விமர்சனம்

இலக்கிய இதழ்களின் தொடரும் இருப்பு – ஸ்டீபன் பர்ட்

(அமெரிக்க சிறுபத்திரிக்கைகள் மற்றும் இலக்கிய இதழ்கள் குறித்த அவதானிப்புகள் நிறைந்திருந்தாலும், கட்டுரையின் பிற்பகுதி இலக்கிய இதழ்களின் அவசியச் செயல்பாடுகள் குறித்த முக்கியமான கருத்துகளை முன்வைப்பதால்  நியூ யார்க்கர் தளத்தில் Stephen Burt எழுதியது இங்கு மொழிபெயர்க்கப்படுகிறது)

நீ ஏன் இலக்கிய இதழ் தொடங்கப் போகிறாய்? இதனால் நீ பணக்காரனாகப் போவதில்லை, உனக்கு அதிகம் புகழ்கூட கிடைக்கப் போவதில்லை. நீ உன் பகற்பொழுதில் வேலைக்குப் போகத்தான் வேண்டும். நீ ஒரு மாணவனாகவோ வேலைக்குப் போக வேண்டிய அவசியமில்லாத அளவு பணக்காரனாகவோ இருந்தால்தான் இதிலிருந்து தப்பிக்க முடியும். நீயும் உன் அதிர்ஷ்டக்கார நண்பர்களும் நீ வேலைக்கு அமர்த்துபவர்களும்- அதாவது, அவர்களுக்கு உன்னால் சம்பளம் கொடுக்க முடியுமானால்- உங்கள் நேரத்தையும் சக்தியையும் பக்க வடிவமைப்புக்கும், கணக்கு வழக்குக்கும், புத்தக விநியோகத்துக்கும் இணையதள நிரல் எழுதவும் அதை நிர்வகிக்கவும் பொது வாசிப்புகளுக்கும் கூடுகைகளுக்கும் நிதி கோரிக்கைகளுக்கும் செலவிடுவீர்கள். அப்போதுதான் இரண்டாம் இதழ் வெளியிட முடியும், அடுத்து மூன்றாம் இதழ் வரும். நீ உன் கட்டுரைகளுக்கோ புனைவுகளுக்கோ கவிதைகளுக்கோ அளிக்கும் நேரம் இல்லாது போகும். உன் முதல் இதழ் உருவானதும், ஏற்கனவே உள்ள இதழ்கள் நிறைந்த உலகுக்குள் அது விரையும்- மறுசுழற்சித் தொட்டிக்குள் செல்லும் காகித விமானம் போல்; அல்லது, இலக்கிய தளங்கள் நிறைந்திருக்கும் இணையத்துக்குப் போகும். நீ ஏன் இதைச் செய்யப் போகிறாய்? (more…)

உயிர்ப்பசி – காலத்தை வெல்லும் கவிதைகள் குறித்து ஒரு விவாதம்- ஜே. டி. மக்லாட்சி

(நாம் மாநகர ரயில் அல்லது பேருந்து ஒன்றில் ஏறுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். இருக்கை காலியாய் இருக்கிறது, ஓடிப் போய் அமர்ந்து ஆசுவாசமடைந்ததும் மெல்ல அதிகரிக்கும் எரிச்சலுடன் கவனிக்கிறோம், நம்மருகில் அமர்ந்திருப்பவர் யாருடனோ தன் மொபைலில் உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறார். நமக்குச் சம்பந்தமில்லாத விஷயம் மாதிரிதான் இருக்கிறது- யாரோ இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள், ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பேசும் விஷயத்தின் சுவாரசியம் நம்மையும் உள்ளிழுத்துக் கொள்கிறது- அப்படிப்பட்ட ஒரு கட்டுரை இது, J.D. McClatchy எழுதிய “உயிர்ப்பசி” (Hungry for Spirit) என்ற கட்டுரை, Boston Review என்ற தளத்தில் வெளிவந்தது. அதன் எளிய மொழிபெயர்ப்பு இது)

இதில் எனக்கு ஏன் இந்த அக்கறை என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். ஹரோல்ட் ப்ளூம் தொகுத்த நூலில் நான் எழுதிய ஒரு கவிதையும் இடம் பெற்றிருக்கிறது என்பது மட்டுமல்ல, அவர் எனக்கு ஒரு ஆசிரியரும்கூட, இப்போது யேல் பல்கலைக்கழகத்தில் என் சகாவாகவும் இருக்கிறார். இந்தத் தகவல்களை நான் பாஸ்டன் ரிவ்யூ பதிப்பாசிரியரின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். ப்ளூமின் வாதம் குறித்து எதிர்வினை அளிக்குமாறு விடுத்த வேண்டுகோளை அவர் திரும்பப் பெற்றுக்கொள்ள இவை போதுமான காரணங்களாக இருக்கவில்லை. ஆனால் என் சார்புநிலை என்னவென்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.

உண்மையில் ப்ளூமின் சர்ச்சைக்குரிய கட்டுரைதான் என்னைப் பின்னோக்கிச் செலுத்தி அட்ரியன் ரிச்சின் தொகுப்பை முழுமையாய் வாசிக்கச் செய்தது- இதற்கு முன் இதைச் செய்யத் தவறியிருந்தேன். நல்ல காத்திரமான தொகுப்பு, “காட்டமான மருந்து” என்று சொல்வது போன்ற காத்திரம் இதில் இருக்கிறது- ஆனால் சிறப்பான தொகுப்பு என்று சொல்ல முடியாது. அதாவது, தொடரின் நோக்கத்துக்கும் நியாயம் செய்வதில்லை, ரிச்சின் உயர்ந்த, ஆத்திர அவசர லட்சியங்களுக்கும் உதவுவதில்லை. (more…)

யார் இந்த இஸ்மாயில் கதாரே? – ஆடம் கிர்ஷ்

(உலகளாவிய எழுத்தாளர்கள் அனைவரும் புக்கர் பரிசு பெறத் தகுதி கொண்டவர்கள் என்ற புதிய விதிமுறைகளுக்குப்பின் அப்பரிசு இஸ்மாயில் கதாரேவுக்கு 2005ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. அப்போது Adam Kirsch நியூ யார்க் சன் என்ற பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது)

மேன் புக்கர் பரிசுத்தொகை வழங்குபவர்கள் இனி இப்பரிசு சர்வதேச அளவில் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தபோது அச்செய்தி பரபரப்பும் அவநம்பிக்கையும் கலந்த வரவேற்பு பெற்றது. 2012ஆம் ஆண்டு வரை முப்பதாண்டு காலமாக புக்கர் என்று அழைக்கப்பட்டு வந்த அப்பரிசின் கொடையாளர்கள் மாறி அது மேன் புக்கர் என்ற புதிய பெயர் பெற்றிருக்கிறது. இந்த முப்பதாண்டு காலத்தில் இது பிரிட்டனின் மிகவும் பெருமைக்குரிய இலக்கிய விருதாக மாறிவிட்டிருக்கிறது- அமெரிக்காவில் புலிட்சர் பரிசோ நேஷனல் புக் அவார்டோ அங்குப் பெற்றுத் தரக்கூடியதைக் காட்டிலும் அதிக கவனம் அளிப்பதாய் இருக்கிறது. (more…)

நினைவின் பாழ்நிலம்- இஸ்மாயில் கதாரேவின் நாவலை முன்வைத்து

அஜய் ஆர்

thegeneralofthedeadarmy-title

இலியட்டின் இறுதிப் பகுதியில், ட்ராயின் மன்னர் ப்ரயம் (Priam), தன் மகன் ஹெக்டரின் உடலை மீட்க அவனைப் போரில் கொன்ற அக்கிலீஸிடமே யாசகம் கேட்க வருகிறார். பெரும் மீட்புப் பொருளைக் கொடுத்து ஹெக்டரின் உடலை மீட்டு 9 நாட்கள் துக்கம் அனுசரித்தபின் 10வது நாள்,

At last,
when young Dawn with her rose-red fingers shone once more,
the people massed around illustrious Hector’s pyre…
And once they’d gathered, crowding the meeting grounds,
they first put out the fires with glistening wine,
wherever the flames still burned in all their fury.
Then they collected the white bones of Hector –
all his brothers, his friends-in-arms, mourning,
and warm tears came streaming down their cheeks.
They placed the bones they found in a golden chest,
shrouding them round and round in soft purple cloths.
They quickly lowered the chest in a deep, hollow grave
and over it piled a cope of huge stones closely set,
then hastily heaped a barrow, posted lookouts all around
for fear the Achaean combat troops would launch their attack
before the time agreed. And once they’d heaped the mound
they turned back home to Troy, and gathering once again
they shared a splendid funeral in Hector’s honor,
held in the house of Priam, kind by will of Zeus.

And so the Trojans buried Hector, breaker of horses.

என்ற உணர்ச்சிகர நிகழ்வோடு இலியட் முடிகிறது.

ஹெக்டர் இளவரசன் என்பதால் இத்தகைய பிரமாண்டமான இறுதிச் சடங்கு நடந்தது என்றோ ஹோமர் ஒரு உச்ச நிகழ்வோடு தன் காவியத்தை முடிக்க இப்படி விவரித்தார் என்றோ சொல்ல முடியுமா? (more…)

குற்றப் புனைவுகளில் அவல நகைச்சுவை – ஸ்டூவர்ட் மெக்ப்ரைட் நாவல்கள்

அஜய்

ஸ்டூவர்ட் மெக்ப்ரைட்டின் ‘Flesh House’ நாவலில், மாமிசம் பதனிடும் ஆலையில் யாரோ மனித மாமிசத்தைக் கலந்து விட, ‘Aberdeen’ நகர மக்கள் தங்களை அறியாமல் நரமாமிசம் உண்பவர்களாக மாறி விடுகிறார்கள். இதைச் செய்தது யார் என்று விசாரிக்கும் காவல்துறையினருக்கு தாங்களும் நர மாமிசம் உண்டிருப்போமோ என்ற சந்தேகம் வருகிறது. அப்போது அவர்களில் ஒருவர் “Must’ve been OK though: I’m no’ feeling all Hannibal Lectery “. என்கிறார். மிக மோசமான ஒரு நிகழ்வை, அதன் பாதிப்புகளை நினைத்துப் பார்க்காமல், அதை கேளிக்கையாக மாற்றி வாசகனை அதிர்ச்சியடைய வைக்க ஸ்டூவர்ட் முயல்கிறாரா?

தினம் தினம், பல்வேறு வடிவங்களில் மரணத்தை/ காயங்களைச் சந்திக்கும் காவல்துறையினர் தங்களின் மனநிலை பேதலிக்காமல் இருக்க உபயோகிக்கும் பாதுகாப்பு அரண்தான் இத்தகைய அவல நகைச்சுவை. இப்படி வாழ்வில் நிகழும்/ சந்திக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகளை/ பேரிடர்களை நகைச்சுவையோடு எதிர்கொள்வது ‘gallows humor’ என்று அழைக்கப்படுகிறது. எனவே இதை குற்றப்புனைவுகளில் அதிகம் காண்பதை இயல்பான ஒன்றாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனினும், இத்தகைய நகைச்சுவையை (இதை நகைச்சுவை என்று முதலில் ஏற்றுக்கொண்டால்) வாசகன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதைப் பொறுத்தே, இத்தகைய படைப்புக்கள், குறிப்பாக ஸ்டூவர்ட்டின் நாவல்கள் அவனுக்கு உவப்பானவையாக இருக்கும், அல்லது இருக்காது.

ரான்கினின் ‘Edinburgh’ போல, இந்த நாவல்களின் களமான ‘Aberdeen’க்கும் ஒரு தனித்துவ (தொடரின் அங்கமாக ஆகக்கூடிய அளவிற்கு) அடையாளம் கிடைக்காவிட்டாலும், எப்போதும் பெய்து கொண்டே இருக்கும் மழை, அதனால் எங்கும் உருவாகும் ஈரப்பதம், பாழடைந்த குடியிருப்புக்கள், மூதாட்டியால் (சிறுதொழிலாக) வழிநடத்தப்படும் போதை மருந்து வியாபாரம் ஒரு புறம் என்றால், பாலியல் தொழிலில் தள்ளப்படும் 13 வயது சிறுமிகள் இன்னொரு புறம், குற்றக் கும்பல்களுக்கு இடையே நடக்கும் சண்டைகள், லஞ்சத்தில் திளைக்கும் அரசியல்வாதிகள், இனவெறித் தாக்குதல்கள் என அந்நகரத்தின் சித்திரத்தை உருவாக்குவதில் ஸ்டூவர்ட் ஓரளவுக்கு வெற்றி பெறுகிறார்.

மிக கவனத்துடன் பின்னப்பட்ட கதை முடிச்சுகள், போலி துப்புக்கள் இவையெல்லாம் இந்தத் தொடரின் வலுவான அம்சங்கள் கிடையாது. 400-500 பக்கங்களுக்கு குறையாமல் நீளும் இந்த நாவல்களில் ஒரே ஒரு குற்றத்தைப் பற்றி மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல், ஒரே நேரத்தில் 3-4 வழக்குகளை ஸ்டூவர்ட் பின்தொடர்வதை வாசகன் உன்னிப்பாக கவனிக்காவிட்டால், பாத்திரங்களின் பெயர்/ சம்பவக் குறிப்புக்கள் இவற்றில் குழப்பமடைவான்.

இணைகோடுகளாக நடக்கும் இந்த விசாரணைகளை, இறுதிப் பகுதியில் ஸ்டூவர்ட் சடுதியில் முடித்து விடுகிறார். மூளையில் சட்டென்று ஒரு விளக்கெரிய லோகன் (இந்தத் தொடரின் முக்கிய பாத்திரம்), குற்றத்தின் ஆரம்பத்தை புரிந்து கொள்ளும் “deus ex machina” பாணி இடங்கள் இந்தத் தொடரில் நிறைய உண்டு. மூளையில் இத்தகைய மின்னல்கள் மின்னுவது, இன்ஸ்பெக்டர் மோர்ஸிடம் நிகழ்வதுண்டு- அவரின் மேதமை குறித்த நிறைய குறிப்புகள் நாவலில் உள்ளதால் – வாசகனால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. ஆனால் லோகன் ஒன்றும் மேதை அல்ல (இவரை பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்) என்பதால், இந்த தொடர் நாவல்களின் முடிவுகள் சற்று அதிருப்தியை அளிக்கின்றன.

இப்படி இந்தத் தொடரில் பல இல்லைகள் இருந்தாலும், தலை தெறிக்கும் வேகத்தில் செல்லும் கதைசொல்லல், பட்டாசாக வெடிக்கும் உரையாடல்கள், தனித்துவம் கொண்ட பாத்திரங்கள், தொடர் முழுதும் விரவிக் கிடக்கும் இருண்மை நகைச்சுவை ஆகியவை இந்த ‘இல்லைகளை’ சமன் செய்கின்றன.

23 முறை கத்தியால் குத்தப்பட்டு பிழைத்ததால் Lazarus/Laz என்ற பட்டப்பெயரால் அழைக்கப்படும் ‘லோகன்’ இந்தத் தொடரின் நாயகன். உலக பாரத்தைச் சுமக்கும், உறவுகளில் நாட்டமில்லாத, தன் மேலதிகாரிகளை மதிக்காத காவல்துறை அதிகாரிகளிடமிருந்து இவர் வேறுபட்டவர். விடுமுறை நாட்களிலும் மேலதிகாரிகளால் வேலைக்கு வர வற்பறுத்தப்படுபவராக, அவர்களின் வேலையும் தன் மீது திணிக்கப்பட்டு அதைச் செய்து முடிக்க வேண்டியவராக இருந்தாலும் (ஒரு இடத்தை உளவு பார்க்கும் வேலையின்போது மேலதிகாரிகள் குறட்டை விட, இவர்தான் முழித்திருந்து கண்காணிக்க வேண்டியுள்ளது), அதற்காக இன்னொரு புறம் தன் காதலிகளின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியவராக உள்ள லோகன், கொஞ்சம் பிசகினாலும் ‘wimp’ என்ற முத்திரை குத்தப்படக்கூடியவர். அதே நேரம், தன் கீழ் வேலை பார்ப்பவர்களிடம் வேலைகளைத் திணிக்கவும் (“perks of rank” என்ற அவர் உயரதிகாரிகள் சொல்லும் தாரக மந்திரத்தை உபயோகித்து ) செய்கிறார். இவருடைய ஒரே இருத்தலியல் சிக்கல், தூங்குவதற்கும், தன் காதலியுடன் செலவிடுவதற்கும் நேரம் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

எப்போதும் இனிப்பை உண்ணும், பருமனான, மிகக் கோபக்காரரான ‘Insch’, எப்போதும் கலைந்த முடியோடு இருக்கும், அனைவரின் முன்பும் அக்குளைச் சொரிந்து கொள்ளும், பாலியல் இச்சை மிகுந்த, தன் மேலதிகாரியின் மனைவியைக் கவரும் தற்பால் விழைவு கொண்ட ‘ஸ்டீல்’ என மற்றப் பாத்திரங்களும் சுவாரஸ்யமானவர்கள்தான் (40 வயதில் ‘பாலியல் வேட்கையின்’ உச்சத்தில் இருக்கும் தன்னை, தன் துணை திருமணம் என்ற கூட்டிற்குள் அடைக்க முயல்கிறார் என்று வழக்கை விட அதைக் குறித்து அதிகம் கவலை கொள்கிறார் ஸ்டீல்).

இதைப் படிக்கும் போது “Police Academy” போன்ற காவல்துறை வேலைக்கு லாயக்கு இல்லாத கோமாளிகளின் கூடாரம் என்று இந்தக் குழுவைப் பற்றி நினைக்கத் தோன்றும் (“Fuck up squad” என்று இவர்கள் தொடர் முழுதும் மற்றவர்களால் குறிப்பிடப்படுகிறார்கள்). ஆம், இவர்கள் வழக்கமான காவல்துறை அதிகாரிகள் அல்லதான், ஆனால் எப்படியோ தாங்கள் செய்ய வேண்டியதை செய்து முடித்து விடுகிறார்கள். பல கவன சிதறல்கள் இருந்தாலும், ஸ்டீல் ஒரு திறமையான குழுத் தலைவர், அவரே களத்தில் இறங்கவும் செய்வார். மற்றவர்கள் மீது (அதாவது பெரும்பாலும் லோகன் மீது) தன் வேலையைத் திணித்தாலும், அவர்களுக்கான அங்கீகாரத்தைத் தரவும் செய்வார். கொஞ்சம் மென்மை, அதைவிட கொஞ்சம் அதிக சோம்பல், வேலைப் பளு பற்றிய முணுமுணுப்பு என்று இருந்தாலும், ஒரு விஷயத்தைப் பற்றிக் கொண்டால், பல்லைக் கடித்துக் கொண்டு அதன் இறுதி வரை செல்லும் பிடிவாதம் என தன் கலவையான குணத்தால் நம்மை வசீகரிக்கிறார் லோகன். இந்த இரு பாத்திரங்களுக்காக மட்டுமேகூடஇந்தத் தொடரை வாசிக்கலாம்.

எது வாசகனை எளிதில் வசப்படுத்த/ தக்கவைக்க வசதியாக இருக்குமோ, அவன் எதை எதிர்பார்ப்பானோ அதையே எப்போதும் ஸ்டூவர்ட் செய்வதில்லை. இந்தத் தொடரின் போக்கை மாற்றி, அதன் சமநிலையைக் குலைத்து, அதனால் வாசகனை விலகச் செய்யக்கூடிய பல ரிஸ்க்கான முடிவுகளை எடுப்பதற்கு அவர் அஞ்சுவதில்லை. எனவே, இவர் இந்தத் தொடரின் முக்கிய பாத்திரம் அல்லது இவர் இந்த குறிப்பிட்ட நாவலில் முக்கிய பாத்திரம், எனவே இவர்களுக்கு இறுதியில் ஒன்றும் ஆகாது என்று வாசகன் நிம்மதியாக இருக்க முடியாது. யாரை எப்போது எந்த பேரிடர் தாக்கும் என்று சொல்ல முடியாது என்பதால் அவன் கற்பனை செய்திராத கொடூர நிகழ்வுகளை வாசகன்/ பாத்திரங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.

ஸ்டூவர்ட்டின் உரைநடையில்/ உரையாடல்களில் உள்ள அவல நகைச்சுவையில் மற்றொரு குற்றப்புனைவு எழுத்தாளர் ‘R. D. Wingfield’ன் பாதிப்பைக் காண முடிகிறது. ஆனால் இந்த நகைச்சுவை, அதற்கு காரணமான வன்முறை எதுவும் ‘gratuitous’ஆக இல்லை என்பதோடு குற்றத்தின் மூர்க்கத்தையோ/ பாதிக்கப்பட்டவர்களின் துயரையோ மலினப்படுதுவதில்லை. ‘Broken Skin’, என்ற நாவலில் லோகன் ஒரு சிறுவனிடம் தர்ம அடி வாங்குகிறார். (ரீபஸ் இப்படி ஒரு சிறுவனிடம் அடி வாங்குவதை கற்பனை செய்ய முடிகிறதா?). ஒரு ஆண் சிறுவனிடம் எதிர்பாராமல் தோற்பது முதலில் சிரிப்பை வரவழைத்தாலும், அவ்வளவு மூர்க்கம் அந்தச் சிறுவனிடம் எப்படி உருவானது என்ற கேள்வி சிரிப்பை மட்டுப்படுத்தும். சில மாதங்கள் முன்பு வரை, மற்றவர்களைப் போல இருந்த அந்த சிறுவன் ஏன் இப்படி வன்முறையாளனாக மாறினான்
என்று தெரிய வரும்போது, அந்தச் சிரிப்பு முற்றிலும் உறைந்து விடும்.

ரான்கின் போன்ற மற்ற ஸ்காட்லாந்து நாட்டு குற்றப்புனைவு முன்னோடிகள் வளர்த்தெடுத்த “Tartan Noir”ஐ அப்படியே பின் தொடராமல், அதன் சில கூறுகளை மட்டும் எடுத்து – ஆக்ரோஷம் X இருண்மை X அவற்றின் களிப்பு – என்ற விசித்திர நடனமாடும் தனித்துவ பாணியை உருவாக்கியுள்ள ஸ்டூவர்ட் அதன் காரணமாக, அவரது குற்றப் புனைவுகளின் போதாமைகளைத் தாண்டி குறிப்பிடத்தகுந்த எழுத்தாளராகிறார்.

இதுவரை 12 நாவல்கள் உள்ள இந்தத் தொடரின் சமீபத்திய நாவல்களில் கொஞ்சம் “contemplative”ஆக உள்ள ஸ்டூவர்ட்டை/ லோகனை பார்க்க முடிகிறது. இந்த மாற்றம் வரவேற்புக்குரியது. அதே நேரம், அவருடைய பிரத்யேகப் பாணி சற்று நீர்த்துப் போக ஆரம்பித்துள்ளது என்ற உணர்வு தோன்றுவதையும் மறுப்பதற்கில்லை. எனவே, இவரைப் புதிதாக படிக்க நினைப்பவர்கள் இந்தத் தொடரின் முதல் 6-7 நாவல்களை தேர்வு செய்யலாம். ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் அவர் உங்களுக்கான எழுத்தாளரா எனபதை கட்டுரையின் முதல் பத்திக்கான உங்கள் எதிர்வினைதான் முடிவு செய்ய வேண்டும்