புகளும் வாசிக்க மிக சுவாரஸ்யமானது. பலரும் இது போன்ற காட்சிகளையும் வண்டி வேடிக்கை என்ற ஒரு செயல்பாட்டையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தற்கால திருவிழாக்களில் அம்மன் அலங்கலரமாய் டிராக்டர் வண்டிகளில் வருவதை கண்டிருக்கிறேன். ஆனால் நிஜ மாந்தரகள் வேடமணிந்து வலம் வருவதை எங்கும் கண்டதில்லை. மேலும் கதைசொல்லி வழக்கமாக பாட்டி வீட்டுக்கு வரும் போது நல்ல சாப்பாடு கிடைக்கும், போகும் போது கைநிறைய பலகாரம் எடுத்துப் போகலாம் என்று நினைத்திருந்தவனுக்கு கனவில் பழைய சோறு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அது பாட்டி தன் அம்மாவையும் தன்னையும் உதாசீனம் செய்வதாக கதைசொல்லி மனதுக்குள் உணர்வதால் வருகிற கனவா? இந்த காட்சிகள் வாசகர் தனக்கான பலகதைகளை உருவாக்கிக் கொள்ள வகைசெய்யும் வண்ணமிருக்கின்றன. அதன் பிறகு மனதுக்குள் திருவிழாவிற்கு கதைசொல்லியின் அன்னை ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. உடல் வாதையும், வறுமையும் சிறு சிறு சித்தரிப்புகளிலேயே எழுதப்பட்டிருக்கும் இந்த கதையில் கதைசொல்லியின் உடல் சூடு கண்ணை எரிப்பதற்கும், பாட்டியின் பெருமூச்சுக்கும் இருக்கும் இணைப்பை அவ்வளவு எளிதாக தரிச்சித்து விட முடியாத அழமான கதை.

பவித்ரா இந்த கதையும் பல நுண்கதைகளால் நெய்யப்பட்ட கதை, கதையின் மையப் பிரச்சனையான பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தையின் மென் மனநிலை, ஆனால் இது மட்டுமே கதையில்லை, கதைசொல்லியின் மனைவிக்கும் கதைசொல்லிக்கு இருக்கும் உறவுசிக்கலை பூடகமாய் சொல்லும் கதை. கதைசொல்லியின் மனைவி ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு, கதைசொல்லி பாதுகாக்கும் புத்தகங்களை இடம் மாற்றி வைப்பதற்கும், மகளிடம் கதைசொல்லி நாம மட்டும் வேறு எங்காவது போயிடலாமா என்று கேட்பதற்கும் இருக்கும் இணைப்பை மறுமுறை இந்த கதையை வாசிக்கும் போதே புரியும். எளிய உறவுசிக்கில் இடையே சிறு பெண் குழந்தை தனது தாய் தன்னைக்குமிடையே பின்னப்படும் இடைவெளியை விளக்கிக் கொள்ள முடியாமல் தவிக்கும் சித்தரிப்பு அழகான இடம். ஆனால் இந்த கதையின் குவிமையம் வெறும் உறவு சிக்கல் என்று திசையில் மட்டுமின்றி குழந்தையின் உளவியலை கையாண்டிருந்தால் வேறு ஒருதளத்திற்கு நகர்ந்திருக்க வேண்டிய கதை.

நாகபிரகாஷ் கதைகளில் சிறு சிறு எளிய வரிகளை சரியாக பொருத்திப் பார்க்காவிட்டால் நம்மை எளிதாக ஏமாற்றிவிடும்படி அமைத்திருக்கிறார். நாகபிரகாஷின் கதைகள் அத்தனையும் வாசிக்கும் போது முக்கியமாக புலப்படும் ஒரு விஷயம் இவரது கதைக்களுக்குள் உலவுபவர்கள் கல்மிஷமற்ற அப்பாவித்தனமும், தோல்வியை எப்போதும் தரிசிக்கும், தாழ்வுமனமும் அழகின்மையுடன் கூடைய கதைமாந்தர்கள். ஆயினும் புகார்கள் எதுவும் இல்லாமல் தனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை வாழும் மிக மிக சாதாரணமானவர்கள். இவற்றில் எந்த இடத்திலும் கள்ளமில்லை. இவர் படைப்புகளில் யாரும் எவர் மீதும் சலிப்பையும், வெறுப்பையும் சுமத்தும் எந்த பதிவுகளுமில்லை. அடித்து துன்புறுத்தும் வன்முறைகள் இல்லை. அறியாமை, வறுமை, குடும்ப அமைப்பு என்ற கடமை என்ற பெயரால் செல்லும் பல்வேறு வன்முறைகளில் பொருட்டு பாதிக்கப்பட்ட மாந்தர்களின் கதைகள் இவை என்று சொல்லலாம். நாகபிரகாஷின் கதைகள் அதிக வாசிப்பு கவனத்தை கோருபவை. அதனால் எளிய வாசகர்கள் இந்த கதைகள் சென்றடைவது மிகவும் சிரமம். இவரது மொழியை கதை சொல்லும் முறையை இன்னும் கொஞ்சம் எளிமைபடுத்தி வரும்காலங்களில் கதைகளை எழுதுவார் என்று நம்புகிறேன். அவரது முதல் தொகுப்பான எரி பரவலான வாசிப்பைப் பெற்று அதிகம் பேசப்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

சிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ

புள்ளில் தொடங்கி புள்ளில் முடியும் ஒரு சிறுகதைத்தொகுப்பு ரமேஷ் கல்யாண் அவர்களின் ”திசையறியாப் புள்” தொகுப்பு. ஊரில் ஓர் காணியில்லை; உறவு மற்றொருவரில்லை என்ற ஆழ்வாருக்கு பரமனின் பத்ம பாதமே தன் துணை என்ற தெளிவு இருந்தது. ஆனால், எத் திசையில் செல்வது என்ற எவ்விதத் திட்டமும் இல்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல், தன் சிறகுகளையும் இழந்த நிலையில் ஒரு பறவை என்ன செய்யும்? ரமேஷ் கல்யாணின் தொகுப்பில் முதலில் இடம் பெற்றிருக்கும் விடுதலை கதையில் வரும் சிறகுகள் வெட்டப்பட்ட (ஜோசியம் சொல்லும்) கிளியும், தொகுப்பின் கடைசிக் கதையில் வரும் சிறுமியும் அடுத்து என்ன செய்வது எனத் திசை தெரியாது தவிக்கும் திசையறியாப் புட்கள்தான். பறவைகளும், விலங்குகளும் சுதந்திரமாய்த் திரிந்து கொண்டிருக்கும்போது அவை தங்கள் வாழ்வாதாரத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்கின்றன. ஆனால், அவற்றை மனிதன் தனக்காக இழுத்து வந்து வைத்துக் கொண்டு, வேண்டும்போது பயன்படுத்திக் கொண்டு, வேண்டாமெனும்போது கை விட்டு விடும்போது, அவை தங்கள் பழைய வாழ்க்கையையும் வாழ முடியாமல், குறைப்பட்டுப்போன அவற்றுக்கு ஓர் ஆதரவையும் தேடிக் கொள்ள முடியாமல் செல்லும் திசை தெரியாமல் அபலை நிலையில் நிற்கின்றன.

மனிதன் ஒரு சமூக விலங்கு. ஒருவரை மற்றவர் சார்ந்த வாழ்க்கை வாழவே பழகியிருக்கிறான். சொந்தம், பந்தம், பாசம், அன்பு, அரவணைப்பு, ஆதரவு என்னும் சிறகுகளால் ஆன பறவையாயிருக்கிறான். இந்தச் சிறகுகள் வெட்டப்படும்போது அவனும் வாழ்க்கையில் திசை தெரியாமல்தான் தவிக்கிறான்.

முதல் கதையில் வரும் கிளியைத் தன் வயிற்றுப் பிழைப்புக்காக அழைத்து வந்த சோதிடன், பால் பழம் கொடுத்து வளர்க்கிறான். தன்னுடைய மகனைத் தான் இழக்கப் போகிறோம் என்பதைத் தன்னால் கணிக்க முடியாத வருத்தமோ, கிளி மீது ஆசையாக இருந்த தன் மகனே இறந்து விட்டான், இனிமேல் இந்தக் கிளி எதற்கு என்ற வெறுப்போ, தன் மகன் ஒரு தீ விபத்தில் மரணித்தவுடன், இந்தக் கிளியைக் கொண்டு போய் அத்துவானத்தில் விட்டு விட்டு வந்து விடுகிறான். தன் மகன் செய்து வந்த முறுக்கு வியாபாரத்தைத் தொடர விரும்புகிறான். கிளியின் மீது அவன் காட்டிய அன்பு எங்கே போனது? சோதிடத் தொழிலையே விட்டு விட்டால் கூட, அந்தக் கிளி அந்த வீட்டில் ஒரு ஓரத்தில் இருந்து விட்டுப் போகக் கூடாதா? என்ற கேள்விகள் வாசிப்பவர் மனதில் ஒரு பரிதாப உணர்ச்சியை உருவாக்குகிறது. அந்தக் கிளி திசையும் தெரியாமல், தான் செல்ல வேண்டிய இடமும் தெரியாமல், தவித்து நிற்கிறது.

தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கடைசிக் கதையில் பள்ளிச் சிறுமி ஒருத்தி, பள்ளியில் ஒரு கல்வி உதவி பெறுவதற்காக நேர்காணல் செய்யப் படுகிறாள். அந்த உதவித் தொகை தாயில்லாப் பெண் குழந்தைகளுக்கே கிடைக்கும். இவள் தந்தையுடன் இருக்கிறாள். அவளது தாய், அவர்களுடன் இல்லாமல், வேறு ஒரு வாழ்க்கையைத் தேடிக் கொண்டு விட்டாள். இந்தச் சிறுமியிடம் அவள் தந்தை, தாயை இழந்தவள் என்று சொல்லச் சொல்கிறான். ஆனால், அந்தச் சிறுமி, புரியாமால் தவித்து, தன் தாய் இருக்கிறாள் என்றே சொல்கிறாள். இந்தச் சிறுமிக்கு அந்த உதவி கிடைக்குமா கிடைக்காதா? என்பது பொருட்டல்ல. தாயன்புக்கு ஏங்கும் அந்தப் பிஞ்சு உள்ளத்திற்கு தன் தாய் தங்களுடன் ஏன் இல்லாமல் போனாள் என்றோ, தன் தாய்க்கும், தந்தைக்கும் இடையேயான பிணக்கு பற்றியோ என எதுவுமே தெரியாத நிலையில், தாய் இருக்கிறாள் என்றே சொல்லத் தெரிகிறது.. அந்தப் பிஞ்சு மனது என்ன செய்வது என தவித்து நிற்கிறது. முதலில் அனாதரவாக விடப்பட்ட கிளியும், இந்தச் சிறுமியும் ஒரே மாதிரியான நிலைமையில் நம் முன் வந்து பரிதாபமாக நிற்கிறார்கள்.

காற்றின் விதைகள், ந்யூரான் கொலைகள் இரண்டு கதைகளும், பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையேயான அன்பு, பாசம், அனுசரணை எல்லாமான மெல்லிய சிறகுகள் பணம், பொருள், சொத்து, சுகம் இவற்றால் சிதைக்கப்படுகிறது.. இந்தக் கதைகளில், பிள்ளைகள்,வளர்ந்து முன்னேறி, தமக்கென ஒரு வாழ்க்கை கிடைத்த பிறகு, தம் பெற்றோர் தமக்காக பட்ட கஷ்டங்களை மறந்து விடுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு வழங்கிய அத்துணை பேறுகளையும் மறந்து அவர்களிடமிருந்து தமக்கு வர வேண்டிய பொருள் சார்ந்த பயனையே எதிர்பார்த்து நிற்கிறார்கள். அதே போல. பெற்றோரின் எதிர்பார்ப்பு எப்படி பிள்ளைகளின் வாழ்க்கை சிதைய காரணமாகிறது என்பதை ”சாலமிகுத்து “ கதை பேசுகிறது. மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையில்லை என்றும், அதற்காக மட்டுமே பதற்றமாகவே இருக்க வேண்டியதில்லை என்றும், மதிப்பெண்கள் குறைந்தால் ஒன்றும் ஆகிவிடாது என்றெல்லாம் நம்பிக்கை கொடுக்க வேண்டிய பெற்றோரே, பிள்ளைகளை மதிப்பெண், மதிப்பெண் என்று ஓட விட்டு, மனச் சிதைவுக்கு ஆளாக்கி விடுகிறார்கள். பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கும், மனிதன் வாழ்வில் உயர்வதற்குமே கல்வி என்பது மதிப்பெண்வயமான கல்வியாக மாறி, மகிழ்ச்சியாகக் கல்வி கற்க வேண்டிய மாணவர்களின் மனங்களின் ஆனந்தச் சிறகுகள் சிதைக்கப்பட்டு மதிப்பெண் கூண்டிற்குள் அடைக்கப்படுகிறது.

மனித குலத்தின் ஒரு பிரிவினர் காலங்காலமாக ஒடுக்கப்பட்டே வந்திருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் மேலடுக்கைத் திறந்து விட்டால், அதற்கும் கீழே எத்தனை பேர் எத்தனையோ காலமாக ஒடுக்கப்பட்டு எழும்ப முடியாமல் புதையுண்டு கிடக்கிறார்கள் என்பது புரியும். இப்படி அடிமைப்பட்டுக் கிடக்கும் சமுதாயத்தைத் தூக்கி விடுவதற்கு ஒரு யானை பலம் தேவையாய்த்தானிருக்கிறது. ஒசூரை அடுத்த பாகலூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கல் சக்கரங்கள் காணப்படுவதை வைத்து புனைவாக தேரோட்டத் திருவிழா நடக்கும் கதை ஒரு விரிவினைக் கொடுப்பதாகவே இருக்கிறது.

. இப்படிக் குறிப்பிடும்படியாக பல கதைகள் இருப்பது மகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது. அதோடு, பல கதைகளில் ஆசிரியர் கையாளும் உதாரணங்கள் மிகவும் ரசிக்கத்தக்கவை.

பிரமிடுகளின் படிக்கல் போல நிறைய அட்டைகள் ( விடுதலை )

வானிலிருந்து விழும் மழை மணிச்சரங்கள் ( அபேதம் )

சாமானியர்களின் வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது பட்டறிவுகளின்

தேய்வுக்கும், அற்புதங்களின் மீதான நம்பிக்கைக்கும் உள்ள இனங்காணவியலா இடைவெளி பெர்முடா முக்கோணம் போன்றதுதான். ( நெனப்பு )

பொசுங்கியபலாக்கொட்டைகள் போன்ற மங்கலான வறண்ட கண்கள் ( எரிகற்கள்)

ஒழுகும் மெழுகு போல கனத்த பேச்சற்ற மௌனம் ( எரிகற்கள்)

வாழைப்பழத்தை வெட்டும்போது கசியும் மௌனம் ( வுல்லன் பூக்கள் )

கல்லுப் பிள்ளையார் கதையில் மனிதம் என்பது மதம் கடந்தது என்பதை அருமையாகப் பதிவு செய்திருக்கிறார். கடைசி வரிகள் மட்டும் வலிந்து திணிக்கப்பட்ட தோற்றத்தைக் கொடுக்கிறது. மற்றப்படி, தொகுப்பிலுள்ள 17 கதைகளுமே நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது. ரமேஷ் கல்யாண் அவர்கள் முதல் சிறுகதைத் தொகுப்பில் வெற்றி அடைந்திருக்கிறார் என்றே சொல்லலாம். இதை அழகான முறையில் வெளிக் கொண்டு வந்திருக்கும் சிறுவாணி வாசகர் மையத்தார் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

—————————————

( திசையறியாப் புள் – ஆசிரியர்: ரமேஷ் கல்யாண் – பவித்ரா பதிப்பகம் – வெளியீடு: சிறுவாணி வாசகர் மையம், கோவை )

நவல் எல் சாதவியின் “சூன்யப் புள்ளியில் பெண்” வாசிப்பனுபவம் – முரளி ஜம்புலிங்கம்

“நான் ஒருவரையும் கொலை செய்ததில்லை. அது உண்மைதான். எனக்கு அதைச் செய்வதற்கு துணிச்சலில்லை என்பதுதான் காரணமே தவிர, விருப்பமில்லை என்பதல்ல”. Eduardo Galeano

கொலைக் குற்றத்தி​​ற்காக மரண தண்டனை பெறப்போகும் ஒரு பெண்ணை சந்திக்க மனநல மருத்துவர் ஒருவர் சிறைச்சாலைக்கு செல்வதில் இருந்து கதை தொடங்குகிறது. அந்த பெண் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று மறுத்துவிடுகிறார். மருத்துவரின் தொடர் முயற்சிக்குப் பிறகு சந்திக்க உடன்படுகிறார். “நானொரு வெற்றிகரமான விபச்சாரி. ஒரு விபச்சாரி எத்தனை வெற்றிகரமானவளாக இருப்பினும், அவளால் அனைத்து ஆண்களையும் அறிந்திருக்க முடியாது. எனினும், நான் சந்தித்த அனைத்து ஆண்களின்மீதும் எனது கையை உயர்த்தி, அவர்களின் முகத்தில் ஓங்கி அறைய வேண்டும்” என்ற  ஒரு பெருவிருப்பம் மட்டும் தனக்கு இருந்ததாகக் கூறி தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.

எகிப்தில் ஒரு கிராமத்தில் பிறந்த “பிர்தவ்ஸ்” சிறு வயதிலேயே தன் தாயை இழந்து விடுகிறாள். குழந்தைகளைப் பொருட்படுத்தாத தந்தை மற்றும் சித்தியுடன் வாழ்கிறாள். அவளுக்கான ஒரே ஆறுதல் கிராமத்திற்கு வரும் அவள் மாமன் மட்டும்தான். அவள் உடலுடன் அவன் விளையாடினாலும் அவனின் கனிவான தன்மை அவளை ஈர்க்கிறது. மாமனுடன் கிளம்பி நகரத்திற்கு வருகிறாள். மாமன் அவளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறான். நன்றாகப் படித்து பொறுப்புள்ள பணியில் சேர விருப்பப் படுகிறாள். நல்ல  மதிப்பெண்களும் பெறுகிறாள் . ஆனால் பிர்தவ்ஸின் மாமனும் அவர் மனைவியும் அவளை அறுபது வயதுகளில் இருக்கும் ஒருவனுக்கு மணமுடித்து விடுகிறார்கள். இதுவரை துன்பங்களைச் சந்தித்த பிர்தவ்ஸ் கொடூரங்களைச் சந்திக்க ஆரம்பிக்கிறாள். அவள் கணவனுக்கு உதட்டின்கீழே மோவாயில், ஒரு பெரிய வீக்கம் இருக்கிறது. அதில் இருந்து துருப்பிடித்த குழாயின் வழியாகத் துளிகள் ஒழுகுவதுபோல இரத்தச் சிவப்பிலோ அல்லது சீழ்போன்று வெண்மஞ்சள் நிறத்திலோ திரவம் வெளியேறியபடியே இருக்கும். செத்துப்போன நாயின் உடலில் வீசும் துர்நாற்றத்தைப் போன்ற கடுமையான வீச்சத்துடன்கூடிய திரவத்தை அந்தத் துளை வெளியேற்றும். இரவுகளில், அவன் கால்களும் கைகளும் அவளை வளைத்துப் பிணைத்து கொள்ளும். பல வருடங்களாக நல்ல உணவைக் காணாதவன் ஒரு பருக்கையைக்கூட மிச்சம்வைக்காமல் கிண்ணத்தை வழித்து உண்பதைப்போல, அவனது கரடுதட்டிப்போன விரல்கள் அவள் உடல் முழுவதும் தடவிப் பார்க்கும். பெரிய கஞ்சனான அவன் ஒரு முறை அவள் உண்ணும்போது ஒரு பருக்கை கீழே விழுந்ததற்காக, தன் காலனியால் அவள் உடல் முழுதும் அடித்து விளாசி விடுகிறார். வலி தாங்க முடியாமல் தன் மாமனிடம் வந்து முறையிடுகிறாள். அதற்கு மாமனோ, மதத்தின் கட்டளைகள் இத்தகைய தண்டனைகளை அங்கீகரித்துள்ளது. ஒழுக்கமான பெண்மணி எவரும் , தன் கணவனைப்பற்றி குறைகூறமாட்டார்கள். பூரண பணிவுடன் இருப்பதே அவளது கடமை என்று சொல்லித் திரும்ப அனுப்பி விடுகிறார். செல்வதற்கு இடம் இல்லாது எகிப்தின் வீதிகளில் நடந்து செல்கிறாள். தன்னுடைய பள்ளிச் சான்றிதழைப் பார்த்து யாரவது தனக்கு வேலை கொடுக்க மாட்டார்களா என்று ஏங்குகிறாள். ஒருவன் அடைக்கலம் கொடுக்கிறான். இதுவரைக் கொடூரமாக இருந்த பிர்தவ்ஸின் வாழ்க்கை குரூரமாக மாறுகிறது.

அடைக்கலம் கொடுத்தவன் அவளைப் பிய்த்துத் தின்கிறான். தான் தின்றது மட்டுமில்லாமல் தன் நண்பர்களுக்கும் அவளை உணவாக்குகிறான். அங்கிருந்த தப்பித்த அவளைப் பல ஆண்கள் அவளின் அனுமதி இல்லாமல் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அப்போது ஒரு முடிவுக்கு வருகிறாள். இத்தனை நாளும் தன்னைத் தானே அவள் உயர்வாக மதிக்கவில்லை என்பதை உணர்கிறாள். ஒரு ஆணுக்கு எப்போதுமே ஒரு பெண்ணின் மதிப்பு தெரியாது. தன் மதிப்பைத் தானே நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். எத்தனை அதிகமாக தனக்கு ஒரு விலையை நிர்ணயித்துக்கொள்கிறாமோ, அத்தனை அதிகமாக அவர்கள் நம் மதிப்பை உணர்ந்து கொள்வார்கள். மேலும் தனக்குரிய விலையை எப்பாடுபட்டேனும் கொடுத்துவிடவும் தயாராக இருப்பார்கள். தன் உடலுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயிக்கிறாள். உண்மையில் தான் வாழும் சமூகத்தில் ஒரு மனைவியின் வாழ்வைவிடவும் ஒரு ​பாலியல் தொழிலாளியின் வாழ்வு மேலானது. நாம் அனைவருமே வெவ்வெறு விலைகளுக்கு ​நம்மை நாமே விற்கும் ​​​பாலியல் தொழிலாளிகள்தான் என்பதையும் விலைமதிப்புள்ள ஒரு ​விலைமாது, மலிவானதொரு ​விலைமாதுவை விடவும் மேலானவள் என்கிறாள். தன்னைத் தேடி வரும் பல ஆண்களை வேண்டுமென்றே நிராகரிக்கிறாள். ஒரு ஆண், தன்னைத்தானே நிராகரிப்பவனாய் இருக்கிறான். அதனாலேயே ஓர் பெண் அவனை நிராகரிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த இரட்டை நிராகரிப்பை ஒரு ஆணால் தாங்கிக் கொள்ள முடியாது. ஒரு ​பாலியல் தொழிலாளி தன்னை மறுக்கும்போது, அவளை அதிகம் வற்புறுத்துவான். எவ்வளவு அதிகமாய் விலையை ஏற்றினாலும் அதைத் தர தயாராய் இருப்பான் என்பதை புரிந்துகொள்கிறாள். ஏனெனில், ஒரு பெண்ணால் நிராகரிக்கப்படுவதை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அந்நகரின் வெற்றிகரமானதொரு ​பாலியல் தொழிலாளியாக உருவெடுக்கிறாள். ஒரு சாதாரண பெண்ணாக இருந்தபோது அவள் சந்தித்த துயர் நிறைந்த வாழ்வை விடவும், ஒரு ​பாலியல் தொழிலாளியாக அவள் வாழ்வு ஓரளவு நன்றாகவே இருந்தது.

ஆண்களின் ஒற்றைச்சுவடுகூட தன்னிடமிருந்து மறைந்து போகவேண்டும் என்று விரும்புகிறாள். ஒருவனைக் கொல்கிறாள். “நீயொரு குற்றவாளி” என்றவர்கள், தொடர்ந்து “உன் தாய் ஒரு குற்றவாளி” என்றனர். “என் தாய் குற்றவாளியல்ல. உண்மையில், எந்தவொரு பெண்ணுமே குற்றவாளியல்ல. ஒரு ஆண்தான் குற்றவாளியாக இருக்கமுடியும். நீங்கள் அனைவருமே குற்றவாளிகள். தந்தைகள், மாமன், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அனைத்துத் தொழில்களையும் புரியும் அனைத்து ஆண்களுமே குற்றவாளிகள்தான்.” பிர்தவ்ஸுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. அவள் புரிந்த குற்றத்திற்கு மன்னித்து விடுவிக்கச் சொல்லி ஜனாதிபதிக்கு ஒரு கோரிக்கை மனுவை எழுதினால்,  விடுதலைக்கு வாய்ப்புள்ளது என்கிறார்கள்.  “இங்கிருந்து விடுதலை அடைய எனக்கு விருப்பமில்லை. எனது குற்றத்திற்காக எனக்கு மன்னிப்பும் தேவையில்லை. ஏனெனில், நீங்கள் அனைவரும் எனது குற்றம் எனக்கூறும் ஒன்று என்வரையில் குற்றமே அல்ல. விடுதலையாகி மீண்டும் வெளியே சென்றாலும் கொலை செய்வதை நான் நிறுத்த போவதில்லை.” நீயொரு குற்றவாளி நீ சாகத்தான் வேண்டும் என்கின்றனர். “அனைவரும் சாகத்தான் வேண்டும். நீங்கள் செய்த எதோவொரு குற்றத்திற்காக நான் இறப்பதைவிடவும் நான் செய்த குற்றத்திற்காக இறப்பதையே நான் விரும்புகிறேன்.” என்று கூறி மன்னிப்பு கடிதம் எழுத மறுத்துவிடுகிறாள்.

நூற்று ஐம்பதுக்கும் குறைவான பக்கங்களை கொண்ட நாவலாக இருந்தாலும், வாசிக்கும் நம்மால் அவ்வளவு எளிதாக இதைக் கடந்துவிட முடியாது. சசிகலா பாபு மிக எளிய மொழியில் அதன் வீரியம் குறையாமல் மொழியாக்கம் செய்திருக்கிறார். மொத்த நாவலில் ஒரு இடத்தில் மட்டுமே நான் சிரித்தேன். அது பிர்தவ்ஸ் ஒரு வெற்றிகரமான ​பாலியல் தொழிலாளியாக உருவான பிறகு அவளுக்கு உயர்ந்த விலை வழங்கப்படுகிறது. பெரும் பதவிகளில் இருக்கும் மனிதர்கள்கூட அவளுக்காகத் தங்களுக்குள் போட்டியிட்டு கொள்கிறார்கள். ஒருநாள் வெளிதேச பிரமுகர் ஒருவர் அவளைப் பற்றி  கேள்விப்பட்டு தன்னை வந்து சந்திக்கும்படி சொல்லுவார். பிர்தவ்ஸ் அவரை சந்திக்க மறுத்துவிடுகிறாள். அவளின் நிராகரிப்பு அந்தப் பிரமுகருக்கு பெருத்த அவமானமாகி விடுகிறது. நாட்டின் உயர் காவல்துறை அதிகாரியை தூது அனுப்புகிறார். காவல்துறை அதிகாரி வெவ்வேறு விதங்களில் அவளைச் சம்மதிக்க வைக்க முயற்சி செய்கிறார். நிறைய பணம் கொடுப்பதாகவும், கெஞ்சியும், மிரட்டியும் பேசுகிறார். பிர்தவ்ஸ் எல்லாவற்றையும் மறுத்து விடுகிறாள். கடைசியாக ஒரு பிரஜைக்கு இருக்க வேண்டிய நாட்டுப்பற்றை பற்றி பேசுகிறார். ஒரு வெளிமாநிலத் தலைவரை மறுப்பதென்பது அத்தனைப் பெரிய மனிதருக்கு நீ இழைக்கும் பெரும் அவமதிப்பு எனவும், இதனால் இரு நாடுகளுக்குமிடையே உள்ள உறவில் விரிசல் உண்டாகலாம் எனவும் கூறுகிறார். தொடர்ந்து நீ நமது நாட்டை உண்மையிலேயே விரும்பினால், நீயொரு தேசப்பற்றாளர் என்றால், உடனடியாக அந்த வெளிதேசப் பிரமுகரிடம் செல்லவேண்டும் என்கிறார். அதற்கு பிர்தவ்ஸ் நாடு இதுவரை தனக்கு எதையுமே தந்ததில்லை என்பதோடு, தனது கௌரவம், மதிப்பு உட்பட அனைத்தையும் பிடுங்கிக் கொண்டது. தேசப்பற்று என்றெல்லாம் ஒன்று தனக்குக் கிடையாது என்கிறாள்.

பிர்தவ்ஸ் தன் வாழ்க்கையில் இருமுறை மட்டும்தான் இளைப்பாறுகிறாள். ஒன்று தான் காதலிக்கப்பட்டதாய் உணரும் தருணம். மற்றொன்று அவள் வாடிக்கையாளன் ஒருவன் அவளிடம் “உனக்கு உறக்கம் வருகிறதா? ஆம் என்றால் என்னை அணைத்துக்கொண்டு உறங்கு” என்ற தருணம். இவ்வரிகளை படித்தபோது எனக்குத் தோன்றிய ஒரே பெயர் “சதத் ஹசன் மண்டோ”.  அவரின் ஒரு கதையில் விலைமாது ஒருவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பார். அப்போது அந்த அறைக்கு வந்த அவளின் தரகன் வெளியே ஒரு வாடிக்கையாளன் காத்து​க் ​ கொண்டிருக்கிறான் என்று கூறி அவளை உடனே கிளம்புபடி கூறுவான். ஆனால் அவளோ தன்னால் கிளம்ப முடியாது என்றும் தான் உறங்க விரும்புவதாகவும் கூறுவாள். இப்படித் தூங்கி கொண்டிருந்தால் உணவு கிடைக்காமல் சாக வேண்டியதுதான் என்றும், அது மட்டுமில்லாமல் வந்திருக்கிற வாடிக்கையாளர் ஒரு உயர்ந்த மனிதர். இப்படிச் செய்வது அவரை அவமானப்படுத்துவது போல இருக்கும் என்று கூறி அவளைக் கட்டாயப்படுத்துவான். தான் பசியால் இறந்தாலும் பரவாயில்லை, தனக்கு தேவை தூக்கம் மட்டுமே என்று கூறி மறுத்துவிடுவாள். இருவருக்கும் கைகலப்பு நடக்கும். அங்கே இருந்து கூரான ஒரு பொருள் பட்டு தரகன் தலை உடைந்து கீழே விழுந்து விடுவான். அந்தப் பெண் அங்கிருந்த கட்டிலில் உட்கார்ந்து அவனை பார்ப்பாள். அவன் இறந்துவிட்டானா அல்லது மயக்கத்தில் இருக்கிறானா என்று அவளுக்கு எதுவும் தெரியாது. எந்தச் சலனமுமின்றி அவள் படுத்துத் தூங்கி விடுவாள் என்பதாகக் கதை முடியும். ​பாலியல் தொழிலாளிகளுக்காக எவ்வளவோ பேர் எழுதியும் பேசியும் இருக்கிறார்கள். ஆனால் ​அவர்களின் ஏக்கம், காதல், வலி போன்றவற்றிற்காக மட்டுமல்லாமல்அவர்களின் உறக்கத்திற்காகவும் பேசிய ஒரே எழுத்தாளன் “மண்டோ” மட்டும்தான்.

ஆரண்ய காண்டம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். வயதான வில்லன் ஒருவன் தன் ஆசை நாயகியாக ஒரு சின்னப் பெண்ணை வைத்திருப்பான். அவளைப் பலவிதங்களில் கொடுமை செய்வான். அங்கிருந்து எப்படியாவது தப்பித்து போனால் போதும் என்று சரியான நேரத்திற்காகக் காத்திருப்பாள். அந்த வீட்டில் எடுபிடி வேலை செய்வதற்கு ஒரு இளைஞன் இருப்பான். அங்கிருப்பவர்கள் எல்லாரும் அவனை “சப்பை” என்று அழைப்பார்கள். அந்த இளைஞனை பயன்படுத்தி அவள் அங்கிருந்து தப்பித்து விடுவாள். வெளியேறும்போது அவள் சொல்லுவாள், ” என்னை பொறுத்தவரை சப்பையும் ஆம்பிளைதான். எல்லாம் ஆம்பிளையும் சப்பதான்”. ​ ​தான் இறக்கும் தருவாயில் பிர்தவ்ஸும் அப்படிதான் சொல்லி இருப்பாள்.

பிர்தவ்ஸ் போன்ற எண்ணிலடங்காப் பெண்களை ​பாலியல் தொழிலாளிகளாக்கிய ஆண்மையின் எச்சம் எனக்குள்ளும் மிச்சம் இருக்கிறதா என்று நாவல் முடிந்த நேரத்திலிருந்து கேட்டு கொண்டிருக்கிறேன். ஒருவேளை இருந்தால் கண்ணீரை தவிர எதைக்கொண்டு என் அழுக்கைக் கழுவுவது?

சூன்யப் புள்ளியில் பெண் (Women at Point Zero)
நூல் ஆசிரியர்: நவல் எல் சாதவி (Nawal el Saadawi)
தமிழில்: சசிகலா பாபு
பதிப்பகம்: எதிர் வெளியீடு

எஸ்.செந்தில்குமாரின் கழுதைப்பாதை நாவல் குறித்து வை.மணிகண்டன்

பாரங்கள் சுமந்தபடி ஓட்டமும் நடையுமாய் இடம் பெயர்ந்தபடியே இருக்கும் மனிதர்களின் கதை கழுதைப் பாதை, இந்தக் கதைகள் மேற்கு தொடர்ச்சி மலையும் அதன் அடிவாரங்களும் கண்ட பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வின் சிறு துளி, இயற்கையால், மனிதனின் ஆசையால், விதிவசத்தால், இன்னதென்று கூறமுடியாத, பின்னிப் பிணைந்த மனித உறவுகளின் நிழல் பற்றி,தொல்கதைகளின் தொகுப்பென விரிகிறது கழுதைப்பாதை.

நாவலின் போக்கு கதை நாயகனின் தேவையை பின்பற்றியோ, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட இலக்குடனோ பயணிக்கவில்லை. மாறாக ஒரு ஆவணதொகுப்புக்கான நுண் விவரங்களின் கவனத்துடன், பலதரப்பட்ட கதைமாந்தர்களின் பார்வைக்கோணத்திலும், சிறிய பெரு நிகழ்வுகளின் துல்லிய புறவிவரிப்பின் வழி, ஒரு அட்டகாசமான காட்சியனுபாவமாக அமைந்திருக்கிறது. பூர்வகதை அல்லது ஆதி கதை என்று உத்தி வழி காலத்தின் தொடர்ச்சியை மலையின் பூடகத்தை தக்கவைத்துள்ளது.இந்த அழகியல் தேர்வுகளே இந்நாவலை குறிப்பிடத்தக்க ஒன்றாக மாற்றுகிறது.

மலை என்னும் பூடகம்

என் வீட்டின் அருகே சிறிய மலை உண்டு. மலை என்று கூட கூற முடியாது , சிறு குன்று. கல்குவாரி போக மீந்து நிற்கும் நிலமகன். சிறிய அளவினதே ஆனாலும் இம்மலையை காணுகையில் இன்னவென்று அறியாத ஒரு பணிவு போன்ற உணர்வு மனதில் எழும். கைகள் தன்னால் கூப்பித்தொழும். மலையின் கருணை குறித்த இந்தப் பணிவு, பயம், இந்நாவல் முழுவதும் மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுகிறது , ராக்கப்பன்,கங்கம்மா என்னும் தொல் தெய்வங்களின் கருணை முதுவான்களை, மலையை நம்பி வாழ்பவர்களை வழி நடத்துகிறது, இப்பணிவின் நிழலில் நாம் அறியாத அனைத்தையும் வைக்கிறோம், நமது தவறுகளின் குற்றஉணர்வையும், இயற்கையை சந்தையாகும் நம் சாமர்த்தியத்தையும் சேர்த்தே இந்நிழலில் வைக்கிறோம். இந்தப் பணிவை வெறும் கோஷங்களாக அல்லாது செயல்தளத்தில் மீட்பதே அசல் முற்போக்கான செயல்பாடாக இருக்கமுடியும். அதே நேரத்தில் இப்புனிதத்தின் பணிவின் ஆன்மீக சாயல் சமகால முற்போக்கு பாவனைகளுக்கு முரண்படுபவை.

முற்போக்கின் தராசு

மலை வாழ் முதுவான்கள், தலைச்சுமை கூலிகள், கழுதைசுமைக்காரர்கள், காபி தோட்டத்து வேலையாட்கள், முதலாளிகள், கங்காணிகள் என்ற விஸ்தாரமான கதைக்களத்தில் , இவ்வமைப்பையே நகலெடுத்து சுரண்டலின் மீதான கட்டுமானம் என்று எளிய பிரதியை வாசிக்க அளித்திருக்கலாம், ஆனால் நமக்கு படிக்க கிடைப்பது முரண்படும் ஒத்திசைவுடன் கூடிய ஒரு பிரதி.

அப்பட்டமான சுரண்டலின் அமைப்பில் இருக்கும் தலைசுமைக்காரன் தனது செயல் தர்மம் குறித்து எந்தவொரு சஞ்சலமும் கொள்ளாது தெளிவாக இருக்கிறான் , அத்தனை சுரண்டலுக்கு பிறகும் அவனை அந்த செயல் தர்மம் வழி நடத்திய விசை எது ? தொழில் வழி போட்டியாக அமைந்துவிட்டாலும் மூவண்ணா விற்கும் தெம்மண்ணா விற்குமான சுமூகமான உறவு எதன் பொருட்டு ? துரோகத்தின் வழி குலைந்த தலைச்சுமைகாரர்களின் வாழ்வும் இறுதியில் மூவண்ணாவிற்கு நேரும் நிலைக்கும் என்ன தொடர்பு ?

அரசியல் சரி தவறுகளை புறம் தள்ளி, ரத்தமும் சதையுமான வாழ்வை முன்னிறுத்தி, வெறுப்பின் நிழலை சிறிதும் அண்டவிடாது அமைந்துள்ளது இப்படைப்பு , எளிதான சரி தவறுகளில் சிக்கி நாயகன், வில்லன் என்ற இரு துருவபடுத்துதலை தவிர்த்து பத்துக்கும் மேற்பட்ட முக்கிய கதைமாந்தர் தம் பார்வை வழி கதை விரிகிறது. கதைமாந்தர் தம் விசுவாசம், துரோகம், காதல்,காமம், ஆற்றாமை, கனவு, ஆசை உணர்வுகளுடன் நாமும் சஞ்சாரம் செய்கின்றோம்.

சாகசம்

மனிதன் தான் கடந்து வந்த பாதையை மீண்டும் மீண்டும் எண்ணி பார்க்கிறான் , கழுதைப்பாதையில் மீண்டும் மீண்டும் மூவண்ணா தலைச்சுமைகாரர்களை பற்றி கூறியபடியே வருகிறார், நூறுமாடுகளுடன் ராவுத்தர் வந்து செல்வது குறித்து கதை சொல்கிறான் செவ்வந்தி.

நூறு மாடுகளுடன் ராவுத்தர், கொல்லத்தில் இருந்து உப்பு வாங்க வேதாரண்யம் வரை செல்லும் வழியில், ஊருக்கு வரும் நிகழ்வு, அத்தனை அற்புதமான காட்சியனுபவமாக பதிவாகி இருக்கிறது , தூரத்தில் ராவுத்தரின் ஆட்கள் வரத் தொடங்குகையில் ஏற்படும் புழுதியில் தொடங்கி , அவர்களின் வருகைக்காக காத்திருக்கும் கடைக்காரர்கள் , ஊர்மக்கள், அவர்கள் எந்த வகையில் தயாராகின்றனர் என்பாதான சித்திரம் அபாரம்.

நூறு தலை சுமை காரர்கள் முத்துசாமியின் சாட்டையின் கீழ் ஒரு ராணுவ தளவாடம் போல் எஸ்டேட்களுக்கு தலைச்சுமை ஏற்றி சென்று வருவதை விவரிக்கும் அத்தியாயம் மயிர் கூச்செரிய செய்வது , அரசியல் சரி தவறுகள் தாண்டி அதன் நிகழ்த்தி காட்டும் அம்சம் மிகுந்த ஜீவனுடன் அமைந்துள்ளது.

முதன் முதலில் முத்தண்ணா கழுதைப்பாதை அமைத்து செல்லும் இடம் , இரண்டு இட்டிலிக்காக உமையாள் விலாஸில் தலைச்சுமை காரர்கள் படும்பாடு, கீசருவும் தெம்மண்ணாவும் மல்லுக்கு நிற்கும் இடங்கள்,எர்ராவுவை நாகவள்ளி பின்தொடர்ந்து செல்லும் இடங்கள், மிகுந்த அர்ப்பணிப்புடன் தூரிகையால் வரைந்தது போல் வாசிக்கையில் மனக்கண்ணில் எழுகின்றன, பானை சோற்றிற்கு பதம் இவ்விடங்கள். “அனார்கலியின் காதலர்கள்” கதையில் அமையப்பெற்ற புற விரிப்பின் கூர்மை கழுதைப்பாதையில் உச்சம் பெற்றிருக்கிறது .

இந்த அழகியல் தேர்வு பக்கம்பக்கமாய் தலை சுமை கூலிகளின் துயரங்களை ஆவணப்படுத்துவதற்கு ஒப்பானது, நாம் கடந்து வந்த பாதையை, நாம் ஏறி மிதித்து நிற்கும் உடல் உழைப்பை, கடந்த காலத்தின் தியாகங்களை குறித்து நம் பிரக்ஞையை மாற்றி அமைக்க வல்லது.

காதல் காமம்

காதல் களியாட்டங்களும் கசப்புக்களும் நிறைந்த பயணம் கழுதைப்பாதை . காதல், துரோகம் ,குற்றவுணர்வு,ரகசியம்,நிறைவேறா காதல், கூடாத காமம்,பிறன்மனை, காரிய காதல் , ஒருதலை காதல், என அத்தனை பரிமாணங்களும் ஜொலிக்கும்படி அமையப்பெற்றுள்ளது. குறிப்பாக கெப்பரூவும் பெங்கியும் வரும் இடங்கள் அழகு கூடி வந்துள்ளது, செல்வம் -கோமதி காதல், இளமைக்கால நாகவள்ளி – எர்ராவு காதல் மிகுந்த ஜொலிப்புடன் கனவு உலகில் நடப்பது போல் இருக்கிறது,கெப்பரூ பெங்கியின் மறுஎல்லை முத்துசாமியும் வெள்ளையம்மாளும் , செல்வம் கோமதியின் மறு எல்லை இளஞ்சி. துரோகத்தின் நிழலில் இளைப்பாற முடியாது , குற்றவுணர்வு நீண்டு மீண்டுமொரு துரோகத்தையோ பிராய்ச்சித்தத்தையோ செய்யும் வரை துரோகத்தின் நிழலின் வெப்பம் தகித்தபடியே இருக்கும்.

கூட்டமும் தனியாளும்

நாவலின் வகைமைப்படியே தலைச்சுமை காரர்கள், கழுதைசுமை காரர்கள், தோட்ட முதலாளிகள், கங்காணிகள் என்று பொதுமையாய் அமைந்தாலும் நாம் இறுதியில் அறிவது தனி ஆட்களின் ஆளுமையை , குறிப்பாக மூவண்ணா மற்றும் தெம்மண்ணாவின் ஆளுமைகளை. தோட்டத்து முதலாளிகளை பொறுத்த வரை “தலைச்சுமை காரர்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பது” போல் கூறுகிறார்கள் , முத்துசாமி ஒருவனிடம் மட்டுமே முதலாளிகள் உரையாடுவார்கள் , தோட்டத்து முதலாளியை பொறுத்த வரை கழுதை சுமை மூவண்ணா அடிமைக்கு கிட்டத்தில் வருபவர், எதிர் பேச்சு பேச முடியாதவர். இந்த சூழலில் இருந்து தலை சுமை தெம்மண்ணா மற்றும் கழுதைக்கார மூவண்ணா இருவரும் வாழ்ந்த நேரிடையான, அலைச்சல் மிகுந்த வாழ்வின் ஒரு பகுதி நமக்கு காணக் கிடைக்கிறது. பல்வேறு கதை மாந்தர் குறித்து எழுத முடிவெடுத்துள்ளது ஆசிரியரின் அழகியல் தேர்வு, அத்தேர்வு இவ்விரு ஆளுமைகளின் சில கீற்றுகள் தவிர்த்து, வேறு எவர் குறித்தும் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கவில்லை. இது தெரிந்தே எடுக்கப்பட்டுள்ள தேர்வாகவும் இருக்கலாம் – பிம்ப வழிபாடு மிகுந்துள்ள இந்த சமூக ஊடக காலகட்டத்தில் இத்தேர்வும் சரியானதாக இருக்க வாய்ப்புண்டு.

அற்புதமான காட்சி அனுபவம் வழியும், உறுதியான நிறைவுப் பகுதியும், கழுதைப்பாதையை மறக்க முடியாத வாசிப்பு அனுபவமாக்குகிறது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையும், அதன் அடிவாரமும் பற்றி செந்தில்குமார் அவர்கள் எழுத வேண்டும் , அவர் எழுத்து வழி மேலும் உருவாகும் உலகங்களை காண விருப்பம்.