விமர்சனம்

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அமெரிக்கா கொண்டு போனாலும் அப்படித்தானாம்!

இவ்வாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பாட்ரிக் மோடியானோ குறித்து நியூ யார்க்கர் இதழில் வோஹினி வரா எழுதியுள்ள கட்டுரை நாம் நினைப்பதற்கு மாறான சில விஷயங்களைப் பேசுகிறது-

அமெரிக்கர் அல்லாத எழுத்தாளருக்கு நோபல் பரிசு கொடுக்கப்படும்போது பெரும்பாலும், அமெரிக்காவில் உள்ள வாசகர்கள், அதிலும் குறிப்பாக பரவலான வாசிப்பும் உலகளாவிய பார்வையும் கொண்டவர்களும்கூட, யார் இது என்று விழிப்பது ஏன்?

இதற்கு பலவிதமான பதில்கள் உண்டு. ஆனால் அதிக அளவில் சொல்லப்படுவது, அமெரிக்காவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் மொழியாக்க நூல்கள் பதிப்பிக்கப்படுகின்றன என்ற பதில். சென்ற ஆண்டு கதை, கவிதை, நாடகம் என்ற வகைமைகளில் ஏறத்தாழ அறுபதாயிரம் புத்தகங்கள் வந்தன. அவற்றில் ஐநூற்று இருபத்து நான்கு நூல்கள் மட்டுமே மொழிபெயர்ப்பு இலக்கியம் என்று ரோசஸ்டர் பல்கலைகழகத்தால் நிர்வகிக்கப்படும் த்ரீ பர்சண்ட் இணையதளம் சொல்கிறது. 2008ஆம் ஆண்டு முதல் மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றிய தகவல்களை இத்தளம் மிக கவனமாகச் சேகரித்து வருகிறது. தேசவாரியாகவும், காலவரிசைப்படியும் இந்த விவரங்களை அட்டவணைப்படுத்தவும் செய்கிறது (பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் முதலிய ஐரோப்பிய தேசங்களின் நூல்கள் அதிக அளவில் மொழிபெயர்க்கப்படுகின்றன).

இந்தப் புத்தகங்களை வெளியிடுபவர்கள் யார் என்பதுதான் மிகவும் சுவாரசியமான விஷயம். சென்ற ஆண்டு டால்கி ஆர்சைவ் என்ற சிறு பதிப்பகமே மிக அதிக அளவில் மொழிபெயர்ப்பு புத்தகங்களைப் பதிப்பித்தது. பொதுவாகவே, யூரோப்பா எடிஷன்ஸ், சீகல் புக்ஸ், ஆர்சிபெலாகோ, ஓப்பன் லெட்டர் போன்ற சிறுபதிப்பகங்களே மொழியாக்க நூல்களை அதிக அளவில் வெளியிடுகின்றன (அமேசானின் அமேசான்கிராசிங் என்ற பதிப்பச்சு இரண்டாமிடம் வந்தது ஒரு விதிவிலக்கு). ஃபரார், ஸ்ட்ராஸ் அண்ட் ஜிரோ மற்றும் நோஃப் போன்ற பெரிய பதிப்பகங்கள் பட்டியலில் பின்தங்கியிருக்கின்றன. (more…)

வரலாற்றின் அவலச் சுவை

நியூ யார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் என்ற இதழில் சில ஆண்டுகளுக்கு முன்னர் திமோதி ஸ்னைடர் ஒரு கட்டுரை எழுதினார் – வரலாற்று காழ்ப்புகளையும் வரலாற்று நிகழ்வுகளின் சிக்கல்களையும் புரிந்துகொண்டு சரி தவறுகளைத் தீர்மானிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதைப் பேசும் கட்டுரை அது. http://www.nybooks.com/articles/archives/2010/jun/24/jews-poles-nazis-terrible-history/?pagination=false (more…)

ரிச்சர்ட் ரோர்ட்டி – ஒரு குறுஞ்சித்திரம்

(பிலாசபர்ஸ் மாகசின் என்ற இதழில் சைமன் ஈஸம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் )

ரிச்சர்ட் ரோர்ட்டி – சிலருக்கு தத்துவவியல் நாயகன், பிறருக்கு தத்துவத்தின் எதிரி. ரோர்ட்டியைக் கண்டனம் செய்வது தத்துவத்துறையில் ஒரு விளையாட்டு போல் ஆகிவிட்டது என்று ரிச்சர்ட் பெர்ன்ஸ்டீன் குறிப்பிடுகிறார். விரும்பலாம் வெறுக்கலாம், இவரை அலட்சியப்படுத்த முடியாது. உலகில் மிக அதிக தாக்கத்தையும் விவாதங்களையும் ஏற்படுத்திய, அதிக அளவில் எழுதிய, அதிக அளவில் வாசிக்கப்படும் தத்துவவியலாளர்களில் ஒருவர் ரோர்ட்டி என்பதில் சந்தேகமில்லை. சமகாலத்தவர்கள் பலரைப் போலன்றி, தன் ஆதர்சங்களான வில்லியம் ஜேம்ஸ் மற்றும் ஜான் ட்யூவியின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி, சமூக நீதி மற்றும் மக்களாட்சி குறித்து பரவலான வாசகர்களை நோக்கி பல்வகைப்பட்ட தலைப்புகளில் பொதுத்தளத்தில் விரிவாக எழுதும் தத்துவவியலாளர் இவர்.

Philosophy and the Mirror of Nature (1979) மற்றும் Consequences of Pragmatism (1982) ஆகிய இரு துவக்க கால பிரதிகளைக் கொண்டு ரோர்ட்டி கடை விரித்தார். அவர் நடைமுறை நோக்கை முன்னிருத்துபவர் (pragmatist). அதாவது, தான் யதார்த்தத்தை ‘இயற்கையின் கண்ணாடி’ போல் பிரதிபலிப்பதாக மொழி கோரிக் கொள்வதில் முழு உண்மை இருக்க முடியாது என்று அவர் நம்புகிறார். மாறாக, அறிவானது, ‘மெய்’ உலகை வெற்றிகரமாய்ச் சமாளிப்பதற்கான சாத்தியங்களைத் தருவித்துக் கொடுப்பதாக இருக்கிறது என்று எதிர்பார்ப்பது மட்டுமே மொழியின்பாற் நாம் வைக்கக்கூடிய உச்ச நம்பிக்கையாக இருக்க முடியும். (more…)

மேவாரின் பட்டத்தரசன்: மீராவின் கணவன்: கண்ணனின் பகைவன்

அஜய் ஆர்

மேவார் ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசு, மகாராஜ் குமார் என்று பட்டம் சூட்டி அழைக்கப்படும் இளவரசருக்கு, ஒரு பெரிய சிக்கல். அவர் மனைவி தான் இன்னொருவருக்குச் சொந்தமானவர் என்கிறார். மகாராஜ் குமாரால் யார் அந்த ஆசாமி என்று கண்டுபிடிக்க முடியவில்லை, அப்படி ஒருவர் இருப்பதாகவே தெரியவில்லை. சரி, ஏதாவது தீய அமானுஷ்ய சக்தியின் வேலையாக இருக்கும், பேயோட்டலாம் என்று பார்க்கும்போது. “You can exorcise the devil. But how do you rid yourself of a God!” என்ற கேள்வி எழுகிறது. ஆம் இளவரசி தன் மனதில் வரிந்திருப்பது கண்ணனை.

ராஜஸ்தானிய இளவரசி கண்ணன் மீது கொண்ட பிரேமை என்று படிக்கும்போது, ‘மீரா பாய்’ நினைவுக்கு வருகிறார் அல்லவா. அவரைப் பற்றிய தொல்கதைகள் பரவியுள்ள அளவிற்கு அவர் கணவர் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அப்படியே தெரிந்ததும் தன் மனைவியின் பக்தியை புரிந்து கொள்ளாத கல் மனிதராக என அவ்வளவு சிறப்பாக இருக்காது. அவரின் கோணத்தை கிரண் நகர்கர் (Kiran Nagarkar), தன்னுடைய ‘Cuckold’ நாவலில் தர முயன்றுள்ளார். ஆனால் இந்த நாவல் மகாராஜ் குமார் குடும்ப வாழ்க்கை, தனிமனித உறவுகள் என்று மட்டும் பேசுவதாக இல்லாமல், விரிவான வரலாற்றுப் பார்வையையும் முன்வைக்கிறது. மேவார் ராஜ்ஜியத்தில் நடக்கும் அரசியல் சதிகள், மேவார் குஜராத்/ டெல்லி ராஜ்ஜியங்களுடன் நடத்தும் போர்கள், பாபரின் வருகை என பதினைந்தாம் நூற்றாண்டு வடமேற்கு இந்தியாவின் சித்திரத்தையும் அளிக்கிறது. (more…)

சொல்ல வந்த விஷயத்தைச் சரியாகச் சொல்லும் கலை – ‘The Sense of Style: The Thinking Person’s Guide to Writing in the 21st Century- Steven Pinker’.

இது நூல் மதிப்பீடோ, நூல் அறிமுகமோ விமரிசனமோ அல்ல. மேற்கண்ட புத்தகத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன என்றாலும் எழுத வந்த விஷயத்தைப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்வது எப்படி என்பது பற்றி சில குறிப்புகளைப் பதிவு செய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

ஸ்டீவன் பிங்கர் எழுதிய, “The Sense of Style: The Thinking Person’s Guide to Writing in the 21st Century” என்ற புத்தகம் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இது பற்றி இணையமெங்கும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். Cognitive Scientist, Linguist என்றெல்லாம் அறியப்படுவதாலும் பொதுவாசகர்கள் படிக்கும் வகையில் அறிவியல் புத்தகங்களை எழுதுவதில் வெற்றி பெற்றவர் என்பதாலும் பிங்கர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. (more…)