சிறுகதை

இளைப்பாறுதல்

ஸ்ரீதர் நாராயணன்

image1

மூலக்கடை பிள்ளையார் கோவில் பக்கமாக வரும்போது சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. ‘சிக்னல் போட்டிருக்கு’ என்று சாந்தலட்சுமியின் காதுகளில் கேட்கும்படி முணுமுணுத்துவிட்டு சிவசுப்ரமணியன் வேகமாக பஸ்ஸின் படிக்கட்டுகள் பக்கமாக வந்தான். எதிர்பார்த்தது போல டிரைவர் வேகத்தைக் குறைக்க சட்டென குதித்து இறங்கினான். பின்னாடியே தடதடவென சாந்தலட்சுமி இறங்குவதற்குள் பஸ் வேகமெடுத்து விட்டது. அந்த மதிய நேரத்தில் நூறடிச்சாலை வெறிச்சோடி இருந்ததால், டிரைவர் வேகமெடுத்தபடி சிக்னலைத் தாண்ட, பஸ்ஸிலிருந்து குதித்த சாந்தலட்சுமி கொஞ்சம் தூரம் ஓடி சமாளித்து நின்றாள்.

‘த, விழுந்து சாவறதுக்குனு வந்துக்குது பாரு. ஸ்டாப்பிங்ல இறங்கி நடந்து வாறதுக்கு என்னா கேடு’ கண்டக்டர் தலையை நீட்டி திட்டுவது சிவசுப்ரமணியன் காதுகளில் நன்றாகவே கேட்டது.

‘பேமானி. ரெட்ல கிராஸ் பண்ணிட்டு, என்னா சவுண்டு விடறான்’ சாந்தலட்சுமியின் குரல் பஸ்ஸை எட்டியிருக்காது என்றாலும், சாலையோரத்து இளநீர் கடைக்காரரின் காதுகளை எட்டியிருந்தது அவருடைய சிரிப்பின் மூலம் தெரிந்தது.

‘அதான், ஸ்பீடு கூட்டிக்கிறான்ல. என்னாத்துக்கு குதிக்கிற நீயு?’ (more…)

யாரோ ஒருவன்

ஹரன் பிரசன்னா

பிரகதி மைதானத்தில் நடக்கும் டெல்லி புத்தகக் கண்காட்சியின் குளிரூட்டப்பட்ட அரங்குக்குள் நுழைந்தபோதே என் நாசி அந்த மணத்தை உணர்ந்து இதற்கு முன்பு டெல்லி வந்ததன் நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்தது. உடனே நினைவுக்கு வந்தவன் சுனில் வர்மாதான். கடந்தமுறை என் புத்தக அரங்குக்குப் பக்கத்து அரங்கில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தான். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்துகொண்டிருந்த புத்தகக் கண்காட்சியில் எத்தனையோ முறை பங்கேற்றிருந்தாலும், யாருடனும் ஒட்டிப் பழகியதில்லை. ஒரு ஹாய் ஒரு ஹலோ, அவ்வளவுதான். ஆனால் கடந்தமுறை சுனில் வந்து வந்து பேசினான். எத்தனை முறை கிழே இறக்கிவிட்டாலும் வலிந்து இடுப்பேறிக் கொள்ளும் குழந்தை போல.

அவனுக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் விடாமல் பேசிக்கொண்டே இருப்பான். எனக்கும் அவனுக்கும் பத்து வயது வித்தியாசமாவது இருக்கும். வெளுத்த தோலுடன் ஒல்லியாக உடல் உள்ளொடுங்கி அவன் பேசும்போதெல்லாம் தொண்டைக் குமிழ் ஏறி இறங்குவது எனக்கு சிரிப்பாக வரும். அவனைப் பார்க்கும்போதெல்லாம் சிரிப்பேன். சம்பந்தமில்லாமல் என்னென்னவோ பேசுவான். ரொட்டியை வாங்கி சாயாவில் முக்கி யாரோ அடித்துப் பிடுங்கவருவதுபோல வேகவேகமாக அவன் உண்பதைப் பார்க்க எனக்குச் சிரிப்பாக வரும். அதே ரொட்டியைக் காண்பித்து சாப்பிடறீங்களா ஜி என்பான். வேண்டாம் என்று மறுப்பேன். சுடச்சுட கடும் சாயா வாங்கித் தருவான். மெல்லிய மீசை நெளிய இது தனது ட்ரீட் என்று சொல்வான். (more…)

நாம்பல்லிச் சம்பவம்

சிகந்தர்வாசி 

அமீர்பெட் போக எதுக்கு ட்ரைன்?”

“அமீர்பெட் இல்லப்பா. நாம ஹைதராபாத் போறோம்”

“என்ன பைத்தியம் மாதிரி பேசற ! நாம இருக்கறது ஹைதராபாத்.”

“இல்லப்பா. நாம இப்போ மெட்ராஸ்ல இருக்கோம். பெரியப்பா பேரன் கல்யாணத்துக்கு திருச்சி போனோம். இன்னிக்கி கார்த்தால மெட்ராஸ் வந்தோம். இப்போ ஹைதராபாத் போறோம்”

அவர் குழப்பமாக அவளைப் பார்த்தார். பிறகு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். சற்று நேரத்துக்குப் பிறகு, “இது பேகம்பேட் ஸ்டேஷன் இல்லையோ?”

“இல்லப்பா, இது மெட்ராஸ் சென்ட்ரல்” (more…)

செம்பக வனம்

– மோனிகா மாறன் –

“சார்வாள்! சொகமாயிரிக்கீறா?” இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் வள்ளிநாயகத்தின் குரலில் குமரித்தமிழ் கொஞ்சியது. “ஜே எம் எஸ் பஸ்ஸுல என்ன கூட்டம்.நல்ல குளுறு வேற. சமுனாமரத்தூர் எப்படி மாறிடுச்சு. நாப்பது வருசமாயிட்டுல்ல. தம்பி கல்யாணங்கெட்டாமலே இருந்துட்டீக. நம்ம ஊரு பக்கம் ஏதாச்சும் நல்ல நாயரு பொண்ண அம்பது பவுனோட முடிச்சிருக்கலா”.

நான் சிரித்தேன். “நம்ம எளங்கோவன் மகளாட்டு நாரோல்ல தா கலியாணம் வச்சிருக்கு. நீரு வாரீரு. அந்தால என்னமாச்சும் சொல்லீட்டு இங்கனயே கெடந்தீரு. சவட்டி புடுவேன். ரிட்டைடாயிட்டு இன்னும் என்னவே இந்தூருல? நம்ம மக்க மனுசாளோட வந்து சேராம”. என்மீது மாறா அன்பு கொண்ட தம்பதியர். தம்பி மகளின் திருமண அழைப்பினைத் தந்து விடைபெற்றனர்.

நினைவுகளின் கனம் தாளாமல் வீட்டின் முன்புறமிருந்த இலவச மருத்துவ மையத்துக்குச் சென்றேன். என் வாழ்வு இவ்விடத்தை விட்டு நகராது. “செண்பக வனம்”.

பெயர்ப்பலகையை நோக்குகிறேன். எழுபத்து மூன்றில் நான் இந்த ஜவ்வாது மலைக்கு வந்தபோது,  “சாருக்க சுசீந்தரமா எனக்க தக்கல இந்தா இவ ஆரவாமொளிக்காரிதான்,” என என்னை வரவேற்று போஷித்த ஆசிரியர் தம்பதியர்தான் இந்த வள்ளி நாயகமும் கோலம்மையும். (more…)

டிபென்ஸ் காலனி பூங்காச் சம்பவம் 

சிகந்தர்வாசி 

பெங்களூர் இந்திரா நகர் டிபென்ஸ் காலனி பூங்காவில் தினமும் மாலை நடைபழகுவது என் பழக்கம். அன்று மாலையும் அதுதான் செய்து கொண்டிருந்தேன். காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இளையராஜா பாடல்களை கேட்டபடி சிறு கற்கள் பதித்து அமைக்கப்பட்ட டிராக்கை பல முறை சுற்றி வருவேன். கால் மணி நேரம் சுற்றி வந்திருப்பேன், அப்பொழுது பூங்காவிற்கு வெளியிலிருந்து உரக்க பல குரல்கள் கேட்டன. யாரோ சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மெதுவாக பூங்காவின் இரும்பு சுழற்கதவு பக்கம் வந்து வெளியே பார்த்தேன். ஏழு எட்டு பேர் இருப்பார்கள். அதில் ஒரு இளவயது பெண் இன்னொரு இளவயது பெண்ணைப் பார்த்து ஏதோ ஆங்கிலத்தில் கத்திக் கொண்டிருந்தாள். அவள் அருகில் ஒரு நடுத்தர வயது அம்மையார் தமிழில் ஏதோ உரக்கக் கூவிக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் வயதான அம்மையார் ஒரு நடுத்தர வயது ஆணுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கத்திக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு பக்கத்தில் ஓர் இளைஞன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தான். அவன் பக்கத்தில் இன்னொரு இளைஞன் தலை குனிந்து நின்றிருந்தான். இவர்கள் யாரும் இந்த காலனிக்காரர்கள் போல் தோன்றவில்லை.

கத்திக்கொண்டிருக்கும் பெண் ரோட்டிற்கு அந்தப் பக்கம் இருந்தாள். சற்று பருமனாக இருந்தாள். மங்கலான பச்சை நிறத்தில் ஒரு சுடிதார் அணிந்திருந்தாள். முகத்தில் வியர்வைத் துளிகள் பிரகாசித்தன. அவளுக்கு நல்ல ‘பேஸ் வாய்ஸ்’ என்று நினைத்துக் கொண்டேன். ரோட்டின் இந்தப் பக்கத்தில் இருந்த பெண்ணைப் பார்த்து கையை ஆட்டி ஆட்டி, “யூ பிட்ச். வாட் டூ யூ திங்க் ஆப் யுவர்ஸெல்ப் ஸ்டூபிட் வுமன்” என்று உரக்க கூச்சலிட்டாள் அவள். (more…)