கவிதை

ஆசுவாசம்

– ஸ்ரீதர் நாராயணன் –

birds flock

உயரக் கம்பத்தின் வடக்குமூலையில்
கருநீல இறக்கையை விரித்து
ஒரு பறவை எழும்புகிறது
தொற்றினாற்ப்போல நூற்றுசொச்சப்
பறவைகளும் எழும்பிப் பறக்கின்றன.

காவ்-காவ்; காவ்-காவ் எனக்
குரலெழுப்பிக் கொண்டே
வானில் சிறு வட்டங்களிட்டு
கம்பிகளில் மீண்டும்
வந்தமர்கிறது.

அலைஅலையாக தொடர்கிறது
பறவைகளின் ஆட்டம்.

வாகன நெரிசல்களுடனும்
வியர்வை வழிதல்களுடனும்
அண்ணாந்து நோக்கி
குதூகலிக்கும் கூட்டத்தில்
நானும் ஒருவனாய்

தெறிக்கும் துளியென
ஒரு நீளவால் பறவை மட்டும்
அருகிலிருந்து ஆட்டத்தை
ரசித்துக் கொண்டிருக்கும்
மக்னோலியா மரத்தின்
உச்சியில் சென்றமர்கிறது.

பொதிகை

நித்ய சைதன்யா

இருள் கவிந்த பின்னும்
கலைந்து விடுவதில்லை
போர்வைக்குள் சுருண்டு
இரவைக்கடக்கும்
முதல் கதிர் பற்றி இழுக்கும்
நுனி
பறவைகள் அறியும்
ஒலிக்குறிகள் வனமெங்கும்
சிதறிப்பரவி
நதியோட்டத்தை வேகமூட்டும்
சூடு பறக்கும் யானையின் பிண்டம்
மீட்டுவரும்
வனத்தின் அச்சத்தை
பகலெல்லாம்
சதுரங்க விளையாட்டின்
புதிர்களோடு
விரிந்து அலையும்
வனத்தின் கனி
மலையிடுக்கில் வீழ
பரமபதம் துவங்கும்

இரங்கற்குறிப்பு

– ஸ்ரீதர் நாராயணன் –

pyrefire

வழுவழுப்பான சிறிய கூழாங்கல்லால் இடறப்பட்டோ
வன்மத்துடன் பாய்ச்சப்பட்ட கோடரியாலோ
வெறுமையான வயோதிக நொடிகளுக்குள்
புதைந்து போயோ

இலைச்சருகென இயல்பாக உதிர்ந்தபடியோ
மனக் கொந்தளிப்போடு மலையுச்சியிலிருந்து குதித்தோ

உற்றார் எல்லோரும் கொண்டாடும்
பொலிவான வாழ்க்கை முடித்து
வரலாற்று நாயகராகவாகவோ

துப்பாக்கிகுண்டின் விரைவிற்கு
தோற்றுப் போனவர்களாகவோ

எப்படியோ இங்கு ஒரு
வாழ்க்கை முடிந்து போகிறது..

ஆறுதல் முகங்களை
காட்டிச்செல்ல விரும்புபவர்களிடையே
ஒரு கணக்கு ஓடுகிறது,

எரியும் சிதையிலிருந்து
எத்தனைக் கொள்ளிகளை
பிடுங்கிக் கொண்டுப் போய்
தங்கள் வழிகளை ஒளியேற்றுவதென,

உயிருற்று இருப்பதுதான்
எவ்வளவு துயரமானது.

Picture courtesy: Videoblocks.com

சாட் காதலி

வெ கணேஷ் –

-
ஒரு புகைப்பட உருவம்
எழுத்துரு இயக்கம்
நான் காதல் கொண்டவளின்
இரு அடையாளங்கள்
காலை முதல்
கணவன் வீடு திரும்பும் 
மாலை வரை உடனிருந்தாள்
ஒவ்வோர் அமர்விலும்
எழுத்துரு நடனமாடி 
என்னை மயக்கினாள்.
குளியலறையில் கைநழுவிய சோப்புத்துண்டு
வயிற்று மடிப்புகளின் எண்ணிக்கை
கணவனுடனான முந்தைய நாள் பிணக்கம்
வாழ்வின் அனைத்தையும் திறந்த ஏடாக்கினாள்
திடுதிப்பென்று ஒரு நாள்
அவமதிப்பினால் நம் காதல் முறிந்தது என்று 
சொல்லிக் கொள்வோம் என அறிவித்துவிட்டு
வெற்றுத்திரையாகி மறைந்தாள்
காதலின் காரணங்கள் போன்று
பிரிவின் காரணமும் புனைவாய்த்தானே இருத்தல் வேண்டும்?
பெரிதாக்கப்பட்ட 
அவளின் குறை-தெளிவு பிம்பம்
புள்ளிகளாய்ச் சிரிக்கிறது

சான்றோர்

– செந்தில் நாதன் –

leighton_frederic_-_acme_and_septimius_-_c-_1868

தங்கள் தவறுகளை மறந்த வழுக்கைத் தலையர்கள்,
மெத்தப் படித்த, மரியாதைக்குரிய, வயதான வழுக்கைத் தலையர்கள்,
காதல் நோயால் பீடிக்கப்பட்டுப் 
படுக்கையில் புரண்ட இளைஞர்கள்
சவுந்தர்யத்தின் மடக்காதுகளுக்காக யாப்பமைத்த புகழுரை
வரிகளைத் திருத்தி உரை எழுதுகிறார்கள்.
இவர்கள் எல்லோரும் இங்குமங்கும் செல்வார்கள்;
எல்லோரும் புத்தகங்களுக்குள்ளேயே இருமுவார்கள்
எல்லோரும் வகுப்பறைக் கம்பளங்களைக் காலணிகளால் தேயச் செய்வார்கள்;
எல்லோரும் அடுத்தவர் நினைப்பதையே நினைப்பார்கள்;
எல்லோருக்கும் அடுத்தவருக்குத் தெரிந்தவனையே தெரிந்திருக்கும்.
கடவுளே, இவர்களது காட்டுலஸ்* இந்தப் பக்கமாய்க் கடந்தால்
என்ன தான் சொல்வார்கள் இவர்கள்?

The Scholars - W B Yeats

* காட்டுலஸ் – 2000 வருடங்களுக்கு முற்பட்ட ரோம் நகரக் கவிஞன். காதல் கவிதைகளுக்காகப் புகழ் பெற்றவன்.

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா