சிறுகதை

நிலவிற்குத் தெரியும்- சாரா ஜோசப் மலையாள மொழி சிறுகதை, தமிழி தி. இரா. மீனா

மொழிபெயர்ப்பு : மலையாளம்
மூலம் : சாரா ஜோசஃப்
ஆங்கிலம் : ஜே.தேவிகா
தமிழில் : தி. இரா. மீனா

தங்கமணி கண்முழித்து பார்த்தபோது உன்னிகிருஷ்ணன் பக்கத்தில்இல்லை. அவன் பாத்ரூமில் இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டு திரும்பிப் படுத்தாள். ஆனால் அமைதி கனமாக இருந்தது; முழித்திருந்தபடி ஏதாவது சத்தம் வருகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஒரு சின்னச் சத்தமுமில்லை. தங்கமணி எழுந்து விளக்கை ஏற்றினாள். மாடிப்படியின் முகப்புக் கதவும் திறந்து கிடந்தது. கலவரம் அடைந்து மாடிப்படிகளில் வேகமாக இறங்கினாள்; மூச்சிறைத்தது அவள் திணறினாள். மரத்தாலான பழைய மாடிப்படி, சத்தம் ஏற்படுத்தியது. பெரிய தாத்தா விழித்துக் கொண்டார்.

“தங்கமணி..” மாடிப்படியின் கீழிருந்து கூப்பிட்டார்.

“அவர் அறையில் இல்லை…” தங்கமணியின் குரல் ஹாலில் எதிரொலித்தது.வீடு முழுவதும் லைட் போடப்பட்டது! சந்திரனும், சேகரனும் எழுந்தனர். முன்வாசலில் பலமாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கோவிந்தனும், மொய்துட்டியும் கூட விழித்துக்கொண்டு விட்டார்கள். எங்கும் டார்ச் லைட்டுகளும், கைவிளக்குகளும் ஒளிர்ந்தன.

“தங்கமணி…” உன்னிகிருஷ்ணனின் அம்மா பலவீனமான நடையோடு தென் பகுதி இருட்டிலிருந்து தட்டுத்தடுமாறி வந்தாள். கண் பார்வையை கூர்மைப்படுத்திக் கொள்ள சிறிது நின்றாள். காது சிறிதும் கேட்பதில்லை. எதையோ அறிந்தவள்போல “தங்கமணி! நீ கீழே விழுந்துவிட்டாயா?” என்று கேட்டாள். தங்கமணி தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு படியிலிருந்து இறங்கி வந்தாள்.

நிலா வெளிச்சம் குளத்தைப் பிரகாசப்படுத்தியது. உன்னி கத்திக் கொண்டே நடந்தான். அந்த ஓடை எங்கே போனது? சாயந்திரம் கூட சந்தோஷமாக அதில் குளித்தானே! யார் அதை மறையச் செய்தது? சிறிதுநேரம் தூங்கி விட்டு வருவதற்குள்ளாக அது காய்ந்துவிட்டதா? முடியவில்லை.. முடியவில்லை.. தண்ணீர் இல்லாமல் என்ன செய்வது? சேறு ..எங்கும்.

நிலாவின் வெளிச்சத்தில் கானல் நீரைத் தேடிஓடினான். அங்கு தண்ணீர் இல்லை. நிலா வெளிச்சம் மட்டும்.. அவன் தொய்ந்து நடந்தான். இலக்கின்றி காலை இழுத்துக் கொண்டு ஆற்றின் கரையில் இங்கும் அங்குமங்குமாக ஓடினான்.பயம் கோரைப்பல்லாக சதையைத் துளைத்து மேலே மேலே இழுத்துக் கொண்டு போனது.

“உன்னி கிருஷ்ணா.. ஏய்..!” வீட்டின் கீழ்ப் பகுதியிலிருந்தவர்கள் அவனைத் தேடிக் கொண்டிருந்தனர்

ஏய்..ஏய்.. இரவுப் பறவைகள் பதிலுக்குக் குரல் கொடுத்தன. “என்ன.. சத்தம் அது, தங்கமணி?” உன்னியின் தாய் கழுத்தை வெளியே நீட்டி கஷ்டப்பட்டுப் பார்த்தாள். தங்கமணி போர்டிகோவிலிருந்து வெளிவாசல் முற்றத்திற்குப் போனாள். டார்ச்சுகளும், விளக்குகளும் வீடு முழுவதும் வெளிச்சத்தைப் பரப்பின.

“கிணற்றின் அருகே பாருங்கள்” என்று சேகரன் கூப்பிட்டார். தங்கமணி நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். கிணற்றின் அருகே போயிருப்பாரோ? அதற்குக் கைப்பிடிச்சுவர் கூடக் கிடையாது. மிக ஆழமானதும் கூட.குழிபோல இருந்த ஆழத்தை நோக்கி டார்ச்சுகள் அடிக்கப்பட்டன. தங்கமணி நடுங்கினாள். கிணற்றுத் தண்ணீர் கருப்பாக இரக்கமின்றி, அசைவின்றி இருந்தது. நிலா வெளிச்சம் அதன்மீது பட்டுச் சிரித்தது.

“இல்லை, அவன் இங்கிருப்பதாகத் தெரியவில்லை”.

“எங்கே போயிருப்பான்? ஐயோ கடவுளே!” வீட்டைச் சுற்றிலும் ஒளிர்ந்த டார்ச்சுகள் ஆற்றை நோக்கி நகர்ந்தன.

“தங்கமணி, உள்ளே வா ” பெரிய மாமா கூப்பிட்டார். தங்கமணி போர்ட்டிகோ பகுதிக்கு வந்தாள்.

“தங்கமணி எங்கேயிருக்கிறாய்?” உன்னியின் அம்மா கதவருகே வந்து கேட்டாள் .தங்கமணியின் நிழல் அவள் தெளிவற்ற பார்வையை மேலும் மறைத்தது.

“வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு நடு இரவில் வெளியே நிற்கிறாயா?”

போர்ட்டிகோவின் தூணில் அவள் சாய்ந்துநின்ற போது டார்ச்சுகளின் ஒளி ஆற்றின் மீது பரவுவது தெரிந்தது. பின்பு அவைகளின் வெளிச்சம் வேறுவேறு பகுதிகளில் பட்டு அசைந்தது. அது அரக்கர்கள் தம்கண்களால் ஆற்றின் எல்லாப் பகுதிகளையும் பயமுறுத்துவது போல மோதிப் பரவியது. பம்பாயில் இருந்த வரை உன்னி பக்கத்தில் படுக்கையில் இல்லையென்றால் பாத்ரூமில்தான் இருப்பான் என்று அவளுக்கு உறுதியாகத் தெரியும். சாத்தி வைக்கப்பட்ட சிறிய அறை, பாத்ரூம் என்ற இரண்டு அறைகளில்தான் அவள் தேட வேண்டியதிருக்கும் .பாத்ரூம் ஷவரில் உடம்பு முழுவதையும் நனைத்துக்கொண்டு உன்னி நிற்பான்; அவள் ஊகம் தவறியதில்லை. தன் கைகளை அவள் முன்னால் நீட்டிக் கொண்டு குழப்பத்தோடு “இப்போது பார், தங்கமணி உண்மையாகவே என் கைகள் மிகச் சுத்தமாக இருக்கிறதல்லவா? ”என்று கேட்பான். செத்த மீன் ஆற்றில் மிதப்பதுபோல வெளிறி ஊறியிருக்கும் அவன் கைகளை மடக்கி பாத்ரூமிலிருந்து வெளியே அழைத்து வருவாள்.

“தெரியுமா உனக்கு? இந்த இடம் இன்னும் பாட்டனார்கள் நடமாடிக் கொண்டிருக்கும் இடம்… வா ..உள்ளே வந்துவிடு! ”உன்னியின் தாய் தன் சில்லிட்ட கையை நீட்டித் தங்கமணியைத் தொட்டாள். அவள் வயிற்றில் உன்னியின் குழந்தை அசைந்தது.

வீட்டின் கதவைத் திறந்து கொண்டு போன உன்னி, பல மைல்கள் தொலைவிலிருந்த ஓடையை நோக்கி நடந்து கொண்டிருந்தான். “தண்ணீர்… தண்ணீர் எல்லாவற்றுக்கும்.. தேவையானது.. தண்ணீர்இல்லாவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது ”. அவன் பாதங்கள் மண்ணில் புதைந்தன. ஒருவித பதட்டம் ஏற்பட்டது. உடம்பு இறுகியது. தண்ணீருக்கு அலையும் பித்துப் பிடித்த நாய் போல.. தண்ணீர் தாகம் அவனை வாட்டியது

உறவினர்கள் ஆற்றின் கிழக்கு திசையில் ஒளியைப் படரவிட்டுத் தேடிக் கொண்டிருந்தனர். “இது தண்ணீர்ப் பிசாசின் வேலைதான். ஒரு சந்தேகமுமில்லை. தண்ணீர்ப் பிசாசு நம் குடும்பத்தின் சாபமில்லையா?” பெரிய மாமா சோகமாகச் சொன்னார் . அவர் முகம் இறுகியது. சங்குண்ணி மாமாவின் வெண்கலப் பாத்திரத்தில் காற்று பரவியது.

“கங்கேச யமுனேச் சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி ஜலஸ்மின் சந்நிதிம் குரு…”

“நாரணி, என் பாத்திரம் எங்கே? ” சங்குண்ணி மாமா பதட்டத்தோடு வீட்டைச் சுற்றியோடினார். பாத்திரத்தில் இல்லாத தண்ணீரை இடது கையிலிருந்து வலதுகைக்கு மாற்றிக் கொண்டிருந்தார். கங்கே ச யமுனேச் சைவ.. சங்குண்ணி மாமா முணுமுணுத்துக் களைப்பானார்.

சுட்டெரிக்கும் வெயிலில் ஆற்றுமணல் கொதித்துக் கிடந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் வெள்ளை மணல் விட்டுவிட்டுப் பிரகாசித்தது சங்குண்ணி மாமா ஆற்றை நோக்கி பித்துப் பிடித்தவர் போல ஓடிக் கொண்டிருந்தார். கங்கே ச.. காற்று வேகமாக அடித்து மண்ணைக் கிளப்பி அவரை அணைத்துக் கொண்டது. சங்குண்ணி மாமா வெறிபிடித்தவர் போல ஆடிக் கொண்டிருந்தார். காவடியாகத் தன்னை மறந்து ஆடிஆடிக் கீழே விழுந்தார். சுட்டெரிக்கும் மண்பூக்கள் அவர் தோளைத் தழுவ தகிக்கும் மணலுக்குள் மாமா புதைந்து மறைந்து போனார். அவரைத் தேடிப்போனவர்கள் மண்ணின் மேலே தெரிந்த இடது உள்ளங் கையைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டார்கள்.

காற்று இன்னமும் தண்ணீர் ஊற்றும் பாத்திரச் சப்தத்தின் ஒலியோடு கலந்திருந்தது. பெரிய மாமாவின் உடல் நடுங்கியது. “உன்னி கிருஷ்ணன் சங்குண்ணி மாமாவைத் தொடர்கிறான் ” அங்குள்ளவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் அவனுக்கு அவ்வளவு வயதாகவில்லையே.. அல்லது..?

தண்ணீர்ப் பிசாசால் இறந்தவர்கள் எல்லோரும் எண்பது, தொண்ணூறு வயதானவர்கள். ஆனால் உன்னிக்கு முப்பது வயது கூட ஆகவில்லையே? அவன் பம்பாய்க்குப் போனபோது அவனுக்கு இருபத்து நான்கு வயது. தங்கமணியை அவன் கல்யாணம் செய்து கொண்டபோது இருபத்தியெட்டு வயதுதான்.” என்று யாரோ சொன்னார்கள். பம்பாயில் என்ன ஆனதோ தெரியவில்லை? எதையாவது பார்த்து பயந்து விட்டானோ? சந்தேகமில்லை.. சந்தேகமில்லை! அவன் முகம் எப்போதும் பயந்த மாதிரியே இருந்தது. இல்லை! உன்னி பயந்தாங்கொள்ளி இல்லை. இளைஞனாக இருந்தபோது இப்படியில்லை. கல்லூரி நாட்களில் நடுராவில் தனியாக வருவான். இருட்டில் இந்த ஆற்றின் வழியாக தனியாக வந்திருக்கிறான்! தூக்கம் வராத பல இரவுகளில் எத்தனை நாட்கள் இந்த மண்ணில் படுத்திருக்கிறான்?அவன் தலைக்கருகே எத்தனை புகைத்த பீடிக்கட்டுகள் கிடந்திருக்கின்றன! ஆனால்..

உன்னிகிருஷ்ணன் பயப்படுவான்! தங்கமணிக்கு அது ஞாபகமிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுவான். எங்கு பார்த்தாலும் இரத்தம். அப்படித்தான் சொல்வான் தெருவோரங்கள், சாலைகள், ரயில் நிலையங்கள் , தண்டவாளங்கள், பஸ்கள், எல்லா இடங்களிலும் இரத்தம்… காலைக் கீழே வைக்காதே! கீழே பார்க்காதே! என்று சொல்வான்அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போதே பாத்ரூமிற்குள் ஓடுவான். கால்கள் சுத்தமாக இல்லை என்று பாத்ரூமிலிருக்கிற துவைக்கும் கல்லில் தோல் கிழியும் அளவுக்கு மணிக்கணக்காக கால்களைத் தேய்த்து தேய்த்துக் கழுவுவான்.

“என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? வெளியே வாருங்கள்” பாத்ரூமிலிருந்து அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு வெளியே கூட்டி வரும்போது அவன் முகம் பயத்தில் உறைந்திருக்கும். அந்தக்
கையாலாகாத முகபாவம். தனக்குள் அவன் பேசிக்கொண்ட விதம்…

“துர்நாற்றம்.. அப்படி ஒரு நாற்றம் தங்கமணி! ”

“அப்படி ஒரு நாற்றமும் இல்லையே. உங்கள் கற்பனை அவ்வளவுதான்”.

“இல்லை.. ஒன்றுமேயில்லை என்கிறாயா?”

அவன் அவளை அந்த ஐந்து மாடிக்கட்டிடத்தின் கீழே இழுத்துக் கொண்டு போனான். மாடிப்படிகளில், முன்பகுதியில்,சாலையில்.. தங்கமணிக்கும் கூட இரத்தமழை உணர்வால் குமட்டல் வந்தது.

டார்ச் லைட்டுகள் அணைந்து விட்டன.“கவலைப்பட வேண்டாம்.” மின்சார விளக்குகளைப் பயன்படுத்தலாம்” என்றார் பெரிய மாமா. ஆற்றில் நடக்கும்போது யாருக்கு லைட் வேண்டும்? நிலாவின் பால் ஒளி வரண்ட ஆற்று மணலின்மீது பட்டு மின்னியது. யாரும் கண்ணில் தென்படவில்லை. இங்குமங்குமாகச் சில செடிகளும், பசுக்களும் சிலை போலக் கண்ணில் பட்டன. தேடுபவர்களில் சிலருக்குச் சந்தேகம் எழுந்தது. உன்னி இவ்வளவு தூரம் வந்திருப்பானா?அவன் தண்ணீரின் மேல் பிரேமையுள்ளவன். தண்ணீரில்லாத ஆற்றில் திரியவருவானா? வேறு இடத்திற்குப் போய்த் தேடலாமா?

பெரிய மாமா ஒப்புக் கொள்ளவில்லை. “உங்களுக்கு அவனைப் பற்றித் தெரியாது இந்த ஆறுதான் அவனுக்கு எல்லாமும். அவன் இங்குதான் இருப்பான்” என்று அவர் முன்னால் நடந்து கொண்டே சொன்னார்.

உன்னியின் தாய் கையில் விளக்கோடு முகப்பிற்கு வந்தாள். கண்ணாடியால் மூடப்பட்டிருந்த விளக்கின் சிவப்பொளி விம்மிற்று. “எல்லோரும் எங்கே போய்விட்டார்கள், தங்கமணி? யாரையும் காணவில்லையே.” பதில் எதுவுமில்லை. தங்கமணியின் நிழலசைந்தது. இன்னமும் போர்ட்டிகோ தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தாள்.

“தங்கமணி, நீயா?”

காலை நீட்டிஉட்கார்ந்தபடி நினைவுகளில் ஆழ்ந்திருந்தாள். உன்னி சாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு போகவில்லையா?

“என்ன இது? சாப்பாட்டை எங்கே எடுத்துக் கொண்டு போகிறீர்கள்?” உன்னி பயந்து விட்டான். குரலைத் தாழ்த்திக் கொண்டு மெதுவாக “இது எல்லாம் விஷம் தங்கமணி… அரிசி, காய்கறிகளை நம்பக் கூடாது…”

“நான்தான் சமைத்தேன். என்னையும் நம்பமாட்டீர்களா?”

“இல்லை, தங்கமணி.. விஷம் அரிசிக்குள் இருக்கிறது! உன் சாப்பாட்டையும் இங்கு எடுத்துக் கொண்டு வா.. அதைக் கழுவி விட்டுச் சாப்பிடு…”

சாதம் பாத்ரூம் தரைமுழுவதும் கொட்டிக் கிடந்தது. தங்கமணி தனக்குள் பல நாட்களாக அடக்கிவைத்திருந்த உணர்வுகள் ஓர் அலறலாக வெளியே வந்தது. துக்கம் நிறைந்தவனாகத் தெரிந்த அவனது தோற்றம் கண்களில் கண்ணீரைப் பெருக்கியது. அது சாப்பிட்டுக் கொண்டிருந்த அவள் தட்டில் விழுந்தது.

உன்னியின் தாயின் கண்கள் இருட்டைப் பார்த்து வெறுமையானது. “இப்போது மணி என்ன?” தங்கமணியின் நிழலைப் பார்க்கமுடியாமல் அவள் இருட்டிடம் கேட்டாள். பிறகு அவள் மெதுவாக நடந்து
தென்கோடி அறைக்குள் போனாள்.

திடீரென்று மின்சாரம் பாய்ந்ததைப் போல உன்னி தன் காலில் குளிர்ச்சியை உணர்ந்தான். ஈர மண்ணிலிருந்து எழுந்த குளிர்ச்சி அவன் நெற்றிவரை பாய்ந்தது. தரையில் உட்கார்ந்து உள்ளங்கையில் மண்ணை எடுத்து முகர்ந்தான். புதிய ஆற்றுநீரின் மணம்! ஒரு விநாடிகூட யோசிக்காமல் அவன் மண்ணைத் தோண்டத் தொடங்கினான். ஆற்று மணலைத் தோண்டும்போது ஒரு குழந்தையைப் போல உணர்ந்தான். சந்தோஷத்தில் பெரிதாகக் குரல் கொடுத்தான். ஆற்றின் மறுகரையிலிருந்த அவன் நண்பர்கள் மகிழ்ச்சியாக எதிர்க்குரல் கொடுத்து அவனை அழைத்தனர்.

அவர்கள் டார்ச்சுகளோடும், விளக்குகளோடும் அவனை நோக்கி ஓடி வருவதைப் பார்த்தான். மிகுதியான சந்தோஷத்தில் ஆழமாகத் தோண்டினான். இரண்டு புறங்களில் இருந்தும் வேகவேகமாகச் சிறிய அளவில் குவியல் உருவானது. இரவுப் பறவைகள் சப்தத்தோடு தாழ்வாகப் பறந்தன. வழி தவறிய கால்நடை அவன் பின்னால் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தது. பரவியிருந்த வரண்ட கருக்காச்செடி அவன் காலைச் சுற்றிப் பின்னியது. மகிழ்ச்சியான மனதோடு உன்னி தன் கைகளால் தண்ணீரை எடுத்தான். நிலா வெளிச்சம் அவனுடைய உள்ளங்கைகளில் விழுந்து சிரித்தது.

தங்கமணி கையில் லாந்தர் விளக்கோடு தனியாக கிணற்றினருகே போனாள். நிலா வெளிச்சம் கிணற்றில் விழுந்து பொருமியது. தண்ணீர்ப் பிசாசினால் அழிந்தவர்களின் ஆத்மாக்கள் நிலா வெளிச்சத்தில் கிணற்றில் தெரிந்தன.

“அப்படியானால் நீங்கள் எங்களைச் சோதிக்கிறீர்கள்?” அவள் சோகமாகக் கேட்டாள்.

“வீட்டிற்குப் போக வேண்டும். நம் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதில் குளிக்கவேண்டும். அந்தக் கிணற்றின் அடிப்பகுதி உறுதியான நெல்லி மரத்தாலானது. எங்களின் முன்னோர்கள் மரத்தை வெட்டி மதில் சுவராகக் கட்டினார்கள். அங்கு அவ்வளவு சுத்தமான தண்ணீர்— உள்ளேயும் வெளியும் குளிர்ச்சியாக இருக்கும்.. நாம் போகலாம். தங்கமணி,நாம் திரும்பிப் போய் விடலாம். “அவன் மிகவும் பிடிவாதமாக இருந்ததால்தானே அவனை அழைத்துக் கொண்டு வந்தேன்? இப்போது? நீ என்ன செய்திருக்கிறாய்?

ஆத்மாக்கள் பேசாமல் நின்றன.தங்கமணி விம்மியழுதாள். அந்த லாந்தர் விளக்கிலிருந்து கடைசியாக ஜூவாலை வந்து அணைந்தது. உன்னியின் குழந்தை துன்பத்தில் புழுவாய் நெளிந்தது. தங்கமணி அசைந்த வயிற்றைப் பிடித்துக் கொண்டு கிணற்றுப் பகுதியைவிட்டு ஓடினாள்.அவளுக்குப் பின்னால் அவை சிரித்தன.

உன்னியின் அம்மா தென்கோடி அறையிலிருந்து முற்றத்துக்கு வந்து அமைதியாகக் கல்போல நின்றாள். “எனக்கு எதுவுமே புரியவில்லை”. முயற்சி செய்தும் அவளால் தங்கமணியின் நிழலைப் பார்க்கமுடியவில்லை.

“தங்கமணி, இது எத்தனையாவது மாதம்?” தங்கமணி பதில் சொல்லவில்லை. அவள் தன் இடுப்பு ஆடைப் பகுதியைச் சிறிது தளர்த்தி வயிற்றைத் தடவிக் கொண்டாள். அது உன்னியின் கனவை வருடுவதாக இருந்தது. எந்த பதிலும் கிடைக்காததால் அம்மா சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

கோள்களைச் சோதித்த ஜோசியன் வரப்போகும் அபாயத்தை எச்சரித்திருந்தான். தண்ணீர்ப் பிசாசுகளும், பாட்டனார்களின் ஆவிகளும் தொல்லை தரலாமென்று.

“இனியும் தாமதிக்கக் கூடாது. நாளைக்குள் நாம் ஏதாவது செய்தாக வேண்டும்”. பெரிய மாமா சொன்னார்.

“முதலில் நாம் அவனைக் கண்டுபிடிக்க வேண்டும்.” தேடப் போனவர்கள் களைப்படைந்தனர்.

“அவன் எங்கே போக முடியும்?” பெரிய மாமாவின் குரலெழுந்தது.அவருக்குக் கோபமும் ,வருத்தமும் ஒருசேர ஏற்பட்டன. அவர்களுக்கு முடிவு கட்டவேண்டும். அவர்கள் அபாயமானவர்கள்! ஆறு அல்லது கிணறு, எதுவென்று சொல்ல முடியாது. அவனை எங்கே இழுத்துச் சென்றார்கள் என்று தெரியவில்லை. இது விளையாட்டில்லை. ஆடிமாதத்தின் கோபமான ஆறு, பருவமழை, ஆகியவை மாமாவின் நெஞ்சை அழுத்தின. ஆற்றின் கரையில் முன்னோர்களுக்கு.. வாழை இலைகளில் உணவு படைக்கும் காட்சிகள்.. ஒற்றை மண்விளக்குகள்.. மெலிதான ஜுவாலையோடு.. தண்ணீரில் மிதந்தபடி துளசி மணமும், மலர்களின் மெலிதான மணமும் இருபுறமும்…முன்னோர்களே ! எங்களுக்கு உதவுங்களேன்..

பம்பாயிலிருந்து அவர்கள் வந்த நாளில் என்ன நடந்தது? உன்னி பூஜை அறையிலிருந்து ராமனின் சிலையையும் அத்யத்ம ராமாயணப் புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு கிணற்றுப் பக்கம் போனான். கிணற்றினருகேயுள்ள சுவரில் ராமன் சிலையை வைத்தான். அதைத் துடைத்து வர்ணத்தைச் சுரண்டினான். ராமாயணப் புத்தகத்தைக் கழுவிச் சுத்தம் செய்ததால் கனமான அட்டை கிழிந்து பக்கங்கள் கிணற்றைச் சுற்றிச் சிதறின. அனைவரும் குழம்பிக் கிணற்றினருகே ஓடியபோது அவன் புனிதப் புத்தகத்தின் கடைசிப் பகுதியைச் சுறுசுறுப்பாகக் கழுவிக் கொண்டிருந்தான். அப்பாவிக் குழந்தை தவறு செய்துவிட்டு முழிப்பதைப் போல ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பார்த்தான்.

“இது மிகவும் அழுக்காக இருக்கிறது. கழுவிச் சுத்தம் செய்ய வேண்டுமல்லவா?” அப்போதே சந்திரனும், சேகரனும் உளவியல் மருத்துவரை பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். தங்கமணி பம்பாயில் ஒரு மலையாள மருத்துவரைக் கலந்து ஆலோசித்திருந்தாள். “சூழ்நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்” என்று அவர் ஆலோசனை சொன்னார். தங்கமணி குழம்பினாள். அவற்றை எப்படித் தவிர்க்க முடியும்? முக்கியம் கொடுக்காமலிருக்க முடியும்? உன்னியின் உள்ளுணர்வை, மாயையை எந்தத் தண்ணீரால் கழுவமுடியும்?

சம்பள நாளில் ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் அவன் கழுவிக் காய வைக்கும் போது அவன் முகத்தில் தெரிந்த பாவம் அவன் நிலைமையை அவளுக்குத் தெளிவாகப் புரியவைத்தது.அவளுக்கு முத்தம் கொடுக்கும் போதெல்லாம் பாத்ரூமிற்கு ஓடித் தன்வாயைக் கழுவிக் கொள்ளும்போது அவனுக்குள் ஏற்படும் பயத்தின் ஆழத்தை அவளால் மட்டுமே உணரமுடியும். எழுத்துக்கள் அசிங்கமாக இருக்கின்றன; அம்மாவிற்கு ஒரு கடிதம்கூட எழுத முடியவில்லை. உன்னி பேனாவை மணிக்கணக்கில் கழுவுவான். அவனைத் தழுவும் காற்று புகையாக மண்ணைத் தூவி, அதிர்வை ஏற்படுத்தும். ஜன்னல்கள் ,கதவுகள், எல்லாவற்றையும் சாத்துவான். தங்கமணி எப்படிச் சூழ்நிலைகளுக்கு முக்கியம் கொடுக்காமல் இதையெல்லாம் தவிர்க்க முடியும்?

திடீரென்று பெரிய மாமா ’உன்னிகிருஷ்ணா.. ’என்று பெரிதாக அலறி எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அது மறு கரை வரை எதிரொலித்தது. மாமா தூரத்தில் உன்னியைப் பார்த்து விட்டதைப் போலத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டார். வேக வேகமாக நடந்தார். நடை ஓட்டமாக மாறியது.

உன்னியின் பாதங்களை நனைத்தபடி மண்ணூற்று வழியாக தண்ணீர் பரவியது. தண்ணீரைக் கையால் தட்டிக்கொண்டு அவன் சந்தோஷமாக கத்திக்கொண்டே குதித்தான். மண்ணும் சந்தோஷத்தில் குளிர்ச்சியான தண்ணீரில் ஊறியது. காய்ந்து கிடந்த புல்லின் மீதும், நின்றிருந்த பசுக்களின் மீதும் தண்ணீர் தெளிக்கப்பட்டது. ஆற்றின் மார்பு நிறைந்து வழிந்தது. தெய்வத்தின் பிரசாதம் போல அமிர்த ஓடையாய் வெடித்தது. உன்னியின் முழங்கால்களைத் தண்ணீர் தொட்டது. இரண்டு பக்கங்களிலுமிருந்த துளைகளிலிருந்து மண் சரியத்தொடங்கியது. துளை பெரிதானது. ஆற்றின் கீழே அமைதியான பிரவாகம் இப்போது உன்னியின் பாதத்தில் ஒன்று திரண்டது. அவன் காலின் கீழிருந்த மண் மூழ்கியது. அவன் பாதங்கள் கீழே கீழே.. சந்தோஷமாக நெஞ்சுவரை வந்துவிட்ட தண்ணீரைத் தட்டினான்.

உன்னிகிருஷ்ணன்…. விளக்குகளும், மனிதர்களும் நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நிலவொளியில் மங்கித்தெரிந்தனர். அவனுக்கு பயம் வந்தது. அவர்கள் ஓடையை அபகரித்துக் கொண்டு விடுவார்கள்.. ஈரப்பதத்தையும், மென்மையையும் வடித்து விடுவார்கள்.“இங்கே வராதீர்கள்…”அவன் கத்தினான். தன் கைகளை விரித்துத் தண்ணீரை அணைத்துக் கொண்டான். கரையின் முனையும், துளைகளும் இன்னும் சிறிது தண்ணீரைப் பரப்பின. ஆறு,எல்லையற்ற அன்புக்கு அடையாளம். அவளுடைய இரக்கமான பரிசுகள் அவனை நோக்கிப் பாய்ந்தன; அவை அவன் காலடியில் இணைந்தன. தண்ணீர் கழுத்திற்கு ஏறியது.

’உன்னிகிருஷ்ணா.. மகனே.! ’ யாரோ கூப்பிட்டார்கள். அம்மாவா அல்லது தங்கமணியா? மக்கள் பெரிதாக அழுதுகொண்டு அவனை நோக்கி ஓடிவந்தார்கள். அவர்களிடம் டார்ச்சுகளும், விளக்குகளும் இருந்தன. கூடாது! இந்தத் தண்ணீர் அசுத்தம் அடையக்கூடாது. உன்னி தன் இரண்டு தோள்களையும் விரித்துத் தண்ணீரை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். பெருங்காற்று வீசியது. குளிர்ச்சியான இளநீரைக் குடிப்பது போல, தாய்ப்பாலைக் குடிப்பது போல அவன் வாய் நிறையக் குடித்தான். மீண்டும்.. மீண்டும்..

வெளிச்சத்தோடு மக்கள் அந்த இடத்திற்குப் போனபோது அவர்கள் எதையும் பார்க்கவில்லை. விளையாடுவதற்காக பகல்நேரத்தில் குழந்தைகள் தோண்டியிருந்த குழியில் நிலாவெளிச்சம் விழுந்து சிரித்தது.
——————————-

சாரா ஜோசஃப் சிறுகதை மற்றும் நாவலாசிரியர்.பெண்ணியவாதி. சாகித்ய அகாதெமி விருது, வயலார் விருது, பத்மபுரா இலக்கிய விருது எனப்பல விருதுகள் பெற்றவர். தாய்க்குலம், ஒத்தப்பூ ,ஆதி ஆகியவை இவருடைய நாவல்களில் சிலவாகும். நிலவு அறியுன்னு, புது ராமாயணம், மனசிலே தீ மாத்ரம் ஆகியவை இவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் சிலவாகும்.இச்சிறுகதை ‘நிலவு அறியுன்னு’தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

சாந்தா

ஷ்யாமளா கோபு 

இரவு மணி ஒன்பதிருக்கும். வாசல் கதவை மூடி தாளிட்டு விட்டு படுக்க கிளம்பினேன். தெருவில் நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டது. என் வீட்டிற்கு எதிர் வரிசையில் இடதுபுறம் நான்கு வீடு பத்து பதினைந்து தள்ளி தெருநாய்கள் இருக்கும். அந்த வீட்டு அம்மாள் தான் அவைகளுக்கு தினசரி உணவிடும் பழக்கம். தெருவினருக்கும், திருடர் பயமில்லாமல் அது ஒரு பாதுகாப்பாக இருப்பதால் அவைகளை ஒன்றும் சொல்வதில்லை. சில சமயங்களில் வெளியாட்கள் யாரேனும் தென்பட்டால் இப்படித் தான் இரவெல்லாம் குரைத்துக் கொண்டிருக்கும். அதுவும் பத்து பதினைந்து நாய்கள் ஒன்றாக ஓங்காரமிடுவது கோபத்தைக் கிளப்பத் தான் செய்யும். ஆனால் வெளியாட்களுக்குத் தான் இத்தகைய வரவேற்பு என்பதால் இப்போதும் எவரேனும் வெளியாட்கள் தெருவில் தென்படுகிறார்களா என்று காம்பவுண்டின் கேட்டிற்கு பின்புறம் நின்று தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தேன்.

என் வீட்டின் இடது புறம் சிறு சந்தில் இருபுறமும் இருபது சிறிய ஸ்டோர் வீடுகள் உண்டு. அவர்கள் எல்லோரும் அவரவர் வீட்டின் விளக்கைப் போட்டிருந்தார்கள். சந்தின் கடைசியில் ஒரே ஒரு ஸ்டோர் வீடு மட்டும் ரொம்ப நாட்களாக காலியாக இருந்தது. இன்று காலையில் தான் புதிதாக திருமணம் ஆன ஒரு ஜோடி குடி வந்திருந்தார்கள். காதல் திருமணம் போலும். இரு வீட்டு உறவினரோ அன்றி நண்பர்களோ இல்லாமல் இருவரும் மட்டும் மாலையும் கழுத்துமாக வந்து இறங்கி ஆரத்தி சுற்றக் கூட ஆளில்லாமல் தாங்களாகவே கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார்கள்.

இப்போது அவர்கள் வீட்டு வாசலில் தான் ரகளை. ஏ சாந்தா சாந்தா என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான் ஒரு நடுத்தர வயது ஆண். அவளோ கதவைத் திறக்கவில்லை. அவன் சத்தமோ குறையவில்லை. குடித்திருப்பான் போலும். நிற்க மாட்டாதா தள்ளட்டாம். கூட இருந்த பதினைந்து பதினேழு வயது சிறுமிகள் இருவரும் ஓவென்று அழுது கொண்டிருந்தார்கள். வீட்டின் உள்ளே இருந்த இளைஞன் வெளியே வரவில்லை. அந்த இளம் பெண் மட்டும் வெளியே வந்தாள். அவளைக் கண்டதும் சாந்தா சாந்தா என்று அவளைக் கெஞ்சுகிரானா அல்லது அடிக்கப் போகிறானா என்று அறிந்து கொள்ள இயலாத வகையில் உளறிக் கொண்டு அவள் மீது விழுந்து கொண்டிருந்தான். அவளோ நகர நகர விடாது அவள் மீது மீண்டும் மீண்டும் விழுந்து கொண்டிருந்தான். அந்த சிறுமிகளோ சாந்தா என்ற அந்த பெண்ணை ஓடிச் சென்று இடுப்போடு கட்டிக் கொண்டு அம்மா அம்மா என்று அலறி அழுது கொண்டிருந்தது. பார்க்க சகிக்க முடியாத பாச போராட்டம்.

அந்த சந்தில் இருக்கும் அத்தனை குடித்தனக்காரர்களும் அங்கே குழுமி விட்டார்கள். என்னால் மட்டும் விஷயம் என்னவென்று அறிந்து கொள்ளாமல் இன்றிரவு உறங்கி விட முடியுமா என்ன? நானும் அங்கே தான் இருந்தேன்.

அந்த வீட்டின் ஓனரம்மா வந்து சாந்தாவிடம் “என்னம்மா ராவுல இவ்வளவு அக்கப்போரு பண்றீங்க?” என்று குரல் கொடுத்தாள்.சாந்தாவோ பதில் சொல்லாமல் ஓனரம்மாவைக் கண்டதும் மிகவும் பம்மியவளாக “இல்லேம்ம்மா” என்றாள்.

“இங்கே இத்தனை அக்கப்போரு நடக்குது. உன் புருஷன் எங்கே?” என்று கேட்டாள்.

“நான் தானுங்க அதும் புருஷன்” என்றான் இவ்வளவு நேரமும் சாந்தா என்று கூவி கலாட்டா செய்து கொண்டிருந்தவன்.

“என்னது?” திடுக்கிட்டது ஓனரம்மா மட்டுமல்லா கூடியிருந்த கூட்டம் முழுவதும் தான்.

“ஆமாம்ம்மா நான் தானம்மா அதும் புருஷன்.” என்றான் அவனே.

“ஏன்னா இது சாந்தா?” என்ற ஓனரம்மாவின் குரலில் கடும் கோபம் இருந்தது. அவள் கண்கள் சாந்தாவை இரு தோளிலும் பிடித்துக் கொண்டு தொங்கும் இரு சிறுமிகளிடம் பாய்ந்தது.

“இது ரெண்டும் அதும் பிள்ளைங்கம்மா. எங்களை விட்டுட்டு இந்த பயலோடு ஓடியாந்துட்டுது” என்றான் அந்த குடிகார கணவன்.

“நீ மூக்கு முட்ட குடிச்சிட்டு வேலை வெட்டிக்கு போகாம நான் சம்பாரிசிக்கினு கொண்டார ஒன்னு ரெண்டையும் பிடுங்கி அதையும் குடிச்சி கவுந்துடர”

“எல்லார் வீட்டிலும் இருக்கறது தானே. அதுக்காக கட்டின புருஷனையும் பெத்த
பிள்ளைங்களையும் ஒருத்தி இப்படி அம்போன்னு விட்டுட்டு வருவாளா என்ன?” என்று நொடித்தாள் கூட்டத்தில் ஒருத்தி.

“இவன் கூட வாழ முடியாதும்மா” என்று கேவினாள் சாந்தா.

“உன் புருஷன் என்று ஒருத்தனைக் கூட்டிக்கினு வந்தியே. அவனை வெளியே வர சொல்லு” என்று உறுமினாள் ஓனரம்மா. வெளியே வந்தவனிடம் “இதெல்லாம் தெரிந்துமா நீ இந்த பொண்ணை இட்டுக்கினு வந்தே?” என்று கேட்டாள்.

“நல்லவன் மாதிரி நிக்கறானே இவனை நம்பாதீங்கம்மா. எந்நேரமும் குடிச்சிச்சிட்டு இவளை கொல்றான். அதுவும் எத்தனை நாளைக்கு தான் இவனிடம் உதை வாங்கும். அது தான் இட்டுக்கினு வந்துட்டேன்” என்றான் மிகவும் நல்லவனைப் போல் புதுமாப்பிள்ளை.

“இந்த சின்ன பொண்ணுங்களோட கதி என்னாகும்னு நெனச்சிப் பார்த்தியா?” என்று கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

“எங்க கூடவே இருக்கட்டும். நான் காப்பாத்திக்கறேன்” என்றான் அவன்.

“யாரு பொண்ணுங்களை யார் காப்பாத்துறது?” என்று உறுமினான் சாந்தாவின் பழைய கணவன்.

“ஏண்டா நீயும் காப்பாத்த மாட்டே. என்னையும் காப்பாத்தக் கூடாதுன்னு சொல்றே. கொஞ்சமாவது மனசாட்சி வெச்சிப் பேசு” என்றான் சாந்தாவின் புது கணவன்.

“தானும் படுக்க மாட்டான். தள்ளியும் படுக்க மாட்டான்” என்று கிசுகிசுத்தான் கூட்டத்தில்  ஒருத்தன்.

ஓனரம்மாவின் காதில் விழுந்து விட்டது அந்த வார்த்தைகள். “யாருடா அது கெட்ட வார்த்தை பேசறது?” கோபத்துடன் கூட்டத்ததில் குரல் வந்த திசையில் ஒரு முறை முறைத்தாள். கூட்டம் அமைதியாகி விட்டது. “சாந்தா இப்போ நீ என்ன செய்யப் போறே?” என்று கேட்டாள் ஓனரம்மா.

“நான் இவரோடு தான் இருப்பேன்” என்று காலையில் திருமணம் முடித்துக் கொண்டு வந்த புது கணவனுடன் ஒண்டி நின்றாள் அவள்.

“அம்மா எங்களை விட்டுட்டுப் போய்டாதே” என்று அவளிடம் கெஞ்சினார்கள் அவள் மகள்கள் இருவரும். தன் புதுக்கணவனை பரிதாபமாக பார்த்தாள் சாந்தா.

உடனே மனம் இளகி விட்டது அவனுக்கு. “நீங்க எங்களோடு இருங்க. நான் பார்த்துக்கறேன்” என்றான்  அவன்.

“நானும் உங்களோடு இருக்கேன். என்னையும் உங்களோடு வெச்சிக்கங்க” என்றான் சாந்தாவின் பழைய கணவன்.

“ஏய் என்ன சொன்னே?” என்றான் புது கணவன்.

“என் குடும்பம் உன்னோடு தானே இருக்கு. நான் மட்டும் தனியா இருக்க முடியுமா?”

“அதுக்கு?” பதறினான் அவன்.

“நானும் ஒரு ஓரமா இருந்துட்டுப் போறேன்” என்றான் அந்த குடிகாரன்.

“என்ன சொன்னே?” என்று திடுக்கிட்டான் இந்த ட்விஸ்டை எதிர்பாராத புது மாப்பிள்ளை.

“நான் சோத்துக்கு என்ன செய்வேன்? உங்களோடு நானும் இருந்திடறேன். நீ என் பொண்டாட்டிய வெச்சிக்கோ. கூடவே என்னையும் வெச்சிக்கோ. அம்புட்டு தான்”

தலையில் அடித்துக் கொண்டாள் சாந்தா. அங்கும் இங்கும் சாந்தியில்லை அவள் வாழ்விலே. என்ன செய்வது?

இப்போது கூட்டம் முழுவதும் திகைத்து ஆகா, டேய் என்ன சொன்னே, அட வெட்கம் கெட்டவனே, இப்படி மானம் கெட்டவனுடன் அந்த பொண்ணு எப்படி வாழ முடியும்? இன்னைக்கு மானங்கெட்டு பொண்டாட்டியை அடுத்தவனுக்கு விட்டவன் நாளை குடிக்கு காசு இல்லைன்னு பெத்த பிள்ளைங்களை அடுத்தவனுக்கு வித்துடுவான் என்றெல்லாம் கூட்டத்தில் ஆளாளுக்கு பேசிக் கொள்ள தொடங்கி விட்டார்கள்.

மனசு வெறுத்துப் போயிற்று அந்த ஓனரம்மாவிற்கு. “ஏனம்மா சாக்கடைக்கு தப்பி பீக்குழிக்குள்ள விழுந்ததைப் போல அவனுக்குத் தப்பி இவனோடு வந்திட்டியே. உன் வயசு பெண்களை நாளை இவன் நல்லபடியா பார்த்துப்பான்னு நம்பறியா?” என்று கேட்டாள்.

“இந்த காலத்தில பெத்த தகப்பனை நம்பியே பொட்டைப் பிள்ளைங்களை விட்டுட்டு போக முடியாது. இதுல நீ இவனை நம்பி எப்படி பிழைப்பே?” என்றாள் ஒருத்தி.

“இவன் கூட வாழ முடியாதும்மா” என்று கேவினாள்.

“உன் கஷ்டம் புரியுதும்மா. இன்னைக்கு தமிழ்நாட்டுல குடிகாரனுங்க வீட்டுல நடக்கறது தான் உனக்கும் நடக்குது. ஆனால் நாம நம்ம பிள்ளைகளை கை விடக் கூடாதில்லையா?” என்றேன் நான்.

“இவன் என்னை எங்கேயும் நிம்மதியா பிழைக்க விட மாட்டான்ம்மா” என்றாள் சாந்தா.

“அது தான் தெரியுதே. இல்லாட்டி எவனாவது வெட்கம் கெட்டு உன்னை இட்டுக்கிட்டு வந்தவன் கிட்ட நானும் ஒரு ஓரத்தில் இருக்கேன் என்று சொல்வானா?” என்றேன் நான்.

வார்த்தை போட்டு வார்த்தைப் போட்டு வம்பு பெரிதாகிக் கொண்டிருந்தது. சாந்தாவின் புது கணவன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு உள்ளே வர சொன்னான். பழைய கணவனோ நானும் உள்ளே வருகிறேன் என்றான்.

என் கணவர் என்னை அழைக்கவே இதற்கு மேல் இங்கு நின்று  வேடிக்கை பார்க்க முடியாது என்று என் வீட்டிற்குப் போய் விட்டேன்.

மறுநாள் காலையில் ஹவுஸ் ஓனரம்மாவிடம் கேட்டேன் முடிவு என்ன ஆயிற்று என்று. நூறுக்கு போன் பண்ணி எல்லோரையும் வண்டி ஏற்றி காவல் நிலையம் அனுப்பி விட்டதாக சொன்னார்கள். மனசு சாந்தாவிற்காக பரிதாபட்டது. எல்லோரும் அதையே பேசி பேசி அலமலந்து போனோம்.

என் மக்கள்

உஷாதீபன் 

       வீட்டு வாசலில் வரும் ஒரு குடம் பதினைந்து ரூபாய் வேன் தண்ணீர் வாங்க இஷ்டமில்லை ஈஸ்வரனுக்கு. பத்து ரூபாய்தான் விற்றுக் கொண்டிருந்தது. இப்போது கூட்டியிருக்கிறார்கள். அப்போது சில சமயம் வாங்கியிருக்கிறார் மனசில்லாமல். இந்த முறை பதினைந்து என்றவுடன் மனசு விட்டுப் போனது. பெரிய வித்தியாசமில்லைதான். ரெகுலராக அந்தத் தெருவில் வேனில் தண்ணீர் வாங்குபவர்கள் யாரும் இப்பொழுதும் நிறுத்தியதாகத் தெரியவில்லை. மூன்று நான்கு வேன்கள் வருகின்றனதான். ஒவ்வொரு ரூபாய் வித்தியாசப்படும். அது அதில் வழக்கமாக வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். சுத்தப்படுத்திய தண்ணீர் என்கிற நினைப்பு. இவருக்கொன்றும் அவ்வளவு நம்பிக்கையில்லை.

எப்பொழுதுமே வேனில் வாங்காதவரான நாலு வீடு தள்ளியுள்ள பிரபாகரன் இப்பொழுதும் வாங்குவதில்லை. பதிலாக அவர் ஒன்று செய்கிறார். சைக்கிளோடு வரும் ஒரு ஆளிடம் இரண்டு ப்ளாஸ்டிக் குடங்களைக் கொடுத்து பின் சீட்டில் கட்டித் தொங்கவிட்டு அவரை அருகிலுள்ள காலனியிலிருந்து  எடுத்து வரச் செய்கிறார். ஒரு குடத்திற்கு இவ்வளவு என்று கொடுப்பார் போலும். கேட்டுக் கொள்வதில்லை. சமயங்களில் அவரின் அந்த சைக்கிளுக்கு டயர், செயின், ரிப்பேர் என்று வேறு உதவிகளும் செய்கிறார். அவருக்கு அது திருப்தியாக இருக்கிறது. மனசும் இருக்கிறது.

ஈஸ்வரன் ஆரம்ப காலத்திலிருந்தே அவரது மொபெட்டில் போய்த்தான் தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தார். என்றுமே வேன் தண்ணீர் அவர் வாங்கியதில்லை. தினமும் பத்து ரூபாய் என்றால் மாதத்துக்கு முன்னூறா. என்ன அநியாயம்? என்று அவர் மனது சொல்லியது.

அப்படியொன்றும் அது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராயும் தோன்றவில்லை. சுட வைத்துக் குடிக்க இறக்கியபோது  மேலாகப் படர்ந்திருந்த பவுடர் போன்ற படலமும், அசாத்தியக் க்ளோரின் வாடையும் பிடிக்கவில்லை. மேலும் ஒரு மாதிரிக் கடுத்தது அந்தத் தண்ணீர். வாங்குவதை நிறுத்திவிட்டார். காசையும் கொடுத்து வியாதியையும் வாங்கிக்கவா?

இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ள நெசவாளர் காலனியின் ஓரிடத்தில் நாள் முழுவதும் விடாமல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பள்ளமான பகுதி அது. அங்கு எப்போதும் கூட்டம்தான். கார்ப்பரேஷன்காரர்களை அவ்வப்போது கவனித்து, அந்த லாபத்தை அந்தப் பகுதி வீட்டுக்காரர்கள் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று நான்கு வீடுகளில் விடாது அடி குழாயில் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கும். ராத்திரி பதினோரு மணிக்குக் கூட அங்கு ஓய்வில்லை. ஒழிச்சலில்லை.

குடத்திற்கு ஒரு ரூபாய் என்று வசூலித்தார்கள். அது ஐம்பது பைசாவிலிருந்து முக்கால் ரூபாயாகி பின்பு ஒரு ரூபாயில் வந்து நிற்கிறது. ஒரு ரூபாய்க்கு மேல் ஏற்றமில்லை. சில வருடங்களாகவே அந்த ரேட்தான் நிலைத்திருக்கிறது. சில்லரைக்கும், கொடுக்கல் வாங்கலுக்கும் வசதி. தொலை தூரத்திலிருந்து கூட ட்ரை சைக்கிள் போட்டுக் கொண்டு பத்துக் குடங்களை வண்டியில் அடுக்கி வந்து பிடித்துச் செல்பவர் உண்டு. அந்த நேரம்தான் அங்கே சண்டை வரும். .சலுப்பக்குடிச் சண்டை. ஆனாலும் அந்த பாஷை கேட்க இதம்.  நியாயம் தலை தூக்கி நிற்கும்.

நீங்க ஒரு குடம் பிடிச்சவுடனே எங்களுக்கு விட்ரணும். தொடர்ந்து பத்தையும் பிடிக்க முடியாதாக்கும். அப்புறம் நாங்க என்ன பொழுதுக்கும் நின்னுக்கிட்டே இருக்கிறதா? பிள்ளைகள பள்ளிக்கோடத்துக்கு அனுப்ப வேணாமா? சமையல் பண்ண வேணாமா? நாங்க குளிச்சு, குளிக்கப் பண்ணி. எம்புட்டு வேல கெடக்கு.  நாலஞ்சு கி.மீ. தள்ளியிருந்து வர்றீக. ஒங்க பக்கமெல்லாம் குழாயே இல்லாமப் போச்சா. ? இம்புட்டுத் தொலை வந்து எங்க கழுத்த அறுக்கிறீங்க?

அந்தச் சண்டையில் குழாய் வீட்டுக்காரர்கள் தலையிடுவதேயில்லை. எதையோ பேசி, என்னவோ செய்து கொள்ளட்டும். நமக்கென்ன.  எப்படியும் நாளுக்கு நூறு தேறும். வண்டிக்காரன் நின்னால். அது குறையும். ரெண்டு டிரிப் அடிக்கிறானே? அங்குதான் ஈஸ்வரன் சென்று கொண்டிருந்தார். மற்றவர் போல் சைக்கிளில் குடத்தின் கழுத்தில் கயிற்றைக் கட்டி பின் சீட்டில் இருபக்கமும் சமமாகத் தொங்கவிட்டுத் தண்ணீர் கொண்டு வரும் சாமர்த்தியமெல்லாம் அவருக்கில்லை. அப்படி முயற்சித்தபோது பாதி வழியில் குடம் கீழே விழுந்து நசுங்கி, வண்டி சாய்ந்து,..இவரும் விழுந்து, சாலையில் செல்வோர் தூக்கி நிறுத்தி. அமர்க்களமாகிப் போனது.

அந்தச் சமயம் இவர் புது மொபெட் ஒன்று வாங்கியிருந்ததால் அதில் ஒவ்வொரு குடமாய் ரெண்டு நடை கொண்டு வருவதெனப் பழக்கப்படுத்தியிருந்தார். பெட்ரோல் காசைக் கணக்குப் பண்ணினால் கூட வாசலில் வரும் தண்ணீர் விலை அதிகம்தான் என்றுதான் தோன்றியது. தண்ணீரோடு திரும்பும்போது மிக மெதுவாய்த்தான் வருவார். 150 லிட்டர் கேன் ஒன்று வாங்கினார். சைடு கொக்கியில் தொங்கவிட்டுக் கொண்டு பறந்தார். குழாயடிக்குச் சென்ற போது வண்டி மட்டும்தான் இருந்தது. மேடு பள்ளத்தில் ஜம்ப் ஆகி அது எங்கோ விழுந்து விட, வண்டியைத் திருப்பி வழியெல்லாம் அதைத் தேடிக் கொண்டே வந்தார். என்னா கெரகம் இது. நமக்குன்னு அமையுதே. என்று ஒரே வேதனை அவருக்கு.

சாமீ. .என்னா கூப்பிடக் கூப்பிடத் திரும்பிப் பார்க்காமப் போயிட்டே இருக்கீகளே. கேன் வாணாமா? என்றுகொண்டே ஒரு கடை வாசலிலிருந்து பாய்ந்து வந்தார் ஒருவர். இத்தனைக்கும் அவரை அந்த வழியில் செல்கையில் போகிற போக்கில் ஒரு பார்வை பார்த்திருப்பார். அவ்வளவுதான். அந்த மனுஷாளின் ஈடுபாடே தனி.

ஈஸ்வரனுக்குப் பிடித்ததே இந்த மாதிரியான மனித உறவுகள்தான். அவர் குடியிருக்கும் பகுதியில், காலையில் உழவர் சந்தைக்குப் போய் வரும் வேளையில், உழவர் சந்தையில், ஏன் ஐந்து கி.மீ.க்கு உட்பட்ட பகுதிகளில் அன்றாடம் பார்க்கும், பழகும் முகங்களை அவருக்கு தினமும் பார்த்தாக வேண்டும். அவர்களோடு பேசுகிறாரோ இல்லையோ, அவர்கள் இவரிடம் பேச்சுக் கொடுக்கிறார்களோ இல்லையோ, அந்தத் தெரிந்த, அறிந்த முகங்களை அன்றாடம் பார்த்து ரசிப்பது அவருக்கு மன சாந்தி. கை கொடுப்பதற்கு நிறைய உறவுகள் இருப்பதுபோல என்றே சொல்லலாம். வாங்கய்யா. என்னா ரொம்ப நாளாக் காணலை. என்று சொல்லிக் கொண்டே நிறுவைக்கு மேல் ஒரு கை வெண்டைக்காயை அள்ளிப் போடும் பெண்மணி. அய்யா. வாங்க. தோட்டத்துக் காயி. காலைல பறிச்சதாக்கும். வாங்கிட்டுப் போங்க. ..என்ற அன்பு குழைந்த வரவேற்புகள். நாலு காய்தான் வாங்குகிறோம் என்றாலும் நாற்பது கடைகளையும் ஒரு சுற்றுச் சுற்றி வருவதில் கிடைக்கும் திருப்தி. மன நிறைவு.

வழக்கமாய்ப் பார்க்கும் போஸ்ட்மேன்..மனோகரன் சார் தண்ணி கொடுங்க என்று உரிமையோடு வாங்கிக் குடிக்கும் நெருக்கம். வழக்கமாய் தெருவில் பழைய பேப்பர் எடுக்க வரும் சிவசாமி. அன்றாடம் கீரை கொடுக்கும் முனித்தாய். உப்பு. உப்போய். .என்று சைக்கிளில் ஒரு மூடை உப்பை வைத்து ஓட்டிக் கொண்டு வரும் சம்புகன். தெருக் கடைசியில் தோசை மாவு விற்கும் மரியக்கா. இங்க வண்டிய நிறுத்திக்கிறட்டா சார். என்று கேட்டு புதிதாய்த் தான் வளர்த்திருந்த வேப்பமரத்தடி நிழலைப்  பிடித்த அயர்ன்காரர் அந்தோணிசாமி. வாரம் தவறாமல் சாக்கடை தோண்டிவிட்டு காசுக்கு வந்து நிற்கும் பஞ்சாயத்துப் பேச்சி. இன்னும் எத்தனையெத்தனை பேர். யாரை நினைப்பது. யாரை மறப்பது?   என்னவோ ஒரு ஒட்டுதல். எதனாலோ ஒரு பிடிப்பு. இனம் புரியவில்லைதான். ஆனாலும் மனதுக்கு சுகம். உடம்புக்கு எவ்வளவு ஆரோக்யம்? பழகிய அந்த எளிய மக்களைப் பார்க்காததே பெரிய வியாதியாகிவிடும் போலிருக்கிறதே.  பிரியத்தோடு முகம் பார்த்தலும்,பரஸ்பர  நலம் விசாரிப்புகளும்

ஒரிஜினல் உறவுகளெல்லாம் இருக்கிறோமா இல்லையா என்று சந்தேகப்படுவது போலல்லவா சத்தமின்றி இருக்கிறார்கள். எப்பொழுதும், ஏதாச்சும், கூட ரெண்டு வார்த்தை பேசி விட்டால் எங்கே ஒட்டிக் கொண்டு விடுவார்களோ என்று தந்தி வாக்கியமாய்ப் பேசுகிறார்கள். பொய்யாய்ச் சிரிக்கிறார்கள். ரொம்பவும் சுமுகமாய் இருப்பதுபோல் யதார்த்தம் பண்ணுகிறார்கள். அதிலெல்லாம் இப்போது பிடிப்பு இல்லை இவருக்கு. அவங்கவங்க அங்கங்கே இருந்துக்க வேண்டிதான்..அப்டி அப்டியே செத்துப் போய்க்க வேண்டிதான்.  யார் யாரை நினைச்சு உருகப் போறாங்க. ? எல்லாம் வெறும் வேஷம் மாயை.  அடுத்தடுத்த தெருவில் இருந்தாலும் தனித் தனிதான்.

பிடித்த மனிதர்கள் அவர் வாழ்ந்த ஊரின், குடியிருக்கும் பகுதி மக்கள்தான். அதிலும் பலருக்கு அவரைத் தெரியாது. அவருக்கும் பலரைத் தெரியாதுதான். ஆனால் அன்றாடம் முகம் பார்க்கிறார்களே.  அது ஒன்று போதாதா?  பார்த்துப் பார்த்துப் பழகினவர்களாகி விட்டார்களே.  ஒரு வார்த்தை பரஸ்பரம் பேசியதில்லைதான். பேசினால்தான்  ஒட்டுதலா? பார்வையிலேயே எத்தனை நேசம் வழிகிறது அங்கே?

இல்லையென்றால் அன்று குடத்தோடு கீழே விழுந்தபோது, ஓடி வந்து தூக்குவார்களா? மனிதனின் இயல்பே உதவுவதுதான். அடிப்படையில் மனிதர்கள் நல்லவர்கள். சூழ்நிலைதான், வாழ்வியலின் கஷ்டங்கள்தான் அவர்களைத் திருப்பிப் போட்டு விடுகின்றன. ஆனாலும் விழுமியங்களாய் ஆழ் மனதில் படிந்து போன நன்னெறிகள் அவர்களை விட்டு என்றும் விலகுவதில்லை.

மாநகரத்தின் மெட்ரோ தண்ணீர் லாரிகள் அவரின் நினைவுக்கு வந்தன. எந்தச் சந்திலிருந்து எந்த பூதம் பாயும் என்பதாய் குறுகிய வீதிகளில் அதைப் பொருட்படுத்தாமல் கீங். கீங். கீங். .என்று காது கிழிய ஏர் உறாரன் அடித்துக் கொண்டு, ஒதுங்க வில்லையென்றால் சமாதிதான் என்று அலறவிட்டபடி கிடுகிடுத்துக் கொண்டிருக்கின்றன அவைகள். அடுக்ககங்களின் தேவைகளை அவைதான் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றன. அது சுத்தமான தண்ணீரா, சுத்திகரிக்கப்பட்டதுதானா என்பதையெல்லாம் பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ அங்கே யாருக்கும் நேரமில்லை. கிடைத்தால் போதும். வந்து சேர்ந்தால் போதும் என்று சம்ப்பைத் திறந்து வைத்துக் கொண்டு கையில் காசோடு காத்திருக்கிறார்கள் மக்கள். கிளம்பும் சர்க்கிளில் கூட்டம் கூட்டமாக லாரிகள். அடுத்து அடுத்து என பொத பொதவென்று லாரிக்குள் தண்ணீரை இறக்கி நிரப்பி,  ஒரு பொட்டலம் குளோரின் பாக்கெட்டைத் தூக்கி வீசுகிறார்கள். வாயை இழுத்து மூடிக் கிளம்ப வேண்டியதுதான். நகரின் கேடுகெட்ட சாலைகளின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி உள்ளே வீசப்பட்ட அந்த ஒரு பாக்கெட் குளோரின் பவுடர் லாரித் தண்ணீரோடு கலந்து..கலங்கி. ..அவ்வளவுதான் நீர்ச் சுத்திகரிப்பு முடிந்தது.

பார்த்துப் பழகி மனம் நொந்துதான் போனார் ஈஸ்வரன். வந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் அந்தப் பெரு நகரம் ஏனோ அவருக்கு ஒட்டவில்லை. ஒட்டவேயில்லை. வெளியே கோயில் குளம் என்று கிளம்பினால் டாக்சிக்குக் காசு கொடுத்து மாளவில்லை. அதென்னவோ அந்த நகரத்திற்கு வந்தபின்னால்தான் உறவுகளெல்லாமும் அங்கேதான் பல்வேறு இடங்களில் நிரந்தர வாசம் செய்கிறார்கள் என்பதே அவருக்குப் புலப்பட்டது. அநியாயத்திற்கு இப்படியா விசேடங்கள் வரும்? மாற்றி மாற்றி. .மாற்றி மாற்றி. .கல்யாணம், காட்சி, வளைகாப்பு, ஜனனம், மரணம். .என்று எல்லாத்துக்கும் தகவல் வந்து கொண்டேயிருக்க. .போகாமல் முடியவில்லையே? மொய் எழுதியும், டாக்சிக்குக் கொடுத்துமே பென்ஷன் காசு பூராவும் கரைந்து போகும் போலிருக்கிறதே.  என்னடா இது அநியாயம்? ஓய்வூதியத்தில் ஒரு ஆயிரம் கூட நான் எனக்கென்று செலவு செய்து கொள்வதில்லையே? அத்தனையும் அநாமதேயமாய்ப் போய் கண்ணுக்குத் தெரியாமல் என்ன மாயா ஜாலம் இது?.  நல்ல கதையப்பா. நல்ல கதை.  வெறுத்தே போனார் ஈஸ்வரன். ..

சொர்க்கமே என்றாலும். ..அது நம்மூரப் போல வருமா? அது எந்நாடு என்றாலும் நம் நாட்டுக்கீடாகுமா?

ஆள விடு..சாமி.  என்று சொல்லிக் கிளம்பியே வந்து விட்டார். தனியாப் போயி இருக்க முடியாதுப்பா. .என்று பையன் சொல்ல. .என் மக்கள் முகங்களை அன்றாடம் பார்த்தாலே போதும். எனக்கு. ..அதுவே பெரிய ஆரோக்கியமாக்கும். என்று மறுத்து மாநகரத்துக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டார். மனைவி ஸிந்துஜா பம்மியதை அவர் கவனிக்காமலில்லை. நீ இல்லேன்னா என்ன. என்னால வாழ முடியாதா? இருந்து காட்டறேன் பார். .என்று நினைத்துக் கொண்டார். வயசாக வயசாகக் கணவன் மனைவிக்குள் பிரியமும், பாசமும் அதிகரிக்கும் என்று பெயர். இங்கே என்னடாவென்றால் இவர் எப்படா தனியே ஓடுவோம் என்று காத்திருந்தார். பையனிடம் அவ்வளவு ஒட்டுதல் பார்ப்போம் அந்த நாடகத்தையும்

நீயும் வர்றியா? என்று கூட ஒரு வார்த்தை அவளிடம் கேட்கவில்லை. கிட. .அவ்வளவுதான். . நான் தனியா இருந்தா நிம்மதியாத்தான் இருப்பேன் என்று இவர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். இப்போது தேவை தனிமை. யாரும் குறுக்கிடாத தனிமை. அமைதி. நிச்சலனமான அமைதி. அது அவர் வாழ்ந்த அந்த வீட்டில்தான் கிடைக்கும். அது அவருக்கு ஒரு கோயில். அவர் தாய் தந்தையரோடு வாழ்ந்து கழித்த சொர்க்கம். அங்கே அவர் பிராணன் போனால்தான் நிம்மதி.

இதோ. .அவருக்கென்று உள்ள சேடக் ஸ்கூட்டரில் இரண்டு கால்களுக்கு நடுவே அந்தத் தண்ணீர்க் கேன். வண்டியைக் கிளப்பி விட்டார் ஈஸ்வரன். இன்னும் அந்தப் பகுதியில் தண்ணீர் தந்து கொண்டுதான் இருக்கிறார்களா தெரியாது. குடம் ஒரு ரூபாய்தானா, அதுவும் தெரியாது. அந்த ட்ரை சைக்கிள்காரன் வந்து நின்றிருப்பானோ? அதுவும் தெரியாது. ஆனாலும் அந்த ஜனங்களைப் பார்த்தாக வேண்டும் அவருக்கு. அவர்கள் பேசும் பாஷையைக் காது குளிரக் கேட்டாக வேண்டும்.     அதில் ரெண்டு கெட்ட வார்த்தைகள் தொற்றிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை.  அவர்களின் அந்த வெள்ளை மனசு. அன்றாடப் பாடுகளில் உழன்றிடினும் அதனையே கருமமாய் ஏற்றுக் கொண்டு பயணப்படும் அவர்களின் வாழ்க்கை. .கரித்துக் கொண்டும், கலகலப்பாயும் நகர்த்தும் அவர்களின் அன்றாடப் பொழுதுகள். அவைதான் எத்தனை ரசனைக்குரியவை. எவ்வளவு மதிப்பிற்குரியவை.

அடடே. வாங்க சாமீ. .என்னா ரொம்ப நாளா ஆளைக் காணலை. ..- என்றவாறே ஒட்டு மொத்தக் குரலெடுத்து வரவேற்ற அவர்களின் அந்த அன்பில் திளைத்து கண்கள் கணத்தில் கலங்கிப் போக, வந்தாச்சு. வந்தாச்சு. இங்கயே வந்தாச்சாக்கும். ”.என்று சிறு குழந்தைபோல் உற்சாகமாய்க் கூறிக் கொண்டே வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு அவர்களை நோக்கி ஆதுரத்தோடு நகரலானார் ஈஸ்வரன்.

கொண்டாங்க கேனை. முதல்ல நிரப்பிடுவோம். என்றவாறே எட்டி வாங்கினது ஒரு பெண்.

மகளே. . என்று மனதுக்குள் ஈரம் கசிய அழைத்துக் கொண்டார்.

கொஞ்ச நேரம் உங்களோட உட்கார்ந்து பேசிட்டு, அப்புறம் பிடிச்சிட்டுப் போறேனே. நீங்கல்லாம் பிடிங்க .என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு நடுவே போய் சம்மணம் போட்டு  அமர்ந்தார் ஈஸ்வரன். அவரின் அந்த நாள் இனிமையாய்த் தொடங்கியது.

—————————-

 

அக்கினிக் குஞ்சொன்று

ஷ்யாமளா கோபு 

 

“பாலா…..பாலாமணி……….பாலா” குடிசையின் வாசலில் நின்று குரல் கொடுத்தாள் மல்லிகா. உள்ளேயிருந்து ஒரு சிறு அசைவும் வரவில்லை. கொஞ்ச நேரம் நின்று பார்த்தவள் மெல்ல எட்டிப் பார்த்தாள். கயிற்றுக் கட்டிலில் தலைமாடு கால்மாடாகப் படுத்திருந்தார்கள் பாலாவும் நிஷாவும். தூளியில் தூங்கிக் கொண்டிருந்தது உஷா. மீண்டும் குரல் கொடுத்தாள் மல்லிகா. “பாலா”

“ம்.” என்று எழுந்தவள் எதிரே மல்லிகா நிற்பதைக் கண்டதும் அவசர அவசரமாக எழுந்து அருகில் கிடந்த மகளையும் எழுப்பியவாறே “அம்மா, வாங்கம்மா” என்றாள்.

“என்ன பாலா, நல்ல தூக்கம் போல. எழுப்பி விட்டு விட்டேனா?”

“அப்படி எல்லாம் இல்லம்மா. இந்த புயலில் மூணு நாளா அலமலந்து போய் கிடக்கிறோம். ஏன்னா புயலு, காத்து…அதோ அங்கப் பாருங்க” அவள் காட்டிய திசையில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஐயோ பாவமே என்று இருந்தது. குடிசையின் மேற்கூரை பாதி காணாமல் போயிருந்தது. பின்பக்க சுவரும் இடிந்து தரை மட்டமாகி இருந்தது.

“என்ன பாலா இது?” என்று திடுக்கிட்டவள்  ரொம்ப கோராமையா இருக்கே?”என்றாள்.

“இருக்கிற சொச்ச கூரையும் இடிந்து தலையில் விழுந்துடுமோன்னு பயந்துக் கிட்டு ராவெல்லாம் தூங்காமல் கிடந்தோம் அம்மா. இப்பத் தான் காலையிலே இருந்து காத்து இல்லாமல் அப்பப்போ கொஞ்சம் சிலுசிலுன்னு தூறிக்கிட்டு இருக்கவே சித்த நேரம் படுக்கலாம்னு படுத்தோம். நல்ல அலுப்பு. பசி வேற. கண் அசந்துட்டோம்” என்றவள் “வந்து ரொம்ப நேரமாச்சா?” என்று கேட்டாள்.

“நீங்க எல்லாம் புயலில் சிக்கிக்கிட்டு கிடப்பீங்க. அதனால் தான் ஆஸ்பத்திரிக்கு மாதாந்திர மாத்திரை வாங்க வரவில்லைன்னு தெரிஞ்சி கையோட மாத்திரையைக் கொண்டாந்திருக்கேன் பாலா”

“உக்காருங்கம்மா” சொன்னவள் கட்டிலில் கிடந்த துணிகளை அப்புறப்படுத்தி அவள் அமர இடம் ஒதுக்கிக் கொடுத்தாள். அவள் காட்டிய இடத்தில் அமர்ந்தவள் தன் கைப்பையில் இருந்து மாத்திரையை எடுத்து பாலாவின் கையில் கொடுத்தாள்.

“இதுல கொஞ்சம் சாப்பாடு இருக்கு. நான் வீட்ல செஞ்சி எடுத்துக் கிட்டு வந்திருக்கேன். இதோ கொஞ்சம் அரிசியும் இருக்கு. ஒரு வாரத்துக்கு தாங்கும். அதுக்குள்ள நீங்களே சமாளிச்சிர மாட்டீங்களா?”

“மேடம், சோத்துக்கு வழியில்லாமல் நாதியத்துப் போய் நான் நிப்பது இது ரெண்டாவது தடவை. முதல் முறையும் நீங்க தான் உதவினிங்க. இதோ இப்பவும் நீங்க தான் ஆபத்துல காப்பாத்துற கடவுளா கண் முன் வந்து நிக்கறீங்க”

கைக் கூப்பித் தொழுது நின்றவளை கரம் பற்றி “இதற்கு எனக்கு சம்பளம் தராங்க பாலா” உணர்ச்சி வசப்பட்டு கிடந்தவளை லகுவாக்குவதற்காக சிரித்தாள் .

“மாத்திரைக் கொடுப்பதற்குத் தானே சம்பளம். இந்த அரிசிக்கும் சாப்பாட்டுக்குமா சம்பளம் தராங்க” கொண்டையை முடிந்துக் கொண்டு அடுப்பருகே கிடந்த ஒன்றிரண்டு நனைந்த சுள்ளிகளை தட்டி தட்டி அடுப்பில் திணித்து விளக்கில் கிடந்த மண்ணெண்ணையை ஊற்றி பற்ற வைத்தாள்.

“என்ன பண்ணப் போறே?”

“கொஞ்சம் கட்டங்காப்பி போடுறேன் மேடம். எங்களுக்கும் சேர்த்து தான்”

“சரி” என்று ஒப்புக் கொண்டவள் “பாலா உனக்கு ஒரு விஷயம் சொல்லணும். அதுக்குத் தான் முக்கியமா நான் வந்ததே”

ஈர சுள்ளியினால் புகையத் தொடங்கியிருந்த அடுப்பை ஊதாங்குழளால் ஊதியவள் நிமிர்ந்து கண்ணில் அடித்த புகைக்கு ஒரு கண்ணை மூடியவாறு  என்ன என்பதைப் போலப் பார்த்தாள்.

“உன்னோட  வழக்கு வர வெள்ளிக்கிழமைக்கு வருது இல்ல. ஞாபகம் இருக்கா?”

“அதுக்குத் தானே உசுரை கையில பிடிச்சிக்கிட்டு இருக்கிறேன்”

“போன வாரம் வக்கீலய்யாவை வேற ஒரு விஷயமா பார்க்கப் போயிருந்தேன். எல்லா பேப்பர்ஸ்ம் தயாரா இருக்கு. நாம் மருத்துவமனையில் கேட்டிருந்தவைகள் கிடைத்து விட்டது. அதனால் முழு நம்பிக்கை இருக்காம். உன் கேஸ் நல்லபடியா முடிஞ்சிரும்னு சொல்ல சொன்னார்”

“கடவுள் உங்களை மாதிரி மனித உருவத்தில தான் வந்து நம்மை காப்பாத்தி கரை சேர்ப்பாருன்னு படிச்சிருக்கேன் மேடம்”

“ரொம்ப பேசறே நீ” விளையாட்டாக ஒரு விரலை பத்திரம் காட்டினாள்.

“உணமையைத் தான் பேசறேன்” சிரித்தாள் பாலா.

பாலாமணியின் கணவன் ரங்கசாமி பக்கத்து ஊரில் ஓரளவிற்கு நிலம் நீச்சென்று வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். நாமக்கல்லில் லாரி புக்கிங் ஆபிஸ் வைத்து கொண்டு தொழில் செய்து வந்தான். அவனுடைய அக்கா இங்கேயே அரசு ஆசிரியையாக நல்ல வழமையாகவே வாழ்ந்து வந்தாள். பாலாவின் குடும்பம் ஓரளவிற்கு நடுத்தர குடும்பம். வலுவில் வந்து பெண் கேட்ட  ரங்கசாமியின் பெற்றோரின் தன்மையும் பண்பாடும் எதையும் யோசிக்காமல் அவர்கள் பெண்ணைக் கொடுப்பதற்கு சம்மதிக்க வைத்தது.

இப்போது புதிதாகப் பிறந்ததும் பெண்ணாக பிறந்து விட்டது என்று ரங்கசாமிக்கும் அவன் தாய்க்கும் நிரம்பவே ஆதங்கம். ஜாடைமாடையாக ஏசத் தான் செய்வார்கள். ஆனால் ரங்கசாமி பாலாவை நகை நட்டு கார் என்று நல்ல வசதியாகவும் ஆசையாகவும் வைத்திருக்கவே ஆண் குழந்தை இல்லையே என்ற ஆதங்கத்தில் மாமியார் ஏசுவதை பாலா பொருட்படுத்தவில்லை.

எல்லாமே நல்லபடியாகவே சென்று விட்டால் தெய்வத்தை மனிதன் மறந்து விடுவான் இல்லையா! ரங்கசாமி நோய்வாய்ப்பட்டான். அங்கே சுற்றி இங்கே சுற்றி ஆட்கொல்லி நோயான ஹ.அய்.வி முற்றி இன்று எய்ட்ஸ் என்று வந்து நின்றது. அவளுக்கும் குழந்தைகளுக்கும் பரிசோதிக்க வேண்டியது கட்டாயம் என்ற போது கூட விவரம் அறியாதவளாக சம்மதித்தவளுக்கு தலையில் இடி இறங்கியது. அவளுக்கும் அவளுடைய இரு குழந்தைகளுக்கும் நோயின் தன்மை இருப்பதாக பரிசோதனை முடிவு சொன்ன போது உலகமே இருண்டு போனது.

“எல்லாம் உன்னால் தானே?” அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள் பாலா.

“அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” சட்டையை நீவியவன் ரொம்பவும் இறுமாப்புடன் கேட்டான்.

“கல்யாணத்திற்கு முன்பே உனக்கு வியாதி இருப்பது தெரியும் தானே. வீணில் என்னை ஏன் பழி  வாங்கினாய்? நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன்?”

“என் நிலைமை தெரிந்து வழக்கமாக வரும் பெண்கள் வர மறுத்து விட்டார்கள். கல்யாணம் என்று செய்து கொண்டு விட்டால் இந்த வம்பே இல்லை. யார் பின்னாலேயும் தொங்க வேண்டாம் பார்”

“உன் அக்கா மகளை கட்டியிருந்திருக்கலாமே”

“என்னைப் பற்றி நன்கு தெரிந்தும் அவள் மகளை எனக்கு கொடுப்பாளா அவள்?”

”நான் உன்னைக் கட்டிய பாவத்திற்கு எனக்கு இது தேவை தான். நம் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்”

“எனக்குன்னு ஒரு புள்ளைப் பொறக்கலைன்னா அப்புறம் இந்த உலகம் என்னைப் பொட்டைப்பய என்று சொல்லாதா?”

“அதுக்கு இன்னொன்னும் எதுக்கு பெத்தே?”

“ஏய் என்னமோ நான் தான் கேட்டது போல பேசறே?”

“நீ தானே ஆம்புளை புள்ளை வேணும்னு கேட்டு கேட்டு நச்சரிச்சே”

“நான் என்ன உன்ன மாதிரி அன்னக்காவடியா? எத்தனை சொத்து சுகம் இருக்கு. அத்தனைக்கும் ஒரு வாரிசு வேண்டாமா?”

“ஏன் பெத்து வெச்சிருக்கியே ஒரு புள்ளை. அது போதாதா? அதோட நிறுத்தி இருக்கலாம் இல்ல. இப்ப இன்னொன்னு பெத்து அதுவும் உன்னை மாதிரி சீக்கில சாகப் போவுது” நெஞ்சு வெடித்து அழுதாள்.

“அறிவு இருக்கா உனக்கு? எவன் வீட்டுக்கோ போகப் போறது எனக்கு வாரிசா? ஆம்புள்ளைப் புள்ளையப் பெத்துக் கொடுக்க வக்கில்லாதவ பேசற பேச்சைப் பாரு”

அவனை அரசு மருத்துவமனையில் சேர்த்தவர்கள் அவன் உயிரோடு இருக்கும் வரை பாலாவை அம்மா தாயே மகாலட்சுமி பொறுமையில் பூமாதா என்றெல்லாம் கொண்டாடினார்கள். ஏனெனில் அவன் அருகில் இருந்து பாடுபார்க்க வேறு யாரால் முடியும்?

இழுத்துக் கொண்டு கிடந்தவன் ஒருவழியாக கண்ணை மூடிய போது தன் வாழ்க்கை அஸ்தமித்துப் போனதைப் போல நிராசையுடன் கிடந்தாள் பாலா. ஆசையுடன் அருமையாக வைத்திருந்தவன் இறந்து போனானே என்று இறந்தவனுக்காக அழுவதா அன்றி தெரிந்தே தனக்கும் தன் இரு குழந்தைகளுக்கும் நோயைக் கொடுத்து சீரழித்து விட்டானே என்று கசந்து கொள்வதா என்று புரியவில்லை அவளுக்கு.

இனி தன் எதிர்காலம் என்னாகும் என்பது அவளுக்குப் புரிந்தது. தனக்கு வந்திருப்பதும் ஆளைக் கொள்ளும் ஆள்கொல்லி நோய். இதில் தான் தப்பிக்கவே முடியாது. ஆனால் இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? வாழ வேண்டிய வயதில் நோயுடன் போராடத் தான் அவர்களுக்கு பலம் இருக்குமா? ஏன் பலம் இருக்காது? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் பாலா. இந்த உலகமும் உறவினர்களும் உடன் இருந்தால் நோயுடன் போராடி வென்று நீண்ட நாட்கள் நம் மகள்கள் வாழ முடியும் என்று தன்னைத் தானே திடப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தவளுக்கு காத்திருந்தது அடுத்து அடுத்து இடிகள்.

கைக் குழந்தையுடனும் இடுப்பில் மூன்று வயது பெண் குழந்தையுடனும் நின்றவளை குற்றம் சாட்டியது ரங்கசாமியின் குடும்பம்.

“உன்னால் தான். நீ தான் எங்கேயோ தறிக்கெட்டுப் போய் வியாதியை இழுத்துக் கொண்டு வந்து அவனுக்கும் கொடுத்து விட்டாய்”

“உங்கள் மகன் யோக்கியதை தெரிந்தும் நாக்கில நரம்பில்லாமல் பேசாதீர்கள்” ஆங்காரப்பட்டவளிடம் “ஆண்கள் என்றால் கொஞ்சம் அப்படி இப்படி என்று தான் இருப்பார்கள். ஆனால் அதனால் எல்லாம் நோய் வந்து விடுமா என்ன? அவன் லோடு லாரி விஷயமா வெளியே தெருவுல போயிருக்கும் போது நீ என்ன செஞ்சியோ? இப்போ உனக்கும் வந்து உன் பிள்ளைகளுக்கும் வந்திருக்கு”

“என் பிள்ளைகளா? உங்கள் பையனோட பிள்ளைகளம்மா”

“அப்படின்னு நெனப்புடன் வந்து விடாதே. அசிங்கப்பட்டுப் போயிடுவே” மாமியார் வெஞ்சினத்து உரைத்தாள்.

கையில் பத்தாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்தாள் நாத்தனார். ”ஏதோ அவன் காலம் முடிஞ்சிப் போச்சு. அவன் போட்ட நகை எல்லாம் கழட்டிக் கொடுத்துட்டுப் போ. நான் பத்திரமா வெச்சிருக்கேன். நாளை பின்னே மகள்களுக்கு கல்யாணம் காட்சின்னு வந்தா நாங்க தானே செய்யனும்”

“நகையை தரணுமா?”

“உங்க அப்பன் வீட்ல இருந்தா போட்டுக்கிட்டு வந்தே?” ஈவு இறக்கம் இல்லாமல் கழுத்தில் கிடந்த தாலிக் கொடியுடன் நகைகளையும் சேர்த்துக் கழட்டிக் கொண்டாள் அவள்.

பாலாவைப் பெற்றவர்களும் உடன் பிறந்தவர்களும் எட்டியே நின்றார்கள். “அப்பா என்னப்பா இப்படி பண்றாங்க” என்று அழுது கொண்டே அருகில் சென்றவளை எட்டியே நின்று “பாப்பா என்ன பண்றது?  உன் விதி. வேறு என்ன சொல்ல?” என்று ஒதுங்கிக் கொண்டார் அவர்.

“நானா அப்பா ஆசைப்பட்டுக் கட்டிக் கிட்டேன்?”

“நான் தான் கட்டி வெச்சேன். அதுக்கு இப்ப என்ன பண்றது?”

“என்னை இப்படி கஷ்டப்பட விடுவீங்களா அப்பா?” கேவி அழுதாள்.

“அவரு நல்லா வெச்சிருந்த போது நீ தானே அனுபவிச்சே. இப்பயும் நீ தானே அனுபவிக்கனும்”

“அப்பா வீட்டுக்கு வரேன்ப்பா. வேறே நான் எங்கே போறது?”

“அம்மா கொஞ்சம் யோசித்துப் பேசு. வீட்ல இன்னும் பிள்ளைங்க இருக்காங்க. அவுங்களுக்கும் கல்யாணம் காட்சின்னு நடக்கணும். உன் விவரம் கேள்விப்பட்டால் அப்புறம் என்ன ஆகும்னு கொஞ்சம் யோசித்துப் பேசும்மா”

“என்னம்மா யோசிக்கணும்?”

“உன் மாமியார் இந்த ஊர் பூரா உன் மேலே பழியை சொல்வாளே”

“அதை நீங்க நம்பறீங்களா?”

“எங்க வீட்ல இருந்தவரைக்கும் உன்னை ஒரு அப்பழுக்கு சொல்ல முடியுமா?”

“அப்படின்னா இப்போ சொல்லுவீங்களா?”

மொத்த குடும்பமும் மௌனமாக நின்றது. இடிந்து போனாள் என்ற வார்த்தை மிகவும் சாதாரணம். தனிமையில் கிடந்து அழுது கரைந்தாள். மனம் எதை எதையோ யோசித்துக் கிடந்தது.

நம் நடத்தையில் சந்தேகப்பட்டு இவர்கள் நம்மை பழி சொல்லவில்லை. மாறாக நம்மைத் தவிர்ப்பதற்காக நம் நடத்தையை வீணில் பேசுகிறார்கள். தங்களுக்கு எப்படித் தேவையோ அதைப் போல இந்த உலகை திருப்புகின்ற சுக்கான்கள் இவர்கள். இவர்கள் சொல்லுவதால் நான் அப்படி ஆகி விட மாட்டேன்.

அடுத்த வேளை உணவிற்கு வழியில்லை. கைப்பிள்ளை அழுகையில் கதறியது. அதன் அழுகுரல் நெஞ்சை வரட்டியது. வயிற்றைக் காந்தியது. கையில் இருக்கும் கொஞ்சம் பணத்திற்கு பால்டாயிலை வாங்கி வந்தாள். பாலில் கலந்து குழந்தைகளுக்கும் தனக்கும் குடிக்க டம்ளரில் ஊற்றினாள்.

கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தாள். அது அவளும் அவள் குழந்தைகளும் இனி இந்த உலகில் வாழப் போகிற வாழ்க்கைக்கான கதவு திறப்பாக இருந்தது.

மருத்துவமனையில் இவர்களைப் பதிவு செய்திருந்ததினால் இன்று போல் அன்றும் மல்லிகா இவளை தேடி வந்தாள். அவர்களின் நிலை அறிந்தாள். தனக்குத் தெரிந்த பண்ணையில் பாலாவையும் நிஷாவையும் சேர்த்து விட்டு கைக்குழந்தையை வேறு அமைப்பில் சேர்த்து விட்டாள். கைப் பிள்ளைக்காக பகலில் மாரில் பால் சுரக்கும். இரவுகளில் படுக்கையில் நிஷாவை அரவணைத்துப் படுத்திருக்கையில் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.

காலம் போய்க் கொண்டிருந்தது. ஒருநாள் மருத்துவமனையில் மல்லிகா பாலாவிடம் துருதுருவென்று அங்கே ஓடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையைக் காட்டி, “இது யார் என்று தெரிகிறதா?” என்று கேட்டாள்.

ஆளை இடித்து தள்ளும் பெருங் கூட்டத்திலும் பெற்றவளுக்குத் தன் பிள்ளையை தெரியாதா? தன் வாழ்நாள் காலத்தில் இனி ஒருமுறை பார்க்கவே பார்க்க முடியாது என்று மனதின் ஆழத்தில் போட்டு மூடி வைத்திருந்த ஏக்கத்தையும் துக்கங்கத்தையும் மீறி தன் குழந்தையைக் கண்ட மாத்திரத்தில் தன்னுள்ளே அலையடிக்கும் அந்த உணர்வுகள் தான் புரியாதா?

கண்கள் கசியத் தொடங்கியிருக்கவே மல்லிகா அவளை அணைத்துக் கொண்டாள். “உனக்கு வேண்டுமானால் நான் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டு உன் மகளை பெற்றுத் தரட்டுமா பாலா. இப்போது தான் நீ ஓரளவிற்குத் தேறி விட்டாயே. சொல். கேட்கட்டுமா?”

“ஊஹூம்”

“ஏன்?” ஆச்சரியப்பட்டுப் போனவளை பார்த்து சன்னமாக முறுவலித்தாள் பாலா.மனம் கசந்து  நைந்த அந்த முகத்தைப் பார்த்து மல்லிக்காவிற்கு மனம் கனத்துப் போனது.

“வேண்டாம் மேடம். எனக்கு எப்போது சாவு மணி அடிக்குமோ தெரியாது. என்னை நம்பி  ஏற்கனவே நிஷா இருக்கிறாள். அவளை நல்லபடியாக நீண்ட ஆயுளோடு கொண்டு கரை சேர்த்து விட்டால் போதும். அங்கே நல்லபடியாக வளரும் அந்த குழந்தையை வீணில் நான் கொண்டு போய் அலைகழிப்பானேன்?”

“நிஷாவை என்ன செய்வாய்?”

“மாத்திரை மருந்தை சரியாக கொடுத்து நல்ல ஆகாரம் கொடுத்து பார்த்துக் கொண்டால் நல்லபடியாகவே வாழ்வாள். நல்ல படிப்பு கொடுக்கணும். உங்களை மாதிரி நல்ல உத்தியோகத்திற்குப் போகணும். நாளை பின்னே அவள் நிலை அறிந்து எவனாவது அவளுக்கு வாழ்க்கைத் துணைக் கிடைத்தால் அந்த வாழ்க்கையையும் வாழ்ந்து பார்க்கட்டும்”

“இத்தனையும் சின்னதற்கும் கிடைக்கும் தானே பாலா”

“கண்டிப்பாக. அதனால் தான் அந்த குழந்தை அங்கேயே இருக்கட்டும் என்று சொல்கிறேன்”

“நீ நிஷாவுக்கு சொன்ன அத்தனையும் உஷாவுக்கும் கிடைக்கும். ஆனால் அம்மா அக்கா என்று குடும்பம் கிடைக்குமா?”

“அது இருக்கிற நாள் வரை நல்லபடியா இருக்கட்டும் மேடம். என்னோடு வந்து அரை வயிற்றுக்கும் கால்வயிற்றுக்கும் அல்லல் பட வேண்டாம்”

“உனக்கு என்று குடும்பம் இல்லையா பாலா?”

“இருந்தது”

“இப்போது?”

“இல்லை”

“ஏன்?”

“ஏன் என்றால்?” சொன்னாள். ஆதியோடு அந்தமாக எல்லாவற்றையும் சொன்னாள். அவள் கதைக் கேட்டு மனம் கனத்து போனது  மல்லிகாவிற்கு.

வட்டமிடும் வல்லூறுகளும், சுற்றி வரும் ஓநாய்களும், கொத்தி தின்று விடப் பார்த்த பருந்துகளும், நோட்டமிடும் நரிகளும், நூல்விடும் பசு தோல் போர்த்திய புலிகளும் என்று ஒரு வனவிலங்கு கூட்டத்திற்கிடையே வாழ நேர்ந்த போதும், மல்லிகா பண்ணையின் முதாலாளி அவர்கள் குடும்பம் வீட்டு உரிமையாளர் என்று மனிதர்களும் அவளை சுற்றி வாழ்ந்து கொண்டு தான் இருந்தார்கள். அவர்களின் உதவியாலும் மனிதாபிமானத்தினாலும் அவள் தன்னை பாதுகாத்து தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

வீட்டிற்கு வந்த பாலாவிற்கு தன் மகள் உஷா கண் முன்னே இருந்து மறையவேயில்லை. மல்லிகா கேட்டதைப் போல தன் மகளுக்கு அம்மா அக்கா என்று குடும்பம் வேண்டுமே. எதிர்காலத்தில் நிஷாவிற்கும் ஒரு துணை வேண்டும். ஒருவருக்கு ஒருவர் என்று அக்கா தங்கை இருவரும் வாழும் போது வாழ்க்கை கொஞ்சம் இலகுவாகத் தானே இருக்கும். தன்னைப் போல தனியாளாக கஷ்டப்பட வேண்டியிருக்காதே. இப்போது கஷ்டப்பட்டு பண்ணையில் உழைப்பதைப் போல இன்னும் கொஞ்சம் கஷ்டம் பாராமல் உழைத்தால் இருவருக்குமே கஞ்சி ஊற்றலாம். அரசு பள்ளி இருக்கிறது. அரசின் இலவச ரேசன் இருக்கிறது. உலகில் இன்னும் நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள். எல்லாருமேவா ரங்கசாமியைப் போலும் அவன் குடும்பத்தினரைப் போலும் இருந்து விடுவார்கள்? அவ்வளவு ஏன் தன் குடும்பத்தினரைப் போல நம்மை நிர்கதியாக விட்டு விடப் போகிறார்கள்?

உஷாவை கேட்டு அமைப்பில் விண்ணப்பித்து அவளை பாலாவிடம் சேர்த்தாள் மல்லிகா.  என்.ஜி.ஓவின் உதவியால் வக்கீல் மூலம் ரங்கசாமியின் குடும்பத்தினரிடம் சொத்தைக் கேட்டு நோட்டிஸ் அனுப்பினாள்.

நாத்தனார் தேடிக் கொண்டு வந்து முகத்தில் அறைந்தாள். ”புருஷனே போய்ட்டான். இன்னும் சொத்திற்கு அலைகிறாய்?”

“நான் உன் தம்பிக்குத் தானே இந்த பிள்ளைகளைப் பெத்தேன். அதற்கான அங்கீகாரம் இது. நீ எனக்கு இடும் பிச்சை இல்லை உன் சொத்து”

“வா வா கோர்டில் அசிங்கப்பட்டு நிக்கப் போறே?”

“எதுக்கு?”

“நீ எங்கேயோ போய் சீக்கை வாங்கி வந்து என் தம்பி தலையில் கட்டி விட்டே?”

“இந்த கதைக்கு பயந்த பாலா இல்லை நான். உன் கதையை நீ கோர்டில் சொல். என் கதையை நான் சொல்கிறேன்”

இதோடு போயிற்றா இத்தகையப் பேச்சுக்கள்? எங்கெங்கோ சுற்றி அவள் காதுக்கே வந்தது. சோர்ந்து போய் விடவில்லை. ஆண்டாண்டு காலமாக பெண்களுக்கு உண்டான சோதனையைத் தவிர வேறு என்ன பெரிதாக நமக்கு வந்து விடப் போகிறது? அடுத்தவன் மனையிலும் கற்புநிலைக் காத்துக் கொண்ட சீதையை தீக்குளிக்க வைத்த உலகம் அல்லவா இது. அதுவும் ஆனானப்பட்ட அவதார புருஷனான ராமனே கூட இதற்கு விதிவிலக்கல்லவே!.  மனம் தளரவில்லை. இத்தகைய ஏச்சு பேச்சுக்களுக்கு பதில் சொல்லவும் இல்லை. நம்மை நிரூபிக்கக் கிளம்பினால் அது இந்த ஜென்மத்தில் முடியாது. மேலும் நிருபிக்கும் அளவிற்கு அவர்கள் நமக்கு யார்? கணவனே ஆனாலும் நம்மை அவனுக்கு நிருபித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. நான் அக்கினியைப் போல சுத்தமானவள் என்று எனக்குத் தெரிந்தால் போதும். அதை தவிர்த்து உபயோகமான வேலையைப் பார்ப்போம் என்று மனம் திடப்பட்டாள்.

நீதிமன்றத்தில் தன் இரு குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த பாலாவை, காரில் வந்து இறங்கிய ரங்கசாமியின் குடும்பத்தினர் கம்பளிப் பூச்சியை பார்ப்பது போல அருவெறுப்புடன் பார்த்து விட்டு கடந்து சென்றார்கள்.

அவர்களுடைய வக்கீலின் பிரதான வாதமே பாலாவிற்கு ரங்கசாமியை அல்லாது மற்ற பிற ஆண்களுடன் தொடர்பு உண்டு என்றும் அவளால் தான் ரங்கசாமிக்கு நோய் வந்தது என்பது தான். கிட்டத்தட்ட இரு குழந்தைகளுமே ரங்கசாமியின் பிள்ளைகளல்ல. அதனால் பாலாவிற்கும் குழந்தைகளுக்கும் குடும்ப சொத்தில் பங்கு கொடுக்க இயலாது என்பது தான்.

பாலாவின் வக்கீல், ரங்கசாமிக்கு நாமக்கல்லில் ஹ.அய்.வி கிளினிக்கில் பதிவு செய்திருந்த பதிவேட்டின் நகலில் உள்ள தேதியையும் மருத்துவ பதிவேட்டின் நகலையும் காட்டி ரங்கசாமிக்கு பாலாவை திருமணம் முடிக்கும் முன்பே நோய் இருந்தது என்று நிருபித்தாகி விட்டது. மனிதாபிமானம் மிக்க நீதிபதிக்குப் புரிந்து விட்டது இந்த வழக்கின் போக்கு.

கடவுள் கை விடவில்லை. கண் திறந்தும் பார்த்தார் போலும். தெளிவான தீர்ப்பை நீதிபதி  வாசித்தார். “ஆகையினால் ரங்கசாமியியன் மனைவி பாலாமணிக்கும் அவர்களுடைய இரு பெண் குழந்தைகளான நிஷா உஷாவிற்கும் ரங்கசாமியின் பரம்பரை சொத்துக்களில் ஆறில் மூன்று பங்கை இப்போதே கொடுத்து விட வேண்டும். ரங்கசாமியின் பெற்றோரின் காலத்திற்குப் பிறகு அவர்களுடைய ரெண்டு பங்கையும் அந்த பிள்ளைகளுக்கே கொடுக்க கட்டளையிடுகிறேன்”

“ஆங். என் சொத்தை கொடுக்க மாட்டேன். அதுவும் ஆம்பிள்ளைப் புள்ளையாக இருந்தால் கூட போனா போவட்டும்ன்னு யோசிப்பேன். போயும் போயும் பொட்டைப் புள்ளைங்களுக்கு என் சொத்தைக் கொடுக்க மாட்டேன்” கிரீச்சிட்டாள் மாமியார்.

தீர்ப்பை சொல்லி விட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்த  நீதிபதி “அம்மா இன்னும் நீங்க எந்த உலகத்தில இருக்கீங்க? ஆம்புளை பொம்பிளைன்னு பேசிக்கிட்டு” என்று கடிந்து கொண்டு விட்டு அங்கே இருந்த உதவியாளரிடம் சொன்னார். ”அவுங்க கிராமம் இருக்கும் போலிஸ் ஸ்டேசனுக்கு தகவல் சொல்லி ஆய்வாளரை இந்த பெண்ணிற்கு சொத்தைப் பிரித்து தரும் வரை உடன் இருந்து பாதுகாப்பு தரும்படி மனிதாபிமானத்துடன் உதவும்படி நான் பெர்சனலாக தகவல் சொன்னேன் என்று சொல்”

“ஆங்” என்று ஆங்காரப்பட்ட மாமியாருக்கு புரைக்கேறி கண்கள் கலங்கி மாரை அடைப்பதைப் போல ஆகவும் அருகில் இருந்த நிஷா தன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலின் மூடி திறந்து “பாட்டி கொஞ்சம் தண்ணீ குடிங்க” என்று வாயில் ஊற்றினாள். அவளை நிமிர்ந்து பார்த்த பாட்டியின் கண்கள் இறந்து போன மகனை அவளில் கண்டு நெஞ்சம் விம்மியது. மாமியாரின் வலது கரம் நிஷாவை அணைத்துப் பிடித்திருந்தது.

“உனக்கு கொஞ்சம் வேச்சிக்கம்மா.எல்லா தண்ணியையும் பாட்டிக்கே கொடுத்துடாதே” என்றார் தாத்தா.

“பரவாயில்லை தாத்தா. நான் அங்கே போய் தண்ணி  தொட்டியில் பிடிச்சிக்குவேன். பாட்டி நீங்க இன்னும் கொஞ்சம் குடிங்க” என்று மீத நீரையும் பாட்டியின் வாயில் ஊற்றினாள். தாத்தாவின் வலது கரம் நிஷாவின் தலையை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்தது.

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பாலாவிற்கு வானம் பிரகாசமாக இருந்தது அவள் எதிர் வரும் வாழ்க்கையைப் போல.

 

சுடுகஞ்சி

பத்மகுமாரி

கிளம்பும்போது ஹெட்செட்டை எடுத்து பைக்குள் போட்டுக்கொள்ளச்  சொன்னாள் அம்மா. ““அந்த செவிட்டு மெஷின எடுத்துப் போட்டாச்சா?”“. நான் எதுவும் பதில் பேசவில்லை. பைக்குள் ஏற்கனவே எடுத்து வைத்திருந்தவற்றை இரண்டாவது முறையாக சரி பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாவும் பதில் எதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. போகிற போக்கில் சொல்லிக்கொண்டே என்னை கடந்து படுக்கையறைக்குள் போய்விட்டிருந்தாள். படுக்கையறை அலமாரி கதவுத் துவாரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சாவிக் கொத்தின் சாவிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொள்ளும் சத்தம் கேட்டது.

“மாஸ்க் வேண்டாமா?” நடையில் இறங்கும்பொழுது புது முகக்கவசத்தை அம்மா நீட்டினாள்.

“மறந்துட்டேன்ம்மா”

“ம்ம். முக்கியமானதெல்லாம் மறந்திருவ” அம்மா தேவையற்றது என்று எதைக் குறிப்பிடுகிறாள் என்று புரிந்தது.  ஹெட்செட் மாட்டிக் கொள்வதை பார்க்கும்போதெல்லாம் அம்மா இப்படி சொல்வாள். “காத தொறந்திட்டு கேக்க வேண்டிய பாட்ட, இத மாட்டிகிட்டு காத அடச்சிகிட்டு கேக்க எப்படி தான்‌ முடியுதோ”

தெருவின் திருப்புமுனைக்கு வந்துவிட்டு திரும்பி பார்க்கையில் அம்மா நடையில்  நின்று கையசைத்துக் கொண்டிருந்தாள். பதிலுக்கு நானும் கையசைக்க, அவள் உள்ளங்கையில் இருந்த அன்பு மொத்தமும் காற்றில் கலந்து வந்து என் உள்ளங்கையில் அந்த ஒரு நொடிக்குள் ஒட்டிக் கொண்டதாக தோன்றியது.

அம்மா வழி சொந்தங்கள், வீட்டுக்கு வந்து செல்கையில் தெருமுனை திரும்புகிற வரையிலும் நின்று கையசைத்து விட்டுதான் அம்மா வீட்டுக்குள் வருவாள். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் கல்யாணமாகியிருந்த புதிதில், அப்பா வழி சொந்தங்கள் வீட்டுக்கு வந்து திரும்புகையில், அம்மா நடையில் நின்று கொண்டிருந்ததாகவும், வந்தவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே தெருமுனையை கடந்துவிட்டதாகவும், இரண்டு மூன்று முறை அப்படி நடந்த பிறகு, அப்பா வழி சொந்தங்கள் வந்து போனால் நடையில் போய் நிற்பதை விட்டுவிட்டதாகவும் அம்மா கூறியிருக்கிறாள். அம்மா அடிக்கடி இதை சொல்லியிருக்கிறாள். அம்மா வீட்டு சொந்தங்கள் வந்து திரும்பும்போதும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறாள். அப்பா வழி சொந்தங்கள் வந்து திரும்பும் போதும் இதைப்பற்றி சொல்லியிருக்கிறாள். ஆனால் இந்த இரு வேறு நேரங்களிலும் அவள் கண்கள் வெவ்வேறு மொழி பேசுவதை கண்டிருக்கிறேன். “இந்த பழக்கத்துல, நீ எங்க வீட்டு ஆளுகள போலயே வந்துட்ட” இதை சொல்லும் போது அம்மாவின் கண்கள் சிரிப்பது நன்றாக தெரியும். இருபது நிமிட காத்திருப்பிற்கு பிறகு பேருந்து வந்திருந்த போதிலும், ஜன்னல் இருக்கை கிடைத்துவிட்டதில்  ஆனந்தம் அடைந்திருந்தது மனது. நான் எடுத்து வந்திருந்த, ஹெட்செட்டிற்கு வேலையில்லாதபடி ஆக்கியிருந்தது, பேருந்தில் பாடிக்கொண்டிருந்த ஒலிபெருக்கி.

ஜன்னல் கம்பிகளோடு போட்டியிட்டு எதிர்த் திசையில் ஓடிக்கொண்டிருந்த மரங்களை எண்ணியபடி அமர்ந்திருந்தேன். திடீரென்று கீதாவின் ஞாபகம் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொண்டது. எதிர்த் திசையில் ஓடிய மரங்களின் உதிர்ந்த இலைகளின் வாசத்தில் இருந்தும் அது வந்திருக்கலாம். ஒரு மணி நேரத்திற்கு முன்னால் கொட்டித் தீர்த்திருந்த மழையின் மிச்சமாக ஜன்னல் கம்பிகளில்  ஒட்டிக் கொண்டிருந்த மழைத் துளிகளிலிருந்தும் அது வந்திருக்கலாம்.

கீதாவும் நானும் முதல் முதலில் பேசிக் கொண்ட அன்றைக்கும் நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. அதற்கு முன்னால் பலமுறை கல்லூரி விடுதி வராந்தாவில் ஒருவரை ஒருவர் கடக்கிறபொழுது, ஒரு சம்பிரதாய புன்னகையோடு கடந்திருக்கிறோம். மற்றவர்கள் எங்களை அழைப்பதிலிருந்து என் பெயர் அவளுக்கும் அவள் பெயர் எனக்கும் தெரிந்திருந்தது.

அடுத்த நாள் தேர்விற்காக  நான் வராந்தாவில் அமர்ந்து பரபரப்பாக படித்துக் கொண்டிருந்தேன். பக்கங்களை வேகவேகமாக புரட்டிக் கொண்டிருந்தேன் என்றும் சொல்லலாம். கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த மழையின் கச்சங்கள் கைகளில் சில, கால்களில் சில என்று விழுந்து கொண்டிருந்த போதிலும் கண்டு கொள்ளாமல் பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்ந நான், அவை புத்தகத்து பக்கங்களின் நுனியை தொட ஆரம்பித்ததும் உடம்பை  மேலும் ஒடுக்கி, விலகி உட்கார்ந்தேன்.

மழை கச்சங்களில் இருந்து என்னை நான் விலக்கிக் கொண்ட அந்த நொடி தான், என்னை கீதாவோடு இணைத்த நொடி. “இப்படி மழையில நனைஞ்சிட்டு எதுக்கு படிக்கிற? ரூமுக்குள்ள போயிருந்து படிக்கலாம்ல” இடது கை உள்ளங்கையை பாதியாக மடிந்திருந்த இடது கால் முட்டியில் ஊன்றியபடியே, வலது கையில் துணிகள் நிரம்பிய பச்சை பக்கெட்டை தூக்கிக் கொண்டு கீதா என் எதிரே நின்று கொண்டிருந்தாள்.

“இல்ல எங்க ரூம்ல, ரூம்மெட்டோட டிபார்ட்மெண்ட் பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து குரூப் ஸ்டடி பண்ணிகிட்டு இருக்காங்க. அதான் சவுண்டா இருந்திச்சுனு வெளிய வந்தேன்.”“

“அப்படியா. அப்ப ஒண்ணு பண்ணு. எங்க ரூம்ல வந்து படி. அங்க அமைதியா தான் இருக்கு” சொல்லிக்கொண்டே ஒருமுறை அவள் அறையை கழுத்தை பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டாள்.

“இல்ல பரவாயில்லை. இருக்கட்டும்” சமணம் போட்டிருந்த கால்களை இன்னும் இருக்கமாக பின்னிக் கொண்டேன்.

“என் ரூம்ல யாரும் எதும் சொல்லமாட்டாங்க.போ.  நான் இத காயப்போட்டுட்டு வந்திடுறேன்.” இடது பக்கமாக சாய்ந்து சாய்ந்து என்னைக் கடந்து அவள் நடந்து சென்ற பொழுது அவன் நீள பின்னலும் சரிந்து சரிந்து ஊஞ்சல் போல் ஆடியது.

வெறும் பக்கெட்டோடு திரும்பி வந்த அவள், நான் எவ்வளவோ மறுத்தும் என்னை தன் அறைக்கு அழைத்து சென்று விட்டாள். கட்டிலின் ஒருபக்கம் அவள் அமர்ந்துகொண்டு மறுபக்கம் என்னை அமரச் சொன்னாள்‌. சாய்ந்து கொள்வதற்கு வசதியாக ஒரு தலையணையை தந்தாள்.

அந்த நாளிற்கு பிறகு அவள் அழைக்காமலேயே அவள் அறைக்கு நான் அடிக்கடி சென்று வந்தேன். அவளும் என் அறைக்கு அப்படி வந்து போய் கொண்டிருந்தாள். ஒரு வருடத்திற்கு பிறகு என் அறை இரண்டாவது மாடிக்கு மாறிவிட்ட பிறகு, படி ஏறமுடியாத காரணத்தால் அவள் என் அறைக்கு வருவது நின்று போய்விட்டது. அவள் தன்னைப் பற்றியும் , அவள் பாலிடெக்னிக் படிப்பை முடித்ததிற்கும் பொறியியல் படிப்பில் சேர்ந்ததிற்கும் இடையே அவள் கழித்த இரண்டு வருடங்கள் பற்றியும்,  நிறைய சொல்லியிருக்கிறாள். சிலவற்றை சொல்லும் பொழுது அவள் கண்கள் வெறித்துப் போயிருக்கும். சிலவற்றை சொல்லும் பொழுது சிலிர்த்தும், சிலவற்றை சொல்லும் பொழுது நீரால் பளபளத்தும் இருக்கும்.

ஒருதடவை தலைதூக்க முடியாதபடி, காய்ச்சலால் சுருண்டு படுத்திருந்த மதிய வேளையில், விடுதி மெஸ்ஸில் வேலை பார்க்கும் அக்கா ஆவி பறக்கும் சுடு கஞ்சித் தட்டோடு அறை வாசலில் வந்து நின்று என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள்.ஆச்சரியத்தில் கண்கள் விரிய அவர்களை பார்த்தபொழுது, “கீதா பொண்ணுதான் மெஸ்ஸிக்கு வந்து, உன் ரூம் நம்பரையும் , பெயரையும் சொல்லி, கஞ்சி வச்சு கொண்டு கொடுத்திட்டு வரமுடியுமான்னு கேட்டுச்சு” என்று சொன்னார்கள் . அதன்பிறகு கீதா அறைக்கு நான் போகமுடிகிற அளவிற்கு தெம்பு வருகிறபடி காய்ச்சல் சரியாகிற வரைக்கும் இரண்டு நாட்கள் மூன்று வேளைக்கும் என் அறை வாசலுக்கே சுடு கஞ்சி வந்து கொண்டிருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து அவளிடம் இதைப்பற்றி கேட்ட பொழுது, “நீ இங்க ரூம் பக்கமே வரலயேனு, உன் ரூம்மேட்கிட்ட கேட்டேன். நீ காய்ச்சல்னு படுத்திருக்கிறதா சொன்னா.” என்று பதில் சொல்லிவிட்டு, அதை கடந்து அதற்கு சம்மந்தமே இல்லாத ஏதோ ஒரு பேச்சுக்கு சென்று விட்டிருந்தாள். நானும் அவள் பேச்சை பிடித்துக் கொண்டே அவளோடு சென்று விட்டிருந்தேன்.

கல்லூரி முடிவதற்கு, ஒரு வாரத்திற்கு முன்பு அவளுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார்கள் என்றும், மாப்பிள்ளை போலிஸ் உத்தியோகத்தில் இருப்பவர் என்றும், அவளுக்கு என்று தனி கைபேசி வந்தவுடன் அதிலிருந்து அவள் திருமணத்திற்கு அழைப்பதாகவும், திருமணத்திற்கு நான் கட்டாயம் வரவேண்டும் என்றும் சொன்னாள். கல்லூரி கடைசிநாள் விடுதியை காலி செய்து விட்டு வரும் பொழுது வாசல் வரை வந்து வழியனுப்பினாள். அவள் அண்ணன் அவளை அழைத்து செல்ல வருவார் என்று கூறினாள்.

பேருந்து ரயில்வே பாலத்தில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது. கீதா கல்யாண கோலத்தில் பெரிய மீசை வைத்த வாட்டசாட்டமான ஒருவரின் அருகில் நிற்பதாக  கற்பனை செய்து பார்த்தேன். பாலத்தின் கீழேயுள்ள தண்டவாளத்தில் கடந்து சென்றிருந்த ரயிலின் சத்தம் தூரத்தில் கேட்டது. பாலம் முடிகிற இடத்தில் இடப்பக்கம் இருந்த குளத்தில் ஒரு ஒற்றை நீர்ப்பறவை அதன் முகத்தை தண்ணீரில் ஒரு முக்கு போட்டு நிமிர்ந்து தலையை உதற, அதிலிருந்து தெறித்த சில நீர்த்துளிகள் குளத்தில் விழுந்து சிறு சிறு நீர் வட்டங்களாக தோன்றி மறைந்தன.

அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்காக பையை எடுக்க ஜன்னல் கம்பியில் ஊன்றியிருந்த கையை எடுத்து பொழுது, கம்பியில் ஒட்டியிருந்த ஒரு சிறுதுளி கைமுட்டி மடிப்பின் அருகில் விழுந்தது. விழுந்த துளியை தேய்த்து துடைத்து விட்டு கொண்டபொழுது  சுடுகஞ்சி வாசனை வந்தது.