கவிதை

வேடிக்க – ஆகி

ஆகி

வால இருல
என்னலன்னா மர்கா
தூரப்போலம்பான்
என்னளான்னா கிருப
பிடரிக்குப் பின்னால
வெறிச்சுப் பாப்பா
இன்னைக்குன்னு
அரசமரத்துல
ஏறுன கிருப
கொஞ்ச நேரமா
கண்ணுல படலப்பு
மரமெல்லாம்
வெள்ளையடிச்சாப்ல
நாத்தமா ஒரே
நீர்க்காக்காவா
செவுட்ல அடிச்சாப்ல
பயங்கரச் சத்தம்
நீர்க்காக்கால்லாம்
மரமதிரச் சடசடன்னு
செதறி மறையுது
மொகரைல அறைஞ்சாப்ல
பயங்கர வெளிச்சம்
கிருப அப்பவும்
கண்ணுல படலப்பு
ஊரயே அடுப்புலத்
தூக்கி வச்சிருக்கு
அவிய பாவத்த
புண்ணியமா
சேத்து வச்சு
மருந்தாச் சுத்தி
பண்டியலுக்கு
கலர்கலரா வெடியா
வெடிச்சித் தள்ளுராவ
சுள்ளுன்னு சுட்டெரிக்கிறப்ப
எங்கயாச்சு நீர்க்காக்கா
கூடு கட்டுமாப்பு
இப்பல்லாம் மர்கா
வாப்பு இருப்பு
என்னப்புன்னாலும்
தூரப்போலங்கான்

நித்தியத்தின் கண்ணோட்டம்

வெ கணேஷ் –

தபஸிருந்த முனிவருக்கு
நிழலளித்து
காத்திருந்தது மரம்

வெளுத்த சடாமுடித் திரை பின்னிருந்து
கண்திறந்த முனிவர் மேல்
பச்சையிலைகளின் தூவல்!

காலத்துக்கப்பால் பயணம் செய்து
கண்விழித்த முனிவரின் உடலில்
காலத்தின் சின்னங் கண்டு சிரித்தது
மார்க்கண்டேய மரம்

“உயிரமைப்பே!
நான் ஓர் உயிர்
உன் வாழ்வின் நீளம்
அதிகம் என நகைக்கிறாயோ..! “

முனிவர் ஓடையில் குதித்து
ஆனந்தமாய்க் குளிக்கையில்
இலைகளை அசைத்து
உடலைக் குளிர்வித்தது மரம்

இயற்கையின் கருவியே நாமெனும் அறிவை
மரம் எய்தும் முடிவிலி காலம் வரை
காற்றே இலைகளை அசைப்பதை
நித்தியத்தின் படிக்கட்டுகளில் ஏறி
நட்சத்திரமாய் மாறி மின்னப்போகும்
முனிவர் பார்த்துக் கொண்டிருப்பார்

புரட்சியும் மனிதனின் விதியும்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

ஒரு மரணச் செய்தி
காதுகளைத் தட்டும் போது
எந்த அசூசையுமின்றி
வானத்தை வெறித்திருப்பேன்
துயர் தரும் சூழலின் இயக்கத்திலிருந்து
என் இதயத்தை நான்
அப்படித்தான் துண்டிக்கிறேன்
ஒரு மரணச் செய்தியால்
நான் கலவரமடையும் போது
என் இதயம் இறந்துவிடக்கூடும்
ஒரு மரணச் செய்தியால்
நான் அச்சமடையும் போது
எனது புத்தகமொன்று
தாமதமாக வெளிவரக்கூடும்
நான் சூழலினால்
கைதுசெய்யப்படுவதை விரும்புவதில்லை

ஒரு திருமண அழைப்பிதழ்
வரும்போது
அழைப்பிதழை புத்தகமொன்றுக்குள்
மறைத்து வைத்து விட்டு மறந்துவிடுகிறேன்
திருமணத்துக்கு முன்னர்
அது என் கண்களில் பட்டுவிடக்கூடாது
என்று மௌனமாகப் பிரார்த்திக்கிறேன்
சிறிய நிகழ்வொன்று
என் பயணத்தை திசை திருப்புவதை
நான் தவிர்ந்து கொள்வது அப்படித்தான்
கடைசியில் என் கனவுப் பயணம்
எதற்கும் உபயோகமற்றது
என உங்களுக்குத் தெரிய வரும்போது
சோவியத்யூனியன் போல்
துண்டுகளாய்ச் சிதறிப் போகிறேன்
பின் கனவுச் சிறையிலிருந்து வெளியேறி
சூழலின் கைதியாகிறேன்-
“மனிதனின் விதியை கற்பனையால்
மாற்றிட முடிவதில்லை”
என விதிக்கப்பட்ட வாழ்வை
நோக்கிச் செல்கிறேன்

தேசாந்தரியின் இரவுப்பாடல் – கதே

கதே (அபிநந்தன்)

 

மலைகளைக் கடந்து
கவிகிறது மௌனம்.
மரங்களை அசைத்து
வீசுவதில்லை காற்று.
சப்தம் ஏதுமில்லை: காட்டில்
சிறு பறவைகளும் மௌனம் காக்கின்றன.
பொறுத்திரு: விரைவில்
நீயும் அமைதி காண்பாய்.

(This is an unauthorised translation of the poem, “Goethe’s Nightsong”, originally written in German by Johann Wolfgang von Goethe, and translated into English by David Lehman. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

புலன்மயக்கம் – சரவணன் அபி

சரவணன் அபி

இமைத்துவிட்டாலும் கசங்கிப் போகக்கூடும்
விழிகளுக்குள் தேங்கி நிற்கும் உறவு
கூப்பிய கரங்களின் விரல்நுனிகள்
பார்த்தவாறிருந்தேன்
சொல்லென இல்லாமலேனும்
உணர்வொன்று
விரல்வழி வழிந்துவிடாதா
மென்மயிர் அடர்ந்த உன்
முன்வளைக்கரம் தொட்டு
உணர்த்திவிடாதா
அனிச்சையாகவேனும்
ஏதேனும் நிகழ்ந்துவிடாதா
தீண்ட நீளும் விரல்களின் முன்
சுருங்கும் என் புலன்கள்
சூழலின் உறுத்தல் மீதூற
கழுத்தை அழுத்தித் தேய்த்துக் கொள்கிறேன்

மேசை மீது வைக்கப் பெற்றிருக்கிற
நிறமும் வளைவும் மினுமினுப்பும்
உன் கழுத்தை நினைவூட்டும்
யாரும் இதுவரை தொடாத
தேநீர்க்குவளை புகைகின்றது.