கவிதை

தூய வெண்மையின் பொருளின்மை

காஸ்மிக் தூசி 

தனிமையின் விஷமேறி
நீலம்பாரித்து நிற்கும்
வானம்
மேகங்கள் அற்று
மேலும் வெறுமை கூட
நீலம் அடர்கிறது.

இலைகளற்ற கிளைகளில்
விளையாட யாருமற்று
நிறங்களை துறந்த கிரணங்கள்
உக்கிர வெண்மையை
ஓலமிடுகின்றன

நிறங்களின் வெறுமையில்
நிறையும் வெண்மையில்
திசையெங்கும் பிரதிபலித்து
மீண்டு வந்து சேரும்
மேலும்
சிறிதளவு
வெண்மை.

பனி பூத்து
பனி கொழிக்கும்
வனமெங்கும்
தானே எதிரொளித்து
சோம்பிக் கிடக்கும்
தூய வெண்மையின்
பொருளின்மையில்,

எப்படியாவது
ஒரு துளி அர்த்தத்தை
சேர்த்துவிட
முயல்வது போல்

பசியில்
வளை நீங்கி
வந்து நிற்கும்
மெலிந்த அணிலின்
மரத்தின் வேரோரம்

பனியில் புதைந்து துழவும்
என் கால்கள்
நெருங்கி நிலைப்பட
அசையாமல் ஆகும்
அணில்

இப்போது
எங்களுடன்
ஏரி தியானிக்கிறது
காற்று தியானிக்கிறது
வானம் தியானிக்கிறது
மரங்கள் தியானிக்கின்றன.
மலைத்தொடர்கள் தியானிக்கின்றன

அணிலின் விழித்திரையில்
ஒரு புராதன
ஓவியமாய்

அசைவின்றி
எஞ்சி
ஒருங்கும்
இப்பிரபஞ்சம்.

யாதனின் யாதினும் நீங்கி

காஸ்மிக் தூசி 

பறவைகள் அணில்கள்
பூச்சிகள் புழுக்கள்
பூ பழம் காய்
இலை குருத்து
யாதனின்
யாதினும் நீங்கி,

பிடுங்கி
தலைகீழாய்
நட்டது போல்
பற்றற்று
பிரபஞ்சப் பெருவெளியில்
தனித்து நின்றிருக்கும்
அந்த பெரும் பிர்ச்மரம்.

துக்கம்
விசாரிக்க வந்த
பழைய தோழனைப்போல்
எதிர்பாராமல்
எங்கிருந்தோ
வந்து சேர்ந்து விட்டது
ஒரு கரும் பறவை.

சிலை போல
நிலை பெயராது
எதுவும் சொல்லாது
கைபற்றி அமைதியாய்
அமர்ந்திருந்து

குசலம் முடித்து
எம்பித் தாவி
ஒலி எழும்ப
சிறகடித்து பறந்து செல்ல,

இலையற்ற
கிளை அசைத்து
விடையளித்த பின்,

வழமை போல
தன் தியானத்துக்கு
திரும்பி விட்டது
மரம்

சத்தமற்ற தனிமை

கனிமொழி பாண்டியன்

சத்தமற்ற தனிமை
முனுமனுப்பற்ற மனது
அலம்பலற்ற முகம்
சிமிட்டாத இமைகள்
கொதியற்ற வெதுவெதுப்பு
நடுநெஞ்சில் ஆணியாக
அகண்ட ஏக்கத்தையும்
வழிந்த வலியையும்
மெல்ல மெல்ல தடவுகிறாள்
கண்களோடு மூக்கும் அழுகிறது

 

வீட்டுக்கு வெளியே வட துருவம்

காஸ்மிக் தூசி 

அமைதியாய் வந்து அமர்ந்திருக்கும்
நடு இரவில்
வீட்டுக்கு வெளியில்
வட துருவம்

குளிரின் கொடுங்காற்று
கூரையின் மேல்
சரிந்து இறங்குகையில்

எவரின் மீதோ
ஒரு வசை
வாழ்த்து
விமர்சனம்.
மற்றும்
இவை யாதுமற்ற
வெறுமையின் சலிப்பு.

ஊளையிட்டு சண்டையிடும்
இவ்வளவு காற்றும் வருவது
எங்கிருந்து?
இவ்வளவு பனியும் இதுவரையும்
இருந்தது எவ்விடத்தில்?

இதையெல்லாம்
கண்டுபிடிக்கதான்
பொழுதுபோகாத
அந்த மூதாட்டி

கையில் குழவியுடன்
வெற்றிலையை இடித்து
கடவாயில் வைத்தபடி

நிலவில்
காலை நீட்டி
அமர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறாளோ
பூமியை?

 

பெருங்கவிதை

விஜயகுமார் 

பேருண்மை தான் வேண்டுமா
வெறும் உண்மை வேலைக்காகாதோ

பெரும் தவிப்போ
அதுதான் செல்லுபடியாகுமோ

எப்படி பார்த்தாலும் அழகி தானே பக்கத்தில் இருப்பவள்
பேரழகி எல்லாம் புனைவுதானே

சரி விசயத்திற்கு வருகிறேன்

பெரும் புரட்சி என்றும் நடவாது
வேண்டுமென்றால் சின்ன புரட்சி
முயற்சித்துப் பார்க்கலாமே

ஏனென்றால்
பேரழிவும் அழிவும் அளவில் ஒன்றுதான்.

பேராண்மை பற்றி கேட்காதீர்கள்
எனக்கு பெரும் சிரிப்பு வந்துவிடும்

பெருங்கருணை பெரும்படை கொண்டதுதானே
நாங்கள் வேண்டுவதெல்லாம் வெறுங்கருணை மட்டுமே

உயிர் இருக்கிறது
பேருயிர் கண்டதில்லை

தாய்க்கு மட்டும்தான் இழப்பு
பிறருக்கு என்னவோ பேரிழப்பு

பெருங்காதல் பெருந்தாபம்
பேராற்றல் பெருங்கொடை பெருவீரம்
எல்லாம் வெறும் காகிதத்தில் எழுதியவையோ

சரி சரி போனால் போகட்டும்
வைத்துக் கொள்வோம்,
அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று எழுத்துதானே
ஒன்றும் குறையில்லை.