கவிதை

நமக்கும் ஒரு காலம் வரும்

சிகந்தர்வாசி

ஏழு அல்லது எட்டு பேர்தான் இருப்பார்கள்
முன்பு மூன்று முறை
எல்லோரும் எதிர்பார்ப்புடன் வந்து
ஏமாந்து திரும்பினார்கள்

இம்முறை காலன் அறிவிக்காமல் வந்தான்

குளிர் கண்ணாடி பெட்டிக்குள் அவர் முகத்தை
உற்று பார்க்கும்போது என் முகம் தெரிந்தது

தன் மிருதுவான கைகளினால்
விட்டுச் சென்ற தடம் எல்லாம்
மெதுவாக அழிக்கத் துவங்குகிறது காலம்

 

image credit – Genetologic Research

கற்பூர வாசனை

எஸ். சுரேஷ்

 

என்ன கவிதை எழுதலாம் என்று
மேஜை முன் உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபொழுது
‘படார்’ என்ற ஓசையுடன் வாசற்கதவு திறக்க
கழுதை ஒன்று உள்ளே நுழைந்து,
“நீதான் கவிஞனா?” என்று என்னைப் பார்த்து கேட்டது
திகைத்திருந்த நான் தலையாட்டினேன்
“உன் புத்தகம் சுவையாய் இல்லை. சுத்த வேஸ்ட்” என்றது

“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்றேன்,
கவிஞனின் ஆணவத்துடன்.

“தெரிந்து என்ன ஆகப்போகிறது?
சாமி கும்பிடப் போகிறோமா என்ன?”
என்று கூறி பின்னங்கால்களால் மேஜையை உதைத்துச் சென்றது.

போகிறபோக்கில்,
“அடுத்த புத்தகமாவது ருசியாக இருக்கட்டும்”,
என்று சொன்னதைக் கேட்டு என் மனைவியும் மகளும்
இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்

 

image credit: Directors Notes

ஒளியும் இருளும்

சிகந்தர்வாசி

ஆத்திரப்பட்ட தகப்பன் மனம் வருந்தி
தன மகளை அணைக்கும் மென்மையுடன்
சூரியன் மண்ணை அணைக்கும் தருணம்

பூங்காவில் எல்லோர் முகத்திலும் அன்றைய தினத்தைக்
கடந்துவிட்ட மகிழ்ச்சி, இனி இரவின் அமைதியை நோக்கி
புன்சிரிப்புடன் பயணம்

மங்கலான ஒலி எல்லா பொருட்களையும்
அழகாக மிளிரச் செய்கிறது
இறைவன் கடைக்கண்ணால் மிருதுவாக
மனிதனை நோக்குகிறான்

இலைகளில் ஊடுருவி ஓடிவரும் கதிர்கள்
திட்டுத்திட்டாக என் கைமேல் வந்தமர்கின்றன
வாழ்க்கையைப் போல் என் உடல்
ஒளியும் இருளும் கலந்ததாகிறது

விளையாடும் குழந்தைகளின் கூச்சல்கள்
கூட்டிற்கு திரும்பிவிட்ட பறவைகளின் பேச்சு
பூங்காவிற்கு வெளியே வாகனங்கள்
ஒலிகள் சூழ்ந்திருக்கும் மாலைப் பொழுதில்தான்
ஒலிகளற்ற அமைதி கிடைக்கிறது

 

image credit: Todd McKimmey’s Website

தீபாவளி

சிகந்தர்வாசி

பால்கனியில் நின்றுகொண்டு வானம்
வண்ணமயமாவதைப் பார்க்கிறேன்
சீராக ஒளிக்கோடு போட்டுச் செல்லும் ராக்கெட்
வெடித்து பல பாதைகள் தோன்றுகின்றன
கடந்த பாதையின் தடம் அழிகிறது
வண்ணமயமான வரலாறு சில நொடிகளில்
காணாமல் போகிறது
இன்னொரு பாதை தோன்ற, இன்னொரு ராக்கெட் வெடிக்க
வானமெங்கும் சல்ஃபர் பூக்கள்

நாம் விட்டுச்சென்ற தடங்கள் இன்னும் ஒளிர்கின்றனவா?
யார் மனதில்?
விண்மீன்களை மறைத்துப் பூக்கும் இந்த பூக்கள்
நம் கனவுகளா?

இரவை இருள் ஏன் கவ்வுகிறது?
மழைக்கு எதிராக இங்கொன்றும் அங்கொன்றும் என
வெடிகள் குரல் எழுப்புகின்றன
காற்றையும் மழையையும் எதிர்த்துக்கொண்டு
ராக்கெட் ஒன்று புறப்படுகிறது
இருளுக்கு எதிரான புரட்சி வண்ணங்களால்

வெடித்துச் சிதறிய பிறகு மறுபடியும் இருள்
மறுபடியும் வண்ணக்கோலம்
ஆகாயப் பரப்பில் மறையும் ஓவியங்களை
பலர் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்

சீராக வண்ணகளற்று ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கையில் அவ்வப்பொழுது தோன்றும்
இருளும் வெளிச்சமும்

ஆப்பிள்

எஸ். சுரேஷ்

திறந்திருந்த ஜன்னல் வழியாய் ஹாலுக்கு
வந்த குரங்கு டைனிங் டேபிள் மேல் இருந்த
ஆப்பிளை தின்ன ஆரம்பித்தபோது
வீட்டம்மாள் பார்த்துவிட்டு கையில் கட்டையுடன்
குரங்கைப் பார்த்து ‘போ போ போ’ என்று கத்த ஆரம்பித்தாள்

அமைதியாக ஆப்பிளைக் கடித்த குரங்கு
“தூ” என்று துப்பிவிட்டு
“ஏன் வாஷிங்டன் ஆப்பிள் வாங்கவில்லை,
வசதி கம்மியோ” என்று கேட்டு, ஆப்பிளை எடுத்துக்கொண்டு
ஜன்னல் வழியாக வெளியே சென்றுவிட்டது

பக்கத்து அறையில் இருக்கும் கணவரைப் பார்த்து
இப்பொழுது கத்திக்கொண்டிருகிறார் வீட்டம்மா