அவளுக்கு வயது அறுபது. தன் வாழ்வின்
மகத்தான காதலை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
தன் நேசத்துக்குரியவன் கைகோர்த்துச் செல்கிறாள்.
காற்றில் ஆடுகிறது அவளது கேசம்.
அவளை நேசிப்பவன் சொல்கிறான்::
“உன் முடி முத்து போல் இருக்கின்றது:”.
:முட்டாள் கிழம்”
என்கின்றனர் அவள் பிள்ளைகள்.
இதே தொடரில், முதியோரின் பிரச்சினைகள் பற்றி எழுதியபோது, இது குறித்து இன்னும் பேச வேண்டியிருக்கிறது என்றார் நண்பர் ஸ்ரீதர்.
முதுமையை வேறொரு கோணத்தில் இப்போது பார்க்கலாம் – இந்தக் கவிதை அதற்கொரு நல்ல அறிமுகம்.
முதுமை, அல்லது மத்திய பருவத்தின் பின்காலம் (இதற்கொரு சொல் உண்டா என்ன?), உன்னை தனிமை தொடரும் பருவம். நகர்ப்புறச் சூழலில்தான் இதைச் சொல்கிறேன், கிராமங்களின் கதை வேறு.
நகர்ப்புற குடும்பங்கள் அம்மா, அப்பா ஒரு குழந்தை என்றாகிவிட்ட நிலையில், முதியோரின் தனிமை மிகத் தீவிரமானது. வீட்டில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போய் விடுகின்றனர். அவர்களின் வாரிசை முதியவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
பலர் இந்தக் கடமையை விரும்பி ஏற்றுக் கொள்கின்றனர். வீட்டில் நாமும் ஒருவர் என்ற உணர்வை இந்தப் பொறுப்பு பெற்றுத் தருகிறது. இதுகூட இல்லாமல், நம்மால் யாருக்கு என்ன பயன் என்று தங்கள் மீதே ஒரு அவநம்பிக்கை ஏற்பட்டுவிடக் கூடும்.
முதியவர்களின் வயதை மதித்து அவர்களைப் போற்றிய காலம் கடந்து போய்விட்டது. அலுவலங்களில்கூட தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக இளைஞர்கள் கையில்தான் துருப்புச் சீட்டு சிக்கிக் கொண்டிருக்கிறது – நடுவாந்திர மேனேஜர்கள் எங்களுக்கும் தொழில்நுட்பம் தெரியும் என்று வலிந்து காட்டிக் கொண்டாக வேண்டிய இலையில் இருக்கின்றனர்.
வேலையில் இருக்கும் மத்திய வயதினருக்கே இந்த நிலை என்றால், முதியவர்களை நினைத்துப் பாருங்கள். “அந்த காலத்தில் டிவி ரிமோட்டைக் குழந்தை கையில் கொடுக்காதே, அதை ரிப்பேர் செய்து விடப் போகிறான், என்று சொன்னார்கள். ஆனால், இப்போதெல்லாம், தாத்தாவைக் கம்ப்யூட்டர் பக்கம் சேர்க்காதே, எதையாவது ரிப்பேர் செய்து வைக்கப் போகிறார்,” என்று இப்போதெல்லாம் சொல்கிறோம் என்று நண்பர் ஒருவர் குறைப்பட்டுக் கொண்டார்.
வீட்டில் பெரியவர்களுக்கு என்று ஒரு முக்கியமான இடமில்லாமல் போய்விட்டது. யாரையும் மிரட்ட முடிவதில்லை, சொல்பேச்சு கேட்கக்கூட ஆளில்லை. முதியவர்கள் பாட்டுக்கு அவர்கள் வேலையைச் செய்து கொண்டு, இருக்கும் நாலு பேரில் ஒருத்தராக இருந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.
வெளிநாட்டில் வாழ்பவர்களின் பெற்றோரது தனிமை கொடுமையானது. பழகிய சூழலை விட்டுப் பிரியவும் மனமில்லாமல், அதில் ஒன்றியிருக்கவும் முடியாத தனிமை. ஓரளவுக்கு நிறைய பேர் வசிக்கும் அடுக்ககங்கள் இவர்களது தனிமைக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கின்றன, ஆனால் வீட்டுக்குள் போனால் நாலு சுவற்றுக்குள் தனிமை சூழ்கிறது. உடல் நலமில்லாமல் போகும்போது இந்தத் தனிமை பயங்கரமாக இருக்கிறது. சொந்தம் என்று உரிமையுடன் அழைத்து பக்கத்தில் வைத்துக் கொள்ள யாரும் இல்லாத நிலை வேதனை மிகுந்தது.
தனிமையில் இருக்கிறார்கள் என்றில்லை, உதவிக்கு ஆளிருந்தாலும் பிறர் உதவி பெறுவதற்கும் தமர் கவனித்துக் கொள்வதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. இதில் கௌரவ இழப்பும் ஏற்படுவதுண்டு.
கணவன், அல்லது மனைவியை இழந்த முதியவர்களின் நிலை சோகம் நிறைந்தது. பிள்ளைகள் பக்கத்தில் இல்லாதபோது, தனிமையைத் தவிர வேறென்ன உண்டு? சிற்றூர்களிலும் கிராமங்களிலும் ஓரளவுக்கு யாருமில்லாத முதியவர்களின் துணைக்கு ஆள் இருக்கிறார்கள். ஆனால் நகரங்களில் மிகச் சிலருக்கே இந்த நெருக்கம் கிட்டுகிறது. அருகாமையில் நண்பர்கள் யாராவது இருந்தால் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்ல வேண்டும்.
என் தலைமுறையில் பலருக்கும் ஓரே குழந்தைதான் – எங்களுக்கு விதி என்ன வைத்திருக்கிறதோ தெரியவில்லை.
முதியவர்களை கவனித்துக் கொள்ளும் அமைப்புகள் வலுவாக இல்லை என்று முந்தைய கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தேன். முன்பெல்லாம் கூட்டுக் குடும்பம் இருந்தது, அதில் ஆயிரம் குறைகள் இருந்தாலும், முதியவர்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கவில்லை. இப்போதுகூட கூட்டுக் குடும்பங்களில் முதியவர்கள் நிலை பரவாயில்லைதான். ஆனால் விடாமல் பணம், பதவி, அதிகாரம், பொருட்கள் என்று எது எதையோ விரட்டிச் செல்லும் நவீன நாகரிக வாழ்க்கைக்கு கூட்டுக் குடும்பம் சரிவராது. இது நல்லது இல்லை என்றாலும், ஏதோ பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டம என்பது போல் எடுத்துக் கொண்டு விட்டோம். மேலை நாடுகளையாவது பார்த்திருக்கலாம் – அங்கெல்லாம் முதியோரைப் பராமரிக்கும் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பராமரிப்பு அமைப்புகள் என்று சொல்லும்போது, இருக்க இடம், கவனித்துக் கொள்ள மருத்துவமனை என்ற கட்டமைப்பை மட்டும் சொல்லவில்லை, அவர்களது உணர்ச்சிகளுக்கும் மதிப்பு கொடுக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் நம் நிலை தர்மசங்கடமான ஒன்று. பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது குறித்து குற்றவுணர்வு உள்ளவர்களாக இருக்கிறோம். அது ஏதோ பாபச் செயல் என்றும் மகன் தந்தைக்காற்றும் கடமையில் தவறுவதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதே சமயம், நம்மால் அவர்களுடன் இருந்து அவர்களின் அன்றாட தேவைகளையும் கவனித்துக் கொள்ள முடிவதில்லை. அப்படியானால் என்னதான் தீர்வு? நம் முதுமையில் நமக்கு எது கைகொடுக்குமா அதுதான் இவர்களுக்கும் இன்று பொருந்தக்கூடிய தீர்வாக இருக்க முடியும்.
முதியோரின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. இதுவும் சிக்கலான விஷயம்தான். இந்தியாவில் மறுமணம் இல்லாத ஒன்றல்ல. முன்னெல்லாம் அது சர்வசாதாரணமாக இருந்தது. ஆனால், அப்போது மனைவி இளம்பருவத்தில் இறந்திருப்பாள்.
ஐம்பது வயது கடந்த ஆணோ பெண்ணோ மறுமணம் செய்து கொள்ள விரும்பும்போது என்ன நடக்கிறது? இது போன்ற மூன்று சம்பவங்களை நேரில் பார்த்திருக்கிறேன், மூன்று பேருமே கடும் மன உளைச்சலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒருத்தர் விஷயத்தில், அவர் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தது பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லை. புதிய மனைவியை வெறுத்து அவரது வாழ்வை நரகமாக்கினார்கள். இரண்டாமவர் விஷயத்தில், பிள்ளைகளுக்கு நல்லபடி மணமாகியிருந்தபோதும், புதிய தம்பதியரைக் கொடுமைப்படுத்தி அவர்களைப் பிரித்து வைத்தனர். மூன்றாமவர் ஏராளமான எதிர்ப்புகளைக் கடந்து மணம் புரிந்து கொண்டார் ஆனால் தன் உள ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேறு ஊருக்குப் போய் புதுவாழ்வு துவங்க வேண்டியிருந்தது.
பணம் சம்பாதித்து செலவு செய்வதில் மேலை நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டுள்ள நாம், அவர்களின் மனிதாபிமானத்தைக் கண்டு கொள்வதில்லை. முதியோர் காதலிப்பதையோ மறுமணம் செய்து கொள்வதையோ சமூக விழுமியங்கள் வரவேற்பதில்லை. நவீன ஆடைகள் அணிந்து கொண்டு முத்தப் போராட்டம் நடத்தும் இளைஞர்கள்தான், தங்கள் அம்மா அப்பா காதலில் விழுந்தால் குறுக்கே வந்து நிற்கின்றனர். அது ஏதோ அநாகரிகம் என்பது போலவோ, பாபம் செய்து விட்டது போலவோ நடந்து கொள்கின்றனர். தாத்தா பாட்டிகளுக்கு எல்லாம் வயதானதும் உணர்ச்சிகள் மரத்துப் போய்விட வேண்டும்.
அறுபது வயது கடந்தால்தான் என்ன, தனிமையில் இருக்கும் யாருமே துணை நாடுவது இயல்புதானே? ஆனால் இவர்களின் காதலை எதிர்கொள்ள நாம் தயாராக இல்லை. நியாயமான, மனிதாபிமானம் உள்ள சமூகம், முதலில் முதியவர்களின் உணர்வுகளை மதித்துவிட்டு அதன்பின்னர்தான் இளைஞர்கள் பொது இடங்களில் முத்தம் கொடுத்துக் கொள்ளும் உரிமைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் என்று தோன்றுகிறது.
இங்கு அன்னா ஸ்விர்ஸ்டின்ஸ்கஹா எழுதியுள்ள கவிதை, முதியோரின் காதலை மென்மையாகப் பேசுகிறது. எப்போதுமே முதியோரின் காதல் நிராகரிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
“முட்டாள் கிழம்”/ என்கின்றனர் அவள் பிள்ளைகள்”, என்பதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, பெற்றோர் காதலிப்பதைப் பிள்ளைகள் புரிந்து கொள்வது கடினம். இரண்டாவது, அந்தப் பெண்மணி யார் என்ன நினைத்தாலும் கவலைப்படுவதில்லை. தன் காதலனை அவள் நேசிக்கிறாள்.
எத்தனை முதியவர்களுக்கு இது போன்ற துணிச்சல் இருக்கும்? இந்தியாவில் இதெல்லாம் அபூர்வம், மகத்தான காதல் என்றால் பின்னிருபது அல்லது முப்பதுகளின் துவக்கத்தில்தான் அதை அனுபவிக்க நமக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கிறது. அறுபது ஆனபின் நாமெல்லாம் தாத்தா பாட்டி ஆகிவிடுகிறோம், காதலை மரியாதையாய் வழியனுப்பி வைத்துவிட வேண்டியதுதான், நினைத்துப் பார்த்தாலே ரணகளம் ஆகிவிடும்.