கவிதை

இடமாற்றம்

காஸ்மிக் தூசி 

புல்வெட்டும் எந்திரத்துக்கு
கூடுவிட்டு கூடுபாய்ந்த
கிராமத்து வீட்டு
காராம்பசு,

தன் கட்டுப்புல்லையும்
சுவைத்து
தின்றுவிட்டது.

மறுநாள் காலை
வெட்டிய புல்லை
கொட்ட எடுக்கையில்

நாசியில் நிறையும் –
நீராவி பறக்கும் –
பசுஞ்சாணத்தின்
மணம்.

போதி மரம் இல்லாத ஊரில்

காஸ்மிக் தூசி 

வெயில் வெண்மையை
நிறங்களாக
பிரிக்க ஆரம்பித்திருக்கும்
இலைகள்

ஓக் மரத்தடியின்
பழைய மரப்பெஞ்சில்
ஒரு பழைய புத்தகம்
வாசித்திருக்கையில்

மேலிருந்து
இறங்கி
நெருங்கி வந்து,
இது என்னுடைய இடம்
இங்கே என்ன செய்கிறாய்?
எனும் கேள்வி.

போதி மரம்
இல்லாத ஊரில்
போதி மரத்துக்கு
வேறு என்னதான் செய்வதாம்?
என்கிறேன்.

எழுந்து
இரு கைகள் உயர்த்தி
அதோ
அந்த மேப்பிள் மரத்தை
பார்த்தாயா
போதியை
போலத்தானே இருக்கிறது
அங்கே போயேன்,
என்று கூச்சலிடுகிறது

குளிர்கால உறக்கத்துக்கு
தயாராகிவிட்ட
சற்று குண்டான
அந்த
அணிற்குஞ்சு.

கடலெனும் பெருவெளி

-ஜிஃப்ரி ஹாஸன் – 

எல்லாவற்றையும்
அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தது கடல்
தன் உடலில் நீந்திச் செல்பவர்களை
கடலில் கட்டித் தழுவும் காதலர்களை
அலைகளைக் கண்டு ஒதுங்கிச் செல்லும்
ஒரு கர்ப்பிணியை
கரைகளில் புரளும் குழந்தைகளை
அமைதியாய் இரசிக்கிறது கடல்

கடற்கரையில் கூடும் மனிதர்கள்
துயருற்ற வானம் போல்
ஓங்கி அழும் ஓசையை
கடல் தன் பேரோசையால் மறைக்கிறது
கடல் போல் குமுறும் தங்கள் மனஓசையை
கவலை தோய்ந்த மனிதர்கள்
கடலோசையில் கேட்டனர்.

கடலின் இசை அதன் துயர் குறித்ததா?
அல்லது அதன் மகிழ்ச்சியைக் குறித்ததா?
கரை மனிதர்கள் குழம்பியபடி கலைகின்றனர்.

காலச்சக்கரம்

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

அலையலையாய் ஆயிரம் கனவுகள் அந்தரக்கடலிலே
காலத்தின் படகில்
பயம் எதுவுமின்றி நின்று
வெவ்வேறு வீரிய விசையுடன் வீசப்படுகிறது
நீளும் கையில் நிகழும் தகவுகள் தக்கையைப் போலே.

வாழ்வெனும் பரந்து விரிந்த வலைக்குள் வட்டமடித்து உழன்றபடியே சுழலும் எண்ணற்ற சித்திர மீன்களில்
அன்பின் வலையில் அகப்பட்டு பிடிபடுதல் ஓர் சுகம்
தத்தளித்து விலகி விடுபட்டு தப்பித்தலோ ஒரு சாபம்.

இதோ அங்கே பிடிபடாமல் விடுபட்ட உதவாத ஒரு ஒளிரும் சுடர் நட்சத்திரமீன் உங்களின் விழிகளுக்கும்
மிக எளிதாகப் புலப்படுகிறது தானே
பரிதவிக்கும் பகிரப்படாத ஒரு நேசத்தின் திவலையாக.

மீப்பெருநம்பிக்கையுடன் இருப்பாய் ஒளிர் மனமே
இங்கே யாவும் ஒன்றல்லவே.
கனிவுடன்
காத்திரமாக இருப்பாய் கலை மனமே
தனித்து தெரிதலொன்றும் தவறில்லையே
காட்சிகள் மாறும்
ஆகவே கவலைப்பட ஏதுமில்லை

அகாலம்

சிபி சரவணன்

ஒரு பண்டைய வீடு பற்றி எரிகிறது
யார் யார் அதில் வசித்தார்களோ
எத்தனை உடல்கள் புணர்ந்தனவோ
கதவுகளற்ற அதன் வாசலில் நுழைந்த
மனிதர்கள் மீண்டதாய் சரித்திரமில்லை.
அவ்வீட்டின் தரைத்தளமெங்கும்
குப்பற படுத்துறங்கும் வேர்களும் புலிகளின் புழுக்கைகளும் சிதறி
கிடந்தன.
தீயால் முறியும் கிளைகளில்
பறவை குஞ்சுகளின் கீச்சோலிகள்
செவிசவ்வை அதிர வைக்கின்றது
எல்லா மனிதர்களும் உற்றுபார்த்துவிட்டு
அலுவலுகலுக்காக தங்கள் வாகனங்களைமுறுக்கி கடந்து போகிறார்கள்.
ஒரே ஒரு ஆதிக்குடி மட்டும்
(அவனுக்கு உடை இருந்தது)
எங்கிருந்து வந்தானோ என்னவோ
மூங்கில் துளைகளால் இசைத்தவாரே
இரங்கல் பாடிக் கொண்டிருந்தான்.