விமர்சனம்

ஆலிஸ் மன்றோவை வாசித்தல் – 1- Runaway கதைத் தொகுப்பை முன்வைத்து

அஜய்

20150620_083141

 

ஆலிஸ் மன்றோவின் ‘Tricks‘ கதையில் ‘ஆஸ்துமா’ நோயினால் பாதிக்கப்பட்டுள்ள, வேறெந்த வேலையும் செய்ய முடியாத/ செய்யாத 30 வயதான சகோதரியுடன் வாழும் 26 வயது ராபினின் (இந்தப் பெண் செவிலியாக வேலை செய்பவர்) ஒரே வடிகால், வருடந்தோறும் பக்கத்து நகரில் நடக்கும் ஷேக்ஸ்பியர் நாடக விழாவில், ஒரே ஒரு நாடகத்தை மட்டும் பார்ப்பது.  இப்படி ஒரு முறை நாடகம் பார்க்கச் செல்லும்போது, தன் கைப்பையைத் தொலைத்துவிட்டு என்ன செய்வதென்று புரியாமல் உட்கார்ந்திருக்கையில், டானியல் என்பவரைச் சந்திக்கிறார். அந்த முதல் சந்திப்பிலேயே இருவருக்குமிடையே ஒரு பந்தம் உருவாகிறது. டானியல் தன் தாய்நாட்டிற்குச் செல்லக்கூடும் என்பதால், அடுத்த ஆண்டு , மீண்டும் நாடக விழா நடக்கும்போது சந்திப்பது என்றும் அதற்கு முன்பு வேறு எந்த தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என்றும் முடிவு செய்கிறார்கள். அதன்படி அடுத்த வருடம், ராபின் டானியலின் வீட்டிற்குச் செல்ல, அங்கு இருக்கும் டானியல் ராபினைத் தெரிந்ததாகவே காட்டிக்கொள்ளாமல் உதாசீனம் செய்கிறார். ராபினின் மனம் உடைகிறது. காலம் செல்கிறது. பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, மருத்துவமனையில் டானியல் அனுமதிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் அவருக்கு ஒரு அதிர்ச்சியான உண்மை தெரியவருகிறது. அது டானியல் அல்ல, காது கேளாத/ பேச முடியாத அவருடைய இரட்டை சகோதரன். அவரைத்தான் அன்று ராபின் பார்த்திருக்கிறார். டானியல் அப்போது வீட்டில் இல்லை. அதனால்தான் தன்னை யாரென்று அறியாதது போல் அந்த மனிதர் நடந்து கொள்ள, அதை டானியல் தன்னை விலக்க நினைக்கிறார் என்று ராபின் தவறாக எண்ணி விடுகிறார். அவர் கொஞ்சம் முன்பாகவோ, பின்பாகவோ வந்திருந்தால் டானியலைச் சந்தித்திருக்கக்கூடும். கதை ராபினின் இந்த எண்ணங்களுடன் முடிந்திருந்தால் ‘விதி’ மோசம் செய்யும், ஷேக்ஸ்பியரின் துன்பவியல் நாடகங்களைப் போல், ராபினின் இருண்ட வாழ்வில் விதியினால் ஒரு கதவு திறந்து  உள்ளே ஊடுருவிய ஒளிக்கீற்றை அதே விதியே மீண்டும் அந்தக் கதவை மூடி மறைத்த  சோகத்தைச் சொல்லும் நேர்த்தியான கதையாக இருந்திருக்கும். பெரும்பாலான எழுத்தாளர்கள் இத்துடன் முடித்திருப்பார்கள். மன்றோ என்ன செய்கிறார்?

முதலில் தன்னை நொந்து கொள்ளும் ராபின் பிறகு, தாங்கள் இணைந்திருந்தாலும், உடல் நலம் சரியில்லாத தன் சகோதரியையும், டானியலின் சகோதரனையும் எப்படி ஒரே வீட்டில் வைத்துக் கொண்டிருக்க முடியும் என்று யோசிக்கிறார். மேலும் இப்போதாவது ‘ஆள் மாறாட்டம்’ நடந்ததைப் பற்றிய உண்மை தன் சுயத்திற்கு பலம் சேர்ப்பதாக, தான் நிராகரிக்கப்பட்டோம் என்று இத்தனை ஆண்டுகள் சுமந்து கொண்டிருந்த அவமானத்தின் வலிக்கு களிம்பு தடவுவது போல் இருக்கும் என்று நினைக்கிறார். இது அவரின் உண்மையான எண்ணங்களா அல்லது தன்னை தேற்றிக் கொள்ள அவர் சொல்லும் சமாதானங்களா என்ற கேள்வி எழலாம். அதை விட முக்கியம் மன்றோவின் நோக்கம். “The mind’s a weird piece of business” என்று இன்னொரு கதையில் ஒரு பாத்திரம் சொல்வதற்கு ஏற்ப , மன்றோ மனதின் நிலவறையின் கதவைத் திறந்து காட்டுவதுடன் மட்டும் நிற்காமல், அந்நிலைவறையின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒளி பாய்ச்ச முயல்கிறார்.

ஆனால் இந்த மன அலசலை மட்டுமே மன்றோவின் தனித்தன்மையாகக் கருதுவது, அவரின் உரைநடையை, அதன் நுணுக்கங்களை, சிறுகதை என்ற வடிவின் ‘காலம்’ குறித்த கட்டுப்பாடுகளை அவர் மீறிச் செல்வதை, அவ்வாறு மீறிச் செல்வதன் மூலம், பொதுவாக சிறுகதைகளில் கிடைப்பதை விடவும் காத்திரமான வாழ்க்கைச் சித்திரம் வரைவதை, அந்த வாழ்வின் முக்கிய கணங்களுக்கு ஒளிர்வூட்டுவதைக் கணக்கில் கொள்ளாததாக இருக்கும். மன்றோவின் எழுத்தின் பரிமாணங்களைத் தேடும் பயணத்திற்கான ஆரம்பமாக வேண்டுமானால் இதை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரே சந்திப்பில் உருவாகும் பந்தம், ஓராண்டு கழித்து சந்திக்க முடிவு, அதில் விதியின் விளையாட்டு என இந்தக் கதையில் மட்டுமின்றி, ரயில் பயணத்தில் சந்திக்கும் ஆணுடன் செல்லும் இளம் பெண், தன் காதலன் தன் வீட்டு விருந்துக்கு வரும்போது, காதலனின் ஒன்று விட்ட சகோதரனுடன் செல்பவர் என ‘Runaway‘ தொகுப்பில் வரும் பாத்திரங்கள்/ சம்பவங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுமபோது, மன்றோவைப் படித்திராதவர்கள் இவை என்ன ‘யதார்த்த’ கதைகள் போல் இல்லாமல் , வெறும் மில்ஸ் அண்ட் பூன்ஸ் வகையறா கதைகள் போல் உள்ளனவே என்று எண்ணலாம்.

இதற்கு யதார்த்தம் என்றால் என்ன என்றும், யாருடைய யதார்த்தத்தைப் பற்றி பேசுகிறோம் என்றும் எதிர் கேள்வியே பதிலாக அமையக் கூடும். மேலும் இந்தப் பெண்கள் யாரும் குதிரையில் வரும் ராஜகுமாரனுக்காக காத்திருப்பவர்கள் அல்ல (அவர் உறவு ஏற்படுத்திக் கொள்ளும் ஆண்களும் ஒன்றும் கலியுக அர்ஜுனர்கள் அல்ல). இவர்களிடம் உங்கள் வாழ்வு உங்களுக்கு பிடித்திருக்கிறதா அல்லது வெறுப்பாக உள்ளதா என்று கேட்டால், அவர்களால் ஆம்/ இல்லை என்ற தெளிவான பதிலைக் கூற முடியாது. சிறு வயதில் தாய்/ தந்தையை இழந்த க்ரேஸ் (Passion) , தன் மாமாவுடன் வளர்கிறார். மாமா- நாற்காலி செய்பவரான அவரும், அவர் மனைவியும் “..were kind, even proud of her,… but they were not given to conversation..“. தனக்குப் பிறகு தன் தொழிலை க்ரேஸ் தொடர வேண்டும் என்பது மாமாவின் எண்ணம். இத்தகைய சூழலில் க்ரேஸின் மனநிலை என்னவாக இருக்கும்? தன்னை வளர்த்தவர்களிடம் நன்றி (பாசமும் கூட), அதே நேரம் அந்த வயதில், நாற்காலி செய்வதை தன் வாழ்க்கையாக கருத முடியாதது, மாமாவை மீற தயக்கம் என இருப்பவரின் மனநிலையைக் கணக்கில் கொள்ளும்போது, அவர் சட்டென்று எதிர்பாராத செயலைச் செய்யும்போது, அதிர்ச்சி அடைய ஒன்றுமில்லை.

ஆனால் இவர்கள் எப்போதுமே உள்ளுணர்வால் உந்தப்பட்டு சட்டென்று முடிவு எடுப்பவர்கள் அல்ல, நடைமுறை நிதர்சனத்தை உணர்ந்து அதற்கேற்பவும் செயல்படுபவர்கள். தன் காதலனை விட்டு விட்டு அவன் ஒன்று விட்ட சகோதரனுடன் செல்கிறார் க்ரேஸ். ஒரு சோக சம்பவம் நடக்கிறது. அதன் பின் க்ரேஸின் காதலனின் தந்தை அவரைச் சந்தித்து, 1000 டாலர் கொடுக்கிறார். இங்கு க்ரேஸ் அதை ஏற்காமல் இருப்பது இலட்சியவாதமாக இருக்கும். அதை அவர் ஏற்றுக்கொள்வது என்பது ‘இலக்கிய எழுத்தில்’ வழமையான ஒன்றுதான். ஆனால் மன்றோ அதை “Immediately she thought of sending it back or tearing it up, and sometimes even now she thinks that would have been a grand thing to do. But in the end, of course, she was not able to do it. In those days, it was enough money to insure her a start in life,” என்று விவரிப்பதில் உள்ளது வித்தியாசம். க்ரேஸ் ஒன்றும் பெரும் தார்மீக சிக்கலுக்கெல்லாம் உள்ளாவதில்லை, சில நொடிகளில் முடிவெடுத்து விடுகிறார். அந்த முடிவு குறித்து அவருக்கு இப்போதும் வருத்தமில்லை, திருப்பி அனுப்புதல் என்ற செயல் (gesture) உருவாக்கி இருக்கக்கூடிய உணர்வு குறித்த கற்பனை மட்டுமே உள்ளது. அவளால் அப்படிச் செய்ய முடிவதில்லை என்பது இதில் முக்கியம், அதாவது முடிவு அவர் கையில் இல்லை, அவருடைய பொருளாதாரச் சூழலில் உள்ளது. அதுவே அவருக்கான முடிவை எடுக்கிறது (‘In those days, it was enough money to insure her a start in life’), அவரை புது வாழ்வில் அடி எடுத்து வைக்க உதவுகிறது.

கடந்த காலத்தைப் பற்றிய குறிப்போடு ஆரம்பிக்கும் கதை நிகழ்காலத்திற்கு வருவது, நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு பிறகு, பல்லாண்டு கால தாவல் நடப்பது, ஒரே கதையில் கடந்த/ நிகழ்/ எதிர் கால சம்பவங்கள் வருவது என காலத்தில் முன் பின்னாக செல்வது மன்றோவின் கதைகளில் அதிகமாக காணக் கிடைக்கும் ஒன்று. இதன் மூலம் மன்றோ என்ன சாதிக்கிறார்?

சிறுகதை என்பதில் ஒரு உச்சகட்ட நிகழ்வு/ தரிசனம் என்பது அதன் முழுமைக்கு முக்கியம், அதுவே கச்சிதமான முடிவு என்பதை இல்லாமல் செய்து விடுகிறார். ஆம், அவர் கதைகளில் முக்கிய நிகழ்வு என்பது இடைப் பகுதியில் வர, அதன் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்பும் பாத்திரங்களை நாம் பின் தொடர்கிறோம். இதில் என்ன நடக்கிறது? ஒரு நிகழ்வின் முக்கியத்துவம் என்பது காலப்போக்கில் அப்படியே மாறாமல் இருக்கிறதா அல்லது அதை காலம் கரைத்து விடுவதோடு, அதன் இடத்தில் வேறொரு நிகழ்வை (தற்காலிகமாகவாயினும்) வைக்கிறதா என்பதைப் பார்க்கிறோம். எனவே (சிறுகதை) வாழ்வில் ஒரே ஒரு உச்ச நிகழ்வு அல்லது நகர்வாக மட்டுமே இருக்கும்/ இருக்க வேண்டும், என்ற சூத்திரத்தை மாற்றுகிறார். பல முக்கிய நிகழ்வுகள், அதன் பின்விளைவுகள் என ஒரு நாவலின் அனுபவத்தை தன் நெடுங்கதைகளில் தருகிறார்.

நாவலின் அனுபவம் என்று குறிப்பிடுவது , ஒரு வாழ்வை எழுத்தில் எந்த அளவுக்கு முழுமையாக உணர முடியுமோ அந்த அனுபவத்தைத்தான். மேலும் பெரும்பாலான சிறுகதைகளைப் போல் முக்கிய பாத்திரங்கள், சம்பவக் களன் இவை முதலிலேயே தெரிந்து விடுவதில்லை. ஒரு நாவலில், ஓரிரு அத்தியாயங்கள் போன பிறகு வாசகன் அதன் போக்கைப் பற்றி தெளிவடைவது போல், மன்றோவின் கதைகளிலும் சற்று உள்நுழைந்த பின்னரே அதன் போக்கை உணர முடியும். காலத்தில் முன் பின்னாகச் செல்லும் 50-60 பக்க கதை எழுதுவதால் பல தகவல்களை அவரால் சொல்ல முடிகிறது, எனவே இது சாத்தியமாகிறது என்பது அவரின் கலையை எளிமைப்படுத்துவதாக இருக்கும். ஏனென்றால், வெறும் தகவல்களால் மட்டுமே ஒரு வாழ்க்கைச் சித்திரம் கிடைப்பதில்லை. காலத்தினூடாக ஏற்படும் நுட்பமான புற/அக மாற்றங்கள், அவற்றில் பொதிந்திருக்கும் மௌனம், காலம் செல்லச் செல்ல கடந்த காலம் குறித்து நாம் நினைவில் வைத்திருப்பது, கடந்த காலத்தை நம்மையறியாமல் நமக்கேற்றார் போல் மாற்றி எழுதுவது அல்லது ஒரு விஷயம் குறித்து தெரிந்தே மாற்றிச் சொல்ல ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் அதையே உண்மையென நம்புவது என மன்றோவின் கதைகளில் உட்பொதிந்துள்ள விஷயங்கள் அனைத்துமே முக்கியமானவை.

அதாவது, மாற்றம் என்பது, 1920களில் இளம் பெண்ணை தொடர ஆரம்பிக்கும் கதையில், 70களில் அவர் தன்னைக் கண்ணாடியில் பார்க்கும் போது ‘.. a moment during which she saw not just some old and troubled spots, or some decline that could not be ignored any longer, but a complete stranger, ‘ என தன்னையே அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ள உடல் மாற்றத்தை உணர்வது மட்டுமல்ல. ஜூலியட் என்ற பெண்ணை 20களின் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பித்து ஒரு கதையிலிருந்து (Chance), இரு வேறு கதைகளில் (Soon, Silence) பல பத்தாண்டுகள் பின்தொடர்கிறார் மன்றோ. ‘Soon‘ கதையில், தன் குழந்தையுடன் பெற்றோரைக் காண வருகிறார் ஜூலியட். தன் துணை பற்றிய நினைவுகள் அவ்வப்போது வந்தாலும், அவர் ஒன்றும் தன் துணைக்காக ஏங்கவில்லை. பெற்றோருடனான அவருடைய சந்திப்பும் மிகவும் நெகிழ்ச்சியானதாக/ மகிழ்ச்சியானதாக இல்லை. அவருக்கு தன் பெற்றோரிடம் பாசம் இருந்தாலும் (அவர்களுக்கும் கூட) பாசம் இருந்தாலும், அவர்களுக்கிடையே உள்ள கடக்க முடியாத இடைவெளியை நாம் உணர முடிகிறது. ஆனால் இந்தக் கதையின் சம்பவங்கள் நடந்து பல ஆண்டுகள் கழித்து நிகழும் ‘Silence‘ கதையில், தன் துணை செய்த ஒரு தவறுக்காக அவருடன் சண்டையிடும்போது “….When Juliet had gone home to visit her parents. To visit – as she always pointed out now – to visit her dying mother. When she was away, and loving and missing Eric with every shred of her being (she now believed this), Eric had simply returned to his old habits,” என்றாகிறது.

காலம் போடும் திரை நடந்தவைகளை/ அப்போதைய உணர்வுகளைப் பொய்யாக்கி, நாம் இப்போது நம்புவதையே உண்மையாக மாற்றுவதை உணர்த்தும் she now believed this என்ற வரியில்தான் மன்றோ தெரிகிறார்.

நாவலில் வரும், ஓரிரு பாத்திரங்கள் மேல் மட்டும் கவனத்தைக் குவிக்காமல், பார்வையைப் பரவலாக்கும் தன்மையையும் மன்றோவின் கதைகளில் பார்க்கிறோம். இரண்டாம் நிலை/ உபரி பாத்திரங்களும் நாடக அரங்கின் பின்னணியில் இருக்கும் பொருட்கள் போலில்லாமல் உயிர் பெறுகிறார்கள். ‘Soon‘ கதையில், நோயுற்று இருக்கும் தாயைக் காண வருகிறார் ஜூலியட். இதற்கு முந்தைய கதையான ‘Chance’ல் வரும் சில குறிப்புக்கள் மூலம், ஜூலியட்டின் தாய்/ தந்தை, முழுதும் மனமொத்த தம்பதியராக இல்லாவிட்டாலும், எந்த பெரிய ஏமாற்றங்கள் உடையவர்களாகவும் நமக்கு தெரிவதில்லை, சுருங்கச் சொன்னால், பெரும்பாலான தம்பதியர் போலத் தான் உள்ளார்கள். ‘Soon‘ கதையிலோ நாம் சில நுட்பமான மாற்றங்களைப் பார்க்கிறோம். மனைவியின் நோய், ஒரு மெல்லிய எரிச்சலை தம்பதியருக்குள் உருவாக்கி உள்ளது. அவர்கள் வீட்டு வேலைக்கு வரும் பெண்ணிடம், ஜூலியட்டின் தந்தைக்கு ஒரு ஈர்ப்பு உள்ளது போல் தோன்றுகிறது. அவர்கள் வீட்டிற்கு ஒரு மதபோதகரின் (minister) வருகை அவர் தாய்க்கு மகிழ்வூட்டுகிறது. அவர்களுக்கிடையே பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கருத இடமில்லை என்பதோடு, (இப்போதைக்கு) அபாயமில்லாத, அடுத்த கட்டத்துக்கு நகராத ‘Flirting’ என்பதைத் தவிர இந்த நிகழ்வுகள் வேறெதையும் சுட்டவும் இல்லை. ஆனால் ஒரு மாற்றம் ஏற்பட்டு உள்ளது. தம்பதியரில் ஒருவர் நோயுற, இன்னொருவர் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் என்பது – நோயுற்றவர்/ பார்த்துக் கொள்பவர் இருவருக்குமே -இளமையை விட முதுமையில் சலிப்பைத் தரக்கூடும். இவை. “She’d always been this sweet pretty girl with a bad heart and she was used to being waited on. Once in a while over the years it did occur to me she could have tried harder” என்று ஜூலியட்டின் தந்தையும், ஜுலியட்டுடனான ஒரு உரையாடலின்போது “‘He has to suck up to them,’ said Sara with a sudden change of tone, a wavering edge of viciousness, a weak chuckle.” அவர் தாயும் சொல்வது இந்தச் சலிப்பின் வெளிப்பாடே. இந்தக் கதைகள் விரிய, ஜூலியட்டின் தாய்/ தந்தை என்ற ஒற்றை அடையாளத்தைத் தாண்டி, தனித்துவமான குணாதிசயங்களை கொண்டவர்களாக உருப்பெருகிறார்கள். ‘The Bear Came Over the Mountain‘ போன்ற, முதிய தம்பதியர் முதன்மைப் பாத்திரங்களாக வரும் மன்றோவின் கதைகளை, இன்னொரு கோணத்தில் அவர்களின் பிள்ளைகள் முக்கியப் பாத்திரங்களாக இருக்க – அவர்களின் விழிகளில் வழி முதிய தம்பதியரை நாம் இந்தக் கதையில் பார்க்கிறோம்.

இத்தகைய நெடுங்கதைகள் எழுதுவதைப் பற்றி

I started with the idea of writing novels, and I wrote short stories because that was the only way I could get any time. I could take off housekeeping and childrearing for a certain amount of time but never for the amount that you need to write a novel. And after a while I got as if the story form—actually a rather unusual story form, usually quite a long story form—is what I wanted to do. I could say what I wanted to say in that space. And this was hard at first because the short story was a form that people wanted to be a certain length. They wanted it to be a short story, and my stories were quite unusual in the way that they sort of went on and on and told you different things and so on.
I never know—at least, usually I don’t know—that a story is going to be a certain length. But I’m not surprised. I give it all the space it needs.
Anyway, I don’t care if what I write now is a story—is classified as a story—or what. It’s a piece of fiction, that’s what it is.

என்று மன்றோ சொல்கிறார்.

பெண்களே முக்கியப் பாத்திரங்களாக, அவர்களின் கோணத்திலேயே நகரும் கதைகளாக இருந்தாலும் , ஆண்கள் ஒதுக்கப்படுவதில்லை.

“This is the first time I went on a major trip anywhere. Quite a trip, all on your own”

“.. so maybe could just sort of chum around together?”

என்று ஜூலியட்டிடம் பேச்சு கொடுக்க முயன்று, ஜூலியட் அதற்கு இடம் கொடுக்காமல் இருக்க, பின்பு தற்கொலை செய்து கொள்ளும் பெயர் சொல்லாத, ஐம்பதுகளில் இருக்கும் ஆணை எளிதில் மறக்க முடியாதபடி செய்கிறார் மன்றோ. ஐம்பது வயதில் முதல் முறையாக பெரிய பயணம் மேற்கொள்பவரின் வாழ்வு எப்படி இருந்திருக்கும்? “chum around together” என்ற வரியில் பொதிந்திருக்கும் தோழமைக்கான ஏக்கத்தை/ கோரிக்கையை உணர்வது (அவரின் தற்கொலையைவிட) மனதை பாரமாக்கக் கூடியது. மருத்துவப் படிப்பை பாதியில் விட்டு – தோழிக்காக செய்த கருக்கலைப்புதான் காரணம் என்று சுட்டப்படுகிறது, ஆனால் அந்தக் கருவிற்கு அவர்தான் காரணமா என்பது தெரிவதில்லை – மீனவ வாழ்க்கை வாழும், பல ஆண்டுகள் நோயுற்ற மனைவியை புறக்கணிக்காத, அதே நேரம் துறவி போல் வாழாத , பல காதலிகளை உடைய (ஒரே நேரத்தில் இரு காதலிகள் கூட ) ஜூலியட்டின் துணைவனான எரிக்கின் வாழ்க்கையை தனியாக எழுதினால் பல விஷயங்கள் கிடைக்கும்.

வெறும் உரையாடல்களாக, மனவோட்டங்களாக மட்டும் மன்றோவின் உரைநடை நின்று விடுவதில்லை. தன் மகளைத் தேடி அவர் சென்றுள்ள ஆன்ம பரிசோதனை செய்ய உதவும் இடத்திற்கு (spiritual retreat), வரும் ஜூலியட் “All wore ordinary clothes, not yellow robes or anything of that sort,” என்பதை கவனிக்கிறார். மகளைத் தேடி வந்த இடத்தில், இது அவருக்கு தோன்ற வேண்டிய காரணம் என்ன? மதம்/ ஆன்மா இவற்றுக்கும் மஞ்சள் நிறத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிய பொது பிம்பம் இந்த எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கலாம் என்றாலும், இந்த வரி கதையை முன்னகர்த்த எந்த விதத்திலும் உதவவில்லை எனும் போது இதை மன்றோ ஏன் எழுத வேண்டும்? அன்றாட நிகழ்வுகளில், இப்படி சட்டென்று மனதில் தோன்றும் அவதானிப்புக்களை தர்க்க ரீதியாக நியாயப்படுத்தவோ அவற்றைத் தடுக்கவோ முடியாது அல்லவா? யதார்த்த பாணி கதைகளாக இருந்தாலும் கனவுத்தன்மையுடன் கூடிய உரைநடையையும் காண முடிகிறது. ‘Runaway‘ கதையில், ஓடிப் போன க்ளாரா திரும்பி வந்தபின், அவர் ஓடிப்போக உதவிய அண்டை வீட்டுப் பெண்ணை பார்க்க க்ளாராவின் கணவன் க்ளார்க் வருகிறார். மிரட்டும் தொனியில் இருக்கும் க்ளார்க்கின் பேச்சு முற்றும் முன்

“.. The fog was there tonight, had been there all this while. But now at one point there was a change. The fog had thickened, taken on a separate shape, transformed itself into something spiky and radiant. First a live dandelion ball, tumbling forward, then condensing itself into an unearthly sort of animal, pure white, hell-bent, something like a giant unicorn, rushing at them.”

என்ற அமானுஷ்யத் தன்மை உடைய சூழல் உருவாகிறது. இதென்ன, ‘The hound of the Baskervilles’ போன்ற மிருகம் இவர்களை நோக்கி வருகிறது?. இல்லை, கிளார்க்கின் தொலைந்து போன ஆடுதான் திரும்பி வருகிறது  (unicorn பற்றிய குறிப்பு சட்டென்று புரிய வருகிறது அல்லவா?).

சரி ஏன் இந்த ஆட்டின் மீள் வருகைக்கு இப்படிப்பட்ட நுழைவு? இரு காரணங்கள். பேசப் பேச, இருவருக்கும் இடையே வளர்ந்து கொண்டே இருந்த பகைமையை தற்காலிகமாவேனும் நிறுத்த இது உதவுகிறது. (When two human beings divided by hostility are both, at the same time, mystified—no, frightened—by the same apparition, there is a bond that springs up between them, and they find themselves united in the most unexpected way. United in their humanity—that is the only way I can describe it. We parted almost as friends.). இதே ஆடு மெல்ல நடை போட்டு, நல்ல வெளிச்சத்தில் வந்திருந்தால் க்ளார்க்கின் கோபம், பயமாக முதலில் மாறி பின்பு, அப்போதைக்காவது நீர்த்துப் போய் இருக்குமா? இதை ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டாலும், ஓடிப்போன ஆடு, மனைவி திரும்பி வந்த அன்றுதான் திரும்ப வேண்டுமா- நம்பும்படி இல்லையே – சண்டையை நிறுத்த எளிமையான வழியை மன்றோ கையாண்டு விட்டார் என்றும் வாசகன் நினைக்கலாம். அதைத் தவிர்ப்பதுதான் இரண்டாவது காரணம். ஆட்டை க்ளார்க் அழைத்துச் செல்கிறார். க்ளார்க்/ க்ளாரா தம்பதியரின் வாழ்கை தொடர்கிறது. ஆனால் ஏன் திரும்பி வந்த ஆட்டைப் பற்றி க்ளாராவிடம் அவர் சொல்லவில்லை, அதைப் பிறகு யாருமே பார்ப்பதில்லையே. ஓடிப் போன மனைவி/ ஆடு திரும்பி வந்த அன்று, மனைவியின் மீது உள்ள/ அவரிடம் காட்ட முடியாத கோபத்தை க்ளார்க் ஆட்டிடம் காட்டி அதைக் கொன்று விட்டாரோ என்று வாசகன் யூகிக்கத்தான் முடியும்.

சில நாட்கள் கழித்து ஆடு திரும்பி வந்ததைப் பற்றி அறியும் க்ளாரா, அதைத் தன் கணவன் துரத்தி விட்டிருக்கலாம், அல்லது வேறொரு இடத்திற்கு அனுப்பி இருக்கலாம் என்று சாத்தியங்களை உருவாக்கினாலும், அவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள சிறுகாட்டில், சில நாட்களாக வல்லூறுகள் வட்டமிடும் இடத்தை பார்க்க தயங்குகிறார். ஆட்டை க்ளார்க் கொன்று விட்டது என்பது உண்மையெனில், அடுத்த முறை க்ளாரா ஓடிச்சென்று திரும்பினால் (வேறெந்த மிருகமும் ஓடிப் போய் திரும்பாத சூழலில்) க்ளார்க் என்ன செய்வார். அதை விட முக்கியம், க்ளாரா ஏன் இதை இன்னும் பொறுத்துக் கொண்டிருக்கிறார். கணவனை நீங்கிச் செல்லும்போது “A life, a place, chosen for that specific reason – that it would not contain Clark“ல் தன்னால் வாழ முடியாது என்று ஏன் பதறுகிறார். இந்தக் கேள்விகள் ஒரு புறமிருக்க, மன்றோ தன் எழுத்தின்/ கதையின் இறுதி வடிவத்தில் எதையும் வீணாக்குவதில்லை என்பது தெரிகிறது.

மன்றோவின் எழுத்தை முற்றிலும் கச்சிதமான ஒன்று என்று சொல்லும்போது, ‘கச்சிதம்’ என்ற வார்த்தை இறுக்கமான, ஒன்றின் ஒன்றின் அணிவகுத்து வரும் வார்த்தைகள் கொண்ட, ஒவ்வொரு சொல்லாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஒரு சொல் மிகாத, தோற்றத்தைத் தரும் உரைநடையை நினைவூட்டுகிறது. ஆனால் மன்றோவின் எழுத்திலோ, வார்த்தைகள் தன்னியல்பாக அதனதன் இடத்தில் ஆசுவாசத்தோடு பொருந்தும் உணர்வே கிடைக்கிறது. இப்படி சொல்வது “And then I want to rewrite it some more. Sometimes it seems to me that a couple of words are so important that I’ll ask for the book back so that I can put them in. ” என்றும் “I’m not too sure about this sort of thing. The answer may be that one should stop this behavior. There should be a point where you say, the way you would with a child, this isn’t mine anymore.” என்று தான் செய்யும் திருத்தங்கள் குறித்து சொல்லும் மன்றோவின் உழைப்பை எளிமைப்படுத்துவதாக இருந்தாலும், அவரின் மேதமை, அவர் செய்த மாற்றங்களை, நாம் இறுதி வடிவில் படிக்கும் போது ‘unobtrusive’காகவே தோன்றச் செய்கிறது. (மன்றோ மட்டுமல்ல, இசை கலைஞர், விளையாட்டு வீரர் என மேதைகளின் கலைக்குப் பின் உள்ள உழைப்பை பின் தள்ளுவது என்பது அவர்களின் மேதமையின் collateral damageகாகவே இருக்கிறது)

இதுவரை மனறோவின் எழுத்தின் அம்சங்கள் என நாம் பார்த்த அனைத்தும் ஒருங்கிணைந்த கதையாக “Powers” உள்ளது. ‘நான்சி’ (Nancy) என்பவரின் டைரி குறிப்புக்களாக 1920களில், கிராமச் சூழல், அவரின் நட்பு வட்டம் பற்றிய விவரணைகளுடன் இந்தக் கதை ஆரம்பிக்கிறது. அவரின் தோழியான டெஸ்ஸா (Tessa), தொலைந்த போன பொருட்கள் இப்போது இருக்கும் இடத்தை சொல்லக்கூடிய ஆற்றல் உடையவராக கருதப்படுகிறார். வில்ப் (Wilf) என்பவருடன் நான்சியின் திருமணம் நிச்சயமாகிறது. வில்பின் ஒன்று விட்ட சகோதரன் ஆல்லி (Ollie), அவருடன் தங்க வருகிறான். அவனை நான்சி டெஸ்ஸாவிடம் அழைத்துச் செல்ல, எழுத்தாளனாக/ பத்திரிக்கையாளனாக விரும்பும் ஆல்லி (Ollie), டெஸ்ஸா பற்றிய கட்டுரையை எழுதுகிறான். அவளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அமெரிக்கா அழைத்துச் செல்லவும் முயல்கிறான். இதுவரை நான்சியை மட்டுமே சுற்றி வந்த கதையில், ஆல்லி/ டெஸ்ஸா இருவரும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றனர், வில்ப் பின்னுக்குச் செல்கிறார்.

ஆல்லியின் திட்டங்கள் குறித்து தெரிய வந்தவுடன், ஆல்லிக்கு கடுமையான கடிதத்தையும், ஆல்லி இறுதியில் உன்னை ஏமாற்றி விடுவான் என்று டெஸ்ஸாவுக்கு இன்னொரு கடிதத்தையும் வில்ப் எழுதுகிறார். இதற்கு டெஸ்ஸா மேல் உள்ள அக்கறைதான் காரணமா அல்லது வேறேதேனும் உள்ளதா. டெஸ்ஸாவிற்கு கிடைக்கக் கூடிய புகழ் நான்சிக்கு பொறாமை அளிக்கிறதா அல்லது ஆல்லி மேல் அவருக்கு ஏதேனும் எண்ணங்கள் உள்ளதா. “To put it frankly, I cannot think of any worse fate than falling in love with him” என்று நான்சி எப்படி சொல்கிறார். அவர்களின் உரையாடல்களில், சந்திப்புக்களில் நட்பு தவிர எந்த தொனியும் வாசகனுக்கு தெரிவதில்லையே. டெஸ்ஸா கடிதத்தை பொருட்படுத்தாமல் அமெரிக்கா செல்கிறார். இருவருக்குமிடையே உள்ள தொடர்பு அறுகிறது.

இப்போது 1960களின் இறுதி. மனநல மையமொன்றில் இருக்கும் டெஸ்ஸாவை, அந்த நிலையம் மூடப்பட உள்ளதால், அவரை அங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு வந்த கடிதத்தின்படி அங்கு நான்சி வருகிறார். தன் கணவன் வில்ப் நோயுற்றிப்பதால் டெஸ்ஸாவை தன்னுடன் அழைத்துக் கொள்ள முடியாது என்று நான்சி சொல்கிறார். மனநிலை மைய அலுவலர் நான்சி டெஸ்ஸாவுடன் பேசும்போது, சிறிது நேரம் கழித்து அழைப்பதாகவும் அதைப் பயன் படுத்தி நான்சி கிளம்பி விடலாம் என்றும் சொல்கிறார்.

இதற்கு முன்பு தாங்கள் பிரிந்த போது உருவான கசப்பை மறந்த சந்திப்பு நடக்கிறது. தனக்கு நடத்தப்பட்ட சோதனைகள், மனநில இல்லத்தில் கொடுக்கப்பட்ட மின்சார அதிர்வுகள் என தன் வாழ்க்கை பற்றி சொல்லும் டெஸ்ஸா, ஆல்லி இறந்து விட்டதாகவும் சொல்கிறார். அது உண்மையா, கற்பனையா என்ற சந்தேகம் நான்சிக்கு வருகிறது. டெஸ்ஸாவை அழைத்துக் கொள்ள முடியாத தன் சூழலை நான்சி சொல்கிறார். அப்போது மனநிலை மைய அலுவலர் அழைக்க டெஸ்ஸா

“‘That’s so you won’t have to say good-bye to me,’ she said. She seemed to be settling into appreciation of a familiar joke. ‘It’s that trick of hers. Everybody knows about it. I knew you hadn’t come to take me away. How could you?'”

என்கிறார்.

“You were good to come to see me, Nancy. You can see I’ve kept my health. That’s something. You better pop in and see the woman.”
“I don’t have any intention of popping in to see her,’ said Nancy. ‘I’m not going to sneak out. I fully intend to say good bye to you.'”

என்ற ரீதியில் . தன்னால் இங்கிருந்து மீள முடியாத இயலாமையை உணர்ந்துள்ள டெஸ்ஸா, அழைத்துச் செல்ல முடியாத இயலாமையை உணர்ந்துள்ள நான்சி இருவருக்குமிடையே உரையாடல் நடக்கிறது. ஆனால் அந்த இயலாமையை கண்டு ஒளியாமல், வேறு பக்கம் பார்க்காமல், நேராக எதிர்கொள்ளும் இந்த நட்பின் கம்பீரம் நெகிழ்ச்சியான ஒன்று. தொடர்ந்து கடிதம் எழுதுவதாக சொல்லி நான்சி கிளம்பினாலும், நடைமுறையில் அது முடிவதில்லை. மெல்ல மெல்ல அந்த நிகழ்வே ஒரு கனவு போல் அவருக்கு தோற்றமளிக்க ஆரம்பிக்கிறது.

இப்போது 1970களின் ஆரம்பம். வில்ப் இறந்த பின், மாறுதல் தேவை என பிறர் வற்புறுத்தியதால் கடல் உலா செல்லும் நான்சி ‘Vancouver’ நகருக்கு வர ஆல்லியை சந்திக்கிறார். டெஸ்ஸாவை தான் சந்தித்தது குறித்து எதுவும் அவர் சொல்வதில்லை. வாழ்வில் தான் சந்தித்த மேடு பள்ளங்களைப் பற்றி விவரிக்கிறார் ஆல்லி. ESP போன்றவற்றின் மவுசு குறைய ஆரம்பிக்க, சர்க்கஸில் பணி புரியும் நிலைக்கும் தாங்கள் தள்ளப்பட்டதாக சொல்லும் அவர் ‘Leukemia’ தாக்கி டெஸ்ஸா மரணமடைந்ததாகவும் கூறுகிறார். அந்த துயரத்திலிருந்து இப்போது ஓரளவுக்கு மீண்டுள்ளதாக சொல்கிறார்.

தான் சொல்வது உண்மை தான் என்று ஆல்லி தன்னையே மனதளவில் தயார் செய்திருக்கக்கூடும் அல்லது தெரிந்தே பொய் கூறி இருக்கலாம். எதுவானாலும் தான் அறிந்த உண்மையைப் பற்றி நான்சி கூறாமல், “I suppose you found that life goes on,” என்று சொல்வதோடு இந்தக் கதை முடிந்திருக்கக் கூடும்.

ஆனால் மன்றோவிற்கு இன்னும் ஆழங்களுக்குள் செல்ல வேண்டியுள்ளது. நான்சி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு அவரை
ஆல்லி கொண்டு விட, நான்சி ஏதோ சொல்ல மூச்சிழுக்க

“No, Nancy”

“.. It wouldn’t turn out well..”

என்று ஆல்லி கிளம்புகிறார்.

ஆல்லி சொன்னது பொய் என்று தெரிந்திருந்தும், அதை நான்சி மறுத்துப் பேசாததையாவது புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். ஆனால் அவரை தன் அறைக்கு அழைக்கும் எண்ணம் எப்படி நான்சிக்கு தோன்றியிருக்கும்? விட்ட குறை தொட்ட குறையாக, அவர்களிடையே ஏதேனும் உறவிருந்தாலும், இப்படி பொய் சொல்பவனை எப்படி அறைக்கு அழைக்க முடியும். நட்பு, துரோகம், காதல் என உணர்வுகளில் எது எப்போது உணர்வுகளை ஆதிக்கம் செலுத்துகிறதோ அதன் அடிமை தான் மனிதனா?.

டெஸ்ஸாவிற்கு என்ன நடந்தது என நான்சி அறிய முயற்சிக்கிறார். அந்த மனநல மையம் மூடப்பட்ட தகவல் கிடைக்கிறது, ஆல்லியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை, தன் வீட்டை அவர் காலி செய்து விட்டார். டெஸ்ஸா/ ஆல்லிக்கு இடையே என்ன நடந்தது என்பதை நான்சி அறிய வாய்ப்பில்லாத சூழலில், நான்சியின் கனவா, அல்லது நினைவோடு இருக்கையில் அவர் உருவாக்கும் கற்பனையா என பிரித்தறிய முடியாத ஒரு surreal காட்சியோடு கதை முடிகிறது.

டெஸ்ஸா/ ஆல்லி ஹோட்டலறைக்கு வருகிறார்கள். உறவின் முடிவின் எல்லைக்கு வந்துவிட்ட சலிப்போடு ஆல்லியும் ,எதிர்காலத்தில் என நடக்குமோ என்ற பயத்தோடு டெஸ்ஸாவும் இருப்பது தெரிகிறது. அங்கு மீண்டும் டெஸ்ஸாவிற்கு ESP உணர்வு வந்துவிட்டதை சுட்டுவது போல் ஓர் சம்பவம் நடக்க, டெஸ்ஸா மகிழ்ந்து ஆல்லியை அணைக்கிறார். டெஸ்ஸாவை மன நல இல்லத்தில் சேர்க்கும் காகிதங்களை தயார் செய்து வைத்திருக்கும் ஆல்லியை இது சங்கடப் படுத்துகிறது.

“She is not an ill-natured person or a person with any bad habits, but she is not a normal person, she is a unique person, and living with a unique person can be a strain, in fact perhaps more of a strain than a normal man can stand. The doctor understands this and has told him of a place that she might be taken to, for a rest”

என்று அனுமதி காகிதங்கள் வாங்க ஆல்லி சொல்லியுள்ள காரணங்கள் உண்மையானவையா அல்லது தப்பித்துக் கொள்ளும் முயற்சியா. அப்படியே உண்மையாக இருந்தாலும், தன்னை நம்பி வந்த டெஸ்ஸாவை ஆல்லி எப்படி கைவிட முடியும். இது நான்சிக்கும் தோன்றியிருக்கக் கூடும். எனவேதான்

“He says to himself that he will get rid of the papers as soon as he can, he will forget the whole idea, he too is capable of hope and honor.”
“Yes, Yes. Tessa feels all menace go out of the faint crackle under her cheek”.

என்ற நேர்மறையான நம்பிக்கையோடு இந்தக் காட்சி முடிந்திருக்கலாம். ஆனால் கடும் சிக்களுக்கிடையில் hope and honorஉடன் வாழ்தல் என்பது அவ்வளவு எளிதா என்ன. எனவே தான் “But deep in that moment some instability is waiting, that Nancy is determined to ignore” என்று அவர் அச்சம் கொள்கிறார், அதை புறக்கணிக்க முயல்கிறார். ஆனால் காட்சி இத்துடன் முடிகிறது, அல்லது நடைமுறையில் என்ன நடந்திருக்கும் என்பதை உணரும் நான்சி தானே அதை முடித்துக் கொள்கிறார். “Gently, inexorably leading her away from what beings to crumble behind her, to crumble and darken tenderly into something like soot and soft ash” எரிந்து உதிர்வது ஆல்லி/டெஸ்ஸாவின் வாழ்க்கையா அல்லது ஆல்லியிடம் உள்ள அனுமதிக் காகிதங்களா என்று முடிவு செய்ய வாசகனிடம் மன்றோ விட்டு விடுகிறார். இதற்கான பதில் Hope and Honor பற்றி வாசகனின் கருத்து என்ன என்பதில் தான் உள்ளது.

கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் மன்றோவின் எழுத்தின் அனைத்துப் பரிமாணங்களையும், ‘Runaway’ என்ற ஒரு கதை தொகுப்பின் – பெண்கள் இளமையில் எடுத்த முடிவைப் பின்தொடரும் – சில கதைகளை மட்டும் கொண்டு, அறிய முடியாது. சிறுமிகள், பதின் பருவத்தினர், இளம்/நடுத்தர/முதிய தம்பதிகள் வாழும் பிற தொகுப்புக்களைப் பின் தொடர அவரின் மேதமை பற்றிய இன்னும் விரிவான சித்திரம் கிடைக்கும்.

(தொடர்வோம்)

மினெ மிஜுமூராவுடன் ஒரு நேர்முகம் – கொரின்னா பிகல்

– கொரின்னா பிகல் (Corinna Pichl) – 

புக்ஸ்லட் என்ற தளத்தில் வெளியான பேட்டியின் தமிழாக்கம் இது.

ஆங்கிலம் சர்வதேச மொழியாக இயங்குவது குறித்து, “ஆங்கிலத்தின் காலத்தில் மொழியின் வீழ்ச்சி” என்ற புத்தகத்தில் நாவலாசிரியர் மினெ மிஜுமூரா விவாதிக்கிறார்; பிற மொழிகளின் எதிர்காலம் குறித்து அவர் கேள்வி எழுப்புகிறார்- தங்களுக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ, இருமொழிகள் பேசும் உலகில் வாழப் பழகிக்கொள்ள வேண்டிய நிலையில் பிற மொழியினர் உள்ளனர் என்கிறார். இந்தப் புத்தகத்தில் மிஜுமூரா ஜப்பானிய மொழியின் வேர்களை விவரித்து, அது மிகப்பெரும் இலக்கியங்களை வாசிப்பதற்குரிய எழுத்து மொழியாக உருவானது எப்படி என்பதைப் பேசி, அதன் இன்றைய நசிவை உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளின் நசிவுடன் தொடர்புபடுத்தி எழுதுகிறார்.

2008ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டபோது இந்தப் புத்தகம் விற்பனையில் முதலிடம் பிடித்தது, நாடெங்கும் அதன் விஷயம் குறித்த சர்ச்சைகளுக்குக் காரணமானது. புத்தகத்தின் வர்த்தக வெற்றியில் இந்தச் சர்ச்சைக்கும் பங்குண்டு. அமேரிக்கா, ஜப்பான் ஆகிய இரு தேசங்களிலும் வளர்ந்தவர், பல சர்வதேச இலக்கிய நிகழ்வுகளுக்கு அடிக்கடி அழைக்கப்படுபவர் என்ற வகையில் உலக இலக்கியத்தில் ஆங்கிலத்தின் வளரும் தாக்கம் குறித்து அவர் தனித்துவம் கொண்ட பார்வை கொண்டவராய் உள்ளார். யேல் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு இலக்கியம் படித்து முடித்ததும் ஜப்பான் சென்று, அங்கு ஜப்பானிய மொழியில் எழுதும் நாவலாசிரியராய் உள்ளார். அவரது நான்கு நாவல்களும் ஜப்பானில் இலக்கிய விருதுகள் வென்றுள்ளன, ஆனால் அவற்றில் ஒன்று மட்டுமே, எ ட்ரூ நாவல் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் மொழி பேசும் நான் இருமொழி பழகுகிறேன், அமெரிக்க இலக்கிய இதழில் எழுதுகிறேன், நீங்கள் சொல்வது போலவே ஆங்கிலத்துக்கு நெருக்கமான வேறொரு தாய்மொழி கொண்டிருப்பதன் “கலப்பட வரம்” அளிக்கும் நன்மைகளை நான் உணர்கிறேன். ஜப்பானிய மாணவர்களுக்கும், ஏன், தொலைவில் உள்ள எந்த ஒரு மொழியைச் சேர்ந்தவர்களுக்கும் ஆங்கிலம் பயில்வது மிகக் கடினமாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டுகிறீர்கள். ஆனால் நீங்கள் ஆங்கில மொழியைச் சரளமாகப் பேசுகிறீர்கள். நீங்கள் அமேரிக்கா வந்தபோது ஒரு குழந்தையாக ஆங்கிலம் கற்றுக் கொள்வது உங்களுக்கு எப்படி இருந்தது?

முதலில் ஒன்று சொல்லிவிடுகிறேன், நான் சரளமான ஆங்கிலம் பேசுவதில்லை என்றுதான் கருதுகிறேன். ஜப்பானிய மொழி ஆங்கிலத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது, ஜப்பானில் பிறந்து வளர்ந்த எவருமே ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாது. எனக்கு ஆங்கிலம் பேசுவதைவிட வாசிப்பதுதான் வசதியாக இருக்கிறது.

அதைச் சொன்னாலும், நான் மிக மெதுவாக ஆங்கிலம் கற்கக் காரணம், அதை எதிர்த்து துவக்கம் முதல் முடிவு வரை போராடினேன். என்னால் அப்படிச் செய்ய முடிந்தது என்றால் இரு காரணங்கள் இருந்தன. ஒன்று, என் பெற்றோர் அமெரிக்காவுக்குக் குடியேறப் போகவில்லை, எப்படியும் ஒரு நாள் ஜப்பான் திரும்பிவிடுவோம் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தது. இரண்டாவதாக, தங்கள் பெண்கள் நல்லபடியாக திருமணம் செய்து கொண்டால் போதும் என்று எதிர்பார்த்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என் பெற்றோர். நாங்கள் பள்ளியில் எப்படி படித்தோம் என்பது பற்றி அவர்கள் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை.

ஆனால் ஆங்கிலம் அறியாதிருந்தது என் பள்ளி நாட்களில் மிகவும் கஷ்டமாக இருந்தது- அது வடுக்கள் விட்டுச் செல்லும் வாதையாக இருந்தது என்றுகூட சொல்லலாம். ஜப்பானிய மொழி பேசிக்கொண்டிருக்கும் வீட்டில் இயல்பாக இருந்த நான் வீட்டைவிட்டு வெளியே போனதுமே தனிமையும் நிராதரவாய் இருப்பதாகவும் உணர்ந்தேன். ஆனால் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முயற்சி செய்வதற்கு பதிலாக நான் அதைவிட்டு விலகினேன். இந்த அளவுக்கு நான் ஆங்கிலம் கற்றுக்கொண்டதே அதிசயம்தான்.

நீங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள மறுக்க காரணம் என்ன?

பல விஷயங்கள் வேறு பாதிரி இருந்திருந்தால் நான் இன்னும் சுலபமாக ஆங்கிலம் கற்றுக் கொண்டிருப்பேன். உதார்ணத்துக்கு நான் ஆசியனாக இல்லாமல் ஐரோப்பியனாக இருந்திருந்தால் சுலபமாக இருந்திருக்கும்- 1960களில் ஈஸ்ட் கோஸ்ட்டில் மிகச் சில ஆசியர்களே இருந்தார்கள், நான் எப்போதும் அந்நியமாகவே உணர்ந்தேன். அல்லது நான் இன்னும் சிறிய வயதில் இங்கு வந்திருக்க வேண்டும், அந்த அளவுக்கு ஆர்வமாக நாவல்களைப் படிப்பவளாய் இருந்திருக்கக் கூடாது. அல்லது, ஜப்பானிய நவீன இலக்கியத்தில் அத்தனை அதிக அளவில் புத்தகங்கள் இருந்திருக்கக் கூடாது, என்னைப் போன்ற ஒரு பெண் தன்னை இழப்பதற்குரிய புத்தகங்கள், மிகவும் மதிக்கப்படும் புத்தகங்கள் ஜப்பானிய மொழியில் அந்த அளவுக்கு அதிகமாக இருந்திருக்கக்கூடாது. அல்லது, ஆங்கில யுகம் பிறந்துவிட்டது என்று உணரும் சாமர்த்தியம் எனக்கு இருந்திருக்கலாம்! ஆனால், நான் எவ்வளவுக்கு எவ்வளவு ஜப்பானிய மொழியில் வாசிதேனோ, அந்த அளவுக்கு அதன் இலக்கியத்தை நேசித்தேன், அந்த அளவுக்கு ஆங்கில வாசிப்பின் வசீகரம் குறைந்தது- ஆங்கில மொழியில் பேசுவது பற்றிச் சொல்லவே வேண்டாம்.

ஆங்கில மொழியில் இல்லாதது எதை ஜப்பானிய மொழியில் கண்டீர்கள் என்று சொல்ல முடியுமா?

இது கடினமான கேள்வி. நான் ஜப்பானிய மொழியில் மட்டும் எதையோ கண்டேன் என்பதால் அதில் எழுத ஆரம்பித்தேன் என்று சொல்ல முடியாது. ஜப்பானிய மொழியில் என்னை மிகவும் வசீகரிக்கும் விஷயம் அது மூன்று வெவ்வேறு வகை குறிகளைத் தன் எழுத்தில் பயன்படுத்துகிறது என்பதுதான்: சீன எழுத்துகள், அவை பெரும்பாலும் வரைவெழுத்துகளாய் (ஐடியோகிராம்களாக) செயல்படுகின்றன, தவிர இரு வெவ்வேறு வகை ஒலியெழுத்துகளை (ஃபோனோகிராம்களை) பயன்படுத்திக கொள்கிறது. இதனால் ஜப்பானிய மொழியின் எழுத்துப்பிரதி மிகச்செறிவாக இருக்கிறது, அதை வேறொரு மொழிக்குக் கொண்டு செல்லவே முடியாது. இதை விளக்க முயற்சி செய்கிறேன், பாருங்கள்.

ஒரு பூந்தோட்டத்தை விவரிக்கும் பக்கம் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மலர்களின் பெயர்கள் உங்கள் கண்முன் தோன்றுகின்றன. அவை அனைத்தும் சிக்கலான சீன எழுத்துகளில் இருக்கின்றன, வடிவத்தில் எளிய ஒலியெழுத்துகளிடையே இவை தனித்துத் தெரிகின்றன. வரைவெழுத்துகளில் எழுதப்பட்ட மலர்களின் பெயர்களுக்கு கவித்துவ தொடர்பு உண்டு என்பதால், அந்தப் பக்கத்தைப் பார்க்கும்போதே மணம் நிறைந்த அழகிய மலர்கள் நிறைந்த தோட்டம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு வருகிறது.

ஜப்பானிய மொழியில் எழுதுவதற்கு மாறாக, நடைமுறை காரணங்களுக்காக ஆங்கிலத்தில் எழுதுவது குறித்து நினைத்துப் பார்த்ததுண்டா?

இல்லை. நான் பத்திரிக்கைத்துறையிலோ கல்வித்துறையிலோ இருந்திருந்தால் ஆங்கில மொழியில் எழுதுவதில் அர்த்தம் இருக்கும்- நாம் சொல்வது எத்தனை பேரைச் சென்றடைய முடியுமோ அத்தனை பேரைச் சென்றடையும். அந்த வகையில் “ஆங்கிலத்தின் காலத்தில் மொழியின் வீழ்ச்சி” ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. இந்தப் புத்தகத்தில் நான் சில விஷயங்களைச் சொல்ல விரும்பினேன். ஆனால் நாவல்கள் வேறு வகை. நான் என்ன எழுதுகிறேன் என்பதை நான் எப்படி எழுதுகிறேன் என்பதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. யேட்ஸ் சொன்னதுபோல், “நடனமங்கையை நடனத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியுமா?”

நீங்கள் பிரெஞ்சு இலக்கியமும் படித்திருக்கிறீர்கள். பிரெஞ்சு மொழியில் எழுதும் ஆசை ஏற்பட்டிருக்கிறதா?

ஐயோ, இல்லவே இல்லை. எனக்கு அந்த மொழியைப் பிடிக்கும், ஆனால் அப்படி ஒரு ஆசை வரவில்லை. தங்கள் மொழி தவிர வேற்றுமொழியில் எழுதும் எழுத்தாளர்கள் இருக்கவே செய்கின்றனர், நான் பிரெஞ்சு மொழியில் எழுதுவது சாத்தியம் என்று சொல்ல முடியும். ஆனால் அதற்கு நான் இன்னும் நூறு மடங்கு அதிகம் பிரெஞ்சு இலக்கியம் வாசித்திருக்க வேண்டும், பிரான்ஸ் போய் வாழ வேண்டியுமிருக்கலாம். ஆனால் ஜப்பானிய மொழியில் எழுதுவதை மட்டுமே நான் எப்போதும் விரும்பினேன்.

மொழி சார்ந்த மெய்ம்மை கறித்து பேசுகிறீர்கள்- புத்தகம் படிக்க வேண்டும், அதன் சுருக்கத்தைப் படித்து பிரயோசனமில்லை என்பது போன்ற விஷயம் அது என்கிறீர்கள். ஆனால் அப்படிப்பட்ட உண்மைகளை எந்த அளவுக்கு மொழிபெயர்க்க முடியும் என்று சந்தேகமாக இருக்கிறது. நாம் இன்றும் வாசிக்கும் புத்தகங்கள் என்று அரிஸ்டாட்டில் எழுதியதைச் சொல்கிறீர்கள், ஆனால் அவர் பெரும்பாலும் மொழிபெயர்ப்பில்தான் வாசிக்கப்படுகிறார்.

கல்வித்துறையில் எழுதப்படுவதை பாடநூல்களாக மொழிமாற்றம் செய்ய முடியும். ஆனால் ஓர் இலக்கியப் படைப்பை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதை மூல மொழியில்தான் வாசித்தாக வேண்டும். அதில் பலர் எழுதுவதும் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட இயல்பு கொண்டவையாக இருக்கின்றன. அரிஸ்டாட்டில் எழுதியது அப்படிப்பட்டது. அவர் குறித்து பேச, அவர் எழுத்தைப் பேசியாக வேண்டும், ஆனால் கிரேக்க கல்வித்துறையில் இருந்தால்தான் அவரை அந்த மொழியிலேயே வாசிப்பீர்கள். பொதுவாக தம் மொழியில் வாசிப்பதுதான் வழக்கம்.

இங்கும் ஆங்கிலம் சர்வதேச மொழியாக இருப்பதால் அரிஸ்டாட்டிலின் ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கு உயர்மதிப்பு இருக்கிறது. நீங்கள் அரிஸ்டாட்டில் பற்றி எழுத விரும்புகிறீர்கள், அதை எவ்வளவு பேர் படிக்க முடியுமோ அவ்வளவு பேர் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் ஆங்கிலத்தில் எழுதவே வாய்ப்பு அதிகம். நீங்கள் ஆங்கிலத்தில் மேற்கோள் காட்டப்போவதால் அவர் குறித்த ஆங்கில நூல்கள்தான் வாசிப்பீர்கள். துவக்கத்தில் பிற மொழிபெயர்ப்புகளைக் காட்டிலும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் அரிஸ்டாட்டிலின் உண்மையைச் சரியாகச் சொல்லிவிடப் போவதில்லை, ஆனால் காலப்போக்கில் பிறவற்றைவிட ஆங்கில மொழிபெயர்ப்புகளே சிறந்தவையாக வளர்ச்சிபெற வாய்ப்பிருக்கிறது- அதிகமான அளவில் ஆங்கிலத்தில் அரிஸ்டாட்டில் வாசித்து அவரை மேற்கோள் காட்டும்போது மேலும் சிறந்த மொழிபெயர்ப்புகள் அளிப்பதற்கான போட்டியும் அதிகரிக்கிறது. ஒரு நாள் குறிப்பிட்ட ஒரு மொழிபெயர்ப்பு மிகச் சிறந்தது என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதுவே உலகெங்கும் வாசிக்கப்பட்டு மேற்கோள் காட்டப்படும் நிலை உருவாகிறது.

சர்வதேச நூலகம் குறித்த உற்சாகத்தை வெளிப்படுத்திய ஒரு கட்டுரையில் உள்ள மடமை குறித்து எழுதியிருந்தீர்கள். எழுதப்பட்ட அத்தனை பிரதிகளையும் கூகுள் நூலகச் செயல்திட்டம் அனைவரும் வாசிக்கக் கொண்டு செல்கிறது என்றாலும் ஆங்கில நூலகங்கள் மட்டும்தான் உலகளாவியதாக இருக்கும், பிற நூலகங்கள் மிகச் சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படும். ஜப்பானிய இலக்கியம் மொழிபெயர்ப்பு வழியாக உலகளாவிய நூலகத்தில் நுழைவது குறித்து உங்களுக்கு ஆறுதலாக இருக்கிறதா?

ஜப்பானிய இலக்கியம் ஆங்கில நூலகத்தினுள் புகுவதைச் சாத்தியப்படுத்தும் ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளருக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன்- ஆங்கில நூலகம் மட்டுமே உண்மையான ஒரே உலகளாவிய நூலகம். இந்த மொழ்பெயர்ப்புகள் இன்னும் சில காலம் தொடரும் என்ற எண்ணம் ஆறுதலாகவே இருக்கறது, மேலும் சிறந்த மொழிபெயர்ப்புகள் தொடர்ந்து வரவிருக்கின்றன.

ஆனால் என்னைப் போன்ற ஒருத்திக்கு, ஜப்பானிய இலக்கியம், புதியதும் பழையதும், அனைத்துமே என்றாவது ஒரு நாள் இணையத்தில் பாதுகாக்கப்படும் என்ற எண்ணமே அதைவிட அதிக ஆறுதலாய் இருக்கிறது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்த, மகிழ்ச்சியளிக்கும் புத்தகங்கள் ஜப்பானிய மொழி வாசிப்பவர்களுக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும், அவர்கள் எண்ணிக்கையளவில் எவ்வளவு குறைவாய் இருப்பினும். ஒருவேளை ஜப்பானிய தீவுகள் அனைத்தும் ஓர் எரிமலைக் குமுறலில் உடைந்து சிதறினாலும் மானுட இனம் ஜப்பானிய மொழியில் வாசிக்க இவை கிடைக்கும், எப்போதும் யாரோ ஒரு சில கிறுக்கர்கள் அவற்றால் வசீகரிக்கப்பட்டு அவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டுதான் இருப்பார்கள். எனக்கு நன்னம்பிக்கை அதிகம் கிடையாது, ஆனால் மனிதர்களின் கிறுக்குத்தனத்தில் நம்பிக்கை இருக்கிறது!

ஆங்கில வாக்கியங்களுக்கு எழுவாய் (சப்ஜெக்ட்) தேவையில்லை என்று நீங்கள் சொன்னது சுவையாக இருந்தது. ஜப்பானிய மக்கள் ஒருவரோடொருவர் உறவாடுவதிலும் பாலினம் குறித்து உணர்வதிலும் இதனால் மிகுந்த தாக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆமாம், ஜப்பானிய வாக்கியங்களின் இலக்கண அமைப்பில் எழுவாய் தேவையில்லை; சூழமைவைக் கொண்டே எழுவாய் என்ன என்று ஊகித்துவிடலாம். மனநிலையை வெளிப்படுத்த எழுவாய் இல்லாத வாக்கியங்கள் உதவுகின்றன. ஆனந்தம் என்ற சொல்லின் எழுவாய் குறிப்பாய்ச் சொல்லப்படலாம் அல்லது பொதுவாய்ச் சொல்லப்படலாம், அது அந்தச் சொல் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொருத்தது. யார் ஆனந்தமாய் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, உன்னைச் சுற்றியுள்ள எல்லாம் ஆனந்தமாய் இருப்பதாய் தெரிகின்றன என்றால், “ஆனந்தம்” என்று மட்டும் எழுதினால் போதும். ஆங்கிலத்திலும் இதைச் செய்யும் சுதந்திரம் எடுத்துக் கொள்கிறோம், ஆனால் ஜப்பானிய மொழியில் இது பிழையற்ற முழுமையான வாக்கியம்.

அதேபோல் பொதுவாக ஜப்பானிய மொழி ‘நான்’ என்ற சொல்லையும் தவிர்க்கிறது. ஆனால் இதில் சுவாரசியமான் விஷயம் என்னவென்றால் நீ யாரைப் பார்த்து பேசுகிறாயோ, நீ எப்படிப்பட்ட உறவு பூண விரும்புகிறாயோ, அதற்குத் தகுந்தாற்போல் உன்னை நீ எப்படி விவரித்துக் கொள்கிறாய் என்பது மாறுகிறது சகஜமாகப் பேசும்போதும், நீ ஆணா பெண்ணா என்பதைப் பொருத்தும் இந்த ‘நான்’ மாறுகிறது. இதனால்தான் ஜப்பானிய நாவல்களில் சொன்னான், சொன்னாள் என்ற அடையாளம் இருப்பதில்லை. நான் என்ற சொல்லுக்கு இணையான பத்து பன்னிரெண்டு சொற்களை எளிதாகச் சொல்ல முடியும். அதே போல்தான் நீ என்ற சொல்லும். இவையெல்லாம் மேற்கத்திய மொழி பேசுபவர்களுக்கு குழப்பமாக இருக்கும்.

வெவ்வேறு மொழிகளுக்கு வெவ்வேறு இயல்புகள் இருப்பதாகச் சொல்லப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உதாரணமாக, தத்துவம் பேசச் சிறந்த மொழி என்று ஜெர்மன் மொழி சொல்லப்படுகிறது, அது தர்க்கம் மற்றும் பகுப்பாய்வுக்கான கட்டமைப்பு கொண்டிருக்கிறது. மொழி சார்ந்த உண்மைகள் என்று நீங்கள் சொல்வது இது போன்ற ஒன்றா?

ஆமாம், நிச்சயம் அது போன்றுதான் நினைக்கிறேன். இது பயங்கரமான பொதுமைப்படுத்தல் போல் தெரியும், மனிதன் இந்த உலகை எப்படி புரிந்து கொள்கிறான் என்பது மேற்கத்திய மொழிகளில் உள்ளது போல் அவ்வளவு தீர்மானமாக- அவ்வளவு தர்க்கப்பூர்வமான தீர்மானத்தன்மையுடன்- வெளிப்பட வேண்டிய தேவையில்லை என்பதை ஜப்பானிய மொழி எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. ஜப்பானிய மொழியிலும் அத்தகைய தர்க்கத்துக்கும் பகுப்பாய்வுக்கும் இடமிருக்கிறது, ஆனால் அப்படியிருக்க வேண்டிய பிழைப்பு அதற்கில்லை என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம், நாம் இன்று புழங்கும் ஜப்பானிய மொழி அப்படியில்லை என்றாவது சொல்லலாம். இங்கு நிகழ் காலத்தைக் கடந்த காலத்துடன் இணைக்க முடியும். ஒன்று ஒருமையா பன்மையா என்று சொல்ல வேண்டியதில்லை. வாக்கியங்கள் அடுத்தடுத்து ஆனால், மேலும், ஆகவே என்று தொடர்பு சேர்த்துக் கொண்டு ஒன்றையொன்று தொடர வேண்டியதில்லை. அது போன்ற இணைப்புச் சொற்கள் முக்கியமில்லை. பகுத்தறிவுச் சிந்தனையைத் தடை செய்கிறது என்று பல ஜப்பானியர்கள் தங்கள் மொழி குறித்து குறைபட்டுக் கொள்வதுண்டு. நாம் பயன்படுத்தும் மொழிக்கு ஏற்ப உலகைப் பல வகைகளில் புரிந்து கொள்ள முடியும் என்று நான் உணர்ந்ததும் எனக்கு அது ஒரு பெரிய விடுதலை உணர்வு அளித்தது. நல்ல வழி, தவறான வழி என்றெல்லாம் கிடையாது.

மேலை நாடுகளுக்கு வெளியே உள்ள மொழிகளைப் பேசுபவர்கள் ஆங்கிலம் கற்கச் சிரமப்படுவது அவர்கள் மொழிகளை மிகையான ஆங்கில தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது என்று நினைக்கிறேன். ஜப்பானிய மொழி பேசும் ஒருவர் ஆங்கிலத்தைச் சரளமாய் பேசுவது மிகக் கடினம் என்று நீங்களே சொன்னீர்கள். ஜப்பானிய மொழிக்கு இறக்குமதி செய்யப்படும் அதிக எண்ணிக்கையிலான ஆங்கிலச் சொற்கள் பற்றி சொன்னீர்கள். அதிலும் குறிப்பாக விளம்பரத் துறையும் தொலைகாட்சிகளும் இதைச் செய்வதாய் குறிப்பிட்டீர்கள். உண்மையில் ஆங்காங்கே ஒரு சில ஆங்கிலச் சொற்கள் ஒரு மொழியில் புழக்கத்தில் இருக்கிறது என்பது அந்த மொழியை எந்த அளவுக்கு பாதித்துவிட முடியும் என்று சந்தேகமாக இருக்கிறது.

கடந்த காலத்தில் ஜப்பானிய மொழி தாராளமாக சீன மொழிச் சொற்களைக் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது. சீன எழுத்துகள் வடிவ உருவங்களாக (ஐடியோகிராம்) வேலை செய்வதால் இது அருமையாக பயன்பட்டது. இன்னும் துல்லியமாகச் சொன்னால் ஜப்பானியர்கள் தங்களுக்கே உரிய ஒலி எழுத்துகளை வடிவமைத்துக் கொண்டதும் சீன மொழி எழுத்துகள் அவ்வாறு இயங்கின. ஒவ்வொரு சீன எழுத்துக்கும் ஒரு அர்த்தம் உண்டு, அந்த எழுத்துகளின் அர்த்தம் என்ன என்று உங்களுக்கு புரிந்து விட்டது என்றால் சீன மொழியில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொள்ளலாம், மக்கள் புரிந்து கொள்வார்கள்.

ஆனால் ஐரோப்பிய சொற்களைக் கடன் பெறும்போது அப்படி நடப்பதில்லை. இன்று ஜப்பானிய மக்கள் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையில் ஆங்கிலச் சொற்களைப் புழக்கத்துக்கு எடுத்துக் கொள்கிறார்கள், நேரடியாகவே அவற்றை ஜப்பானிய மொழி வாக்கியங்களில் இணைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்கள் அகரமுதலி பயன்படுத்துவது போல் அல்லாமல் ஜப்பானியர்கள் ஒலி எழுத்துகள் (போனோகிராம்) பயன்படுத்துகின்றனர். எனவே ஆங்கிலச் சொற்களின் ஒலியை எழுத குத்துமதிப்பான உபயோகத்துக்கு தம் மொழியைக் கொண்டு செல்லவேண்டும். இந்தச் சொற்களின் அர்த்தம் என்னவென்றுகூட பலருக்குத் தெரிவதில்லை. ஐடி துறையில் ஆங்கிலச் சொற்களை இரவல் வாங்குவது பயனளிக்கிறது ஏறனு நினைக்கிறேன், அங்கு எல்லாரும் இருமொழி தெரிந்தவர்களாக இருக்கின்றனர். மற்றபடி இதுவெல்லாம் மூடத்தனம், நம்மைக் கேவலப்படுத்தும் விஷயம்.

தங்கள் மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களைவிட ஆங்கிலம் பேசும் உலகிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு கூடுதல் மதிப்பு அளிக்கும்போது, அதாவது, தம் கலாச்சாரத்தைவிட ஆங்கிலம் வழி இறக்குமதியாகும் கலாச்சாரத்தை மதிக்கத் துவங்கும்போது மொழியின் வீழ்ச்சி துவங்குகிறது என்று சொல்கிறீர்கள். முன்னர் காலனிய காலகட்டத்தில் இருந்தது போல், அனுபவத்தில் தம் பண்பாட்டைத் தாழ்ந்ததாகக் கருதி அதைக் கைவிடுதல் நிகழ்கிறது. நீங்களே உங்கள் வளர்பருவத்தில் ஆங்கிலத்தில் உள்ள அனைத்துக்கும் எதிராகப் போராடியிருக்கிறீர்கள். ஜப்பானில் அதுபோல் ஆங்கிலத்தை எதிர்க்கக்கூடியவர்கள் இருக்கிறார்களா? ஆங்கிலத்தின் மேலாதிக்கத்துக்கு எதிராக ஒரு கலாசார நகர்வு ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?

தெரியவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஜப்பானிய மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்வதே பிற்போக்குத்தன, தேசியவாதச் செயலாகி விட்டது. ஆனால் இந்தப் போக்கில் மெல்ல ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்று உணர்கிறேன். பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வு வந்திருப்பதையும், தங்கள் மொழியை புதிதாய் பார்க்க வேண்டும் என்றும் அதை இன்னும் கொஞ்சம் மதிக்க வேண்டும் என்றும் அவர்கள் நினைப்பதைக் காண முடிகிறது. இங்கிருந்து எங்கே போகிறோம் என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லைதான்.

இன்றுள்ள பல்வேறு மொழிகளைக் காக்க உலக அளவில் என்ன செய்ய முடியும்? நீங்கள் ஜப்பானிய மொழி பற்றி பேசுகிறீர்கள், தேசிய மொழியாகும் அதிர்ஷ்டம் அதற்கு இருக்கிறது. ஆனால் சிறிய மொழிகள், வலுவான தேசிய அமைப்புடன் தொடர்புபடுத்தப்படாத மொழிகள் என்ன செய்ய முடியும்?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது கடினம். பன்மொழிப் பண்பாட்டைக் காப்பாற்ற ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகள் எடுத்துள்ள நிறுவன நடவடிக்கைகள் முக்கியமான முன்னுதாரணமாய் இருக்கின்றன, நடைமுறையில் ஆங்கிலம் பொதுமொழியாய் இருப்பினும் அது போன்ற நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். 430,000 பேர் பேசும் மால்டீஸ் மொழியும் 130,000 பேர் பேசும் ஐரிஷ் மொழியும் அங்கு பிரதிநிதித்துவம் கொண்டிருக்கின்றன. ஆனால் வலுவான தேச அமைப்பு சாராத சிறு மொழிகள் பிழைப்பது கடினம்தான். பலவும் விழுந்து அழியும், அதிலும் குறிப்பாக எழுத்து வடிவம் இல்லாத மொழிகள் விரைவில் அழியக்கூடும். ஆனால் பாஸ்க் போன்ற ஒரு மொழியைப் பாருங்கள், அந்த மொழி பேசுபவர்கள் அதிகமில்லை, 720,000 பேர்தான், அது ஒரு சுதந்திர தேசத்தின் மொழியாக இருக்கும் வாய்ப்பே இல்லாமல் போகலாம், ஆனால் அது உயிர்ப்புள்ள மொழியாகவே இருக்கும், ஏனெனில் அதன் மக்கள் அதில் அவ்வளவு ஈடுபாடு கொண்டிருக்கின்றனர்.

உங்கள் புத்தகம் சுவாரசியமாக இருக்கக் காரணம் ஆங்கிலம் என் மொழியின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றி என்னைச் சிந்திக்கச் செய்தது. உங்கள் புத்தகம் ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு அளிக்கும் செய்தி என்ன?

ஆங்கிலத்தை தாய் மொழியாய் கொண்டவர்கள், தங்கள் மொழியைப் பயன்படுத்தும்போது அவர்கள் உலகப் பொதுமொழியைப் பயன்படுத்துகின்றனர். இது அவர்களுக்கு மட்டுமே உரிய பெருமை. இந்தப் பெருமையில் உள்ள பேதைமை கொஞ்சம் நீங்கினாலும், இந்தப் புத்தகத்தின் நோக்கம் நிறைவேற்றப்பட்டதாகும்.

நன்றி – Bookslut

ஒளிப்பட உதவி – Pagina12

மொழிகளை மாற்றிக் கொள்ளுதல் – ஐடன் டாய்ல்

 – ஐடன்  டாய்ல் (Aidan Doyle) – 

ஐடன் டாயல் blog.oup.com என்ற தளத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

மொழிமரணத்தைப் பற்றியும் மொழியின் புனரமைப்பைப் பற்றியும் பேசும்போது மீண்டும் மீண்டும் இரு மொழிகள் குறிப்பிடப்படுகின்றன- ஐரிஷ் மற்றும் ஹீப்ரூ மொழிகள். ஐரிஷ் மொழி பற்றிய விமரிசனங்களில் கண்டனத்தின் மெல்லிய காட்டம் சேர்ந்து கொள்கிறது. ஆங்கிலத்துக்கு ஆதரவாக அண்மையில்தான் அது ஐரிஷ் மக்களில் பெரும்பாலானோரால் கைவிடப்பட்டது- எனவே தங்கள் பாரம்பரியத்தை நிராகரித்த மக்களுக்கு உதாரணமாக ஐரிஷ் மொழி சுட்டப்படுகிறது. மாறாய், மொழியுணர்வின் நன்னடத்தைக்கு முன்னுதாரணமாய் ஹீப்ரூ மொழி சுட்டப்படுகிறது. அதன் மக்கள் அதை நிராகரிக்கவில்லை என்பது மட்டுமல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இறந்து கிடந்த மொழி புத்துயிர்ப்பு பெற்று இன்று செழித்துக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் முன்னுதாரணம் காட்டப்படும்போது ஐரிஷ் மக்கள் தங்களைச் சற்றே கையாலாகாதவர்கள் போல் உணர்கின்றனர். “நீங்கள் ஏன் இஸ்ரேலியர்கள் போலிருக்கக் கூடாது?” என்று எங்களை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள், பிடிவாதக்கார குழந்தையைப் பார்த்து வெறுத்துப்போன பெற்றோர் கேட்பதுபோல். 800 ஆண்டுகால காலனியாதிக்கம் என்று எதையோ முனகியபடி தலையைத் தொங்கப் போட்டுக் கொள்வதுதான் பொதுவாக எங்கள் வழக்கம், அல்லது ஜேம்ஸ் ஜாய்சம் யூடூவும் பாதி ஐரிஷ்காரர்கள் என்று நினைவுபடுத்துகிறோம். இப்போது நான் வேறொரு பதில் அளிக்க முயற்சி செய்யப் போகிறேன்.

வாழ்க்கையைப் போல் மொழியிலும் குறிப்பிட்ட ஒரு நெறி காலாவதியாக நேர்கிறது. இப்படிச் சொல்லும்போது மொழிக்கு நடைமுறைப் பயன்பாடு இல்லை என்று சொல்லவில்லை. முழுமையாய் மொழி சார்ந்து பார்த்தால் எந்த மொழியும் வேறொன்றைவிட கூடுதலாகவோ குறைவாகவோ பயன்பாடு கொண்டதல்ல. லத்தின் மொழி எண்களை எழுதுவது நமக்குச் சிக்கலாக இருப்பது போல் தெரிகிறது, ஆனால் ஐரோப்பாவின் பாதியை வென்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் அது போதுமானதாக இருந்தது.

ஐரிஷ் மொழி கற்பிப்பவன், ஐரிஷ் மொழியில் ஆய்வு செய்பவன் என்ற வகையில், ஆங்கிலம் தர்க்கப்பூர்வமான மொழி என்றும் ஐரிஷ் மொழிக்கு பெண்மைத்தன்மை இருக்கிறது என்றும் ஐரிஷ் மொழி ஆங்கிலத்தைவிட ஆன்மீக மொழி என்றும் சந்தேகத்துக்கே இடமில்லை என்பது போன்ற ஒரு அதிகாரபூர்வ தொனியில் சொல்பவர்களிடம் பேசி களைத்து விட்டேன். நாம் வாழும் உலகில் ஆங்கிலம் கணிப்பொறி நிரலிகளின் மொழியாக இருக்கிறது, நம்மில் பலரும் ஐரிஷ் மொழியை நாட்டுப்புறத் திருவிழாக்களில் மட்டும்தான் காணகிறோம், அல்லது அட்லாண்டிக் கடற்கரையின் அழகிய சூழலில் அதை அறிகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இது வரலாற்றின் விபத்து, மொழிகளுக்கு உள்ளார்ந்த ஒழுங்கு என்று எதுவும் இல்லை, மொழிகள் தன்னிச்சையாய்த் தோன்றும் ஒலிகளின் வரிசைகள்தான்.

அப்படியானால் காலாவதியான நெறி என்று நான் எதைச் சொல்கிறேன்? ஒரு சமூகத்துக்கும் கலாசாரத்துக்கும் தொடர்பின்றி எந்த மொழியும் சுதந்திரமாய் வாழ்வதில்லை. வேறொரு சமூகத்தின் தீவிர அழுத்தத்தை எதிர்கொள்ளும்போது எந்த ஒரு சமூகமும் தன்னை மாற்றிக்கொண்டுதான் தொடர முடியும். இது தொழில்நுட்பத்தை மாற்றிக் கொள்வதாய் இருக்கலாம், அல்லது மதமாற்றத்தை ஏற்றுக் கொள்வதாய் இருக்கலாம், அல்லது தன் மொழியை மாற்றிக் கொள்வதாய் இருக்கலாம்.

அயர்லாந்து விஷயத்தில் பதினெட்டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் கெயிலிக் மக்கள் அத்தகைய அழுத்தத்தை எதிர்கொண்டனர். ஐரிஷ் மொழி தன்னைப் பேசுபவர்களை மோசம் செய்யவில்லை. ஆனால் ஐரிஷ் மொழிக்குச் சாத்தியப்படாத வாய்ப்புகளை ஆங்கில மொழி அளித்தது, அதனோடு இது போட்டி போட முடியவில்லை. நான் வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து போன்ற லௌகீக நன்மைகளை மட்டும் சொல்லவில்லை. அச்சில் இருக்கும் உலகுக்கு ஒரு வாசலை ஆங்கிலம் திறந்து கொடுத்தது, அதனால் வரும் அத்தனை வாய்ப்புகளுக்கும் வாசல் திறந்தது- கலாசார, அரசியல், இலக்கிய வெளிப்பாடுகளின் புதிய வடிவங்களை ஆங்கிலம் வழி அடைய முடிந்தது. அந்நாளைய ஐரிஷ் மொழியில் இத்தகைய வெளிப்பாட்டு சாத்தியம் இருக்கவில்லை. பெரும் பஞ்சத்துக்குப்பின் புலம் பெயர்ந்த ஐரிஷ் மக்களுக்கு ஆங்கலம் தப்பிச் செல்லும் வழியாகவும் இருந்திருக்கலாம். சிலசமயம், சரித்திரத்தைப் போலவே, மொழியும் ஒரு சுமையாகிறது.

“அது சரி,” என்று நீங்கள் சொல்லலாம், “ஹீப்ரூ மொழியை உயிர்ப்பித்த யூதர்கள் பற்றி என்ன சொல்லப் போகிறாய்? அவர்கள் புதுவகை வெளிப்பாடுகளைத் தேடிப் போகவில்லை. அவர்கள் கடந்த காலத்தின் சங்கிலிகளைக் உடைத்தெறியவில்லை”. உண்மையில், அவர்கள் அதைச் செய்தார்கள். இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தவர்களில் பலரும் யிட்டிஷ் மொழியைத் தாய்மொழியாய் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் தாய்மொழியை ஹீப்ரூ மொழிக்காக மாற்றிக் கொண்டார்கள். புதிதாய் வந்தவர்களின் அசௌகரியத்தைத் தவிர, இதில் மிகப்பெரிய கலாசார இழப்பும் உணர்வுபூர்வ இழப்பும் இருந்தது.

ஐரோப்பாவில் உள்ள யூதச் சமூகங்கள் பல நூற்றாண்டுகளாய் யிட்டிஷ் மொழி பேசிக் கொண்டிருந்தன. அதற்கென்று செழிப்பான இலக்கியமும் நாட்டார் வழக்கும் உண்டு. அது அத்தனையும் நவீன இஸ்ரேலின் ஹீப்ரூ பேசும் புதிய சமூகத்தில் இழக்கப்பட்டுவிட்டது. ஒரு மொழியைக் கைவிட்டு இன்னொன்றை ஏற்றுக்கொள்ளப் பொருத்தமான காரணங்கள் இருந்தன, அதை நான் கேள்வி கேட்கவில்லை. யிட்டிஷ் மொழியில் இல்லாத புதிய வெளிப்பாடுகள் ஹீப்ரூ மொழியில் உண்டு. கிழக்கு ஐரோப்பாவில் ஒடுக்கப்பட்டு வாழ்ந்த சரித்திரத்தின் எதிர்மறை தொடர்புகள் யிட்டிஷ் மொழிக்கு உண்டு, ஹீப்ரூவுக்கு அது போன்ற வரலாறு கிடையாது. ஆனால் இதில் மிகக்பெரிய இழப்பும் இருந்தது. நோபல் பரிசு பெற்ற ஐசாக் பசெவிஷ் சிங்கரின் எழுத்தை மொழிபெயர்ப்பில்தான் பெரும்பாலான இளம் இஸ்ரேலியர்கள் வாசிக்க முடியும் என்று நினைக்கிறேன். ஐரிஷ் மக்களுக்காவது டபிள்யூ பி யேட்ஸும் ஷாமுஸ் ஹீனியும் மூல மொழியில் வாசிக்கக் கிடைக்கிறார்கள்.

இறுதியில் இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு மொழியியலாளராக இருந்தாலும்கூட, வாழ்வில் மொழிக்கு அப்பால் ஏராளம் உண்டு என்பதையும் ஒரு மொழியிலிருந்து இன்னொன்றுக்கு நிறைய கொண்டு செல்ல முடியும் எனபதையும் மறக்கக்கூடாது. கடந்த காலத்தின் கேலிக் பாடல்கள் இன்று மகரோனிக் வடிவில் இருக்கின்றன, அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பில் இருக்கின்றன. மொழிக்கலப்பில் உருவான ஹைபர்னோ இங்கிலீஷ், அதன் உச்சத்தில் அற்புதமான இலக்கியம் படைத்தது. இப்போது அதுவும் அழிவின் விளிம்பில் இருக்கிறது, அதன் இடத்தை புதிய, அமெரிக்கப்படுத்தப்பட்ட க்ளோபல் பேச்சுவழக்கொன்று பிடித்துக் கொள்ளத் துவங்கியிருக்கிறது. மாற்றம் மொழியின் அங்கம்- நீங்கள் அதைத் தழுவலாம், அல்லது எதிர்க்கலாம், ஆனால் தப்பிக்க முடியாது.

நன்றி – blog.oup.com

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

மினெ மிஜுமூரா – ஆங்கிலத்தின் எழுச்சியும் பிற மொழிகளின் வீழ்ச்சியும் – ஷோ ஸ்பேத் மதிப்பீடு

 – ஷோ ஸ்பேத் மதிப்பீடு (Sho Spaeth) – 

(ஆங்கிலத்தின் காலத்தில் மொழியின் வீழ்ச்சி என்ற மினெ மிஜூமூரா நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர்கள் மரி யோஷிஹரா மற்றும் ஜூலியட் வின்டர்ஸ் கார்பெண்டர் (Mari Yoshihara and Juliet Winters Carpenter). இந்த நூல் குறித்து ஃபுல் ஸ்டாப் என்ற தளத்தில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின் தமிழாக்கம் இது.)

பெருவாரி வாசகர்களின் இலக்கிய ரசனை குறித்து வீசப்படும் குற்றச்சாட்டுகள் போல் வெகுச் சிலவே என்றும் புதிதாய் இருக்கின்றன. குழந்தைக்கல்வி பிரச்சினை என்று பெரும்பாலும் அடையாளம் காணப்படுகிறது. இன்று புத்தகங்கள் அவற்றைவிட பிரகாசமான வண்ணங்கள் கொண்ட பொழுதுபோக்கு வடிவங்களோடு போட்டி போடும் காலத்தில் இருவகை குறைகள் சொல்லப்படுகின்றன- குழந்தைகள் அதிகம் வாசிப்பதில்லை, அப்படியே அவர்கள் வாசித்தாலும், அவர்கள் நல்ல விஷயங்களைப் படிப்பதில்லை.

இதைக் கேட்கவே அலுப்பாக இருக்கிறது. அ\தைவிட அலுப்பான விஷயம் இது திரும்பத் திரும்ப சொல்லப்படுவதுதான். எனவே சமீபகாலமாக சர்வதேச அளவில் ஆகிருதி கூடிவரும் ஜப்பானிய நாவலாசிரியர் மினெ மிஜூமூரா, இந்தக் குறையை ஆங்கிலத்தின் காலத்தில் மொழியின் வீழ்ச்சி என்ற புத்தகத்தில் மிகப் பிரமாதமான வகையில் சுவாரசியமாக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்டுரை, நினைவுக் குறிப்புகள், புலம்பல் என்று பலவற்றின் கலவையாக இருக்கும் இந்த நூல், இணைய யுகத்தில் ஆங்கில மொழியின் மிகப்பெரும் தாக்கம் குறித்து கவலைப்படுகிறது- இந்தப் போக்கு ஜப்பானுக்கு ஒரு மிகப்பெரிய தேசிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அவர் நம்பக்கூடிய வகையில் எழுதுகிறார். ஜப்பானிய மொழியின் அதிசயிக்கத்தக்க வளர்ச்சியை விவரித்து, அதைப் பாதுகாப்பதன் தேவையை வலியுறுத்தும்போதே அவர் ஜப்பானின் குறுகிய கரைகளைக் கடந்து, நாம் நம் செவ்வியல் படைப்புகளை மறக்கும்போது என்ன நடக்கிறது என்ற உலகளாவிய கவலையை எதிர்கொள்கிறார். .

மொழியின் வீழ்ச்சி, ஜப்பானில் எதிர்பாராத வெற்றி பெற்றது. இது அபுனைவுகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடிக்க ஒரு பெரிய காரணம் இருக்கிறது- ஜப்பானிய கல்வி அமைப்பைச் சீர்திருத்துவதற்கான மிஜூமூராவின் சில பரிந்துரைகள் ஆவேசமான விவாதங்களுக்கு வித்திட்டன. மிஜூமூராவின் பரிந்துரைகள் குறித்து நிகழ்த்தப்பட்ட எதிர்வினைகளில் சிலவற்றை மொழிபெயர்பபாளர்கள் மரி யோஷிஹரா மற்றும் ஜூலியட் வின்டர்ஸ் கார்பெண்டர் ஆகிய இருவரும் தங்கள் முன்னுரையில் பதிவு செய்திருக்கின்றனர்- அவர் வலதுசாரி சிந்தனையாளர், அரசகுல ஆதரவாளர், அவரது பரிந்துரைகள் பொருத்தமற்றவை, குறிப்பாக அவர் ஒரு பெண்ணாக இருக்கையில் ஜப்பானிய கலாசாரம் குறித்த ஆண்மையப் பார்வையைப் பிரதிபலித்திருக்க வேண்டாம்; அவர் நிச்சயம் ஒரு எலீட்டிஸ்ட்தான். அதிலும் குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் எலீட்டிஸ்ட்- தன் இளமைப்பருவத்தின் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தவர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எழுத்தாளர்களுக்கே, அதிலும் குறிப்பாக மிகக் குறைந்த அளவு பெண்களுக்கே, சாத்தியப்படக்கூடிய வெற்றிக்குக் காரணமான கல்வி அமைப்பை அவர் குற்றம் கூறுகிறார் என்று குறைப்பட்டுக் கொள்கின்றனர்.

வேறு சிலர் அவரது ரசனையில் குற்றம் காண்கின்றனர்- எந்த அமெரிக்கர்களிடையே வளர்ந்தாரோ, அந்த அமெரிக்கர்களே அவர் மிகக் கேவலமாகக் கருதும் சமகால ஜப்பானிய எழுத்தாளர்களை நேசிக்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த புத்தகத்தின் ஒரு நல்ல விஷயம், மிஜூமூரா தன் தரப்பை முன்வைக்கும்போதே இந்த ஒவ்வொரு எதிர்வினையையும் முன்கூட்டியே அவதானித்து அதற்கு பதிலும் அளிக்கிறார். ஆனால் நம் காலத்தில் மேலோங்கியிருக்கும் பார்வையால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயத்தை அவர் தன் கருத்தில் கொள்வதில்லை என்பது நம்மை யோசிக்க வைக்கிறது- நாவல்கள், அவற்றின் நாவலாசிரியர்கள், நம் கேளிக்கைக்காகவே இருக்கின்றனர் என்ற கருத்தை நிராகரிக்கும் அவரது வெகுளித்தன்மை.
புத்தகத்தின் துவக்க பகுதிகில் அவர் விரிவான வாசிப்புள்ள ஒரு ஜப்பானிய நண்பருடன நிகழ்த்திய உரையாடலை விவரிக்கிறார்- சமகால ஜப்பானிய இலக்கியச் சூழல், “குப்பையாய் எழுதும் மூளையில்லாத எழுத்தாளர்களால்” நிறைந்திருக்கிறது என்று தன் நண்பர் சொல்வதை சிரித்துக்கொண்டே வேடிக்கையாய் ஒப்புக் கொள்கிறார்.

“ஒருவேளை நானும் என் நண்பரும் ஜப்பானிய இலக்கியத்தின் நவீன செவ்வியல் ஆக்கங்களைத் தோய்ந்து வாசித்திருந்த ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்களாய் இருப்பதால் எங்களுக்கு புதிய எழுத்தை ரசிக்கத் தெரியவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். அல்லது, புதிய எழுத்தில் பெரும்பாலானவை குறைந்த மதிப்பு கொண்டவை என்பதும் உண்மையாக இருக்கலாம்.

“வெகு காலம் முன்னர், நான் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, ஜப்பானுக்குத் திரும்பி அங்கு ஜப்பானிய மொழியில் நாவல்கள் எழுதத் துவங்கினால் எப்படியிருக்கும் என்று நினைத்த போதெல்லாம் அடர்ந்த ஒரு காடும் அதில் மகோன்னதமாய் உயர்ந்து நிற்கும் மரங்களுமே என் கண் முன் தோன்றின..நான் அவற்றின் நிழலில் அமைதியாகவும் தன்னடக்கத்துடனும் எழுதிக் கொண்டிருப்பேன், ஒரு பெண் எழுதத்தக்க சாதாரண விஷயங்களை, அங்கொன்றும் இங்கொன்றுமாக. ஆண் பெண் சமத்துவம் நேரடி அனுபவமாய் அறிமுகப்பட்ட ஒருவருக்கு இது சோகமான சித்திரம்தான் என்றாலூம் புகுஜாவா யூகிச்சி, ஃபுதபடாய் ஷிமை, நத்சுமே சோசெகி, ,மோரி ஒகாய், கோடா ரோகன், தனிஜாகி ஜூனிசிரோ போன்ற பேராளுமைகளால் என் தேசம் இன்றும் நிறைந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்- அவர்களது அறிவு, போதம், புத்திசாலித்தனம் நம்மை அச்சுறுத்தும் தன்மை கொண்டது.

“மகோன்னதமாய் உயர்ந்த மரங்கள் கொண்ட எந்த அடர்கானகமும் நான் நாடு திரும்பியதும் கண்டடைய முடியாமல் போகலாம் என்ற எண்ணம் ஒரு போதும் எனக்கு எழவேயில்லை. ஆனால் அப்படிதான் நடந்தது. இங்கொரு மரம் அங்கொரு மரம் என்று பார்க்க முடிந்ததே தவிர நான் கண்ட காட்சி தட்டையாகத்தான் இருந்தது. “பெருஞ்சோகப் பாழ்நிலம்” என்பது போன்ற கவித்துவ வர்ணனைகளுக்கும்கூட தகுதியற்ற அந்த வெளி, சிறியதாகவும் ஆரவாரமானதாகவும் இருந்த அனைத்துக்குமான விளையாட்டு மைதானம் போலிருந்தது- வெறும் முதிரா இளமையின் வெளிப்பாடு. நான் யாரை மிகப் பெரிதாய் மதித்தேனோ, அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைக்கூட என் சமகாலத்தவர்கள் மறந்து விட்டார்களா என்ற சந்தேகமே எஞ்சி நின்றது.

மிஜூமூராவின் நடை குறித்த அறிமுகமில்லாத வாசகர்களுக்கு இந்த எதிர்மறை மதிப்பீடு அவரது அனிச்சை அவதானிப்புகள், பழக்கங்கள், கருப்பொருட்கள் ஆகியவற்றில் சிலவற்றைச் சற்றே வெளிச்ச்சமிட்டுக் காட்டுகிறது- புறப்பார்வைக்கு தியானம் போன்ற எழுத்து, ஆனால் அதனூடே புத்திசாலித்தனமாய்த் தனது தன்னடக்கம் குறித்து உணர்த்திக் கொள்வது, ஒற்றைப்படையாய் முன்வைக்கப்படும் கறாரான தீர்ப்பு, பட்டாலான கையுறை போன்ற அவரது உரைநடையுள் பொதிந்திருக்கும் இரும்புக்கை குத்து; எல்லாவற்றுக்கும் மேல், நவீன ஜப்பானிய இலக்கியத்தின் தலைசிறந்தவற்றைக் குறிக்கும் பட்டியலிலுள்ள எழுத்தாளர்கள் மீதான கட்டற்ற பெருமதிப்பு.

1868ல், மெய்ஜி சகாப்தம் துவங்கியபோது அதுவரை வெளியுலகிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டிருந்த ஜப்பான் தன் வாசல்களைத் திறந்து கொண்டதும் அதன் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும், மிஜுமூரா, “மேற்கின் அதிர்ச்சி” என்றழைக்கும் அனுபவத்தை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அதற்கடுத்த நூறாண்டுகளில் படைக்கப்பட்ட ஆக்கங்களே நவீன ஜப்பானிய இலக்கியத்தின் செவ்வியல் ஆக்கங்களாய் கருதப்படுகின்றன. பலவகைகளில் அந்தக் கானனுக்கும் அதன் கிளாசிக்குகளுக்கும் எழுதப்பட்ட காதல் கடிதமே இந்தப் புத்தகம். மொழிகளின் வளர்ச்சியும் தேசிய இலக்கியங்கள் பற்றியும் எய்யப்படும் அறிமுகம், நவீன ஜப்பானிய கானனின் அருமையையும், அதன் உருவாக்கத்துக்குக் காரணமான அதிர்ஷ்டவச சூழ்நிலையையும் உணர்ந்து கொள்வதற்கான பின்புலமாய் மட்டுமே அளிக்கப்படுகிறது. ஜப்பானிய இலக்கியம் குறித்து அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பும் வாசகர்களுக்கு இது ஒன்றேகூட விலைமதிப்பற்ற சேவையாக இருக்கிறது.

இந்தக் கானன் மிஜூமூராவுக்கு எதை உணர்த்துகிறது? ஜப்பானிய மக்களுக்கு அடிப்படை முக்கியத்துவம் கொண்டதாய் இருக்கிறது அது ஏன் இருக்கிறது என்று அவர் வாதிடுகிறார்? முராசாகி ஷிகுபுவின் கெஞ்சி கதை துவங்கி பதினொன்றாம் நூற்றாண்டு இலக்கியம் வரை நீண்டு செல்லும் இடையறாத மரபுத் தொடர்ச்சியுடன் இன்றைய ஜப்பானிய இலக்கியத்தை இணைக்கும் [பாலமாய் அது இருக்கிறது. இது குறித்து மிஜூமூரா இவ்வளவு ஆத்திரப்பட வேண்டிய தேவை என்ன? இளம் ஜப்பானிய வாசகர்கள் இந்தச் செவ்வியல் ஆக்கங்களைப் புறக்கணிக்கக் காரணம், அவர்களால் அந்தப் பாலத்தைக் கடக்கவே முடியாது என்பதுதான்- 1946ஆம் ஆண்டின் அரசு ஆணைகள் ஜப்பானிய மொழியின் ஒலிப்பமைப்பை மாற்றிவிட்டன. மேற்கத்திய அனுபவத்துக்கு ஜப்பானிய மொழியனுபவம் எந்த அளவுக்கு மாறுபட்டது என்பதை உணர இதை நினைத்துப் பார்க்கலாம்- வால்டன், அல்லது மொபி-டிக், அவ்வளவு ஏன் 1984 நாவல்கூட, இடைக்கால ஆங்கிலத்தில் எழுதப்பட்டது போலிருந்தால் எப்படி இருக்கும்? எங்கும் ஆங்கிலம் விரவியுள்ள இந்தக் காலத்தில் இந்த அடிப்படை இடர்தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்கிறார் மிஜுமூரா, “தன்னைக் காத்துக்கொள்ளாத மொழி அழிந்து போகும். அதன் சொற்கள் புத்தகங்களில் எழுதப்பட்டிருந்தாலும், அந்தப் புத்தகங்கள் வாசிக்கப்படாமல் அழியும்”.

ஒரு நாவலாசிரியராக மிஜூமூராவின் வாழ்க்கை லட்சியமும், அதனுடன் எழுத்து குறித்த அவரது நேசமும் ஆங்கில மொழியின் மேலாதிக்கம் குறித்து ஜப்பானுக்கு வெளியில் உள்ள பரந்த உலகுக்கு அவர் அளிக்கும் எச்சரிக்கைக்கு முக்கியமாக இருக்கின்றன. இந்த எச்சரிக்கை எந்த வடிவில் எழுப்பப்படுகிறது என்பதற்கும் இது முக்கியமாய் இருக்கறது- மிஜுமூராவின் திகைக்க வைக்கும் வாசிப்பும் விரிவான ஆர்வமும் வெளிப்பட்டாலும் மொழியின் வீழ்ச்சி ஆய்வு நூலல்ல, அதை ஒரு நாவலாசிரியரே எழுதியிருக்க முடியும் என்பது வெளிப்படை. அவரது வாதங்கள் நேர்க்கோட்டில் செல்வதில்லை, வட்டமிட்டு முன்னேறுகின்றன. வரலாற்று அல்லது மொழியியல் ஆய்வு என்று நினைக்க முடியாத வகையில் இதில் ஒரு அந்தரங்கத் தன்மை கொண்ட வெளிப்பாட்டை நாம் காண முடிகிறது. மிக கவனமாக இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் மிஜுமூரா- கறாரான சரித்திர அடிப்படையிலோ மொழியியல் அடிப்படையிலோ முன்வைக்கக்கூடிய விமரிசனங்களைக் கூர் மழுங்கச் செய்யும் தன்மை கொண்ட வகையில் அவர் தன் வாதங்களைக் கதைசொல்லலோடும் வாழ்வனுபவங்களோடும் பிணைத்திருக்கிறார்.

இன்னொரு பக்கம், இதை வாசிப்பதே ஒரு சுகமான அனுபவமாக இருக்கிறது, வரண்ட, இறுதியில் துவளச்செய்யும் கதையாடலாய் அமைந்திருக்க வேண்டிய புத்தகத்தில் அவரது அறிவும் ஆளுமையும் பிரகாசிக்கின்றன. தன் தாய் மொழி எவ்வாறு உருவானது என்ற பின்புலம் குறித்த தன் அறியாமையை மெல்ல மெல்ல விளங்கிக் கொள்வது என்ற சட்டகத்தில் அவர் தன் வாதத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்கிறார்- அவரது வாசகர்கள் தங்கள் குறைகளை ஏற்றுக் கொள்ளவும், தமக்குச் சமபந்தமில்லாமல் தோற்றுவிக்கப்பட்ட மொழியின் நிலை குறித்து தம்மிடம் உள்ள கவனமற்ற பெருமிதத்தையும் பெருமையையும் துவக்கத்தில் மிஜுமூராவிடம் காணப்படும் கவனமற்ற மொழிவெறியில் காணவும், எத்தனை மொழிகளில் எவ்வளவு எழுதப்பட்டிருக்கின்றன, இதில் பெரும்பாலானவை அழிந்தே போகும் பயங்கரத்தின் சாத்தியம் ஏறத்தாழ உறுதியானது என்றும் இது அத்தனை குறித்த வியப்புணர்வுக்குத் தம்மைத் திறந்து வைத்துக் கொள்ளவும் இவரது பார்வை ஒரு மாற்று முகத்தை அளிக்கிறது.

மிஜூமூராவின் எழுத்தில் தொடர்ந்து காணப்படும், ‘விதி வலியது’ என்ற உணர்வை இந்த உறுதிப்பாடு சுட்டுகிறது. எழுதப்படும் ஒவ்வொரு மொழிமீதும் ஆங்கிலம் ஏற்படுத்தும் தொடர்ந்த தாக்குதலை எதிர்கொள்ள எந்த பரிந்துரையும் அவர் செய்வதில்லை, யார் என்ன செய்தாலும், எந்த தேசம் என்ன செய்தாலும் இதன் வேகம் குறையப் போவதில்லை என்கிறார் இவர். ஆனால் இதை மாற்ற முடியாது என்பதற்காக எதுவும் செய்யாமல் இருப்பதற்குச் சமாதானம் சொல்வதில் மிஜுமூரா. மாறாய், தம்மைப் போன்ற நாவலாசிரியர்கள், தம் மொழியில் முட்டாள்தனமாய் இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்கள், அறிந்தும் அறியாமலும் மொழிபெயர்ப்பை எதிர்த்துப் போராட வழிகள் காண வேண்டும் என்கிறார் அவர்- தங்கள் கானன்களைப் பாதுகாக்க வேண்டும், தனித்தன்மை கொண்ட தங்கள் தேசிய நூலகங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இந்த நாவலாசிரியர்கள் குறித்து, “எப்போதும் மொழி குறித்துச் சிந்திக்கச் சபிக்கப்பட்டவர்கள்” என்று எழுதுகிறார். இவர்களே, “ஆங்கில மொழியைக் கொண்டு அறியப்படாத பிற ‘உண்மைகளும்’ இந்த உலகில் உண்டு” என்பதைச் சிந்தித்தாக வேண்டும்.

அடிப்படையில் இது மரபார்ந்த ஒரு நிலைப்பாடு. ஆனால் இன்றைய காலம் முன்னோக்கிப் பார்க்கிறது என்பதைத்தான், ஜப்பானிலும் அதற்கு வெளியிலும், அவருக்கு பிற்போக்குவாதி என்ற முத்திரை குத்தப்பட்டிருப்பது காட்டுகிறது. இவர் எழுதுவதில் பெரிதுபடுத்தவும் ஒன்றுமில்லை; உலகெங்கிலும் குழந்தைகள் செவ்வியல் நூல்கள் வாசிப்பதில்லை என்ற அங்கலாய்ப்பு எப்போதும் இருந்தே வந்திருக்கிறது; கடந்த காலத்தை மதிக்காமல் முன்னேற்றம் கிடையாது என்பதும் அதே அளவுக்கு அடிக்கடிச் சொல்லப்பட்டே வந்திருக்கிறது. ஜப்பான் பற்றி மிஜூமூரா முன்வைக்கும் குற்றச்சாட்டு அது ஆங்கில யுகத்தை ஏற்றுக்கொள்வதில் காட்டும் உற்சாகம் குறித்துதான்- நீண்ட வரலாறு கொண்ட ஓர் இலக்கியத்தைச் சிதைத்து அழிக்க விரைகிறது என்பது மட்டுமல்ல, அதன் சாம்பல்களில் அது எழுப்பும் இலக்கியம், அவரது சொற்களில் சொல்வதானால் சாணி.

முடிவாய்ச் சொன்னால், மிஜுமூரா உலகெங்கும் உள்ள எழுத்தாளர்களுக்கு மாற்று வழி ஒன்றை முன்வைக்கிறார்- உலகளாவிய மக்கள் பரப்பை நோக்கிப் பேசுவதல்ல, உன்னதமே மாபெரும் இலக்கியத்தின் நோக்கம் என்று கண்டிக்கிறார். ஷேக்ஸ்பியர் இன்று உலகெங்கும் இன்னும் பரவலாய் அறியப்பட்டிருப்பதால் ரசின் எழுதியதன் சிறப்பு குன்றிவிடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். மேலும் இது பற்றியெல்லாம் பிரெஞ்சு மக்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை என்கிறார், ரசின் மற்றும் அவரது எழுத்தை மறக்காதிருந்தால் போதும். “கலை ஜனநாயகத்தன்மை கொண்டதல்ல, அது உன்னதமானது” என்று மிஜுமூரா அலங்காரங்கள் இல்லாமல் சொல்கிறார், அவர் சொல்வதும் உண்மைதான். தம் மொழியில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய ஆபத்து இதுதான்- ஹாரி பாட்டர் நாவல்கள் போன்ற ஒரு உலகளாவிய வாசகப்பரப்பை அவர்கள் அடைய வேண்டுமென்றால் தம் எழுத்தில் உள்ள தனித்தன்மையில் பெரும்பாலானவற்றை அவர்கள் களைந்தே நியூ யார்க்கிலும் லண்டனிலும் உள்ள பதிப்பாளர்களை வசீகரிக்க முடியும். ஒரு தேசத்தின் ஆன்மாவைச் சிறு சிறு துண்டங்களாக வெட்டிச் சிதைத்தே பெரும் செல்வமும் புகழும் பெற முடியும் என்ற ஃபாஸ்டிய பேரம் இது.

இந்த நிலைப்பாடு மிஜுமூராவுக்கு எளிது- அவர் அசாதாரண திறமை கொண்ட எழுத்தாளர், வெற்றி பெற்ற எழுத்தாளர். ஆங்கிலத்தில் எளிதாய் மொழிபெயர்க்கப்படக்கூடிய வகையில் புத்தகம் எழுதுவதில்லை என்ற சமரசமற்ற முடிவை அவர் மேற்கொண்டிருந்தாலும் அவரது நாவல்களில் முதல் நாவல், எ ட்ரூ நாவல், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது- தன்னைவிட மேலானவர்கள் நிழலில் தன்னடக்கத்துடன் உழைத்துக் கொண்டிருக்கும் எளிய ஜப்பானிய பெண்ணல்ல அவர் என்பதையே இது உணர்த்துகிறது. உண்மையில், ஜப்பானில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள எழுத்தாளர்கள், தம் முன்னோடியாய் அண்ணாந்து நோக்கக்கூடிய மகோன்னத மரங்களில் ஒருவர் இவர். இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கான மிகச் சிறந்த காரணம், இந்த, அல்லது, எந்தத் தலைமுறை எழுத்தாளர்களிலும் சிறந்த ஒருவரின் எழுத்து குறித்த தரிசனத்தை அது அளிக்கிறது என்பதுதன.

ஆங்கிலத்தை தாய்மொழியாய் கொண்டவர்களுக்கு அவர் மிகச் சில பரிந்துரைகளே வைத்திருக்கிறார்- அந்நிய மொழி ஒன்றைக் கற்பது நல்லது என்றும் இன்றும் நாளையும் ஆங்கிலம் மேலாதிக்கம் செலுத்தப்போவது குறித்து தன்னடக்கத்தை வெளிப்படுத்திக் கொள்வது நல்லது என்றும் இறுதியில் மூக்குச் சிந்துவதை வேண்டுமானால் சொல்லலாம்.

ஆனால் செவ்வியல் படைப்புகளை அவர் புகழும்போது ஒரு எச்சரிக்கையும் நினைவூட்டலும் செய்கிறார்– சுயம்பிரகாசம் கொண்ட உள்ளங்களின் வெளிப்பாடுகள் மட்டுமல்ல ஒரு மொழியின் மேன்மை, தன்னுள்ளிருக்கும் திறமைசாலிகள் செயல்படுவதற்கான களனில் ஆயத்தப் பணிகள் செய்து கொடுக்கும் கலாசாரமே ஒரு மொழிக்கு மேன்மையளிக்கிறது, தனக்கு முன் இருந்த மிகச்சிறந்த எழுத்தின் மதிப்பை உணர்ந்து அதை உண்மையாகவே பெறுமதியாய்க் கொண்டாடும் கலாசாரமே மொழியின் மேன்மைக்கு வித்திடுகிறது.

ஆங்கில மொழி இலக்கிய கலாசாரம் பிற மொழியின் தாக்குதலுக்கு ஆளாகவில்லை எனினும், ஒரு பக்கம் அது தம்முள் பொருதிக் கொள்ளும் பிற பொழுதுபோக்கு ஊடக வடிவங்களாலும் மறு பக்கம் இணையம் அனைவருக்குமான சமத்துவ வெளி அளித்திருக்கிறது என்ற பான்கிலாசியப் பார்வையாலும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இணையத்தில் வாயிற்காவலர்களுக்கு வேலையில்லை என்று அடிக்கடி சொல்லப்படுகிறது, பொதுஜன ரசனை இனி மேலோங்கி நிற்கும் என்கின்றனர்- தெய்வழக்காகிப் போன வெண்ணை திரளும் படிமமாய் சிறந்தது எழுவது இனியும் உள்ளார்ந்த தனித்தன்மையால் அல்ல, மின்னூல் விற்பனையாலும் வணிக வாய்ப்புகளாலும் என்று சொல்கின்றனர்.

மக்கள் செவ்வியல் படைப்புகளை ரசிப்பதில்லை என்ற குறை நியாயமானதுதான், ஆனால் அவர்கள் வாசிக்காத காரணத்தால் எதுவும் மோசம் போய்விடாது- ஏனெனில், கலையில் வெகுஜனப் பார்வை சில பத்தாண்டுகளைத் தாண்டி நீடிக்கும் ஆற்றல் கொண்டதல்ல; எது முக்கியம் என்றால் ஒரு சிறுபான்மையினர்- தம்மைத் தாமே தேர்ந்தெடுத்துக் கொண்ட சிலர், கலை என்பது உன்னதத்தன்மை கொண்டது என்ற கருத்துக்கு உருவம் அளிப்பதே இலக்கியத் தரம் என்ற அக்கறை தமக்கு இருப்பதாய்ச் சொல்லிக் கொள்பவர்கள்- உண்மையாகவே செவ்வியல் படைப்புகளை அறிந்திருந்து அவற்றை உற்சாகமாய்க் கொண்டாட வேண்டும். இதுதான் முக்கியம்.

எந்த ஒரு தலைமுறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரே அதற்கான திறமை கொண்டவர்களாகவும், படைக்கப்பட்ட அனைத்தைக் காட்டிலும் உயர்ந்து எழுந்து நிற்கக்கூடிய மகோன்னதமான மரங்களாய் இருக்கும் விருப்பம் உள்ளவர்களாவுகம் இருக்க முடியும் என்றாலும், ஏராளமான இடம் மண்ணில் இருக்கிறது. எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கவும் திருத்திக் கொண்டிருக்கவும் வேலை இருந்து கொண்டே இருக்கிறது.

நன்றி – Full Stop

ஒளிப்பட உதவி – Monkfish Jowls

சீனாவும் உலகும் – அசாதாரண தனித்துவத்துக்கு அப்பால் – கெர்ரி ப்ரௌன்

– கெர்ரி ப்ரௌன் (Kerry Brown) – 

ஓப்பன் டெமாக்ரசி என்ற தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்

சீன அரசியல்வாதிகள் சீனாவின் மரபார்ந்த கலாசார மகத்துவத்தைச் சுட்டிக்காட்டி உரையாற்றுவதைச் சமீப காலமாக அடிக்கடி பார்க்க முடிகிறது. நவீன சீனாவின் விளம்பரமாகவும் அதற்கு உலகளாவிய சக்தியாக விளங்கும் தகுதி இருக்கிறது என்று நிறுவவும் அதன் கலாசாரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் இவர்கள்.

அதிலும் குறிப்பாக, இன்aறைய தலைமுறையைச் சேர்ந்த இரு தலைமை கோட்பாட்டியலாளர்கள்- சீன பிரதமர் சி ஜின்பிங்கும் சீன அரசின் பிரச்சார தலைவர் லியு யுன்ஷானும் பண்டைக்கால கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் பற்றிய குறிப்புகளை மிக அதிக அளவில் கையாண்டு உரையாற்றுகின்றனர். ஏதோ ஒரு வகையில் தாமும் இந்த “மாபெரும் மரபின்” சந்ததியினர் என்று தம்மை முன்னிறுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. வெளியுலகம் தம் மரபை இன்னும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்- கன்பூஷியஸ் இன்ஸ்டிட்யூட் போன்ற நிறுவனங்களைக் கொண்டு இந்த மரபை உலகெங்கும் எடுத்துச் செல்லவும் தம் ஆற்றல்களைச் சீன அரசியல்வாதிகள் செலவிடுகின்றனர்.

தன்னைப் புரட்சிகரமானதாகக் காட்டிக்கொள்ளும் கட்சியொன்று சீன கலாசாரத்தின் சாரம் என்று ஓரளவு மரபார்ந்ததாய் உள்ள பார்வையை விளம்பரப்படுத்திக் கொள்வது நவீன சீனாவின் பெரும் முரண்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் சீனாவின் பெருந்தலைவர்கள் சீன கலாசாரம், அதன் முக்கியத்துவம், பொருள் என்று அத்தனை வலியுறுத்திய பின்னும் ஒரு கேள்வி நம்முன் நிற்கிறது- அவர்கள் எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்? வழக்கப்படியான கன்பூசியஸ் சிலைகள், அவர் பற்றிய உரைகள் போன்றவற்றில் ஓரளவுதான் அர்த்தம் இருக்கிறது. உண்மையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை கொண்ட அதன் எழுத்துப்பிரதிகளின் பெருந்தொகையே சீன இலக்கியத்தின் தனித்துவ இயல்பை உணர்த்துவதாய் இருக்கிறது. இன்றும் சீனாவின் சிந்தனையை நெறிப்படுத்தும் கூட்டு வரலாற்று நினைவை விரிவான அளவில் புரிந்து கொள்ளும் வாய்ப்பை அதன் தொல் இலக்கிய மரபே நமக்கு அளிக்கிறது.

சீனா தன் “சிறப்பு” என்று சொல்லிக் கொள்ளும்போது, அதன் கலாசார மரபுக்கு வெளியே இருப்பவர்கள் அத்தகைய பெருமிதங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நம் கலாசாரத்துக்கு என்று சில மதிப்பீடுகளும் விமரிசன அளவைகளும் வைத்துக்கொண்டு, சீனாவை அணுகும்போது அவற்றையே வேறு விதமாகக் கையாள்வதுமான இரட்டைப் பார்வை கொள்ளக்கூடிய அபாயம்கூட இருக்கிறது.

ஆனால் இதுபோன்ற ஒரு முரண்பாடு சீனாவின் உள்ளும் வெளியேயும் பலரிடம் காணப்படுகிறது- சீனா மெய்யாலுமே “மாறுபட்டதுதான்” என்று சொல்வதில் அவர்களுக்கு அலுப்பதேயில்லை. எனவே அதைப் புரிந்து கொள்ள முழுக்க முழுக்க வேறு தனி கருவிகள் வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்போது சீனாவின் மரபார்ந்த கலாசாரத்தின் புகழ் பாடும் பீஜிங் அரசியல்வாதிகளுக்கு இது போன்ற அணுகுமுறை மிகவும் உசிதமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். சீனா “மற்றவர்கள் போலில்லை” என்று அவர்கள் இப்போது அதிக அளவில் சொல்லிக் கொள்கிறார்கள், சீனாவின் சட்ட அமைப்பு, விழுமியங்கள் குறித்து விமரிசனம் செய்யும்போதும், அதன் நிர்வாக அமைப்பு நிலைக்கக்கூடிய சாத்தியம் பற்றியும் கேள்வி எழுப்பும் அந்நியர்களைப் புறம்தள்ளவும், சீனாவின் “அசாதாரண தனித்துவம்” என்ற வாதம் உதவுகிறது. “எங்களை எங்கள் மதிப்பீடுகளின்படி புரிந்து கொள்ளுங்கள், உங்கள் மதிப்பீடுகளை எங்கள் மேல் திணிக்க வேண்டாம்” என்பது அவர்களது பதிலாய் இருக்கிறது.

தனி உலகம்

இப்படி தனி மகத்துவம் கொண்டாடுவது அதற்கேயுரிய ஆபத்துகள் கொண்டிருப்பது தெளிவு. இதற்கேற்றச் சிறந்த முறிமருந்து ஓர் ஆளுமையிடம் உண்டு- இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் அனைவரையும்விட இவர் “மரபார்ந்த ஐரோப்பிய” மற்றும் “மரபார்ந்த சீன” கலாசாரங்களில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார்- சியான் ஜோங்ஷு (Qian Zhongshu).

1998ல், தன் 88ஆம் வயதில் மறைந்த சியான் ஜோங்ஷு (1949க்கு சற்று முன்னர்), நவீன சீன இலக்கியத்தின் மிக முக்கியமான நாவலை எழுதினார்- Cities Besieged. ஆனால் அவர் எழுதியதில் மிக ஆழமான படைப்பு அவரது சிறு கட்டுரைகள் கொண்ட பெருந்தொகுப்பு: அதை அவரால் 1979ல் கலாசார புரட்சி முடிவுக்கு வந்தபின்தான் பதிப்பிக்க முடிந்தது. 1990களின் பிற்பகுதியில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு, Limited Views: Essays on Ideas and Letters என்ற தலைப்பில் பதிப்பிக்கப்பட்டது.

சியான் பல மொழிகளைத் தேர்ந்தவர் என்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. அவர் தன் தாய் மொழி சீனத்துக்கு அப்பால் – ஆங்கிலம், ஸ்பானிஷ், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளை – விரிவாகவும் ஆழமாகவும் வாசித்திருந்தவர். அவரது கட்டுரைகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன- ஹென்றி பீல்டிங் முதல் கிறிஸ்தோபர் மார்லோ, கத்தே, ஜூசெப்பெ உங்கரெட்டி என்று பலரையும் ஏராளமாக மேற்கோள் காட்டுகிறார். அதே சமயம் சீன எழுத்தாளர்களையும் அவர்களது காலகட்டம் கடந்து தொடுகிறார்- ஆவணப்படுத்தப்பட்ட கவிஞர்களில் முதலான்வரான சி யான் முதல் அமானுடத்தைக் கவிதையில் எழுதிய ஹான் வம்ச கவிஞர் ருவான் ஜி, தன் தலைமுறையைச் சேர்ந்த லின் யுசேங் என்று அனைவரையும் மேற்கோள் காட்டுகிறார். எனினும் இவர் தன் மேதைமையை வெளிப்படுத்திக் கொள்வதில் அலங்காரமோ ஆடம்பரமோ சிறிதும் இல்லை. இவரது கட்டுரைகளில் நம் கருத்தைக் கவரும் விஷயம் இதுதான்- தனித்துவமிக்க கலாசார மரபுகள் தம் வேறுபாடுகளை இழக்காதபோதும் ஆழமான ஒற்றுமை கொண்டிருத்தலுக்கான இணைபுள்ளிகளை சியான் அடுத்தடுத்த கட்டுரைகளில் தொடர்ந்து சொல்லிச் செல்கிறார்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம், “உயரத்தின் துயரம்” என்ற கட்டுரையில் காண முடிகிறது. இதில் சியான் டாங் மற்றும் சாங் வம்ச அரசர்களின் காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள் மலைச்சிகரம் ஒன்றை அடையும்போது உணர்ந்து வெளிப்படுத்தும் சோக உணர்வை எழுதுகிறார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், அவர் இதே உணர்வை பீல்டிங்கின் பதினெட்டாம் நூற்றாண்டு நாவலான டாம் ஜோன்ஸிலும் காண்கிறார். சீன செவ்வியல் நூல்களுக்கும் மேற்கத்திய செவ்வியல் நூல்களுக்கும் பொதுவான உணர்வுகளின் இலக்கணத்தை அவரால் அடையாளம் கண்டு வடிவமைக்க முடிகிறது. இவ்வாறு சோகம், ஆனந்தம், உணர்வுச் சிதைவு முதலான சிக்கலான பல உணர்வு நிலைகளை அடுத்தடுத்த கட்டுரைகளில் எழுதி இதைச் செய்கிறார். இதன் ஒட்டுமொத்த விளைவு நம் மீது மிகுந்த தாக்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

கலாசார புரட்சி நிகழ்ந்த காலகட்டத்தில் சியான் இந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவற்றை எழுதினார். தாம் இருவரும் சிந்தனையாளர்களைச் சீர்த்திருத்தும் நோக்கத்தில் அப்போது அமைக்கப்பட்டிருந்த உழைப்பு முகாம்கள் ஒன்றின் காண்டீனில் பரிமாறுபவர்களாகப் பணியாற்றும் நிலைக்குத் தள்ளி அவமானப்பட்ட காலத்தில் இந்தக் கட்டுரைகளை அவர் எழுதினார் என்ற சாட்சியம் அவரது மனைவி யாங் ஜியாங்கால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்களில் அவர்களது மருமகன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் எங்கும் இந்த நிகழ்வுகள் குறித்து தனிப்பட்ட வகையில் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மிகத் தேர்ந்த வாசிப்பு உள்ளவரும் பல்வேறு சிந்தனை மரபுகளில் அறிமுகம் உள்ளவருமாகிய ஒருவரின் சாட்சியமாகவே அனைத்தும் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு அதிசயம், இந்தக் கட்டுரைகளில் எந்த அரசியலும் இல்லை, அவர் யாரையும் கண்டிப்பதில்லை, யாரையும் குற்றம் சாட்டுவதில்லை. இந்த ஒரு காரணத்துக்காகவே, காலத்தையும் எல்லைகளையும் கடந்த மானுடத்தன்மைக்கு இது ஒரு மகோன்னதமான நினைவுச் சின்னம் என்று சொல்லலாம், எந்த ஒரு தேசமும் பிறரைக் காட்டிலும் தன்னை ஏதோ ஒரு வகையில் தனியாகப் பிரித்துக் காட்டிக் கொள்வதை இந்நூல் முழுமையாய் நிராகரிக்கிறது.

சியானின் இந்த மிகச்சிறந்த நூலை வாசிப்பதால் ஆர்வமுள்ள வாசகர்கள் ஒவ்வொருவரும் பயனடைவார்கள். கூடுதலாக, சீன பண்பாட்டு மரபின் விரிவான கானனை நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்ற கேள்விக்கும் இங்கு இடமிருக்கிறது. இந்த மரபைத் தங்கள் நோக்கங்களுக்காக மிகுந்த ஆற்றலுடனும் சாமர்த்தியமாகவும் பீஜிங்கின் அரசியல் தலைவர்களும் அவர்களது இரவலர்களும் பயன்படுத்திக் கொள்ளும் காலத்தில் இதன் அவசியம் இன்னும் முக்கியமாய் இருக்கிறது.

சியான் ஜோங்ஷூவின் எழுத்துகள் இறுதியில் நம் அனைவருக்கும் பொதுவான மானுட விழுமியங்களுக்கு அத்தாட்சியாகவே இருக்கின்றன. சீனத்துக்கு அல்லது ஆசியாவுக்கு அல்லது ஐரோப்பாவுக்கு உரியது என்ற விவரித்து இதைக் குறுக்க முடியாது. அவ்வளவு குரூரமான சூழலில் இந்தப் படைப்பு உருவம் பெற்றது என்பது திகைக்க வைக்கும் விஷயம். பாண்டித்தியத்துக்கும் மானுடம் மீதான நம்பிக்கைக்கும் சாட்சியம் சொல்லும் நாயகத்தன்மை கொண்ட எழுத்து இது. எந்த ஒரு கலாசாரமும் இதைக் கொண்டாடுவதில் பெருமை கொள்ள முடியும். இருபதாம் நூற்றாண்டு சீனா இவ்வளவு அற்புதமான குரலைப் படைத்திருக்கிறது என்பதில் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்- சியானின் அசாதார்ண படைப்பை நம்மாலும் படிக்க முடிகிறது, அதில் திளைக்க முடிகிறது, கற்றுக்கொள்ள முடிகிறது என்பது நம் அனைவருக்கும் பெருமையே. இதைச் செய்யும்போது நாம் சீனாவை மட்டும் புரிந்து கொள்வதில்லை, நம்மையும் அறிந்து கொள்கிறோம், நம் கலாசாரத்தையும் புரிந்து கொள்கிறோம், நம் அனைவருக்கும் பொதுவான உலகையும் அறிந்து கொள்கிறோம்.

நன்றி – Open Democracy

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா