கவியின்கண் – 6 “இரு பேராண்மை செய்த பூசல்”

– எஸ். சுரேஷ்-

செல்வா ரல்லரென் றியானிகழ்ந் தனனே
ஒல்வா ளல்லளென் றவரிகழ்ந் தனரே
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்
நல்லராக் கதுவி யாங்கென்
அல்ல னெஞ்ச மலமலக் குறுமே.

ஔவையின் குறுந்தொகை பாடலின் எளிய ஆங்கில வடிவம் இது :

Thinking he wouldnt leave me
I kept quite

Thinking I wouldnt agree
to his leaving
he kept quite

In this clash of two egos

now
as if bitten by a cobra
my heart
is in agony

– AvvaiyAr, Kurunthogai, 43

கூடலைப் பாடுவது போலவே சங்கப்பாடல்கள் பிரிவாற்றாமையையும் பாடுகின்றன. பொருளும் புகழும் தேடித் தன்னைப் பிரிந்து செல்லும் தலைவனைத் தடுத்து நிறுத்த இயலாத தலைவியின் துயரை முன்னொரு பாடலில் பார்த்தோம். இப்பிரிவின் துயர் பாலைத் திணைக்குரியது- பாலை நிலத்தின் ஈரமற்ற மண்ணுக்குரியது.

‘செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே’, என்று துவங்கும் இந்த எளிய பாடலில் தன் மனதில் உள்ளதை அறிந்தவனாய் தன் காதலன் என்றும் தன்னோடிருப்பான் என்ற நம்பிக்கையில் அவனைப் பொருட்படுத்தாமல் போனேனே என்று வருந்துகிறாள் தலைவி. ‘ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே’- பிரிந்து செல்ல அனுமதி கேட்டால் கிடைக்காது என்று நினைத்து அவனும் என்னைப் பொருட்படுத்தவில்லை, எனவேதான் இந்தப் பிரிவு என்று துயர் தாளாதவளாய் வருந்துகிறாள் தலைவி. இது பாடலில் வெளிப்படையாகவே தெளிவாகத் தெரியும் விஷயம். சங்கத் தொகுப்பில் உள்ள பாடல்கள் சீரான அளவில் உயர்ந்த தரம் கொண்டவையாக இருப்பதைப் பார்க்கும்போது இந்தப் பாடலின் உள் அடுக்குகளைக் கருத வேண்டியிருகிறது.

எதைப் பேசுகிறது இந்தப் பாடல்? பிற மனிதர்களுடன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள இடைவெளியை இப்பாடல் விவரிப்பதாக நான் கருதுகிறேன். நம் உணர்வுகளைப் பிறருக்குத் தெளிவாக உணர்த்துவது என்பது முழுமையான சாத்தியமில்லை. தெளிவான உணர்த்தலுக்குத் தேவையான சொற்கள் நம்மிடம் இருக்கும்போதும்கூட நாமே நம் உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களாக இருப்பதில்லை என்பது ஒரு விஷயம். மற்றொன்று, நாம் நம் உணர்வுகளைப் பேச முயற்சி செய்யும்போதுதான் சொற்களின் போதாமையை உணர்கிறோம்.

புகழ்பெற்ற போர்ச்சுகீசிய எழுத்தாளரான பெர்னாண்டோ பெஸோவா, “மனிதன் கூறியுள்ளவை அனைத்தும், அவனது வெளிப்பாடுகள் அனைத்தும், முழுமையாய் அழிக்கப்பட்ட பிரதியின் விளிம்புகளில் எழுதப்பட்ட குறிப்பேயாகும். குறிப்பைக் கொண்டு நாம் பிரதியில் இருந்திருக்கக்கூடியதன் சாரத்தைக் கைப்பற்ற முடிகிறது. ஆனால் ஏதோ ஒரு சந்தேகம் இருந்து கொண்டேதான் இருக்கிறது, பல்வகையில் பொருள் கொள்ளப்படும் சாத்தியங்களும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன”, என்று எழுதுகிறார்.

உணர்வு சார்ந்த விஷயங்களைப் பகிர்தலில் உள்ள போதாமையை பெஸோவா கூறியிருப்பது கச்சிதமாகச் சித்தரிக்கிறது.

ஒரு பெண் தன் வாழ்வில் எதிர்கொள்ளக்கூடிய கடுமையான சவால், மணமானபின் தன் புகுந்த வீட்டாருடன் எப்படிப்பட்ட புரிதலை உருவாக்கிக் கொள்கிறாள் என்பதாகத்தான் பழங்காலத்தில் இருந்திருக்கும். இன்றும் பல பெண்களுக்கு இது சிரமமான விஷயமாகதான் இருக்கிறது. இவர்கள் அறிமுகமில்லாத புதிய உலகுள் நுழைகிறனர், இங்கு எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது. புதிய மனிதர்கள், அவர்களது பழக்க வழக்கங்கள் சீக்கிரம் பிடிபடுவதில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் தன் கணவனோடும் சரியான புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. கணவனுக்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது.

காதலர்களும், புதுமணம் புரிந்த தம்பதியரும் மௌன உரையாடல் நிகழ்த்தவே முனைகின்றனர். சொல்லாமலே எல்லாம் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்டவர்களாக இருக்கின்றனர் இவர்கள். எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் காதலர்களும்கூட முக்கியமான சமயங்களில் மௌனமாகி விடுகின்றனர், தன் துணை புரிந்துணர்வோடு சொந்தமாக முடிவெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அது நடக்காதபோது தங்கள் காதல் முழுமையானதாக இல்லாமல் தோல்வியுற்றதாக உணர்கின்றனர். சிலகாலம் சென்றபின்னரே அப்படிப்பட்ட ஒரு பூரண புரிந்துணர்வு சாத்தியமில்லை என்ற தெளிவு அடைகின்றனர்.

புரிதல் ஏற்பட்ட பின்னும், வெளிப்படையான உறுதிப்பாடுகள் தேவைப்படுவது உண்டு. எந்த ஒரு உறவின் தன்மையும் மாறுதலுக்கு உட்பட்டதாக இருப்பதால், சில அடிப்படை உண்மைகளை மீண்டும் மீண்டும் நிறுவ வேண்டிய தேவை உள்ளது. அமெரிக்கர்களின் உரையாடல்களில் திரும்பத் திரும்ப ஐ லவ் யூ அடிபடுவதை நீங்கள் கண்டிருக்கலாம். சொல்லப்பட்டது, சொல்லப்படாதது என்ற இரண்டின் கலவையாகவே அனைத்து உறவுகளும் இருக்கின்றன.

இந்தப் பாடலில் தலைவன் தன்னைப் பிரிந்து செல்வதைத் தான் விரும்பவில்லை என்பதை அவன் தானாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாள் அவள். அதை வாய்விட்டுச் சொல்லும் விருப்பம் அவளுக்கு இல்லை. அப்படிச் செய்தால், அவள் சொல்லக் கேட்டு அவன் அதைச் செய்ததாக ஆகும். அவனே விரும்பி, அவள் பாலுள்ள அன்பின் காரணமாகவும், அவனது புரிதலின் வெளிப்பாடாகவும் அவன் தனது பயணத்தைக் கைவிட வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறாள் அவள். அவனுக்கு இதுவெல்லாம் தெரிந்திருந்தும் அவள் பிரிந்து செல்ல அனுமதிக்க மாட்டாள் என்பதை அறிந்து எதுவும் கேளாமல் மௌனமாக இருந்திருக்கிறான்.

பகிர்தல் சுயவரலாறு சார்ந்தது. ஒருவன் பிறரோடு எப்படிப்பட்ட தொடர்பில் இருக்கிறான் என்பது அவன் எப்படி வளர்ந்தான் என்பதோடும், பிறரோடு பழகுவதைக் கொண்டு அவன் அடைந்த முன்னேற்றத்தையும் அதில் அவனுக்கு ஏற்பட்ட தோல்விகளையும் சார்ந்தது. நம் வாழ்வில் புதிதாய் ஒருவர் வரும்போது, அவர்களது தனிவரலாறு குறித்த புரிதல் நமக்கு இருக்க வேண்டும். இந்தப் பாடலைப் பொறுத்தவரை இவ்விருவரின் தனி வரலாறு பற்றிய ஒரு குறிப்பு நமக்குக் கிடைக்கிறது. முன்னொரு முறை அவன் செல்ல விரும்பி அவள் தடுத்திருக்கலாம். இருவரும் சர்ச்சித்திருக்கலாம். அவளுக்கே தன் எதிர்ப்பு அலுத்துப் போயிருக்கலாம், அவன் புரிந்து கொள்வான் என்று இப்போது எதுவும் பேசாமல் இருந்திருக்கலாம். இல்லை, அவனுக்குதான் அலுப்புதட்டி சும்மா இருந்தானோ? பாடலின் பல அடுக்குகள் திறந்து கொள்கின்றன. இப்போதைய காட்சி மட்டுமல்ல, முன்னர் நிகழ்ந்திருக்கக்கூடிய பல்வேறு சாத்தியங்களும் நம் கண்முன் விரிகின்றன.

‘இரு பேராண்மை செய்த பூசல்’ – ஆண்மை என்ற சொல், இங்கு பெண்ணின் மன உறுதியைக் குறிக்கவும் கையாளப்படுவது கவனிக்கத்தக்கது. அகம்பாவத்தின் மோதல்கள் வார்த்தைகள் இறந்த நிசப்த நிலைக்கு இட்டுச் செல்வதுண்டு. அது போன்றதல்ல இது. அதற்காக, உறவைத் துண்டித்துக் கொள்ளும் இறுக்கமான அமைதியுமல்ல இது. இவர்களிடையே நிலவுவது எதிராளியின் புரிதலைக் கோரும் மௌனம்.

சங்கப் பாடல்களின் படிமங்கள் கவிஞனின் கற்பனையில் அவனது அழகுணர்வு காரணமாக ஒரு விபத்தாய் தோற்றம் பெற்றவையல்ல. அவை ஒவ்வொன்றுக்கும் காரணமுண்டு. ‘நல்லராக் கதுவி யாங்கு’ அவள் இதயம் ஏன் தவிக்க வேண்டும்? நல் அரவு தீண்டிய வலி ஏன்? பாம்பின் விஷம் கொடிது. அவன் அவளை விட்டுப் பிரிதலில் அவளது உள்ளத்தை விஷம் தீண்டுகிறது. தன் விருப்பம் அறிந்தும் அவன் விலகிச் சென்றதை அவள் அறிந்திருக்கிறாள். இது அவளது இதயத்தில் சிறிது நஞ்சைக் கலக்கிறது, இதுவே அவளது துயரம். அவனது பிரிவு அவளைப் பிணிக்கிறது எனினும், அவளது மனமே இதயத்த்தில் நஞ்சை நிறைப்பதும் அவளது வலியின் காரணமாக இருக்கிறது. காலம் இந்த நஞ்சைக் கரைக்கலாம், அல்லது நல் அரவு இன்னும் பல முறை அவளைத் தீண்டலாம். இந்த உண்மையின் தவிப்பே இப்பாடலின் உணர்த்தலாய் வெளிப்படுகிறது.

இதை ஒரு பெண்ணையன்றி வேறு யார் இவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்தியிருக்க இயலும்? அதுவும் ஔவையைப் போன்ற ஒரு கவி இதைப் பாடுவதாயின் நமக்கு வேறென்ன வேண்டும்?

தமிழாக்க உதவி – பீட்டர் பொங்கல்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.