நரோபா

குருதிச் சோறு 3

நரோபா

அன்று சிரமட்டார் காளியம்மன் திருவிழாவின் கடைசி நாள், பிராமண மண்டகப்படி. வைத்தியர் வீடு திமிலோகப்பட்டது. வைத்தியர் குடும்பத்து பங்காளிகள் எந்த மூலையில் இருந்தாலும் ஆடிக் கிருத்திகை அன்று ஊருக்கு வந்துவிட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஏனெனில் அன்று அவர்கள் குடும்ப தெய்வமான அன்னசௌரக்ஷாம்பிகைக்கு நோன்பு நோற்பது வழக்கம். அதன் பின்னர் அனைவரும் கலந்துகொள்ளும் சமபந்திபோஜனம் நடைபெறும். அதிசயமாக இந்த முறை இரண்டு திருநாள்களும் ஒரே நேரத்தில் வந்துவிட்டன.

இழவு விழுந்து பண்டிகைகள் இல்லாத ஆண்டுகளிலும்கூட இந்த பூஜையும் சமபந்தி போஜனமும் நிச்சயம் உண்டு. சபரியின் தாத்தாவிற்கு விபரம் தெரிந்ததிலிருந்து வருடம் தவறாமல் இது நடந்துவருகிறது. முதலில் லலிதா சஹஸ்ரநாமம் கூட்டாக பாராயணம் செய்வார்கள். பாலிலும் தேனிலும் தயிரிலும் பஞ்சாமிருததிலும் அபிஷேகம் செய்துவிட்டு மஞ்சள் குங்குமத்தில் அலங்காரம் செய்து பட்டுநூல் சார்த்தி, சிவப்பு அவல் பாயசம் நைவேத்தியம் செய்துவிட்டு தீபாராதனை காட்டுவார்கள். நோன்புக் கதையை வீட்டின் மூத்த சுமங்கலி சொல்லக் கேட்டுவிட்டு வீட்டுப் பெண்களெல்லாம் கையில் தோரம் கட்டிக்கொள்வது வழக்கம். (more…)

குருதிச் சோறு – 2

– நரோபா –

பகுதி – 1
பகுதி – 2

பாலாயி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். தன்னைக் கைவிட்டுச் சென்ற காத்தமுத்துவை ஆசைதீர வைய வேண்டும் என்பதுதான் உடனடியாக அவளுக்கு தோன்றித் தொலைத்தது. ஆறேழு மாதங்கள் இருக்கலாம். வெள்ளாமை பொய்த்து காடு கழனி போகாமல் அவதிப்பட்ட காலம் அது. பிள்ளைகளுக்கு எப்படியோ ஒருவேளை கேப்பை கஞ்சி காய்ச்சிக் கொடுத்து கொண்டிருந்தாள். கையில் இருந்தது எல்லாம் கரைந்து கொண்டிருந்தது. பிள்ளைகளும் பிள்ளைத்தாய்ச்சியுமான தானும் சீரழிந்து கொண்டிருப்பது தெரியாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் அவனை நினைத்து ஆத்திரப்பட்டாள். வழக்கம் போல் அன்றைய சண்டையும் அவள் அடி வாங்கி அழுவதில் முடிந்தது. அந்த இரவு ஆத்திரத்துடன் கள்ளுக்கடைக்குப் போனவன் திரும்பியே வரவில்லை. என்ன ஆனான் என்று ஒரு சேதியும் இல்லை. ஓரிரு மாதங்கள் ஊருக்குள் இருந்துவிட்டு, பிறகு புதுக்கோட்டை ராஸ்தாவை ஒட்டியிருந்த கண்மாயில் கொஞ்சம் தோண்டினால் ஊற்றுநீர் வரும் என்பதாலும், ஊருக்குள் மாரியாத்தா சூறையாடில் கொண்டிருக்கிறாள் என்பதாலும் குடும்பம் குடும்பமாக கம்மாய் அருகில் குடில் போட்டுக்கொண்டு தங்கினார்கள். (more…)

குருதிச் சோறு

– நரோபா –

பகுதி – 1
பகுதி – 2

பூம்.. பூம்பூம்..பூம்..பூம்பூம்.. ..உறங்கிக் கொண்டிருக்கும் வனமிருகத்தின் மூச்சொலி போல் சீரான நிதானத்துடன் ஏறி இறங்கிக்கொண்டிருந்தது உடுக்கையொலி. மெல்லிய எதிரொலியாக தூரத்து பறையோசை ஒலித்துக் கொண்டிருந்தது. மருலாளி கண்களை மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரைப் போல் வேப்பமரத்தடி மேடையில் அமர்ந்திருந்தார். நரைத்த வெள்ளி தலைமயிர், உடலுக்குள் இருக்கும் நீரை எல்லாம் ஒட்டுமொத்தமாக உறிஞ்சி எடுத்தாற்போல் வறண்டு மெலிந்த தேகம். அடர் கருப்பு தேகத்தில் சிறு கீறல்களாக பழுப்பு ரேகைகள் வயிற்றில் ஓடின. காவி வேட்டியும் செவ்வரளி மாலையும் அணிந்திருந்தார். காலுக்கு கீழே நான்கைந்து பிரம்மாண்டமான கரிய வெட்டருவாள்கள் கூர் மூக்குடன், அவர் கால்களைத் தீண்ட படமெடுத்து காத்திருந்தன. சிவந்த நாக்கை நீட்டி எதையோ விழுங்க காத்திருக்கும் தீ, பந்தத்தின் நுனியில் நின்றுகொண்டு காற்றில் இரையை தேடி துழாவிக் கொண்டிருந்தது. (more…)

நெடுஞ்சாலை புத்தரும் ஒரு பாதசாரியும்

                                                                                                                            – நரோபா –

“ஏன் நீங்கள் உங்களைப் பற்றி எந்த வரலாற்றையும் வருங்கால சந்ததியினருக்காக விட்டுச் செல்வதில்லை ? “என்று கேட்டேன். அதற்கு அவர், “ நாங்கள் சகஜ முறையை ( எளிய வாழ்க்கையை ) கடைபிடிக்கிறோம் என்பதால் எங்களுக்குப் பின் எந்த சுவடுகளையும் விட்டுச்செல்வதில்லை” என்று சொன்னார். அலைகள் மெல்ல ஓய்ந்து, ஆற்றுப்படுகையில் சிறிய அளவில் நீர் இருந்தது. சேற்றில் சில ஓடங்களை ஒடக்காரர்கள் இழுத்துச் சென்றனர். சேற்றில் ஓடம் தன் தடத்தை விட்டுச் சென்றது. அவர் தொடர்ந்து பேசினார், “ஆற்றின் வெள்ளப் பெருக்கில் மிதக்கும் ஓடம் என்றேனும் தடத்தை விட்டுச் செல்கிறதா? சேற்றில் உழலும் ஒடக்காரர்கள் அவர்களுடைய சிறுமையின் வெளிப்பாடாக நீண்ட தடத்தை மண்ணில் விட்டுச் செல்கின்றனர். இது சகஜ வழியல்ல.”
க்ஷிதி மோகன் சென், இந்து ஞானம் ஒரு எளிய அறிமுகம், வங்காளத்து பால்கள்.

2012 ஆம் ஆண்டு கவிஞர் தேவதேவனை கவுரவிக்கும் விதமாக கோவையில் நடைபெற்ற விழாவிற்கு வந்திருந்த மலையாள கவிஞர் கல்பட்டா நாராயணன் அவர்களுடன் கவிதை குறித்து நண்பர்கள் அளவளாவுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அப்போது நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள மலையாள கவிஞர் கல்பற்றாவின் கவிதைகளை நண்பர்கள் வாசித்து விவாதித்தனர். அந்த informal கூடுகையில் பங்குகொண்ட நண்பர்களுக்கு அது ஒரு மறக்க முடியாத அனுபவம். எனக்கும்கூட. கவிதை குறித்தான புதிய திறப்புகள் சாத்தியமாகின. கல்பட்டாவை எனக்கே எனக்கான கவி என என் அகம் கண்டு கொண்ட தருணம் அது. (more…)

ருசி

நரோபா

அந்தப் பொட்டலம் என்னவோ அங்கேயேதான் கிடக்கிறது, சீந்துவாரில்லாமல்.

பட்டணத்து ரயில் நிலையங்கள் ஒரு பிரம்மாண்டமான உயிர்க் காடு. பலரும் தொலைந்துபோன, தொலைத்துக் கொண்ட காடு. எவரையும் கண்கொண்டு பார்க்க முடிவதில்லை, எப்போதும் எவரோ நம்மிடமிருந்து ஏதோ ஒன்றை அடித்துப் பிடுங்கி விடுவார்கள் என்ற அச்சம் நிலைகொண்டிருக்கும். பையை இறுகப் பற்றிக் கொண்டு ஊர் திரும்பக் காத்திருக்கிறேன்.

அத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் சிக்குவான் என எதிர்பார்க்கவில்லை. நேற்றிரவுதான் கிருஷ்ணமூர்த்தி அவனைப் பார்த்ததாக போனில் சொன்னான். காலையில் கிளம்பிவிட்டேன். ஆவேசமும் கோபமும் உள்ளூர நுரைத்துப் பொங்கின. இரவெல்லாம் நினைப்புகள், கற்பனைகள். அவனை விதவிதமாகச் சிறுமை செய்வது போல், அவமதிப்பது போல், பெரியமனுஷத்தனத்துடன் மன்னிப்பது போல், அவனிடம் கெஞ்சி இறைஞ்சுவது போல், குத்திக் கிழிப்பது போல், பளாரென்று அறைவது போல். உறக்கமின்றி லயித்துக் கிடந்தேன். அவனைக் கண்டதும் என்ன செய்வது என்பதை இனிதான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அவனைச் சந்தித்தாக வேண்டும். நானிருக்கிறேன், உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன் என்றாவது அவனுக்கு உணர்த்தியாக வேண்டும். (more…)