கவிதை

ஹைட்டியின் பூகம்பத்தில் பிழைத்தவன்

சரவணன் அபி

 

அவன்
வண்டியோட்டிக் கொண்டிருந்தான்

கனத்த குரல்
இடையறாத
உற்சாகக் குரலோசையிடையே
பரபரவென
காற்றில் அலையும்
கரங்கள்
முழுதும் பாதியுமாய்
வெண்சுண்ணம் பூசி
உயராது நிற்கும்
போர்ட் ஆ பிரின்ஸின் கட்டிடங்கள்
காட்டி
போக்குவரத்தின் நெரிசல் கண்டு
பதறி நான் அலறும்போது
சிரித்து காரை
நெறிப்படுத்தும்

இது எங்கள் தேவாலயம்
இதுதான் நாடாளுமன்றம்
இது என் தந்தை சிக்கிக் கிடந்த
சிறைச்சாலை
இது தான் என் தாய்
நிலம்விளை பொருள் விற்கும்
வாரச்சந்தை
நானும் என் தங்கையரும்
ஆடி மகிழ்ந்த பூங்கா
பாதியில் நின்ற பள்ளி
புன்சிரிப்பு வழியும்
கனத்த குரலில்
சொல்லிச்சென்றவனின்
கரம்தொடர்ந்து
பார்வை தொடர
எதுவும் இல்லை
எங்கும்

இடையில் விழுந்த
அமைதி உணராது
கூடைச்சுமை தாங்கித்திரியும்
ஆடவர் பெண்டிர்
கூட்டம் தவிர்த்து
நிலைச்சின்னம் இருமருங்கும்
தேடி
திரும்பிப் பார்த்தேன்
அவனை

கண்ணாடியின் முன்னால்
பதிந்திருந்த
அவன் பார்வையில்
இன்றுமில்லை
நாளையுமில்லை

விழித்து எழுந்தால்
ஆடியிருந்த
எந்தச்சின்னமும் இல்லை
கூடிமகிழ்ந்த
பள்ளி இல்லை பூங்கா இல்லை
சந்தை இல்லை வீடு இல்லை
ஆலயம் இல்லை சாலையும் இல்லை

பின்னிக் கிடந்த
எந்த
நினைவுகளும் இல்லை

திரும்பிக் கேட்டான்
கண்ணீர் வழிய
என் புன்னகை உறைய

துடைத்தெறியப்பட்டுவிட்ட
எங்கள் நினைவுச்சின்னங்கள்
சுவடின்றி மறைந்த  பாலியங்கள்
புரியுமோ என்னவோ
உங்களுக்கு
புரியுமோ என்னவோ

ஒளிப்பட உதவி – Radio Tginen

பழக்கம்

ஸ்ரீதர் நாராயணன்

தோளை தட்டி, திரும்பியதும்
விரியப் புன்னைகைத்து
நலம் விசாரித்தபடி
பேச்சைத் தொடங்கலாம்தான்.

நரைக்கு பூசும் சாயம்
பெண்ணுக்கு பிடித்த பிங்க் உடை,
வேனலுக்கான வாசஸ்தலங்கள்,
தளிர்த்திருக்கும் கறிவேப்பிலைக் கன்றுகள்,

இயந்திரத்தில் போட்டு
மாடுகளை வெட்டும்
வாட்சப்பில் வந்த அசைபடம்,

மணிகோர்த்த மயிற்கற்றைகள் ஊசலாட
அங்கங்களை அழகாக குலுக்கும்
நாரீமணியின் நடனம்,

‘அவன் கை குட்டை’
என்னும் அரசியல் விமர்சனத்தின்
இடக்கரடக்கல் பொருள்,

என தளும்பிக் கொண்டிருக்கும்
பேசுபொருட்களுடன்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அவசரமாக வாயோரங்களை
அரைகுறையாக துடைத்த
பேப்பர் நாப்கினை
உள்ளங்கைக்குள் வைத்து உருட்டியபடி

ஜாக்கிரதையான விறைப்புடன்
விலகிச் செல்லும் அவருக்கும்
இது போன்று பேசுவதற்கு
நிறைய இருந்திருக்கும்

Yves Bonnefoy (1923–2016) – ஒரு கவிதை

(உரைநடை தமிழாக்கம் பீட்டர் பொங்கல்; கவிதை தமிழாக்கம் – நகுல்வசன்)

ஈஃப் பன்ஃபுவா (Yves Bonnefoy) இம்மாதத்தின் துவக்கத்தில் மறைந்தார். கடந்த அறுபது ஆண்டுகளின் மிக முக்கியமான, மிகுந்த தாக்கம் செலுத்திய பிரஞ்சு கவிஞர் என்று பலராலும் கருதப்பட்டவர் இவர். உலகோடு நாம் எவ்விதத்திலும் “பொய்க்கலப்பற்ற நெருக்கம்” (“authentic intimacy”) கொள்ளாத வகையில் மொழி நம்மை விலக்குகிறது என்று அவர் நம்பிய காரணத்தால், “நாம் அதைத் தொலைத்துவிட்டோம் என்பதை நினைவுறுத்தவும்“, “பிறரை, அல்லது மரங்களை, அல்லது எதையும் நாம் எதிர்கொள்வது சாத்தியப்படும் கணங்களின்” மதிப்பை நமக்கு நாமே மெய்ப்பித்துக் கொள்ளவும், நமக்கு கவிதை தேவைப்படுகிறது என்றார் அவர். எந்தவொரு அறிவு சார்ந்த குறுக்கீடாலும் களங்கப்படாத “le vrai lieu”- மெய்யுலகம்- ஒன்றை மீளுருவாக்கம் செய்வதற்கான அவரது முயற்சிகளும் மெய்ம்மையை நோக்கிய கோரிக்கையும் பன்ஃபுவாவின் கவிதைகளில் கண்ணுக்குத் தெரியாத இருப்பாய் சூழ்கின்றன. மெய்ம்மையின் இயல்புநிலையில் நிலவிய பூரணத்துவ எச்சங்கள் இன்னும் மண்ணில் எஞ்சியிருக்கின்றன, அவற்றைச் சேகரித்து மீண்டும் கட்டியெழுப்புவதே கவிஞனின் பணி. இருப்பை அடைய வேண்டுமெனில் அதன் இயல்புநிலையில் துலங்கும் குறியீட்டு ஆற்றலை விரயம் செய்யும் கருத்துநிலை சட்டகத்திலிருந்து மொழியை விடுவித்தாக வேண்டும். “சொல்லென்பது இனிமேலும் உள்ளதன் விவரணையுள் நுழைவதல்ல“.

கவிதை மட்டுமே, வடிவத்தில் கவனம் செலுத்தும்போது “சொற்களின் கருத்துநிலை பொருளை மௌனிப்பதால்” கிட்டத்தட்ட தெய்வீகமாயுள்ள தரிசன கணத்தை மீண்டும் உருவாக்கக்கூடியது. கவிதை மட்டுமே, “உலகின் நேரடி நோக்கு” அளிக்கக்கூடியது. La Seconde Simplicité (1961), என்ற தொகுப்பில் உள்ள “The Lights of Brindisi”, என்ற கவிதையில், கவிஞர் காண்கிறார் – மூடப்பட்ட தோட்டச் சுவற்றால் சேய்மைப்படுத்தப்பட்ட இலைகளுக்கு அப்பால், நிஜமற்ற புன்னகை கொண்ட “வெள்ளி’ நிலவுக்கு அப்பால்- தோன்றி மறையும் வேறொன்றின் முத்திரையை, கண்ணுற்ற கணமே அது காணாமற் போகிறது.

ப்ரின்டீசியின் விளக்குகள்

இரவில், ப்ரின்டீசி துறைமுகத்தில்,
தேவதைகள் அகலேந்திப் பறந்து கொண்டிருந்தன,  அழல்கள்
அவற்றின் மேல்நோக்கும் முகங்களைக் காட்டின, கடலில்.
-ஓ! நிஜ இலைகளே,
பூட்டிய தோட்டத்தின் சுவர்கள்
உங்களைத் தொலைவிலிருத்தும், எப்போதுமே;
மரங்களின் சிகர வெள்ளியாய்
தலை சாய்த்திருக்கும் நகைமுகமே,
புயற்கதவை நீ அடைத்து விடுகிறாய், எப்போதுமே.
ஆனால் இன்றிரவு என்னால் உன்னைப் பார்க்கமுடிகிறது;
நுரையின் முத்திரையே,
கடக்கும் படகு உன்னை விட்டும் செல்கிறது, இரவில்.

(ஆங்கில மொழிபெயர்ப்பு – அந்தோணி ருடால்ஃப், 1966)

நன்றி – Andrew McCulloch, Times Literary Supplement

லிட்மஸ்

லதா ரகுநாதன்
 
மௌனங்கள் காற்றில் மிதந்து கொண்டிருக்கின்றன,
கண்களுக்குக் குளுமையாய்.
நீலம், சிவக்கிறது.
செங்குருதி கேட்கிறது.
வார்த்தைகளாய் மாறும் மௌனம்
காயப்படுத்துமெனில்,
மௌனங்கள் மௌனமாகவே இருக்கட்டும்.

டிசம்பர் பூக்கள்

ஸ்ரீதர் நாராயணன்

NKN_6637.JPG

கரளைகற்கள் உறுத்தும்
வெட்டிவைத்த பாத்திகளில்
காட்சிக்கென மட்டும்
வளர்க்கப்பட்டிருக்கும்,

பெயர் தெரியாத
வெளிறிய ஊதா வண்ணப்பூக்களை
படமெடுத்து சேமிக்கையில்
‘டிசம்பர் பூக்கள்’
எனப் பெயரிடுகிறேன்.

பெயர் தெரிந்து கொள்ளாமலேப் போன
புதுமண்டபத்து பூக்கார அம்மாளின்
பூதொடுக்கும் தாளகதியையும்
வாயோர வெற்றிலை சிவப்பையும்
எப்படிப் பெயரிடுவது