சிறுகதை

ஆற்றோரமாய்…

மெரடித் ஏலிங்

“அந்த ஆள் என்ன செய்து கொண்டிருக்கிறான்?”

“எந்த ஆள்?”

மலை மேல் பார்க்கத் திரும்பினான் மைக்கேல்.

“நாம் செய்வதைத்தான் செய்வானாக இருக்கும்,” என்றான் அவன்.

கேரி வெயிலுக்குப் போட்டுக் கொண்டிருந்த தொப்பியைக் கழட்டினாள்.

“அவனிடம் மீன் பிடிக்கும் கருவிகள் எதுவும் இல்லை,” என்றாள் அவள். “அல்லது காம்ப் செய்வதற்கானதுவும் இல்லை”

“காரில் வைத்திருப்பானாக இருக்கும்”

மைக்கேல் கல்லோன்றின் மீது கால் வைத்து, ஆற்றுக்குள் தூண்டிலை வீசினான்.

“எனக்கு என்னமோ சந்தேகமாக இருக்கிறது,” என்றாள் கேரி. “பார்த்தால் அப்படி இல்லை”.

மைக்கேல் தூண்டிலை இழுத்துக் கட்டிவிட்டு, ஆற்றங்கரைக்கு ஏறி வந்தான்.

“இருக்கட்டும்,” என்றான் அவன், “அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறாய்?” (more…)

பியாரி பாபு

– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியங்கள்: யாத்ரீகன்

Reflection

‘இதுதான் காந்தி கணக்குல எழுதறது’ என்று சொல்லி சிரித்தான் செல்லா.

‘இனியும் இந்த கணக்கு முடிக்கிற பஞ்சாயத்தெல்லாம் நீயே பார்த்துக் கொள் செல்லா. என்னால் இந்த கடைசிநிமிட பிரஷர்களை சமாளிக்கவே முடிவதில்லை’ வெள்ளிக்கிழமை இரவு ஒன்பதரை மணிக்கு தெருமுக்கு டெலியிலிருந்து (Deli) வாங்கி வந்திருந்த பீட்சாவை சாப்பிட்டுக் கொண்டே, டயட் சோடவைக் குடித்துக் கொண்டே, நடுநடுவே புலம்பிக் கொண்டிருந்தார், ரீத்து சுக்லா.

வயதானவர். அடுத்த மாதத்தோடு ரிடயர்மெண்ட் ஆகிறது. இன்னமும் மாதாந்திர அக்கவுண்டிங்கை முடிக்க படாதபாடு படுகிறார். இந்த முறை, சரியாக வெள்ளிக்கிழமை கணக்கை முடிக்க வேண்டும். அந்நேரம் பார்த்து எட்டே முக்காலுக்கு வந்து சேர்ந்த ஃபைலில் தகராறு. அசெட் மேனேஜ்மெண்ட் டிபார்ட்மெண்ட்டில் இன்னொரு வயதான அம்மணி டாலியாகாத கணக்கு ஃபைலை அனுப்பிவிட்டு வீட்டிற்கு போய்விட்டார். இன்னும் அரைமணிநேரத்தில் பேட்ச்சை லெட்ஜரில் ஏற்றித்தள்ள வேண்டும்.

‘என்ன செய்வது செல்லா. இனி பார்பராவை தேட முடியாது. பேட்ச் ஓடுவதற்குள் இந்த கணக்கை சரி செய்ய முடியாதா’ என்று இறைஞ்சினார், சிறிய வித்தியாசம்தான். ஏழு செண்ட்டுகள். அவசர அவசரமாக ஈஆர்பி-யின் புறவாசல் வழியாக ஏழு செண்ட்களை சேர்த்து கணக்கை நேர் செய்து, அதற்கு வேண்டிய SOX ஒப்புதல்களுக்கான சாங்கியங்களை முடித்துவிட்டு ரீத்து அம்மையாரைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தி சிரித்தான்.

‘ஓக்கே மிஸ்டர் காந்தி. கார் வரை கொஞ்சம் துணைக்கு வாயேன். அடுத்த மாதத்திலிருந்து இந்த சொத்து பராமரிப்பு கணக்கு, டாக்ஸ் கணக்கு எல்லாம் நீ ஒருத்தனாக ஜமாய்’ என்று கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினார் ரீத்து அம்மையார்.

அவனுடைய முழுப்பெயர் செல்லமுத்து காந்தி. இந்தியாவில் இருந்தவரை சி. காந்தி. இங்கே வந்ததும் செல்லமாக ‘செல்லா காந்தி’யாகி விட்டான்.
ரீத்து அம்மையாரை அனுப்பிவிட்டு, வழியில் பியர் கெக் ஒன்றைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு போய் வாரயிறுதியை கொண்டாட திட்டம் போட்டது அவருக்கு எப்படி தெரிந்ததோ…

‘நாளைக்காலை ஒரு சின்ன ஹெல்ப் செய்கிறாயா செல்லா? இங்கே நமது கோவில் கம்யூனிட்டி ஹாலில் பியாரிபாபுவின் ‘காந்தி கதா’ நிகழ்ச்சி ஏற்பாடாகியிருக்கிறது. ரவீந்திரனுக்கு ஏதோ அவசர வேலையாக நியூயார்க் போக வேண்டுமாம். நீதான் கொஞ்சம் போய் பியாரிபாபுவைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும்’ என்றார்.

‘நாளைக்கு என்ன விசேஷம்?’ என்று செல்லா கேட்டதும் தலையில் அடித்துக் கொண்டார் அவர்.

‘உனக்கு எப்படி காந்தி என்று பெயர் வைத்தார்கள்?’ என்று சற்று கோபமாகவேக் கேட்டார் ரீத்து அம்மையார்.

‘நேற்று காந்தி ஜெயந்தி இல்லையா. அதற்குதான் நாளை சனிக்கிழமையன்று, பியாரி பாபுவின் பிரசங்கம். வீட்டிற்குப் போய் பாபுவின் அட்ரஸை அனுப்பி வைக்கிறேன். குவேக்கர் டவுன் இங்கிருந்து ஒன்றரை மணி நேரம்தான். பார்த்துக் கூட்டிக் கொண்டு வா. மிகவும் வயசானவர்’ என்று சொல்லி செல்லாவின் வாரயிறுதி திட்டங்கள் அனைத்தையும் குழிதோண்டி புதைத்து விட்டு காரில் ஏறிப் போய்விட்டார்.

உண்மையில் செல்லமுத்து என்பது அவனுடைய அப்பா பெயர்தான். பொதுப்பணித்துறை காண்டிராக்ட் விவகாரம் ஒன்றில் வெட்டுக்குத்து கேஸாகி, அவன் பிறந்த வருடம்தான் அப்பாவிற்கு சாதகமாக தீர்ப்பாகியிருந்தது. இதே போல ஒரு வியாழக்கிழமையில் வந்த காந்தி ஜெயந்தியன்றுதான் அவனுக்கு பெயர் சூட்டுவிழா வைத்திருந்தார்கள். அவனுடைய அப்பத்தா நெகிழ்ச்சியோடு ‘காந்தின்னு பெயர் வைங்க தலைவரே’ என்று எடுத்துக் கொடுக்க நகராட்சி சேர்மன் இருநூற்றியொன்று ரூபாய் பணமும், கழுத்தில் ஒரு சங்கிலியும் போட்டு அவனுக்கு காந்தி என்று பெயர் சூட்டியிருந்தார். ஊரில் இருந்தவரைக்கும் அந்தப் பெயர் அவனுக்கு விசேஷ கவனத்தையும், வேண்டாத தொல்லைகளையும் கொடுத்துக் கொண்டிருந்தது. கல்லூரிக்காலத்தில் ஹாஸ்டல் நண்பன் மார்த்தாண்டனின் காதலுக்கு ஆதரவாக இறங்கியபோது போலிஸ் ஸ்டேஷன் வரைக்கும் பஞ்சாயத்து போய்விட்டது. பெண்ணின் தகப்பனார் பெரிய மில் அதிபருக்கு உறவு என்பதால் போலிஸில் அடி பின்னி எடுத்துவிட்டார்கள்.

‘காந்தின்னு பேர வச்சிகிட்டு… காலித்தனம் பண்ணுது பாரு மூதேவி…’ என்று சொல்லி சொல்லியே அந்த கான்ஸ்டபிள் மிதித்தார்.

இங்கே ஜேஸ்டன்வில்லுக்கு வந்தபோது அவனுடைய முழுப்பெயரான செல்லமுத்து காந்தி பலருக்கும் ஆச்சரியமான விஷயமாக இருந்தது.

‘சள்ள….மத்து.. கேண்டி… நீங்கள் இந்தியரா? த லேண்ட் ஆஃப் மகாத்மா?’ என்றுக் கேட்டுவிட்டு சற்றுநேரம் இமைக்காமல் பார்ப்பார்கள்.

முதன்முதலாக ரீத்து சுக்லா அம்மையாரை இன்டர்வ்யூவில் பார்த்தபோது, ‘உன் பெயர் ஒன்றே போதும். வேறெதுவும் எனக்கு தெரிய வேண்டாம்’ என்று சொல்லி வேலைக்கு எடுத்துக் கொண்டுவிட்டார். ஆயிற்று இரண்டு ஆண்டுகள். அடுத்த மாதம் அவர் ரிடயர்மெண்ட்டுக்கு அப்புறம் அந்தப் பணியிடம் அவனுக்குத்தான் நியாயமாக வந்து சேரவேண்டும். சொல்லமுடியாது. முழுமையாக நடக்கும்வரை அவர் மனம்கோணாமல் நடந்து கொள்வது என்றுதான், அந்த சனிக்கிழமை காலை விரைவாக குவேக்கர் டவுனுக்கு சவாரி விட்டான்.

ஒரே பெயரில் இருந்த குறுக்குத்தெரு நெடுக்குத்தெரு குழப்பங்களை எல்லாம் தாண்டி சரியான வீட்டு எண்ணை கண்டுபிடித்து விட்டாலும், அப்பிரதேசத்தின் ஐரோப்பியத்ன்மை அவனை சற்று குழம்பச் செய்தது. இங்கே யார் பியாரி பாபு என்று இருக்கப் போகிறார்கள்.

காலிங் பெல் அடித்ததும், கதவைத் திறந்து வந்தவர் நிச்சயம் இந்தியர் இல்லை.
இவன் திருதிருவென முழிப்பதைப் பார்த்ததுமே அவர், ‘ஜேஸ்டன்வில்லிருந்து வருகிறீர்களா? உள்ளே வாருங்கள். ஜார்ஜ் தயாராகவே இருக்கிறார்’ என்றார்.

‘இல்லை, நான் பியாரி பாபு என்பவரைத் தேடி…’ என்று அவன் குழறலாய் சொன்னது அவர் காதுகளில் சரியாக விழவில்லை. வீட்டிற்குள் திரும்பி ‘ஜார்ஜ்… ஜார்ஜ்… அவர்கள் வந்துவிட்டார்கள்’ என்றார்.

பிறகு அவன் பக்கம் திரும்பி,

‘தூங்கியிருப்பாரா இருக்கும். இப்போதெல்லாம் அடிக்கடி தூங்கிவிடுகிறார். சர்க்கரை அதிகமாகிவிட்டது.‘ என்று சொல்லிவிட்டு உள்ளே போனார்.

மாடிப்படியின் முடிவில் வலதுபக்க அறையில் நீண்ட சாய்வுநாற்காலியில் அமர்ந்திருந்த நெடிதுயர்ந்த உருவத்தின் அருகே போய், தோளை அசைத்து ‘ஜார்ஜ், ஜார்ஜ்… கிளம்பு. ஜேஸ்டன்வில்லிருந்து வந்திருக்கிறார் பார்’ என்று அழைத்தார்.

சுவர் முழுவதும் பலவகைப் படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. மேஜையில் அடுக்கிவைக்கப்பட்ட பேப்பர் கட்டுகள் எல்லாம் பழைய வாசனையுடன் மியூசியத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. செல்லா படங்களில் இருந்த முகங்களை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தான். உயரமான ஆங்கிலேயருடன், ஷெர்வானி உடையில் இந்தியர் ஒருவர் கைகுலுக்கும் படத்தின் அருகே வந்தபோது பின்னாலிலிருந்து அவர் குரல் கேட்டது.

‘இரு நாடுகளின் சுதந்திர போராட்ட சிற்பிகள் இவர்கள். அடையாளம் தெரிகிறதா?’ என்றார்.

திரும்பிப் பார்த்தால், சாய்வுநாற்காலியில் இருந்த மனிதர்தான் எழுந்து அவனுக்கு அருகில் வந்து நின்றுகொண்டிருந்தார்.

‘நான் ஜார்ஜ் அலெக்ஸாண்டர். அது என் அங்கிள் ஹொரேஸ் அலெக்ஸாண்டர். காந்தியின் முதன்மை சீடர். உலக அரங்கில் காந்தியை முன்னிறுத்திய குவேக்கர்களின் (quaker) பிரதிநிதி. அருகிலிருப்பவர் தீபக் வோரா. இந்திய அரசாங்கத்தின் பத்மவிபூஷன் விருதை அளிக்க வந்தபோது எடுக்கப்பட்ட படம். மிஸ்டர் வோராதான் இன்றைக்கு தெற்கு சூடானின் விடுதலைக்கு முக்கிய காரணகர்த்தா. எப்பேர்ப்பட்ட மனிதர்கள் பாருங்கள்’ என்றார். அப்பொழுதுதான் கவனித்தான் ஜார்ஜ் கைகுலுக்க கரங்களை நீட்டிக் கொண்டு நின்றிருந்தார்.

‘நான் செல்லா காந்தி. ஜேஸ்டன்வில் விழாவிற்கு உங்களை அழைத்துப் போக வந்திருக்கிறேன்’

அவன் பெயரைக் கேட்டதும் புருவத்தை தூக்கி ‘காந்தி…? ‘ என்று கேள்விக்குறியோடு பார்த்தார்.

‘என் அப்பா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். காந்தியின் கட்சி…. அந்த அபிமானத்தால் எனக்கு காந்தி என்றுப் பெயரிட்டார்’ என்றான் அசட்டு சிரிப்போடு. பெயர்சூட்டு விழாவின் பின்னணி நாடகங்கள் தெரிந்தால் என்ன நினைத்துக் கொள்வாரோ.

‘ஓ! காந்தியைப் பையனாக பெற்றது அவருடைய பாக்கியம்’ என்று அவன் கையைப் பிடித்து குலுக்கினார்.

‘ஆனால், காந்தியின் பையனாக இருப்பதுதான் கஷ்டம். என் அங்கிளுக்கு பையன் இருந்திருந்தால் அவனை காந்தி என்றுதான் பெயரிட்டிருப்பாரா இருக்கும்’என்றார்.

பிறகு பக்கத்திலிருந்த அம்மணி பக்கம் திரும்பி ‘மெலீசா, நான் கிளம்புகிறேன். இரவு உணவுக்கு காத்திருக்க வேண்டாம்’ என்றார்.

‘சரி! இன்று காலை கூட ஜேக் ஃபோன் செய்தான். டிசம்பரில் ஒரு லாட் கொண்டு வருகிறார்களாம். நீ எதற்கும் ஒருமுறை யோசிக்கலாம் என்கிறான் அவன்’ என்றார் மெலீசா.

‘ஓ! அந்த ஜேக் ஓர் ஏமாற்றுப் பேர்வழி. அவனை நம்பும் நீ ஓர் ஏமாளி’என்றார்.

‘இந்த பிடிவாதம்தான் புரிய மாட்டேன் என்கிறது. அவன் கேட்பது போல் ஒருமுறை அந்த பெட்டியை திறந்துதான் காட்டிவிடேன். அரிய பழம் பொருட்களை இப்படியா கவனிப்பாரன்றி போட்டு வைப்பது. அப்புறம் யாருக்கும் பலனளிக்காமல் போய்விடும் ஜார்ஜ். நாசமாக்காதே’ என்று அலுத்துக் கொண்டார் மெலீசா.

‘இங்கே பார். இன்னும் இரண்டு வருடங்களில் (மார்பின் இடதுபுறத்தை தட்டியபடி) இந்த வால்வு காலாவதியாகிவிடும். அப்புறம் மொத்தமாக என்னையே கொண்டு போய் ஏலத்தில் விட்டுவிடுங்கள். இப்போது ஆளை விடுங்கள்’ என்றார். பிறகு செல்லாவை பார்த்து மென்மையாக தலையாட்டிவிட்டு, தொப்பியை அணிந்து கொண்டு கிளம்பிவிட்டார்.

மெலீசா கவனித்துக் கொண்டிருக்கும்போதே அவருடைய அறையைப் பூட்டி சாவியைப் பையில் போட்டுக் கொண்டார்.

‘புதையலை காக்கும் பூதம் போல இருக்கிறாய் ஜார்ஜ்’ என்றார் மெலீசா. பிறகு செல்லாவிடம் ஒரு சிறிய கைப்பையைக் கொடுத்துவிட்டு,

‘இது ஜார்ஜின் மருந்து பை. அவருக்கு என்ன வேளைக்கு என்ன சாப்பிட வேண்டும் என்றெல்லாம் தெரியும். ஆனால் சாப்பிடத்தான் மறந்துவிடுவார். முக்கியமாக சாப்பிடுவதற்கு முன்னால் இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொள்ள சொல்லுங்கள்’ என்றார். இவ்வளவுதான் என்னால் செய்ய முடியும் என்கிற ஆயாசம் அவர் குரலில் இருந்தது.

செல்லாவின் சிறிய காரில் ஜார்ஜ் சற்று முடக்கிக் கொண்டுத்தான் உட்கார வேண்டியிருந்தது. அவ்வளவு அருகில், தெரிந்த முதுமையையும் மீறி, அவரிடம் ஏதோ ஓர் ஈர்ப்பு இருந்தது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
சம்பிரதாயமாக,

‘இந்த நாள் உங்களுக்கு இனிமையாக இருக்கும் என நம்புகிறேன். எங்கள் ஊருக்கு நீங்கள் வருகை புரிவதற்கு மிகவும் நன்றி’என சொல்லி வைத்தான்.

‘இரண்டு பை-பாஸ்கள் ஆகி மூன்று ஸ்டண்டுகளும் (stent), ஒரு செயற்கை இருதயவால்வுமாக நடமாடிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் எனக்கு போனஸ்தான் பையா. இந்தக் கிழவனை நினைவில் வைத்திருந்து அழைக்கும் உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். மிஸஸ் சுக்லா நலமாக இருக்கிறாரா?’

‘ஓ! மிக நன்றாக இருக்கிறார். அவர்தான் பியாரிபாபு-வைக் கூட்டிக் கொண்டு வா என்றார். நான் இப்படி ஒரு கோராபாபுவை எதிர்பார்க்கவில்லை’ அதிகபிரசங்கித்தனமாக உளறிவிட்டோமோ என்று நாக்கைக் கடித்துக் கொண்டான்.

வாய்விட்டு சிரித்தவர் ‘எல்லாம் இந்த ஜேக் வெய்ன் செய்த வேலை. அவன்தான் அங்கிள் ஹொரேசுக்கு காந்தி எழுதிய கடிதங்களைப் பற்றி அநியாயத்திற்கு செய்திகளை பரப்பிவிட்டு இப்படியொரு பெயர் வந்துவிட்டது. அப்படித்தான் இந்த ‘காந்தி கதா’ நிகழ்ச்சியும் வளர்ந்துவிட்டது. எங்கள் ஃப்ரெண்ட்ஸ் கூட்டத்தைப் பொறுத்தவரை பாபு என்றால் அது எப்போதும் மிஸ்டர். காந்திதான்’ என்றார்.

‘அதென்ன ஃப்ரெண்ட்ஸ் கூட்டம்?’ என்றான்.

‘உனக்கு குவேக்கர்களை பற்றி எதுவும் தெரியாதா? உன்னைச் சொல்லி குற்றமில்லை. பெரும்பாலான இந்தியர்களுக்கு தங்கள் நாட்டின் சுதந்திர வரலாறு பற்றி அறியப்படாத பக்கங்களில் ஒன்றுதான் காந்திக்கும் ஃப்ரெண்ட்ஸ்க்குமான பந்தம். இந்தியா போன்றதொரு கலாச்சார பிளவுகள் கொண்ட நாடு சுதந்திரத்திற்கு தயாரானதா என்ற மேலையுலகினரின் சந்தேகத்தைப் போக்க பெரும் முனைப்பு கொண்டு பங்காற்றியது குவேக்கர்களின் இயக்கம்தான். முக்கியமாக அங்கிள் ஹொரேஸ்தான் காந்தியின் முக்கிய சீடராக தன்னை அமைத்துக் கொண்டு, ஆங்கிலேய அரசிற்கு அவருடைய முக்கியத்துவத்தை உணர்த்த படாதபாடு பட்டார். ‘
அவனை சிலநொடிகள் உற்றுப் பார்த்தவர், சற்று சுரத்திழந்த குரலில் ‘ஜேக் சொன்னது போல இந்த காலத்திற்கு இதெல்லாம் மறந்து போன வரலாறு’ என்றார்.

‘ஜேக் யார்?’ என்றான் செல்லா.

‘ஹ…’ மெலிதாக கைகளை புறந்தள்ளுவது போல உதறியவர் ‘அவன் கிடக்கிறான் தந்திரக்காரன். அவனைப் போன்ற பிசினெஸ்மேனுக்கு எல்லாமே காசுதான். அங்கிள் ஹொரேஸுக்கு காந்தி எழுதிய கடிதங்களை எல்லாம் என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போய்விட வேண்டும் என்று ஆறு வருடங்களாக கனவு கண்டு கொண்டிருக்கிறான். அவர்கள் இருவருக்குமிடையே இருந்த உறவு மிகவும் அற்புதமானதொன்று. காந்தியின் அந்தரங்க நண்பர்களில் ஒருவர் அங்கிள் ஹொரேஸ். உனக்குத் தெரியுமா? காந்தி தன்னுடைய வாழ்நாளின் பெரும் இலட்சியமாக கனவு கண்டு கொண்டிருந்த இந்திய சுயராஜ்யம் நனவான போது, அவர் தன்னுடைய அரசியல் சீடர்கள் யாருக்கும் எட்டாத இடத்தில் இருந்தார். இந்திய சுதந்திரம் என்பது வெறும் அரசியல் நிகழ்வாக அவர் பார்க்கவில்லை. அக்காலத்திற்கு தன்னுடைய மிகப் பெரும் பொறுப்பென கலவரங்கள் நடந்த பகுதிகளில்தான் பயனம் செய்தார். அன்று பாபுஜியோடு கல்கத்தாவில் இருந்த ஒரே சீடர் அங்கிள் ஹொரேஸ்தான்’

அங்கிளைப் பற்றி பேசும்போதெல்லாம் ஜார்ஜுடைய குரலில் மெலிதாக இழைந்தோடும் பெருமையின் சாயல் அவனுக்கு புன்னகையை வரவழைத்தது.

‘எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. அப்பொழுது எனக்கு பத்து வயசுதான். அன்று அதிகாலையில் நான் உறங்கிக் கொண்டிருந்த மேல்தள அறையிலிருந்து இயற்கை உந்துதலுக்காக வெளியே வந்தேன். மகா அவசரம். அப்பொழுதுதான், அந்த மறக்கமுடியாத நிகழ்ச்சி நடந்தது. திறந்திருந்த சாளரம் அருகே அதன் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார் பாபுஜி. அதிகாலை வெயில் நீண்டு அவர் மேல் படர்ந்திருக்க, ஜன்னலுக்கு வெளியே ஒரு கொடிக்கம்பத்தில் இந்திய மூவர்ணக் கொடி பறந்து கொண்டிருந்தது. அவர் அமைதியாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அசாதாரண அமைதி. இந்தப்பக்கம் அங்கிள் ஹொரேஸ். அப்போது வங்காளத்தில் நடந்துகொண்டிருந்த கலவரங்கள் பற்றி உனக்கு தெரியும்தானே. அப்படியான ஒரு நெருக்கடி காலத்தில் காந்தியின் இருப்புதான் அங்கே அவர்களுக்கு மிகப் பெரும் கொண்டாட்டம். நான் நடந்து வந்து கொண்டிருந்த அரவம் கேட்டதும் திரும்பிப் பார்த்த பாபு, என்னை இருகைகள் நீட்டி அழைத்து, மேலே தூக்கி, ஜன்னலுக்கு வெளியே அந்த காட்சியை சுட்டிக் காட்டினார். சிறுநீர் முட்டிக் கொண்டு வந்ததால், அவஸ்தையில் நெளிந்தபடி அவர் பிடியில் இருந்து கீழே இறங்கிவிட்டேன்.” என்றார்.

“இன்னமும் சிறிது நேரம், அந்த கைகளில் இருந்திருக்கலாம். வெகுகாலத்திற்கு என் மனதில் உறைந்து போன தருணங்கள் அவை. அதற்குத்தான் அந்த அவஸ்தை உண்டாயிற்றோ என்னவோ. எவ்வளவு பெரிய சரித்திரத்தின் மகத்தான தருணங்கள் இந்த சாதாரணனின் நினைவில் உறைந்து போய்விட்டன பார்’ உணர்வு மேலீட்டால் ஏற்பட்ட சோர்வால் சற்று பின்தள்ளி சாய்ந்து கொண்டார். சில நொடிகளில் அப்படியே தூங்கியும் போய்விட்டார்.

கம்யூனிட்டி ஹாலுக்கு வந்து சேர்ந்தபோது செல்லா எதிர்பார்த்ததற்கு மேல் கூட்டம் இருந்தது. வெளிவாயிலேயே ரீத்துவின் கணவர் ராஜீவ் சுக்லாவும் இன்னபிற கமிட்டி உறுப்பினர்களும் பெரும் மரியாதையுடனும் புல்லரிப்புடனும் ஜார்ஜை வரவேற்றனர்.
ரீத்து அம்மையார் அவனிடம் மலர்ந்த முகத்துடன்,

‘நீதான் அவர் கூடவே இருந்து, கவனித்துக்கொண்டு, அவரை வீட்டிற்கு கொண்டுபோய் விட வேண்டும். அவரொரு பொக்கிஷம். காந்தியை நேரில் பார்த்த புண்ணியாத்மா. இவரைப் பார்ப்பதற்கு நாமெல்லாம் தவம் செய்திருக்க வேண்டும்’ என்றார்.

அருகில் நின்ற ஜெகதீஷ் மேனன் ‘நிஜமாகவே பொக்கிஷம்தான். அவர் மாமாவின் பழைய பெட்டி ஒன்று அந்த காலத்திலேயே தொலைந்து விட்டதாம். ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளிலேயே. எங்கோ பூட்டிக் கிடந்த மரைன் லாக்கரில் ஒன்றில் இத்தனை காலமும் கிடந்திருக்கிறது. இப்போது ஹொரேஸ் காலமாகிவிட்டதால், அந்த பெட்டி பியாரி பாபுவிடம்தான் வந்து சேர்ந்திருக்கிறது என்கிறார்கள். ஜேஸ்டன்வில் ஹெரால்டில், பெட்டியின் போட்டோவை எல்லாம் சேர்த்து செய்தி போட்டிருந்தார்களே’.

உடன் ராமகிருஷ்ணன், ‘அதில்தான் காந்தி தன் கையால் நெய்த கதர் தொப்பியெல்லாம் இருக்கிறதாமே. அவர் ஹொரேசுக்கு கொடுத்த பரிசாம்’ என்றார்.

மேனன், ‘அட, பாபுஜியின் உயில் ட்ராஃப்ட், லெட்டர்ஸ் என நிறைய ஹொரேஸ் சேகரித்திருந்தாராம். இந்திய தேசத்து பறவைகள் பற்றி அரிய குறிப்புகள், புத்தகங்கள் என நிறைய. ஏலத்தில் போட்டால் அரை மில்லியனுக்கு பக்கமாக போகும்.’ என்று சொல்லி பெருமூச்சு விட்டார்.

ரீத்து சுக்லா அந்த சம்பாஷனையை விரும்பவில்லை என்பது அவருடைய முகக்குறிப்பிலிருந்து தெரிந்ததால் செல்லா அதற்குமேல் அதைப் பற்றி கேட்கவில்லை.

‘காந்திஜி எப்போதும் மோகன்தாஸ் என்றோ, பாபு என்றோதான் தன் கடிதங்களில் கையெழுத்திடுவார். ஹொரேசுக்கு எழுதிய சில கடிதங்களில் பியாரி பாபு என்று கையெழுத்திடுவாராம். ஹொரேஸுக்கு கிட்டத்தட்ட ஹரிலால் காந்தியின் வயதுதான். அவர்களின் உறவு தந்தை-மகன் உறவு போன்றது காந்தியின் கையெழுத்துக்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா’ நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போனார் மேனன்.

மேனனின் அதி விகசிப்பு, காந்தியை மலிவாக மதிப்பிடுவதிலேயே சுற்றிக் கொண்டிருப்பதை விரும்பாத ரீத்து அம்மையாரின் வேதனையை உணர்ந்தவனாக செல்லா, மேனனை இடைமறித்து,

‘புரோகிராம் எப்போது தொடங்கும் மேடம்? அவருக்கு மருந்தெல்லாம் கொடுக்க வேண்டும் என்று கொடுத்தனுப்பியிருக்கிறார்கள்’. என்றான்.

‘ஆ! இதோ ஒரு அரைமணியில் ஆரம்பிச்சிட வேண்டியதுதான். ஒரு சின்ன ஃபேன்ஸி டிரெஸ் நிகழ்ச்சி. அப்புறம் சில குழந்தைகள் டான்ஸ் புரோகிராம். அப்புறம் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுட்டு பாபுவோட புரோகிராம் தொடங்கிட வேண்டியதுதான்’. என்றார்.

இதோ அதோவென ஜார்ஜ்ஜின் ‘காந்தி கதா’ நிகழ்ச்சி தொடங்க இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாக பிடித்தது.

பெரியவர் கம்பீரமாக மேடையில் ஏறி பேச ஆரம்பித்தார். பத்து வயதில், அவர் முதன்முதலாக அங்கிள் ஹொரேஸோடு பெர்மிங்காமிலிருந்து இந்தியாவிற்கு கப்பல் பயணம் மேற்கொண்டது. சேவாகிரம ஆசிரமத்தில் பாபுஜியின் தினப்படி நடவடிக்கைகள், இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டிற்காக காந்தி லண்டன் போனது, அங்கே அவருடைய பொதுஜன தொடர்பாளராக ஹொரேஸ் பணியாற்றியது. வைஸ்ராய் இர்வினோடான உறவு சீர்பட ஹொரேஸ் மேற்கொண்ட உத்திகள் என்று வரிசையாக பேசிக் கொண்டே வந்தார். அந்த வயதிலும் அவருடைய குரலின் அழுத்தம் குறையாமல் கோவையான சொற்பொழிவு. காந்திஜியின் ஆசிரமத்தில் அவர் இருந்த அனுபவங்களை பல்வேறு துணுக்குகளாக சொல்லிக் கொண்டு வந்தார். காந்தியின் ஆசிரம வாழ்க்கை முறைப் பற்றி நிறைய குட்டி குட்டி கதைகள் சொன்னார். காந்தியின் அரசியல் பயணத்தை, அதன் நிகழ்வுகளை வரிசை கிரமமாக அவர் பிரவாகமாக சொல்லி முடிக்க, கூட்டம் ஆரவாரத்துடன் கைதட்டியது.
முத்தாய்ப்பாக,

‘உங்களைப் போன்ற இன்றைய சந்ததியினர் காந்தியைப் பற்றி ஆர்வம் காட்டுவது எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. நம்முடைய பாபுஜியின் நீண்ட நிழல் நம் எல்லோர் மேலும் கவிழ்ந்திருக்கிறது. இது இன்னமும் பல தலைமுறைகள் கடந்து நீண்டு போய்க்கொண்டேயிருக்கும். இந்த பழுதடைந்த இருதயத்தின் எண்ணப்படும் நாட்களில் ஒன்றிரெண்டையாவது அதிகப்படுத்தும் அளவுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறீர்கள். இதோ இன்றைக்கு ஓர் இளைய காந்தியை நேரடியாக சந்திக்கும் பாக்கியம் பெற்றேன்’ சைகையால் செல்லாவை மேடைக்கு அழைத்தார். இதை சற்றும் எதிர்பாராத செல்லா வியர்த்துப்போய் படபடப்புடன் அவர் அருகில் சென்றான்.

‘ஏதோ ஓர் அபிமானத்திலோ, அதிர்ஷ்டத்தாலோ இவரும் காந்திய மரபின் ஒரு துணுக்காக இருக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். அதற்காகவே இந்த இளைய காந்தியை வாழ்த்த வேண்டும். காந்தியத்தின் பிரதிபலிப்பை நாம் தொடர்ந்து அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்ல உறுதி எடுப்போம்’என்று சொல்ல கட்டுண்டது போல் கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் பெரும் கரவொலியுடன் அவருக்கு எழுந்து நின்று மரியாதை செய்தது.

மாலை விருந்து முழுவதும் பெரியவரை சுற்றி பலரும் பேசிக்கொண்டிருந்தனர். அவருடைய காந்தி அனுபவங்களை விட மீண்டும் கிடைத்த ஹொரேசின் பெட்டியைப் பற்றித்தான் அதிகம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

காலையில் குவேக்கர் டவுனுக்கு செல்லும்போது இருந்த தயக்க மனநிலை மாறிப்போய் மிகுந்த மன எழுச்சியோடு இருந்தான் செல்லா. ஜார்ஜ் அவனை ‘இளைய காந்தி’ என்று அழைத்தது அவனை மிகவும் உணர்ச்சிவயப்பட வைத்தது. குவேக்கர் டவுனுக்கு திரும்பும் வழியில்,

‘அஹ்! இது போன்ற நிகழ்ச்சிகள் இன்னமும் ஓரிரெண்டு செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். என்ன கொடுத்து வைத்திருக்கிறதோ’ கார் ஜன்னலுக்கு வெளியில் கவிந்து கொண்டு வரும் இருளைப் பார்த்தபடி சொன்னார் ஜார்ஜ்.

‘ஏன் இப்படி! இன்றுதானே உற்சாகத்தில் ஆயுள் நீடிப்பதாக பேசினீர்கள். இப்பொழுது என்ன சோர்வு? இன்னும் பல நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருப்பீர்கள் பியாரி பாபுஜி!’ என்றான்.

ஜார்ஜின் வீட்டை அடைந்தபோது அந்தி சாய்ந்து இருட்டிக் கொண்டிருந்தது.
காலையில் பார்த்த அதே தோற்றத்துடனே மெலீசா அம்மையார் இருந்தார். ஜார்ஜ் அவனை காப்பி அருந்திவிட்டு போகுமாறு வேண்டிக் கொண்டார்.

‘பாபுஜி! அந்த பிரசித்தி பெற்ற பெட்டியை ஒருமுறையேனும் நான் பார்க்க முடியுமா? காந்திஜி கையால் நெய்த குல்லாய் கூட அதில் இருக்கிறது என்று சொல்கிறார்களே’ சமையலறையில் இருக்கும் மெலீசாவின் காதுகளில் விழுந்துவிடாமல் சன்னமாகக் கேட்டான்.

‘குல்லாயா? இன்னும் என்னவெல்லாம் அந்தப் பெட்டியில் இருக்கிறதாம்?’ சிரித்துக் கொண்டே கேட்டார் ஜார்ஜ்.

‘காந்தியின் உயிலின் முதல் வரைவு இருக்கிறது என்கிறார்கள். அவ்வளவு முக்கியமான ஆவணங்கள் எல்லாம் கெடாமல் பாதுகாக்க வேண்டும். பணத்திற்காக சொல்லவில்லை நான்…’ செல்லா மென்று விழுங்கினான்.

‘ஹஹா! நீ சொல்வதைப் பார்த்தால் எப்படியும் நான் அசந்த சமயமாகப் பார்த்து அந்தப் பெட்டியை உடைத்து திறந்து மெலீசாவிடம் கொடுத்துவிடுவாய் என்று நினைக்கிறேன்.’ என்று சொல்லி சிரித்தார்.

‘நீங்கள்தான் சொல்லுங்களேன். அதில் அப்படி என்னதான் இருக்கிறது’ அடங்காத ஆர்வத்துடன் கேட்டான் செல்லா.

‘ஓரளவுக்கு தெரியும். அங்கிள் ஹொரேஸ் தொலைந்து போன லக்கேஜ் பற்றி அப்பொழுதே புகார் கொடுத்து வைத்திருந்தார். காந்தி சம்பந்தமான டாக்குமெண்டுகளையும், மற்றும் இந்தியாவில் சேகரித்திருந்த ஆர்னிதாலஜி (Ornithology) குறிப்புகளையும் பெட்டியில் வைத்திருந்ததாக விவரமாக எழுதியிருக்கிறார். மத்தபடி காந்தி நெய்த குல்லாய் எல்லாம் அந்த ஏலக் கடைக்காரன் ஜேக் பயல் கிளப்பிவிட்டிருக்கிறானா இருக்கும்’ என்றார்.

‘அதனால் என்ன பாபுஜி! திறந்து பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது’ என்றான்.

சற்று நேரம் அவனையே இமைக்காமல் பார்த்தார் ஜார்ஜ். அவன் கழுத்தை சுற்றி கையால் வளைத்து முகத்துக்கு அருகே இழுத்து,

‘ஆனால், மிஸ்டர். இளைய காந்தி, அங்கிள் ஹொரேஸின் லக்கேஜில் தொலைந்து போனது, இரண்டு பெட்டிகள் என்றும் குறித்து வைத்திருக்கிறார். மற்றொரு பெட்டியில் வெறும் சட்டை பேண்ட்டு சூட்டுகள் மட்டும்தான். இப்போது கிடைத்திருப்பது எந்தப் பெட்டி என்று யாருக்கும் தெரியாது. ஜேக் போன்ற ஆசாமிகள் அது பொக்கிஷப் பெட்டி என வெகுவாக பரப்பி விட்டிருக்கிறார்கள். பேராசைக்காரர்கள்’ என்றார்.

சிரித்துக் கொண்டேதான் அவர் சொன்னார். ஆனால், அப்போது அவர் கண்களில் மின்னி மறைந்த உணர்ச்சியை செல்லாவால் வகைமைபடுத்த இயலவில்லை.

‘அதனால் என்ன பாபுஜி. திறந்து பார்த்தால் அது பொக்கிஷ பெட்டியா, பழந்துணி பெட்டியா எனத் தெரிந்து விடப் போகிறது. அதை ஏன் செய்ய விட மாட்டேன் என்கிறீர்கள்…’ எனக் கேட்கும்போதுதான் அவனுக்கு சுரீரென உறைத்தது, ஜார்ஜ் தன் காலம் முடியும்வரை அந்தப் பெட்டியை திறக்க யாரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று.

அதற்குள் மெலீசா அம்மையார் ஹாலுக்குள் பிரவேசித்து செல்லாவிடம் காப்பி கோப்பையை கொடுத்தார். மேற்கொண்டு வேறெதுவும் பேசாமல் காப்பியை குடித்தவன் குட்நைட் என்றுச் சொல்லிக்கொண்டு புறப்பட்டான். அவன் கிளம்பும்போது ‘இளைய காந்திக்கு, அன்புடன் பியாரிபாபு’ என்று எழுதி, கையெழுத்திட்ட ‘காந்தி கதா’ புத்தகம் ஒன்றை அவனுக்கு பரிசளித்தார் ஜார்ஜ் அலெஸாண்டர்.

செல்லா வீடு திரும்பியதும் ஊருக்கு போன் செய்து, ‘நாந்தான், காந்தி பேசறேன். சும்மாத்தான். நாளாச்சுல்ல’ என்றான். அவனை காந்தி என்று இன்னும் நான்கைந்து முறை சொல்லிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

linesep

பியாரிபாபு காந்தியைப் பற்றி சொன்ன சில கதைகள்:-

Trigger

சிரமத்தில் ஒருமுறை ஐரோப்பிய பத்திரிகையாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தபோது, பிரசித்திப்பெற்ற பீட்டர்மரிட்ஸ்பர்க் இரயில் நிலையத்தில் அவர் அவமானப்பட்ட நிகழ்ச்சி பற்றி பேச்சு வந்தது. ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டதும் காந்தியின் மனசில் சொல்லொண்ணா பயம் நிலவியதாம். அங்கிருந்த ஓய்வு அறைக்கு போவதற்குக் கூட அவருக்கு பயமாக இருந்தது. அங்கேயும் வெள்ளையர் யாரேனும் இருந்து ‘சாமி’களை (அக்கால தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களை குறிக்கும் ரேசிஸ்ட் சொல்) வெளியே துரத்த சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று. இத்தனைக்கும் அவர் சட்டம் பயின்று பெரிய சட்ட நிறுவனத்தின் பொறுப்பான பதவியில் இருக்கிறவர். ‘அந்த ஓய்வறையின் கதவுகள் வரைக்கும் நான் நடந்து சென்ற தூரம்தான் என்னை இன்னமும் நடத்தி சென்று கொண்டிருக்கிறது’ என்றார்.

Leads the wayருமுறை பாபுஜி முன்னால் ஒரு பிரச்னை வந்தது. ஆசிரமத்தில் நூல் நூற்க வரும் சிறுவர்களிடம் அவ்வப்போது கேள்விகள் கேட்டு சோதிப்பார் பாபுஜி. நன்றாக பதில் சொல்பவர்களை விட தட்டுதடுமாறி பதில் சொல்பவர்களையே அதிகம் குறிப்பிட்டு பாராட்டுவார். இதனால் குழப்பமடைந்த சில சிறுவர்கள் அவரிடமே இதைப் பற்றி கேட்டனர். அவரும் அதற்கு பதிலாக ‘நான் உங்களில் யார் புத்திசாலி என்று ஒப்பிட்டு அளக்க இந்தக் கேள்விகளை கேட்கவில்லை. ஒரு புத்திசாலி தன்னை ஒரு முட்டாளோடு ஒப்பிட்டு பெருமை அடைவதால் அவனுடைய ஆணவம் கூடி, அறிவுத்திறன் மழுங்கிவிடும். அது அவனுக்கு அழிவையேத் தரும். தொடர்ந்து முயற்சி செய்து தன்னை மேம்படுத்திக் கொள்ள விழைபவர்களை ஊக்குவிக்கவே இந்தக் கேள்விகளைக் கேட்கிறேன்.” என்றார். அவர் விளக்கத்தைக் கேட்ட சிறுவர்கள் தங்களிடையே போட்டி மனப்பான்மையை கைவிட்டு சமத்துவம் பேணத் தொடங்கினர்.

Punctuality
காந்தி தன்னுடைய வேலைகளை வரிசைப்படுத்திக் கொள்வது சமயத்தில் வேடிக்கையாக இருக்கும். அதிக சோர்வுற்ற சமயங்களில் உடனடியாக தூங்கப் போய்விடுவார். ஓரிரு நிமிடங்களில் மீண்டும் விழித்தெழுந்து வேலைகளை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து செய்து கொண்டிருப்பார். சமயத்தில் தூக்கத்தில் கூட சில வேலைகளை முடித்து விட வேண்டும் என்று திட்டமிடுவார். தூங்கிக் கொண்டிருக்கும்போதே (மற்றொருவரால்) முகச்சவரம் செய்துகொண்டு விட வேண்டும் என்பது அதில் ஒன்று. சில நிமிடங்களே தூங்குகிறார். அதையும் கெடுக்க வேண்டாமே என்று நினைக்கும் ஆசிரமவாசிகளிடம் ‘நான் இப்படியாக இருக்கும்வரை இயல்பாக இருக்கிறேன் என்று பொருள். எப்போது நீண்ட நேரம் உறங்குகிறேனோ, அப்பொழுது என் அந்திமம் தொடங்கி விட்டது என்று பொருள்’ என்றார். ஆனால் இறக்கும்வரை அவர் ஒரு சக்தி கேந்திரமாகத்தான் இருந்தார்.

Inspiration
சிரமக் கூடத்தில் பாபுஜியின் சொற்பொழிவைப் கேட்க வந்த விவசாயி ஒருவர் தன் மகளையும் தூக்கிக் கொண்டு வந்தார். குளிர்காலம் தொடங்கிவிட்டிருந்த காலத்தில் மேல்சட்டை இல்லாமல் பாபுஜி இருப்பதைப் பார்த்த அந்தக் குழந்தை மறுநாள் ஒரு சட்டையோடு பாபுஜியைப் பார்க்க வந்துவிட்டது. பாபுஜிக்காக அந்த குழந்தையின் அம்மா தைத்துக் கொடுத்த சட்டையாம் அது. குழந்தையின் குதூகலத்தையும் அந்த விவசாயக் குடும்பத்தின் அன்பையும் பாபுஜி எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்று ஆசிரமவாசிகளுக்கு பெரிய கேள்விக்குறி. காந்திஜி அந்தக் குழந்தையிடம் அவர் அம்மாவுக்கு தன்னுடைய நன்றியை சொல்லிவிட்டு, என்னுடைய நாற்பது கோடி சகோதரர்களுக்கும் அவரால் சட்டை தைத்து கொடுக்க முடியும் என்றால் இந்த சட்டையை ஏற்றுக் கொள்கிறேன் என்று அன்போடு சொன்னார். சிறு குழந்தையின் எளிமையான மனதை, தன் அன்பால் பொதுநல சிந்தனைபால் திருப்பிவிட்டார்.

 

யோகம்

ஸ்ரீதர் நாராயணன்

வின்செண்ட் நன்றாக தூங்கி இரண்டு நாட்களாயிற்று. கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பழகிப் போன ஊர். இன்று முதல் மொத்தமாக அந்நியமாகப் போகிறது என்று நினைத்துக் கொண்டான். அந்த வங்கியை சுற்றி பார்வையை விட்டான். விஸ்தாரமான கண்ணாடி ஜன்னல்களுக்கு வெளியே நிச்சலனமான சாலை நீண்டு கிடந்தது. எத்தனை நாட்கள் அந்த சாலையில் நடந்து சென்றிருக்கிறான். முனை திரும்பியதும் சின்ன பார்பர் ஷாப் வரும். மஞ்சள் நிறத்து வியட்நாமிய முடி திருத்துநர் இவனை முதலில் பார்த்தபோதே ‘நீ இந்தியாவிலிருந்தா வருகிறாய்? ரஜினிகாந்தின் நாடு’ என்று சொல்லி தலையை ஆட்டி சிரித்தான். ட்யூக்கோ என்னவோ அவன் பெயர். இவன் பதிலுக்கு சொன்னது எதுவும் அவனுக்கு புரியாது. ஆனாலும் தலையை தலையை ஆட்டி சிரிப்பான். அதன் முன்னே இருக்கும் பஸ்டாப்பில்தான் 24-S பிடித்து வீட்டுக்குப் போவான். இன்று வீட்டுக்குப் போக வேண்டியதில்லை. பதிலாக 521-E பஸ்ஸை பிடித்தால் ஒன்றரை மணிநேரத்தில் நியுயார்க் நகரத்திற்குள் புகுந்து, இரண்டு சப்வே மாறி, ஒரு ஏர்ட்ரைன் பிடித்தால் ஜேஎஃப்கே ஏர்போர்ட்… இந்தியா போனால் புவனேஷ்வரோ, சண்டிகரோ, பெங்களூரோ, குர்கானோ… இப்போதைக்கு எதுவும் நிலையில்லை…

‘அடுத்தது யார்?’ என்ற குரலைக் கேட்டு வின்செண்ட் நனவுலகிற்கு மீண்டான். காசாளர் மேஜையிலிருந்த பெண்மணிதான் கையைத் தூக்கி அவனை அழைத்தார். கவுண்டருக்கு அருகேப் போனதும்,

‘உங்களுக்கு எப்படி உதவி செய்யட்டும்?’ என்று இனிமையான குரலில் கேட்டவரைப் பார்த்ததும் வின்செண்ட்டிற்கு ஆச்சரியமாக இருந்தது. அது பாட்ரீஷியா. அவன் குடியிருந்த ராத்மென் குடியிருப்பிற்கு அருகே இருந்த செவன்த் டே சர்ச்சின் கோயர் குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர். அவருக்கு பார்வை குறைபாடு உண்டு. அவரெப்படி வங்கி காசாளர் மேஜையில்?

‘பாட்ரீஷியா! அது வின்செண்ட் வர்கீஸ். வங்கிக் கணக்கை முடித்துக்கொள்கிறாராம். மீதமிருக்கும் பணத்தை பைசல் பண்ணி அனுப்பி விடுகிறாயா? நான் சற்று அவசரமாக வெளிக்கிளம்பிக் கொண்டே இருக்கிறேன்’ என்று சொல்லியவாறே, இவனிடம் வந்து கைகுலுக்கி விட்டு ‘உங்கள் பயணம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள்’ வங்கியை விட்டு வெளிக்கிளம்பினார் ராண்டர். அந்த அமைதியான வியாழக்கிழமை மதியத்தில் வங்கியில் வின்செண்ட்டையும் பாட்ரீஷியாவையும் தவிர யாருமில்லை.

‘ஹலோ பாட்ரீஷியா.. எப்படி இருக்கிறீர்கள்?’ தயக்கத்துடன் ஆரம்பித்தான் வின்செண்ட்.

‘ஓ!, நீங்களா? உங்களை சர்ச்சில் பார்த்திருக்கிறேன். ஷனா டோவா. சொல்லுங்கள் உங்கள் அக்கௌண்ட் நம்பரை’ என்று சிரித்தார் பாட்ரீஷியா.
அவர் முன்பிருந்த சராசரிக்கும் அகலமான கணிணி திரையும், நீலவண்ணத்தில் ஒளிரும் விசைப்பலகையும் அவருடை பார்வைக்குறையை நிவர்த்தி செய்ய உபகாரமாக இருக்கும் என்று புரிந்தது. மேஜைக்கு அப்புறம் இருந்துகொண்டு கணிணி திரையில் என் வங்கி கணக்கைப் பற்றிய விவரங்களை தேடத் தொடங்கினார்.

‘ஏன் திடீரென வங்கிக் கணக்கை மூடுகிறீர்கள் மிஸ்டர். வர்க்கீஸ்?’ விசைப்பலகையை இயக்கிக் கொண்டே கேட்டார் பாட்ரீஷியா.

‘வேலை தீர்ந்துவிட்டது. ஊருக்குப் போகிறேன்.’

‘ஓ! எவ்வளவு வருடங்களாக ஜேஸ்டன்வில்லில் இருக்கிறீர்கள்?’

‘இருக்கிறது என்ன… இருக்கிறது. இருந்தேன். இன்றோடு சரியாக இரண்டாயிரத்து நானூற்று இருபத்தியொரு நாட்கள். ஆறு ஆண்டுகள் ஏழு மாதங்கள் பதினெட்டு நாட்கள்’ என்றான்.

நாட்களின் எண்ணிக்கையைக் கேட்டு சிரித்தார் பாட்ரீஷியா. இரண்டாயிறத்து நானூற்றி இருபத்தியொன்றும் ஒரே மாதிரியான அச்சில் வார்த்த இரண்டாயிறத்து நானூற்றி இருபத்தியொரு நாட்கள். அந்த சிறிய ஊரில், அத்தனை காலத்தில் பெரிதாக எதுவும் மாறியதில்லை. அதே தபால் அலுவலகம், அதே இலியாஸ் மளிகைக் கடை, அதே பால் பண்ணை, அதே ஸ்டார்பக்ஸ். காப்பி கொடுக்கும் கேத்தி அம்மையார் கூட மாறியதில்லை. ஆனால் அவருடைய புன்னகை மட்டும் எப்போதும் புதியதாக இருக்கும். ஆம். ஒரே மாதிரியான நாட்கள்தான் என்றாலும் எப்போதும் ஏதோ ஒரு புதுமை நிகழ்ந்துவிடுகிறது. ‘ஷனா டோவா’ என்று பாட்ரீஷியா வாழ்த்தியது போல அவருடைய நம்பிக்கைக்குகந்த இந்த பரிசுத்த புத்தாண்டு துவக்கத்தில் தனக்கு என்ன புதுமை காத்திருக்கிறதோ என்று எண்ணிக் கொண்டான் வின்செண்ட்.

‘இன்றேவா காலி செய்துகொண்டு போகிறீர்கள்?’ எனக் கேட்டார்.

‘காலியெல்லாம் காலையே செய்தாகிவிட்டது. நீங்கள் இப்பொழுது கணக்கை முடித்து பணத்தைக் கொடுத்தால், இதோ பத்து நிமிஷத்தில் இப்படியே 521-E பஸ்ஸில் புறப்பட்டுவிடுவேன்’ என்றான்.

‘இன்று மாலை ஷோஃபார் வழிபாட்டுக்கு நீங்கள் இருக்கமாட்டீர்களா?’ என்றுக் கேட்டார். நான் ஊரில் இருந்தபோதெல்லாம் இவ்வளவு சிரத்தையாக பக்தி செய்ததில்லை அம்மணி. இங்கு வந்துதான் தனிமையால் உந்தப்பட்ட ஆத்ம பரிசோதனைகள் எல்லாம் என நினைத்துக் கொண்டான்.

‘ம்ஹூம். இன்னும் ஐந்தரை மணிநேரத்தில் ஃப்ளைட்டில் இருக்க வேண்டும்’ என்றான்.

‘பிரச்னையேயில்லை. உங்கள் கணக்கை மூடியாகி விட்டது. உங்கள் கணக்கில் $252 டாலர்களும் 44 செண்ட்களும் இருக்கின்றன. கேஷாக வாங்கிக்கொள்கிறீர்களா இல்லை, ட்ராவலர்ஸ் செக்கா?’ என்றார்.

டாலர் நோட்டின் பச்சை நிறத்திற்கு இந்தியாவில் தனி மவுசு உண்டு. ஏர்போர்ட் பணியாளரிலிருந்து டாக்ஸிக்காரர்வரை டாலர் நோட்டை தடவி தடவிப் பார்த்து வாங்கிக் கொள்வார்கள்.

‘காசாகவே வாங்கிக் கொள்கிறேன்’ என்று புன்னகத்தான்.

‘சின்ன நோட்டுகளா, பெரிய நோட்டுகளா?’

‘ஆங்… பெருசாவே கொடுங்களேன்’ என்று சொன்னவன் திடீரென ஞானோதயம் பெற்றவனாக

‘இல்ல ஒரு நூறும், மிச்சத்தை இருபது இருபது பில்லா கொடுத்திருங்க’என்றான்.
ஒற்றை டாலர்களாக கொடுக்காதவரை நல்லது. அத்தனையையும் மடியில் கட்டிக் கொண்டு கனத்துடன் அலைய வேண்டியிருக்கும்.

முதலில் நூறை கையிலெடுத்தவர், வின்செண்ட் மாற்றிச் சொன்னதும், வேகமாக இருபது டாலர் பில்லை எடுத்தார். பிறகு அதன் மேல் வரிசையாக பன்னிரெண்டு நூறு டாலர் பில்களை அடுக்கினார். அதன் மேல் ஒரு பத்து டாலர் நோட்டு. பிறகு சில்லறைகளை எண்ணி எடுத்தார். மீண்டும் வரிசைகிரமமாக எல்லாவற்றையும் எண்ணி அடுக்கி ஒரு கவரில் போட்டு நீட்டினார். நோட்டு டினாமினேஷன் மாறிப் போய்விட்ட உணர்வே இல்லாமல் சிரித்துக் கொண்டே ‘உங்கள் பிரயாணம் இனிமையாக நடந்தேற வாழ்த்துகள்’ என்றார்.

பேட்ரீஷியா கொடுத்த கவரில் அளவுக்கு அதிகமான பணம் இருக்கிறது என்பது வின்செண்ட்டிற்கு நன்றாகத் தெரிந்தது. ஏனோ, அதைச் சொல்லி அந்தக் கவரை பேட்ரிஷியாவிடம் திருப்பிக் கொடுத்து சரியான பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிடே, அந்த பணக்கவரை அப்படியே வாங்கிக் கொண்டான். அனிச்சையாக ஒரு தாங்க்ஸும் சொல்லிவிட்டு திரும்பி வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். லேசாக வியர்க்கத் தொடங்கியிருந்த நெற்றியை மெலிதாக கைக்குட்டையால் ஒற்றிக்கொண்டான். வங்கியை விட்டு வெளியே வந்ததும், ஆச்சரியமாக அவனை அவனே தனியாகப் பிரிந்தது பார்ப்பது போல பார்த்துக் கொண்டான். என்ன செய்கிறோம் என்றொரு கேள்வி மெள்ள மெள்ள மனதில் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. தெருவில் இறங்கி நடக்கும்போது, இன்னொரு மூலையில், மனசு கணக்குப் போட்டுப் பார்க்கத் தொடங்கியது.
முழுவதுமாக ஆயிரத்து இருநூற்று டாலர்களும் சொச்சமும். கண்பார்வை குறைபாடாலோ, வேறு ஏதோ குழப்பத்தாலோ, பாட்ரீஷியா அம்மாள் டினாமினேஷன் மாற்றி கொடுத்ததில் கிட்டத்தட்ட தொள்ளாயிரம் டாலர்கள் அதிகம் இருந்தன அந்த கவரில். இந்திய மதிப்பில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான பணம். கைப்பெட்டியை தரையில் உருட்டியபடி இழுத்துக்கொண்டே வேகமாக நடந்து முக்கு திரும்பிததும், அங்கே 521-E பஸ் கிளம்பத் தயாராக நின்றுகொண்டிருந்தது. ஒரு நொடி… ஒரு நொடியில் ஒரு பகுதி.. வங்கிக்கு திரும்பிச் செல்லும் உந்துதல் ஏற்பட சற்று தயங்கினான்.

இவன் தயக்கத்தைப் பார்த்ததும், ‘வந்து ஏறிக் கொள்’ என்று பஸ் டிரைவர் கையைக் காட்ட, அதையே சமிக்ஞையாக ஏற்றுக்கொண்டு, திபுதிபுவென ஓடிப் போய் பஸ்ஸில் ஏறிவிட்டான்.

எதிர்சீட்டில் அமர்ந்தபடி புத்தகம் படித்துக் கொண்டிருந்த பெரியவர் நட்போடு புன்னகைத்தார்.

‘பாருங்கள், இதில் ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஏழு வருடங்கள் வரி கட்டியிருக்கிறேன். சோஷியல் சர்வீஸ்க்கு பணம் அழுதிருக்கிறேன். பீட்ஸா கடைகளில் குழந்தைகள் நல நிதிக்கான உண்டியலில் சில்லறை போட்டிருக்கிறேன். காப்பி கடைகளில் கிடைத்த பென்னிகளை அங்கேயே விட்டுவிட்டு வந்திருக்கிறேன். லைப்ரரி, அல்ஸ்மைர் நிதி, சர்ச் நன்கொடை… இதில் எதையும் நான் இனி இருந்து அனுபவிக்க போவதில்லை. ஆற அமர கூட்டிக் கழித்துப் பார்த்தால் பல்லாயிரங்களுக்கு மேல் இந்த ஊருக்காக செலவழித்திருக்கிறேன். அதற்குமுன்னால் இந்தப் பணம் எம்மாத்திரம்?’ என்று வாய்விட்டுக் கேட்க மிக விரும்பினான். ஆனால் அதற்கு முன்னால் உடலெல்லாம் வியர்க்க தொடங்கிவிட்டிருந்தது.

இந்த நஷ்டத்தை வங்கி யார் மேல் சுமத்தும்? என்றக் கேள்வி மனதின் ஓரத்தில் ரம்பமாக அறுத்துக் கொண்டிருந்தது வின்செண்ட்டை. பார்வை குறைபாடுள்ள பேட்ரீஷியா மேலா? இல்லை வங்கி மேலாளர் எரிக் மேலா? இல்லை வேறெதுவும் அநாமத்து கணக்கில் எழுதி விடுவார்களா.

‘நன்றாக நினைவிருக்கிறது ஆபீசர். 521-E பஸ்ஸில்தான் போகிறேன் என்று சொன்னான். ஐந்தரை மணி நேரத்தில் ஃப்ளைட் என்றும் சொன்னான். இப்போதே நீங்கள் போனால்…’ என்று பேட்ரீஷியா அம்மையார் போலிசுக்கு தகவல் சொல்வது போல் காட்சி மனதில் ஓடியது. எப்படியும் பஸ்ஸை தாண்டி போலிஸ்கார் யாரேனும் வந்து குறுக்கே மறித்து நிறுத்துவார்கள் என்பதில் நிச்சயமாக இருந்தேன். இல்லை வழியிலிருக்கும் ஊர்களில் இருக்கும் போலிஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லி ‘வின்செண்ட் யாருப்பா’ எனக் கேட்டுக் கொண்டே விலங்கோடு வருவார்களா.
இந்த திடீர் அதிர்ஷ்டம் என்பதெல்லாம் சுத்த பொய். எல்லாம் பம்மாத்து கணக்கு. ஒன்று கூடினால் வேறொன்று குறையத்தான் வேண்டும். ஆனால், இன்று செய்ததற்கு பெயர் திருட்டு. இன்னும் சொல்லப்போனால் நம்பிக்கை துரோகம் எனலாம். ஏதோ ஒரு நம்பிக்கையில்தான் எரிக் அவனை பேட்ரீஷியா அம்மையாரிடம் தனியே விட்டுச் சென்றிருப்பார்? சேச்சே… பார்வை குறைபாடுள்ளவர்களை ஏன் வங்கியில் டெல்லர்களாக வைத்திருக்கிறார்கள்? மாற்று திறனாளிகளை ஊக்குவிப்பதில் என்ன தவறு? எலிமெண்ட்ரி பள்ளியில், குழந்தைகளுக்கு மாற்று திறனாளிகள் எப்படி எல்லா வேலையையும் தங்குதடையில்லாமல் செய்ய முடியும்.. எம்மாதிரியான உபகரணங்கள் தேவைப்படும் என்று செய்முறைகள் காட்டியதை ஜேஸ்டன்வில் ஹெரால்டில் படித்திருக்கிறான். எத்தனை பேர்கள் தொழில்நுட்ப துணை கொண்டு தன்னம்பிக்கையுடன் தங்கள் வாழ்வை தொடங்குவார்களோ, இப்படி அவர்களுடைய நம்பிக்கையை எல்லாம் குலைக்கும்படியான ஒரு காரியத்தை…. வின்செண்ட்டிற்கு
நியூயார்க் நகரில் ஃப்ராங்க்ளின் அவென்யூவை தவறவிட்டு ரோத்மென்ஸ் வரைப் போய் பிறகு வேறு சப்வே பிடித்து மாறி ஒருவழியாக ஹோவார்ட் பீச் போய் சேரும்போதே இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. மூன்று டாலர் நட்டம் என்று நினைத்துக் கொண்டான். ஏர் ட்ரெயின் பிடித்து ஏர்போர்ட் வந்து சேரும்போது வின்செண்ட் மிகவும் சோர்ந்து போயிருந்தான். வியர்வையில் சட்டையெல்லாம் முழுவதுமாக நனைந்துவிட்டது. யாராவது ‘ஆர் யூ ஆல்ரைட்’ என்று கேட்டிருந்தால் ‘ப்ளீஸ் கால் த ஆம்புலன்ஸ்’ என்று நொறுங்கி விழுந்திருப்பானா இருக்கும்.
சட்டைக்காலர் அருகே மைக்கில் பேசிக்கொண்டே, நீட்டிய துப்பாக்கியுடன் ஏதோ ஓரு போலீஸ்காரர் தன் முன்னே வந்து நிற்கப் போகிரார் என எதிர்பார்த்தபடியே இருந்தான்.

‘ஜேஸ்டன்வில்லில் பாங்கா? அந்த ஊர் எங்கிருக்கிறது… நான் மேன்ஹாட்டனில் இருந்து வருகிறேன்.’என்று டபாய்த்தால் நம்புவார்களா. பொய் சொன்னதற்கும் சேர்த்து கேஸ் எழுதிவிடுவார்களா.

குவைத் ஏர்வேஸ் கவுண்ட்டரைத் தேடிப் பார்த்தான். இதோ, ஏறக்குறைய முடிந்தது போலத்தான். போர்டிங் பாஸ் வாங்கி,பாதுகாப்பு சோதனைகளை கடந்து உள்ளே போனால் ஒருமணி நேரத்தில் ஃப்ளைட் கிளம்பிவிடும். அடுத்த பன்னிரெண்டு மணிநேரங்களில் குவைத். அங்கிருந்து சென்னை. ‘தாய்மண்ணே வணக்கம்’ என்று தரையில் முத்தமிட்டு புளகாங்கிதப்படலாம். கண்ணோரங்களால் ஏதும் போலிஸ் தொப்பி தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டேயிருந்தான்.

‘ஃப்ரீஸ்… அப்படியே நகராம நில்லுங்க’ என்று ப்ரூஸ் வில்லிஸ் சாயலில் யாரேனும் குறுக்கே ஓடினால் என்ன செய்வது? தடாலென குப்புற விழுந்து மறைத்துக் கொள்ள வேண்டுமா? விழுவதுதான் விழுகிறோம் ப்ரூஸ் வில்லிஸ் காலிலே நேரடியாக விழுந்து ‘பாருங்க… இதெல்லாம் ஒரு கணநேர சபலம்’என மன்றாட வேண்டும் என எண்ணிக் கொண்டான்.

ஒருவகையில் ஏதாவது அசம்பாவிதம் நடக்காதா என்றொரு சுயவதை மனநிலைக்கு போய்விட்டிருந்தான் வின்செண்ட். அவன் எண்ணத்தை அறிந்து கொண்டவர் போல, டிக்கெட் கவுண்டரில் இருந்த உயரமானவர் தன்னுடைய குடமிளகாய் மூக்கைத் தூக்கி அவன் பாஸ்போர்ட்டை புரட்டி புரட்டி பார்த்தார்.

‘இப்படி ஓரமா நிக்கிறீங்களா’ என்று வின்செண்ட்டை ஓரங்கட்டிவிட்டு வரிசையில் இருந்த அடுத்திருந்த தெலுங்கு குடும்பத்தை கவனிக்க போய்விட்டார்.

வின்செண்ட்டின் சந்தேகம் ஏறக்குறைய ஊர்ஜிதமாகிவிட்டது. வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் ‘இன்றே ஊருக்குப் போகிறேன். இன்ன பஸ்ஸில் ஏறி இன்ன நேரத்தில் போகிறேன்’ என்று வரிசையாக உளறி வைத்துவிட்டு வந்திருப்பதால், சுலபமாக ட்ரேஸ் செய்து விட்டார்களோ என நினைத்துக் கொண்டிருக்கும் போது, தோளில் ‘பட்’டென ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தால் கோட் சூட்டில் ஒருவர். நிச்சயம் போலிஸ் இல்லை. ஏதாவது மேனேஜராக இருக்க வேண்டும்.

‘வாருங்கள் அந்த அறைக்குப் போகலாம்’ என்று அவனை மரியாதையாக அழைத்துக் கொண்டு போனார்.

உள்ளே நுழைந்ததும் விலங்கை மாட்டுவார்களா, இல்லை ஓரமாக குத்தவைத்து உட்காரச் சொல்வார்களா என்று திகிலோடு எட்டிப் பார்த்தால் நல்லவிதமாக நாற்காலியெல்லாம் போட்டிருந்தார்கள். ‘பாருங்கள்… மிஸ்டர். வர்கீஸ்..’

‘நீங்கள் வின்செண்ட் என்றே அழைக்கலாம்’.

‘ஆங்… மிஸ்டர் வின்செண்ட்… உங்கள் பாஸ்போர்ட்டைக் கொஞ்சம் கொடுக்கிறீர்களா’ என்று வாங்கி பல்வேறு கோணங்களில் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.

‘பாருங்கள் உங்கள் அமெரிக்க வீசா காலாவதியாகிவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக’

‘ஹா! அது நான் இந்தியாவை விட்டு கிளம்பும்போது வாங்கியது. பிறகு இங்கே இருந்தபடிக்கே நீட்டித்ததால் பாஸ்போர்ட்டில் பதிவாகவில்லை. இதோ இமிகிரேஷன் கொடுத்த ப்ரூவல் நோட்டீஸ் தனியாக இருக்கிறது பாருங்கள்’என்றான்.

‘அது தெரியும் மிஸ்டர் வர்கீஸ். பாருங்கள். நீங்கள் போகும் விமானம் நேராக குவைத் போவதில்லை உங்கள் பயணத்தில் இடையே எரிபொருள் நிரப்ப, ஐரோப்பிய நகரத்தில் ஒரு டெக்னிகல் ஸ்டாப் இருக்கிறது. அங்கு அவர்களுக்கு பாஸ்போர்ட்டில் முறையாக இருக்க வேண்டும். டெக்னிகல் பிராப்ளம்’ என்றார் சிரித்தபடியே.

‘ஏன்? நானா ஃப்யூயல் நிரப்பப் போகிறேன்… நான் பிளேனை விட்டே இறங்க மாட்டேனே ஐயா.’ என்று படபடத்தான்.

‘உங்கள் பேரில் எந்த பிரச்னையுமில்லை மிஸ்டர் வின்செண்ட். இது ஒரு வேண்டத்தகாத நடைமுறைச் சிக்கல். ஏர்போர்ட் ட்ரான்ஸிட் விசா என்று ஒன்று இருக்கிறது. ஆனால் இப்போது நேரமில்லை. வேறு வழியில்லை. உங்கள் பிரயாணத்தை கேன்சல் செய்ய வேண்டியதுதான்’

பயணத்தை ரத்து செய்துவிட்டு எங்கு போவது என்று மலைப்பாக இருந்தது வின்செண்ட்டிற்கு.

அந்த மேனேஜர், தன்னுடைய கோட் பட்டன்களை திருகிக்கொண்டும், கணிணித் திரையை மேய்ந்துகொண்டும், ஃபோனில் பேசிக்கொண்டும், காப்பியை குடித்துக் கொண்டும் மேலும் சில நிமிடங்களைப் போக்கியவர்,

‘உங்கள் அதிர்ஷ்டம், நாளைக் காலை ஒன்பதரைக்கு புறப்படும் ஃப்ளைட் நேராக குவைத் போகிறது. அதில் ஓர் இடம் இருப்பதாக அசார் சொல்கிறார். இன்றைய பிரயாணத்தை ரத்து செய்துவிட்டு நாளைக்கு போவது ஒன்றுதான் உங்கள் பிரச்னைக்கான ஒரே தீர்வு. உங்களுக்கு சௌகரியப்படுமா?’ என்றார்.

‘என்னை நடை பயணமாக இந்தியா அனுப்பினாலும் எனக்கு சௌகரியமே. இப்போது நானென்ன செய்ய வேண்டும்?’ என்றான் வின்செண்ட்.

‘மிக நல்லது. அசார் உங்களுக்கு உதவுவார்’ என்று மீண்டும் குடமிளகாய் மூக்கரிடம் அனுப்பி வைத்தார்.

‘இது நான்-ட்ரான்ஸ்ஃபரபிள் டிக்கெட் சார். அதனால் உங்கள் இன்றைய டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டேன். உங்கள் வங்கிக் கார்டுக்கே பணம் திருப்பியாகிவிட்டது. புதிய டிக்கெட்டிற்கு எப்படி பணம் செலுத்தப் போகிறீர்கள்?’

‘ஐயய்யோ. அது டெபிட் கார்டாச்சே. அந்த வங்கிக் கணக்கை இன்னிக்குத்தானே மூடினேன்? எவ்வளவு பணம் திருப்பினீர்கள்?’ என்றான் பதட்டமாக.

‘தொள்ளாயிரத்து எண்பது டாலர்கள். அதிலொரு சிக்கலும் இருக்காது சார். நீங்கள் உங்கள் பாங்க்கை தொடர்புகொண்டு கேட்டுக்கொள்ளுங்களேன். புதிய டிக்கெட்டிற்கு ஆயிரத்து இருநூற்று பதினேழு டாலர்கள் ஆகிறது’ என்றார்.

கையில் இருந்த மொத்த பணத்தையும் கொடுத்து புதிய டிக்கெட்டையும், மறுநாள் பயணத்திற்கான போர்டிங் பாஸையும் அப்பொழுதே வாங்கிக் கொண்டு உள்ளே சென்றான். இரண்டு நாட்களான பதட்டங்கள் எல்லாம் அடங்கிப் போயிருக்க, மனதின் ஒரு மூலையில் கணக்கு ஓட ஆரம்பித்தது. கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஏதோ கொஞ்சம் நட்டம்தான். ஆனால் டிக்கெட் குழப்பம் தீர்ந்ததே. ஓரிடத்தில் கூடினால் பிறிதோரிடத்தில் ஏதாவது குறைந்துதானே ஆக வேண்டும். இன்றைக்கு அடித்தது இப்படியொரு யோகம்.

சௌகரியமான நாற்காலியைத் தேடி அமர்ந்து கால்நீட்டி சாய்ந்துகொண்டான். அருகில் உட்கார்ந்திருந்த சிறுமியிடம் புன்னகைத்து ‘*ஷனா டோவா’ என்றான். அந்தப் பெண் இனிமையாக புன்னகைத்தது. பாட்ரீஷியாவைப் போல். இனி காலை ஒன்பது மணிவரை நிம்மதியாக கிடந்து உறங்கலாம்.

*Shannah Tovah:- சப்பாத்தில் (Shabbhat) நம்பிக்கை வைத்திருக்கும் கிறிஸ்துவ சர்ச்களை சேர்ந்தவர்கள் அதி பரிசுத்த நாளன்று (Rosh Hashanah) ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வது. யூத புதுவருடம் இந்நாளில்தான் தொடங்குகிறது என்பது நம்பிக்கை. இவ்வருட (2014) ரோஸ் ஹஸன்னா செப் 25ம் கொண்டாடப்பட்டது.

அடுத்த வாரிசு

–  கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன்

தியாகராஜனிடமிருந்து ஃபோன் வந்ததுமே சரவணனுக்கு வயிற்றில் முடிச்சுகள் தோன்ற ஆரம்பித்தன. நெற்றியோரமாக வியர்க்க தொடங்கியது. ஆங்க்ஸிட்டி அட்டாக் வருவதற்கான எல்லா அறிகுறிகளையும் உணர ஆரம்பித்தான். அபாயம் நேரப்போகிறது என்பதிற்கான உடலின் இயல்பான எதிர்வினையாக படபடப்பு கூடி மூச்சு சீரில்லாமல் வெளி வரத் தொடங்கியது. அதற்காக ஃபோனை எடுக்காமலும் இருக்க முடியாது. கண்ணிவெடிகளிடையே காலை வைப்பது போல ஜாக்கிரதையாக ஃபோனை எடுத்தான்.

‘சனிக்கிழமையும் அதுவுமா, ஒரு பேச்சிலர் எம்புட்டு நேரம்யா தூங்குவ’ என்று ஃபோனில் ஆரம்பித்தார் தியாகராஜன்.

நானெங்கே தூங்கினேன், சொல்லப்போனால் வெள்ளிக்கிழமை இரவிலிருந்து தொடர்ந்து பேக்-டு-பேக்காக இரு திரைப்படங்களும் ஒரு புத்தகமுமாக விச்ராந்தியாக பொழுது போய்க்கொண்டிருக்கிறது என்று சொல்ல நினைத்து சொல்லாமல் மென்று விழுங்கியபடி ‘ம்ம்… சொல்லுங்க சார்’ என்று மட்டும் சொன்னான். சரவணன் எந்த பதில் சொன்னாலும் அதை நுனிபிடித்துக் கொண்டு பேச்சை திருகிக் கொண்டு போய் விடும் சாமர்த்தியம் தியாகராஜனுக்கு உண்டு. அவர் கண்களில் எப்போதும் ஒரு தராசுக் கட்டி தொங்கவிட்டிருப்பார். இல்லை அப்படியொரு தராசு இருப்பது போல சரவணனுக்குப் படும்.

‘என்னத்த நொள்றது? டெம்பிளுக்கு புறப்பட்டு வாய்யா. ஆர்கனைசிங் கமிட்டின்னு பேரெல்லாம் போட்டு மெயில் அனுப்பினோம்ல. எம்புட்டு வேலை இருக்கு’ சரவணன் பதில் சொல்லுமுன்னர் ஃபோன் வைக்கப்பட்டு விட்டது.

தியாகராஜன் எப்போதும் இப்படித்தான். அவர் நட்புடன் பேசுகிறார் என்று அவன் நம்ப யத்தனிப்பதற்குள், அவருடைய காரியவாதி முகம் முன்னால் வந்து மறைத்துவிடும்.

‘எள்ளுதான் எண்ணெய் புண்ணாக்குக்கு காயனும், எலிப்புழுக்கை என்னாத்துக்கு சார் கூட காயனும்’ என்று தோன்றியது அவனுக்கு. அதை அவர் ஃபோன்காலை துண்டிப்பதற்கு முன்னர் கேட்டிருக்கவேண்டும். Anxiety அதிகமானாலே இப்படித்தான். (more…)

பாரதி என்னும் பற்றுக்கோடு

– கதை: ஸ்ரீதர் நாராயணன்; ஓவியம்: யாத்ரீகன்

yathrigan-agni

 

‘அக்னி அண்ட் அதர் போயம்ஸ் அண்ட் ட்ரான்ஸ்லேஷன்ஸ்….”

கரகரகொரகொரவென அவ்வப்போது அலையடித்து கலைத்துக் கொண்டிருந்த தொலைபேசிக் குரலில் பத்மநாபன் சொல்லிக் கொண்டே இருந்தான்.

‘என்னடா’ என்று நான் சற்று உரக்கவே கேட்டு மூன்று நொடிகள் தாமதத்தில் அவன் காதுக்கு போய் சேர்ந்ததிருக்க வேண்டும்.

மீண்டும் ‘அக்னி அண்ட் அதர் போயம்ஸ் அண்ட் ட்ரான்ஸ்லேஷன்ஸ் அண்ட் எஸ்ஸேஸ் அண்ட் அதர் ப்ரோஸ் ஃப்ராக்மெண்ட்ஸ்… இந்த பொத்தவம்தாம்டே. பாரதி பிரசுராலயம் வெளியீடு. மொத பதிப்பு ஆயிரத்தி தொள்ளாயிரத்து நுப்பத்திரெண்டுல வந்திருக்கு. அங்கன ஏதாச்சும் லைப்ரரில இருக்கான்னு பாருடே. நம்ம பாரதிப் புலவர் அய்யாவோட காப்பிய எவனொ கோண்டுட்டு போயிட்டான்னு ரொம்ப நாளா சொல்லிட்டிருந்தாவ. அங்கதான் அல்லா பளய பொத்தவத்தையும் மைக்ரோ பிலிமில் போட்டு வச்சிருக்கானுவளாமே. அய்யாவுக்கு ஒண்ணு வாங்கிட்டு வாடே’

மேலே சொன்னது முழுவதுமாக எனக்கு போனில் கேட்க முடியாமல் பத்மநாபனின் குரல் துண்டு துண்டாக வெட்டித்தான் கேட்டது. தொலைபேசி இணைப்பக பிரச்னையால் காணாமல் போனவற்றை நானாக இட்டு நிரப்பி புரிந்துகொள்வதற்குள் என் காலிங் கார்டின் இருப்பு தீர்ந்து போய்விட்டதாக அறிவிப்பு வந்து அழைப்பு நின்று போனது.

ஏற்கெனவே திகைப்பும் வியப்புமாக ஒரு பிரமிப்பு நிலையில் இருந்த எனக்கு இப்போது சற்று எரிச்சலும் சேர்ந்து கொண்டது. (more…)