சிகந்தர்வாசி

வழித்துணை

 

உறக்கம் வராமல் படுக்கையில்
புரண்டு புரண்டு படுக்கும் நேரம்
அவள் கதவைத் தட்டுகிறாள்
அறையுள் கசியும் மெல்லிய வீதிவெளிச்சம்
இரவு விரைவாகச் செல்லும் லாரியின் சப்தம்
ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியின் ஓசை
யாரையோ கூப்பிடும் பல்லியின் குரல்
இடைவிடாது டிக் டிக் டிக் எனும் காலக் கணக்கு
எல்லாவற்றையும் மீறி அவள் கதவை தட்டும் சப்தம்

இல்லாத கதவை இல்லாத ஒருவள் தட்டுகிறாள்

மீண்டும் பெற முடியாது நழுவவிட்ட தருணங்கள்
சொல்லாத பல நூறு அன்புச் சொற்கள்
பாதை ஒன்றே என்று நினைத்துச் செய்த பயணம்
ஆனால் கண்ட காட்சிகள் ஒன்றா?

அவள் கதவை தட்டுகிறாள்

பாதையில் ஏதோ விட்டுவிட்ட உணர்வு
எந்த நடையும் முழுமை அடைவதில்லையோ?
சிராய்ப்புகள், பெரிய காயங்கள், மெதுவாக உருமாறி
இந்த இரவின் நிலவு போல் பளிச்சென்று தெரிகின்றன
வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது
கண்ணை மூடிக்கொண்டாலும் காதில்
அவள் கதவை தட்டும் சப்தம்

அவள் தட்டுவதனால் என் மனம் அதிர்கிறதா
இல்லை மனம் அதிர்வதால் சப்தம் கேட்கிறதா

வகுத்த பாதை நமதில்லை என்றாலும்
பாதையை மாற்றியிருக்கலாமோ?
காட்சிகள் மாறியிருக்குமோ?
பாதையில் அருவிகள் தோன்றி சாரலில் நனைந்திருப்போமோ?
இல்லை, கல்லும் முள்ளும் நிறைந்திருக்குமோ?

கேள்விகள் காற்றடிக்கப்படும் பந்து போல் பெரிதாகின்றன
பெரிதாகிக்கொண்டே இருக்கின்றன
கண் திறந்தாலும் மூடினாலும் அவையே தெரிகின்றன

உறக்கம் வராமல் திரும்பிப் படுக்கிறேன்
அவள் கதவை தட்டுகிறாள்

முகம் பார்த்தல்

சுற்றும் முற்றும் பார்க்கிறேன் தெரிந்த முகம் எதுவுமில்லை
கூட்டம் அதிகரிக்கிறது
உள்ளே வரும் ஒவ்வொருவரையும் உற்றுப் பார்க்கிறேன்
தெரிந்த முகம் இல்லை
கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க தனிமை அதிகரிக்கிறது
அழையாத விருந்தாளி போல் நான்

ஆனால் அழைத்திருந்தார்கள்

சரவணன் பல ஆண்டுகளுக்கு முன் சென்று விட்டான்
மேடையில் இருக்கும் பேத்திக்கு அவன் முகம் இல்லை

வயதானவர்கள் முகங்களைப் பார்க்கிறேன்
நடுத்தர வயது முகங்களைப் பார்க்கிறேன்
இளைஞர்களைப் பார்க்கிறேன்
யார் முகத்திலாவது தந்தை முகமோ
தாத்தா முகமோ தெரியுமா என்று
ஆனால் தெரிந்த முகம் தோன்ற மறுக்கிறது

தம்பதிகளுக்கு பின்னால் பூ அலங்காரம்
பட்டுப் புடவையில் அழகான பெண்கள்
என்னைச் சுற்றி சிரிப்பும் விசாரிப்புகளும்
தனித்து நான்

அனுமன் வால் போல் நீண்டிருக்கும் க்யூவில் நின்று
மேடை ஏறுகிறேன்
நான் சரவணனின் மனைவியைப் பார்த்து வணக்கம் சொல்ல
அவர் முகத்தில் முதலில் குழப்பம்
பிறகு ஒரு சிரிப்பு, உண்மையான சந்தோஷம்

கீழே இறங்குகிறேன், தெரிந்த முகம் எதுவுமில்லை
ஆனால் இப்பொழுது அது பெரிய விஷயமாக தெரியவில்லை

என்னைத் தவிர யாருமில்லை

அங்கு என்னைத் தவிர யாருமில்லை
இன்னும் சற்று நேரத்தில் கோவிலை மூடிவிடுவார்கள்
பெருமாள் சங்கு சக்ர கதாபாணியாக என்னைப் பார்க்கிறார்
பூமாலையால் அலங்கரிக்கப்பட்ட அவரை நான் பார்க்கிறேன்
ஒருவரை ஒருவர் சற்று நேரம் உற்றுப் பார்த்துக் கொள்கிறோம்

கண்களை மூடிக்கொண்டு “சாந்தாகாரம் புஜகசயனம்” என்ற
ஸ்லோகத்தை மனதுக்குள் சொல்லிக்கொள்கிறேன்
மூடிய கண்களுக்குள் பெருமாளின் தோற்றம்
அதே சங்கு, அதே சக்கரம், அதே கதை
பூக்களின் நிறம் மட்டும் மாறியிருக்கிறது

எங்கிருந்தோ அர்ச்சகர் ஒருவர் வருகிறார்
மந்திரங்கள் எதுவும் சொல்லாமல் கற்பூரம் காட்டுகிறார்
கருவறையின் பிற சிலைகள் இப்பொழுது கண்ணில் படுகின்றன
பெருமாளின் முகம் ஒளிர்கிறது, கருமையாகிறது,
மறுபடியும் ஒளிர்கிறது
கருமை, ஒளி, கருமை
கை குவித்து கண்களை மூடிக் கொள்கிறேன்
ஒளிர்ந்து கொண்டிருக்கும் மாலின் முகம் தோன்றுகிறது
சங்கு இல்லை, சக்கரம் இல்லை, கதை இல்லை
ஒளிர்கின்ற முகமும் நாமமும் மட்டும்

கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு
மணி அடித்து நிசப்தத்தைக் கலைத்துவிட்டு
பிரகாரத்தை சுற்ற ஆரம்பிக்கிறேன்
வெயில் தகிக்கிறது
கால்கள் தீ மிதிப்பது போல்
மரத்தடி மேடையில் அமர்கிறேன்

அனல் காற்று வீசுகிறது, கண் கூசுகிறது
கண்ணை மூடினால் பெருமாள் தரிசனம் கொடுக்கிறார்
வெறும் முகம், முகத்தை மறைக்கும் நாமம்
முகம் ஒளிர்கிறது

தூரத்தில் வாகனங்களின் ஓசை
மரத்தில் பட்சிகள் எப்பொழுதாவது பேசுகின்றன
குடுமி வைத்த சிறு பையன் எங்கோ ஓடுகிறான்
நான் வானத்தைப் பார்க்கிறேன், மேகங்கள் இல்லா வானம்
சற்றே வெளுத்திருக்கும் வானம்
எதுவும் மனதில் தோன்றவில்லை
ஏகாந்தத்தில் அசையாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்
பறவைகள் பேசுகின்றன, வாகனங்கள் ஓடுகின்றன
கண்ணை மூடினால் கண்முன் பெருமாள் தோன்றுகிறார்
வானம் வெளுத்திருக்கிறது, தூரத்தில் சிறு மேகம்
அது சங்கு போல் தெரிவது எனக்கு மட்டும்தானா?

வேகமாய் பிரகாரத்தைச் சுற்றி வந்து பெருமாள் முன் நிற்கிறேன்
மறுபடியும் அவர் என்னை பார்க்கிறார்
நானும் அவரைப் பார்க்கிறேன்
அர்ச்சகர் இல்லை, மணியடித்துவிட்டு கண்கள் மூடுகிறேன்
சங்கு சக்ர கதையுடன் பெருமாள் தோன்றி மறைகிறார்
கண்களைத் திறந்து அவரையே உற்றுப் பார்க்கிறேன்
அவர் வேறு எங்கோ பார்ப்பது போல் இருக்கிறது
கரங்கள் கூப்பி சேவித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்புகிறேன்

அமைதியின் தருணங்கள்

 

வீடு அமைதியாகதான் இருக்கிறது
இரவில் கூப்பிடும் பல்லி சப்தம் இப்பொழுது இல்லை
மின்விசிறியும் ஓடவில்லை, வெறும் கடிகாரத்தின் மெல்லிய சப்தம் மட்டும் கேட்கிறது
மின்விசிறியைப் பார்க்கிறேன், சதுரமாக சுவரில் பதிந்திருக்கும் ஜன்னலின் நிழலைப் பார்க்கிறேன்
மெல்லிய பச்சை நிறத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் கடிகார முள்ளைப் பார்க்கிறேன்
மங்கலாக தெரியும் மேஜையைப் பார்க்கிறேன்

வீடு அமைதியாக இருக்கிறது
எக்சாஸ்ட் ஃபேன் நிழல் தட்டையாய் சமையலறை சுவரின்மேல் விழுகிறது
சோடியம் வெளிச்சம் கசிந்து உள்ளே வந்து கொண்டிருக்கிறது
ஜன்னல் வழியாக பார்த்தால், நட்சத்திரங்கள் மறைய தொடங்குகின்றன
பக்கத்து ஃப்ளாட்டில் யாரும் இன்னும் எழுந்திருக்கவில்லை

வீடு அமைதியாக இருக்கிறது
சமையலறையில் நான் சுடு தண்ணிர் வைக்கிறேன்
பால் காய்ச்சி காபி போடவேண்டும்
இருட்டில் ஹால் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு
காபி குடிக்க வேண்டும், (சக்கரை இல்லா காபி)

கையில் காபி கோப்பையுடன் இருள் சூழ நான்
எங்கும் நிசப்தம், இது அமைதியின் தருணம்
(சப்தங்கள் இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் கேட்கலாம்)
இப்பொழுது எழுதலாம், சிந்திக்கலாம்
பல காரியங்கள் தடையின்றிச் செய்யலாம்
நானோ காபி குடித்து கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்

வீடு அமைதியாக இருக்கிறது
வீடு வெறுமையாக இருக்கிறது
என்னைத் தவிர வீட்டில் யாருமில்லை
மௌனம் குடிகொண்டிருந்தும் எனக்கு ஒன்றும் செய்யத் தோணவில்லை
காபி மெதுவாக குடிக்கிறேன்

வீடு அமைதியாகதான் இருக்கிறது
மனதில் அமைதி? மனம் சலனம் இல்லாமல் இருக்கிறது
எதைப் பற்றியும் சிந்திக்க மாட்டேன் என்கிறது
எண்ணங்கள் மேலெழுந்து வருவதில்லை
இருளில் நான் காண்பது வெறுமையா? இல்லை அமைதியா?

(அமைதி நாடு என்று தத்துவங்கள் சொல்கின்றன
எல்லா குருக்களிடமும் தாங்க முடியாத கூட்டம்
எல்லோருக்கும் அமைதி வேண்டும்.
“எல்லாம் இருக்கிறது, அமைதியை கொடுங்கள்”
கள்ளச் சாமியார்கள் உரக்க சிரிகிறார்கள்
உண்மையான குரு மெளனமாய்ச் சிரிக்கிறார்)

“வாழ்க்கையின் கடைசி தருணங்களை எப்படி எதிர்க்கொள்கிறீர்கள்?”
என்று ஒருவன் பத்து வருடங்களுக்கு முன் கேட்டான்
கடைசி தருணங்கள்? எனக்கு அப்படி தோன்றியதில்லை
என் நாள் எப்பொழுதும் ஒரே போல்தான் தொடங்குகிறது
ஒரே போல்தான் விரிகிறது, அலை பின் அலையாக
(என்றைக்காவது ஒரு சுனாமி வரலாம்)
தினமும் அதே கடல் அலைதான்
ஓயாமல் கரை சேரும் அலை

நாற்காலியை விட்டு எழுந்திருக்கும்பொழுது முட்டி வலிக்கிறது
மெதுவாக நடந்து சென்று சமையலறை விளக்கை அணைக்கிறேன்
வீடு மறைகிறது, மீண்டும் அமைதி. மீண்டும் வெறுமை
மற்றும் நான்

நெடும்பயணம்

அவள் முகத்தை உற்றுப்பார்க்கிறேன்
சுருக்கங்கள் ஒவ்வொன்றாக மறைந்து
கன்னங்கள் வழவழப்பாகின்றன
எங்கோ வெறித்து பார்க்கும் கண்களில்
இப்பொழுது தீ

தூரத்தில் மங்கிய ஒளியில் பச்சை மலச்சரிவுகள்
ஒளிரும் வெள்ளை மேகங்கள்
எங்கு பார்க்கினும் பரவசம்

மேகங்கள் கலைந்து கலைந்து கலைந்து கலைந்து
வேறு வேறு உருவங்களாக மாறுகின்றன
ஒளிரும் மேகங்கள் ஒளி மங்கி கறுத்து
மீண்டும் ஒளிர்ந்து மங்கி ஒளிர்ந்து
இப்பொழுது?

தெரிந்த பாதையிலா போனோம்? மலைகள்
மறைந்து வேறு மலைகள் தோன்ற
ஏன் சென்றோம் என்று சில பாதைகள்
வண்ணமயமான பல பாதைகள்
எங்கோ மறைந்து போன பாதைகள்

மெதுவாக எழுந்து தளர்ந்த நடை நடக்கிறாள்
உடன் நானும் மெதுவாய் எழுந்திருக்கிறேன்