Peter Trachtenberg on The Periodic Table and If This Is a Man : Remembering Auschwitz: –

If This is a Man, என்ற தலைப்பையே பயன்படுத்த விரும்புகிறேன். இது ஒரு trauma, பேரதிர்ச்சியின் கதை. கிரேக்க மொழியில் ட்ராமா என்ற சொல்லுக்கு காயம் என்று பொருளுண்டு. வழக்கமாக நாம் பேரதிர்ச்சி குறிப்பிட்ட ஒரு நிகழ்வு என்று நினைக்கிறோம் – “அனைத்துக்கும் அப்பாற்பட்ட நிகழ்வு, புரிந்துகொள்வதற்கில்லாத, நடப்பின் தூய, நேரடித் தாக்கமாகிய நிகழ்வு,” என்று அதை அழைக்கிறார் இலக்கிய விமரிசகர் ஷோஷன்னா ஃபெல்மென்.
பேரதிர்ச்சி பேரழிவாகிய நிகழ்வு. அது உடலையும் உள்ளதையும் முடமாக்காத இடத்தில், சரிசெய்யப்பட முடியாத வடுக்களை விட்டுச் செல்கிறது. பெரும்பாலும் மிக விரைவாக நிகழ்கிறது. மிக விரைவாகவும் இரக்கமில்லாமலும் நிகழ்வதால் இதைத் தப்பியவர்கள் தங்கள் அனுபவத்தைச் சொற்களைக் கொண்டு விவரிக்க இயலாதவர்களாய் ஆகின்றனர்.
முதலாம் உலகப் போரில், பீரங்கி குண்டுப் பொழிவில் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், ஹிப்னடைஸ் செய்யப்பட்டாலன்றி தங்களுக்கு பதுங்கு குழிகளில் என்ன நேரிட்டது என்பதைச் சொல்ல இயலாத நிலையில் போர்வீரர்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர் – இன்று இது PTSD என்று புரிந்து கொள்ளப்படுகிறது. ஹிப்னடைஸ் செய்யப்பட்டபோது நிகழ்காலத்தில் நடப்பது போலவே தங்களுக்கு பேரதிர்ச்சி அளித்த நிகழ்வை மீண்டும் வாழ்ந்து காட்டினர். அவர்கள் முனகினர், கண்ணுக்குத் தெரியாத சேற்றில் ஊர்ந்து சென்றனர், ஓசையற்ற பீரங்கித் தாக்குதலுக்கு அஞ்சி நடுங்கினர். பேரதிர்ச்சி என்பது குறிப்பிட்ட காலவரைக்குட்பட்ட நிகழ்வாக இருக்கலாம், ஆனால் அதன் காயங்கள் ஆறுவதில்லை.
1987ல், ஆஷ்விட்ஸிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரிமோ லேவி தான் பிறந்து, போருக்குப் பின் திரும்பியிருந்த, நான்காம் மாடி அடுக்ககக் குடியிருப்புக்கு வெளியே இருந்த பளிங்காலான படிக்கட்டுகளின் தடுப்புக் கம்பிகளுக்கு அப்பால் பாய்ந்தார், கீழே விழுந்து இறந்தார்.
எந்த ஒரு தற்கொலையுமே அதிர்ச்சியளிகிறது. ஆனால் லேவியின் பல வாசகர்களுக்கு இது குறிப்பிடத்தக்க ஒரு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அவர்கள் தங்களுக்கு துரோகமிழைக்கப்பட்டதாக உணர்ந்திருக்கலாம். அல்லது இந்தப் புத்தகங்களை எழுதியதே லேவியின் கடும்துயரின் காயங்களை ஆற்றப் போதுமானதாக இருந்திருக்கும் என்று நம்ப விரும்பியிருக்கலாம். எழுத்தால் எத்தகைய காயங்களை குணப்படுத்த முடியும் என்பதோ எழுதுவதால் எதுவும் குணமாகுமா என்பதோ இந்தக் கட்டுரையில் பேசக்கூடிய விஷயங்கள் அல்ல.
ஒருவன் தன்னைச் சின்னாபின்னமாக்கும் நிகழ்வுகளைப் பற்றி எழுதுவது எவ்வாறு சாத்தியப்படுகிறது என்பதில் எனக்கு ஆர்வமிருக்கிறது. பெரதிர்ச்சிகள் சொற்களைக் கொண்டு விவரிக்க முடியாத அனுபவங்கள் ஆகின்றன, அவற்றை மொழியின் எல்லைகளுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் வெற்றி பெறுவதில்லை. ஆனால் சோதனைக்கூட ஆய்வாளராக இருந்ததால் தனக்கே உரிய வகையில் துல்லியமாக எழுதுவதே லேவியின் பாணியாக இருந்தது.
அவர் ஆஷ்விட்ஸ் வந்தது, கால்நடைகள் கொண்டு செல்லும் ரயில் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த இத்தாலிய யூதர்களில் ஒருவராக. அங்கு அவர் வந்து சேர்ந்தபோது அவர்கள் காத்திருக்கப் பணிக்கப்பட்ட காலி அறையின் தண்ணீர் குழாய் சொட்டிக் கொண்டிருந்ததைப் பதிவு செய்கிறார். லேவியைப் போல் நான்கு நாட்களாகக் குடிப்பதற்கு எதுவுமில்லாது இருந்திருந்தால் நீங்களும் அதைத்தான் கவனிப்பீர்கள். ஆனால் அவர் அந்தக் குழாய்க்கு மேல், “தண்ணீர் அழுக்காக இருப்பதால் அதைக் குடிக்கக் கூடாதென்று தடை செய்யப்பட்டிருந்த அறிவிப்பு அட்டை”யை அவர் கவனிக்கிறார். முதலில் இது நாஜிக்களின் குரூர விளையாட்டு என்று நினைக்கிறார். ஆனால் அதைக் குடிக்கும்போது, “அந்தத் தண்ணீர் வெதுவெதுப்பாய் கொஞ்சம் இனிப்பாய் இருந்தது, குட்டையின் மணத்துடன்,” என்று கண்டறிகிறார். அதைத் துப்ப வேண்டியதாகிறது.
லேவி தொடர்கிறார்:
“இதுதான் நரகம். நம் காலத்தில் நரகம் இப்படிதான் இருந்தாக வேண்டும். பெரியதாய், ஒன்றுமில்லாத ஒரு அறை: நாங்கள் களைத்திருகிறோம், நின்று கொண்டிருக்கிறோம். இந்த அறையில் ஒரு குழாய் சொட்டிக் கொண்டிருக்கிறது, ஆனால் நாங்கள் தண்ணீர் குடிக்க முடியாது. நிச்சயம் பயங்கரமான எதுவோ நடக்கப்போகிறது என்று காத்திருந்தோம், ஆனால் எதுவும் நடப்பதில்லை, எதுவும் நடக்காமலே இருக்கிறது. இங்கு ஒருவன் எதைப் பற்றி யோசிக்க முடியும்? இனி எதையும் யோசிக்க முடியாது, இப்போதே இறந்துவிட்டதைப் போல் இருக்கிறது. யாரோ ஒருவர் தரையில் அமர்கிறார். துளித் துளியாய் நேரம் போகிறது.
“நாங்கள் சாகவில்லை. கதவு திறக்கிறது, எஸ்எஸ் ஆள் ஒருவன் உள்ளே நுழைகிறான், ஒரு சிகரெட் புகைத்துக்கொண்டு. அவன் எங்களை நிதானமாகப் பார்த்துவிட்டுக் கேட்கிறான், ‘Wer kann Deutsch?’என்று. எங்களில் ஒருவன், நான் இதுவரை பார்த்தேயிராதவன், Flesch என்பவன் முன்னால் வந்து நிற்கிறான்; அவன் எங்கள் மொழிபெயர்ப்பாளனாக இருப்பான். எஸ்எஸ் ஆள் அமைதியான, நீண்ட உரையாற்றுகிறான்; மொழிபெயர்ப்பாளன் அதை மொழிபெயர்த்துச் சொல்கிறான்.
“நாங்கள் ஐந்து ஐந்து பேராக வரிசையில் நிற்க வேண்டும், ஒவ்வொருத்தருக்கும் இடையில் இரண்டு கஜ இடைவெளி இருக்க வண்டும்; அதன்பின் நாங்கள் எங்கள் ஆடைகளை அகற்ற வேண்டும், குறிப்பிட்ட முறையில் அவற்றைச் சுருட்ட வேண்டும், கம்பளி ஆடைகள் ஒரு புறம், பிற அனைத்தும் மறுபுறம்; பின் நாங்கள் எங்கள் ஷூக்களைக் கழட்ட வேண்டும், ஆனால் அவை களவு போகாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
“யாரால் திருடப்படும்? எங்கள் ஷூக்கள் ஏன் திருடப்பட வேண்டும்? எங்கள் ஆவணங்கள் என்னாகும், எங்கள் பாக்கெட்டுகளில் இருக்கும் மிகச் சில பொருட்கள், எங்கள் கைக்கடிகாரங்கள்? நாங்கள் அனைவரும் மொழிபெயர்ப்பாளனைப் பார்க்கிறோம், அவன் ஜெர்மன் மொழியில் கேட்கிறான். அந்த ஜெர்மனிக்காரனின் பார்வை அவனை ஊடுருவிக் கடக்கிறது, அவன் ஒளி ஊடுருவிச் செல்லும் கண்ணாடி போல், அங்கு யாருமே எதுவுமே பேசவில்லை என்பதுபோல்.”
Peter Trachtenberg எழுதிய இந்தக் கட்டுரையை முழுமையாய் வாசிக்க – Los Angeles Review of Books