தினப்பதிவுகள்

“இந்தக் கதைக்கான தேடல் என்னை விடுவித்தது” – சிவேந்திரன்

கண்ணாடி துடைப்பவன்” குறித்து சிவேந்திரன்:

கிழக்கு திமோரின் விடுதலைக்கு எதிராக அமெரிக்காவும், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளும் இருந்தன என்பது வரலாறு. ஆனால் காலப்போக்கில் அவற்றின் நிலைப்பாடு மாறியது. எந்த வடிவிலான விடுதலைப் போராட்டம் என்றாலும் அதன் இறுதி வெற்றியை முக்கிய உலக நாடுகளின் போக்கே தீர்மானிக்கின்றது என்பதை கிழக்கு திமோரின் விடுதலையும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் இன்றைய காலகட்டப் பின்னடைவும் மீண்டும் உறுதிப்படுத்தின என்றே கூறவேண்டும்.

அண்மைக் கடந்த காலங்களில் சுதந்திரம் பெற்ற கிழக்குத் திமோரோ தெற்கு சூடானோ ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு நிகரான வலுவையோ அல்லது தியாகத்தையும், அர்ப்பணிப்பையுமோ கொண்டவையல்ல என்பது கடந்தகால உலக நடப்பை அவதானித்தவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்தவொன்று. அந்த நிலைப்பாட்டில் இருந்தே இக்கதையை எழுத ஆரம்பித்தேன்.

கதையை எழுத ஆரம்பிக்கும்போது ஈழவிடுதலைப் போராட்டத்தின் தியாகத்தை மட்டும் உயர்வாகவும், கிழக்குத் திமோர் விடுதலைப் போராட்டத்தை மற்றைய நாடுகளின் பிச்சையில் கிடைத்ததாக தாழ்வாகவும் கருதிய மனநிலையில் இருந்தேன். ஆனால் இந்தக் கதைக்கான தேடல் என்னை விடுவித்தது. அவரவர்க்கு அவரவர் தியாகங்கள் முக்கியமானவை. போராட்டத்துக்கு நீதியான காரணம் இருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டுமே தவிர எமது மனவிருப்பு வெறுப்புகள், அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து குறைகளைக் கண்டு அதைக் கொச்சைப்படுத்திவிடக் கூடாது என்பதில் மனம் இயல்பாகவே அமைந்துகொண்டது.

இக்கதையின் அடித்தளமாகவுள்ள கிழக்கு திமோரிய நிகழ்வுகள் மிகப்பெரும்பாலானவை உண்மையானவை. அதன் மீது நடமாடும் சிப்பிரியானோ அல்விஸ் அமரல் வெவ்வேறு நிஜ மனிதர்களின் சாயல் கொண்ட ஒரு கற்பனை பாத்திரம். கிழக்குத் திமோரி ஒருவர் இந்தக் கதையை வாசித்தால் அவர் பிழை பிடித்துவிடக்கூடாது என்ற கவனத்துடன் தகவல்களும் புனைவும் பிணைக்கப்படவேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்.

கண்ணாடி துடைப்பவர்களும் உண்மையானவர்கள். கண்ணாடி துடைப்பவர்களில் ஒருவரையும் சிப்பிரியானோவையும் சந்திக்க வைத்தபோது கதையை அவர்களே உருவாக்கிக் கொண்டார்கள்.

சிவேந்திரன் எழுதிய “கண்ணாடி துடைப்பவன்”, சிறுகதை இங்கே

“மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் கவிதையைத் தேடுவதில்லை” – செந்தில் நாதன்

உறக்கமும் மரணமும் – ஹின்ரீச் ஹீன் கவிதை மொழியாக்கம் குறித்து செந்தில் நாதன்:

மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் கவிதையைத் தேடுவதில்லை. படிக்கும்போது சட்டென்று ஒரு பொறி உண்டானால், இது நல்ல கவிதை என்று எனக்குத் தோன்றினால் மொழிபெயர்க்க முயற்சி செய்வேன். என் தனிப்பட்ட இரசனை சார்ந்த தேர்வே எனது அளவுகோல்.

விக்ரம் சேத் கவிதைத் தொகுப்பைப் படித்துக் கொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட கவிதை இது. ஜெர்மானியக் கவிஞர் ஹின்ரீச் ஹீன் எழுதிய கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார் விக்ரம் சேத். முதலில் என்னைக் கவர்ந்தது அந்தக் கடைசி மூன்று வரிகள்தான். தூக்கம் தரும் தற்காலிகத் தீர்வு போதாது, மரணமே நிரந்தரத் தீர்வு என்று தன்னிரக்கத்துடன் பாடுவது உலக அளவில் கவிஞர்களுக்குப் பொதுவான ஒன்று. அதற்கு அடுத்த வரியான Best would be never to have been born எனக்குச் சட்டென்று தேவாரப் பாடல்களை நினைவூட்டியது. பிறவா வரம் வேண்டி இறைஞ்சும் அடியார் பாடல்கள் பல உண்டல்லவா? ஆனால் ஹீன் நடைமுறை வாழ்க்கையில் நின்று கவிதையைப் பாடுகிறார், ஆன்மிகத் தளத்தில் அல்ல.

நண்பர் ஒருவர் கவிதையில் வரும் பாப்பி மலர் பற்றிச் சுட்டிக் காட்டினார். பாப்பிச் செடியின் காய்களில் இருந்து தான் அபின் தயாரிக்கப்படுகிறது. ஆகவே தூக்கம் என்று கவிதையில் கூறப்படுவது உண்மையில் போதை தரும் மயக்கம் தானா?

ஹின்ரீச் ஹீன் (Heinrich Heine) 1800களின் முதல் பகுதியில் மிகப் பிரபலமான ஜெர்மானிய எழுத்தாளர். ஆளும் பிரபுக்களைத் தனது கிண்டலான கவிதைகளால் நையாண்டி செய்து அதன் காரணமாக ஜெர்மனியை விட்டு வெளியேறி பாரிஸில் வாழ்ந்தவர். கார்ல் மார்க்ஸ், நீட்ஷே போன்றவர்களுக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர். யூதராய்ப் பிறந்ததால் நாஜிக்களால் வெறுக்கப்பட்டார். 1933ல் நாஜிக்கள் எரித்த ஆயிரக்கணக்கான புத்தகங்களில் இவரது புத்தகங்களும் உண்டு.1821ல் தனது நாடகம் ஒன்றில் ஹீன் எழுதிய வசனம், “இது வெறும் முன்னோட்டம்தான். எங்கே புத்தகங்களை எரிக்கிறார்களோ, அங்கே இறுதியில் மனிதர்களையும் எரிப்பார்கள்” .

ஹீன் தனது இறுதிக் காலத்தில் வாத நோய் தாக்கி எட்டு வருட காலம் படுக்கையிலேயே கழித்தார். அந்தக் காலத்தைக் கல்லறைப் படுக்கை என்றே குறிப்பிடுகிறார். இந்தச் செய்தியின் பின்புலத்தில் இந்தக் கவிதையைப் படித்தால் மற்றொரு கோணம் தெரிகிறது. அபின் தரும் தூக்கம் கொஞ்ச நேரம்தான், மரணமே தனது இறுதித் தீர்வு என்ற நோயாளியின் குரலும், பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என்னும்போது இறுதிக் காலத்தில் தனது இலட்சியங்களின் தோல்வியைக் கண்டு மனமுடைந்த போராளியின் குரலும் புலப்படுகிறது.

செந்தில் நாதன் மொழியாக்கம் இங்கு – உறக்கமும் மரணமும் – ஹின்ரீச் ஹீன்

“கவிஞன் ஒருபோதும் நினைவுகளை இழக்க விரும்புவதில்லை” – ஜிஃப்ரி ஹாசன்

நினைவுகளை மறத்தல் (அல்லது) தலைமறைவாதல் – குறித்து ஜிஃப்ரி ஹாசன்:

ஏதோ ஒருவகையில் நம் கடந்த காலத்தின் நிழல் நம்மீது படிந்தபடிதான் இருக்கிறது. துயர் நிறைந்ததாகவோ அல்லது மகிழ்வூட்டுவதாகவோ நம்மை அதன் நிழல் பின்தொடர்வதை உணர்ந்த தருணங்களில் அதை வெளிப்படுத்த நான் எடுத்துக்கொண்ட பிரயாசை ஒரு கவிதையின் சாயலைப் பெற்றுவிட்டது. ஈழத்தின் போர்ச்சூழலில் அழியுண்ட ஒரு கிராமத்தின் தெருக்களின் வழியே இலக்கிய உலகை நான் அடைந்தேன்.

அந்த நாட்கள் எம்மீது ஏற்படுத்திய வடுக்கள் இன்று உடலின் தடயங்களாகவும், மனதின் பாரங்களாகவும், ஞாபகங்களாகவும் எஞ்சியுள்ளன. ரணங்களாலான அந்த வாழ்வை ஞாபகிப்பதிலிருந்தும் தூரமாகிவிடவே இன்று எல்லோரும் முயற்சிக்கின்றனர்.

கவிஞன் ஒருபோதும் நினைவுகளை இழக்க விரும்புவதில்லை. தன் உடலெங்கும் மந்திர வார்த்தைகளால் அவற்றைப் பூசிக்கொள்கிறான். அவை மற்றவர் பார்வையில் புதுப்புது அர்த்தங்களைப் பெற்றுவிடுகின்றன.

போரின் நாட்களில் எல்லாவற்றுக்கும் அஞ்சி மனிதர்கள் குழந்தைகளைப் போல் தவழ்ந்தலைந்ததை இதன் சில வரிகள் சொல்கின்றன.

ஜிஃப்ரி ஹாசன் கவிதை இங்கு : நினைவுகளை மறத்தல் (அல்லது) தலைமறைவாதல்

“எவ்வித இழிவில் நாமிருக்க நேரலாம், நாளையோ பிறகோ?” – சரவணன் அபி

காலமருள் குறித்து சரவணன் அபி-

அன்றாட வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளில் மகிழ்வதும் வருந்துவதும் வழமையாகிப் போன ஒரு நாளில் ஒரு நிலைகுலைவின் பின்புலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தபோது தோன்றியது, இயற்கையின் எந்தவொரு நிகழ்வும் மற்றொன்றின் மேல் ஒரு நீடித்த பாதிப்பை ஏற்படுத்துவதில்லை; புலரியும், அந்தியும் போலவே புயலும், வெள்ளமும் கடந்து போகின்றன.

அது போலவே ரசனையில் திளைக்கும் சில வேளைகளில் தோன்றும்- எவ்வித இழிவில் நாமிருக்க நேரலாம், நாளையோ பிறகோ? அப்போது மனதின் சமநிலை எப்படியிருக்கும்? இந்தத் தருணத்து ரசனையை இழிவின் கணத்தில் நினைவு கூர முடியுமா?

முடியக்கூடும் சமநிலை வாய்த்து விடும்போது, வாழ்வின் சமன்பாடு பிடிபட்டுவிடும் எனத் தோன்றியது.

இந்த எண்ணம் தோன்றிய பிறகு, அனைத்திலும் ஒரு மேன்மையை காண முடியும் எனவும் பட்டது.

ஜெயகாந்தனின் சிறுகதையொன்றில் குஷ்டரோகி ஒருவன் பிச்சையெடுத்த உணவை உண்டுவிட்டு குறைபட்ட கையால் பீடி பிடித்துக் கொண்டு தனக்குத்தானே அனைத்தையும் ரசித்துக் கொள்வது போல் வரும். காற்றைச் சுகிப்பான்; நிலவை ரசிப்பான்; எச்சில் கலந்த பிச்சைச் சோற்றையும் பாராட்டிக் கொள்வான்.

சரவணன் அபியின் கவிதை இங்கு – காலமருள்