சிறுகதை

மோன்-ரோஷ் : சினிமாவின் பன்முகத்தன்மை

மித்யா

image

கொரியன் இயக்குநர் சோவா-குர் இயக்கிய ‘மோன்-ரோஷ்’ என்னும் படத்தை நேற்று பார்த்து பிரமித்து போனேன். உலக சினிமாவின் ஆகச்சிறந்த உன்னதங்களில் ஒன்றாக இந்த படம் கருதப்படுவதில் ஆச்சரியம் இல்லை.

ஆனால் நான் இந்த படத்தை பார்க்க செல்லும்பொழுது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் சென்றேன். நீங்கள் இந்த இயக்குநரின் பெயர் கொரியன் பெயர் போல் இல்லாததை கவனித்திருப்பீர்கள். அதே போல் படத்தின் பெயரும் வேறு மாதிரி இருப்பதை கவனித்திருப்பீர்கள். இரண்டு பெயர்களையும் திருப்பி போட்டால் உங்களுக்கு கிடைப்பது: ரோஷ்மோன் மற்றும் குரோசோவா- ஆம், இந்த படத்திற்கும் குரோசோவாவின் படத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. (more…)

சம்பவம் நடந்ததா?- உண்மையைத் தேடும் புதுமை நாவல்

மித்யா

சமீபத்தில் வெளியான மாயக்கொண்டானின் ‘சம்பவம் நடந்ததா?’ என்ற நாவல் தமிழ் இலக்கியச்சூழலில் ஒரு புது முயற்சி என்று சொல்லவேண்டும். சிலர் செவ்வியல் ஆக்கங்களை உக்கிரமாக உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்களில் இப்படி ஒரு நாவல் வருவது நமக்கு ஆச்சரியம் தருகிறது.

நாவலில் இருப்பதோ ஒரே ஒரு சம்பவம்தான். அதுவும் முற்றுப்பெறாத ஒரு சம்பவம். இதை வைத்துக்கொண்டு பல கேள்விகளை எழுப்புகிறார் எழுத்தாளர் மாயக்கொண்டான். மனிதன் என்பவன் யார்? உண்மை என்பது என்ன? நாம் கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் உண்மையா? தீர விசாரித்து அறிவது மட்டும் என்ன பெரிய உண்மையா? இப்படி பல கேள்விகளைக் கேட்க வைக்கிறார் ஆசிரியர். (more…)

ஆடம்ஸ் – ஜார்ஜ் சாண்டர்ஸ்

என்னால் ஆடம்ஸை எப்போதும் சகித்துக் கொள்ள முடிந்ததே கிடையாது. ஒரு நாள் பார்த்தால் அவன் என் வீட்டு கிச்சனில் நின்றுகொண்டிருக்கிறான், அண்டர்வேர் மட்டும் போட்டுக் கொண்டு. என் குழந்தைகள் இருக்கும் அறையைப் பார்த்து நின்று கொண்டிருக்கிறான்! எனவே, அவன் மண்டையின் பின்பக்கம் ஒரு போடு போட்டேன், அவன் சரிந்து விழுகிறான். எழுந்து நிற்கும்போது, மறுபடியும் ஒரு போடு போடுகிறேன், அவன் மீண்டும் சரிந்து விழுகிறான். மறுபடியும் நீ இப்படி செய்தால், கடவுள் சத்தியமாகச் சொல்கிறேன், எனக்கு என்ன சொல்வதென்றுகூட தெரியவில்லை, ங்கோத்தா என்கிற மாதிரி  நான் அதன்பின் அவனை மாடிப்படிக்கட்டுகளில் உருட்டி விடுகிறேன், வெளியே, முன்வசந்தப்பருவத்தின் சேற்றில் போய் விழுகிறான்.
 
கரேன் திரும்பி வந்ததும் நான் அவளைத் தனியே அழைத்துப் போகிறேன். நான் பேசிய விஷயம் இதுதான்: கதவைப் பூட்டி வை, அவன் வீட்டுக்கு வந்திருக்கும்போது, குழந்தைகள் அறையைவிட்டு வெளியே வரக் கூடாது.

(more…)

அந்தரங்க துணை

சிகந்தர்வாசி 

இன்று காலை நடைபழகும்போது நடராஜன் எதிரில் வந்தார். என்னுடன் நடக்க ஆரம்பித்தார்.

நடராஜன் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்று சில வருடங்கள் ஆனாலும் இன்னும் சுறுசுறுப்பாக இருப்பவர். தினமும் ஷட்டில் ஆடுவார். காலையில் வாக்கிங்.

“லைப் எப்படி போயிண்டிருக்கு சார்?” என்று கேட்டேன்.

“என்னத்த சொல்ல சார், ஒரே தனிமையா இருக்கு. ரொம்ப லோன்லியா பீல் ஆறேன். அவ போயி அடுத்த மாசம் அஞ்சு வருஷம் ஆறது. அப்பா போன வருஷம் போயிட்டார். ஆபிசும் கிடையாது. ரொம்ப போர் சார்”

“ஏதாவது என்ஜிஓல சேருங்களேன் சார்”

அவர் உரக்க சிரித்தார், “நம்ப ஆபிஸ் பாலிடிக்ஸ் விட அங்க பாலிடிக்ஸ் ஜாஸ்தி இருக்கு. அதெல்லாம் முடியாத விஷயம்”

அவர் தனிமையைப் போக்க எதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். “உங்க அண்ணா நம்ப காம்ப்ளெக்ஸ்லதானே இருக்கார், அவர் வீட்டுக்கு போலாமே சார். அவரும் சும்மாதானே இருக்கார்?”

நடராஜன் விரக்தியாகச் சிரித்தது போல் இருந்தது. “அதெல்லாம் சொல்லுஷன் இல்ல சார்”

“சீரியல் பாக்கலாமே சார்” என்று சொல்ல வந்து அந்த எண்ணத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

ஒரு சுற்று மௌனமாகவே இருந்தோம். திடீரென்று அவர், “என்னதான் சொல்லுங்க சார், வாழ்க்கைல நமக்குன்னு ஒரு துணை வேணும்” என்றார். (more…)

500A சம்பவம்

சிகந்தர்வாசி 

மதியம் மூன்று மணிவாக்கில் 500Aவில் ஏறினேன். ஏ.சி. பஸ் அது. மதிய வேலை என்பதால் டிரைவர், கண்டக்டர் தவிர கடைசி சீட்டுக்கு முன் உள்ள சீட்டில் ஒரு பெண்ணும் இருந்தார்கள். நான் முன்பக்கம் உட்கார்ந்து கொண்டேன். கதவுகள் மூடியவுடன் அவள் குரல் எனக்கு கேட்க ஆரம்பித்தது.

“.. அவா ரெண்டு பேரும் மீட் பண்ணிண்டா. தீபக் நல்லா பேசினான்னு சொன்னா. ரொம்ப நேரம் பேசினாப் போல இருக்கு. அவளுக்கு ஓகேன்னு சொன்னா. அவனும் ஓகே சொல்லியிருப்பான்னு நெனைக்கறேன்” தமிழில் பேசினாள். உரக்க பேசினாள். வேறு மனிதர்கள் பஸ்ஸில் இருப்பதை அவள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

சற்று நேரம் மௌனத்துக்கு பின், “அதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. அவ ரொம்ப கான்பிடண்டா இருந்தா. ஆனா இப்போ அவன் பிடி கொடுத்து பேசமாட்டேன்கிறான்”

“…”

“சார், உங்களுக்கு இது பத்தி தெரியாதுன்னு எனக்கு தெரியும் சார். ஆனா நீங்க அவனோட மேனேஜர். நீங்க ஒரு வார்த்த அவன கேக்கலாம்”

“…”

“அது கரெக்ட்தான் சார். இது பர்சனல் விஷயம்தான். ஆனா நாங்க என் கசினுக்கு கல்யாணம் ஆகணும்னு ரொம்ப டென்ஷனா இருக்கோம். அதுக்குதான் உங்கள கேக்கறேன். ஒரு ரிக்வெஸ்ட்தான்.”

“…”

“இல்ல சார். நீங்க அவன போர்ஸ் பண்ண வேணாம். ஆனா ஏன் அவன் வேணாம்ன்னு சொல்றான்னு கேளுங்களேன்?”

“…”

“அவளுக்கு இப்போ முப்பது வயசாச்சு சார். சீக்கிரம் கல்யாணம் பண்ணிடணும்னு என் சித்தி சித்தப்பா பாக்கறா. இவ்வளவு நாள் அவ வேண்டாம்ன்னு இருந்தா. இவனதான் மொதல்ல சரின்னு சொல்லியிருக்கா. இந்த சந்தர்ப்பத்த விட முடியாது சார். நீங்கதான் எப்படியாவது அவன கன்வின்ஸ் பண்ணனும்”

“…”

“சார் நான் சொல்லறத கேளுங்க சார். ப்ளீஸ்.” அவள் குரல் உயர்ந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். கண்டக்டர் என்னைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார். “மனை அனுக்கொண்டிதாரே” என்றார் என்னிடம். பஸ் ஸ்டாப்பில் நின்றது. ஒருவர் ஏறிக்கொண்டார்.

கதவு மூடியபின் மறுபடியும் அவள் குரல். “…இருக்கலாம் சார். இல்லேன்னு சொல்லல. நீங்க இவள உங்க தங்கையா நினைச்சுக்கோங்க. ஒரு சிஸ்டருக்கு ஹெல்ப் பண்ற மாதிரி ஹெல்ப் பண்ணுங்கோன்னு கேக்கறேன்”

“…”

“இல்ல சார். அவருக்கு நீங்க மேனேஜர். நீங்க மனசு வெச்சா அவன கன்வின்ஸ் பண்ணலாம் சார். ஒரு தங்கைக்கு …”

“…”

“உங்களுக்கு தெரியாதது இல்ல. இந்த காலத்துல கல்யாணம் பண்ணி வெக்கறது எவ்வளவு கஷ்டம்னு. அதுவும் பொண்ணும் பையனும் ஒருத்தர ஒருத்தர் விரும்பற மாதிரி இருக்கறது இன்னும் கஷ்டம். அதுனாலதான் இது கை நழுவக்கூடாதுன்னு பாக்கறேன்”

“…”

“அவளுக்கு அவன பிடிச்சிருக்கு சார். அதுனாலதான் அவனுக்கு அடிக்கடி போன் பண்றா. இத ஏன் அவன் தப்பா எடுத்துக்கறான்? அடிக்கடி போன் பண்றதுல என்ன சார் தப்பு இருக்கு?”

“…”

“ஓகே சார். ஐ அண்டர்ஸ்டான்ட். நான் அப்புறம் போன் பண்றேன்”

அடுத்த ஸ்டாப் வரை நிசப்தமாக இருந்தது. ஸ்டாப்பில் பஸ் நின்றவுடன் அந்த பெண் இறங்க வந்தாள்.

பஸ்ஸில் இருந்த மற்றொருவரும் எழுந்து, “நீங்க தமிழ் போல இருக்கு. நீங்க பேசறத நான் கேட்டேன்….” என்று சொல்லிக்கொண்டே அந்த பெண்ணுடன் பஸ்ஸைவிட்டு இறங்கினார்.

பஸ் கதவு காற்றை உள்ளிழுத்துக் கொள்வது போன்ற மெல்லிய சப்தத்துடன் மூடிக் கொண்டது.