சிறுகதை

விடுவிப்பு- அரிசங்கர் சிறுகதை

அரிசங்கர்

 “லெட்சுமி ஊங்கிட்ட ஒரு அம்பதுருவா இருக்குமா…”

“நானே உங்கிட்ட இருக்குமானு கேக்கலாம்னு இருந்தன்” என்றாள் வடிவு.

“கொடுமன்னு கோயிலுக்கு வந்தாக்கா, இங்க ஒரு கொடும அவுத்து போட்டு ஆடுது,” என்று லட்சுமி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்தப் பக்கமாக சூப்ரவைசர் வருவதைப் பார்த்த வடிவு லட்சுமியிடம் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினாள். இருவரும் அவன் போவதையே ஓரக்கண்ணால் பார்த்தபடி தங்கள் வேலையைப் பார்த்தனர்.

“மொதல்ல இவங்கிட்ட இருந்து தப்பிச்சி ஓடனும்” என்றாள் லட்சுமி.

“எங்கனு போவ, எங்க போனாலும் இவன போல ஒருத்தன் கைலப்புடிச்சிகினு வருவானுங்கதான். போறதுனா அது சம்பளத்துக்குனுதான் இருக்கனும்” என்றாள் வடிவு.

“நீ சொல்றத பாத்தா எதோ எடம் பாத்துட்ட போல”

“க்கும் டீ… இன்னும் நல்லா கத்து, எல்லத்துக்கும் கேக்கட்டும்” என்று கோவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள் வடிவு.

“ஆமா மிஷின் ஓடற சத்தத்துல நான் பேசறதுதான் இப்ப கேக்கப்போவுது. எதுனா நல்ல கம்பேனினா நாமளும் வரலாம்னுதான் கேட்டன்,” என்று சமாதான தொனியில் சொன்னாள் லட்சுமி. வடிவு பதில் எதுவும் சொல்லவில்லை. வடிவு எதாவது சொல்வாளா என்று இரண்டு முறை அவளைப் பார்த்தவாறே இருந்தாள். ஆனால் அதன் பிறகு அன்றைய வேலை முடியும் வரை வடிவு எதுவுமே பேசவில்லை. மதிய நேரத்தில்கூட சாப்பிட வராமல் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தாள். லட்சுமிக்கு அவளைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. தனக்குள் சொல்லிக் கொண்டாள், “ச்சீ… இன்னா பொம்பள இவ, சின்ன வயசுலருந்து ஒன்னாவேதான இருக்கோம். ஒன்னாதான் படிச்சோம், கட்டிக்கினு போனதுகூடப் பக்கத்து பக்கத்து தெருவுலதான். இத்தினி நாளுக்கும் ஒன்னாவேதான் இருக்கோம். ஒரு நல்ல கம்பேனியா வந்தா நமக்குச் சொன்னா இன்னா. இவ சொத்தயா நாம கேக்கறோம்,” லட்சுமி இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே வடிவு வந்து வேகமாகச் சாப்பிட்டு லட்சுமியுடன் முடித்தாள்.

லட்சுமியும், வடியும் முத்திரைப்பாளையத்தில்தான் ஒன்றாகப் படித்தார்கள். ஒன்றாகவே பத்தாவது ஃபெயில் ஆகி ஒருவர் பின் ஒருவராகச் சிறிய இடைவெளியில் திருமணம் செய்துகொண்டு இப்போது இருவருமே ஐயங்குட்டிப்பாளையத்தில் பக்கத்துப் பக்கத்து தெருவில் வசிக்கிறார்கள். மேட்டுப்பாளையத்தில் இருக்கும் ஒரு பிளாஸ்டிக் கம்பேனியில் வேலை பார்க்கிறார்கள். இருவருமே மாநிறம், சம உயரம்தான். லட்சுமி எப்பவுமே ஒரே மாதிரிதான் இருந்தாள், எலும்பும் தோலுமாக. ஆனால் வடிவு திருமணத்திற்குப்பின் நன்றாக சதை போட்டு இருவருக்குமான வயது வித்தியாசம் அதிகமாகப் பார்ப்பவர்களுக்கு காட்டியது. தான் சீக்கிரம் கிழவியாகிவிட்டோமே என்று லட்சுமியைப் பார்க்கும்போதெல்லாம் வடிவுக்குத் தோன்றுவதுண்டு.

மாலை வேலை முடிந்து இருவருமே மேட்டுப்பாளையம் சறுவலில் சாலையில் இறங்கிவந்து கொண்டிருந்தனர். வழக்கமாக அப்படியே குறுக்கு வழியாகச் சென்று முத்திரைப்பாளையம் வழியாகச் செல்வதுதான் அவர்கள் வழக்கம். ஏதேனும் அவசர வேலைகள் இருந்தால் கீழ் ரோட்டுக்கு வந்து டெம்போ  பிடித்துச் செல்வார்கள்.

வடிவு பேச்சைத் துவங்கினாள், “லெட்சுமி, மதியம் அந்த புது கம்பெனி மேனேஜருகிட்ட தாண்டி பேசிகினு இருந்தன்.” என்றாள்.

லட்சுமி பதில் எதுவும் சொல்லவில்லை.

“உனுக்கும் சேத்துதாண்டி பேசனன்”.

இப்போதும் லட்சுமி பதில் சொல்லவில்லை. ஆனால் காதை நன்றாகத் தீட்டிக்கொண்டு, வடிவு என்ன சொல்லப் போகிறாள் என்று கவனித்தாள். வடிவு தொடர்ந்தாள், “அந்தாளு என்னாடானா கம்பேனிதான் மேட்டுபாளையத்துல இருக்கு, ஆனா ஆப்பீஸ் பாண்டில இருக்கு மொதல்ல அங்க வந்து பாருங்கனு சொல்றான். நீ என்னாடி சொல்ற நாளைக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாமா?” என்றாள்.

லெட்சுமி யோசித்தாள். அவள் கணவன் துரைராஜ்க்கு லட்சுமி வடிவுடன் பழகுவது சுத்தமாகப் பிடிக்காது. வேலை நேரம் தவிர அதிகம் அவள் வடிவுடன் செலவிடமாட்டாள். வடிவைப் பற்றி வீட்டிலும் பேசமாட்டாள். அப்படித்தான் ஒரு நாள் வடிவு சும்மா இல்லாம எதோ கேட்க போக துரைராஜ் அடித்த அடியை இன்று நினைத்தாலும் லட்சுமியின் உடல் நடுங்கும். அவளால் வலி தாங்க முடியாமல் அவன் காலிலேயே விழுந்தாள். அவன் கேட்கும் நிலையில் இல்லை. இவள் குழந்தையை துக்கிக்கொண்டு பக்கத்துத் தெருவில் இருந்த பார்க்கில் சென்று அமர்ந்து கொண்டாள். பிறகு துரைராஜே வந்து சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றான். இதை இவள் வடிவிடம்கூட சொல்லவில்லை. அவள் என்றுமே தன் கணவனை விட்டுக் கொடுத்ததில்லை. இப்போது போய் புது கம்பேனி, அதுவும் வடிவுடன் என்றால் நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டான். ஏன், இந்த கம்பேனியில் என்ன பிரச்சனை என ஆயிரம் கேள்விகள் வரும். நீ வேலைக்கே போக வேண்டாம், என்று கூட சொல்லிவிடுவான். எதோ கொஞ்சம் கஸ்டமில்லாம இருக்கு அதுக்கும் உல வெச்சுக்க வேண்டாம், என்று லட்சுமிக்குத் தோன்றியது.

“இன்னாடி, நான் கேட்டுனே இருக்கன். நீ கனவு கண்டுனுவர” என்றாள் வடிவு.

“நீ கேட்டததான் யோசிச்சினு வரன். நாம ரெண்டு பேரும் ஒண்ணா போனா சரிவராது. தனித்தனியா கிளம்புவோம். பாண்டி பஸ் ஸ்டாண்டுலருந்து ஒண்ணா போலாம்,” என்றாள்.

வடிவு சரி என்று சொல்ல இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றனர்.

மறுநாள் லட்சுமி கிளம்பி சரியாக பாண்டி பேருந்து நிலையத்துக்கு வந்துவிட்டாள். அவர்கள் பேசிக்கொண்டதுபோல் பேருந்து நிலையத்தை ஒட்டி இருந்த சைக்கிள் ஸ்டாண்ட் அருகில் காத்திருந்தாள். ரொமப நேரம் ஆகியும் வடிவைக் காணவில்லை. வடிவுக்கு கைபேசியில் அழைத்தாள். கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. லெட்சுமிக்கு எரிச்சலாக வந்தது. இவளை நம்பி வந்தது தப்பா போச்சே, என்று நொந்துக்கொண்டாள். காலையிலிருந்து பச்சை தண்ணிகூட குடிக்கவில்லை என்று நினைவுக்கு வந்தது. மிகவும் சோர்வாக இருந்ததால் எதிரில் இருந்த ஒரு டீக்கடைக்கு சென்று, ஒரு டீ, என்றாள். அப்படியே வடிவு வருகிறாளா என்று பார்த்துக்கொண்டே இருந்தாள். டீ மட்டும்தான் வந்தது. டீக்கடை ஒட்டியே ஒரு லாட்ஜ் இருந்தது. யாரும் உள்ளே போன மாதிரியும் தெரியவில்லை, வந்த மாதிரியும் தெரியவில்லை. இவள் லாட்ஜையே பார்த்துக் கொண்டிருந்ததை உள்ளே இருந்து பார்த்த ஒருவன் அவளிடம் வந்து, “உள்ள உங்கள கூப்பிடறாங்க” என்றான்.

“என்னயா” என்றாள் லட்சுமி.

“ஆமாம்மா” என்றான் அவன்.

“எதுக்கு” என்றாள்.

“அட என்னானுதான் வந்து கேட்டு போயேன்மா” என்றான்.

இவள் டீக்கு காசை நீட்ட, அவன் தடுத்தான். அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம், என்று அவளை உள்ளே கூட்டிச் சென்றான். அவர்கள் போவதையே பார்த்துக்கொண்டிந்த டீக்கடைக்காரனுக்கு உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே அவள் பெரிதாக கத்துவது கேட்டது. அவளுக்குத் தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தைகளையும் உதிர்த்தாள். வேகமாக வெளியே வந்து டீக்கடைக்காரனிடம் காசை வீசிவிட்டுச் சென்றாள். அழைத்துச் சென்றவன் வெளியே வந்தான். அவனிடம் டீக்கடைக்காரன், “இன்னா படியிலயா” என்றான்.

அவன் இல்லை என்பது போல் உதட்டைச் சுளித்தான்.

லட்சுமி பேருந்தில் போய்க்கொண்டிருந்தாள். வடிவின் மேல் அவளுக்கு ஆத்திரமாக வந்தது. இப்போது பிரச்சனை வடிவோ அல்லது அந்த லாட்ஜ்காரனோ இல்ல. இவள் லாட்ஜில் இருந்து வெளியேறியதைப் துரைராஜின் நண்பன் ஒருவன் பார்த்து விட்டான். அதை நினைத்துத்தான் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. இவள் அவனை பார்த்தமாதிரியே காட்டிக்கொள்ளாமல் வந்து பேருந்தில் ஏறினாள். இதயம் வேகமாக அடிக்கத் துவங்கியது. “இவன் போய் அவனிடம் சொல்லிவிட்டால் அவ்வளவு தான். அவன் அடித்தே கொன்றுவிடுவான். அதுக்கு நாமலே செத்துடலாம். அய்யோ புள்ளய என்ன பண்றது,” இப்படி பல திசைகளில் அவள் மனம் ஓடிக்கொண்டிருந்தது. தனக்கு இது தேவைதான் என்று நினைத்துக்கொண்டாள். இந்த வடிவுக்கு நாளைக்கு இருக்கு, என்று நினைத்துக் கொண்டாள்.

பேருந்து மேட்டுப்பாளையம் வந்தது. மணி ஒன்பதரைதான் ஆகியிருந்தது. வேலைக்கே போகலாம் என்று வேகமாக மேடு ஏறினாள். தனக்கு பின்னாலேயே யாரோ வருவது போல் இருக்க, பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவன் வந்து கொண்டிந்தான். இந்தச் சனியன் புடிச்சவன் ஏன் நம்ப பின்னாடி வரான், என்று எரிச்சலானாள். மீண்டும் திரும்பிப் பார்த்தாள் அவன் தன் முழுப்பல்லை காட்டிச் சிரித்தான். இவள் வெடுக்கென முகத்தைத் திருப்பிக்கொண்டு வேகமாக கம்பேனிக்குள் நுழைந்து, தாமதமாக வந்ததற்கான வசையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள். அங்கே வடிவு அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்தவுடன் லட்சுமிக்கு அவளை அப்படியே மிதிக்க வேண்டும் என்பது போல் இருந்தது.

லட்சுமியின் முகத்தை பார்ர்கும்போதே வடிவுக்குப் பயமாக இருந்தது. தாமதமாக வந்ததால் முதலில் லட்சுமி எதுவும் பேசவில்லை. அமைதியாக தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். மதியம் உணவு இடைவெளியின்போது லட்சுமி திட்டியதில் வடிவு அழுதேவிட்டாள். அவளால் அழுகையை அடக்க முடியவில்லை.

“இல்ல லெட்சுமி, நான் நேத்து என் வீட்டுகாரர்கிட்ட சொன்னேன். அவரு உடனே நானே உன்ன கூட்டினு போறன்னிட்டாரு. காலைலயே கிளம்பிட்டோம். போன வீட்டுலயே வச்சிட்டன்னு பாதி வழியிலதான் தெரிஞ்சிச்சி. நீ வரத்துக்குக் கொஞ்சம் முன்னாடிதான் வந்தன். அஞ்சி நிமிசத்துல நானே யாருகிட்டயாது போன் வாங்கி உன்ன கூப்பிடலாம்னு இருந்தன். அதுக்குள்ள நீயே வந்துட்ட. நான் வேணும்ன்னுலாம் ஒண்ணும் பண்ணல லெட்சுமி,” என்றாள்.

ஆனால் லட்சுமியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் மீண்டும் வடிவிடம் ஏறினாள்.

“இப்ப அந்தச் சனியன் புடிச்சவன் வேற பின்னாடியே வரானே நான் என்ன பண்றது. என் வூட்டுக்காரங்கிட்ட சொல்லிட்டா இன்னா பண்றது,” என்றாள்.

“ஏய், அண்ணன் அதெல்லாம் நம்பாதுடீ,” என்றாள் வடிவு.

“நீ ஏன் அங்க போனன்னு முதல்ல உத உழும். வந்து வாங்கிக்கறியா?”

வடிவு அமைதியாக இருந்தாள். அன்றைய வேலை முடிந்து இருவரும் குறுக்கு வழியாகச் சென்றனர். அவன் வருகிறானா என்று அவ்வப்போது பார்த்தவாறே வந்தாள் லட்சுமி.

மறுநாள் தெருமுனையிலிருந்து பின்னாடியே வந்தான். பார்க்கும்போதெல்லாம் பல்லைக் காட்டினான். இது தினமும் தொடர ஆரம்பித்தது. லட்சுமிக்கு வீட்டிலும் வேலை ஓடவில்லை, கம்பெனியிலும் வேலை ஓடவில்லை. தூக்கம் தொலைந்தது. எந்த தப்பும் பண்ணாமல் ஏன் இந்த நரக வேதனை என்று நினைத்துக் கொண்டாள். இது இன்னும் எத்தனை நாள் தொடருமோ தெரியவில்லையே.

“பேசாம உன் வீட்டுக்காருகிட்ட சொல்லிடு” என்றாள் வடிவு. அவள் புது கம்பெனிக்கு மாறியதிலிருந்து அவளைப் பார்க்க முடியவில்லை லட்சுமியால். அதான் கடைக்கு போகிற சாக்கில் வடிவு வீட்டிற்கு வந்தாள். இருவரும் பல யோசனைகளை ஆராய்ந்தனர். முடிவில் எதுவும் திருப்தியாக இல்லை. லட்சுமி கிளம்பினாள்.

“சரி வடிவு நான் கிளம்பறன்,” என்றாள்.

இருவரும் வீட்டு வாசலுக்கு வந்தனர். எதிர்க்கடை வாசலில் அவன் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் வடிவு ஆவேசமாக விளக்குமாற்றை எடுத்து அடிக்கப் போனாள். லட்சுமி அவளைத் தடுத்துவிட்டாள். ஆனால் வடிவின் வாயை அவளால் தடுக்க முடியவில்லை. அவன் லட்சுமியை முறைத்துக்கொண்டே சென்றுவிட்டான். வடிவு மீண்டும் தனக்கு உலை வைத்துவிட்டாள் என நினைத்துக்கொண்டாள்.

சில தினங்களாக அவன் வரவில்லை. லட்சுமிக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால் அவன் சும்மா இருப்பான் என்று மட்டும் தோன்றவில்லை. ஒரு நாள் அவள் வேலைவிட்டு வரும்போது ஒரு சந்தில் அவளை மடக்கி நேரடியாகவே கேட்டான், “உங்கிட்ட முதலும் கடைசியுமா கேக்கறன் என் கூட ஒருவாட்டி வர முடியுமா முடியாதா?” என்றான்.

லட்சுமிக்கு காதில் யாரோ அமிலத்தை ஊத்தியதுபோல் இருந்தது. அவன் முகத்தில் காரித்துப்பிவிட்டு வேகமாகச் சென்றாள். அவன் அப்படிக் கேட்டதை அவளால் தாங்க முடியவில்லை. இரவு முழுவதும் அழுதாள். மறுநாள் உடம்பு சரியில்லை என்று வேலைக்குப் போகவில்லை. விட்டில் இருந்த வேலைகள் அன்று அவளுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. எந்த நினைப்பும் வரவில்லை. பின் மதியத்தில் அவள் கணவன் துரைராஜ் கதவை திறந்து கொண்டு வீட்டிற்குள் வந்தான். அவனுடன் சில நண்பர்கள் வந்தார்கள். துரைராஜ் முகத்தில் சில இடங்களில் வீங்கியிருந்தது. சட்டை முழுவதும் கிழிந்து தொங்கியது. லட்சுமி பதற்றமாக அவனிடம் ஓடினாள். அவன் நண்பர்கள் அதற்குள், “ஒண்ணும் இல்லமா, சின்னா ஒரு தகராறு. எல்லாம் பேசி முடிச்சாசு. பதறாத” என்றனர். பிறகு துரைராஜிடம் திரும்பி, “துரை இத இத்தோட விடு. அவன்லாம் ஒரு ஆளுனு அவன்கூட போய்… சரிவிடு. நாளைக்கு நல்ல ரெஸ்ட் எடு பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு வெளியேறினர்.

அனைவரும் போனபின் லட்சுமி மெல்ல அவனிடம் “எதுக்கு சண்ட” என்றாள்.

சிறிது அமைதியாக இருந்தவன் அவளிடம், “அந்தப் பரதேசி இல்ல, செல்வம்” என்றான்.

லட்சுமிக்கு பகீர் என்றது. அவன்தான் என்று நினைத்துக்கொண்டாள். துரை தொடர்ந்தான், “அந்த நாயி எங்கிட்டயே வந்து உன்னப்பத்தி தப்பா சொல்றான். உன்ன அங்க பாத்தேன் இங்க பாத்தேன்னு. அதான் அடிச்சி அவன் வாய உடச்சிட்டன்.”

லட்சுமி தான் எதிலிருந்தோ விடுவிக்கப்பட்டது போல் உணர்ந்தாள். அவள் கண்களில் நீர் வந்துகொண்டே இருந்தது. இவள் அழுவதைப் பார்த்த துரைராஜ், “அட நீயேன் அழற, அவன் கிடக்கறன் பொறம்போக்கு” என்றான்.

பச்சை – ஹரீஷ் கண்பத் சிறுகதை

ஹரீஷ் கண்பத்

அம்மா காலையிலேயே மதிய உணவுக்குத் தயார் செய்யத் துவங்கியிருந்தாள். கிராமம் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் சிறுநகரமாய் மாறிக் கொண்டிருக்கும் இது போன்ற ஊர் ப்ரியாவுக்குப் புதிது. நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவள். நகரத்திலிருக்கும் எல்லாமும் இங்கேயும் வரத் துவங்கி விட்டாலும் ஒரு மெல்லிய இழையில் இரண்டும் வித்தியாசப்பட்டுக் கொண்டே இருப்பது இயல்புதான்.

அதன் பல சாட்சிகளுள் ஒன்றாய் சின்னச் சின்னக் கூரை வேய்ந்த வீடுகளையும், மாலையானால் வாசலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக் கொண்டு அரட்டை அடிக்கும் சனங்களும், வழியில் தென்படும் எல்லா வீடுகளிலிருந்தும் உணவுண்ண அழைப்பும் என்று பார்த்துப் பார்த்துக் கண்கள் விரிய ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் ப்ரியா.

மெல்ல வெளியிறங்கிப் படலைத் திறந்து கொண்டு நடக்கத் துவங்கினோம். முந்தைய நாளின் கோடை மழை இலை செடி கொடிகளைத் துடைத்து வைத்திருந்தது. பச்சை மணம் வீசிக் கொண்டிருந்தது. ஆளரவமற்ற சாலையை ப்ரியா வெகுவாக ரசித்தபடி நடந்து கொண்டிருந்தாள். அவ்வப்போது கடக்கும் எக்ஸல் சூப்பர் அல்லது எம் 80 யின் ஒலிகள் தவிர காற்று அமைதியாயிருந்தது.

பத்து நிமிட நடையில்தானிருந்தது கோவில். திடீரென்று வெயில் காணாமல் போய் மேகம் மூட்டம் போட்டது. சட்டென்று சுதாரிப்பதற்குள் சடசடவெனத் தூறல் விழத் துவங்கியது. வேகமாய் அருகிலிருந்த மரத்தடிக்கு ஓடி நின்றேன். ப்ரியாவும் பின்னோடு ஓடி வந்தாள்.

“ மழை பெய்யும்போது மரத்தடில நிக்கக் கூடாது தெரியும்ல. சய்ன்ஸ்” என்றாள் மூச்சு வாங்கலின் நடுவே சிரித்துக் கொண்டே. அவள் நெற்றியிலிருந்து பிரிந்திருந்த ஒற்றை முடியின் நுனியில் அமர்ந்திருந்த மழைத்துளி எப்போது வேண்டுமானாலும் கீழே விழக் கூடும்.

“ இது பாஸிங் க்ளவுட்தான். உடனே நின்னுரும் பாரு மழை,” என்று நான் சொல்லி முடிக்கச் சட்டென்று தூறல் நின்றது. அசட்டுப் பெருமையாயிருந்தது எனக்கு. மீண்டும் நடையைத் தொடர்ந்தோம். வழியில் கோமதியக்காள் எதிர்ப்பட்டாள். இதான் சம்சாரமா, என்றாள். ப்ரியாவின் கன்னத்தை வருடினாள். குசல விசாரிப்புகள் முடிந்து “தம்பி வூட்டுக்கு எப்ப சாப்புட வர்ற? ந்தா இன்னிக்குதான் வர்றது” என்றாள்.

எனக்குப் பிறக்கும் குழந்தையின் சிரிப்பு இப்படி இருந்தால் எவ்வளவு அழகாயிருக்கும் என்று சட்டென்று தோன்றியது கோமதியக்காவின் சிரிப்பைப் பார்த்து. அவ்வளவு துலக்கம். சிரித்துச் சமாதானம் சொல்லிக் கடந்தேன்.

பத்து நிமிடம் நடந்து கோவிலை அடைந்தோம். “இந்த ஊர்ல இவ்ளோ பெரிய கோவிலா?” என்றாள் வியப்பாய், செருப்பைக் கழற்றியபடியே. பிரதான சன்னிதி கூட்டமின்றி இருந்தது. ஓரிருவர் நின்றிருந்தனர். ஒரு சிறுவன் அவனைவிடச் சின்னப் பெண் ஒன்றை சிரமப்பட்டுத் தூக்கி மணி அடிக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

அர்ச்சகர் தரிசனம் செய்வித்துவிட்டு பிரசாதம் கொடுக்கையில் கல்யாணம் பற்றி விசாரித்தார். நல்லபடியாய் முடிந்தது சந்தோஷம், என்றார். பிரசாதம் வாங்கிக் கொண்டு அகன்றோம். கோவிலைச் சுற்றி வரும்போது பின்புறமிருந்த அரச மரத்தடி நாகரை வணங்கிக் கொண்டோம். அவ்வளவு பெரிய அரசமரத்தை விடுத்துச் சற்றுத் தொலைவில் சுவர் விரிசலில் லேசாய்க் கீறிக் கொண்டு முளைத்திருந்த அரசஞ்செடி மீது கவனம் பதிந்தது. அது லேசான காற்றில் சிலிர்ப்பது போல் அசைந்தது முதல் துளி மழை உடம்பில் பட்டதும் வரும் சிலிர்ப்புக்கொப்பாயிருந்தது.

அரச மரத்தின் பின்புறம் எங்கிருந்தோ வந்திருந்த ஒற்றை ஆடு முன்னங்கால்களில் எக்கித் தழை தின்ன முயன்று கொண்டிருந்தது. மெல்லப் பிரகாரச் சுற்றை முடித்து விட்டுக் கோவில் வாசலுக்கு வந்தோம்.  கோவிலின் அகன்ற திண்ணையைப் பார்த்ததும், “கொஞ்ச நேரம் உக்காந்துட்டுப் போவோம்” என்றேன். திண்ணையில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்காராமல் உட்தள்ளிச் சுவரில் சாய்ந்து சப்பணங்காலிட்டு அமர்ந்தோம். வெயில் தெரியவில்லையென்றாலும் திண்ணைக்கென வேயப்பட்டிருந்த கூரையின் நிழல் அலாதியாயிருந்தது.

சற்றைக்கெல்லாம் மீண்டும் சடசடவெனத் தூறல். “இதுவும் உங்க ஊர் மழை தானே? இது எப்ப நிக்கும்னு சொல்லு” என்றாள் ப்ரியா என்னைப் பார்த்துக் குறும்பாக. அவள் “உங்க ஊரு மழை” என்று சொன்ன பதம் பிடித்திருந்தது.  தூறல் கோடுகளினூடே மெதுவாக ஒரு எக்ஸல் சூப்பர் கடப்பது தெரிந்தது. கோவிலைக் கடக்காமல் நின்றது. வண்டியிலிருந்து இறங்கி வரும் வெள்ளை வேட்டி மனிதரின் நடையை எங்கோ பார்த்தது போலிருந்தது.

அருகில் வர வர நீர்க் கோடுகளை மீறி ஆள் அடையாளம் தெரிந்தது. ரங்கன் பெரியப்பாதான். என்னைப் பார்த்து விட்டிருக்கிறார். புன்னகையுடன் வந்தார். மழை அவரை ஒன்றும் செய்யவில்லை. திடீரென்று அவர் அருகில் வருவதற்குள் கோவிலுக்குள்ளே தரையில் நீர்த் துளிகள் விழுந்து தெறிப்பதைக் காண வேண்டும் என்று ஆவல் எழுந்தது. திரும்பி உள்ளே பார்ப்போமா என்று யோசனையினூடே பெரியப்பா வந்து சேர்ந்து விட்டார்.

“என்னாடா எப்பிடி கீற” என்றார். சங்கடமாய் நெளிந்தேன்.  “நல்லாருக்கேன் பெரிப்பா” என்றேன். ப்ரியாவிடம் “என் பெரிப்பா” என்றேன். அவள் புருவம் சுருக்குதலில் “இவர் கல்யாணத்துக்கு வரலியே?” என்ற கேள்வி தெரிந்தது.

“இதான் உன் சம்சாரமா. வணக்கம்மா. நல்லாக்கீரியா?” என்றார் நிறைவாக. “நல்லாருக்கேங்க” என்றாள், என்ன சொல்லி அழைக்க வேண்டுமென்ற குழப்பத்தில் எந்த உறவு முறையும் கூறாமல். மழை விட்டிருந்தது. கூரையின் நுனியிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது.

“செரி நட வீட்டுக்கு போவலாம்” என்றார். திடுக்கிட்டேன். “அது… வந்து… பெரிப்பா” என்று இழுத்தேன். “என்னாடா இழுக்குற. உங்கப்பன் என்னிய கல்யாணத்துக்கு கூப்புடலன்னு எனக்கு வருத்தம்தான். அதுக்கு நீ என்னா செய்வ. பெரிம்மா பாத்தா சந்தோசப்படுவாடா. என்னா வரியா” என்றார்.

அவர் அழைப்பின் தொனியில் “தயவு செய்து வாயேன்” என்ற விண்ணப்பமிருந்தது. ”சரி பெரிப்பா போலாம்… ஆனா சாப்பாட்டுக்கு….” என்றேன்.

“அது தெரியும். உங்கம்மா ஏற்கனவே செய்ய ஆரம்பிச்சிருப்பாங்க. நீ அங்கயே சாப்புடு. நம்மூட்ல எதுனா கலரு கிலரு முறுக்கு சாப்புட்டு போ. இல்ல காப்பித் தண்ணிதான் குடிச்சிட்டுப் போ. இன்னொரு நாளிக்கி சாப்டுக்கலாம். என்னா ஓகேதான” என்றார். என்ன ஒரு புரிதல். அந்த நொடி பெரியப்பாவைத் தோளோடு அணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது.

“செரி. உனுக்குதான் வீடு தெரியும்ல. ந்தா அஞ்சு நிமிசம் நடந்தா வருது. நீ நடந்து வந்துர்றியா. நான் மருமவளக் கூட்டிகினு வண்டில போறன் முன்னாடி. என்னாமா வரியா” என்றார். ப்ரியா என்னைப் பார்த்தாள். மெல்லக் கண் காட்டினேன்.

“சரிங்க போலாம்” என்று வெகு இலகுவாகக் கிளம்பி விட்டாள். அவர்கள் இருவரும் வண்டியில் ஏறிக் கோவில் முனை தாண்டி மறைந்ததும் நடக்கத் துவங்கினேன். இப்படி மழை அவ்வப்போது நீர் தெளித்து இந்தச் செடிகளையெல்லாம் மேலும் மேலும் பச்சையாக்கிக் கொண்டிருக்கிறதே, ஒரு கட்டத்தில் இதற்கு மேல் செடியில் பச்சைக்கு இடமில்லை என்று செடியில் பட்டு வழியும் நீரெல்லாம் பச்சையாய் வழியப் போகிறதென்று நினைத்துக் கொண்டேன்.

நினைத்தவுடன் திரும்பி சாலையோரச் செடியைப் பார்த்தேன். அமைதியாயிருந்தது. பெரியப்பா இந்த ஐந்து நிமிட வண்டிப் பயணத்திலேயே ப்ரியாவுக்கு எங்கள் குடும்பக் கதையையும் அப்பாவுக்கும் அவருக்குமான உப்பு பெறாத ஏதோ ஒரு கவுரவச் சண்டை பற்றியும் அதனால் உண்டான பத்து வருஷப் பகை பற்றியும், ஆடு பகை குட்டி உறவு கணக்காகப் பெரியப்பா என்னையும் என் தம்பிகளையும் உறவாடுவதைப் பற்றியும் என் அப்பாவும் பெரியப்பாவின் பெண் மீது பாசமாயிருப்பதைப் பற்றியும்  விவரித்திருக்கக் கூடும்.

பெரியப்பா வீட்டுக்குப் போனால் தெரியும். பெரிய்ப்பா வீடு கோவிலுக்கு அருகிலேயே இருந்தது. ஐந்து நிமிஷ தூரம். இவ்வளவு அருகருகே இருந்து கொண்டு எப்படி பகையை தினந்தோறும் காலையில் எழுந்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அதை உயிர்ப்புடன் வைத்திருக்க முடிகிறதென்று ஆச்சரியமாயிருந்தது. யோசனையினூடே நடந்ததில் பெரியப்பாவின் வீடு வந்து விட்டது.

பால்யத்தில் நான் பார்த்த பெரியப்பா வீட்டின் வாசல் வேலிப் படல் இரும்பு கேட்டாக மாறியிருந்தது. உள்ளே வீட்டுக்குச் செல்லும் வழிகூட சிமெண்ட் வேயப்பட்டிருந்தது. கூடையைத் திறந்து விட்டிருப்பார்கள் போல. கோழிகள் ஆங்காங்கே சிதறிச் சுற்றிக் கொண்டிருந்தன. ப்ரியா பெரியப்பாவுடன் வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள்.

கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன். சரியாக பெரியம்மா வெளியே வந்தார். முகத்தில் அவ்வளவு மலர்ச்சி. பாதி வழியிலேயே மறித்தார். வாடா இப்பதான் இந்த கெழவிய பாக்கறதுக்கு வழி தெரிஞ்சிதா, என்று என் கன்னம் வழித்தார். பின் கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துப் போனார். பெரியம்மா கொஞ்சம்கூட மாறவில்லை. வாசலுக்குச் சென்றதும் நிப்பாட்டினார்.

“இங்கயே நில்லு வரேன். இது யாரு உன் சம்சாரமா. அழகா இருக்கா. நல்லாருங்க ரெண்டு பேரும். இந்தா வந்துர்றேன்,” என்று உள்ளே போனார். லேசான பரபரப்பு இருந்தது அவர் நடையில். உள்ளிருந்து இன்னதென்று இனம் பிரித்தறிய முடியாத ஏதோ ஒரு உணவு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் வாசனை வந்தது.

ஆரத்தித் தட்டுடன் வந்து வரவேற்றார் பெரியம்மா. “கல்யாணம்லா நல்லபடியா நடந்துச்சா” என்றார். “போயி அவங்களுக்கு காப்பி போடு”, என்று பெரியம்மாவிடம் சொன்ன பெரியப்பா, “காப்பி குடிக்கிறிங்கள்ல?” என்றார் எங்களைப்  பார்த்து. தலையசைத்தோம். “இந்தா போறேன் இருங்க. பையன் வந்துகுறான் வூட்டுக்கு. இன்னா அவசரம்” என்று என் அருகில் வந்து கன்னத்தை வழித்தாள்.

சிறு வயதில் மடியில் போட்டுத் தூங்கப் பண்ணிய பெரியம்மாவின் சேலை வாடை மீண்டும் இத்தனை வருடங்களுக்குப் பின் இவ்வளவு அருகே. நிமிர்ந்து பெரியம்மாவைப் பார்த்தேன். கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. இவ்வளவு சந்தோஷம் தாங்காது என்பது போல இருந்தது அவளின் செய்கைகள்.

வீட்டின் பின்புறம் ரயிலின் ஓசை கேட்டது. பெரியம்மா விலகி சமையலறைக்குள் நுழைந்தார். “சின்ன வயசுல இங்க பெரியப்பா வீட்டுக்குப் பின்னால இருக்கற காம்பவுண்டு செவுரு எகிறி குதிச்சிதான் நானு பாஸ்கரெல்லாம் ரயில்வே கிரவுண்டுல போயி விளையாடுவோம்,” என்றேன் ப்ரியாவிடம்.

“அந்த செவுரெல்லாம் இப்ப ரொம்ப பெருசா கட்டிட்டானுக. அப்புறம் அந்த ரயில்வே ஸ்டேசன் வாசல்லருந்து பாய்ஸ் ஸ்கூலு போவோமுல்ல. அந்த ரோட்டையும் ரயில்வே பிராப்பர்டினு சொல்லி கேட்டு போட்டு அந்த பக்கம் போவ முடியாம செஞ்சிட்டானுங்க. இப்ப மெயின் ரோடுல சுத்திகினு ஆனந்தா ஓட்டலாண்ட போயிதான் பாய்ஸ் ஸ்கூல் போவணும். இல்லனா ட்ராக்குலயே நடந்து போவணும்,“ என்றார் பெரியப்பா.

ஏனோ ஊரின் முகம் பெரியப்பா சொன்ன ஒரு வாக்கியத்தில் சட்டென்று மாறி விட்டது போலிருந்தது. “ பாஸ்கர் எங்க?” என்றேன். இன்னும் சகஜமாய்ப் பெரியப்பா என்று அழைக்க வாய் வரவில்லை. “அவன் நால் ரோடு வரைக்கிம் போயிருக்கறான். வந்துருவான்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எம் 80 சத்தம் கேட்டது.

வ்ண்டியை நிறுத்தி விட்டு உள்ளே வந்தவன் எங்களைப் பார்த்ததும் சட்டென்று நின்று விட்டான். சூழலை கிரகித்துக் கொள்ள சில நொடிகள் தேவைப்பட்டது அவனுக்கு. எழுந்து அவனை நெருங்கினேன். தோள் மேல் கை போட்டு அணைத்தேன். “எப்படி இருக்க பாஸ்கரு” என்றேன். தயங்கிப் பின் அவனும் அணைத்தான். “டேய் எப்பிட்றாகீற. நான் நல்லாகுறன். என்றவன் இயல்பாய் ப்ரியாவைப் பார்த்து, “இன்னாமா நல்லாகுறியா” என்று புன்னகைத்தான்.

“பெரியப்பா பையன். எனக்கு அண்ணன். ஆனா பெஸ்டு ப்ரெண்டு,” என்று ப்ரியாவிடம் அறிமுகம் செய்தேன்.

பெரியம்மா காபிக் கோப்பைகளை ஒரு பெரிய தட்டில் வைத்து கூட பிஸ்கட், சீடை, முறுக்கு என்று எதையெதையோ கொண்டு வந்தார். கவனிப்பும் அனுசரிப்பும் பேச்சுகளும் விசாரணைகளும் நீண்டபடியிருந்தன. கவனமாய் அப்பா பற்றிய பேச்சு மட்டும் எழாமல் பார்த்துக் கொண்டார் பெரியப்பா.

நேரமாகி விட்டதென்று சொல்லிக் கொண்டே கிளம்புவதற்கு எழுந்தேன். பெரியப்பா “எப்படி போற?” என்றார். “ நடந்துதான் “ என்றேன்.

“இரு நான் கொண்டு வுடறேன்,” என்றார். திடுக்கென்றது. இதென்ன தர்ம சங்கடம்? “இல்ல… நாங்க ரெண்டு பேரு… நடந்தே….” என்றேன். “அட அதுக்கென்ன. என் வண்டி கீது. பாஸ்கர் வண்டி கீது. போலாம் வா,” என்றார். பாஸ்கரும் குழம்பினான். ஆனால் தயாரானான். விஷயத்தின் வீரியம் புரியாததால் ப்ரியா வேடிக்கை மட்டும் பார்த்தாள்.

“என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்துடன் கிளம்பினேன். பெரியப்பா வண்டியில் ப்ரியா ஏறிக் கொள்ள, பாஸ்கருடன் நான் கிளம்பினேன். வீடு நெருங்க நெருங்க குழப்பம் அதிகரித்தது. ஒன்றிரண்டாய்த் தூறல் போட்டுக் கொண்டிருந்தது. போகும்போது இருந்த தூறலை ரசிக்கிற மனநிலை இப்போது இல்லை.

யோசித்து முடியாமல் வீடு வந்து விட்டது. இறங்கிக் கொண்டு எதுவும் சொல்லாமல் மௌனமாய்த் தலையாட்டினேன். அவர்களைக் கிளம்பச் சொல்லி நேரிடையாய்ச் சொல்ல முடியாது. அப்பா வெளியே வந்து விடக் கூடாதென்பதே என் வேண்டுதலாயிருந்தது.

சட்டென்று ப்ரியா, “ உள்ள வாங்க பெரியப்பா,” என்றாள். சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திராமல் உள்ளே நுழைந்து விட்டாள். ஒரு நொடி என்னைப் பார்த்த பெரியப்பா பின் எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தார். உயிர் போய் விடும் போலிருந்தது. இந்த ரயில் வேறு நேரம் காலம் தெரியாது கூவித் திரிந்து கொண்டிருந்தது.

வாசலில் அரவம் கேட்டு அம்மா தான் முதலில் வந்தாள். அதிர்ச்சியை மெல்ல மென்று முழுங்கியவள் “ வாங்கணா. வா பாஸ்கரு,” என்றாள் மெல்லிய குரலில். படி வரை வந்தவரை எப்படி வர வேண்டாமென்று சொல்வது என்பது தவிர அவள் வரவேற்க வேறு காரணங்களில்லை. பயம் அப்பிக் கிடந்தது அவள் கண்ணில்.

“தம்பி நடந்து வர்றன்னு சொன்னான். அதான் எதுக்கு நடக்கணும்னு நாங்க கூட்டினு வந்தோம். கல்யாணமெல்லாம் நல்லா நடந்துச்சா?” என்றார்.

“ஆங்… நல்லா… நடந்துச்சு,” என்றாள் அம்மா. குக்கர் விசிலடித்தது. இப்போது இந்த நொடி சோவென்று பெருமழை பெய்யத் துவங்கி பேச்சுக் குரல்களை அமுக்கி விடாதா என்றிருந்தது எனக்கு.

அப்பா வெளியில் வந்தார். நின்றிருப்பவர்கள் எல்லாரையும் பார்த்தார். பின் அப்பாவின் பார்வை பெரியப்பா மீது நிலை கொண்டது. சில நொடிகள். யுகங்களுக்கான மௌனங்களைத் தமக்குள் பொதிந்து வைத்திருந்த நொடிகள். மீண்டும் குக்கர் கத்தியது. “வா. எப்படிகீற” என்றார் அப்பா பெரியப்பாவைப் பார்த்து.

“ நல்லாகுறன். நீயி?” என்றார் பெரியப்பா.

“ நல்லாதான் இருக்குறன். வா வந்து உக்காரு,” என்றார். பெரியப்பா சுவாதீனமாய் அமர்ந்து கொண்டார்.  “கல்யாணத்துக்கு கூப்புட…” என்று தொடங்கிய அப்பாவை அவசரமாய் இடை மறித்து “அது பரவால்ல” என்றார் பெரியப்பா.

“எப்படிகிற பாஸ்கரு” என்றார் அப்போதுதான் பாஸ்கரைப் பார்த்த அப்பா.

“நல்லாகுறன் சித்தப்பா” என்றான் பணிவாய்.

பின் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு “புள்ளைக்கி கல்யாணம் ஆகிருக்குது. அதான் நம்ம வூட்டுக்கு சாப்புட கூப்புடலாம்னு. நாளைக்கி அனுப்பி வெக்கிறியா?” என்றார். இத்தனை உரையாடல்களின் இடையேயும் இருவரும் ஒருவரையொருவர் கண் பார்த்துக் கொள்ள தவிர்த்தனர்.

“அதுக்கென்னா. வருவான்” என்றார் அப்பா.

“செரி அப்ப நான் கெளம்பறேன்” என்று திரும்பியவர் மீண்டும் ஒரு முறை தயங்கி நின்றார். சட்டென்று அப்பாவின் பக்கம் திரும்பி அவர் தோளைத் தொட்டு, “நீயும் வாயேன். சம்சாரத்தையும் கூட்டினு வா. எல்லாரும் வாங்க. ரெம்ப நாளாச்சி” என்றார். இப்போது அப்பாவின் கண்ணை நேருக்கு நேர் பார்த்தார்.

“செரி என்னா வேல கீதுன்னு பாத்துகினு நாளிக்கி எல்லாரும் வந்துர்றோம். அண்ணியாண்ட சொல்லிரு,” என்றார் அப்பா. மெல்லத் தலையசைத்த பெரியப்பா வாசலை நோக்கி பாஸ்கருடன் நடந்தார்.

நான் பின்னாலேயே சென்றேன். திரும்பி, “வரேன் தம்பி. நாளிக்கி அப்பா அம்மா எல்லாரையும் இட்டுகுனு வந்துரு” என்றார். “சரிங்க பெரியப்பா” என்றேன். மஹை பெருந்தூறலாய் விழத் துவங்கியிருந்தது. கோவில் மணிச் சத்தம் தீனமாய்க் கேட்டது. குக்கர் மீண்டும் சத்தம் போட்டது.  பெரியப்பாவின் வண்டி கிளம்பித் தெருமுனை சென்று திரும்பி மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தேன். ரயில் சத்தம் கேட்கத் துவங்கியது.

கூபோ – எஸ். சுரேஷ் சிறுகதை

எஸ். சுரேஷ்

நான் முதலில் பார்த்தது என் பெயரை. இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி அவள் அந்த காகிதத்தை பிடித்துக்கொண்டிருந்தாள்.

“கூபோ ஸான்?” என்று நான் கேட்டவுடன். “ஹை”, “நீங்கள் தான்..” என்று என் பெயரை தப்பாக உச்சரித்தாள். நான் சிரித்தபடி, ‘எஸ்’ என்றேன்.

நரீதா விமானநிலையத்திலிருந்து நாங்கள் ஒரு ரயிலில் ஏறினோம். மணி இரவு ஏழு மணி. உயேனோ என்னும் ஸ்டேஷனில் ரயிலைவிட்டு இறங்கி இன்னொரு ரயிலை பிடித்தோம். வழி நெடுக எங்கும் வண்ண வண்ண மின்சார விளக்குகள் மின்னிக்கொண்டிருந்தன. அதை தவிர சிக்னலுக்காக நிற்கும் வண்டிகளின் விளக்குகள். நான் இது போன்ற காட்சியை இதுவரை பார்த்ததில்லை. ஒரு நீளமான தெரு முழுக்க விளக்குகள். சுவரில் ஏதோ டிவி ஸ்க்ரீன் போன்ற ஒன்று படத்தை காட்டிக்கொண்டிருந்தது. அந்த தெருவில் எங்கும் இருட்டு என்பது இல்லை. குதூகலத்துக்காகவே உருவாக்கப்பட்ட தெரு போல் இருந்தது. மனிதன் சொர்க்க லோகத்தை மண்ணுக்கு கொண்டு வரும் முயற்சி இது என்று எண்ணிக்கொண்டே, “வாவ்” என்று உரக்க கூவினேன். கம்பார்ட்மெண்டில் ஒரு சிலர் என்னை திரும்பி பார்த்தார்கள். எனக்கு வெக்கமாக இருந்தது. அவளை பார்த்து, “ஐ ஆம் ஸாரி” என்றேன்.

அவள் புன்னகைத்தாள், “இட் இஸ் ஓகே. இது கின்சா. எப்பொழுதும் கோலாகலமாக இருக்கும். நான் இந்த தெருவை முதலில் பார்த்தபொழுது இப்படித்தான் கத்தினேன்” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.

“ஒ. நீ ஜபனீஸ் இல்லையா?”

மறுபடியும் சிரித்தாள். “நான் பிறந்து வளர்ந்தது ஒரு கிராமத்தில். படிப்பு முடிந்த பின் வேலைக்காக டோக்யோ வந்தேன்” என்றாள்

“ஜப்பானில் எல்லா இடங்களும் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்”

அவள் மறுபடியும் சிரித்தாள். “ஜப்பான் கிராமங்களை பார்த்தால் டோக்யோ வேறு ஒரு உலகம் என்பது புரியும்” என்றாள்

நாங்கள் இறங்கவேண்டிய கவாசாகி ஸ்டேஷனில் வண்டி நின்றது. அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்துக்கொண்டு நான் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு சென்றோம். நான் செக் இன் செய்த பிறகு அவள் கிளம்பினாள். அடுத்த நாள் காலை வந்து என்னை அலுவலகத்துக்கு அழைத்து செல்வதாக சொன்னாள்.

“எல்லா ஜப்பான் பெண்களும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். நாளை உன்னை அடையாளம் கண்டுக்கொள்வேனா என்று சந்தேகமாக இருக்கிறது” என்று சொன்னவுடன் ‘களுக்’ என்று சிரித்துவிட்டு அந்த சிரிப்போடு இரண்டு முறை சிரம் தாழ்த்தி விடை பெற்று சென்றாள்.

அடுத்த நாள் காலை அவள் வந்து என்னை அலுவலகத்திற்கு அழைத்து சென்றாள். எனக்கு ஸ்டேஷனிலிருந்து நடந்து ஹோட்டலுக்கு நடந்து செல்ல வழி காட்டுவதற்காக மாலையில் என்னுடன் வந்தாள். நாங்கள் நடந்து செல்லும் வழியில் சாலையோரமாக சற்று வயதான பெண்மணி கையில் ஒரு ஹாண்ட்பாகுடன் நின்றுக்கொண்டிருந்தாள். மூஞ்சி முழுவதும் பவுடர் அப்பியிருந்தாள். யாருக்காகவோ காத்துக்கொண்டிருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டேன்.

“ஏன் இவ்வளவு பவுடர் பூசியிருக்கிறாள்? இங்கு மற்ற பெண்கள் எல்லாம் இது போல் பூசிக்கொல்வதில்லையே. இந்த வயதில் ஏன் இப்படி மேக்கப் செய்துக்கொண்டிருக்கிறாள்?” என்று கேட்டேன்

அவள் ஏதோ சொல்ல வாயெடுத்தாள் ஆனால் ஒன்றும் கூறவில்லை. அடுத்த நாள் ஜப்பானில் ஒரு வருடத்திற்கு மேலாக வேலை செய்துக்கொண்டிருந்த முருகானந்தத்திடம் இதை பற்றி கேட்டேன். “தெரிஞ்சாலும் நீ ஒண்ணும் செய்யமாட்டே” என்று சொல்லிவிட்டு உரக்க சிரித்தான். அன்று மாலையில் நான் திரும்பி செல்லும் பொழுது வேறொரு நடுவயது பெண்மணியை அதே இடத்தில் நிற்பதை பார்த்தேன். சாலையை கடந்து எதிர்புறமாக நடந்து சென்றேன்.

இரண்டு நாட்கள் கழித்து அவள் அலுவலகத்தில் என் மேஜை பக்கம் வந்தாள். “உன் அழகான முகத்தை பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன” என்றேன். சற்று நாணினாள். இரண்டு முறை தலையை குனிந்து ‘நன்றி’ என்றாள். ‘இந்த சனிக்கிழமை ஹகானோ என்னும் இடத்துக்கு செல்கிறோம். நீ வருகிறாயா?” என்று கேட்டாள். “நீ அழைத்தால் நான் எங்கு வேணாலும் வருவேன்” என்றேன். மறுபடியும் புன்னைகத்தப்படி இரண்டு முறை தலையை குனிந்து நன்றி சொல்லிவிட்டு சென்றாள்.

சனிக்கிழமை கவாசாகி ரயில் நிலையத்தில் அவளை சந்தித்தேன். அவள் தன காதலனை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள். அவனை அறிமுகம் செய்தாள். (அவன் பெயர் எனக்கு மறந்துவிட்டது.) “யூ ஆர் லக்கி. இவ்வளவு அழகான பெண் உனக்கு கிடைத்திருக்கிறாள்” என்று சொன்னேன். அவனுக்கு ஆங்கிலம் தெரியாது என்றாள் கூபோ. சிரித்துக்கொண்டே அவனிடம் ஜப்பான் மொழியில் ஏதோ சொன்னாள். அவன் சசிரித்தபடி என்னை பார்த்து “எஸ். எஸ்.” என்றான். இருவரும் ஒரே சமயத்தில் தலை குனிந்து நன்றி சொன்னார்கள். நானும் இரண்டு முறை தலை குனிந்தேன்.

“அந்த பெண்ணை பார்த்து எப்பவும் ஏண்டா ஜொள்ளு விடற. நீ வழியறதுக்கு ஒரு அளவே இல்லையா” என்று முருகானந்தம் ஒரு நாள் என்னிடம் கேட்டன். “சும்மா இருடா. நான் ஒண்ணும் வழியாலே”. “எவ்வளவு வழிஞ்சாலும் அந்த பெண் உன்னோடு வந்து பேசறா பாரு, அதுதான் ஆச்சரியமா இருக்கு. வேற பெண்கள் ஓடியிருப்பாங்க”. “ஒனக்கு பொறாமை” என்றேன்.

நான் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியிருக்கும். ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து, காப்பி கலந்து குடிப்பதற்கு தயாராக இருந்த போது யாரோ என் அரை கதவை தட்டினார்கள். நான் இரண்வாரங்களுக்கு முன் ஹோட்டலிலிருந்து ஒரு அபார்ட்மென்ட் ரூமுக்கு மாறியிருந்தேன். யாராக இருக்கும் என்ற குழப்பத்துடன் கதவை திறந்தேன். கூபோ நின்றுக்கொண்டிருந்தாள். நான் குஷியாக “ஹாய்” என்று சொல்ல வாயெடுத்தேன். அவள் முகத்தை பார்த்தவுடன் மௌனமானேன். அவள் முகம் வாடியிருந்தது. அவளை எப்பொழுதும் இன்முகத்துடன் பார்த்தே பழகிவிட்ட எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அவள் உள்ளே வரச்சொல்ல மறந்துவிட்டேன். “உள்ளே வரலாமா?” என்றாள். “வா வா வா” என்று அவளை உள்ளே அனுப்பி கதவை மூடினேன். அவளிடம் சென்று “என்ன நடந்..” என்று கேட்கும் முன் என்னை கட்டிக்கொண்டாள். கட்டிக்கொண்டவள் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். நான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தேன். இரண்டு நிமிடங்கள் கழிந்த பின், அவள் தன்னை விடுவித்துக்கொண்டு, “ஐ ஆம் ஸாரி. வெறி ஸாரி” என்று சொல்லிக்கொண்டே மூன்று நான்கு முறை தலை குனிந்து குனிந்து வணக்கம் செய்துவிட்டு, “நான் செல்லவேண்டும்” என்று சொல்லிவிட்டு கண்ணில் நீர் தளும்ப வேகமாக சென்றுவிட்டாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இரவு முழுவதும் இதன் அர்த்தம் என்ன என்று யோசித்தபடியே வெகு நேரம் தூங்காமல் இருந்தேன்.

அடுத்த நாள் அவள் என் மேஜைக்கு வந்து எப்பொழுதும் போல் சிரித்த முகத்துடன், “என்னுடன் லஞ்ச் சாப்பிட வருகிறாயா?” என்றாள். அருகில் இருந்த ஒரு இட்டாலியன் ஹோட்டலுக்கு சென்றோம். “இங்கு ச்பாகேத்தி அருமையாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு இருவருக்கும் அதை ஆர்டர் செய்தாள். பிறகு, “நேற்று நடந்ததை மன்னித்துவிடு. ஏன் காதலன் என்னை விட்டு பிரிந்து விட்டான். எங்களுக்குள் நேற்று பெரிய சண்டை வந்தது. கடைசியில் அவனை நான் வேணாம் என்று சொல்லிவிட்டேன். அவனும் நீ இல்லாமல் என்னால் இன்னும் நன்றாக வாழ முடியும் என்று சொல்லிவிட்டு சென்றான். எனக்கு அப்பொழுது யாரிடமாவது சென்று அழ வேண்டும் போல் இருந்தது. உன் ஞாபகம் வந்ததால் உன்னிடம் வந்தேன்” என்றாள். “ஒ. அப்படியா? எதற்காக உங்களுக்குள் சண்டை?” என்றேன். “காதலர்களுக்கு சண்டை சகஜம் தான்” என்றாள். “என்ன சண்டை?” என்று மறுபடியும் கேட்டேன். “நத்திங்” என்றாள்.

அவளை தினமும் பார்க்க ஆரம்பித்தேன். ஏதோ என்னுடன் இருக்கும் பொழுது அவளுக்கு மன நிம்மதி கிடைக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். அவளும் மறுபடியும் எப்பொழுதும் போல் சிரித்தபடி பழகினாள்.

ஒரு நாள் இரவு டின்னெருக்கு அவள் வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு ஜபனீஸ் ரெஸ்டாரன்டுக்கு சென்றோம். எங்களுடன் அவள் தோழி ஒருத்தி வந்தாள். அவர்கள் ஏதோ ஆர்டர் செய்தார்கள். நான் “எனக்கு வெஜிடேரியன் ஆர்டர் செய்யுங்கள்” என்றேன். “ஒ. நீ வெஜிடேரியனா?” என்று அந்த தோழி கேட்டாள். “இல்லை. ஆனால் ஜப்பானில் மாமிசம் சாப்பிடுவது கடினமாக இருக்கிறது. உப்பு காரம் எதுவும் இருப்பதில்லை. எங்கள் ஊரில் நல்ல மசாலா கலந்த சாப்பட்டை சாப்பிட்டுவிட்டு இங்கு இதை சாப்பிட முடியவில்லை. இந்த விஷயத்தில் எங்கள் ஊர் உங்கள் ஊரைவிட மேலானது” என்றேன். அந்த தோழி சிரித்தாள். “எந்த ஒரு பண்டத்த உண்ணும் போதும் அதன் சுவை தான் நாம் அறிய வேண்டும். எங்கள் சமையல் இந்த  கொள்கையை கொண்டது. நீங்கள் எல்லா பண்டங்களிலும் மசாலா சுவையை தான் காண்கிறீர்கள். அதற்கு தான் உங்களால் உண்மையை சட்டென்று கண்டு பிடிக்க முடிவதில்லை. எல்லாவற்றையும் மசாலா மறைக்கிறது” என்று கூறிவிட்டு சிரித்தாள். “அவள் தத்துவத்தில் டாக்டரேட் வாங்கியவள். அதனால் அப்படி பேசுகிறாள். நீ தவறாக நினைக்காதே” என்றாள் கூபோ. “அப்படியில்லை. இந்தியாவில் உண்மையை பற்றி ஆராய்ந்த பல தத்துவ ஞானிகள் இருக்கிறார்கள். வேதம் கொடுத்த ரிஷிகள், சங்கரர், ராமானுஜர், மாதவசாரியார்” எனக்கு இவர்கள் எல்லாம் என்ன சொன்னார்கள் என்று தெரியாவிட்டாலும் எல்லா பெயர்களையும் அடுக்கினேன். “இவர்கள் எல்லாம் மாமுனிவர்கள்” என்றேன். “அவர்கள் மசாலா இல்லாத சாப்பட்டை சாப்பிட்டிருப்பார்கள்” என்று கூறிவிட்டு அந்த தோழி சிரித்தாள்.

“அவள் சொல்லுவதெல்லாம் நீ பொருட்படுத்தாதே. அவள் எப்பொழுதும் அப்படிதான் எல்லோருடனும் வாக்குவாதம் செய்வாள்”. டின்னருக்கு பின் கூபோவுடன் அவள் வீட்டிற்கு வந்திருந்தேன். இரவு மணி பதினொன்று ஆகியிருந்தது. “அதை விடு. அதை நான் அப்பொழுதே மறந்துவிட்டேன்” என்று சொல்லிவிட்டு விளையாட்டாக, “உனக்கு அடுத்த காதலன் கிடைத்தானா இல்லையா?” என்று கேட்டேன். அவள் சிரித்துக்கொண்டே, “விரைவில் கிடைப்பான் என்று நம்புகிறேன்” என்று சொல்லிவிட்டு என்னை பார்த்தாள். “உன் போன்ற அழகான பெண்களுக்கு காதலர் கிடைக்கவில்லை என்றால் என்ன தேசம் இது. ஜப்பானிய ஆண்களுக்கு அழைகை மதிக்க தெரியாது போலிருக்கிறது”. “ஜப்பானிய காதலான் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லையே” என்றால். “அதவும் சரிதான். இங்கு அமெரிக்கர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்” என்றேன். “சரி, நான் கிளம்பவேண்டும். விடை பெறுகிறேன்”.

“மணி பதினொன்றை தாண்டிவிட்டது. நீ இங்கேயே படுத்துக்கொள். நாளை சண்டே தானே. மெதுவாக எழுந்து ரூமுக்கு செல்லலாம்” என்றாள். “ஐயோ வேண்டாம். நான் இங்கு இருந்தால் பக்கத்தில் இருப்பவர்கள் ஏதாவது தவறாக நினைத்துக்கொள்வார்கள்.” “இங்கு யாரும் ஒன்றும் நினைத்துக்கொள்ளமாட்டார்கள். அவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை.” “ஆனால் எனக்கு உன்னை பற்றி கவலை இருக்கிறது. யாரும் உன்னை பற்றி தவறாக நினைக்ககூடாது. நான் இப்பொழுது செல்கிறேன். நாளை ஆபீஸில் சந்திப்போம்” என்று புறப்பட்டேன். செல்லும் முன், “நீ இந்த ட்ரஸில் ஒரு ஏஞ்சல் போல் இருக்கிறாய்” என்றேன். அவளுக்கு மகிழ்சியை அடக்கிக்கொள்ள முடியவில்லை. என்னை சட்டென்று கட்டிக்கொண்டு ‘தாங்க்யு, தாங்க்யு” என்றாள்.

நாங்கள் தினமும் சந்திப்பதும், ஒன்றாக சாப்பிட போவதுமாக இன்னும் ஒரு மாதம் கடந்தது. டோக்யோவில் பல இடங்களை எனக்கு காட்டினாள். இப்பொழுது நான் இந்தியா திரும்பும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. “நீ சென்று விட்டு மறுபடியும் வருவாயா?” என்று கேட்டாள். “ஆம். ஒரு மாதம் கழித்து வரவேண்டும். வந்து இங்கு மூன்று மாதம் வேலை செய்யா வேண்டும்”

“அப்படியென்றால் இந்த பிரிவு நிரந்தரமில்லை” என்று சிரித்துக்கொண்டே கூறினாள். “நீ செல்வதற்கு முன் நான் உன்னால் மறக்கமுடியாத பரிசு ஒன்றை கொடுக்க போகிறேன்.”

“அப்படியா. என்ன அது”

“நீ ஊருக்கு என்று கிளம்புகிறாய்?”

“வரும் சனிக்கிழமை”

“நான் வெளிக்கிழமை மாலை உன் ரூமுக்கு வந்து அந்த பரிசை கொடுக்கிறேன்”

வெள்ளிகிழமை மதியம் நண்பன் மோகன்ராஜ் ரூமுக்கு வந்திருந்தான். நான் பாக் செய்ய உதவி செய்துவிட்டு அடுத்த நாள் வழி அனுப்பிவிட்டு செல்வதற்காக வந்திருந்தான்.

மாலை ஏழு மணி அளவில் அழைப்பு மணி ஒலித்தது. கதவு சற்று திறந்து வைத்திருந்தேன். கதவை திறந்து கூபோ ரூமுக்குள் நுழைந்தாள். வேகமாக என்னை நோக்கி வந்தாள். அவள் ரொம்ப மகிழ்சியாக இருந்தாள் என்று அவள் முகம் காட்டியது. அப்பொழுது பாத்ரூமை விட்டு மோகன்ராஜ் வெளியே வந்தான். அவனை கண்டதும் அவளுக்கு தூக்கி வாரி போட்டது போல் இருந்தது.

நான் உரக்க சிரித்துவிட்டேன். “பயப்படாதே. இவன் என் நண்பன். என்னுடன் இன்று இரவு இருந்துவிட்டு நாளை என்னை வழியனுப்ப வந்திருக்கிறான்.”

“ஒ” என்றாள். அவள் முகத்தில் மகிழ்ச்சி மறைந்து விட்டிருந்தது. பயத்திலிருந்து இன்னும் அவள் மீளவில்லை என்று நான் நினைத்துக்கொண்டேன்.

நான் சாமான்களை பெட்டிக்குள் அடக்கிக்கொண்டு அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவள் அதிகம் பேசவில்லை. ஊர் திரும்பி செல்லும் உற்சாகம் என்னிடம் இருந்தது. நான் பேசிக்கொண்டே வேலையை பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஞாபகம் வர, “நீ ஏதோ எனக்கு அன்பளிப்பு கொடுக்க போவதாக சொன்னாயே? என்ன அது” என்றேன்.

அவள் முகம் குழப்பத்தில் இருந்தது போல் எனக்கு தோன்றியது. அவள் தன் கைப்பைக்குள் தேட ஆரம்பித்தாள். ஒரு பேனாவை எடுத்து, “இது நான் சிறு வயது முதல் உபயோகித்த பேனா. இதை பத்திரமாக வைத்துக்கொள்” என்றாள். நான் மறக்கமுடியாத பரிசு என்றால் ஏதோ காஸ்ட்லி ஐடம் இருக்கும் என்று நினைத்தருந்தேன். இதை கண்டவுடன் எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அது என் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும், “உனக்கு பிடிக்கவில்லையா?” என்று கேட்டாள். “இல்லை இல்லை நன்றாக இருக்கிறது”, என்றேன்.

“நான் குளித்துவிட்டு வருகிறேன். நீ எங்களுடம் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு செல்” என்றேன். “இல்லை நான் இப்பொழுது கிளம்ப வேண்டும். எனக்கு வேறு வேலை இருக்கிறது”.

நான் லுங்கியில் இருந்ததால் மோகன் அவளுடன் வெளியே சென்றான். அவளை ஸ்டேஷன் வரை விட்டுவிட்டு வருவதாக சொன்னான். நான் குளித்துவிட்டு வெளியே வந்தபொழுது மோகன் ரூமில் இருந்தான். “ஏன்டா. அந்த பெண் ரொம்ப கோவத்துல இருந்தா. என்னை கூட வரவேண்டாம்னு ரொம்ப கறாரா சொன்னா. அவ குரலை கேட்டா அழுதுவிடுவா போல இருந்தது. சரின்னு நான் அவளோட போகல”

“அவ எப்போவும் சிரிச்ச மாதிரி தான் இருப்பா. கோவமா எதுவும் பேசமாட்ட. நீ எதாவது அவகிட்ட பேசினாயா?”

“நான் பேசவே இல்லடா”

இந்தியாவுக்கு திரும்பிய பிறகு கூபோவுடன் தொடர்பு அறுந்து போனது. என்னை வேறு ப்ராஜெக்ட்டுக்காக அமெரிக்கா அனுப்பினார்கள். மூன்று வருடங்களுக்கு மேல் அமெரிக்காவில் வேலை செய்தேன். ஒரு நாள் மதியம் உணவு உண்ணும் பொழுது சட்டென்று அவள் எதற்காக அன்று மோகனிடம் கோபமாக பேசினாள் என்பது புரிந்தது.

 

 

 

  நெடுஞ்சாலைப் பறவை – கமல தேவி சிறுகதை

கமல தேவி

மே வெயிலின் தாக்கம் காலையிலேயே தொடுகையென உறைத்தது. மெத்தையிலிருந்து எழுந்து சேலையை சரிசெய்து விடுதியின் முதல்தளத்தின் நடைபாதையில் வந்து நின்றேன். தொடுதிரையில் மாறும் நிறமென வானம் சட்டென்று ஔிக்கு மாறியது.

கிழக்கே பள்ளி மைதானத்தில் நாலைந்து ஆட்கள்  பந்தலைப் பிரித்து பின்னிய தென்னங்கீற்றுகளை ஒன்றின் மேலொன்றாக அடுக்கிக்  கொண்டிருந்தார்கள். தன்வசமில்லாத வேகத்தில் ஒருபயல் ஔியிலிருந்து ஏறுபவன் போல ஒரு தூணில் ஏறினான். கீழே ஔி ஒரு குளமென நின்றது. கையிலிருந்த கண்ணாடியை சேலைத் தலைப்பால் துடைத்து கண்ணில் மாட்டிக் கொண்டேன். பயலுக்கு கரிய மின்னும் முகம். அடர்ந்து படியாமல் தலைமுடி தலையைவிட தனியாகத் தெரிகிறது.

எனக்கான விழாவிற்கான பந்தல். இது போலொரு பந்தலை என் இருபத்தைந்து வயதில் வீட்டில் எனக்காக போட அப்பா ஆசைப்பட்டார். அறுபதை நெருங்கும் இந்தத் தருணத்தில் அன்று அறுபதிலிருந்த அப்பாவைப் புரிகிறது. இன்னேரம் எங்கோ சேலையை வரிந்து கொண்டு என் பேரப்பிள்ளைகளுக்காக அலைந்து கொண்டிருக்கலாம். எங்கு? என்று நினைத்ததும் அப்பா பார்த்த வரன்கள் சில பெயர்களாக நினைவிற்கு வந்தன.

கல்லூரிக்கு கிளம்புகையில் பெல் குடியிருப்பின் வெளித்தாழ்வாரத்தில் நாற்காலியில் அமர்ந்தபடி அடிக்கடி மாமா சொல்வார், “இந்த வயசில  பசங்க யாரையாவது பிடிக்கலாம் ஜென்ஸி… அவனை ஏன் பிடிக்குதுன்னு யோசிக்கனும்?”

“இல்ல மாமா,” என்று சொல்லிவிட்டு திரும்பி சிறிய சுவர் கண்ணாடியில், முகத்தில் பவுடர் அதிகமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வேன்.

“ கோபம் வருதில்ல? அதோட என்னோட கேள்வி புரியலதானே?”

“ஆமாம் மாமா.புரியல… என் மேல நம்பிக்கயில்லைன்னு எரிச்சலா வருது”

“எரிச்சல் வந்தா பரவாயில்ல. ஒன்ன நெனச்சுப் பாரு… ஒன்னோட ஒடன்பிறந்த ஐஞ்சு பேருக்கு கிடைக்காத படிப்பு உனக்கு வாச்சிருக்கு. அத வச்சி எதாவது செய்யனுன்னு தோணனும்,” வடிவான நாசியை தேய்த்தபடி ஆறடியில் குனிந்து அமர்ந்திருப்பார்.

“வேலைக்கு போறேன் மாமா”

“நான் சொல்றது அதில்ல ஜென்ஸி. நேரமாச்சு கெளம்பு,” என்பார். காலை வேளைகளில் வெளியில் செல்கையில்தான் இப்படியான பேச்சுகளைத் தொடங்குவார்.

வீட்டுக்கு வருகிறவர்கள் போகிறவர்கள் அந்தக் கண்ணாடியை பார்க்காமல் செல்வதில்லை. அத்தை, “யாரு வீட்லவாவது செருப்புகழட்ற எடத்துல கண்ணாடி உண்டா?,” என்று சலித்துக் கொண்டால் மாமா, “வீட்டுக்குள்ள நிழலாடுது… இல்லன்னா லைட்டு பளீர்ங்குது… இங்க பாத்தா நம்ம முகம் சரியா தெரியுதில்ல,”என்பார்.

ஞாயிறு கோவிலுக்கு போகையில் வருகையில் அத்தை, “ஜென்ஸிக்கு கிளாரா பையனை பாக்கலாமா?” என்று ஒவ்வொரு தடவையும் கேட்கையில் மாமா முகத்தைச் சுருக்கி, “படிக்கட்டும்…” என்பார்.

“படிச்ச பின்னதான்… நம்ம பக்கத்திலயே வச்சிக்கலாமில்ல?” என்று அத்தை திரும்பி மாமாவின் முகத்தைப் பார்த்து வாயை மூடிக் கொள்வார்.

படித்து முடித்து வேலைக்கு இங்கு வந்து சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் மீண்டும் வீட்டிலிருந்து திருமண பேச்செழுகையில் நான், “வேணாம்…” என்றதும் “ஒன்னூ கன்னியாஸ்திரியா போனும்… இல்ல கல்யாணம்,” என்ற வாதம் வருகையில், “நான் எதையும் துறக்க முடியாது. தள்ளி வைக்கதான் முடியும்,”என்று சொல்லுகையில் மாமா புன்னகைத்தார்.

அப்படியே ஆண்டுகள் உடன்பிறந்தாரின் திருமணத்தோடு ஓடிக் கடந்தன. கடைசி படுக்கையில் மாமா, “கிளாரா பையனை வேணான்னு மறைமுகமா சொன்னது எதுக்குன்னா… அவன் உன் ஒசரத்துக்கு, பாந்தத்துக்கு நிக்க மாட்டான்னுதான்… யாரோ உண்டுல்ல?”

“அதுக்கு இப்ப என்ன மாமா?”

“நீ என்னம்மா நெனச்சுக்கிட்டிருக்க?”

“சரியா தெரியல மாமா… நீங்கதானே சொன்னீங்க? ஏதாவது செய்யனுன்னு…”

“அதனால…”

“முழுசா செய்யனுன்னா தனியாதான் இருக்கனும்”

“யாரு அப்படி சொன்னாம்மா?”

“மனசு சொல்லுது மாமா”

“குடும்பத்துல சுயநலவாதின்னு பேர் வாங்கப்போற”

“பரவாயில்ல. என்னை உணர்த்தின நீங்க புரிஞ்சிக்கிட்டா போதும்,” என்றதும் மாமா மேலே எதுவும் பேசவில்லை. தலையில் கை வைத்து, “எந்த வயசிலயும் இந்த முடிவு துயரம் தராததா இருக்க கர்த்தர் கூட இருக்கட்டும்,” என்றார்.

கீழே ஜெனிட்டா சிஸ்டர், “டீச்சர்… நாங்க கோயிலுக்கு போயிட்டு வரோம். குளிச்சிட்டு சாப்பிட்டு இருங்க. நாங்க வந்திடறோம்,” என்றார்.ஜெனிட்டாவுக்கு முப்பத்தைந்து வயதிருக்கலாம். காவிப் புடவை அத்தனை சரியா பொருந்துகிறது. அவரின் பழக்கமில்லாத பழுப்புக் கண்கள் யாரும் சொல்லாத எதையோ எதிர்நிற்பவரிடம் பேசுகையில் சொல்லும். சிஸ்டர் அவர்களுடன் நடந்து பள்ளி வாயிலைக் கடந்து இருபுறமும் வயல்கள் சூழ்ந்த பாதையில் நடந்து செல்வது தெரிந்தது. இன்றும் ஊருக்குள் நடந்து செல்ல வேண்டியிருக்கும் இடம்.

கல்லூரி முடித்ததும் வேலை என்று இங்கு அழைத்து வந்த அன்று, ஆளில்லாக் காடு என்று இருந்தது. நீண்ட ஒற்றைக் கட்டடம். கொஞ்சம் தள்ளி தங்குவதற்கு இரண்டு சிறிய தகரம் வேய்ந்த கட்டடங்கள். பல ஆண்டுகளுக்கு எங்கோ பெரிய கங்குக்கு பக்கத்தில் இருப்பதைப் போன்றே இருந்தது.

மேற்கே தேவாலய கோபுரமும், அதன் பின்னால் கொல்லிமலையும், வீட்டின் பொருளாதாரமும் பிடித்து வைத்திருந்தன. தேவாலய மைதானத்திலிருக்கும் கெபியில் மத்தலேனாளின் எதையோ இறைஞ்சும் கரங்களும் கண்களும், பாதி மண்டியிட்டும் மீதி பின்னால் செல்லத் துடிக்கும் கால்களையும், விரிந்த கூந்தலையும் பார்த்துக் கொண்டேயிருந்த ஒரு கோடை விடுமுறை நாளில் தனித்தேயிருப்பது என்று உறுதியாக மனதிற்கு சொல்லிக் கொண்டேன். சிலையென்றாலும் மத்தலேனாலுக்கு கேட்டிருக்கக்கூடும் என்று அடிக்கடித் தோன்றும்.

முதலாண்டிலேயே படிக்க வந்த பெண்பிள்ளைகளின் திடுக்கிடும் விழிகளும், நீர்மை கொண்ட கண்களும், அவர்களின் தகப்பன்மார்களும் தாய்மார்களும், அவர்களின் சுபாவமும் மனதை தொந்தரவு செய்து கொண்டேயிருந்தன. பிள்ளைகள் பத்தாவது தேறி வெளியேறி ஆசிரிய பயிற்சிக்கும், சேவா வேலைக்கும், சத்துணவு பணிக்கும் செல்லத் தொடங்கியதும் எனக்கு தனிமை மறந்து, ஒட்டிக்கொண்ட  மகிழ்ச்சியும் துள்ளலும், வீட்டையும் ஊரையும் மறக்கச் செய்தது.

இத்தனை ஆண்டுகளில் துள்ளல் மாறி ஒரு அமைதி வந்திருப்பதன்றி வேறு ஒன்றும் பெரிதாக மாறவில்லை. நேற்றோடு இங்குள்ள அனைத்திற்கும் நிறைவு விழா. எங்கு சென்றும் மீண்டு வர இங்கு என்று ஒன்று இருந்தது. இங்கிருந்து எங்கு செல்ல? இங்கு வர அங்கு விட்டு வந்த எதுவும் இன்று அங்கில்லை. அங்கு நான் ஒரு விருந்தாளி மட்டுமே என்று நன்றாகத் தெரியும். நீண்ட நேரம் நின்றதால் கால்கள் நடுங்குவதை உணர்ந்ததும் மெதுவாக படிகளில் இறங்கி கழிவறைக்கு சென்றேன்.

உணவு அறைக்கு சென்றதும் அமலி, “ டீச்சர்… இன்னக்கி எழுந்திருக்க  லேட்டாயிடுச்சோ?” என்றபடி டீ கொண்டு வந்தாள். நீள் மூக்குக்கும், அவள் நிறத்திற்கும் சிறிய பொட்டு வைத்தால் மறுமுறை பார்க்க வைக்கும் அழகி. எத்தனை முறை சொன்னாலும் சரி என்பாள், வைக்க மாட்டாள். டீயைக் குடித்து விட்டு மைதானத்து எல்லையோரமாக நடக்கத் தொடங்கினேன்.

கையிலிருந்த அலைபேசியில் ஐெயராக்கினி அழைத்தாள்.

“கோயமுத்தூருக்கு எப்பக்கா வர்ற? அழச்சிட்டு போக மாமாவோட எப்ப வரட்டும்?”

“புதுசா என்ன ஜெயா? நான் வர மாட்டனா?”

“நீ எங்ககூட வந்திருக்கா… பிள்ளைங்க ஆளுக்கொரு திசையில நிக்குது. நிம்மதியில்ல…அவரும் ரிடையர்டு ஆகி வீட்ல இருக்காரு. கடைசி காலத்திலயாவது சேந்திருக்கலாம். மாமாட்ட பேசு…”

“ஜென்ஸிமா… எப்ப வரட்டும்?”

“வேணாம் மாமா. நானே வர்றேன்”. வைப்பதற்குள் தம்பிகள் அழைத்தார்கள். அவர்களும் கிட்டத்தட்ட அதையே பேசி வைத்தார்கள். அப்பா எனக்கு எழுதி வைத்த தென்னந்தோப்பை தம்பிகளுக்கு மாற்ற வேண்டும்.

காலைவெயில் உறைத்தது. முந்தானையை செருகிக்கொண்டு முடியை அவிழ்த்து கொண்டையிட்டபடி நடந்தேன். தெற்குபக்க கம்பிவேலியைப் பிடித்தபடி நின்றேன்.

தினமும் பார்க்கும் ராசுதான். என் வயதிருக்கலாம். இங்கு வந்த காலத்தில் அனைத்திற்கும் பயந்திருந்த நாட்களில் இவருக்கும் பயந்திருந்தேன். இவரின் மகள் என்னிடம் படித்தபோதுதான் எத்தனைக்கு வாஞ்சையான மனுசன் என்று தெரிந்தது. அவர் மண்வெட்டியை போட்டுவிட்டு வந்தார். தலைப்பாகட்டை அவிழ்த்து தோளில் போட்டுக் கொண்டார்.

“வாங்கம்மா. நேத்தோட வேலையிலருந்து விடுவிச்சுட்டாங்களாமே? ஊருக்குள்ள போஸ்டரு ஒட்டியிருந்தாங்க. பள்ளிக்கூடத்தில விருந்துன்னு சொன்னாங்க,” என்றார். வியர்வை முகத்தில் வழிய கைகள் இரண்டையும் அவர் சேர்த்து பிடித்துக் கொண்டு பேசினார்.

“ஆமாங்க,”என்ற என் இயல்பான தன்மை அவரை பேசத் தூண்டியிருக்க வேண்டும்.

“கட்டாத மயிரும், உங்க நெறமும் பாத்து மலையாளத்தாளுகன்னு நெனச்சிருந்தேனுங்க”

நான் வழக்கத்துக்கு மாறாக புன்னகைத்தபடி, “பக்கத்திலதான்,” என்றேன்.

“செத்த இருங்க…” என்று அருகிலிருந்த வேம்படியில் வைத்திருந்த சிறு பையிலிருந்த வெள்ளைத் துண்டை எடுத்து இரு கைகளிலும் ஏந்தி, “எடுத்துக்கங்கம்மா… இங்கன எப்பவும் வருவீங்கங்கன்னு பாத்திருந்தேன்,” என்றார். எடுத்துக் கொண்டபடி அவர் முகத்தைப் பார்த்து புன்னகைத்தேன்.

“பெத்தவங்க உண்டா?” என்றார்.

“இல்ல”

“மிச்சசொச்ச நாளுக்கு எங்கனு போகலானிருக்கீங்க? காலம் கெடக்கற கெடப்பில காச வச்சிக்கிட்டு, நோய வச்சிகிட்டு தனியா கெடக்கறது நல்லதில்ல”

“ம்..தம்பியோ, தங்கச்சியோ?”

“சரிதானுங்க… எனக்குத் தெரிஞ்சி பொறந்தவக்கூட இருந்துக்கறது நல்ல கூறு”

மெதுவாக சிந்தனையில் தலையாட்டியபடி , “போயிட்டு வரேங்க. பாத்து இருங்க,” என்றேன்.

“சரிங்கம்மா. எங்கன்னாலும் நல்லாயிருப்பீங்க… எத்தன பிள்ளைங்கள கரையேத்தி விட்டுருக்கீங்க…” அவர் மேலும் எதும் சொல்வதற்குள் தலையாட்டிவிட்டு நடந்தேன். மூச்சு வாங்குவதை உணர்ந்தவுடன் மரத்தடியில் நின்றேன். புங்கையில் பழுத்த இலைகள் தவிப்பதைப் பார்த்தபடி கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தேன்.

சுற்றி வந்து குழந்தை யேசு சிலையருகேயிருந்த பன்னீர் மரத்தடி பெஞ்சில் உட்காருகையில் நன்றாக வியர்த்து நனைத்திருப்பதை உணர்ந்தேன்.

“அமலி… மோட்டாரைத் தட்டி விடு,” என்று குரல் கொடுத்தேன். தண்ணீர் குழாயை குழந்தை யேசுவை வட்டமாக சுற்றி நின்றிருந்த பூச்செடிகளின் நடுவில் வைத்தேன். வந்து நின்ற அமலியிடம், “இந்த மொட்ட வெயிலிலும்  பூத்திருக்கா பாரு…” என்று கனகாம்பரத்தைக் காட்டிவிட்டு, நிமிர்ந்து மாதா கெபியை, பள்ளிக்கட்டடங்களை, நடைபாதைகளை, படிகளை மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென்று எழுந்து குளித்துவிட்டு சந்திராவுக்கு போன் செய்து டாக்ஸி அனுப்பி வைக்கச் சொன்னேன்.

அய்யாவுவை அழைத்து மேலே நடைபாதையில் வைத்திருந்த பெட்டிகளை கீழே வைக்கச் சொல்லிவிட்டு ,காலை உணவை முடித்துவிட்டு, அங்கிருந்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுத்துவிட்டு வெளியே வந்தேன்.

சிஸ்டர்கள் கோவிலிலிருந்து வந்திருந்தார்கள். அவர்களிடம் விடை சொல்லிவிட்டு காரில் ஏறுகையில் ரோசி, ”டீச்சர் மதியானம் சாப்பிட்டுக்கங்க,”என்று வாழையிலை பொட்டலத்தைக் கொடுத்தாள். இவள் கொஞ்சம் கவனமாக படித்திருந்தால் ஏதாவது ஒரு வேலைக்கு தள்ளி விட்டிருக்கலாம்.

அய்யாவு,”திருச்சியில ரயிலில் ஏத்தி விட்டுட்டுதான் வரனும்,”என்று ஓட்டுனரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“நம்ம பையன்தானா! வண்டிய பாத்து ஓட்டனும். கோவில்ல பியானோவ சட்டுன்னு தூக்கறாப்பல செய்யக்கூடாது,” என்றதும்  டென்னிஸ் தலையாட்டி சிரித்தான். அய்யாவுவிடம் ஒரு போர்வை பார்சலைக் கொடுத்து, “ வச்சுங்க,” என்றபடி காரில் ஏறினேன்.

ஐெனிட்டா சிஸ்டர், “இறங்கினதும் போன் பண்ணிடுங்க. திருச்சி வரைக்கும் வரலான்னா… வேணாங்கறீங்க,” என்றார்.

“நேத்தே முடிஞ்சிருச்சில்ல சிஸ்டர். உங்க வேலய தொடங்குங்க. மறுபடியும் மனசு தளும்பும். வர்றேன்,” என்று அனைவரையும் பார்த்து புன்னகைத்தேன். கார் கிளம்பி நின்றவர்களைக் கடந்து பன்னீர் மரத்தை, குழந்தை யேசுவை, புங்கை மரத்தை, அசோக மரத்தைக் கடந்து வாயிலில் வெளியேறிக் கொண்டிருந்தது.

அலைபேசி அழைத்ததும் எடுத்து, “கிளம்பிட்டேன். சாயங்காலம் வந்திடுவேன்,” என்றேன். மாறி மாறி பேசிய நீண்ட பேச்சில்தான் எனக்கு வழக்கம் போல புரிந்தது அவர்களுக்கு என் மொழி கொஞ்சம் விளங்கவில்லை என்று.

ஊருக்குள் தேவாலயத்தின் முன் வண்டியை நிறுத்த சொன்னேன். சந்திராவுடன் உள்ளே சென்று அமர்ந்தேன். சிறிது நேரத்திற்குப் பின் எழுந்து வெளியே வருகையில் பெர்க்மான்ஸ் சிஸ்டர் எதிரே வந்தார்.

“கிளம்பிட்டிங்களா? கடைசியா ஒரு தரம் என்கிட்ட  செக்கப் பாத்துட்டு போலாமே”

“நல்லாயிருக்கேன் சிஸ்டர்”

“கிளம்பியே ஆகனுன்னு அவசரமில்லையே…”

“உங்க மாதிரி துறந்து வரலயே. வேலைக்காகதானே… முடிஞ்சதும் கிளம்ப வேண்டியதுதான்,” என்று சிரித்தேன்.

“ மறக்க முடியாத ஒன்ன துறக்கறது எப்படி? முழுசா மறந்தா அது அல்சைமர் மாதிரி ஏதோ ஒன்னு… எதில இருந்தும் கொஞ்சம் தள்ளி இருக்கத்தான் மனுசங்களால முடியும். முழுமையான வேலையும் அர்ப்பணிப்புதான்னு உணராமையா இத்தன வருஷம் தனியா இங்கயே இருந்த?  கர்த்தர் உடனிருக்கட்டும்…,”என்று புன்னகைத்து அவரின் ஜெபமாலையைக் கொடுத்துவிட்டு தேவாலயப் படிகளில் ஏறினார். மேல்படியில் சந்திரா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நடந்த வழிகளில் மல்லிகை அடர்ந்து வெண் சிறு சங்குகளாய் பூப்பித்திருந்தது. மொட்டுகள் நீண்டு திரண்டிருந்தன. காரை நோக்கி நடந்தேன். டென்னிஸ் புன்னகையாடு காரை எடுப்பதாக சைகை காட்டி கதவைத் திறந்தான். வழியில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கத்தில் வண்டி நிற்கையில் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கவாட்டில் சாலையோரத்து மரத்தின் உச்சிக் கிளையில் ஒரு கூடு இருந்தது. எந்தப் பறவையினுடையது? இந்த இடம் எந்த வகையில் அதற்கு பாதுகாப்பானது?  வண்டி நகரத் தொடங்கியது. கண்களில் அந்தக் கூடு மட்டுமே வியாபித்திருந்தது. மெல்லிய காற்று எதிர்த் திசையில் கடந்தது. ஔி கடந்தது. நிழல் கடந்தது. கூடு…கூடு. மத்தலேனாள் இறுதியில் மலைக் குகையில் காத்திருந்தாள் என்று கதைகள் உண்டு. கண்களை மூடித் திறந்தேன். இந்த வண்டி ஒரு குகையென தோன்றியது. நெடுஞ்சாலையில் நகரும் குகை. முன்னால் கண்ணாடி வழி என் முகம் பார்த்த டென்னிஸ், “எதாவது வேணுமா டீச்சர்?” என்றான். இல்லையென தலையாட்டினேன். பேசிக் கொண்டே வண்டி ஓட்டினான். கண் முன்னால் நெடுஞ்சாலை கடந்து கொண்டிருந்தது.

 

 

 

 

 

துப்பறியும் கதை – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

‘மண்டே மார்னிங்கே என்னய்யா ப்ரச்சன,’ வண்டியிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் கேட்டதற்கு கேட்டருகில் நின்று கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர், ‘சடன் டெத் ஸார்,’ என்று பதிலளித்தார்.

வீட்டின் மீது பார்வையைச் செலுத்தினார் இன்ஸ்பெக்டர். ‘என்னாச்சு?’

‘அறுபத்தஞ்சு வயசு மேல் ஸார், வைப் நோ மோர். பையன் பிரான்ஸ்ல இருக்கார். ரெண்டு வீடு தள்ளி சொந்தக்கார பையன்தான் வேணுங்கறத கவனிச்சுக்குறான், வீட்டு வேலை செய்யறதுக்கு ஒருத்தங்க வராங்க. அந்தம்மா எப்பவும் போல இன்னிக்கு ஆறரை மணிக்கு வேலைக்கு வந்திருக்காங்க. பெல் அடிச்சும் கதவை தொறக்கலைன்னவுடனே ரிலேடிவ்கிட்ட சொல்லிருக்காங்க. அவர் தன்கிட்ட இருந்த சாவிய வெச்சு தொறந்து பாத்தா, ஓனர் பெட்ல டெட். ஒடனே இன்பார்ம் பண்ணிடாங்க’

‘நம்ம டாக்டர் வந்து பாத்தாச்சா?’
‘இன்னும் இல்ல ஸார். அவங்கதான் ரிலேடிவ் அண்ட் வேலை செய்யறவங்க’ என்ற சப்-இன்ஸ்பெக்டர் இருவரையும் அருகில் அழைத்தார். வேலைக்காரம்மா புதிதாக எதுவும் சொல்லவில்லை. சொந்தக்காரர், ‘நா நேத்து நைட் மெடிசன் வாங்கித் தந்துட்டு கெளம்பறதுக்கு முன்னாடி பேசிட்டிருந்தாரு. ரொம்ப லோன்லியா இருக்குப்பா, பேரன பாக்கணும்னு ரொம்ப வருத்தப்பட்டார், அதுக்காக சூசைட் பண்ணிப்பார்னு நெனக்கவே இல்லை ஸார்’ என்று அழுதார்.

‘நீங்க இங்கயே இருங்க, பாடி எங்க இருக்கு?’

பெரிய படுக்கையறை. உடலின் அருகில் சென்று பார்த்தார் இன்ஸ்பெக்டர். எந்த துன்புறுத்தலுக்கும் ஆளானது போல் தெரியவில்லை.

‘சந்தேகப்படும்படியா எதுவும் இல்லை ஸார், ஒரு பார்மாலிட்டிக்கு ஒங்களுக்கு இன்பார்ம் பண்ணினோம்’

‘அப்டி ஈஸியா எடுத்துக்காதய்யா , இதுதான் வாசகர்கள் படிக்கற பர்ஸ்ட் கேஸ், நெறைய பேர் பார்வை நம்ம மேல இருக்கு’

‘நெறைய பேர் படிக்காறாங்களா…’

‘என்னய்யா’

‘ஒண்ணுமில்ல ஸார்’

‘பர்ஸ்ட் இம்ப்ரெஸ்சன்தான் முக்கியம், எதாவது சொதப்பிட்டோம்னு வெச்சுக்க, லிடிரரி சூசைட்தான்’

சப்-இன்ஸ்பெக்டர் பதிலெதுவும் சொல்லவில்லை. அறையைச் சுற்றி வந்தார் இன்ஸ்பெக்டர். கட்டிலுக்கு அருகே இருந்த மேஜையில் நேற்றைய தினசரி, வாட்டர் பாட்டில். குனிந்து கட்டிலுக்கு அடியில் பார்த்தார். ‘ஸ்ட்ரேஞ்’ என்றபடி எழுந்தவரிடம், சப்-இன்ஸ்பெக்டர், ‘என்ன ஸார் தேடறீங்க’ என்று கேட்டார் .

‘இந்த ரூம்ல இருக்க வேண்டிய ஒண்ணு இல்லைன்னு கவனிச்சீங்களா?’.

இல்லையென்று தலையாட்டினார் சப்-இன்ஸ்பெக்டர்.

‘ரொம்ப கேர்புலா அப்சர்வ் பண்ணுங்க. டாக்டர் இன்னும் வரலைன்னு சொன்னீங்கல்ல’

‘ஆமாம் ஸார்’

‘குட். அந்த ரெண்டு பேரையும் ரூமுக்கு கூட்டிட்டு வாங்க’

‘நீங்க ரூம்ல வந்தவுடனே என்ன பண்ணீங்க. கரெக்ட்டா, ஒண்ணு விடாம சொல்லுங்க’

வேலைக்காரம்மா சொந்தக்காரரைச் சுட்,டி ‘இவரு வீட்டு கதவ தொறந்துட்டு, ஸார கூப்ட்டுக்கிட்டே போனார், நான் பின்னால வந்தேன். இங்க ஸார் பெட்ல இருந்தாரு. இவர் கிட்டக்க போய் பாத்துட்டு ஐயோன்னு கத்தினாரு,’ என்று சொல்ல சொந்தக்காரர் பக்கம் இன்ஸ்பெக்டர் திரும்பினார்.

‘உடம்ப தொட்டுப் பாத்தேன் ஸார், ஜில்லாப்பா இருந்தது, உடனே வெளில வந்துட்டோம்’

‘வேறே எதையாவது பெட் பக்கத்துல பாத்தீங்களா, தேடினீங்களா?’

‘இல்ல ஸார்’

‘அப்ப எவ்ளோ நேரம் இந்த ரூம்ல இருந்தீங்க?’

‘ரெண்டு மூணு நிமிஷம்தான் இருக்கும் ஸார்’

‘ஓகே, ஒடம்ப தொட்டு பார்த்து இறந்துட்டார்னு தெரிஞ்சுக்கிட்டீங்க, ஆனா சூசைட் பண்ணினாருன்னு எப்படி முடிவுக்கு வந்தீங்க, அதுவும் பதட்டமா இருந்திருப்பீங்க, ரூம்ல வேற ரெண்டு மூணு நிமிஷம்தான் இருந்தேன்னு சொல்றீங்க,’ என்று இன்ஸ்பெக்டர் கேட்க.
‘நேத்து அவரு…’

‘சூசைட் பண்ணிக்கப் போறேன்னு சொன்னாரா ‘

‘இல்ல ஸார், தனியா இருக்கறதபத்தி தான்…’

‘அத வெச்சே சூசைட்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்களா?’

‘..’

‘உங்ககிட்டயும் இந்த வீட்டுச் சாவி இருக்குல்ல’

சொந்தக்காரர் தலையசைத்தார்.

‘நேத்து நைட்டு இங்க வந்தபோதுதான் அவர கடசியா நீங்க பாத்தது, இல்லையா?’

‘ஆமாம் ஸார்’

‘எப்ப வந்தீங்க, எப்ப கிளம்புனீங்க?’

‘எட்டு, எட்டே கால் இருக்கும் ஸார் நான் வந்தப்போ, பேசிட்டு ஒன்பது மணி வாக்குல கிளம்பினேன், அப்படி பேசும்போதுதான் அவரு..’

இடைமறித்த இன்ஸ்பெக்டர், ‘அதுக்கப்பறம் நீங்க இங்க வரவேல்ல இல்லையா?’ என்று கேட்டார்.

‘ஆமா ஸார்’

‘நேத்து நீங்க மெடிசன் வாங்கிட்டு வந்ததா சொன்னீங்கல்ல?’

‘ஆமா ஸார்’

‘என்ன மெடிசன்?’

‘வழக்கமா சாப்பிடறதுதான் ஸார்’

‘எந்த பார்மஸில வாங்கினீங்க?’

பெயரைச் சொன்னார்.

‘அதே க்வான்ட்டிடி தான வாங்கினீங்க’

‘ஆமா ஸார்’

‘எப்பவும் வாங்கற கடையாத்தான் இருக்கும்லையா, நேத்து வாங்கினதுக்கான பில் வெச்சிருப்பீங்க’

‘…ஸார்கிட்ட தந்துட்டேன் ஸார்… இந்த ரூம்ல தான் ஸார் இருக்கணும்’

‘தேடுவோம், எங்க போகப் போகுது. ஒரு சின்ன விஷயம், நீங்க எப்படி அவர் சூசைட் தான் பண்ணிக்கிட்டார்னு முடிவுக்கு வந்தீங்கன்னுதான் எனக்கு புரிய மாட்டேங்குது. டாக்டரே இன்னும் வந்து பாக்கலையே’

‘..’

‘சொல்லுங்க. இந்த ரூம்ல எந்த மெடிசனும் இல்லையே, எங்க போச்சு’

‘..’

‘பிடிங்க அவன!’

அறையை விட்டு ஓடிய சொந்தக்காரரை வெளியே இருந்த காவலர்கள் பிடித்தார்கள்.

‘இந்த மாதிரி கேஸ்ல சஸ்பெக்ட்ஸ் எல்லாரையும் இந்த மாதிரி ரூம்ல கூட்டி வெச்சு க்ரைம் எப்படி நடந்திருக்கும்னு எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு, அத இந்த ரூம்ல இருக்கற யாரோதான் பண்ணியிருக்காங்கன்னு சொல்லி, கடசியா நீதான் குற்றவாளின்னு அடையாளம் சொல்லணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை,’ காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் இறந்தவரின் உறவினரைப் பார்த்தபடி சொன்னார் இன்ஸ்பெக்டர்.

‘ரெண்டு பேர்தான் இருந்தாங்க ஸார்,இன்னும் கொஞ்சம்…’

‘அடுத்த வாட்டி பாத்துக்கலாம்யா, க்ரைம் பிக்க்ஷன்ல குற்றங்களுக்கு பஞ்சமே கிடையாதுயா, நெறைய சஸ்பெக்ட்ஸ் கிடைப்பாங்க’

‘இவ்ளோ சீக்கிரத்துல சால்வ் பண்ணிட்டீங்க ஸார். ஒங்களத் தவிர யாரும் இது ஒரு மர்டர்னு சந்தேகமே பட்டிருக்க மாட்டாங்க, க்ரேட்’

‘அப்படி சொல்ல முடியாதுயா, இதுல நான் எக்ஸ்ப்ளைன் பண்ணாத ஒரு விஷயம் இருக்கு, நீங்க கவனிச்சீங்களான்னு தெரியல. வாசகர்கள் அப்சர்வ் பண்ணிட்டாங்கன்னா அவ்ளோதான், நம்ம லிடரரி லைப் ஓவர். அப் கோர்ஸ் அதுக்கும் என்கிட்டே ஒரு விளக்கம் இருக்கு பட் ஸ்டில்..’

‘என்ன ஸார் அது’

‘நீயே கண்டுபிடி. மிசஸ். ப்ராட்லிகிட்ட(https://www.gladysmitchell.com/on-mrs-bradley) பேசணும்னு ரொம்ப நாளா ட்ரை பண்ணி மெயில்லாம் அனுப்பி நேத்துதான், இன்னிக்கு மார்னிங் அவங்ககிட்ட பேச கால் பிக்ஸ் பண்ணியிருந்தேன். அவங்க குற்றங்கள இன்வெஸ்டிகேட் பண்ற விதத்துலேந்து நாம கத்துக்கறதுக்கு நிறைய இருக்கு. எல்லாம் சொதப்பலா போச்சு. அவங்ககிட்ட எக்ஸ்க்யுஸ் கேக்கணும்’

‘நூறு வயசுக்கு மேல இருக்கும்ல ஸார் அவங்களுக்கு?’

‘அதுக்கு மேலயே இருக்கும், ஒன் ட்வென்டி பைவ் இருந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு ஒண்ணுமில்ல. அவங்களோட முதல் இன்வெஸ்டிகேஷன்போதே வயசானவங்கதான். அதான் லிடரரி லைப், க்ளிக் ஆயிடுச்சுன்னா நித்தியத்துவம்தான்’

வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது சப்-இன்ஸ்பெக்டர், ‘ஸார் ஒண்ணு கேக்கணும்னு,.. நம்ம ரெண்டு பேரையும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்ன்னு தான் குறிப்பிட்டிருக்க தவிர, நேம் இல்லையே. அதுலயும் நாம யுனிபார்ம்ட் கேடரா இல்ல ஸ்பெஷல் ப்ராஞ்ச், சிபி-ஸிஐடி, ஹோமிசைட் மாதிரி வேற ஏதாவதான்னுகூட தெரியலையே.’

‘இத பத்தி எழுத்தாளர் கிட்ட கேட்டேன். மொதல்ல இந்த இன்வெஸ்டிகேஷன் பத்தி வாசகர்கள் பாசிட்டிவா ரெஸ்பான்ட் பண்ணட்டும், அப்பறம் பெயர் வெக்கறத பாத்துக்கலாம்னு சொல்லிட்டார். அதுக்கு முன்னாடியே போலிஸ் டிபார்ட்மென்ட்ஸ் பத்திலாம் ரிசர்ச் செய்யறதுல என்னால டைம் வேஸ்ட் பண்ண முடியாதுங்கறார். இந்த க்ரைம நாம கண்டுபிடிச்ச விதம் நம்பற மாதிரியே இல்லைனோ, போர் அடிக்குதுன்னோ சொல்லிட்டாங்கன்னா நம்ம கதை முடிஞ்சுது ..’

‘இன்னொரு விஷயம் ஸார், அதாவது நான்.. என்னோட ரோல்..’

‘அதைப்பத்தியும் ஆத்தரே சொன்னார். பொதுவா இந்த மாதிரி ரெண்டு பேர் இன்வெஸ்டிகேட் பண்ணும்போது ஒருத்தர் சும்மா டம்மியாத்தான் இருப்பார், ஆனா அத நான் மாத்தப் போறேன்னாரு. இந்த ழானர்ல புதுசா நிறைய விஷயங்கள் பண்ணப் போறாராம். அதனால ஒனக்கும் நிறைய சான்ஸ் கிடைக்கும், அத பத்தி கவலைப்படாத. நெறைய ரீடர்ஸ் இத படிக்கணும், படிச்சிட்டு நல்லபடியா ரெஸ்பான்ட் பண்ணனும், அதுதான் முக்கியம்.’’

சிறிது நேர அமைதிக்குப் பின் ‘என்னய்யா யோசிச்சிட்டிருக்க’ என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.

‘பாவம் ஸார் ரீடர்ஸ், இப்ப அவங்கள நெனச்சாத்தான் கவலையா இருக்கு’