எஸ். சுரேஷ்

கோ வாடிஸ்

  எஸ். சுரேஷ் –

 

“எங்க போற?”

“வெளியில போறப்போ கேக்காதேன்னு
எவ்வளவு தரம் சொல்றது”
“நீ கிளம்பறப்ப தானே கேக்க முடியும்?”
“வாயை மூடிண்டு இருடா சனியனே”
மௌனம்
“எங்க போற?”
“வெளியில போறப்போ கேக்காதேன்னு
எவ்வளவு தரம் சொல்றது”
“நீ கிளம்பறப்ப தானே கேக்க முடியும்?”
“வாயை மூடிண்டு இருடா சனியனே”
மீண்டும் மௌனம்
“எங்க போற?”

“வெளியில போறப்போ கேக்காதேன்னு
எவ்வளவு தரம் சொல்றது”
“நீ கிளம்பறப்ப தானே கேக்க முடியும்?”
“வாயை மூடிண்டு இருடா சனியனே”
“மியாவ். மியாவ்.
மி யாஆஆஆஆ வ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்”
பேசிக்கொண்டே இருந்த கூண்டுக்கிளியை பார்த்து
பூனை கத்தியது
“கீச் கீச் கீச் கீச்” என்றுவிட்டு மௌனமானது கிளி
சற்றுநேரம் கழித்து சோம்பல் முறித்துவிட்டு
வாசலைத் தாண்டியது பூனை
“எங்க போற?”

பத்து புத்தகங்கள் – எஸ் சுரேஷ் பட்டியல்

 
 
அண்மையில் பல நண்பர்கள் குறிப்பிடத்தக்க பத்து புத்தகங்கள் என்று ஒரு பட்டியலை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டனர். நண்பர் ஸ்ரீதர் நாராயணன் எனக்கும் அழைப்பு விடுத்திருந்ததால் நானும் பட்டியலிட்டேன்.  “போரும் அமைதியும்”, “குற்றமும் தண்டனையும்” போன்ற இலக்கிய உச்சங்களைத் தொட்ட நாவல்களைதான் அதில் பேச வேண்டியிருந்தது. இது போன்ற பட்டியல்களில் ஒரு சிக்கல், நாம் சொல்லும் எல்லா புத்தகங்களும் எல்லாருக்கும் சுவையாக இருக்காது என்பதுதான். என்னா ஆனாலும், எல்லாரும் “போரும் அமைதியும்”, அல்லது, “யூலிஸ்சஸ்” நாவலை எடுத்துப் படித்து முடிக்கப் போவதில்லை. பட்டியலில் உள்ள பல புத்தகங்களின் பெயர்களைப் பார்த்ததுமே இலக்கியப் படைப்புகள் என்றால் கனமாக இருக்கும், போர் அடிக்கும், பொறுமை இருந்தால்தான் படிக்க முடியும் என்ற எண்ணம் எழுகிறது. இலக்கியம் வாசிப்பதில் நாட்டம் இருப்பவர்களுக்கு இந்தப் புத்தகங்கள் சுவாரசியமாக இருக்கலாம், ஆனால் மற்ற அனைவருக்கும் இதை எல்லாம் படித்து முடிப்பது ஒரு கடமை போலதான் இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே, நான் இந்தப் பட்டியலைத் தொகுக்கும்போது இது விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டேன் – இவை இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்படும் படைப்புகள், அதே சமயம் புதுமையானவை, சுவாரசியமானவை. என் ரசனையும் உங்கள் ரசனையும் வேறுபடலாம், எனக்கு நன்றாக இருப்பது உங்களுக்கு நன்றாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் அளப்பரிய பொறுமைக்கான அவசியம் இல்லாமல், கொஞ்சம் பொறுமையாகவும் ஓரளவு ஆர்வமாகவும் இவற்றை நீங்கள் வாசிக்க நேர்ந்தால், நிச்சயம் இந்தப் புத்தகங்களைப் பாராட்டுவீர்கள்.
 
என்ற சிறு முன்னுரையோடு, என் பரிந்துரைப் பட்டியலை அளிக்கிறேன்:

(more…)

சூப்பர் சிங்கர்

  எஸ். சுரேஷ் –

பாட்டியிடமிருந்து திருடிவந்த வடையை
வாயில் வைத்துக் கொண்டிருந்த காக்காவைப் பார்த்து
நரி கூறியது,
“நீ நன்றாய் பாடுவாயாமே. ஒரு பாட்டு பாடு கேட்கலாம்”

வடையைக் காலுக்கடியில் பத்திரமாக வைத்துவிட்டு
“போடா போடா புண்ணாக்கு, போடாத தப்புக்கணக்கு”
என்று காக்கா பாடி முடித்தப்பின் நரி,
“குரல் நன்றாக இருக்கிறது,
ஆனால் இன்னும் கொஞ்சம் எமோஷன் வேணும்,
வாய்ஸ்ல கூடுதலா டைனமிக்ஸ் வேணும்,
ரெகுலரா ப்ராக்டிஸ் பண்ணு”,
என்று கூறிவிட்டு
திராட்ஷை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

குரு வணக்கம்

 எஸ். சுரேஷ் –

ஒரு கையில் கல்லும் மறு கையில் மைக்குமாய்
சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தவனை நோக்கி,
அந்த பக்கம் வந்த குள்ள நரி,
“வணக்கம் வாத்யாரே. நல்லா கீரியா?
ஆசிரியர் தின வாழ்த்துகள். வர்ட்டா?”
என்று கேட்டுச் சென்றது.
“பாருடா, ஓல்ட் ஸ்டுடென்ட்ஸ் எல்லாம்
என்னை இன்னாமா ஞாபகம் வச்சிக்கினுகுறாங்கோ”
என்று கண்கள் கலங்க, நாத்தழுதழுக்க கூறினான்
அந்தப் பேச்சாளன்.

ஒவ்வொரு நீதிக்கதை

எஸ். சுரேஷ்

 

ராஜா வந்தார் ராஜா வந்தார் டும் டும் டும்
வந்தார் ராஜா வந்தார் ராஜா டும் டும் டும்
கையில் வாளெடுத்து வந்தார் ராஜா டும் டும் டும்
வாளெடுத்து வந்தார் ராஜா டும் டும் டும்
குதிரை மேலே ராஜா வந்தார் டும் டும் டும்
ராஜா வந்தார் குதிரை மேலே டும் டும் டும்
குதிரை இருந்தது ராஜா கீழே டும் டும் டும்
டும் டும் டும், ஆமாம் டும் டும் டும்

ராஜா கையில் வாள்
குதிரைக்குப் பின்னால் வால்
வாள் வாள் வாள்
வால் வால் வால்
டும் டும் டும், அட டும் டும் டும்

குதிரை மேலே காட்டுக்குள்ளே ராஜா போனார்
காட்டுக்குள்ளே குதிரை மேலே ராஜா போனார்
காட்டுக்குள்ளே குழியிருந்தது டும் டும் டும்
குழியிருந்தது காட்டுக்குள்ளே டும் டும் டும்
குழியிருந்தால் குதிரை விழும் டும் டும் டும்
குழிக்குள்ளே குதிரை விழும் டும் டும் டும்

குதிரை இப்போ ராஜா மேல டும் டும் டும்
ராஜா மேல குதிரை இப்போ டும் டும் டும்
வால் இப்போ மேலே இருக்கு டும் டும் டும்
வாள் இப்போ கீழே இருக்கு டும் டும் டும்

ராஜாவைப் பார்த்த மந்திரி சிரித்துப் பார்த்தார்
பார்த்தார் சிரித்தார் சிரிப்பாய்ச் சிரித்தார்
ஹ ஹ ஹ ஹ ஹ் ஹ ஹ ஹ ஹ ஹ
ஹஹஹஹஹஹஹஹா மந்திரி சிரித்தார்
வயிறு குலுங்க காடு குலுங்க மந்திரி சிரித்தார்
ஹ் அஹ அஹ அஹ அஹ ஹ ஹ மந்திரி சிரித்தார்

குழியை விட்டு ராஜா வந்தார் டும் டும் டும்
வாள் எடுத்து வேகமா வீசினார் டும் டும் டும்
தனியாய்ப் பறந்தது தலை டும் டும் டும்
பத்தடி பறந்து விழுந்தது தலை டும் டும் டும்
டும் டும் டும் வெட்டு டும் டும் டும்
டும் டும் டும் ஒரே வெட்டு டும் டும் டும்

ஒரு பக்கம் வெள்ளை, ஒரு பக்கம் சேறு
குதிரையைப் பார்த்து சிரித்தான் ராஜா
ஹ ஹ ஹ ஹ ஹ் ஹ ஹ ஹ ஹ ஹ
ஹஹஹஹஹஹஹஹா ராஜா சிரித்தான் பாரு
காடு குலுங்க வயிறு குலுங்க ராஜா சிரித்தான் பாரு
ஹ் அஹ அஹ அஹ அஹ ஹ ஹ ராஜா சிரித்தான் பாரு

பின்னங்காலால் உதைத்தது குதிரை டும் டும் டும்
பத்தடி பறந்து விழுந்தான் ராஜா டும் டும் டும்
மரத்துல முட்டிச்சு ராஜாவோட மண்டை
அவன் இனி போட முடியாது கொண்டை

காட்டுக்குள்ள ராஜா செத்தான் டும் டும் டும்
ராஜா செத்தான் காட்டுக்குள்ள டும் டும் டும்
காட்டுக்குள்ள குதிரை இருக்கு டும் டும் டும்
அந்த காட்டுக்குள்ள புலி இருக்கு டும் டும் டும்
புலி இருக்கும் காட்டுக்குள்ளே டும் டும் டும்
ராஜாவோட குதிரை இருக்கு டும் டும் டும்

நாட்டுக்கு ஒரு நீதி டும் டும் டும்
காட்டுக்கு ஒரு நீதி டும் டும் டும்
வேற வேற நீதி உண்டு டும் டும் டும்