கவிதை

சிலைகள்

எஸ். சுரேஷ்

கை உயர்த்தி ஆள்காட்டி விரலால்
இலக்கில்லாத ஒன்றைச் சுட்டாமல்
கைகளைப் பின்புறம் கட்டிக் கொண்டிருந்தால்
கறைகள் மறைந்திருக்கும்

தலை நிமிர்ந்து வானத்தை பார்க்க வேண்டும்
தலை குனிந்த தருணங்கள் மறைந்து விடும்

நெற்றியில் சில சுருக்கங்கள் இருந்தால்
சிந்தித்துக் கொண்டிருப்பது போல் இருக்கும்
அவரவர் மனதில் தோன்றும் எண்ணங்கள்
இயல்பாய் முகத்தில் தோன்றும்

பயம், அசூயை, குரோதம், கோபம்
இவற்றை மறைக்கும் சிற்பி
வீரமும் தொலைநோக்கும் கொண்ட
பார்வை கொடுக்க வேண்டும்

உதடுகளில் புன்னகையா?
வேண்டாம்
சொல்லியவை பல்லாயிரம்
பீடத்தில் ஒரு வாக்கியம் போதும்-
உதடுகள் விரியாதிருப்பதே நல்லது.

தினமும் சிலைகள் செதுக்கப்படுகின்றன-
ஆனால் எதுவும் முடிந்தபாடில்லை

அந்தி

எஸ்.வீ.ராஜன்

பூ மேகம் தூறிவிட்டுப் போகட்டுமென்று
புரண்டு படுக்கும் காய்ந்த சருகிற்கு
தொட்டி நிரம்பி வழிநீர் பட்டுத் தெறிக்கிறது
என்று சந்தோஷப்பட இடமில்லை.

ஊர்சுற்றிக் காகமும் கும்மாளக் குருவியும்
குற்றாலக் குளியல் போட்டு
சிலிர்த்துச் சிறகசைத்துக் கூடடையும்
மாலைச் சூரிய சாய்வொளி
வானவில் வரைந்து காட்டும்.

மின்னியக்கியை கீழிறக்கிட
ஊளையை நிறுத்தும்
ஆழ்துளைக் கிணற்று நீரேற்றி.

.

365 வது நாள்

ஜிஃப்ரி ஹாஸன்

 

மூடிக்கிடந்த சாளரங்களைத்
தட்டித் திறக்கிறது ஒரு புதிய கை

எனக்கு சூரியன் தேவை இல்லை
ஒரு நட்சத்திரம் போதும்
என்ற நம்பிக்கையுடன்
சாளரங்களைத் திறக்கிறேன்

முந்நூற்றி அறுபத்தைந்து நாட்களுக்கும்
ஒரே இரவில் விடைகொடுத்து அனுப்புகிறேன்
அந்த யுகம் எனக்கு கையளித்த கனவுகளும்
என்னிடமிருந்து கையகப்படுத்திய கனவுகளும்
உருவைப் பிரியும்
நிழல் போல் என்னைக் கைவிட்டு நகர்கின்றன

மீண்டும் எனக்கு முன்னால்
முன்னூற்றி அறுபத்தைந்து நாட்கள்
முன்னூற்றி அறுபத்தைந்து நட்சத்திரங்களாக
ஒளிர்கின்றன
வாழ்வை ஒளியூட்டும் புதிய நம்பிக்கைகள்
திறந்த சாளரங்கள் வழியே
என்னை ஒளியூட்டுகின்றன
நான் இப்போது
ஒரு பெரிய நட்சத்திரமாகி
இருளின் தெருக்களில் இறங்குகிறேன்

 

சர்ப்பச்சாறு

– பெ விஜயராகவன்-

வகை வகையென மதுக்குப்பிகள்
வகைக்கொன்றான நிறங்களில்
இன்னும் திறவாத இக்குப்பிகளுள்
எத்தனை சாத்தியங்கள்
இறுக பூட்டிய போத்தலில் உறங்கும்
துளித்துளியாய் சர்ப்பச்சாறு
சுவைத்துத் தீண்டிய நாக்குகள் உமிழும்
எண்ணற்ற விஷத்தின் வீர்ய ரகசியங்கள்

அமைதி

ஆங்கிலம்: லாங்கஸ்டன் ஹ்யூஸ்
தமிழில் : தி. இரா. மீனா

அவர்கள் கல்லறைகளைக் கடந்தோம்;
இறந்து கிடந்த மனிதர்கள்,
வெற்றியாளர்களோ தோல்வியாளர்களோ,
கவலைப்படவில்லை.
இருளில்,
வென்றவர்கள் யாரென்று
பார்க்க இயலாதவர்கள் அவர்கள்.

(சுதந்திர மொழிபெயர்ப்பு)