பொழுது நகராத மதியவேளை
சங்குபுஷ்ப விதைகளை கொல்லைப்புற
மழைநீர் குழியில் போடுகிறான்
இரு நாட்களில் விதை செடியானது
அதற்கும் ஏதோவொரு அவசரம்
தரையில் படர்ந்த கொடியை
நூல் கொண்டு மேலே திசைதிருப்பினான்
ஒரு மாதத்தில் புதராக மாறிவிட்டிருந்தது
இரண்டு புல்புல் பறவைகள்
அந்தப் புதரை சுற்றிச்சுற்றி வந்தன
கூடு கட்டும் வேலை தொடங்கிற்று
இவனுடைய மேற்பார்வையில்
ஒருநாள்
இரண்டு பேரும் இல்லாத நேரத்தில்
கூட்டை எட்டிப் பார்த்தான்
மூன்று முட்டைகள்
பல்லி முட்டை கூடப் பெரிசு
சில நாட்களில் கூட்டுக்குள்
மூன்று றெக்கை முளைத்த பல்லிகள்
கண் திறக்கவில்லை கத்தவும் தெரியவில்லை
ரோமங்கள் முளைக்க ஆரம்பித்தன
கொஞ்சம் கத்தவும் ஆரம்பித்தன
அந்தப் பக்கம் சுத்திக் கொண்டிருந்த
பூனையின் காதில் விழுந்தது
